ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Strategy of International Class Struggle and the Political Fight Against Capitalist Reaction in 2019

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்

By James Cogan, Joseph Kishore and David North,
3 January 2019

இந்த அறிக்கை நிறைவடைந்து கொண்டிருந்த வேளையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழரும், துருக்கியில் உள்ள அதன் ஆதரவுக் குழுவான சோசலிச சமத்துவம் இன் ஸ்தாபகரும் தலைவருமான ஹலீல் செலிக், டிசம்பர் 31, 2018 அன்று, தனது 57 வது வயதில், புற்றுநோயால் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கிட்டியது. அந்த அயராத புரட்சியாளரும் ட்ரொட்ஸ்கிசப் போராளியுமான தோழர் ஹலீல் செலிக்கின் நினைவிற்கு இந்த அறிக்கை அர்ப்பணிக்கப்படுகிறது.

1. சென்ற ஆண்டின் தொடக்கத்தில், “மார்க்சின் இருநூறாவது பிறந்ததினம் அமைகின்ற 2018 இன் இந்த புதுவருடம், எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும்.” என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு குறிப்பிட்டிருந்தது.

2. நிகழ்வுகள் இந்தக் கணிப்பை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் 1989 பொறிவுக்கும், தியானென்மென் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை சீன ஆட்சி நசுக்கியதற்கும், எல்லாவற்றுக்கும் மேல், 1991 டிசம்பரில் கிரெம்ளின் அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கும் பிந்தைய காலத்தில், பல தசாப்த காலமாக ஒடுக்கப்பட்டதற்கு பின்னர், வர்க்கப் போராட்டமானது உலகெங்கிலும் மறுஎழுச்சி கண்டிருக்கிறது. வேலைநிறுத்தங்களதும் ஆர்ப்பாட்டங்களதும் ஒரு அலை —இவற்றில் பெரும்பாலானவை உத்தியோகபூர்வ முதலாளித்துவ-ஆதரவு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான விதத்திலும் அவற்றின் கட்டுப்பாட்டிற்கு வெளியிலும் நடந்தன— அமெரிக்கா உள்ளிட உலகெங்கையும் உலுக்கியது. பிரான்சின் “செல்வந்தர்களது ஜனாதிபதி”யான இமானுவல் மக்ரோனின் ஆட்சியை உலுக்கிக்கொண்டிருக்கும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுடனும் துனிசியாவிலான எழுச்சியுடனும் சென்ற ஆண்டு முடிவடைந்தது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முனைப்பே உலக அரசியலின் மாபெரும் பிரச்சினையாகும். 1995 சமயத்திலேயே, ICFI, அதன் தேசியப் பிரிவுகளை சோசலிச சமத்துவக் கட்சிகளாக ஸ்தாபித்ததில் இந்த கருத்தாக்கத்திற்கு உருவடிவம் கொடுத்திருந்தது.

3. 1938 இல், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாம் உலகப் போரின் பேரழிவுகரமான வெடிப்புடன் தொடங்கியிருந்த சகாப்தத்தை “முதலாளித்துவத்தின் மரண ஓலம்” என்று வரையறை செய்தார். உலகின் நிலையை சுருங்க எடுத்துரைத்த ட்ரொட்ஸ்கி எழுதினார்:

மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கமடைகின்றன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளும் மேம்பாடுகளும் சடரீதியான செல்வத்தின் மட்டத்தை உயர்த்தத் தவறுகின்றன. ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழான அவ்வப்போதைய காலகட்டத்திலான நெருக்கடிகள் பரந்துபட்ட மக்களின் மீது முன்னெப்போதினும் கடினமான இழப்புகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்றன. பெருகும் வேலைவாய்ப்பின்மையானது, அதன் பங்கிற்கு, அரசின் நிதி நெருக்கடியை ஆழப்படுத்தி ஸ்திரமற்ற நாணய அமைப்புமுறைகளை பலவீனப்படுத்துகிறது. ஜனநாயக ஆட்சிகளும், அதேபோல பாசிச ஆட்சிகளும், ஒரு திவால் நிலையில் இருந்து இன்னொன்றுக்காய் தாவித் தடுமாறுகின்றன. [முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும், 1938]

4. ட்ரொட்ஸ்கி இந்த வார்த்தைகளை எழுதிய போது சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருந்த அத்தனை தீவிரமான பிரச்சினைகளும், அதாவது உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மை, ஒட்டுமொத்த நாடுகளும் ஏகாதிபத்திய சக்திகளால் ஆட்டுவிக்கப்படல், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பொறிவு, பாசிச-வகை இயக்கங்களின் திகிலூட்டும் எழுச்சி, அரசுகளுக்கு இடையிலான ஆவேசமான மோதல்கள் மற்றும் உலகப் போரின் உடனடி அபாயமும் இன்று நிலவுகின்றன. 1930களில் போலவே, ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ உயரடுக்கும் தமது இராணுவ மற்றும் போலிஸ் எந்திரத்தை வெறித்தனமாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருப்பதோடு, சமூகப் பதட்டங்களைத் திசைதிருப்பி தமது ஆட்சியை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, தீவிரமான தேசியவாதத்தையும் புலம்பெயர்ந்தோர்-விரோத வெளிநாட்டினர் அச்சத்தையும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரையில், பாசிச இயக்கங்களுக்கு ஒரு வெகுஜன அடித்தளம் இல்லாதபோதும், இருக்கின்ற முதலாளித்துவ கட்சிகளது பிரிவுகளது ஆதரவையும் வெகுஜன ஊடகங்களின் ஊக்குவிப்பையும் அவை நம்பியிருக்கின்றன. எவ்வாறாயினும் அவ்வாறான அபாயம் தெளிவாக இருக்கிறது.

5. ஆயினும் இன்னுமொரு சமூக சக்தியும் இப்போது அரசியல் அரங்கிற்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. வெகுகாலமாக ஒடுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வந்திருக்கும் தொழிலாள வர்க்கமானது தனது சொந்த சுயாதீனமான நலன்களை வலியுறுத்த தொடங்குகிறது. பிரான்சிலும், அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய சமூகப் போராட்டங்களது வெடிப்பானது, ஒரு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்திற்கு சமிக்கை காட்டுகின்றது. 1980களில் பெரும் போராட்டங்களின் தோல்விகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவற்றைப் பின்தொடர்ந்து வந்திருந்த நோக்குநிலை பிறழ்வும் குழப்பமும் இறுதியாக விலகி, புதிய போர்க்குணம் மற்றும் போராடும் விருப்பம் ஆகியவற்றின் ஒரு மனோநிலைக்கு வழிவிட்டிருக்கின்றன.

6. முதலாளித்துவ ஸ்தாபகத்திற்கு சளைக்காத விதத்தில், வசதியான நடுத்தர வர்க்கத்தின் புத்திஜீவித மற்றும் அரசியல் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட மார்க்சிச விரோத அரைவேக்காட்டு-தீர்வுகள் அனைத்தும் தத்துவார்த்தரீதியாக மட்டுமன்றி, இப்போது பரந்த சமூக நடைமுறையிலும் கூட மதிப்பிழந்து விட்டிருக்கின்றன. முற்றிலும் தவறான அரசியல் தீர்க்கதரிசனங்களில் குப்பைத்தொட்டிக்குப் போயிருப்பது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு “வரலாற்றின் முடிவை”யும் முதலாளித்துவ சந்தையின் வெற்றியையும் குறித்ததாக பிரான்சிஸ் புகுயாமா செய்த பிரகடனம் மட்டுமன்று. 1991 “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” இன் முடிவையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மூலமான எந்த சோசலிசப் புரட்சிக்கான சாத்தியமும் முடிந்து போனதையும் குறித்தது என்று கூறிய பிரிட்டிஷ் ஸ்ராலினிச வரலாற்றாசிரியரான எரிக் ஹோப்ஸ்வாமின் கூற்றும் கூட குறும்பார்வை கொண்டதாக நிரூபணமாகியிருக்கிறது.

7. மேலும் பிராங்ஃபேர்ட் பள்ளியின் குட்டி-முதலாளித்துவ தத்துவாசிரியர்கள் விரக்தியுடன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை மறுத்தமை; புறநிலையாக சரிபார்க்கத்தக்க வரலாற்று நிகழ்வுகளை, புறநிலைரீதியாக சீர்தூக்கி பார்ப்பது குறித்த அவர்களின் சிடுமூஞ்சித்தனமான பின்நவீனத்துவ மறுப்பு; முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமே வரலாற்றின் மையமாக இருப்பது குறித்த மார்க்சிச “பெருங்கதையாடல்” தொடர்பான அவர்களின் அவநம்பிக்கையின் பகுத்தறிவற்ற வலியுறுத்தல்கள்; அத்துடன் பாலினம், இனம் அல்லது பாலின அடையாளத்தின் “பிரதானம்” குறித்த சுயவிருப்புடனான வசதியான பேராசிரியர்களின் புதிதல்லாத, அரசியல் பிற்போக்குத்தனமான மற்றும் விஞ்ஞானரீதியாக பயனற்ற பகட்டுரைகள், அனைத்துமே முதலாளித்துவ ஆட்சியின் மேலாதிக்கத்திற்கான சித்தாந்த நியாயப்படுத்தல்களாக அம்பலமாகி நிற்கின்றன.

8. ICFI இன் பகுப்பாய்வும் முன்னோக்கும் ஊர்ஜிதப்பட்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை நோக்கிய உருமாற்றம் என்ற “முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” இன் அடிப்படையான வரலாற்று சவாலையே சமகால உலகம் இப்போதும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ ஆட்சியின் உலகளாவிய முறிவு

9. புவியரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளது வெடிப்பான ஒருங்கிணைவுகளுக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் மறைவைத் தொடர்ந்து ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவிய குதூகல நம்பிக்கையில் எதுவும் மிஞ்சவில்லை. உண்மையில், சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளான மனோநிலை, தீவிர கவலையை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. 2018 முடியவிருந்த நேரத்தில் சர்வதேச பங்குச் சந்தைகளை உலுக்கிய தீவிர தள்ளாட்டங்கள், 2008 பொறிவைப் பின்தொடர்ந்து சந்தைகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக எடுக்கப்பட்ட பிரயாசையான நடவடிக்கைகள் அவற்றை களைப்படையச் செய்திருப்பதன் ஒரு அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. நிலவுகின்ற அவநம்பிக்கை, சுவிஸ் வங்கியாளர்களின் குரலும் முதலாளித்துவ செய்தித்தாள்கள் அனைத்திலும் மிகவும் மதிநுட்பமான Neue Zürcher Zeitung இன் ஆண்டு-நிறைவு பதிப்பின் தலைப்பு பக்கத்தில் “முதலில் எங்களது நிலைமைகள் மோசமாக வேண்டும்” என்று பிரகடனம் செய்வதில் மிகவும் சுருங்கக் கூறப்படுவதாக இருக்கிறது. இந்த முதல்-பக்க அறிக்கை கூறிய செய்தி தெளிவாக இருந்தது: சர்வதேச ஆளும் வர்க்கமானது மோசமடைந்து செல்லும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக செலுத்தப்படும் கொடூரமான நடவடிக்கைகளைக் கொண்டு பதிலளிக்க இருக்கிறது.

10. சர்வதேச முதலாளித்துவம் முகம்கொடுக்கும் நெருக்கடி, வரலாற்று ரீதியானதும் அமைப்புமுறை ரீதியானதுமான தன்மையைக் கொண்டதாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து வந்த அத்தனை வெற்றிக்களியாட்டங்களுக்கும் ஆளும் உயரடுக்குகளது சுய-நியாயப்படுத்தும் பிரச்சாரங்களுக்கும் தூபம்போடுவதற்கு மத்தியில், 1989-91 நிகழ்வுகள் உலக முதலாளித்துவம் தீவிர பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் உலுக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் தான் நடந்தன என்பது பெரும்பாலும் மறக்கப்பட்டிருக்கிறது. 1980களின் மத்தியில், அமெரிக்காவில் ரீகனும் சோவியத் ஒன்றியத்தில் கோர்பச்சேவும் தத்தமது ஆட்சிகளின் தீவிரமடையும் நெருக்கடிகளுடன் போராடிக் கொண்டிருந்த சமயத்தில், எந்த அமைப்புமுறை முதலில் பொறியும் என்று கேட்பது (ICFI கேட்டதைப் போல) நியாயமானதாக இருந்தது. அமெரிக்காவின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய மேலாதிக்க உலக நிலையின் தேய்வு ஏற்கனவே மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருந்தது. மேலும், கணினிமயமாக்கத்துடன் தொடர்புடைய அசாதாரணமான தொழில்நுட்ப அபிவிருத்திகள், தேசிய அரசு என்னும் அரசியல் அலகில் வேரூன்றியதாய் இருந்த அமெரிக்க-மேலாதிக்கத்திலான ஏகாதிபத்திய அமைப்புமுறையின் ஒட்டுமொத்த அடித்தளத்தையும் வெளிப்படையாய் பலவீனப்படுத்திக் கொண்டு வந்திருந்த பொருளாதார பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்குகளை முன்தள்ளிக் கொண்டிருந்தன.

11. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பனிப் போர் “வெற்றி” மூலமாக பெற்றிருந்த அரசியல் அனுகூலங்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் அதன் பழைய தலைமைகளால் காட்டிக்கொடுக்கப்பட்டமை ஆகியவற்றையும் தாண்டி, உலக முதலாளித்துவத்தின் கீழமைந்திருந்த நெருக்கடி நீடித்து வந்தது. அந்த சமயத்தில் ICFI மட்டுமே அடையாளம் கண்டவாறாக, சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால் —இவை அனைத்துமே நம்பிக்கையின்றி காலத்திற்கொவ்வாத அதிகாரத்துவ மற்றும் மார்க்சிச-விரோத கொள்கைகளைப் பின்பற்றி வந்திருந்தன— முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டமையானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தேசிய பொருளாதார மற்றும் சமூக நெறிப்படுத்தல் வேலைத்திட்டங்கள் அத்தனையும் பொறிந்து விட்டிருந்ததன் கூர்மையான வெளிப்பாடாய் இருந்தது.

12. அமெரிக்க ஆளும் உயரடுக்கு, கடந்த மூன்று தசாப்தங்களில் இராணுவ வலிமையை பொறுப்பற்றுப் பயன்படுத்துவதையே தனது உலக மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்கான பிரதான வழிமுறையாக பிரயோகித்து வந்திருக்கிறது. உலக அமைப்புமுறையின் நெருக்கடியை இறுதியில் மேலும் மோசமடைய மட்டுமே சேவை செய்த பலதோல்விகளிலேயே இது சென்றுமுடிந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலான சட்டவிரோதமான படையெடுப்புகளை நியாயப்படுத்துவதற்காகவும், ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடித் தாக்குதலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட “பயங்கரவாதத்தின் மீதான போர்” அமெரிக்க இராணுவ வலிமையின் வரம்புகளை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்ல. இந்த முடிவற்ற நவ-காலனித்துவ நடவடிக்கைகள் அமெரிக்காவில் பாரிய அதிருப்தியையும் உண்டுபண்ணியிருப்பதோடு, பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மத்தியிலும் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள்ளுமே கூட ஆழமான பிளவுகளை விதைத்திருக்கின்றன.

13. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக புவியரசியலின் அடித்தளமாக சேவைசெய்த பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான சர்வதேசக் கூட்டணிகள் கலைந்து கொண்டிருக்கின்றன. நீண்டகாலமாய் கூட்டாளிகளாக இருந்தவை எதிரிகளாக மாறி, தத்தமது இராணுவப் படைகளைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. 2008 நிதிப் பொறிவுக்கு பத்துக்கும் அதிகமான ஆண்டுகளின் பின்னர், உலகப் பொருளாதாரமானது பெருகும் தேசியப் பதட்டங்கள் மற்றும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் பின்னிக் கிடக்கிறது. கடந்த தசாப்தத்தில் பங்குச் சந்தை மீட்சியடைந்தது —அதுவும் கூட இப்போது தலைகீழாகிக் கொண்டிருக்கிறது— என்றபோதிலும், பொறிவுக்கான பதிலிறுப்பில் ஆளும் உயரடுக்குகளால் பின்பற்றப்பட்ட கொள்கைகள், கீழமைந்த முரண்பாடுகளில் எதனையும் தீர்த்திருக்கவில்லை. நெருக்கடியை கட்டுப்படுத்தி அதேநேரத்தில் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக நிதிய சிலவராட்சியினரால் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் தீர்ப்புநாளை தள்ளிப்போட மட்டுமே செய்திருக்கின்றன.

14. உலகளாவிய முறிவின் மையத்தில் அமெரிக்கா இருக்கிறது, 1865 உள்நாட்டுப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அது இருக்கிறது. ட்ரம்ப் நரகத்தில் இருந்து வந்த ஒரு அரக்கரல்ல, மாறாக அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவின் அரசியல் திகிலூட்டுகின்ற வெளிப்பாடு மட்டுமே ஆவார். சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, ட்ரம்ப் மற்றும் அவரது அரசியல் எதிரிகளுக்கு இடையிலான மோதல் என்பது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பதிலான கருத்துவேறுபாடுகளை மையமாகக் கொண்ட ஆளும் உயரடுக்கின் பல்வேறு பிற்போக்கான கன்னைகளுக்கு இடையிலான மோதலாகும். இந்த மோதலில் ஜனநாயக அல்லது முற்போக்கான தரப்புகள் எதுவுமில்லை. சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதான ட்ரம்ப்பின் முன்மொழிவுக்கு (ஆனால், இன்னும் அமல்படுத்தப்படவில்லை) ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பில் இருந்தும் வந்துகொண்டிருக்கும் ஆவேசமான கோபக் கொப்பளிப்புகள் வாஷிங்டனிலான மோதலின் தன்மையை அம்பலப்படுத்துகின்றன.

15. முதலில், ஐரோப்பா, யூரோஆசியா மற்றும் மத்திய கிழக்கின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதில் இருந்து ரஷ்யாவை அகற்றுவதன் மூலமாக சீனாவுடனான தவிர்க்கமுடியாத மோதலுக்கு தயாரிப்பு செய்யப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகின்ற நிதி மற்றும் முக்கிய பெருநிறுவன நலன்கள், இராணுவ மற்றும் உளவு முகமைகள், மற்றும் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் மேலாதிக்கமான பகுதிகள் ஆகியவற்றின் ஒரு கூட்டணியை ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவம் செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கான தமது எதிர்ப்பை, “பிளவுகளை விதைப்பதற்காக” அமெரிக்க அரசியலில் ரஷ்யா “தலையீடு” செய்ததாக குற்றம்சாட்டுகின்ற ஒரு வெறித்தனமான நவ-மெக்கார்த்திய பிரச்சாரத்தில் குவித்தனர். ரஷ்யாவிலுள்ள புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக இன்னும் மூர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருவதாக மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள் எதிர்ப்பை குற்றமாக்கும் கட்டமைப்பை உருவாக்கக் கோருவதும் கூட இதன் நோக்கமாய் இருந்தது. அரண்மனைக் கவிழ்ப்பு சூழ்ச்சிகள் தான், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்டக்கூடிய எதனைக் கண்டும் மிரட்சியடைகின்ற மற்றும் எதிர்க்கின்ற ட்ரம்ப்பின் ஆளும் வர்க்க விமர்சகர்களது வழிமுறைகளாக இருக்கின்றன.

16. ட்ரம்ப் நிர்வாகமானது, அதன் பங்காக, சீனாவுடன் ஒரு மோதலைத் தூண்டுவதை மையமாகக் கொண்ட தனது சொந்த “முதலில் அமெரிக்கா” எனும் ஏகாதிபத்திய மூலோபாயத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ட்ரம்ப்பின் முன்னாள் வெள்ளை மாளிகை தலைமை மூலோபாயவாதியான ஸ்டீவ் பானனை மேற்கோளிட்டு நியூயோர்க் டைம்ஸ் விளக்கியது, ட்ரம்ப் “அமெரிக்காவின் மிகப்பெரும் வெளியுறவு அச்சுறுத்தலாக காணுகின்ற சீனாவுடன் பொருளாதார மற்றும் புவியரசியல் மோதலில் முழுக்கவனம் குவிப்பதற்காகத்தான் இந்த இராணுவப் பிரச்சாரங்களை [சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில்] முடிவுக்குக் கொண்டுவர விரும்பினார். திரு. பானன் ‘இது தனிமைப்படுத்தல்வாதத்தை நோக்கி திரும்புவது குறித்ததல்ல’ என்றார். ‘இது சர்வதேசவாதிகளின் மனிதாபிமான நடவடிக்கைகள் மனோநிலையில் இருந்து அச்சு விலகுவதாகும்.’”

17. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை கன்னைகளுமே, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியை ஈடுசெய்வதற்காக இராணுவ வலிமையைப் பயன்படுத்தும் ஒரு உலக மேலாதிக்கக் கொள்கைக்கு உறுதிபூண்டவையாகவே இருக்கின்றன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒரு கால்நூற்றாண்டு கால முடிவில்லாத பிராந்திய மோதல்கள் மற்றும் தலையீடுகளின் இடத்தில், அமெரிக்கா மற்றும் சீனா, ரஷ்யாவுக்கு இடையிலானது மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலானதுமான “பெரும் சக்திகள்” இடையிலான போட்டிகளால் பிரதியீடுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில், மனித உரிமைகள் மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” உள்ளிட ஏகாதிபத்திய அபிலாசைகளை அப்பட்டமாக திட்டவட்டம் செய்வதற்கு சாதகமாய் போருக்கான அத்தனை முந்தைய நியாயப்படுத்தல்களும் கைவிடப்படுகின்றன.

18. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒருதரப்பான மற்றும் ஸ்திரம்குலைக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உலக ஸ்திரத்தன்மையை காக்கின்ற கோட்டைகளாக தங்களை காட்டிக்கொள்வதற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், அவ்வப்போது, முயற்சி செய்கின்றன. ஆயினும், தமது வேட்டையாடும் பொருளாதார மற்றும் புவியரசியல் அபிலாசைகளை பின்பற்றுவதற்காக போர் உள்ளிட்ட அத்தனை வழிவகைகளையும் பயன்படுத்துவதில் தாட்சண்யமின்மையிலும் விருப்பத்திலும் அவை சற்றும் சளைக்காதவையாகும். ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் இராணுவமயமாகிக் கொண்டிருக்கிறது. ஜேர்மனி அதன் உலகளாவிய நலன்களின் முன்னெடுப்பில் கூடுதல் செயலூக்கமான (அதாவது இராணுவரீதியாக மூர்க்கமான) ஒரு பாத்திரத்தை ஏற்கும் என்று சான்சலர் அங்கேலா மேர்கேல் ஆண்டு-நிறைவு உரை ஒன்றில் அறிவித்தார். பிரான்சில், இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜேர்மனியுடன் கூட்டணி கொண்டிருந்த பாசிச விச்சி ஆட்சிக்கு தலைமை கொடுத்த மார்ஷல் பெத்தானுக்கு புனருத்தானமளிக்கின்ற மக்ரோனின் முயற்சிகள், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டு எதேச்சாதிகாரத்தையும் அவர் ஊக்குவிப்பதுடன் பிரிக்கவியலாது தொடர்புபட்டிருக்கின்றன.

19. ஜேர்மனியில், AfD (Alternative fur Deutschland) இல் இருக்கும் நவ-நாஜிக்கள், அரசு மற்றும் கல்வியகங்களில் இருந்தான உயர்நிலை ஆதரவுடன் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக எழுந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜேர்மனியின் கெம்னிட்ஸ் நகரிலும் போலந்தின் வார்சோ நகரிலும் பாசிச ஆர்ப்பாட்டங்களைக் கண்டிருக்கிறது. இத்தாலியில், நவ-பாசிசவாத Lega கட்சி ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பகுதியாக இருக்கிறது. பிரேசிலில், பாசிசவாத ஜயிர் பொல்சொனாரோ, இராணுவ சர்வாதிகாரம் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தின் மிகவும் வலது-சாரி அரசாங்கத்திற்கு தலைமை கொடுத்திருக்கிறார். இஸ்ரேலில் பெஞ்சமின் நெத்தனியாகுவின் அதி-வலதுசாரி அரசாங்கமானது உலகெங்கிலும் உள்ள அதி வலதுசாரி ஆட்சிகள் மற்றும் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணிகள் இஸ்ரேலுக்குள்ளாகவும் பாசிச சக்திகள் வலுப்பெறுவதை பிரதிபலிக்கின்றன. இஸ்ரேலிய செய்தித்தாளான Ha’aretz இல் டிசம்பர் 31 அன்று வெளியான ஒரு பத்தியில், பத்தி ஆசிரியரான Michael Sfard பின்வருமாறு எச்சரித்தார்:

நாம் யதார்த்தத்திற்கு முகம்கொடுத்தாக வேண்டும். யூதவாத கு கிளக்ஸ் கிளான் (Ku Klux Klan) இயக்கம் மலர்ச்சி கண்டு வருவதை நாம் பார்க்கிறோம். அதன் அமெரிக்க வகையைப் போலவே, யூத வடிவமும் மதரீதியான வெறி மற்றும் பிரிவினைவாத்தின் மாசுபட்ட ஊற்றுகளில் இருந்தே தம்மை வளர்த்துக்கொள்கின்றது, கிறிஸ்தவ சின்னங்களை அதற்கு இணையான யூத சின்னங்களை கொண்டு பிரதியிடுவது மட்டுமே வித்தியாசம். வெள்ளை நிறவெறியின் செயல்முறையைப் போலவே, இந்த யூதவாத இனவாதமும் அதற்கு இணையான கறுப்பினத்தினருக்கு —பாலஸ்தீனர்களுக்கு— எதிராக பீதி கிளப்புவதை, வன்முறையை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

20. யூத-விரோதத்தின் புத்துயிர்ப்பு உள்ளிட அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்களின் வளர்ச்சியானது தொழிலாள வர்க்கத்திற்கு மிகத் தீவிர அபாயத்தை முன்நிறுத்துகிறது. ஆழமடையும் முதலாளித்துவ நெருக்கடி, முன்கண்டிராத சமூக சமத்துவமின்மை மட்டங்கள் மற்றும் உலகப் போருக்கான தயாரிப்புகள் ஆகிய நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கினர் இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றங்களுக்குப் பொறுப்பான அரசியல் கசடுகள் அத்தனையையும் மீண்டும் எழுப்பி நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு) இல் உள்ள நாடுகளில் வேறெதனை விடவும் மிக அதிகமான விகிதாசாரத்தில் ஏழைகளைக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்குள்ளாக பாசிசம் துரிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையானது, இந்த அரசியல் நோயானது அதீத சமத்துவமின்மையின், குறிப்பாக முதலாளித்துவத்திற்கான ஒரு சோசலிச மாற்றுக்காக போராடுகின்ற ஒரு அரசியல் இயக்கம் இல்லாத ஒரு சூழ்நிலைக்குள்ளாக அபிவிருத்தி காண்கிறது என்பதை எடுத்துக்காட்டும் நிரூபணமாக இருக்கிறது.

21. பாசிசம், 1930களில் அது இருந்தது போல, இன்னும் ஒரு வெகுஜன இயக்கமாக ஆகிவிடவில்லை. ஆயினும் வளர்ந்து செல்லும் அபாயத்தை உதாசீனம் செய்வது அரசியல்ரீதியாக பொறுப்பற்றதாக இருக்கும். பரந்த மக்கள் உணர்கின்ற அதிருப்தியையும் கோபத்தையும் வலது-சாரி இயக்கங்கள், ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசின் பிரிவுகளது ஆதரவுடன், வாய்வீச்சில் சுரண்டிக் கொள்ள முடிந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிவலது மற்றும் பாசிச இயக்கங்கள் மீண்டும் எழுவதைத் தடுப்பதற்கு எதிரான போராட்டமானது ஒரு அவசரமான அரசியல் கடமையாக இருக்கிறது.

பாசிசத்திற்கு எதிரான போராட்டமும் வரலாற்றின் படிப்பினைகளும்

22. பாசிசத்திற்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பதையே வரலாற்று அனுபவம் அனைத்தும் குறிப்பாக, 1930களின் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 1933 இல் ஹிட்லரின் நாஜிக்கள் அதிகாரத்துக்கு வர முடிந்தது என்றால் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகிய ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் இருபெரும் வெகுஜனக் கட்சிகளது காட்டிக்கொடுப்பினால் மட்டுமே அது சாத்தியமானது.

23. ஹிட்லரின் வெற்றி, ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அதிர்ச்சியையும் முதலாளித்துவ-விரோத மற்றும் பாசிச-விரோத போர்க்குணத்தின் தீவிர வளர்ச்சியையும் உருவாக்கியது. ஆயினும் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப முன்னேற்றங்கள் விரக்தியிலும் தோல்வியிலும் முடிவடைந்தன. ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் முதலாளித்துவத்தினருடன் கொண்ட கூட்டணியான “மக்கள் முன்னணி”யே இந்த தோல்விகளுக்கான அரசியல் சாதனமாக இருந்தது. பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற போலியான பாவனையில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாசைகளுக்கு எதிராய் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதே இந்தக் கூட்டணியின் வெளிப்படையான அடிப்படையாக இருந்தது.

24. இன்று, “இடது ஜனரஞ்சகவாதம்” (left populism) என்ற பதாகையின் கீழ் மக்கள் முன்னணி அரசியலின் ஒரு புதிய வடிவம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிரீசில் சிரிசாவுக்கும், ஸ்பெயினில் பொடெமோஸ் க்கும், பிரான்சில் ஜோன்-லூக் மெலோன்சோனுக்கும் குருவாக செயல்பட்ட சாந்தால் மூஃவ் (Chantal Mouffe) தான் இந்த “இடது ஜனரஞ்சகவாத”த்தின் ஒரு முன்னணி தத்துவாசிரியையாவர். “ஒரு கூடுதல் ஜனநாயக மேலாதிக்க உருவாக்கத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு பின்-ஜனநாயகத்திற்கு (post-democracy) எதிரான பலவகையான ஜனநாயக எதிர்ப்புக்களையும் ஒன்றுபடுத்தி ஒரு ’மக்கள்’ (‘people’) ஐ கட்டைமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இடது ஜனரஞ்சகவாத மூலோபாயமே அவசரத் தேவையாக இருக்கிறது” என்று ஒரு இடது ஜனரஞ்சகவாதத்திற்காக (For a Left Populism) என்ற புத்தகத்தில் மூஃவ் எழுதுகிறார். “இதற்கு தாராளவாத ஜனநாயக ஆட்சியுடன் ஒரு ‘புரட்சிகர’ முறிவு அவசியமாவதில்லை என்பதே எனது வாதமாகும்” என்கிறார்.

25. முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசு எந்திரத்திற்கும் தொழிலாள வர்க்கம் கீழ்ப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து 1936 இல், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்:

தொழிலாள வர்க்கத் தலைவர்கள் முதலாளித்துவத்தினருடன் கொள்ளும் அரசியல் கூட்டணிக்கு “குடியரசின்” பாதுகாப்பு எனும் மாறுவேடம் அணிவிக்கப்படுகிறது. உண்மையில் இந்த பாதுகாப்பு என்பது, என்னவென்பதை ஸ்பெயினின் அனுபவம் காட்டுகிறது. “ஜனநாயகவாதி” என்ற வார்த்தையைப் போலவே “குடியரசுவாதி” என்ற வார்த்தையும் வர்க்க முரண்பாடுகளை மூடிமறைக்க சேவைசெய்கின்ற ஒரு திட்டமிட்ட ஏமாற்றுத்தனமாக இருக்கிறது. குடியரசு தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கின்ற வரையில் முதலாளித்துவவாதி குடியரசுவாதியாக இருக்கிறார். [ஸ்பெயினின் படிப்பினைகள், 1936]

26. இடது ஜனரஞ்சகவாதம் என்பது வெறுமனே 1930களின் மக்கள் முன்னணி அரசியல் திரும்பவும் நிகழும் ஒன்றல்ல. சில ஒற்றுமைகள், குறிப்பாக முதலாளித்துவத்தினருக்கு கீழ்ப்படியச் செய்வதில், மக்கள் முன்னணிவாத அரசியலுடன் அதற்கு இருக்கின்ற போதிலும், தொழிலாள வர்க்கத்துடன் அதற்கு —அரசியல் தொடர்பை விடுவோம்— எந்த வரலாற்றுத் தொடர்பும் கூட கிடையாது. மூஃவ் இன் வார்த்தைகளில் சொல்வதானால், “அரசியலை மூலதனம்/உழைப்புக்கு இடையிலான முரண்பாடாகக் குறைத்து, தொழிலாள வர்க்கத்திற்கு அதற்கே உரிய (ontological) ஒரு சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்து அதனை சோசலிசப் புரட்சிக்கான வாகனமாக சித்தரிக்கின்றவர்களை” அது குறிப்பாக எதிர்க்கிறது. அதாவது, மார்க்சிச அரசியலின் ஒட்டுமொத்த அடித்தளத்தையும் அது மறுதலிக்கிறது.

27. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திற்கு எதிராக, மூஃவ் மற்றும் போலி-இடதுகளது அரசியலானது ஒரு ஒழுங்கமைக்கப்படாத, வேலைத்திட்ட வரையறையற்ற, வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் தேசியவாத இயக்கத்தினை உருவாக்குவதற்கு அறிவுறுத்துகிறது. மூஃவ் வெளிப்படையாக கூறுவதைப் போல, இடது-ஜனரஞ்சகவாத இயக்கமானது, தன்னை சோசலிச இயக்கமாக அடையாளப்படுத்திக் கொள்வதுமில்லை அல்லது முதலாளித்துவ அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதுமில்லை. சிரிசா கிரீசில் செய்திருப்பதைப் போல, பொடெமோஸ் ஸ்பெயினில் செய்திருப்பதைப் போல, அதிவலதுகளுடன் உடன்பாட்டுக்கும் ஒத்துழைப்புக்குமான புள்ளிகளைக் காணுவது சாத்தியமானது என கருதுகின்றது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு எதிராக, போலி-இடதுகளின் இடது ஜனரஞ்சகவாதமானது கட்டுக்கதைகள் மற்றும் பகுத்தறியாமை அரசியலின் பிற வடிவங்களைப் பயன்படுத்துவதற்கு ஆலோசனையளிக்கிறது.

28. இடது ஜனரஞ்சகவாதமானது போலி-இடது அரசியலின் ஒரு வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தினை நிராகரிக்கும் இப்போலி-இடதானது, தனது தத்துவார்த்த மூலவேர்களை, பிராங்ஃபேர்ட் பள்ளியின் தத்துவாசிரியர்களிடத்திலும் மற்றும் புறநிலை உண்மை மற்றும் புரட்சிகர வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிச “பெருங்கதையாடல்”கள் மீதான பின்நவீனத்துவ மறுப்பிலும் கொண்டிருக்கின்றது. நிறம், பாலினம், பால் அடையாளம் மற்றும் “மக்கள்” அடையாளங்களை உயர்த்திப்பிடிப்பதை அடிப்படையாகக் கொண்ட போலி-இடது அரசியல் மக்களின் 10 சதவீதத்தினரான நடுத்தர வர்க்கத்தின் ஒரு தனிச்சலுகைகொண்ட அடுக்கின், அரசியலாக இருக்கிறது. இது தன்னை இடது சொல்லாடல்களைக் கொண்டும் “99 சதவீதத்தினரின் கட்சி” என்பதைப் போன்ற சுலோகங்களாலும் மறைத்துக் கொள்கிறது.

29. பங்குச் சந்தை ஏற்றம் மற்றும் செல்வம் திகைப்பூட்டும் விதத்தில் வசதியான 10 சதவீதத்தினரிடையே குவிந்திருப்பது ஆகியவற்றுடன் பிணைந்திருக்கும், இந்த அடுக்கின் நலன்களும் இதன் வாழ்க்கைமுறையும் பரந்த தொழிலாள வர்க்க மக்களின் கவலைகளில் இருந்து முற்றிலும் சம்பந்தமற்றவையாகும். கல்வியாளர்களது கணிசமான பிரிவுகள், முதலாம் உலகப் போருக்கு முன்வந்த காலகட்டத்தை நினைவுபடுத்துகின்ற ஒரு விதத்தில், கூர்மையாக வலது நோக்கி நகர்ந்திருக்கின்றன, ஏகாதிபத்தியத்திற்கும் தணிக்கைக்கும் பின்னால் தமது ஆதரவை வழங்குகின்றன. போலி-இடது அமைப்புகளின் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கான ஆதரவில் (அதாவது, சிரியா மற்றும் லிபியாவிலான தலையீடுகள், ”மனித உரிமைகள்” தலையீடுகளுக்கான ஆதரவு, ரஷ்ய-விரோத வெறிக்கூச்சல், இன்னபிற) இது குறிப்பான வெளிப்பாட்டைக் காண்கிறது.

30. போலி-இடது அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் இன, பாலின மற்றும் பால் அடையாள அரசியலானது செல்வப் பகிர்வு தொடர்பாகவும் பெருநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்குள்ளான பதவிகளுக்கான அணுகல் தொடர்பாகவும் சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ள 10 சதவீதத்தினருக்கு உள்ளேயான மோதலுடன் பிணைந்ததாக இருக்கிறது. அடையாள அரசியல், பிற்போக்கான மற்றும் ஜனநாயக-விரோத #MeToo இயக்கத்திலும் மற்றும் உதாரணத்திற்கு, ஜூலியான் அசாஞ்ச் தண்டிக்கப்படுவதற்கு ஆதரவளிப்பதிலும் குறிப்பாக நச்சுத்தனமான வெளிப்பாட்டைக் கண்ட, செல்வம் மற்றும் அந்தஸ்தை அடைவதற்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. ஆளும் உயரடுக்குடன் மிக வசதியான நடுத்தர வர்க்கத்தின் (உயர்மட்டத்தில் 90 முதல் 99 சதவீதம் வரையான அடுக்கு) அணிச்சேர்ப்பை பிரதிபலிக்கின்ற முதலாளித்துவ-ஏகாதிபத்திய அரசியலின் ஒரு குறிப்பான பாகமாக அது இருக்கிறது. இந்த விதிக்கு விதிவிலக்குகள் எப்போதும் காணப்படலாம் என்பது உண்மையே. சமூக மோதல் தீவிரமடைகின்ற காலகட்டங்களில், தமது வர்க்கச் சூழலில் இருந்து உடைத்துக் கொண்டு, கணிசமான தனிமனித உறுதி மற்றும் தீரத்துடன், புரட்சிகர சோசலிச நலனுக்கு தமது ஆதரவை அளிக்கக் கூடிய மனிதர்களும் இருக்கவே செய்வார்கள். ஆயினும் அரசியல் மூலோபாயமானது விதிவிலக்கான மனிதர்களின், அதாவது “அவர்களது வர்க்கத்திற்கு துரோகி”களின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட முடியாது. இவ்வாறாக, இடதுகள், 90 முதல் 99 சதவீத வருவாய் வட்டத்தின் வர்க்க மற்றும் பொருளாதார நலன்களுக்கும், கீழிருக்கும் 90 சதவீதத்தினரின் வர்க்க மற்றும் பொருளாதார நலன்களுக்கும் இடையில் அடையாள ஒற்றுமை இருப்பதாக திட்டவட்டம் செய்து, “99 சதவீதத்தினரின் கட்சி” ஒன்றுக்கு அழைப்புவிடுக்கின்றபோது, அது ஒரு அரசியல் மோசடியாகவே இருக்கிறது. “99 சதவீதத்தினரின் கட்சி” என்ற ஒன்று, உழைக்கும் பெருவாரியான பரந்த மக்களின் நலன்களை முதலாளித்துவ உயரடுக்கின் பொருளாதார மற்றும் சமூக நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்கின்றதொரு அரசியல் அமைப்புக்கு மேலான எதுவொன்றாகவும் இருக்க முடியாது.

31. நடுத்தர வர்க்கத்தின் மிக வசதியான பிரிவுகள், வலது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளையில், கீழ் அடுக்குகள் இடது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பிரான்சில் மஞ்சள் சீருடை இயக்கமானது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்லாமல், சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்தும் ஆதரவை ஈர்த்தது. முன்கணிக்கக்கூடிய விதத்தில், பிரான்சில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் வசதியான போலி-இடதுகளது பிரதிநிதிகளும் (அதாவது, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் அலென் கிறிவின், அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் ஜோன்-லூக் மெலோன்சோன் போன்றவர்கள்), மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்களில் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளும் இருந்ததை பிடித்துக் கொண்டு, அதனை “பாசிச” இயக்கமாக அவதூறு செய்தனர். ஆனால், நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கின்றன, சமூக சமத்துவமின்மை பிரச்சினைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்ற உண்மையானது தீவிர முக்கியத்துவம் கொண்ட ஒரு சாதகமான அபிவிருத்தியாகும். சமூக இயக்கம் அபிவிருத்திகாணும் இந்தக் கட்டத்தில், நடுத்தர வர்க்கத்தின் முக்கியமான கூறுகள் முதலாளித்துவத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்துடன் தங்களை அணிநிறுத்திக் கொள்வதற்கு தயாரிப்புடன் உள்ளன என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

32. இவ்வாறாக, இந்தப் போராட்டத்தில் தலைமை கொடுக்கத் திறன்படைத்திருப்பதை விளங்கப்படுத்துவதே தொழிலாள வர்க்கத்திற்கான அவசர பணியாக உள்ளது. உழைக்கும் மக்கள் பல்தரப்பட்ட வருமானம் பெறும் குழுக்களை கொண்ட விரிந்த மாறுபட்ட அடுக்குகளைக் கொண்டதாக அமைந்திருக்கின்ற ஒரு சிக்கலான மற்றும் சமூகரீதியாக பல்படித்தான சமூகத்தில், இந்த பரந்த சமூக சக்தியை ஐக்கியப்படுத்துவதற்கான அவசியம் என்பது ஒரு கடினமான அரசியல் கடமையாக உள்ளது. தொழிலாள வர்க்கம் ஒரு தெளிவான மற்றும் சமரசமற்ற முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்படுகின்ற மட்டத்திற்கே இந்தக் கடமை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட முடியும். இந்த அடிப்படையில் அது, முன்னேறிய முதலாளித்துவ சமூகங்கள் அத்தனையிலும் தொழிலாள வர்க்க மக்களின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கின்ற தொழில்வல்லுநர்களது சற்று வசதியான அடுக்கினை மட்டுமல்ல, சிலவராட்சி முதலாளித்துவத்தினால் ஒடுக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகளையும் கூட, தன் பக்கத்திற்கு வென்றெடுக்க முடியும். நடுத்தர வர்க்கத்தின் சமூக உளவியல் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு —80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அடுக்கு சமூகத்தில் இன்றிருப்பதை விடவும் ஒரு மிகத் தனித்துவமான “தொழிலாள வர்க்கமல்லாத” கூறாக இருந்தவொரு சமயத்தில் எழுதப்பட்டது— இப்போதும் செறிந்த பொருத்தத்தைக் கொண்டுள்ளது:

எதிர்வரவிருக்கும் காலகட்டத்திலான அரசியல் அபிவிருத்திகள் மிகவிரைவான வேகத்தில் நகரும். குட்டி முதலாளித்துவமானது மாற்றுப் பாதையின் நடைமுறை சாத்தியத்தில் நம்பிக்கை வைக்கும்போது மட்டுமே பாசிசத்தின் வாய்வீச்சை அது நிராகரிக்கும். அந்த மாற்றுப் பாதை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பாதையாகும்...

குட்டி முதலாளித்துவத்தை தன் பக்கத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கம் அதன் நம்பிக்கையை வெல்ல வேண்டும். அதற்கு அது முதலில் தனது சொந்த வலிமை மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

அது ஒரு தெளிவான நடவடிக்கை திட்டத்தைக் கொண்டிருப்பதோடு சாத்தியமான எந்த வழியிலும் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். [பிரான்ஸ் எங்கே செல்கிறது?, 1934]

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயமும்

33. தொழிலாள வர்க்கம் முகம்கொடுப்பது “சீர்திருத்தமா அல்லது புரட்சியா” என்ற தெரிவுக்கு அல்ல மாறாக “புரட்சியா அல்லது எதிர்ப்புரட்சியா” என்ற தெரிவுக்கே முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலம் எவ்வாறு தீர்க்கப்படுகிறது. சர்வாதிகாரம், பாசிசம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் காட்டிமிராண்டித்தனத்திற்குள் வீழ்வது ஆகிய முதலாளித்துவ வழிமுறைகளின் மூலமா, அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாய் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச சமூகத்திற்கு உருமாற்றம் காண்பதன் மூலமா என்பது உலக அளவில் வர்க்கப் போராட்டத்தின் இறுதிவிளைவின் மூலமாகவே தீர்மானிக்கப்படுவதாக இருக்கும். முதன்முதலில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எடுத்துவைக்கப்பட்ட வரலாற்று முன்னோக்கு ஒரு கூர்மையான யதார்த்தநிலையை எட்டியிருக்கிறது. முதலாளித்துவ உயரடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் தீவிரமடைகின்ற மோதலானது “ஒன்று பெருமளவில் சமூகம் புரட்சிகரமாக மறுஒழுங்கமைப்படுவதில் முடியும், இல்லையேல் சண்டையிடும் வர்க்கங்களது பொதுவான நாசத்தில் முடியும்”.

34. கடந்த 40 ஆண்டுகள், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு இடைவிடாத தாக்குதலால் குறிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒருகாலத்தில் ஆதரவு வழங்கி வந்திருந்த அமைப்புகள் —குறிப்பாக தொழிற்சங்கங்கள்— இந்த தாக்குதலில் உதவியாகவும் உடந்தையாகவும் இருந்து வந்திருக்கின்றன.

35. எவ்வாறெனினும், சமூக எதிர்ப்புரட்சியின் பல தசாப்தங்கள் நீண்ட காலகட்டம் ஒன்று, இப்போது வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் அபிவிருத்தி கண்ட போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் நோக்குநிலையிலான ஒரு முக்கியமான மாற்றத்தின் புறநிலை அறிகுறிகளாக இருந்தன. அது அதன் ஆரம்பகட்டங்களில் தான் இருக்கிறது என்றபோதிலும் கூட, விட்டுக்கொடுக்காத ஒரு போராட்டத்திற்கு சாதகமாக இருக்கக்கூடிய ஒரு போர்க்குண மனோநிலை, துரிதமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மனோநிலை முதலாளித்துவத்திற்கு எதிரானதும் சோசலிசத்திற்கு ஆதரவானதுமான ஒரு வெளிப்படையான போராட்டத்தின் வடிவத்தை எடுக்க வெற்றிகாணப்பட வேண்டிய ஏராளமான சித்தாந்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் இப்போதும் இருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும், நேரடிப் போராட்டம் தவிர்க்கமுடியாதது என்ற புரிதலுக்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், 2018 இல் நடந்த போராட்டங்கள் உத்தியோகபூர்வ அரசு-ஆதரவு தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் நடந்தன என்ற உண்மையானது இந்த பிற்போக்கான அமைப்புகளின் மீது தொழிலாளர்கள் மத்தியில் இருந்த மிக முக்கியமான ஆதரவு தொலைந்து போயிருப்பதை விளங்கப்படுத்துகிறது. ICFI முன்னெதிர்பார்த்ததைப் போலவே, சமூக சமத்துவத்திற்கும் உலக சோசலிசத்திற்குமான போராட்டமானது இந்த மதிப்பிழந்த, முதலாளித்துவ-ஆதரவு எந்திரங்களுக்கு எதிரான ஒரு உலகளாவிய கிளர்ச்சியின் ஆரம்ப வடிவத்தை எடுக்கும்.

36. தேசிய மற்றும் எல்லாவற்றுக்கும் மேல், உலகளாவிய காரணிகளின் ஒரு மிகப்பரந்த மற்றும் இடைத்தொடர்புகள் கொண்ட சிக்கலான பின்னலினால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக இருக்கின்ற நிகழ்வுகளின் துல்லியமான உத்வேகத்தைக் கணிப்பது சாத்தியமற்றதாகும். ஆனாலும், தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களிலான மேலெழுச்சி 2019 இலும் தொடரும் என்பதை மிக நிச்சயத்துடன் கூற முடியும். என்றாலும் இந்த தீவிரமடைந்து செல்லும் சமூக போர்க்குணத்தை சோசலிசத்திற்கு ஆதரவான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான இயக்கமாக உருமாற்றுவது என்பது தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சிகளை —அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளை— கட்டியெழுப்புவதன் மீதே தங்கியிருக்கிறது.

37. 2018 இல், ரஷ்யப் புரட்சி மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தின் மீதான ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்கு எதிராய் மார்க்சிசத்திற்கான போராட்டத்தைத் தொடரும் பொருட்டு நான்காம் அகிலத்தை லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்ததன் 80து ஆண்டினை ICFI கொண்டாடியது. இலங்கையிலும், அமெரிக்கா எங்கிலும், ஐரோப்பாவிலும் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்த உரைநிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில், நான்காம் அகிலத்தின் வரலாற்று தாக்குப்பிடிப்புக்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டது: எல்லாவற்றையும் விட, இந்த சகாப்தத்தின் புறநிலைத் தன்மைக்கு நான்காம் அகிலத்தின் சர்வதேசியவாத முன்னோக்கு கொண்டுள்ள பொருத்தமே காரணமாகும்.

38. ஸ்ராலினிசம் மற்றும் அதன் மாவோவாத வகை தொடங்கி, சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்க சீர்திருத்தவாதம், காஸ்ட்ரோயிசம் போன்ற குட்டி-முதலாளித்துவ இயக்கங்கள் வரை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அரசியல் செல்வாக்கு செலுத்திய அத்தனை தேசியவாத அமைப்புகளும் கட்சிகளும் பொறிந்து விட்டிருக்கின்றன அல்லது முதலாளித்துவ ஆட்சியின் பிரதான கருவிகளாக உருமாற்றப்பட்டு விட்டிருக்கின்றன. சீன ஆட்சியின் விடயத்தில், கடந்த நான்கு தசாப்த காலத்தில் சீனா கண்டிருக்கும் தீவிர பொருளாதார வளர்ச்சியைத் தாண்டியும், காலதாமதமான வளர்ச்சி கண்ட நாடுகளது வரலாற்றுப் பிரச்சினைகளை தீர்ப்பதில் தோல்விகண்டிருக்கிறது. சீனாவின் தொழிலாள வர்க்கமும் அதன் கிராமப்புற வெகுஜன மக்களும் ஏகாதிபத்திய சுற்றிவளைப்பின் யதார்த்தத்திற்கு இப்போதும் முகம்கொடுத்துள்ளனர், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ஒரு நாசகரமான தாக்குதலின் மிரட்டலுக்கு முகம்கொடுக்கின்றனர். மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி உலக முதலாளித்துவத்தின் ஒரு பிரதான கோட்டையாக ஆகி இருக்கிறது என்பதுடன் ஏகாதிபத்திய சக்திகளின் போர் திட்டநிரலை எதிர்ப்பதற்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த நம்பகமான விண்ணப்பமும் செய்யத் திறனற்றதாகவும் இருக்கிறது.

39. சென்ற ஆண்டின் சமயத்தில் சீனத் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சியின் பின்விளைவுகளுக்கு எதிராய் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு வேலைநிறுத்தங்களில் இறங்கியது. இந்த போராட்டங்கள் மாணவர்கள் இளைஞர்களின் ஆதரவை வென்றிருக்கிறது. சீனாவில் இன்னும் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள அத்தனை நாடுகளிலும் என்றும் சொல்லலாம், இவை கடந்த நான்கு தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையில் ஒரு பாரிய வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. சமூகப் போராட்டங்களது விரிவுகாணலானது ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஆர்வத்திலும் ஆதரவிலும் ஒரு மறுஎழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. சென்ற நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களுக்கு சளைக்காமல், சமகால உலகத்தில் நிலவுகின்ற நிலைமைகளும், லியோன் ட்ரொட்ஸ்கியால் எடுத்துரைக்கப்பட்ட நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகளை ஊர்ஜிதம் செய்கின்றன:

சோசலிசப் புரட்சியை தேசிய எல்லைகளுக்குள் பூர்த்தி செய்வது சிந்திக்க முடியாததாகும். முதலாளித்துவ சமூகத்தினால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் தேசிய அரசின் கட்டமைப்புக்குள்ளாக இனியும் இணக்கமாய் இருக்க முடியவில்லை என்ற உண்மையே அதன் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாய் இருக்கிறது. இதில் இருந்து, ஒருபக்கத்தில், ஏகாதிபத்தியப் போர்களும், மறுபக்கத்தில் ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் எனும் கற்பனாகாட்சியும் பிறக்கின்றன. சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் ஆரம்பிக்கிறது, சர்வதேச அரங்கில் கட்டவிழ்கிறது, உலக அரங்கில் பூர்த்தியடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது [நிரந்தரப் புரட்சி என்ற] வார்த்தையின் ஒரு புதிய மற்றும் விரிந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தப் புரட்சியாக ஆகிறது; நமது ஒட்டுமொத்தக் கோளத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது பூர்த்தியடைகிறது. [நிரந்தரப் புரட்சி என்றால் என்ன? 1931]

40. 1953 இல் இந்த முன்னோக்கைப் பாதுகாத்தே, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அழித்து நான்காம் அகிலத்தை ஸ்ராலினிசத்திற்குள்ளும் முதலாளித்துவ தேசியவாதத்திற்குள்ளும் கலைக்க முனைந்த பப்லோவாத திருத்தல்வாதப் போக்கை எதிர்த்து சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரான ஜேம்ஸ் பி. கனன் விடுத்த “பகிரங்க கடிதத்தை” தொடர்ந்து அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபினை பாதுகாத்தான போராட்டம் என்பது, நடைமுறைவாதத்திற்கும் அதன் பல்வேறு அகநிலை கருத்துவாத மற்றும் பகுத்தறிவற்ற துணைக்கிளைகளுக்கும் (அதாவது, பிராங்க்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம்) எதிராய் இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாத தத்துவத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்ராலினிசம், பப்லோவாத திருத்தல்வாதம் (மற்றும் அதன் மொரேனோவாத வகை), மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான சமரசமற்ற எதிர்ப்பு ஆகியவை கொண்ட ஒரு பரந்த தளத்தில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசியவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக 1982க்கும் 1986க்கும் இடையில் ICFI நடத்திய போராட்டம் அதன் வரலாற்றில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகும், ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஐக்கியப்படுவதற்கு இது வழிவகுத்தது.

41. ICFI நடத்திய போராட்டம் தத்துவம் மற்றும் வேலைத்திட்டத்தின் வட்டத்தில் மட்டும் கட்டவிழவில்லை. ஏகாதிபத்தியத்தினாலும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினாலும் பயன்படுத்தப்பட்ட முகவர்கள் குறித்து, 1975க்கும் 1983க்கும் இடையில் நடத்தப்பட்ட, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்று அறியப்படும் விசாரணை, அனைத்துலகக் குழுவின் புரட்சிகர தளர்ச்சியின்மையை நடைமுறையில் விளங்கப்படுத்தியது. இந்த விசாரணையானது, மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, சில்வியா கோல்ட்வெல் மற்றும் ஜோசப் ஹான்சன் போன்ற ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு தயாரிப்புச் செய்ததில் முக்கியமான பாத்திரங்கள் வகித்தவர்கள் உள்ளிட முகவர்களை பகிரங்கமாக பாதுகாத்த பப்லோவாத அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புக்கு முகம்கொடுத்த நிலையில் நடத்தப்பட்டது. இன்றும் கூட, பப்லோவாதிகளும் அவர்களது போலி-இடது கூட்டாளிகளும் இந்த முகவர்களைத் தொடர்ந்தும் பாதுகாப்பதோடு பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் கண்டறிவுகளையும் மிக ஆவேசமான வார்த்தைகளில் கண்டனம் செய்கின்றனர். ஆயினும், விசாரணையின் பாதையில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரேயொரு உண்மையையும் கூட மறுக்கத் திறமற்றவர்களாய் அவர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் கண்டறிவுகளை மேலும் ஊர்ஜிதம் செய்கிறதான ஆவணங்கள் வெளிவந்திருக்கின்றன. அனைத்துலகக் குழு இந்த புதிய விபரங்களையும் அதன் முந்தைய கண்டறிவுகளுடன் சேர்த்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் ஜனநாயக உரிமைகளின் மீதும் அரசின் தாக்குதல்கள் பெருகுகின்றதான நிலைமைகளின் கீழ், பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் கண்டறிவுகள் புதிய வரலாற்று மற்றும் சமகால அரசியல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

42. ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்து ICFI ஆல் நடத்தப்பட்ட போராட்டத்தின் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை நிகழ்வுகள் இப்போது விளங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ICFI மட்டுமே சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரேயொரு புரட்சிகர அரசியல் கட்சி என்பதையும் அதுவே உண்மையான மார்க்சிசத்தின் ஒரேயொரு பிரதிநிதி என்பதையும் தத்துவரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் அது ஸ்தாபித்திருக்கிறது. 1938 இல் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேசக் கட்சியின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்வதாக புரிந்து கொள்ளத்தக்கவிதத்தில் உரிமை கோரக் கூடிய கட்சியாக ICFI ஐத் தவிர்த்து வேறொன்று இந்த உலகத்தில் இல்லை.

43. ரஷ்யப் புரட்சியின் வரலாற்றைப் பொய்மைப்படுத்துவதற்கு நடந்த அத்தனை முயற்சிகளுக்கு எதிராகவும், ஏராளமான அவதூறுகள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராய் லியோன் ட்ரொட்ஸ்கியின் புத்திஜீவித மற்றும் அரசியல் மரபைப் பாதுகாத்தும் ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தை ICFI நடத்தி வந்திருக்கிறது. 2017 இல், ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக, ICFI அதன் தீவிரமான மூலோபாயப் படிப்பினைகள் குறித்த ஒரு முழுமையான ஆய்வை நடத்தியது. இந்தப் படிப்பினைகள் இன்று அரசியல் சூழலுக்குள் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

44. முதலாளித்துவ-ஆதரவு அதிகாரத்துவ எந்திரங்களுக்கு எதிரானதொரு கிளர்ச்சியும் பெருநிறுவன-எந்திரங்களிலிருந்து சுயாதீனப்பட்டு தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க கூடிய புதிய, ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தக் கூடிய சாமானிய தொழிலாளர் தொழிற்சாலை மற்றும் தொழிற் தள அமைப்புகளை உருவாக்குவதற்கான அவசியமுமே தொழிலாளர்களின் போராட்டங்களது தர்க்கமாகும் என்பதை ஸ்தாபித்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்திற்கு ICFI முன்னிலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 2018 இன் இறுதி வாரங்களில், அமெரிக்காவில் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களும் இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், ICFI இன் செல்வாக்கின் கீழ், முன்னோடியான நடவடிக்கைகளை எடுத்து, வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை உருவாக்கினர். 2019 ஆம் ஆண்டில் இந்த வேலை தொடரும் மற்றும் விரிவடையும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் சமரசமற்ற போராட்டங்கள், இல்லாவிடின் அதிவலதின் வாய்வீச்சின் பின்னால் இழுக்கப்பட்டு சென்று விடக் கூடிய நடுத்தர வர்க்கங்களின் நலிவடைந்த பிரிவுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் வெல்லும். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் தாக்கமானது முன்னெப்போதினும் பரந்த தொழிலாள வர்க்கப் பிரிவுகளை போராட்டத்திற்குள் செலுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், வெகுஜன இயக்கத்திற்கு ஒழுங்கமைப்பையும் அரசியல் திசையையும் வழங்குவதே அமெரிக்கா, இலங்கை, மற்றும் அவை செயலூக்கத்துடன் இயங்குகின்ற அனைத்து நாடுகளிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளது கடமையாக இருக்கிறது. அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தும் ஒரு பொது அரசியல் வேலைநிறுத்தத்திற்கான புறநிலை உந்துசக்தியை அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளால் நனவுடன் அடையாளம் காணப்பட்டு மற்றும் விளங்கப்படுத்தப்பட வேண்டும்.

45. டெட்ராயிட்டில் டிசம்பர் 9 அன்று நடந்த சாமானியத் தொழிலாளர்கள் மாநாட்டில், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகளிடம் இரண்டு அதிமுக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டன: 1) போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களது அத்தனை பிரிவுகளது மத்தியிலும் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான ஒரு கருவியாக உலக சோசலிச வலைத் தளம் செயல்படுமா?; 2) தொழிலாளர்கள் தமது போராட்டங்களை சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதில் WSWS உதவி செய்யுமா? இரண்டு கேள்விகளுக்குமே ஒருமித்த குரலிலான “ஆம்” என்பதே பதிலாய் அளிக்கப்பட்டது. ICFI இன் இணைய வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சியும் போர்க்குணமும் பெருகிச் செல்கின்ற இயக்கத்திற்கு, வரலாற்றுக் கல்விக்கும் அரசியல் பகுப்பாய்விற்கும் ஒரு குரலாக இருப்பதுடன் மற்றும் விவாதத்திற்கான ஒரு களத்தை வழங்கும். இணைய தணிக்கைக்கு எதிராகவும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜூலியான் அசாஞ்ச் மற்றும் துன்புறுத்தப்படும் அத்தனை பத்திரிகையாளர்கள், விழிப்பூட்டிகள், கலைஞர்கள் அத்தோடு ஆளும் வர்க்கத்தின் கோட்பாடான விமர்சகர்களைப் பாதுகாப்பதுமான போராட்டத்தில் WSWS தொடர்ந்தும் முன்னணியில் நிற்கும்.

46. அனைத்துலகக் குழுவின் ஒரு கணிசமான விரிவாக்கத்திற்காக முறைப்படி வேலைசெய்வதே 2019 இலான மிக முக்கியமான பணியாகும். இன்னும் மிக நேரடியாய், அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகள் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நகர்வுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுக் கொண்டிருக்கின்றன. புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியிலும் இறுதிவிளைவிலும் ஒரு அத்தியாவசியமான காரணியாக ஆவதே அதன் இன்றியமையாத நடைமுறை புரட்சிகர நடவடிக்கை ஆகும். ICFI இன் தத்துவார்த்தரீதியான மற்றும் வரலாற்று விபரவிளக்கத்துடனான பகுப்பாய்வு தீவிர அரசியல் மற்றும் நடைமுறை முக்கியத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த புதிய சூழ்நிலையின் சவாலை சந்தித்தாக வேண்டும். உலக அபிவிருத்திகள் குறித்த அதன் பகுப்பாய்விலும் மற்றும், சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் அவற்றுடன் அவற்றுடன் இணைந்த இளைஞர் இயக்கங்கள், சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) ஆகியவற்றில் செயலூக்கத்துடன் உள்ள அதன் வழிநடப்பவர்களது அரசியல் வேலைகளின் மூலமாகவும், ICFI, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குள்ளாக அதன் இலக்குகள் குறித்த அத்தியாவசியமான நனவைப் புகட்டியாக வேண்டும், அத்துடன் சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை முன்னெடுப்புகளது அபிவிருத்தியிலும் உதவி செய்தாக வேண்டும்.

47. காலாவதியாகிப் போன மற்றும் பிற்போக்குத்தனமான தேசியவாத அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மற்றும் அவற்றின் போலி-இடது உடந்தையாளர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கம் முறித்துக் கொள்கின்ற நிலையில், சர்வதேசியவாத புரட்சிகர மார்க்சிச நனவும் நடைமுறையும் துரிதமாக அபிவிருத்தி காண்பதற்கான சாத்தியம் நிலவுகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியம் மற்றும் வேலைத்திட்டத்திலும் ஒரு விஞ்ஞானரீதியான நம்பிக்கையின் அடித்தளத்திலும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றல்களில் மாபெரும் நம்பிக்கையுடனும் 2019 இல் ICFI காலடி எடுத்துவைக்கிறது.