ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The global class struggle in 2019

2019 இல் உலகளாவிய வர்க்கப் போராட்டம்

Joseph Kishore
16 January 2019

2019 ஆம் ஆண்டானது, உலகெங்கிலும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வர்க்க போராட்டத்தின் ஏனைய வெளிப்பாடுகளின் ஓர் அலையுடன் ஆரம்பிக்கின்றது.

பிரான்சில், “மஞ்சள் சீருடை" போராட்டங்கள் அவற்றின் 10 ஆம் வாரத்தில் நுழைந்துள்ளதுடன், நாடெங்கிலும் இருந்து கடந்த வாரயிறுதியில் குறைந்தபட்சம் 85,000 பேர் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர், போராட்டக்காரர்களின் இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக அதிகரித்திருந்தது. சம்பள உயர்வின்மை மற்றும் அரசு பள்ளிக்கூடங்களின் படுமோசமான நிலைமைகள் சம்பந்தமாக ஆசிரியர்களது "சிவப்பு பேனா" போராட்டங்களும் இந்த மஞ்சள் சீருடையாளர்களுடன் சேர்ந்திருந்தன.

இந்தியாவில், பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பிஜேபி கட்சியின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக கடந்த வாரம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். வரலாற்றின் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றான இதில் சுரங்கத் தொழிலாளர்கள், உற்பத்தித்துறை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு தொழிலாளர்கள் மற்றும் இன்னும் பல துறை தொழிலாளர்களும் பங்கெடுத்தனர்.

மெக்சிகோவில், "மக்கில்லாடோரா" (maquiladora) ஆலைகள் எங்கிலும் வேலைநிறுத்தங்களும் ஆலை ஆக்கிரமிப்புகளும் பரவி வருகின்றன, இவற்றில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் பிரௌன்ஸ்வில் (Brownsville) எல்லைக்கு அருகில் மடாமொரொஸ் நகரின் 45 ஆலைகள் 70,000 தொழிலாளர்களின் தன்னிச்சையான வேலைநிறுத்த மையமாக இருந்தது. அந்த தொழிலாளர்கள் இன்றிலிருந்து ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான லாஸ் ஏஞ்சல்ஸ் ஒருங்கிணைந்த பள்ளி பிராந்தியத்தில் 33,000 ஆசிரியர்கள் திங்களன்று ஒரு வேலைநிறுத்தம் தொடங்கினர், அதேவேளையில் ஆயிரக் கணக்கான ஆசிரியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் வடக்கு கலிபோர்னியாவின் ஆக்லாந்து நகரத்தில் பொதுக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராக பங்கெடுத்தனர்.

கடந்தாண்டு மேற்கு வேர்ஜினியா, அரிசோனா, ஆக்லாந்து மற்றும் ஏனைய மாநிலங்களில் நடந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மற்றொரு "கல்வியாளர் எழுச்சியைக்" குறித்து ஊடக செய்திகள் எச்சரிக்கின்றன என்றாலும், இந்த முறை இவை ஜனநாயக கட்சியினது கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் நிகழவுள்ளன. இன்றுடன் 25 ஆம் நாளில் நுழைந்து வருகின்ற அரசு முடக்கத்திற்கு இடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அல்லது சம்பளம் வழங்கப்படாத மத்திய அரசின் 800,000 தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புடன் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு பெற்றிருந்த இந்த ஆசிரியர்களின் கோபம் இணைந்துள்ளது.

நேற்று ஐரோப்பா எங்கிலுமான விமானப் போக்குவரத்தை சிக்கலுக்கு உள்ளாக்கிய ஜேர்மன் விமான நிலைய பாதுகாப்புப் பணி தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம்; நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த 24 மணி நேர செவிலியர் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கே நடந்த 3,700 மருத்துவர்களின் வேலைநிறுத்தம; தென் ஆபிரிக்காவில் பரவி வரும் தங்கச் சுரங்கம் மற்றும் பிளாட்டினச் சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள்; மற்றும் அதிக எரிபொருள் விலையுயர்வுகளுக்கு எதிராக ஜிப்பாப்வேயில் நடந்த பாரிய போராட்டங்கள் ஆகியவை தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஏனைய வெளிப்பாடுகளில் உள்ளடங்குகின்றன.

இத்தகைய அபிவிருத்திகள், ஜனவரி 3 இல் WSWS அதன் "2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்" என்ற அறிக்கையில் வெளியிட்ட பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றன.

“2018 இன் சமூக அமைதியின்மையினது ஆரம்ப வெளிப்பாடுகள் இந்த புதிய ஆண்டிலும் தொடரும்,” என்று WSWS எழுதியது. “நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்துள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான நலன்களை வலியுறுத்த தொடங்கி உள்ளது. பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய சமூக போராட்டங்களின் வெடிப்பு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்தைச் சமிக்ஞை செய்கின்றன.”

மார்க்சிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தை ஒரு புறநிலை நிகழ்வுபோக்காக ஆய்வு செய்கின்றனர், இந்த புறநிலை நிகழ்வுபோக்கின் வடிவமும் தன்மையும் முதலாளித்துவ அமைப்புமுறையின் இயல்பிலிருந்து எழுகின்றன. வர்க்க போராட்டத்தினது அபிவிருத்தியின் தர்க்கமும், இந்த தர்க்கத்தை நனவுபூர்வமாக புரிந்து கொள்வதும் சோசலிச இயக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய அடுக்குகளின் நடைமுறையோடு நோக்குநிலை கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு அம்சங்கள் கடந்தாண்டின் போது அதிகரித்தளவில் தெளிவாகி உள்ளது.

முதலாவதாக, வர்க்க போராட்டம் ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்காக அபிவிருத்தி அடைந்து வருகிறது. முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கம் உலகப் பொருளாதாரத்தை அசாதாரண மட்டத்திற்கு ஒருங்கிணைத்துள்ளதுடன், ஒவ்வொரு நாட்டின் தலைவிதியையும் ஒருங்கிணைத்து வருகிறது. வெறுமனே வணிக பரிவர்த்தனைகள் மட்டும் பூகோளமயப்படவில்லை, மாறாக வர்க்க போராட்டமே—அதன் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் இரண்டு விதத்திலும் பூகோளமயப்பட்டுள்ளது. ஒரே பெருநிறுவனங்களால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், பெருகியளவில் இணைய அணுகல் வசதி மூலமாக முன்னொருபோதும் இல்லாத உலகளாவிய தொலைத்தொடர்பு முறைகளை தம்மகத்தே கொண்டுள்ளனர்.

இரண்டாவது தொழிலாள-வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியானது, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கொள்கைகள் மீதான அனைத்து எதிர்ப்பையும் நசுக்க நான்கு தசாப்தங்களாக செயல்பட்டு வந்துள்ள தற்போதைய தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிகர வடிவத்தை எடுத்து வருகிறது.

மெக்சிகோவில் வேலைநிறுத்தங்கள் வெடிப்பார்ந்த கிளர்ச்சி தன்மையை எடுத்துள்ளதுடன், தொழிலாளர்கள் அவர்களின் பணத்தை தொழிற்சங்கங்கள் கொள்ளையடிப்பதாக கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். பிரான்சில், மஞ்சள் சீருடை போராட்டங்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் மற்றும் அவற்றுடன் இணைந்த அரசியல் அமைப்புகளில் இருந்தும் சுயாதீனமாகவும் அவற்றிற்கு எதிராகவும் அபிவிருத்தி அடைந்தன என்ற உண்மையினாலேயே நீண்டு வந்துள்ளன. அமெரிக்காவில், மக்கள்தொகையில் உயர்மட்ட ஐந்து சதவீதத்தினர் அல்லது ஒருவேளை ஒரு சதவீதத்தினரது வருவாய்களில் உள்ளடங்கியுள்ள தனிநபர்களால் தலைமை தாங்கப்படும் ஆசிரியர் சங்கங்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் வேலைநிறுத்தத்தைத் தடுக்க அவற்றால் ஆனமட்டும் அனைத்தும் செய்து பார்த்த பின்னர், கடந்தாண்டு ஆசிரியர் போராட்டங்களின் போது அவை என்ன பாத்திரம் வகித்தனவோ மீண்டும் இப்போதும் அதையே செய்து அப்போராட்டங்களைத் தனிமைப்படுத்த அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன.

தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கிளர்ச்சியானது, அவை இன்னமும் "தொழிலாள வர்க்க அமைப்புகள்" என்று வாதிடுபவர்களின் அனைத்து கருத்துக்களையும் மறுத்தளிக்கின்றன.

மூன்றாவதாக, இந்த போராட்டங்களை எது உந்திச் செல்கின்றன என்றால் வெறுமனே சாதாரணமான வேலைத்தல பிரச்சினைகள் இல்லை. அவை சமூக சமத்துவமின்மையின் பாரிய அதிகரிப்பு மீது அதிகரித்து வரும் ஆழ்ந்த கோபத்தால் உயிரூட்டப்பட்டிருப்பதுடன், முதலாளித்துவ அமைப்புமுறையுடனேயே கூட அதிகரித்தளவில் நேரடியாக மோதலுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இத்தகைய போராட்டங்களின் தர்க்கம், ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த அரசியல் எந்திரத்துடனும் தொழிலாளர்களை மோதலுக்குக் கொண்டு வருகின்றது.

இறுதியாக, மிக முக்கிய முக்கியத்துவமாக, வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியானது வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தின் புத்திஜீவித அரசியல் பிரதிநிதிகளின் அனைத்து மார்க்சிச-விரோத தத்துவங்களையும் வெடித்துச் சிதறடித்து வருகிறது, அவை இனம் மற்றும் பாலின அரசியலுக்குச் சார்பாக இருந்து, முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க பிளவுகளது முக்கியத்துவம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை மறுக்கின்றன. இத்தகையவற்றில் மிகவும் சமீபத்தியது, கிரீஸில் சிரிசாவுக்கும் மற்றும் ஏனைய போலி-இடது கட்சிகளுக்கும் சித்தாந்த ஆலோசகரான சாந்தால் மூஃப் (Chantal Mouffe) இன் எழுத்துக்களிலும் மற்றும் தேசியவாத அடிப்படையிலான இவரின் "இடது ஜனரஞ்சகவாதத்தின்" முன்மொழிவுகளிலும், மற்றும் "தொழிலாள வர்க்கத்திற்கு இருப்பியல்ரீதியிலான [அதாவது புறநிலைரீதியாக நிலவும்] தனிச்சலுகையைச் சாட்டும்" நபர்களை வெளிப்படையாக இவர் நிராகரிப்பதிலும் உள்ளடங்கி உள்ளன.

தொழிலாள வர்க்கம் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்?

முதலாவதாக, வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது, ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும், எதிர்ப்பின் ஒவ்வொரு வெவ்வேறு வெளிப்பாட்டை ஒருங்கிணைக்கவும், ஒன்றிணைக்கவும் சாமானிய தொழிலிட நடவடிக்கை குழுக்களாக சுயாதீன அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகும்.

இதுபோன்ற சுயாதீனமான அமைப்புகளை உருவாக்க கடந்தாண்டு முடிவில் முக்கிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன—அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களால் வழிகாட்டும் கூட்டுக் குழு மற்றும் சாமானிய குழுக்கள் அமைக்கப்பட்டன, மற்றும் இலங்கையில் இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒழுங்கமைக்க ஒரு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினது தலைமையின் கீழ் வெளிப்பட்ட இத்தகைய முன்முயற்சிகள், விரிவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

இரண்டாவதாக போராட்டத்திற்கான புதிய அமைப்புகளின் ஸ்தாபிதம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அரசியல் தலைமையை —அதாவது ICFI மற்றும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளை— கட்டமைப்பதுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி ஒரு புறநிலையான நிகழ்ச்சிப்போக்கு என்றாலும், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கமாக அது அபிவிருத்தி அடைவதற்கு புரட்சிகர கட்சியின் தலையீடு அவசியமாகும். புறநிலைப் போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு அவசியமான அகநிலை நனவைப் புகுத்துவதற்கு இத்தலையீடு அவசியமாகும்.

வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, மாறாக அதன் குறிப்பிட்ட வடிவமும் கூட, ICFI ஆல் எதிர்நோக்கப்பட்டது தான். “தத்துவார்த்தரீதியிலும் நடைமுறையளவிலும்,” ஜனவரி 3 அறிக்கை விவரிக்கிறது, “ICFI மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரே புரட்சிகர அரசியல் கட்சியாக மற்றும் உண்மையான மார்க்சிசத்தின் ஒரே பிரதிநிதியாக ஸ்தாபித்துக் கொண்டுள்ளது.”

2019 இல் வர்க்க போராட்டத்தின் அதிகரிப்பானது, புறநிலை அபிவிருத்தியினாலும் மற்றும் புரட்சிகர கட்சியின் தலையீட்டினால் உந்தப்படுவதுடன் ஒன்றிணைந்து, முன்பினும் அதிக பகிரங்கமாக ஒரு சோசலிச, சர்வதேசியவாத, புரட்சிகர வடிவத்தை பெறும்.