ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mexican strikers show working class answer to capitalist reaction at US-Mexico border

மெக்சிகன் ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்க-மெக்சிகோ எல்லையிலான முதலாளித்துவ எதிர்வினைக்கு தொழிலாள வர்க்கத்தின் பதிலை எடுத்துக் காட்டுகின்றனர்

Eric London
17 January 2019

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில், முதலாளித்துவத்தின் கீழ் இரண்டு முக்கிய சமூக வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாள வர்க்கமும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான இரண்டு மாற்றுகளை எடுத்துக் காட்டுகின்றன.

முதலாளித்துவ வர்க்கம் கடும் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினரை அணிதிரட்டியுள்ளது, இவர்கள் பாலைவனம் எங்கிலும் முள்வேலிக்கு அருகே சங்கிலித் தொடர் போல் நின்று தஞ்சம் கோரும் அகதிகளை கண்ணீர்புகை குண்டுகளை பாய்ச்சித் தாக்குகின்றனர். கடந்த ஆண்டின் புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியாக, கொண்டூரஸில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிற்கு அணிவகுத்து வந்து “நாங்கள் சர்வதேச தொழிலாளர்கள்” என முழக்கமிட்ட புலம்பெயர்ந்தவர்கள், தற்போது அமெரிக்க எல்லைக்கு மிக அருகிலான, நோயில் சிக்கிய கூடார நகரங்களில் அவதியுற்று வருகின்றனர்.

நாட்டை பாதுகாக்கவும், வறுமை மற்றும் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க முனையும் பெருமளவு தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தவும், எல்லைப்புற காவல்முகவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை அவர்களது பெற்றோரின் கைகளில் இருந்து பறித்து வருகிறார்கள் என்பதுடன், சிலருக்கு அபாயகர விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல மாதங்களுக்கு அவர்களை தடுத்து வைக்கின்றனர். ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் வறண்ட பாலைவனத்தில் சிதறிக் கிடக்கின்றன.

குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இரு தரப்பினரும், எல்லையில் தடைகளை உருவாக்கவும், ஆளில்லா விமானங்களை பறக்கவிடவும் மற்றும் தஞ்சம் கோருவோரை உள்நுழைய விடாமல் தடுத்து நிறுத்தும் வகையில் அதிகளவு ஆயுதமேந்திய முகவர்களை அங்கு நிறுத்தவும் உறுதிபூண்டு “எல்லைப்புற பாதுகாப்பு” என்றழைப்பதன் பேரில், அமெரிக்க அரசாங்கம் தடுப்பு மையங்களை மூடிவைத்துள்ளது.

எல்லைகளை பலப்படுத்த எவ்வளவு மில்லியன்களை செலவிட வேண்டும் என்பதிலும், எத்தனை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு எல்லையில் சுவரெழுப்ப வேண்டும் என்பதிலும் அவ்விரு கட்சியினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவும் நிலையில், நூறாயிரக்கணக்கான மத்திய அரச தொழிலாளர்களின் சம்பளங்கள் வழங்கப்படாதுள்ளன. அமெரிக்க நிதிய மூலதனத்தின் மிக மோசமான பிரதிநிதியான ட்ரம்ப் தஞ்சம் புகுவோரை கண்டவுடன் சுட்டுத் தள்ளுவதற்கும், ஒரு “தேசிய அவசரகால நிலையை” அறிவிப்பதற்கும், மற்றும் அவர்களை அனுமதிக்கும் நடைமுறை மற்றும் உரிமையை நீக்குவதற்கும் அச்சுறுத்தியுள்ளார்.

மறுபுறம், தொழிலாள வர்க்கம், இந்த வெறுப்பூட்டும் யதார்த்தம் மீதான அதன் எதிர்ப்பை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. மெக்சிகனின் எல்லை நகரமான மத்தாமோரொஸில் (Matamoros), அமெரிக்க எல்லையில் இருந்து சில மைல்களுக்குள் இயங்கிவருவதான டசின் கணக்கான "மக்கில்லாடோரா"  (Maquiladora) தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி 70,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்தாமொரன் தொழிலாளர்கள் அவர்களது முதல் நடவடிக்கைகளை எடுக்க பயன்படுத்தியுள்ள செயல்திட்டத்தை அனைத்து தொழிலாளர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொழிலாளர்கள் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுத் தொகையை வழங்குவதில் அவர்கள் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டபோது, ஒரு பாரிய கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும், நிறுவனங்களுடன் தொழிற்சங்கம் கொண்டிருக்கும் ஒத்துழைப்பை வெறுத்து அதை நிராகரிப்பதற்குமான முதல்கட்ட நடவடிக்கையை அவர்கள் எடுத்தனர்.

இந்த தடுப்பு கவசத்தை (தொழிற்சங்கம்) அகற்றிய நிலையில், மத்தாமொரன்ஸின் தொழிலாளர்கள் முடிவாக ஒருவருக்கொருவர் சுதந்திரமாக பேசிக் கொண்டனர். மேலும், அவர்கள் தொழிற்சாலைகளில் விவாதத்தை ஆரம்பித்ததோடு, சமூக ஊடகங்களிலும் அவர்களது விருப்பங்களை ஜனநாயக ரீதியில் விவாதித்தனர். இந்நிலையில், பெரும் உணர்வுபூர்வ வேலைநிறுத்தத்தை செய்வதற்கு அவர்கள் வழிகண்டனர். அதன்படி, தொழிற்சங்கத்தால் வாயடைக்கப்படாமல், ஒரு பெரும் ஊதிய அதிகரிப்பு, திருடப்பட்ட மேலதிக கொடுப்பனவுத்தொகையை திரும்ப அளித்தல் மற்றும் தொழிற்சங்க கட்டணத்தை நீக்குதல் போன்ற அவர்களது சொந்த கோரிக்கைகளை அவர்களே வடிவமைத்தனர்.

அடுத்து, மக்கில்லாடோரா தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் அவர்களை செய்யவிடாமல் தடுத்ததை செய்தனர்: ஏனைய தொழிற்சாலைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்துடன் அவர்கள் ஒன்று சேர்ந்தனர். மேலும், அவர்களது சக பணியாளர்களை அவர்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க தொழில்துறை வளாகங்களின் ஊடாக அணிவகுத்துச் சென்று, உள்ளூர் பொருளாதாரத்தை முடக்கினர்.

தொழிலாளர்கள் தொழிற்துறை சார்பு ஊடகங்களின் உத்தியோகபூர்வ தகவல்சாதனங்களையும் பொய்யுரைக்கும் தொழிற்சங்க அதிகாரிகளையும் தாண்டி, நகரத்தின் 500,000 பேருக்கு செய்தி பரவுவதற்கு அனுமதித்த சமூக ஊடகங்களை பயன்படுத்தினர். இந்த வேலைநிறுத்தும் பற்றிய செய்திகளை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் முக்கிய ஊடகங்களும் மறைத்ததால் தொழிலாளர்களின் முக்கிய செய்தி ஆதாரமாக அவை இருக்கின்றன. வேலைநிறுத்தங்கள் பரவக்கூடும் என எச்சரிக்கும் அச்சுறுத்தல்மிக்க தலையங்கங்களை ஏனைய எல்லைப்புற நகரங்களில் உள்ள உள்ளூர் செய்தித்தாள்கள் பிரசுரித்து வருகின்றன.

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிக்கு, இரண்டு வர்க்கங்களும் முன்வைப்பதான எல்லையில் காட்டப்படும் இரண்டு நடைமுறைகள் தான் அதற்கான தீர்வுகள் ஆகும். அதாவது, ஜனவரி 3 இல் WSWS அதன் "2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்" என்ற அறிக்கையில் வெளியிட்ட பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றன:

முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலம் எவ்வாறு தீர்க்கப்படுகிறது. சர்வாதிகாரம், பாசிசம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் காட்டிமிராண்டித்தனத்திற்குள் வீழ்வது ஆகிய முதலாளித்துவ வழிமுறைகளின் மூலமா, அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாய் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச சமூகத்திற்கு உருமாற்றம் காண்பதன் மூலமா என்பது உலக அளவில் வர்க்கப் போராட்டத்தின் இறுதிவிளைவின் மூலமாகவே தீர்மானிக்கப்படுவதாக இருக்கும்.

பிரான்சில் மஞ்சள் சீருடை இயக்கம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் இலங்கையில் நடந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் உட்பட, 2019 இன் அனைத்து முக்கிய போராட்டங்களும், சமூக சமத்துவத்திற்காக எழுச்சியடைந்து வரும் உலக இயக்கத்தின் ஒரு பாகமாக உள்ளன. ஒவ்வொரு போராட்டமும் அதனளவில் சர்வதேச குணாம்சத்தைக் கொண்டுள்ளது.

“அமெரிக்க தயாரிப்பு” அல்லது “மெக்சிகன் தயாரிப்பு” வாகனம் என எந்தவொரு வேறுபடுத்தலுக்கும் இனிமேல் நீண்டகாலம் பிடிக்காது. வாகன தொழில்துறையில், 36 சதவிகித அமெரிக்க தயாரிப்பிலான வாகன உதிரிப் பாகங்கள் மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன, அதேபோல, 45 சதவிகித வாகன உதிரிப் பாகங்கள் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

மெக்சிகோவில் அல்லது அமெரிக்காவில் தொழிற்சாலை உற்பத்தி பாதையில் உருவாகி வெளிவரும் ஒரு வாகனம், தேசிய எல்லைகளை டசின் அல்லது நூற்றுக்கணக்கான முறை கடந்துள்ள பாகங்களை உள்ளடக்கியதாகும்.

உதாரணமாக, ஒரு காரின் இருக்கை கட்டுப்பாட்டு பொத்தானை தயாரிக்க, ஆசியாவில் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு மின்தேக்கி அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது, பின்னர் அதுவே Ciudad Juarez தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது, தொடர்ந்து மெக்சிகன் தொழிலாளர்கள் அதை ஒரு சுற்றுத்தகட்டில் (circuit board) பொருத்துக்கின்றனர். அடுத்து, மீண்டும் அவை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு டெக்சாஸில் உள்ள கிட்டங்கித் தொழிலாளர்கள், இருக்கையை இயக்கும் பொத்தான்களுக்குள் சுற்றுத்தகட்டில் பொருத்தும் மெக்சிகோவிற்கும் மத்தாமொரஸிற்கும் திருப்பியனுப்பும் வரையிலும் சேகரித்து வைத்திருப்பார்கள். அதற்கு அடுத்தபடியாக, இருக்கைக்குள் இயக்குவிப்பான்களை பொருத்தும் வாகன உதிரி பாக தொழிலாளர்கள் வேலை செய்யும் டெக்சாஸிற்கோ அல்லது கனடாவிற்கோ இயக்குவிப்பான்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இறுதியாக, வாகன ஒருங்கமைப்பு ஆலைக்கு இருக்கைகள் அனுப்பப்பட்டு, வாகனத்திற்குள் பொருத்தப்படுகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான இந்த அழைப்பு ஒரு விடுமுறைகால பொழுதுபோக்கு பேச்சு அல்ல. இது ஒரு மூலோபாய தேவை என்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த சமூக வலிமையை கட்டவிழ்த்து விடுவதற்கான அடிப்படையாகும்.

அதனால் தான் தேசியவாதம் எனும் நஞ்சு, டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து வந்தாலும் சரி அல்லது, மெக்சிகன் தொழிலாளர்கள் “வேலைகளை திருடுகின்றனர்” என குற்றம்சாட்டி, வாகன நிறுவனங்கள் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று கோரும் அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தொழிற்சங்க அதிகாரிகளிடம் இருந்து வந்தாலும் சரி அதை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். செல்வந்தர்களின் சொத்தை பறிக்கமாட்டேன் என வங்கிகளுக்கு வாக்குறுதியளித்த மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் மத்திய அமெரிக்க தொழிலாளர்களை அமெரிக்கா தடுப்பதற்கு மெக்சிகோ உதவ வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆண்ட்ரெஸ் மானுவல் லோப்பேஸ் ஒபரடோர் (Andres Manuel Lopez Obrador - AMLO) உடன் அவர்கள் ஒரு கூட்டு வைத்திருப்பதாக எண்ணி மெக்சிகன் தொழிலாளர்கள் பணியாற்றவில்லை.

முதலாளித்துவ அமைப்பு முறையும், உலகை தேசிய அரசுகளாக பிரிப்பதும் உலக உற்பத்தி சக்திகளின் முற்போக்கான வளர்ச்சிக்கு தடைகளாக உள்ளன. ஒரு இருக்கை பொத்தான் ஒரு நாட்டின் எல்லையை கடப்பதற்கான உரிமையை கொண்டிருக்கும் அதே வேளையில், ஒரு மனிதயினம் அதை செய்ய முடியாது என்ற பகுத்தறிவற்ற மற்றும் அநீதியான முரண்பாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறிவது, செல்வந்தர்களின் சொத்தைப் பறிப்பது, மற்றும் மனித தேவைக்கேற்ப ஆதாரங்களையும் பொருட்களையும் வழங்குவதற்கு பூகோள அளவிலான ஒருங்கிணைந்த பொருளாதார சக்தியை கொண்ட தொழிலாளர்களால் இயக்கப்படும் அமைப்புகளாக பெருநிறுவனங்களை மாற்றியமைப்பது என்பனவற்றால் இந்த வேறுபாட்டை தீர்த்துவைக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் மட்டுமே இருக்க முடியும்.