ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු කම්කරුවන්ගේ රුපියල් 1000 වැටුප් ඉල්ලීමඅසාධාරනබව එන්යූඩබ්ලිව් නායක දිගම්බරම් කියයි

இலங்கை: தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் ஊதியக் கோரிக்கை "நியாயமற்றது" என NUW தலைவர் திகாம்பரம் கூறுகிறார்

By W.A. Sunil 
11 January 2019

தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தலைவர் பழனி திகாம்பரம், ஜனவரி 6 அன்று லங்கா பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டிற்கு கொடுத்த பேட்டியொன்றில், தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாள் சம்பள கோரிக்கை நியாயமற்றது எனக் கூறியுள்ளார். திகாம்பரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு.) அரசாங்கத்தில் மலையகத்தின் புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார்.

அவரும் அவரது தொழிற்சங்கமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, அனைத்து இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய சங்கங்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு, சம்பளப் போராட்டத்திற்கு குழிபறித்து, தோட்டக் கம்பனிகளின் இலாப தேவைகளுக்காக தொழிலாளர்களை அடிபணியச் செய்வதற்காக நிரந்தர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

"தொழிலாளர்களுக்கு ஒரு நியாயமான ஊதியம் கிடைப்பது போலவே, தோட்டக் கம்பனிகளுக்கும் இலாபம் கிடைக்க வேண்டும். அவர்கள் இலாபம் பெறாவிட்டால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை கொடுக்க முடியாது..... இப்போது என்றால் 1,000 ரூபா அடிப்படை சம்பளம் கொடுக்க முடியாது. அந்த கோரிக்கையை நியாயமற்றது," என்று திகாம்பரம் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

லங்கா, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) வாரப் பத்திரிகை ஆகும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை முழுமையாக புறக்கணித்து வந்த ஜே.வி.பி., அதைக் காட்டிக் கொடுக்க ஏனைய தொழிற்சங்கங்களுக்கு இடம் கொடுத்து வந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை நியாயமற்றது என திகாம்பரம் கூறியதற்கு முதலிடம் கொடுத்து, அவரது பேட்டியை லங்கா பத்திரிகையில் மிகைப்படுத்துவதன் மூலம், தங்களது நிலைப்பாடும் அதுவே என்பதை ஜே.வி.பி. முதலாளிமாருக்கு சமிக்ஞை செய்துள்ளது.

திகாம்பரத்தின் கருத்துக்கும் தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கை “நியாயமற்றது” என கம்பனிகள் முன்வைக்கும் தர்க்கத்துக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், டிசம்பர் 6 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளது: "அனைத்து பிராந்திய நிறுவனங்களும் வருமானமாக சம்பாதிப்பதையே தங்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கின்றன. ஆயினும், ஆயிரம் ரூபாய்க்கான தொழிற்சங்கங்களின் கோரிக்கை, இந்த இயலுமையை மீறியதாக உள்ளது. இந்த தீர்க்கமான நேரத்தில், அதில் தங்கியிருப்பவர்கள், நடைமுறை சாத்தியமற்ற மற்றும் நியாயமற்ற தீர்மானத்தை எடுத்தால், இந்த தொழிற்துறைக்கு ஏற்படக் கூடிய பேரழிவை கவனத்தில் எடுக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறோம்."

"தீர்க்கமான நேரம்" என பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் குறிப்பிடுவது என்னவென்றால், உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியும் சர்வதேச சந்தையில் போட்டி தீவிரமடையும் நிலைமையின் மத்தியில், இலங்கையில் பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஏற்றுமதி வருமானமும் இலாப மட்டமும் வீழ்ச்சியை எதிர்கொண்டிருப்பதையே ஆகும். தோட்டத் தொழிலாளர்களது "அன்றாட வாழ்க்கை" தோட்டத் தொழில்துறையில் தங்கியிருப்பதால், அந்த சுமையை தோட்டத் தொழிலாளர்களே சுமக்க வேண்டும் என்றே தோட்டக் கம்பனிகள் கூறுகின்றன.

தோட்டக் கம்பனிகள், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் முதலாளித்துவ அரசாங்கமும், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் சம்பளம் மற்றும் இதர சமூக நலன்களை வெட்டித் தள்ளி, வருமானப் பகிர்வு முறை உட்பட உற்பத்தித் திறனை உயர்த்தும் முறைகள் மூலம், நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கே முயற்சிக்கின்றன.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, 8ம் திகதி, கம்பனிகளால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, நாள் சம்பளத்தை 100 ரூபாவால் 600 வரை அதிகரிப்பது மற்றும் கொடுப்பனவாக 340 ரூபாவைக் தருவதைத் தவிர வேறு சம்பள அதிகரிப்பை கொடுக்க முடியாது என, கம்பனிகளின் ஊது குழலாளக நின்று, பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "அடிப்படை ஊதியம் ரூபா 600 ஆக இருக்க வேண்டும். கொடுப்பனவுகளுடன் சேர்த்து 940 ரூபா கிடைக்கும். இதற்கும் மேல் எதைக் கொடுத்தாலும் தொழில்துறை சரிந்துவிடும்," என்று அவர் கூறினார். வருகை மற்றும் உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கும் ஏற்ப கொடுக்கப்படும் 340 ரூபா கொடுப்பனவைப் பெறுவது என்பது தெழிலாளர்களுக்கு பெரும் கடினமான விடயமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா கோரிக்கையை விடாப்பிடியாக நிராகரிக்கும் தோட்டக் கம்பனிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும், முன்மொழியப்பட்டுள்ள இந்த சம்பள அதிகரிப்புக்கு மேலாக எதையும் செய்ய முடியாது என்றே கூறுகின்றன. ஊதியம் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு, பெருந்ததோட்டத் தொழிற்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களதும் பங்களிப்புடன், 8ம் திகதி நடத்தவிருந்த பேச்சுவார்த்தைக்கு வராமல் பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் பகிஷ்கரிப்பு செய்தது.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் வறிய மட்ட ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைமைகளின் கீழ் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பகுதியினராவர். 150 ஆண்டுகளில் அவர்களது சமூக நிலைமைகளில் எந்த பிரதான மாற்றமும் நடக்கவில்லை. 1992 இல் தோட்டத்துறை தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் 1992 இல் தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்ட போது, தோட்டத் தொழிலாளியின் தினசரி ஊதியம் 61.84 ரூபாயாகும். வாழ்க்கை-செலவுக் கொடுப்பனவு என்பது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்பட சுமார் 4 சதங்கள் ஆகும். தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், அந்த அற்ப அளவான வாழ்க்கை செலவின கொடுப்பனவையும் தோட்டக் கம்பனிகள் நிறுத்திவிட்டன. அதற்கு பதிலாக, தினசரி ஊதியம் மோசடியான முறையில் நூற்றுக்கு 15 சதவிகிதம் அல்லது 72 ரூபா 22 சதம் வரை அதிகரிக்கப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றி தோட்ட கம்பனிகளும், அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் வஞ்சத்தனமான வாய்ச்சவடால்களை விடுத்து வந்த போதிலும், அன்று முதல் இன்று வரை தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ரூபா 427.78 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. வாழ்க்கை தரநிலைகள் மேலும் மேலும் கீழ்நோக்கி சரிந்துவிட்டன. வாழ்க்கைத் செலவு நூறு மடங்கு அல்ல ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையிலேயே, தோட்டக் கம்பனிகளும் திகாம்பரமும் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை "நியாயமற்றது" என குற்றம் சாட்டுகின்றனர்.

திகாம்பரம் உட்பட தோட்டத் தொழிற்சங்க அதிகாரத்துவ வாதிகள் அனைவரும், வியாபாரிகள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக பொருளாதார நலன்களைப் பற்றி சிந்திப்பதில்லை, மாறாக அவர்கள் முதலாளித்துவ அரசு மற்றும் சொத்துகளின் தேவைகளை கருத்தில் கொண்டே சிந்திக்கின்றனர் மற்றும் செயற்படுகின்றனர்.

திகாம்பரம் உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பொறுத்தளவில், தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் சமூக மற்றும் அரசியல் சலுகைகளுக்காக முதலாளித்துவ அரசோடு பேரம் பேசுவதற்கான ஒரு சமூக அடித்தளம் மட்டுமே. முதலாளித்துவத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில், தொழிற்சங்கங்கள் அடித்தளமாகக் கொண்டிருக்கும் தேசியவாத வேலைத்திட்டங்களின் வங்குரோத்தையும் சரிவுகளையுமே தோட்டத் தொழிற்சங்கங்களும், பொதுவில் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிற்சங்கங்களும் வெளிப்படுத்துகின்றன.

கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் சார்பில் வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களுக்காக தொழிற்சங்கங்கள் முன்நின்றிருந்தால், இன்று அவை முதலாளித்துவ அரசு மற்றும் பெருநிறுவனங்களின் வியூகங்களில் ஒன்றுகலந்து தொழிலாள வர்க்கத்தின் மீது மேலும் சுரண்டல் நிலைமைகளை திணிக்க செயற்படுகின்றன. தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீன முன்முயற்சிக்கும் வாய்ப்பு கொடுக்காமல், அவர்களது உரிமைகளை நசுக்குவதற்கான ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாகவே தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

இந்த சீரழிந்து போன மற்றும் முதலாளித்துவ சுரண்டல் முறையின் நேரடி கருவியாக செயல்படும் தொழிற்சங்கங்களிலிருந்து தொழிலாள வர்க்கம் விலகிக்கொள்ள வேண்டும். கம்பனிகள், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சூழ்ச்சியின் மூலம் தங்கள் மீது திணிக்க திட்டமிடப்பட்டுள்ள வறிய மட்டத்திலான சம்பளம் மற்றும் கடும் சுரண்டல் நிலைமைகளுடனான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை அவர்கள் நிராகரிக்க வேண்டும்.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை ஒழுங்கமைக்க அர்ப்பணித்துக்கொண்ட மாற்று அமைப்புகளாக, தங்களது ஜனநாயக வாக்குகள் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் நடவடிக்கைக் குழுக்களை அவர்கள் கட்டியெழுப்ப வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிகாட்டலின் கீழ், ஹட்டனில் எபோட்சிலி தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அதற்காக முன்நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களைப் பின்பற்றி, அனைத்து தோட்டங்களிலும் தொழிலாளர் நடவடிக்கை நடவடிக்கை குழுக்களை ஸ்தாபித்துக்கொண்டு, ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின் பொதுவான போராட்டத்தை ஏற்பாடு செய்ய, ஏனைய நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.