ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation workers protest unions’ sellout wage deal

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளும் ஊதிய ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்

By M. Thevarajah and W.A. Sunil 
29 January 2019

இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட விற்றுத்தள்ளும் சம்பள உடன்படிக்கைக்கு எதிராக, மத்திய மலையக மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏழ்மையான பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள், 100 சதவீத நாள் சம்பள உயர்வு கோரி நீடித்த போராட்டத்தை நடத்தியிருந்தனர். தொழிற்சங்கங்கள் தரகு வேலை பார்த்து கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் வெறும் 40 சதவிகித சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தமானது தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க (LJEWU) செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் திங்களன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டது.


தொழிலாளர்கள் ஹட்டன்-கொழும்பு வீதியை அடைத்து அமர்ந்துள்ளனர்

அபோட்சிலி தோட்டத்தின் கமுகுவத்தை பிரிவிலிருந்தும் ஸ்றெத்தன், வெலி ஓயா மற்றும் ஒஸ்போர்ன் தோட்டங்களில் இருந்தும் சுமார் 1,000 தொழிலாளர்கள் கோபத்துடன் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மத்திய மலையக பெரு நகரமான ஹட்டனில் அணிதிரண்டு பல மணி நேரம் கொழும்பு-ஹட்டன் பிரதான வீதியை மூடினர்.

தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை கண்டித்தும் தொழிற்சங்கத் தலைவர்களை கண்டனம் செய்தும் கோஷமிட்டனர். ஹட்டனுக்கு அருகிலுள்ள புலியவத்தை மற்றும் என்ஃபீல்ட் தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ அருகேயும் தோட்டங்களில் தொழிலாளர்கள் ஞாயிறு மற்றும் திங்கட் கிழமையும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பதுளை மாவட்ட நகரான ஹப்புத்தலைக்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட பல கிலோமீட்டர் தூரம் பயணித்திருந்தனர்.

அபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தலைவரான பி. சுந்தரலிங்கம், நேற்று ஹட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: "தொழிற்சங்கங்கள் செய்துள்ள இந்த காட்டிக் கொடுப்பின் படிப்பினைகளை தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் மட்டுமல்ல, தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் ப. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) தலைவர் மனோ கணேசனும் இந்த விற்றுத் தள்ளலுக்கு பொறுப்பாளிகள்.

"இந்த உடன்படிக்கை பிரதமர் அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. திகாம்பரம், ராதாகிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோர் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்களும் கம்பனிகளையும் முதலாளித்துவ ஆட்சியையும் ஆதரிக்கின்றன. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து வெளியே வந்து, ஒவ்வொரு தோட்டத்திலும் எங்கள் உரிமைகளுக்காகப் போராட நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்."

அபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழுவானது கடந்த மாதம் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) செய்த தலையீட்டினை அடுத்து தொழிலாளர்களால் அமைத்துக்கொள்ளப்பட்டது. ஞாயிறன்று, தொழிற்சங்கங்களின் இந்த உடன்படிக்கையை நிராகரிப்பதோடு ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை அது நிறைவேற்றியது.

வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், இ.தொ.கா., LJEWU, பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆதரவுடன், முதலாளிமார் சம்மேளனம் முன்மொழிந்த சம்பளத்துக்கு இணக்கம் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை, தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் தலைவர் இராமநாதன், ஒப்பந்தம் "சிறந்தது" என பாராட்டினார். திங்களன்று, தொழிலாளர்கள் மத்தியிலான சீற்றத்தை தணிக்கும் முயற்சியில், அவர் உடன்படிக்கையில் கையெழுத்திட வரவில்லை. ஒப்பந்தத்தில் வருகை மற்றும் உற்பத்தி திறனுக்கான கொடுப்பனவுகள் அகற்றப்பட்டுள்ளதை அவர் போலியாக விமர்சித்தார்.

ஒப்பந்தத்தின் கீழ், அடிப்படை தினசரி ஊதியம் 200 ரூபாயிலிருந்து 700 ரூபாயாக உயர்த்தப்படும் (3.86 டாலர்). விலைப் பகிர்வு கொடுப்பனவு 30 முதல் 50 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாவற்றுடனும், ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 750 ரூபாய் சம்பளத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும்.


ஹட்டன்-கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் தொழிலாளர்கள்

முன்னதாக, ஒரு மாதம் 24 நாட்கள் தமது தோட்டத்தில் வேலைக்குச் சென்றிருந்தால், 140 ரூபா வருகைக்கான கொடுப்பனவும், 60 ரூபாய் உற்பத்தி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு கொடுப்பனவுகளையும் அபகரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

தோட்ட நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கான கொடுப்பனவு 25 முதல் 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 750 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்றால், ஏற்கனவே அவர்கள் செய்யும் வேலைகளை விட இன்னும் கூடுதலாக இடுப்பு உடைய வேலை செய்ய தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

அரசாங்கம் கம்பனிகளுக்கு ஒரு இலவசப் பரிசையும் கொடுத்துள்ளது. அக்டோபரிலிருந்து தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குவதற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரூபாக்களை கொடுக்கவும் மேலும் 50 மில்லியன் ரூபா வட்டி இல்லாத கடனைக் கொடுக்கவும் கம்பனிகளுக்கு வாக்குறுதியளித்துள்ளது.

தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் ஊடகங்களும் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பகிரங்கப்படுத்த மறுத்துவிட்டன.

கடந்த ஆண்டு பூராவும் நிலவிய முரண்பாட்டில், தாம் நட்டத்தை எதிர்கொள்வதாகவும் இது உலக சந்தையில் போட்டியிடுவதற்கான தங்கள் திறனை பாதிப்பதாகவும் கம்பனிகள் வலியுறுத்தி வந்தன. தற்போதுள்ள ஊதிய முறைக்கு மாறாக, வருமானப் பகிர்வு முறையை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் பலமுறையும் கோரியுள்ளது.

இந்த முறையின் கீழ், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஏறக்குறைய 1,000 தேயிலைச் செடிகள் அடங்கிய நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். கம்பனியின் இலாபங்கள் மற்றும் செலவினங்களைக் கழித்த பின்னரே, தொழிலாளர்கள் தமது வருமானத்தைப் பெறுவர்.

இது எந்தவொரு ஊதிய உத்தரவாதமும் அல்லது எந்த உரிமையுமின்றி தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் பரீட்சிக்கப்பட்ட பல தோட்டங்களில், தொழிலாளர்கள் தங்கள் முழு குடும்பமும் உழைத்தாலும் வாழ்வதற்குப் போதுமான பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்பதால், தொழிலாளர்கள் அதை எதிர்த்து வருகின்றனர்.

புதிய ஒப்பந்தத்தில் இந்த வருமானப் பகிர்வு முறையை அறிமுகப்படுத்த உதவும் வகையிலான உட்பிரிவுகளை கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் சேர்ந்து உள்ளடக்கக் கூடிய ஒரு உண்மையான ஆபத்து உள்ளது. அது இல்லாவிட்டாலும் கூட, தொழிற்சங்கங்கள் மேலும் தாக்குதல்களுக்கு வழியைத் திறந்து விட்டுள்ளன.

அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த காட்டிக்கொடுப்புக்கு பொறுப்பாளிகள். NUW, ஜ.ம.மு., ம.ம.மு. ஆகியவை, ஒப்பந்தத்தில் நேரடி பங்காளிகளாக இல்லை என்றாலும், அவை தமது ஆதரவை சமிக்ஞை செய்து மௌனமாக இருந்தன. அவை அனைத்தும், அரசாங்கம் மற்றும் பெரும் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, தோட்டத் தொழிலாளர்களின் தொழில்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை நசுக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், உறுதியான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். டிசம்பரில் சுமார் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

தனது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் மையப் புள்ளியாக ஆகிவிடும் என பீதியடைந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதாக பொய்யான ஒரு வாக்குறுதியை கொடுத்தார். இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்து, காட்டிக்கொடுப்பை திட்டமிடுவதற்காக மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தையில் இறங்கின.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமானது தெற்காசியா உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் ஒரு பாகமாகும்.

இம்மாத ஆரம்பத்தில் 180 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். சுமார் 700,000 ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தமிழ்நாட்டில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பங்களாதேஷில், ஆயிரக் கணக்கான ஆடைத் தொழிலாளர்கள் பொலிஸ் வன்முறையின் எதிரிலும் உறுதியான போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டங்கள் உலகெங்கிலும் பெருகிய அளவில் தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியாகவே வெளிப்படுகின்றன.

இலங்கை மற்றும் உலகம் பூராவும் உள்ள போலி-இடது அமைப்புகள், கூட்டுத்தாபனமயப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் ஊடாக, அரசாங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் நலன்களை வெல்ல முடியும் என்ற மோசடிகளை ஊக்குவித்து வருகின்றன.

போலி-இடது முன்நிலை சோசலிச கட்சியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியும் (பு.ஜ.மா.லெ.க.), சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்களுடன் இணைந்து, "1000 ரூபா இயக்கம்" என்ற ஒன்றை உருவாக்கியுள்ளன.


ஆர்ப்பாட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்களை பொலிஸ் சுற்றிவளைத்துள்ளது

நேற்று ஒரு முதலாளிமார் சம்மேளன அலுவலகத்திற்கு முன்னால் இந்த இயக்கம் 1,000 ரூபா சம்பளத்தை கொடுக்குமாறு வலியுறுத்தி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. குழுவினால் விநியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம் தினசரி ஊதியத்தை அதிகரிப்பதற்கு "அரசாங்கத்துக்கும் தோட்ட அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு” தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது அவர்களுக்கு எதிராக ஒரு விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை சுமத்தியுள்ள அதே அமைப்புகளுக்கு தொழிலாளர்களை அடிபணிய வைப்பதற்கான ஒரு இழிந்த சதியாகும்.

தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியும் ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை அமைப்பதும் அவசியம் என சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே விளக்கியது. இது விற்றுத் தள்ளும் ஒப்பந்தத்திற்கு எதிராக 100 சதவீத சம்பள உயர்வையும் நிலைமைகளை மேம்படுத்தவும் கோரி அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பதை கடமையாக்கியுள்ளது.

இது முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களுடன் முறித்துக்கொள்வதை அவசியமாக்குகிறது. இது, பெருந்தோட்டங்களை பொது உடமையாக்குவது மற்றும் அவற்றை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது உட்பட, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் அடிப்படையிலான ஒரு மாற்று அரசியல் முன்னோக்கிற்கான தேவையை முன்வைக்கின்றது.