ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The 50th anniversary of the founding of the SEP (Sri Lanka)
The RCL/SEP’s struggle against the anti-Tamil civil war

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு

தமிழர்-விரோத உள்நாட்டுப் போருக்கு எதிரான RCL/SEP இன் போராட்டம்

By Wasantha Rupasinghe
28 December 2018

PART ONE | PART TWO | PART THREE | PART FOUR | PART FIVE | PART SIX

1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியால் (SEP) வெளியிடப்பட்டு வரும் கட்டுரை தொடரில் இது ஐந்தாவதாகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்  (RCL)  என ஸ்தாபிக்கப்பட்ட,  நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவு, 1996  இல் சோசலிச சமத்துவக் கட்சி  (SEP)  என மறுபெயரிடப்பட்டது.  புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின்  1968  ஜூன்  16-17  ஸ்தாபக மாநாட்டைக் குறிக்கும் விதமாக ஏற்கனவே ஒரு  அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுரைகள் RCL இன் கொள்கைப் பிடிப்பான அடித்தளங்களை எடுத்துவிளக்குவதோடு, இந்த கோட்பாடுகளுக்காக கடந்த 50 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்து அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகளையும் வெளிக்கொண்டு வருகின்றன.  ட்ரொட்ஸ்கிச கட்சி எனக் கூறிக் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்ததன் மூலமாய் காட்டிக்கொடுத்த சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

முதலாளித்துவ அபிவிருத்தி தாமதப்பட்ட நாடுகளில்,  தொழிலாள வர்க்கம் மட்டுமே,  சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளது அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க இயலுமை கொண்ட ஒரே வர்க்கமாகும் என்று ஸ்தாபித்த ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கான போராட்டமே,  சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளது மையப்புள்ளியாக இருந்து வந்திருக்கிறது.  இந்தப் படிப்பினைகள் இலங்கையில் மட்டுமல்லாது,  ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுந்து வருகின்ற போராட்டங்களுக்கு இன்றியமையாதவை ஆகும்.

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (RCL) அதன் தொடர்ச்சியான சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) சிங்கள ஆளும் உயரடுக்கின் இனவாத பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிராக தீவின் தமிழ் சிறுபான்மையினரது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாள வர்க்கத்தை சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையிலும் தொழிலாளர்களது அதிகாரத்திற்கான போராட்டத்திலும் ஐக்கியப்படுத்துவதற்கும் தளர்ச்சியின்றிப் போராடி வந்திருக்கின்றன.

இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தால் தூண்டப்பட்டதும் நடத்தப்பட்டதுமான கிட்டத்தட்ட மூன்று தசாப்த-கால உள்நாட்டுப் போருக்கு (1983-2009) எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடிய ஒரே சக்தியாக RCL/SEP இருந்தது. அரசு ஒடுக்குமுறை, சிங்கள-பேரினவாத ஜேவிபி மற்றும் தமிழ் தேசியவாத-பிரிவினைவாத விடுதலைப் புலிகள் இரு தரப்பிலிருந்துமான வன்முறைத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்த நிலையிலும், இந்த யுத்தம் பரந்த தமிழ் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிரானதாகும், அது வகுப்புவாதத்தை தூண்டுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்குமான ஒரு அரசியல்-சித்தாந்த ஆயுதமாகவும், அத்துடன் அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிவகையாகவும் சேவை செய்தது என்ற புரிதலைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கு RCL/SEP போராடியது.

ரஷ்யப் புரட்சி, தெற்கு ஆசியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிரான போராட்டம், மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலனியாதிக்கத்திலிருந்து விடுபடலின் ஒட்டுமொத்த அனுபவம் ஆகியவற்றிலிருந்து பெற்ற படிப்பினைகளைக் கொண்டு RCL/SEP விடுதலைப் புலிகளின் குட்டி-முதலாளித்துவ அரசியலின் மீது ஒரு முறைப்படியான விமர்சனத்தை முன்வைத்தது. சோசலிசப் புரட்சியின் மூலமாகவும் தெற்கு ஆசியாவின் பிற்போக்கான வகுப்புவாத-அடிப்படையிலான அரசு அமைப்பு முறையை தூக்கிவீசுவதன் மூலமாகவும் தொழிலாள வர்க்கம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும், பாதுகாக்கும் என அது எடுத்துரைத்தது.

ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறை, இலங்கை அரசு, மற்றும் தமிழர்-விரோத பேரினவாதம்

சிங்கள ஜனரஞ்சகவாதத்திற்கும் பப்லோவாத LSSP அதற்கேற்ப கோழைத்தனமாக தகவமைத்துக் கொண்டதற்கும் எதிராக, சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க ஐக்கியத்திற்குமான போராட்டம் 1968 இல் RCL இல் ஸ்தாபிக்கப்பட்டதன் மையமாக இருந்தது.


சிறிமா பண்டாரநாயக்க

LSSP க்கும் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (SLFP) இடையிலான கூட்டணியானது —இது விரைவில் ஸ்ராலினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் (CPSL) இடம்பெற்றதாக விரிவடையவிருந்தது— இலங்கையில் “ஒரு சிங்கள-பௌத்த சர்வாதிகாரத்திற்கான அரசியல் களத்தை தயாரிப்பு செய்து கொண்டிருந்த” ஒரு “தேசியவாதப் பிரச்சாரத்தை” முன்நிறுத்திக் கொண்டிருந்தது என RCL அதன் ஸ்தாபக மாநாட்டில் எச்சரித்தது.

RCL, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கடமைகளை வரையறை செய்கையில், பிரிட்டிஷ் காலனியாதிக்க பிரபுக்கள் தெற்காசியத் துணைக்கண்டத்தில் இருந்து வெளியேறும்போது உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் பல்வேறு இனரீதியான மற்றும் வகுப்புவாத-வரையறை கொண்ட கன்னைகளுடன் இரகசியமாக சேர்ந்து செயற்பட்டு அங்கு நிலைநிறுத்தியிருந்த பிற்போக்குத்தனமான அரசு-அமைப்புமுறையை குறித்து 1947-48 இல் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி செய்திருந்த பகுப்பாய்வினை புதுப்பித்தது, அபிவிருத்தி செய்தது.

காந்தி-நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் வர்க்க நலன்களுக்கு விண்ணப்பம் செய்வதின் அடிப்படையில் பரந்த மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு துடிப்பான திறமற்றதாகவும், அதற்கு விரோதமானதாகவும், ஒரு ஐக்கியப்பட்ட மதச்சார்பற்ற இந்தியாவுக்கான அதன் சொந்த வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்தது, 1947 இல் தெற்காசியாவை முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் இந்து இந்தியா என்றும் பிரிக்கின்ற வகுப்புவாத துண்டாடலை அமல்படுத்தியது.

இலங்கை முதலாளித்துவ வர்க்கம் அதனினும் படுகோழைத்தனமுடையதாய் இருந்தது. 1930கள் மற்றும் 1940களில் பிரிட்டிஷ் இந்தியா, காலனியாதிக்க ஆட்சிக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை பிரதான நிலத்தில் இருந்து தனிப்படுத்தி ஆட்சிசெய்யப்பட்ட விதத்தின் அடிப்படையிலான காலனியாதிக்க அரசு கட்டமைப்புகளையே அது தொடர்ந்தும் பிடித்துக் கொண்டிருந்தது; இது தனது சொந்த சிறப்புச் சலுகைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு அடிப்படையை வழங்கும் என்ற நம்பிக்கை மற்றும் பெருநிலப்பகுதியிலான ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டம் இலங்கையின் பரந்த மக்களையும் அதனுள் இழுத்துவிடும் என்ற அச்சம் இரண்டுமே இதன் காரணமாய் இருந்தன.

பிரிட்டிஷ் ஆட்சி, தீவின் அரசியல் கட்டுப்பாட்டை இலங்கை முதலாளித்துவத்திடம் கையளித்த உடனேயே அது, தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரியதும் சக்திவாய்ந்ததுமான பிரிவான தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து அவர்களது குடியுரிமைகளை பறித்தது. அவர்களது முன்னோர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளது தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு தென் இந்தியாவில் இருந்து தீவுக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்பதால் அவர்கள் “வெளிநாட்டினர்” என்பதுதான் இந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைக்கான போலிக்காரணமாக இருந்தது.

இலங்கையின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தமிழ் அரசியல் ஸ்தாபகத்துடன் கூர்மையான வேறுபாட்டுடன், தமிழ் தோட்டத் தொழிலாளர்களது உரிமைகள் மீதான தாக்குதலைக் கண்டனம் செய்தனர். “அரசு தேசத்திற்கு இணையானதாகவும் தேசம் இனத்திற்கு இணையானதாகவும் இருக்க வேண்டும்” என்பதான கருத்து, பாசிசமானது என்று அவர்கள் எச்சரிக்கை செய்தனர். “இந்த நாட்டின் உழைக்கு மக்களின் மத்தியில்” மனிதருக்கும் மனிதருக்கும் இடையில் “அவர்தம் இன மூலங்களைக் கொண்டு பேதம் பார்க்க நாங்கள் தயாராய் இல்லை” என்று அவர்கள் அறிவித்தனர். “ஒரு தொழிலாளியை, முதலும் முக்கியமாகவும் ஒரு தொழிலாளி என்று நாங்கள் கூறுகிறோம்” என்றனர்.

இதனை தொடர்ந்து வந்த தசாப்தங்களில், நச்சுத்தனமான தமிழர்-விரோத பேரினவாதத்தை ஊக்குவிப்பதென்பது, நெருக்கடியால் நிரம்பியிருந்த இலங்கை முதலாளித்துவத்திற்கு அதன் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு முன்னெப்போதினும் இன்றியமையாததாக ஆகிவிட்டிருந்தது.

1953 ஹர்தாலின் (பொது வேலைநிறுத்தம்) சமயத்தில், 1951 இல் அரசாங்கத்தை விட்டு விலகியிருந்த ஒரு முன்னணி முதலாளித்துவ அரசியல்வாதியான பண்டாரநாயக்கவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) ஒரு பேரினவாத “சிங்களம் மட்டும்” கிளர்ச்சியைத் தொடக்கின. இது சமூக சீர்திருத்தத்திற்கான ஜனரஞ்சக வாக்குறுதிகள் மற்றும் வலது-சாரி UNP ஆட்சி மீதான வாய்வீச்சான கண்டனங்களுடன் கலந்திருந்தன.

LSSP, “சிங்களம்-மட்டும்” கிளர்ச்சியை எதிர்த்தது என்றபோதிலும் அதிகரித்த வகையில் SLFP க்கும் அதன் சிங்கள ஜனரஞ்சகவாதத்திற்கும் தகவமைத்துக் கொண்டது. இவ்வாறாக, பண்டாரநாயக்க, 1956 இல் ஆட்சிக்கு வந்து, சிங்களம் மட்டுமே நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழி என ஆக்கியபோது, LSSP அதனை, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க ஐக்கியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்காமல், மாறாக SLFP இன் சிங்களம்-மட்டும் கொள்கைகள் இலங்கை அரசின் ஒருமைப்பாட்டை ஆபத்துக்குள்ளாக்கலாம் என்ற அடிப்படையில் எதிர்த்தது.

SLFP க்கு நெருக்குதலளிப்பதன் மூலமாகவும் இலங்கை அரசினால் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் மூலமாகவும் “சோசலிசம்” அடையப்பட முடியும் என்பதான தேசிய-சீர்திருத்தவாத கருத்தாக்கத்தை LSSP எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டதோ, அந்த அளவுக்கு அது தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினையில் SLFPக்கு இடமளித்தது.

1964 இல் LSSP, சிங்கள ஜனரஞ்சக SLFP அரசாங்கத்தில் இணைந்து, முதலாளித்துவ ஆட்சியை பாதுகாத்ததுடன் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கிளர்ச்சிகர இயக்கத்தையும் காட்டிக்கொடுத்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அரை மில்லியன் தமிழ் தோட்டத் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தாரும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்படுவதற்கு இட்டுச்சென்ற ஒரு இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு அது ஒப்புதல் அளித்தது.

முதலாளித்துவ ஆட்சியின் ஒரு முட்டுத்தூணாக LSSP உருமாற்றம் கண்டமை ஸ்ராலினிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தில் இருந்து தேர்ந்தெடுத்தவற்றைக் கலந்து முன்நிறுத்திய குட்டி-முதலாளித்துவ JVP இன் வளர்ச்சிக்கு கதவை திறந்து விட்டது. அதேநேரத்தில் ”சிங்களம் முதலில்” கொள்கையை நடத்திச் சென்ற கட்சியுடனான அதன் எதிர்ப்புரட்சிகரக் கூட்டணியானது, பரந்துபட்ட தமிழ் மக்கள் தமது ஜனநயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு புரட்சிகர சோசலிசத் தலைமையின் கீழான தொழிலாள வர்க்கத்தை எதிர்பார்த்திருக்கலாம் எனக் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து விட்டது. இது இறுதியில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மாணவர் இளைஞர் மத்தியில் இருந்து LTTE மற்றும் அதையொத்த சிந்தனை கொண்ட தமிழ் தேசியவாத-பிரிவினைவாத குழுக்கள் எழுவதற்கு இட்டுச்சென்றது.

தமிழ் பரந்துபட்ட மக்களைப் பாதுகாத்து தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டம்

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், 1970 மேயில், இரண்டாவதாய் ஒரு SLFP-LSSP-CP கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

உலகப் பொருளாதார நெருக்கடியாலும் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் உதாரணப்படுத்தியவாறான ஒரு சர்வதேச தொழிலாள-வர்க்கத் தாக்குதலினாலும்  எரியூட்டப்பட்ட போர்க்குணத்துடனான ஒரு தொழிலாள வர்க்கத்துக்கு முகம்கொடுத்த நிலையில், SFLP தலைமையிலான கூட்டணியானது உடனடியாக வகுப்புவாதத்தை முடுக்கிவிட்டது.


கொல்வின் ஆர். டி. சில்வா

ஒரு மோசடியான அரசியல் நிர்ணய சபையை கூட்டிய அது, 1972 இல் ஒரு புதிய ஜனநாயக-விரோத அரசியலமைப்பு சட்டத்தைத் திணித்தது. LSSP தலைவரான கொல்வின் ஆர். டி. சில்வாவால் எழுதப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டம் சிங்களத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மேலுயர்த்தியதோடு, பௌத்தத்தை அரச மதமாக கிரீடம் சூட்டியது. தமிழ் பல்கலைக்கழக அனுமதிகளில் தரப்படுத்தல்களை உருவாக்குவதற்கும் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் சிங்களத்தை கட்டாயமாக்குவதற்கும் இது இட்டுச் சென்றது.

இந்த பேரினவாத அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு RCL மட்டுமே போராடியது, அந்தக் காரணத்தினாலேயே அது தாக்குதலை எதிர்கொண்டது. அரசாங்க அச்சக ஊழியர் சங்கத்தின் தலைமையில் இருந்த RCL அங்கத்தவர்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தபோது, RCL காரியாளர்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டையைக் கொண்டு LSSP பதிலிறுப்பு செய்தது.

1970 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, தமிழ் பரந்த மக்களை அச்சுறுத்துவதற்காக கொழும்பு அரசாங்கம் வடக்குக்கு துருப்புகளை அனுப்பிய சமயத்தில், பாதுகாப்புப் படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை RCL முன்வைத்தது. தமிது மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பத்தாயிரக்கணக்கான துருப்புகள் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருந்ததான நிலைமைகளின் கீழ், உள்நாட்டுப் போர் காலம் முழுமையிலும், இதுவே RCL/SEP இன் ஒரு மையமான கோரிக்கையாக இருந்தது, இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.

அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் தீவிரமயப்பட்ட தமிழ் இளைஞர்கள் மத்தியில் RCL சக்திவாய்ந்த முறையில் தலையீடு செய்தது. தேசியப் பிரச்சினை தொடர்பான லெனினின் எழுத்துக்களை அடியொற்றி, RCL 1972 ஜூனில், தமிழ் மக்களுக்கான சுய-நிர்ணயம் என்னும் “எதிர்மறை” கோரிக்கையை எழுப்பியது. இது சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் இலங்கை அரசு தொடர்பான RCL இன் சமரசமற்ற எதிர்ப்பை வலியுறுத்துவதற்கும், தமிழ் பரந்த மக்களின் உரிமைகள் தாக்கப்படுவதைக் குறித்து அம்மக்கள் கொண்டிருந்த கோபத்தை தமிழ் தேசியவாதத்தை தூண்டுவதற்கும், அதன்மூலம் தமது சொந்த சுயநல வர்க்க நோக்கங்களைப் பின்தொடர்வதற்குமாய் சுரண்டிக் கொள்ள விழைந்த தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தை அம்பலப்படுத்துவதற்குமான ஒரு வழிவகையை வலியுறுத்துவதாகவும் அது இருந்தது.

RCL அறிவித்தது, “மார்க்சிஸ்டுகளாகிய நாம், சுய-நிர்ணயத்திற்கு தமிழ் தேசியம் கொண்டிருக்கும் உரிமையை அங்கீகரிக்கிறோம். அதேநேரத்தில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாளர்’ மற்றும் விவசாயிகள்’ அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதன் மூலமும் இந்த உரிமையை அங்கீகரிப்பதன் மூலமும் மட்டுமே இந்த உரிமை வென்றெடுக்கப்பட முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

SLFP-LSSP-CP கூட்டணிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக் கொண்டு, 1977 இல், ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் கீழ் ஒரு வெளிப்படையான வலது-சாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. அது “சோசலிச சொற்றொடர்களை” உச்சரித்துக் கொண்டு முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிராமப்புற பரந்த மக்களின் முதுகின் மீது வைப்பதற்கு இடைவிடாமல் செயற்பட்டுக் கொண்டிருந்தது. UNP ஆட்சி, இலங்கையை உலக மூலதனத்தின் கடிவாளமற்ற சுரண்டலுக்காய் திறந்து விட்டது, 1980 பொதுத்துறை தொழிலாளர்களின் பொதுவேலைநிறுத்தத்தை உடைத்துநொருக்கியது, பெருகும் சமூகப் பதட்டங்களை ஒரு பிற்போக்கான திசையில் திருப்பிவிடும் வகையில் சிங்கள வகுப்புவாதத்தை முடுக்கிவிட்டது.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதமேந்திய எதிர்ப்பு வளர்ச்சி கண்டமையானது, அரசாங்கம் வடக்கு, கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும், மிகக்கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை திணிப்பதற்கும், தமிழ் சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல்களை நடத்துவதற்கான கும்பல்களைத் தூண்டி விடுவதற்குமான போலிக்காரணமாக சேவைசெய்தது. தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதலையும் தமிழ் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையையும் எதிர்த்ததற்காக RCL இன் ஒரு முன்னணிக் காரியாளரான ஆர்.பி.பியதாசா 1979 இல், UNP குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1983 ஜூலையில், ஒரு இராணுவ வாகனவரிசையின் மீது LTTE நடத்திய ஒரு தாக்குதலை பற்றிக் கொண்டு UNP அரசாங்கம் கொழும்பில் ஒரு படுபயங்கரமான தமிழர்-விரோதப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டது.

அரசாங்கத்தின் தமிழர்-விரோதப் பிரச்சாரத்திற்கு RCL இன் அசைந்துகொடுக்காத எதிர்ப்பின் காரணத்தாலும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக அது அயராது போராடிய காரணத்தினாலும், அரசு-ஏற்பாட்டிலான வன்முறையின் ஒரு முக்கிய இலக்காக RCL இருந்தது. RCL இன் சிங்கள மொழி செய்தித்தாளான கம்கறு மாவத்த (Kamkaru Mawatha) வின் ஆசிரியர் கே. ரட்நாயக்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. கட்சியின் அச்சகத்தை அழிப்பதற்கும் அரசாங்கக் குண்டர்கள் எத்தனித்தனர்.

கிட்டத்தட்ட ஒரு போர் அறிவிப்புக்கு நிகரானதான ஒன்றில், 1983 ஆகஸ்டின் தொடக்கத்தில் அரசாங்கம் அரசியலமைப்பு சட்டத்தின் ஆறாவது திருத்தத்தை திணித்தது, தமிழ் ஈழத்தை, அதாவது ஒரு தனி தமிழ் அரசை உருவாக்க ஆதரவளிப்பது ஒரு குற்றவியல் நடவடிக்கையாக்கப்பட்டது. பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் அவர்களது நாடாளுமன்ற ஆசனங்களைப் பறிப்பதற்கும் அரசாங்கம் இந்த ஜனநாயக-விரோத சட்டத்தைப் பயன்படுத்தியது.

RCL, அரசின் தணிக்கையை மீறியது, “இனவாதப் போருக்கான பதில்” என்ற தலைப்பிலான நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கை படுகொலையை தூண்டியதற்காக அரசாங்கத்தின் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் குற்றஞ்சாட்டியதோடு தமிழர்களின் பாதுகாப்புக்கு வருமாறு தொழிலாள வர்க்கத்துக்கும் அழைப்பு விடுத்தது.

தீவு இப்போது உள்நாட்டுப் போருக்குள் மூழ்கிய நிலையில், வடக்கு, கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகள் அனைத்தையும் உடனடியாகவும் நிபந்தனையற்றும் திரும்பப் பெற நெருக்குதலளிக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற தனது போராட்டத்தை RCL இரட்டிப்பாக்கியது. அதேநேரத்தில் LSSP மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் உள்ளிட கொழும்பின் அரசியல் ஸ்தாபகத்தின் அத்தனை பிரிவுகளாலும் ஆதரிக்கப்பட்ட அரசாங்கத்தின் போர்ப் பிரச்சாரத்தை அது ஒழுங்குமுறையாக மறுதலித்ததோடு, போர் என்பது எப்படி ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்தியது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி நிரந்தரப் புரட்சியை காட்டிக்கொடுத்தமை

பிற்போக்குத்தனம், இன-வகுப்புவாத துருவப்படுத்தல் மற்றும் இறுதியாக உள்நாட்டுப் போர் ஆகிய நிலைமைகளின் கீழ் சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான RCL இன் போராட்டம், பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தமையின் மூலமாக பெருமளவில் சிக்கலாக்கப்பட்டது. 1973 இல் SLL தன்னை WRP இனுள் கலைத்துக்கொண்டது, WRP, நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை கைவிட்டதன் உச்சக்கட்டமாக தேசியவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் அதிகரித்தளவில் அடிபணிந்தது.

ஜெர்ரி ஹீலியும் WRP இன் ஏனைய மூத்த தலைவர்களும், 1950கள் மற்றும் 1960களில் பப்லோவாதிகளுக்கு எதிராக எந்த நிலைப்பாடுகளை அவர்கள் தீரத்துடன் பாதுகாத்து நின்றிருந்தனரோ அந்த நிலைப்பாடுகளை மறுதலித்து, பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் சிம்பாப்வேயின் ZANU மற்றும் ZAPU ஆகியவை உள்ளிட்ட எண்ணற்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களை தேசிய விடுதலையை வெற்றிகாண்பதற்கான கருவிகளாக போற்றினர்; ஈராக்கின் சதாம் ஹுசைனும் லிபியாவின் மும்மார் கடாபியும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறியதை ஊக்குவித்தனர். மேலும், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக SLL வகித்த தலைமைப் பாத்திரத்தின் காரணமாக அதற்குக் கிட்டியிருந்த அரசியல் ஆளுமையை WRP, அனைத்துலகக் குழுவின் மற்ற பிரிவுகள் மீது தனது வலதுசாரி நிலைப்பாட்டைத் திணிப்பதற்காய் திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்தது.

WRP தலைமை, RCL தோழர்களது முதுகின் பின்னால், விடுதலைப் புலிகளுடன் உறவுகளை ஸ்தாபித்து விமர்சனமற்று அதனை ஊக்குவித்தது, அதன் முதலாளித்துவ புறநீங்கல்வாத வேலைத்திட்டத்திற்கு “சோசலிச” அலங்காரம் செய்ய அதற்கு உதவியது. 1979 இல் WRP இன் Labour Review விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியரான அன்டன் பாலசிங்கம் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது, அதில் அவர் லெனின் எழுதியவற்றுக்கு தலைகீழ் அர்த்தம் கற்பித்திருந்தார், அனைத்து சமயத்திலும் “தொழிலாள வர்க்கத்தின் சுய-நிர்ணயத்தையே” பிரதான கேள்வியாகக் கொண்டிருந்த சோசலிச சர்வதேசியவாதத்தின் சமரசமற்ற காவலராக அன்றி, முதலாளித்துவ தேசியவாதத்தின் ஒரு நயமற்ற வக்காலத்துவாதியாக அவரை சித்தரித்தார்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வர்க்க நலன்களைப் பாதுகாப்பதில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை போருக்கும் இலங்கை முதலாளித்துவத்திற்குமான தனது எதிர்ப்பின் அடித்தளமாகக் கொள்வதற்கான போராட்டத்தில் RCL உறுதியுடன் இருந்தது. அந்தக் காரணத்தினாலேயே அதனை அழிப்பதற்கான WRP இன் வெளிப்பட்ட முயற்சிகளுக்கு அது முகம்கொடுத்தது, RCL ஐ ICFI இல் இருந்து தன்னிச்சையாக வெளியேற்றுவதற்கு அது கொண்டுவந்த ஒரு தீர்மானமும் இதில் அடங்கும். LTTE க்கு WRP அளித்த விமர்சனமற்ற ஆதரவு RCL ஐ பலவீனப்படுத்தியது, LTTE மற்றும் பிற ஆயுதமேந்திய தமிழ் குழுக்களின் முதலாளித்துவ தேசிய அரசியலை முறைப்படியான ஆய்வுக்கும் அம்பலப்படுத்தலுக்கும் உட்படுத்துவதில் இருந்து தடுத்தது.

WRP இன் சந்தர்ப்பவாதப் பாதை குறித்து 1982 தொடங்கி அமெரிக்காவின் வேர்க்கர்ஸ் லீக் செய்து வந்திருந்த விமர்சனம் குறித்து 1985 இல் அறிந்து கொண்டபோது, RCL துரிதமாக வேர்க்கர்ஸ் லீக் தலைமையிலான ICFI இன் பெரும்பான்மையின் ஆதரவின் பக்கம் அணிநின்றது.

ஏகாதிபத்திய சகாப்தத்தில் சுயாதீனமான வர்க்க அரசியல் மற்றும் புரட்சிகர மூலோபாயம் அத்தனைக்குமான அடித்தளமாக சோசலிச சர்வதேசியவாதம் மற்றும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை பாதுகாப்பதே WRP உடனான 1985-86 உடைவின் மையத்தில் அமைந்திருந்தது. அதன்பின், இந்த புரிதலை தமது வேலைகளின் அத்தனை அம்சங்களிலும் புகட்டுவதற்கு ICFI உம் அதன் அத்தனை பிரிவுகளும் தமது முயற்சிகளை தீவிரப்படுத்தின.

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம்

WRP உடனான உடைவினை அடுத்த உடனடிக் காலத்தில் RCL முகங்கொடுத்த ஒரு பெரும் அரசியல் பணியாக இருந்தது என்னவெனில், சோசலிச சர்வதேசியவாதத்திற்கான அனைத்துலகக் குழுவின் புத்துணர்வு பெற்ற முன்னெடுப்பினை கொண்ட சக்திவாய்ந்ததும், ஸ்தூலமான வெளிப்பாட்டைக் கண்டதுமான ஒரு பாட்டாளி வர்க்க பதிலிறுப்பை, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றி விரிவுபடுத்தியதாகும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவிமூலோபாய நலன்களை முன்னெடுக்கும் நோக்கிலான ஒரு சிடுமூஞ்சித்தனமான தந்திரஉத்தியில், இந்திய அரசாங்கம், LTTE க்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) போன்ற ஏனைய பல்வேறு தமிழ் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அரசியல் மற்றும் இராணுவ-தந்திரோபாய ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இலங்கையிலான நெருக்கடி ஒட்டுமொத்தமாக, பிற்போக்குத்தனமான தெற்காசிய தேசிய-அரசு அமைப்புமுறையையே பலவீனப்படுத்துகிறது என்ற அச்சத்தினால், அது திடீரென்று தனது பாதையை மாற்றிக் கொண்டு, தமிழ் மக்களின் கிளர்ச்சிக்கான தனது ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டு, கொழும்புடன் ஒரு உடன்பாட்டுக்கு விழைந்தது.

இந்த மாற்றம், பொதுவாக இந்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தான ஆதரவையே தமது பிரிவினைவாத முன்னோக்கிற்கு அடித்தளமாகக் கொண்டிருந்த  தமிழ் குழுக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆரம்பத்தில் LTTE உள்ளிட தமிழ் குழுக்கள் அனைத்தினாலும் ஆதரிக்கப்பட்ட இந்த 1987 ஜூலை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், வெளித்தோற்றத்திற்கு அமைதிப்படையினராகவும், ஆனால் உண்மையில் தமிழ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கும் இலங்கை முதலாளித்துவ அரசின் ஐக்கியத்தை உறுதிசெய்வதற்குமாய் இந்தியத் துருப்புகள் தீவில் நிலைநிறுத்தப்பட்டன.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களில் நின்று RCL மட்டுமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது. RCL தலைமையுடன் தீவிரமான விவாதங்களைத் தொடர்ந்து, "ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை” என்ற ஒரு விரிவானதொரு அறிக்கையை ICFI வெளியிட்டது.

இந்த அறிக்கை ஜெயவர்த்தனவினதும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினதும் மோசமான தந்திரங்களை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. பரந்த தமிழ் மக்களை LTTE அழைத்துச் சென்று கொண்டிருந்த இரத்தக்களரியான முட்டுச்சந்திற்குப் பின்னால் அமைந்திருந்த வர்க்க தர்க்கத்தையும் அது விளக்கியது. "ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் முதலாளித்துவ வர்க்கமானது, சுய-நிர்ணயம் என்பதை பிரத்யேகமாக அதன் சொந்த தேசிய சிறப்புசலுகைகளை பத்திரப்படுத்திக் கொள்கின்ற மற்றும் ‘சுதந்திர நாட்டிற்குள்’ தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டுவதற்கான மிகச் சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்குமான நிலைப்பாட்டில் இருந்தே கருதிப்பார்க்கிறது.” விடுதலைப் போராட்டமானது முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாக ஆகக் கூடும் என்ற அச்சத்தால் மிரட்சியுற்று, அது தொடர்ச்சியாக “ஒடுக்கப்பட்ட மக்களின் அணிதிரட்டலுக்கு வரம்புகளை இடுகிறது” அத்துடன் “தேசங்களை அவற்றின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை செய்வதற்கு” அவசியமான “ சர்வவியாபக தன்மையை அடைவதற்கு இயல்பிலேயே தகமையற்றதாக்கும் வகையில்” ஒரு “தேசிய புறநீங்கல்வாத பாதையை” பின்பற்றுகிறது என அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியது.

இந்த அறிக்கை, இலங்கையின் நிகழ்வுகள் மீதான மதிப்பீட்டை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட சுதந்திர அரசுகள் மீதான ஒரு விரிவான வரலாற்று மதிப்பீட்டை வரைவதின் உள்ளடக்கத்திற்குள் அமர்த்தியது. அது விளக்கியது, “எப்போதுமே ஜனநாயகக் கோட்பாடுகளை மரணகரமாய் சமரசம் செய்து கொள்வதன் மீது அடித்தளம் அமைத்துக் கொண்ட முறைதவறிப் பிறக்கும் அரசுகளை உருவாக்குவது என்பதே ஏகாதிபத்திய-ஒப்புதலுடனான ‘சுதந்திரம்’ என்பதன் அர்த்தமாய் இருந்து வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கில், தேசிய முதலாளித்துவ வர்க்கமானது ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் விடுதலையாளராக அல்ல, மாறாக ஏகாதிபத்திய கொள்ளையில் ஒரு இளைய பங்காளியாகவே செயல்பட்டு வந்திருக்கிறது...

“இத்தகைய நிலைமைகளில் இருந்து, ஏகாதிபத்தியத்தின் வாழ்த்தி வரங்கொடுத்தலோடும், எக்காளமுக்காள சிரிப்போடும், பெருக்கெடுப்பதுதான் இனக்கலவரங்களும், யுத்தக் களரிகளுமாகும். மூக்குள்ளளவும் சளி என்பதுபோல முதலாளித்துவ ஆட்சி முறை இருக்கும்வரை இதுவே நிலைமை.  மாறாது தீராது. இந்திய, பாக்கிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், பர்மா போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு பிந்திய வரலாறு, இன்னும் நறுக்காகச் சொல்வதென்றால்,  உலகிலுள்ள முன்னாள் காலனித்துவ நாடுகள் எல்லாமே தீர்மானகரமாக நிறுவிக் காட்டுவதென்னவெனில் முதலாளித்துவவாதிகள் ஒருபோதும் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ,  அரசியல் சுயாதீனத்தையோ ஏற்படுத்த மாட்டார்கள் என்பதைத்தான்”.

அனைத்துலகக் குழுவின் அறிக்கையானது, கொழும்பால் நடத்தப்பட்ட இனவாதப் போருக்கு RCL இன் சமரசமற்ற எதிர்ப்பை மறுஉறுதி செய்த அதேநேரத்தில், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாக மட்டுமே அடையப்பட முடியும் என்று தெளிவாக வலியுறுத்தியது. ஸ்ரீலங்கா மற்றும் தமிழ் முதலாளித்துவக் கன்னைகளுக்கும் அவர்களது போட்டி தேசியவாதங்களுக்கும் எதிராய், அது ஸ்ரீலங்கா - தமிழீழம் ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்கான அழைப்பை முன்வைத்தது.


கீர்த்தி பாலசூரிய

RCL 1968 இல் உருவாக்கப்பட்டது முதலாக அதன் பொதுச் செயலாளராக இருந்த தோழர் கீர்த்தி பாலசூரிய கடைசியாக வேலைசெய்த முக்கிய அறிக்கையாகவும் இது துன்பியலானவிதத்தில் அமைந்தது. இருதய இரத்த உறைவு (coronary thrombosis) நோயின் காரணத்தால் 1987 டிசம்பரில் அவர் உயிரிழந்தமை இலங்கை மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அற்புதமான மூலோபாயவாதியை இல்லாது செய்துவிட்டது. அவர் இறக்கும்போது அவருக்கு வயது வெறும் 39 மட்டுமே.

இந்த அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டிருந்த அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, RCL, ஐரோப்பாவில் தஞ்சம் புகத் தள்ளப்பட்டிருந்த இளம் தமிழ் போராளிகள் மத்தியில் தலையீடு செய்ய முடிந்தது. ICFI இன் முன்னோக்கின் அடிப்படையிலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கியதொரு நோக்குநிலையின் மூலமாகவும் மட்டுமே தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியும் என்ற முடிவுக்கு மிகத் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தவர்கள் வந்திருந்தனர். இந்த சக்திகள் ICFI இல் இணைந்து ஐரோப்பாவிலும் தெற்காசியாவிலும் அதன் வேலைகளுக்கு வலுவூட்டினர்.

இலங்கை அரசு, சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் தமிழ் தேசியவாதத்திற்கு எதிராக RCL/SEP இன் தொடரும் போராட்டம்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு தனது ஆதரவைகொடுத்த LTTE, ஆனால் வெகுவிரைவிலேயே அதனை ஆயுதங்களை களையசெய்ய அனுப்பப்பட்ட இந்திய துருப்புகளுடன் மோதலுக்கு சென்றது. இதனிடையே கொழும்பு, வடக்கிலான சண்டையை பயன்படுத்திக் கொண்டு ஒப்பந்தத்திற்கு அது வழங்கிய சொந்த ஆதரவையும் மறுதலித்தது, புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டுப் போரின் மூலமாக இவ்ஒப்பந்தத்தால் தமிழ் உயரடுக்கிற்கு வழங்கிய மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையும் இல்லாது செய்துவிட அது கணிப்பிட்டது.

தொடர்ந்து வந்த அபிவிருத்திகள் LTTE இன் அரசியல் திவால்நிலையையும் மற்றும் அதன் தொழிலாள-வர்க்க விரோத தன்மையையும் அம்பலப்படுத்தின. முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதை அடுத்து, LTTE, அமெரிக்காவையும், மற்ற மேற்கத்திய சக்திகளையும், அத்துடன் 1991க்குப் பிந்திய காலத்தில் முதலாளித்துவ உலகமயமாக்கத்தை தழுவிக் கொண்டு வாஷிங்டனுடன் மூலோபாய உறவுகளை உருவாக்க விழைந்த இந்திய முதலாளித்துவத்தையும் கவர்கின்ற தனது முயற்சிகளின் பகுதியாக மிஞ்சியிருந்த எவ்விதமான சோசலிசப் பாசாங்குகளையும் விரைவாகக் கைவிட்டது.

இந்த ஏகாதிபத்திய-ஆதரவு நோக்குநிலையுடன், திட்டமிட்டு சிங்கள உழைக்கும் மக்களைக் குறிவைத்தான தெற்கிலான பயங்கரவாதத் தாக்குதல்களும் சேர்ந்து கொண்டது, அதன்விளைவாய் வகுப்புவாதம் தீவிரப்படுத்தப்பட்டு அது சிங்கள மேலாதிக்கவாத முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக வலுப்படுத்தியது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தனது கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளில், LTTE தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமற்று ஒடுக்கியதோடு முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத விரோதத்தையும் கிளறி விட்டது.

1996 இல் SEP ஆக மாற்றப்பட்டு விட்டிருந்த RCL, போருக்கு எதிராகவும் தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு சோசலிச-சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஆயுதபாணியாக்க போராடிய காரணத்தால், LTTE அதற்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. 1998 கோடையில், இராஜேந்திரன் சுதர்சன், பரமு திருஞானசம்பந்தர் மற்றும் காசிநாதன் நகுலேஸ்வரன் ஆகிய மூன்று SEP உறுப்பினர்களை 50 நாட்களுக்கும், நான்காவதாய் இராசரட்னம் இராஜவேல் என்ற உறுப்பினரை 17 நாட்களும் பிடித்து வைத்திருந்தது.

SEP மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாதுகாப்புப் பிரச்சாரம், குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவிலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உள்ளிட உலகெங்கிலுமான உழைக்கும் மக்களிடம் இருந்து பரந்த ஆதரவைப் பெற்றதன் விளைவாக எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1990களின் ஆரம்பத்தில் ICFI, தேசியப் பிரச்சினையை தொடர்பான, குறிப்பாக “சுய-நிர்ணய உரிமை” கோரிக்கை தொடர்பான மார்க்சிச இயக்கத்தின் அணுகுமுறை மீது ஒரு விமர்சனரீதியான திறனாய்வை மேற்கொண்டது. இது, தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் பூகோளமயமாக்கலால் சூழப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரப்பட்டமை, ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ மீட்சியைத் தழுவியமை, மற்றும் இணையாக தொழிற்சங்கங்கள் பொறிவு கண்டமை ஆகியவற்றினால் உந்தப்பட்டு தனது வேலைத்திட்டத்தினை அது மீளாய்வு செய்ததன் ஒரு பகுதியாக இருந்தது.

இந்தத் திறனாய்வு பல்வேறு இன்றியமையாத பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது. முதலாவதாய், ஸ்ராலினிஸ்டுகள், பப்லோவாத சந்தர்ப்பவாதிகள் மற்றும் பிறரது திட்டமிட்ட திரிப்பின் ஒரு விளைவாய் “சுய-நிர்ணயம்” என்பது பிரிவினைவாதத்திற்கும், ஒவ்வொரு முதலாளித்துவ பிரிவினைவாத இயக்கத்திற்கும் தொழிலாள வர்க்கம் ஆதரவளிக்க கடமைப்பட்டது என்ற பிற்போக்குத்தனமான, மார்க்சிச-விரோத கருத்தாக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் பிரபல்யமாக சமானப்படுத்தப்படுவதாக ஆகியிருந்தது.

இரண்டாவதாக, “சுய-நிர்ணயத்துக்கு தேசங்கள் கொண்டுள்ள உரிமைக்காக” என்ற சுலோகத்தை விடாப்பிடியாக திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பது, தேசியக் கோரிக்கைகள் மீதான ஒரு ஸ்தூலமான வரலாற்று, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பகுப்பாய்வுக்கு ஒரு பிரதியீடாக இருக்கவில்லை. வரலாற்று ரீதியாக ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்டு வந்திருந்த நாடுகளில் முக்கியமான ஜனநாயகக் கடமைகளைத் தீர்ப்பதற்கு தேசிய முதலாளித்துவ வர்க்கம் அப்பட்டமாக தோல்வி கண்டிருந்தமையானது ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் காலனியாதிக்க விடுபடலின் மூலமாக உருவாக்கப்பட்டிருந்த “சுதந்திரமான அரசுகளில்” ஏராளமான பிரிவினைவாத இயக்கங்கள் உருவாக வழிவகுத்திருந்தது. இந்த இயக்கங்கள் உள்நாட்டு சுரண்டல்தாரர்களின் நலன்களின் பேரில் புறநீங்கல்வாத இன, மொழி மற்றும் மத வழிகளில் அரசுகளை பிரிக்க பரந்த மக்களின் துன்பங்களை சுரண்டிக் கொள்ள முயன்றன.

இதைப் போலவே, பால்கன்களில், முதலாளித்துவத்தை மீட்சி செய்தபோது, பல்வேறு ஸ்ராலினிச சக்திகளும், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியுடன் கைகோர்த்து செயற்பட்டு, தமது செல்வத்தையும் அதிகாரத்தையும் பத்திரப்படுத்திக் கொள்வதற்காக “தேசிய சுய-நிர்ணயம்” என்ற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தன. “இத்தகைய இயக்கங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதுடன் அவை ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் ஜனநாயக அபிலாசைகளுக்கு உருவடிவம் கொடுக்கவுமில்லை. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் வர்க்கப் போராட்டத்தை இன-வகுப்புவாத யுத்தமாக திசைதிருப்புவதற்குமே அவை சேவைசெய்கின்றன” என ICFI விளக்கியது.

மூன்றாவதாக, உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது தேசிய சந்தைகள் மற்றும் உற்பத்தியின் முக்கியத்துவத்தை பெருமளவில் குறைத்து இத்தகைய தேசிய-பிரிவினைவாத இயக்கங்கள் பல்கிப் பெருகுவதற்கான ஒரு சமூக-பொருளாதார அடிப்படையை வழங்கியிருந்தது. சிறு பிராந்தியங்களும் கூட இப்போது உலகச் சந்தையுடன் பிணைத்துக் கொள்வதற்கும் உலக மூலதனம் மற்றும் அதன் உள்ளூர் முதலாளித்துவ முகவர்களின் நடவடிக்கைகளுக்கு இலாபகரமான ஒரு அடித்தளத்தை வழங்குவதற்கும் இப்போது சாத்தியம் கொண்டிருந்தன.

இந்த நிகழ்வுகள், தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் அவசர அவசியத்தை அகற்றி விடவில்லை. ஜனநாயகப் புரட்சியின் ஏனைய தீர்க்கப்படாத கடமைகளைப் போலவே, தேசிய ஒடுக்குமுறைகள் அத்தனையையும் அகற்றுவதும் மக்களுக்கும் தேசங்களுக்கும் இடையில் உண்மையான சமத்துவத்தை ஸ்தாபிப்பதும் தொழிலாள-வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலமாகவே சாத்தியமாகும் என்ற நான்காம் அகிலத்தின் முன்னோக்கிற்கு மேலதிக ஊர்ஜிதப்படுத்தல்களையே அவை வழங்கின.

ICFI இன் மறுமதிப்பீட்டின் பாகமாக, RCL, "தமிழ் மக்களின் சுய-நிர்ணய உரிமை”க்கு ஆதரவு என்பது நடைமுறை அர்த்தத்தில், LTTE இன் தேசிய-பிரிவினைவாத திட்டத்திற்கே ஆதரவளிப்பதாக அமையும் என்பதால் அதில் எந்த முற்போக்கான உள்ளடக்கமும் கிடையாது என்ற முடிவுக்கு வந்தது.

அதேநேரத்தில், அரசு ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த நிலையிலும் இலங்கை அரசுக்கும் அதன் போருக்கும் எதிராகவும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படையினர் அனைவரையும் திரும்பப் பெறக் கோரியும் தொடர்ச்சியான கிளர்ச்சியூட்டல் மூலம், சுய-நிர்ணயக் கோரிக்கையில் உண்மையான முற்போக்கான அம்சங்களாய் இருந்த அனைத்தும் தக்கவைத்துக் கொள்ளப்பட்டதுடன், அதற்கு சாதகமான வெளிப்படுத்தலும் வழங்கப்பட்டன.

RCL உம் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களும்: பொய்யான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு “அழித்தொழிப்புப் போருக்கு”

2002 இன் ஆரம்பத்தில் LTTE, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற பிரதான சக்திகளால் ஆதரவளிக்கப்பட்டதும் மற்றும் நோர்வே அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டதுமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைந்தது. LTTE அவ்வாறு செய்ததற்குக் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பேரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்திருந்த நிலைமைகளின் கீழ், தீவிரப்பட்ட மூலோபாயத் தனிமைப்படுத்தல் பற்றி அது அஞ்சியது. அடுத்ததாக தெற்காசியாவில் முதலாளித்துவ ஸ்திரத்தன்மைக்கு ஒரு பாதுகாவலனாக வருவதற்கு தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் கொழும்பையும் விட்டுக்கொடுப்புகளை செய்ய ஏகாதிபத்திய சக்திகளும் இந்தியாவும் முன்தள்ளும் என்றும் அது நம்பிக்கை கொண்டிருந்தது.

ஏகாதிபத்திய சுரண்டலின் ஒரு இளைய பங்காளியாவதற்கான LTTE இன் அபிலாசைகள், ஒரு சுதந்திர தமிழ் ஈழமானது ஒரு “புலிப் பொருளாதாரமாக” இருக்கும் என்று விடாது கூறிவந்ததன் மூலம் சிறந்த உதாரணவடிவம் பெற்றன. இது, பல தசாப்தங்களாய் அமெரிக்க மற்றும் ஜப்பானிய மூலதனத்திற்கு மலிவு உழைப்பை வழங்கிக் கொண்டும், அதேசமயத்தில் எதேச்சாதிகார ஆட்சியின் கீழ் தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக ஒடுக்கியும் வந்திருந்த “ஆசியப் புலி”களை (சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தைவான்) குறிப்பிட்டு கூறப்பட்டதாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயினும் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் ஒரு சுதந்திர தமிழ் அரசு உருவாக்கப்படுவதற்கு பிடிவாதமான எதிர்ப்பு கொண்டவையாக தொடர்ந்து இருந்து வந்தன, தெற்காசியாவெங்கும் பிரிவினைவாதக் கிளர்ச்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் இது தமது நலன்களில் குறுக்கிடும் என்பதாய் அவை கணக்குப் போட்டன. அதற்கேற்ப LTTE மறுபடியும் தனது வழியை மாற்றியது. 2002 செப்டம்பரில், அது ஒரு தனி அரசு இலட்சியத்தைக் கைவிட்டதோடு, ஒரு மறுஒழுங்கமைக்கப்பட்ட “சமஸ்டி ஆட்சியுடனான” இலங்கை முதலாளித்துவ அரசுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள தனது விருப்பத்தையும் சுட்டிக்காட்டியது.

WSWS, அதன் 2002 செப்டம்பர் ஆசிரியர் குழு அறிக்கையில் விளக்கியவாறாக, தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலமான வர்க்க நோக்கங்களை மேம்பட்ட விதத்தில் பின்தொடர்வதற்காக தனது சொந்த வேலைத்திட்டத்தை கைவிட்ட LTTE, “அரசாங்க நிர்வாகத்திற்குள்ளும் பெருநிறுவன இயக்குநர் அறைகளுக்குள்ளும் நுழைவைப் பெற்றுக் கொள்ள தமது போர் உடைகளைக் களைந்துவிட்ட தேசிய விடுதலை இயக்கங்களது ஒரு நெடிய வரிசையில்” தன்னை இணைத்துக் கொண்டிருந்தது.

போலி-இடது NSSP, ஐக்கிய சோசலிச கட்சி (USP) மற்றும் பலவண்ண அரசுசாரா அமைப்புகளால் பாராட்டப்பட்ட இந்த பேச்சுவார்த்தைகளுக்கும் இலங்கையின் -தமிழ் அல்லது சிங்கள- பரந்த மக்களின் ஜனநாயக அபிலாசைகளும் சமூகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எச்சரித்து SEP அதை எதிர்த்தது. எந்த அதிகாரப் பகிர்வு உடன்பாடும் போட்டி முதலாளித்துவக் கன்னைகளுக்கு இடையே கொள்ளையிலான பங்குபிரிப்பாகவே இருக்கும், அத்துடன் உலகெங்கிலும் முதலாளித்துவ ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கம் கொண்டதாய் இருக்கும் என்றும் அது எச்சரித்தது. மேலும், திரைக்குப் பின்னால் சிங்கள ஆளும் உயரடுக்கானது போரைப் புதுப்பிப்பதற்காக வெறித்தனமாக தயாரிப்பு செய்து கொண்டிருந்தது என்பதையும் SEP விளக்கியது.

2006 இல், தமிழ் வெகுஜனங்களுக்கும் LTTEக்கும் எதிரான ஒரு தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது SFLP அரசாங்கமும் அமெரிக்கா, இந்தியா மற்றும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளது முழு ஆதரவுடன் முழு-வீச்சிலான போரை மீண்டும் தொடர்ந்தனர்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்குமான தனது விண்ணப்பங்களை தீவிரப்படுத்துவதன் மூலமாக LTTE பதிலிறுப்பு செய்தது. எந்தவொரு சமயத்திலும் அது இனவாதப் போருக்கு எதிராக இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச தொழிலாளர்களை மற்றும் உழைப்பாளிகளை அணிதிரட்டுவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை.

இதனிடையே, புஷ்ஷின் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” ஒரு பாகமாக கொழும்பால் இப்போது சிடுமூஞ்சித்தனமாக ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போருக்கு எதிராய், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான தனது முயற்சிகளை SEP இரட்டிப்பாக்கியது. கொழும்பின் கொடூரமான இராணுவத் தாக்குதலுக்காக அதனை கண்டிக்கும் 2006 அக்டோபர் 21 ஆம் திகதி அறிக்கையில், SEP இன் அரசியல் குழு, போருக்கும், அத்துடன் இராணுவவாதம் மற்றும் வகுப்புவாதத்திற்கு மூலக்காரணமாய் இருக்கும் இலாப நோக்கு அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளை அணிதிரட்டும் தனது சொந்த சுயாதீனமான அரசியல் பிரச்சாரத்தை தொடக்க” தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

இலங்கையில் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிக்கவும், கொழும்பின் வன்மையான மூர்க்கத்தனத்தை எதிர்ப்பதற்கும் இந்தியத் துணைக்கண்டம், ஆசியா மற்றும் சர்வதேசமெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது. “கொழும்பு அரசியல்வாதிகளின் சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் LTTE இன் தமிழ் பிரிவினைவாதம் இரண்டும் உள்ளிட்ட அத்தனை வகையான தேசியவாதம், வகுப்புவாதம் மற்றும் இனவாதத்திற்கான சமரசமற்ற எதிர்ப்பே”, “போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அத்தியாவசிய அடிப்படையாகும்” என அந்த அறிக்கை வலியுறுத்தியது.

போர் தொடங்கி கால்-நூற்றாண்டுக்கும் அதிகமானதொரு காலத்திற்குப் பின்னர் 2009 இல் முடிவடைந்தது. இலங்கையின் ஆளும் வர்க்கத்தினாலும் அதன் அரசு எந்திரத்தினாலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் இன்னும் மிகப்பெரும் அளவிலானவையாக மட்டுமே ஆகியிருந்தன, 2009 ஏப்ரல்-மேயிலான ஒரு இறுதி இரத்தஆற்றில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இன்று மனதில் கொள்வதற்கான இன்றியமையாத படிப்பினைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்வியானது, சோசலிச சமத்துவக் கட்சி அதன் 2011 ஸ்தாபக காங்கிரசில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணத்தில் விளக்கியவாறாக, “அடிப்படையாக ஒரு இராணுவரீதியான தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் முன்னோக்கில் உட்பொதிந்திருந்த பலவீனத்தின் விளைபொருளாக இருந்தது. … இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகவும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் திறம்படைத்திருந்த ஒரேயொரு சமூக சக்தியாக இருந்தது தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு வர்க்க அடிப்படையில் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை நோக்கிய எந்த நோக்குநிலையையும் எப்போதும் இயல்பாகவே எதிர்த்து வந்தது.

ஒரு தசாப்த காலத்திற்கு பின்னரும், உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றதற்கு அடித்தளத்திலிருந்த பிரச்சினைகளில் எதுவொன்றுக்கும் முற்போக்கான தீர்வு காணப்படவில்லை. கொழும்பு ஸ்தாபகத்தின் மிகவும்-பெருமையடிக்கப்பட்ட ”அமைதி தீர்வு” ஒரு குரூரமான ஏமாற்று என்பது நிரூபணமாகியுள்ளது. பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தும் வடக்கை ஆக்கிரமித்தே இருக்கின்றன. இராணுவமயமாக்கப்பட்ட அரசு எந்திரமும் போர் காலகட்டத்தின்போது உருவாக்கப்பட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களும் போர்க்குணம் பெருகிச் செல்லும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் பயன்படுத்தப்படுவதற்காக அப்படியே தொடர்கின்றன.

போருக்குப் பிந்திய காலத்தில், தமிழ் முதலாளித்துவ வர்க்கமானது LTTEக்கு ஆதரவளித்த நிலையில் இருந்து, கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு அச்சாணியாக ஆகி விட்டிருக்கும் வெளிப்படையான அமெரிக்க-ஆதரவு கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை (TNA) ஆதரிப்பதற்கு நகர்ந்திருக்கிறது. இலங்கை உயரடுக்கில் வாஷிங்டனின் மிகவும் முழுமூச்சான ஆதரவாளர்களில் ஒன்றாக TNA இருந்து வருகிறது. சீனாவுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக அமெரிக்கா கருதிக்கொள்ளும் இராஜபக்ஷ, 2015 ஜனவரியில், நீண்டகாலம் அவரது வலது-கரமாய் இருந்து வந்த சிறிசேன மூலமாக பிரதியிடப்படுவதில் விளைந்த அமெரிக்காவின் ஆட்சி-மாற்ற நடவடிக்கையில் TNA ஒரு முக்கியமான பாத்திரம் வகித்தது. வாஷிங்டனின் அனுகூலப் பார்வை, பணம் மற்றும் கொழும்பில் அதிகாரம் ஆகியவற்றை பின்தொடர்ந்து செல்லும் TNA, தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட படுபயங்கரமான போர்க் குற்றங்கள் மீதான எந்தவொரு விசாரணைக்கான அதனது கோரிக்கையையும் முற்றுமுழுதாக கைவிட்டு விட்டது.

IMF வழிமொழிந்த அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களில் சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் தோளோடு தோளாய் நின்றிருந்தனர். இந்த உள்ளூர அமைந்திருக்கும் வர்க்க ஒற்றுமையானது, உள்நாட்டுப் போர் மற்றும் அரசு ஒடுக்குமுறையின் மிகவும் கடுமையான நிலைமைகள் உள்ளிட கடந்த ஐந்து தசாப்தங்களாக RCL-SEP இன் போராட்டத்திற்கு உயிரூட்டி வந்திருக்கும் சோசலிச-சர்வதேசியவாத வேலைத்திட்டத்தால் அரசியல்ரீதியாக உரமூட்டப்பட வேண்டும்.

இன்று, உலக முதலாளித்துவத்தின் பொறிவு, ஏகாதிபத்திய வன்முறையின் மறுஎழுச்சி, மற்றும் உலகளாவிய அளவில் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர் அதி-வலது பேரினவாத மற்றும் தேசியவாதக் கொள்கைகளை நோக்கித் திரும்புவது ஆகிய நிலைமைகளின் கீழ், “தமிழ் தேசியப் பிரச்சினை”க்கும், பரந்த தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான புரட்சிகரத் தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பில் நிரந்தரப் புரட்சியை பாதுகாப்பது மற்றும் அபிவிருத்தி செய்வதை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சர்வதேசியவாதத்திற்கான RCL-SEP இன் போராட்டமானது இலங்கை மற்றும் தெற்காசியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்றியமையாத மூலோபாயப் படிப்பினைகளை வழங்குகிறது.

ஆசிரியர் மேலும் பரிந்துரைப்பவை:

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள் (இலங்கை)
[26 மார்ச் 2012]

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
[1 டிசம்பர் 1998]