ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Anti-Semitic and far-right violence on the rise in Germany

ஜேர்மனியில் யூத-விரோத, தீவிர-வலதுசாரி வன்முறைகளின் எழுச்சி

By Johannes Stern 
21 February 2019

கடந்த வாரம் ஜேர்மனியில் ஆபத்தான அரசியல் நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு யூதவிரோத  குற்றங்கள் மற்றும் வன்முறை நடவடிக்கைகள் தீவிரமாக அதிகரித்துள்ளன. அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, நாடு முழுவதும் பொலிஸ் படைகள் 2018 ஆம் ஆண்டில் 1,646 யூதவிரோத குற்றவியல் நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளன. இது 2017 ல் இருந்ததை விட 10 சதவிகிதம் அதிகமாகும். அந்த ஆண்டில், மத்திய அரசாங்கம் 1,504 யூத விரோத தாக்குதல்களை பதிவு செய்தது.

யூத விரோத வன்முறை செயல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மேலும் துரிதமாக 40 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளது. போலீசார் 62 வன்முறை குற்றங்களை 2018 ல் உறுதி செய்திருந்தாலும், அது ஒரு வருடத்திற்கு முன்னர் 37 ஆக இருந்துள்ளது.

இடது கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட யூதவிரோத  குற்றங்கள் பற்றி கேட்கப்பட்ட பாராளுமன்ற வினாக்களுக்கு மகா கூட்டணி அரசாங்கத்தால் இந்த புள்ளிவிபரங்கள் வழங்கப்பட்டன. மிக அதிகமான யூதவிரோத வன்முறைக் குற்றங்கள், தீவிர வலதுசாரி பிரிவினருடன் தொடர்புடைய தனிநபர்களால் நடத்தப்பட்டவை என்பதை இதற்கான விடை வெளிப்படுத்தியது. யூதவிரோத குற்றவியல் நடவடிக்கைகள் என வகைப்படுத்தப்பட்ட 755 குற்றங்களில், 670 அரசியல் நோக்கம் கொண்ட குற்றங்கள் (politically motivated crimes - PMKs) என அடையாளம் காணப்பட்டது. இவற்றுள், 25 “வெளிநாட்டு  கருத்தியல்” தொடர்பான அரசியல் நோக்கத்தினால் உந்தப்பட்ட குற்றங்கள், 17 "மத நம்பிக்கைகள்" தொடர்பான அரசியல் உந்துதல் குற்றங்கள், மற்றும் 8 "இடதுசாரி" அரசியல் உந்துதல் குற்றங்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த மிக முக்கியமான புள்ளிவிவரங்கள் அரசியல் ஸ்தாபகம் மற்றும் பிரதான ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் சுருக்கமான செய்திகளை வெளியிட்டுள்ளன; ஜேர்மனிய அதிபர் அல்லது அரசாங்க அல்லது எதிர்க்கட்சி முன்னணி அரசியல்வாதிகளோ இதுபற்றி கருத்துக்கள் எதுவும் வெளியிடவில்லை. பிப்ரவரி 13 ம் திகதி அரசாங்க ஊடகவியலாளர் மாநாட்டில் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸோரன் ஸ்மிட்த், யூதவிரோத நடவடிக்கைகள் பற்றிய அரசாங்கத்தின் மேற்பார்வையாளர் இந்த விஷயத்தை கவனித்து வருவதாக கூறி, இந்த தாக்குதல்களை எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதையும் அவர்களை பாதுகாக்க என்ன செய்யப்பட்டது என்ற கேள்வியையும் நிராகரித்தார். அவர் இந்த கேள்விகளுக்கு இப்போது “வேறு கருத்துக்கள் இல்லை" என்று பதிலளித்தார்.

வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஸ்தாபகக் கட்சிகளுக்கு ஒரு முக்கிய எரிச்சலை வெளிப்படுத்துகின்றன. ஜேர்மனியில் உள்ள யூத-விரோதமானது "இறக்குமதி” செய்யப்பட்டது, மேலும் முஸ்லீம் புலம்பெயர்ந்தோருடன் தொடர்புபட்டது என்ற தீவிர வலதுசாரி AfD ஆதரவுடனான பொய்யான உத்தியோகபூர்வ கூற்றை அம்பலப்படுத்தியுள்ளன. புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதுபோல், பெரும்பான்மையான யூதவிரோத சம்பவங்கள் மதவாத அல்லது "வெளிநாட்டு கருத்தியல்" உடன் இணைக்கப்படவில்லை, இடதுசாரிக் குழுக்கள் ஒருபுறம் இருக்க, ஆனால் அதி-வலதுகளே  இதற்கு பொறுப்பாகும்.

யூத-விரோத குற்றங்களின் எழுச்சி என்பது, தீவிர வலதுசாரி வன்முறை எழுச்சி அலையின் ஒரு பாகமாகும். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வலதுசாரி குற்றம் பற்றிய சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, 2018 ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களில் 19,105 குற்றங்கள் நடைபெற்றுள்ளன, அவை வலதுசாரி அரசியல் உந்துதல் குற்றங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன, இதில் 1,072 வன்முறையான நடவடிக்கைகளும் அடங்கும். மேலும், வலதுசாரி அரசியலால் உந்தப்பட்ட 6 படுகொலை முயற்சிகளும் அதில் ஒன்று கொலையிலும் முடிவடைந்துள்ளது." உண்மையான எண்ணிக்க இன்னும் அதிகமாக இருக்கலாம்.

பெரும்பாலான வலதுசாரி குற்றவியல் மற்றும் வன்முறை நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்துள்ளன. இந்த மாதத்தில், நவ-நாஜிக்கள் தொடர்ச்சியாக வெளிநாட்டவர்கள் மற்றும் இடது-சாரி எதிர்ப்பாளர்களை வேட்டையாடுவதற்கு கெம்னிட்ஸ் நகரத்தில் பல தடவை ஊர்வலமாக சென்றுள்ளனர். தீவிர வலதுசாரி பேரணிகளின் போதும், யூத எதிர்ப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்த சம்பவங்களில் ஒன்றில், ஒரு நவ-நாஜி கும்பல் யூத உணவகத்தை தாக்கியது. அந்த நேரத்தில், செய்தி ஊடகத்தில் அல்லது அரசியல் ஸ்தாபகத்தில் எந்த சத்தமும் இருக்கவில்லை. மாறாக உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோபர் மற்றும் உள்நாட்டு உளவு நிறுவன முன்னாள் தலைவரான  ஹான்ஸ்-ஜோர்க் மாஸன் உட்பட முன்னணி அரசாங்க அதிகாரிகள் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்களுக்கு தங்கள் ஆதரவை அறிவித்து, அவற்றில் எந்த வன்முறை தாக்குதல்களும் நடைபெறவில்லை என்று மறுத்தனர்.

இப்போது வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டாகும்.  இவை கொடூரமான வலது-சாரி தீவிரவாத குண்டர்களும் யூத எதிர்ப்பாளர்களும் மேலும் ஆக்கிரோஷமாக செயல்படக்கூடிய நிலைமைகளை உருவாக்கியுள்ளன. ஸ்தாபகக் கட்சிகள் வலதுசாரி தீவிரவாத AfD ஐ ஊக்குவித்து மற்றும் பாதுகாத்து, பாராளுமன்றக் குழுக்களில் இக் கட்சியுடன் ஒத்துழைத்து, இராணுவக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், உள்நாட்டு ஒடுக்குமுறை எந்திரத்தை வலுப்படுத்துவதற்கும், சமூக செலவின வெட்டுக்களை வலுப்படுத்துவதற்கும் அதன் வேலைத்திட்டத்தைத் தழுவியுள்ளன.

மகா கூட்டணியின் அகதிக் கொள்கையானது, AfD இனால் பெரிதும் ஆதிக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன் பொலிஸ், உளவுத்துறை அமைப்புக்கள், இராணுவம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. உள்துறை உளவுத்துறையால் வெளியிடப்பட்ட மகா கூட்டணியின்  அரசியலமைப்பை பாதுகாக்கும் அறிக்கை, AFD இன் கையெழுத்தை கொண்டுள்ளது. AfD மற்றும் அதன் வலதுசாரி தீவிரவாத ஆதரவாளர்கள் வெறுமனே "இடதுசாரி தீவிரவாதம்" என்று கூறப்படுபவர்களால் அவர்கள் "பாதிக்கப்பட்டவர்கள்" என்று அதில் குறிப்பிடுகையில், முதலாளித்துவம், தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பும் "இடதுசாரி தீவிரவாதிகள்" மற்றும் "அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று கண்டிக்கப்படுகிறது. ஜேர்மனிய இரகசிய சேவையினால் கண்காணிக்கப்படுவதற்கு எதிராக ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சதி மற்றும் ஜேர்மனியில் பாசிசம் திரும்புதல் என்ற அவருடைய புத்தகத்தில், எப்படி AfD இன் எழுச்சி திட்டமிட்ட முறையில், அரசியல்ரீதியாக உளவுத்துறை அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது என்பது பற்றி ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலர் கிறிஸ்டோப் வாண்ட்ரியர் (Christoph Vandreier ) விரிவாக  ஆராய்கிறார். இது நாஜி ஜேர்மனியின் வீழ்ச்சியின் பின்னர் பாசிசம் சுமார் 75 ஆண்டுகளில் மீண்டும் ஒருமுறை ஊடுருவியிருப்பதற்கான புத்திஜீவித சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

அதன் முதல் அத்தியாயத்தில், 2014 இன் ஆரம்பத்தில் Der Spiegel வாராந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருந்த "கடந்த காலத்தின் மாற்றங்கள்" எனும் ஒரு திட்டவட்டமான கட்டுரை, "ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள் வருகை" பற்றி  என்ன கூறுகிறது என்று வாண்ட்ரியர் குறிப்பிடுகிறார். ஜேர்மனியின் மிகப்பெரிய செய்தி பத்திரிகையின் துணை ஆசிரியர் தலைவராக பதவி உயர்வு பெற்ற டிர்க் கூர்ப்யூவைட் (Dirk Kurbjuweit) இக் கட்டுரையை எழுதினார். இருபதாம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை "திருத்தியமைக்க" இந்த கட்டுரை அழைப்புவிடுத்தது. இந்த "மாற்றத்தை" ஆதரிக்கும் முக்கிய சாட்சிகளில், வலது-சாரி ஹம்போல்ட் பல்கலைக் கழக வரலாற்றாசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி (Jörg Baberowski) மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் நன்கு அறியப்பட்ட நாஜி ஆதரவாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட்ட (Ernst Nolte) ஆகியோரை கூர்ப்யூவைட் மேற்கோளிட்டுள்ளார்.

ஏனைய விஷயங்களுடன், "வழமையாக இருப்பதை விட, போலந்து மற்றும் பிரித்தானியர்கள் வகித்த பாத்திரத்திற்கும் [இரண்டாம் உலகப் போரைத் தூண்டுவதற்கான பொறுப்பில்] அதிகமான கவனத்தை நாங்கள் செலுத்தவேண்டும்" என்று நான் உறுதியாக நம்புகிறேன் என நோல்ட்ட கூறுவதாக அவர் மேற்கோள்காட்டுகின்றார், "சில போல்ஷிவிக்குகள் (Bolsheviks) யூதர்களாக இருந்ததால் "குலாக் இல் [சோவியத் ஒன்றியத்தில் இருந்த கட்டாய உழைப்பு முகாம்கள்] அவர்களின் சொந்த பங்கிற்காக" நோல்ட்ட குற்றம் சாட்டினார். கூர்ப்யூவைட், நீண்டகாலமாக "யூத வெறுப்பாளர்கள்" பற்றி ஒரு விவாதம் இருந்தபோதிலும், "ஆனால் இந்த மனிதர் [நோல்ட்ட] கூறிய அனைத்தும் தவறானதல்ல" என்றார். பின்னர் அவர் நோல்ட்டவின் தீவிர ஆதரவாளரான பார்பெரோவ்ஸ்கி கூறிய "ஹிட்லர் ஒரு மனநோயாளி இல்லை, அவர் தீயவர் அல்ல, அவரது மேஜையில் யூதர்களை அழிப்பதை பற்றி அவர் பேச விரும்பவில்லை " என்ற கூற்றை மேற்கோள் காட்டினார்.

"பார்பெரோவ்ஸ்கியின் வரலாற்றை மூச்சடைக்குமளவிற்கு பொய்மைப்படுத்தல் மற்றும் மற்றும் நாஜி குற்றங்களை குறைமதிப்பீடு செய்வது என்பன கல்வி மற்றும் ஊடகங்களிலிருந்து எவ்வித எதிர்ப்பையும் சந்தித்ததில்லை" என்று ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்? எனும் புத்தகத்தில் வாண்ட்ரியர் எழுதினார். பின்னர் அவர் இதற்கான காரணங்களை விளக்கினார். ஜேர்மனியில் “புத்திஜீவித வாழ்வில் வலது நோக்கிய கூர்மையான  திருப்பத்தை" ஒரு சில பேராசிரியர்களின் முதுகெலும்பற்ற தன்மையினால் விளக்க முடியாது. இந்த அமைதியான நிலமைக்கு பின்னால் “ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புவது என்ற அடிப்படையான வெளிப்பாடுகள் காணப்படுகின்றன. வரலாற்றை பொய்மைப்படுத்தல் புதிய போர்களுக்கு அடித்தளத்தை தோற்றுவிக்கின்றது".

அரசியல் ஸ்தாபகம் அல்லது செய்தி ஊடகத்தில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லாத நிலையில், நாஜிக்களினால் பாதிக்கப்பட்டவர்களை, வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் நவ-நாஜிக்கள் கேலி செய்வது இப்போது சர்வசாதாரணமாக உள்ளது. ஜனவரி முடிவில், AfD பாராளுமன்ற துணைத் தலைவர் மார்க் ஜொன்ஹென் (Marc Jongen) யூதப்படுகொலையின் வருடாந்த பாராளுமன்ற நினைவு தினத்தை தொடர்ந்து, பாசிச உரையொன்றை வெளியிட்டார், அதில் அவர் நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டினார். அதற்கு முன்னர், பவேரிய மாநில பாராளுமன்றத்தில் AfD பிரதிநிதிகள் ஒரு யூதப்படுகொலை நினைவு நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அவுஸ்விட்ஸின் (Auschwitz) விடுதலையின் ஆண்டு விழாவில், போலந்து வலது-சாரி தீவிரவாதிகள் முன்னாள் சித்திரவதை முகாமினுள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதோடு, யூத-விரோத கோஷங்களைக் கூச்சலிட்டனர்.

1930 களில் இருந்ததை போல், பாசிசம் இன்னும் ஒரு பாரிய இயக்கம் அல்ல. ஆனால் உயர் இடங்களில் இருந்து கிடைக்கும் ஆதரவின் காரணமாக இது ஆபத்தானது. ஜேர்மனிய வரலாற்றின் மிக முக்கியமான பாடம், பாசிசம், யூத எதிர்ப்பு  மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை அவற்றின் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் இந்த காலாவதியான அமைப்பு முறையின் அனைத்து பாதுகாவலர்களுக்கும் எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். ஆகும். இதுவே ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) முன்னோக்கு ஆகும். தீவிர-வலதுசாரி அபாயத்திற்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் காட்டும் எதிர்ப்பை ஒரு சோசலிச முன்னோக்கை கொண்டு ஆயுதபாணியாக்க SGP ஐரோப்பிய தேர்தல்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது