ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European elections 2019

No to the EU, social inequality, fascism and war! For socialism and the unity of the European working class!

ஐரோப்பியத் தேர்தல் 2019

ஐரோப்பிய ஒன்றியம், சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் போர் வேண்டாம்!
சோசலிசத்திற்கும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும் ஆதரவளிப்போம்!

By the Sozialistische Gleichheitspartei (SGP)
23 November 2018

அக்டோபர் 20-21 இல் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) காங்கிரஸ் 2019 மே 26 அன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பியத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அத்துடன் தேசிய வேட்பாளர் பட்டியலுக்கான வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தது. காங்கிரசினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் தீர்மானம், SGP இன் இலக்குகளையும் பணிகளையும் விளக்குகிறது.

2019 மே தேர்தலில், அதிவலதுகளின் எழுச்சி, பெருகும் இராணுவவாதம், ஒரு போலிஸ் அரசின் கட்டியெழுப்பல் மற்றும் அதிகரித்துச் செல்லும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நாடு தழுவிய வேட்பாளர்கள் பட்டியலுடன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஐரோப்பியத் தேர்தலில் போட்டியிடும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரிவுகளுடன் இணைந்து, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதுமட்டுமே இக்கண்டம் மீண்டும் பாசிச காட்டுமிராண்டித்தனத்திற்குள்ளும் போருக்குள்ளும் மூழ்குவதை தடுப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வழி ஆகும்.

1. வலது-சாரி அபாயத்திற்கு எதிரான போராட்டம்

75 ஆண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அந்த சமயத்தில், 1945 இல், ஐரோப்பா முழுமையும் சின்னாபின்னமாகிக் கிடந்தது. கொலைக்களங்களிலும், நாஜி விசவாயு அறைகளிலும், மற்றும் குண்டுவீச்சுகளிலுமாய் 60 மில்லியனுக்கும் (60,000,000) அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தகைய குற்றங்கள் இனியொரு முறை எப்போதும் நடக்கக் கூடாது என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் முதலாளித்துவம் ஜனநாயகம், செழுமை அல்லது அமைதிக்கு இணக்கமற்றது என்பது இன்று முன்னெப்போதினும் மிகவும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் தலைமையில் ஒரு அதி-வலது ஜனாதிபதி நின்று கொண்டு வட கொரியா, ஈரான், அணு-ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை போரைக் கொண்டு அச்சுறுத்துகிறார். ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது கட்சிகள் மேலெழுச்சி காண்கின்றன. இத்தாலி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, பின்லாந்து, பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா மற்றும் கிரீஸ் ஆகிய ஒன்பது நாடுகளில் அவை அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ளன; பிரான்சில் இரண்டாவது வலிமைமிக்க கட்சியாக உள்ளது.

ஹிட்லரின் கீழ் உலக வரலாற்றின் மாபெரும் குற்றங்களை இழைத்த ஜேர்மனியிலும் கூட, நாஜிக்கள் மீண்டும் திரும்புகிறார்கள். நாஜிக்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு, ”ஆயிரக்கணக்கான ஆண்டுகளது வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில்” விழுந்த “பறவையெச்சம்” என்று மூடிமறைத்த அலெக்ஸாண்டர் கௌலாண்ட் தலைவராக இருக்கும் AfD, நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்ற முதல் வலது-சாரி தீவிரவாதக் கட்சியாக இருக்கிறது. செப்டம்பரின் முடிவின் சமயத்தில், ஆயிரக்கணக்கான ஒரு நவ-நாஜி கூட்டம், கெம்னிஸ்ட் நகரில் அட்டூழியங்களை நடத்தி, வெளிநாட்டினர் வெறுப்பு சுலோகங்களை முழங்கி, ஹிட்லர் வணக்கம் செய்து, ஒரு யூத உணவகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது.

1930களின் நாஜிக்கள் போலன்றி, இன்றைய பாசிஸ்டுகள் ஒரு பாரிய இயக்கமாக இல்லை. ஆனால் அதற்காக அவர்கள் முன்வைக்கும் ஆபத்து எவ்வகையிலும் குறைவானது என்று அர்த்தப்படவில்லை. 1933 ஜனவரியில், ஜனாதிபதி வொன் ஹின்டன்பேர்க் இனை சுற்றிய ஒரு சதி, ஹிட்லரை குடியரசின் சான்சலராக நியமனம் செய்த சமயத்தில், அவரது இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் முதலாளிகளும், பெரும் நிலச்சுவாந்தர்களும் இராணுவமும்  நின்றிருந்தனர். ஒழுங்கமைந்த தொழிலாள வர்க்கத்தை நாஜிக்கள் அடித்து நொருக்கி இரண்டாம் உலகப் போருக்கு தயாரிப்பு செய்ய வேண்டும் என்பது  இந்த சக்திகளுக்கு அவசியமாய் இருந்தது. இன்றைய வலது-சாரி தீவிரவாதிகள் தமது வலிமையை பிரதானமாக மேலிருந்து பெறுகின்றனர் —அரசு எந்திரம், உளவு சேவைகள் மற்றும் போலிசிடம் இருந்து மட்டுமன்றி, அரசாங்கத்திடம் இருந்தும் ஸ்தாபக கட்சிகளிடம் இருந்தும் பெறுகின்றனர். AfD இன் எழுச்சியானது அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்திலான ஒரு உண்மையான சதியின் விளைபொருளாக இருக்கிறது.

AfD இன் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக அரச பாதுகாப்பு எந்திரம் இருக்கிறது. உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் சீகோவரும் அப்போது  உள்நாட்டு உளவு முகமையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டரசாங்க அலுவலகம் (Verfassungsschutz) இன் தலைவராக இருந்த ஹான்ஸ்-கியோர்க் மாஸனும், கெம்னிட்ஸிலான நவ-நாஜி பேரணியை பகிரங்கமாக பாதுகாத்துப் பேசினர். அரசியயமைப்பு பாதுகாப்புக்கான கூட்டரசாங்க அலுவலகம், நவ-நாஜி சூழலுடன் நெருக்கமாக பிணைந்திருக்கிறது, அதனை உளவாளிகளின் உதவியுடன் கட்டுப்படுத்துகிறது மற்றும் நிதியாதாரம் அளிக்கிறது. AfD இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளில் பலர் ஒரு இராணுவ அல்லது போலிஸ் பின்புலத்தை கொண்டுள்ளனர்.

ஆயினும் AfDக்கான ஆதரவு இன்னும் ஆழமாய் செல்கிறது. ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியுமே சித்தாந்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அதன் மேலெழுச்சிக்கு பாதை திறந்து விட்டிருக்கின்றன. இந்த ஏனைய கட்சிகள் AfD ஐ திறந்த கரங்களுடன் வரவேற்றுள்ளன. அவை சட்ட விவகாரம், வரவு-செலவுத் திட்டம் மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று முக்கியமான குழுவிற்கான பாராளுமன்றத் தலைமையை அதனிடம் நம்பி ஒப்படைத்திருக்கின்றன. மகா கூட்டணியானது அகதிகள் தொடர்பான கொள்கையிலும் உள்நாட்டுப் பாதுகாப்பு விடயத்திலும் AfD இன் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. AfD வெறும் 12.6 சதவீத வாக்குகளையே பெற்ற போதிலும், அதுவே இப்போது கூட்டரசாங்க அரசியலின் தொனியை நிர்ணயிக்கின்ற இடத்தில் உள்ளது.

இதற்கான எதிர்ப்பு அதிகரித்து செல்கிறது. அக்டோபர் 13 அன்று பேர்லினில் நடந்த ஆர்ப்பாட்டம் ஜேர்மனி பாசிசத்திற்கும் இராணுவவாதத்திற்கும் திரும்புவதற்கு நிலவுகின்ற பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக, ஈராக் போருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் நடந்திருக்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். இனவாதம், AfD இன் மேலெழுச்சி மற்றும் கூட்டரசாங்கத்தின் மற்றும் ஸ்தாபக கட்சிகளின் வலது-சாரிக் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேர்லினில் கிட்டத்தட்ட கால் மில்லியன் மக்கள் பேரணியில் பங்குபெற்றனர். மற்ற ஜேர்மன் நகரங்களிலும், சமீப வாரங்களில் பத்தாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் பலமுறை இறங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) பகுப்பாய்வுகளையும் முன்னோக்குகளையும் ஊர்ஜிதம் செய்கின்றன. AfDயானது மக்களிடையே பரவலான வலது-சாரி மனோநிலை பரவுவதன் வெளிப்பாடு அல்ல; அது ஆளும் வர்க்கத்தினால் நனவுடன் ஊக்குவிக்கப்படுகிறது. பரவலான எதிர்ப்புக்கு எதிராக தனது சமூக-விரோத மற்றும் இராணுவவாதக் கொள்கைகளைத் திணிப்பதற்கு இதுவே இந்த வலதுசாரி தீவிரவாதக் கட்சிக்கு அவசியமாய் இருக்கிறது.

அரசியல் சீற்றமும் வெகுஜனப் போராட்டங்களும் முக்கியமானவை. ஆயினும், ஆளும் வர்க்கமானது, 1930களில் போலவே, பாசிச வழிவகைகளைக் கொண்டு தனது பிற்போக்குத்தனமான இலக்குகளைப் பின்பற்றுவதற்கு மறுபடியும் செல்வதில் இருந்து தடுப்பதற்கு அவை மட்டுமே போதுமானவையல்ல. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகும் பாரிய எதிர்ப்புக்கு ஆளும் வர்க்கம் அதிகரித்துச் செல்லும் மூர்க்கத்தனத்துடன் பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது: தனது அணிக்குள் நெருக்கத்தை பெருக்குகிறது, ஜனநாயக எதிர்ப்பை ஒடுக்குகிறது, மக்களுக்கு எதிரான அதன் அரசியல் சதிவேலைகளை தீவிரப்படுத்துகிறது.

போலிஸ் மற்றும் உளவு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவற்றின் கண்காணிப்பு அதிகாரங்கள் பாரிய அளவில் விரிவுபடுத்தப்படுகின்றன. வலைப்பின்னல் அமுலாக்கச் சட்டமானது சமூக வலைத் தளங்கள் உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய இல்லையேல் கடுமையான அபராதங்களுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கிறது. ஐரோப்பியத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “போலிச் செய்தி”களை அதாவது, உத்தியோகபூர்வ “விவரிப்பு”களுடன் (“NewSpeak”) முரண்படுகின்ற உண்மைகளை பரப்பும் கட்சிகள் மீது அரக்கத்தனமான அபராதங்களை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நோக்கம் கொண்டிருக்கிறது. இந்த தணிக்கையானது பிரதானமாக இடதுசாரி மற்றும் சோசலிச விமர்சனத்திற்கு எதிராக செலுத்தப்படுவதாகும். உலக சோசலிச வலைத் தளம் கூகுளின் தணிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்டது; விக்கிலீக்ஸ் அமெரிக்க அரசாங்கம் இழைத்த போர்க் குற்றங்களை வெளிக்கொணர்ந்த காரணத்தால் ஜூலியான் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்படும் அபாயத்திற்கும், இன்னும் மரண தண்டனையின் சாத்தியத்திற்கும் கூட முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பேர்லினில் ஒரு வெளிப்படையான வலது-சாரி தீவிரவாத அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக அரசியல், ஊடகங்கள், உளவு சேவைகள் மற்றும் இராணுவத்தில் உள்ள செல்வாக்கான வட்டாரங்கள் திரைமறைவில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. AfD நாடாளுமன்றத்தில் நுழைகின்றதையடுத்து, “ஏதோவொன்று நல்லதற்காக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது” என்று நாடாளுமன்றத்தின் தலைவரான வொல்வ்காங் ஷொய்பிள Bild am Sonntag பத்திரிகையிடம் கூறினார். “அரசாங்கத்தில் AfDயின் சொல்லுக்கு மதிப்பிருக்க வேண்டும்” என்று Spiegel இன் பத்தியாளரான ஜாக்கோப் அவுக்ஸ்ரைன் கோரினார்.

பாசிசம், இராணுவவாதம் மற்றும் போர் மீண்டும் திரும்புவதற்கு எதிரான தனது போராட்டத்தில், SGP வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியை  அடித்தளமாகக் கொள்கிறது. உலகெங்கும் ஆளும் வர்க்கம் கூர்மையாக வலது நோக்கி நகர்கையில், தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரும்பான்மை இடது நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதுடன் சமூக ஜனநாயகக் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் அதன்மீது திணிக்கப்பட்டிருந்த அரசியல் தளைகளையும் உதறியெறியத் தொடங்குகிறது. அதிகரித்துச் செல்லும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும், சோசலிசத்தில் ஆர்வம் வளர்ந்து செல்வதிலும் இது பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவில், அவர்களது வலதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஆசிரியர்கள், UPS தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின்  வேலைநிறுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் சென்ற ஆண்டில் ஏராளமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன, றையன் ஏர், லுப்தான்ஸா, ஏர் பிரான்ஸ் மற்றும் அமசன் வேலைநிறுத்தங்கள், பிரான்சில் தொழிலாளர் சந்தை சீர்திருத்தத்திற்கு எதிரான, கிரீசில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான, மற்றும் ஜேர்மன் உலோகத் தயாரிப்பு துறையிலும் பொதுத் துறையிலும் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் ஆகியவை அவற்றில் பெயர் குறிப்பிடத்தக்க சிலவாகும்.

வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலானது SGPயின் மீது பிரம்மாண்டமான பொறுப்புகளை சுமத்துகிறது. “ஆளும் வர்க்கத்தை போருக்கு உந்தித்தள்ளுகின்ற அதே காரணிகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகளையும் உருவாக்குகின்றன” என்று ‘ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்’ என்ற 2014 செப்டம்பர் தீர்மானத்தில் SGP அறிவித்தது. அது வலியுறுத்தியது: “ஆனால் சோசலிசப் புரட்சி என்பது சுயமாகவே நிகழ்க்கூடிய ஒரு நிகழ்ச்சிப்போக்கல்ல. அதன் வேகம் மற்றும் வெற்றி மீதான முடிவுகள் அரசியல் வட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரையொட்டி ட்ரொட்ஸ்கி எழுதியவாறாக, மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகின்றது. இந்த நெருக்கடிக்கான தீர்வு நமது கட்சியின் முடிவுகள், நடவடிக்கைகள் மற்றும் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது.”

2. முதலாளித்துவத்தின் திவால்நிலை

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை அதன் வரலாற்றுக் கடமைகளின் மட்டத்திற்கு உயர்த்துவதற்காக SGP போராடுகிறது. இதற்கு, எல்லாவற்றுக்கும் முதலில், வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்கள் குறித்தும் இப்போதைய புறநிலை நெருக்கடி குறித்துமான ஒரு தெளிவான புரிதல் அவசியமாய் உள்ளது. இராணுவவாதத்தின் மீள்வருகையும் அதி-வலது கட்சிகளது எழுச்சியும் சர்வதேச நிகழ்வுப்போக்காகும். அவை முதலாளித்துவத்தின் உலக நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்வினைகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியை மனித வரலாற்றில் மிக மோதல்-நிரம்பிய வன்முறையான சகாப்தமாக ஆக்கிய பிரச்சினைகளில் எதுவொன்றும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. தற்காலிகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அவை, இப்போது இரட்டிப்பான சக்தியுடன் மேலெழுகின்றன.

முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் சர்வதேச முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து தவிர்க்கமுடியாது எழுந்தவையாகும். “தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர்களது உற்பத்தித்திறனது தற்போதைய மட்டத்தைக் கொண்டு, மனிதகுலம் அனைத்தின் சடத்துவ மற்றும் ஆன்ம அபிவிருத்திக்குப் போதுமான நிலைமைகளை உருவாக்குவது மிக சாத்தியமானது” என்று நான்காம் அகிலம் ஏகாதிபத்தியப் போர் குறித்த அதன் 1940 அறிக்கையில் அறிவித்தது. ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் நமது ஒட்டுமொத்த பூமியிலுமான பொருளாதார வாழ்க்கையை ஒரு பொதுவான திட்டத்தின்படி சரியாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், மற்றும் பகுத்தறிவுரீதியாகவும் ஒழுங்கமைப்பது மட்டுமே அதற்கு அவசியமானதாய் இருக்கும். ஆயினும், சமூகத்தின் பிரதான உற்பத்தி சக்திகள், அதாவது தனித்தனியான முதலாளித்துவ கூட்டங்களின் கைகளில் இருக்கும் வரையில், தேசிய அரசானது இந்த கூட்டங்களின் கரங்களில் ஒரு எடுத்தாளப்படும் கருவியாக இருக்கின்ற வரையில், சந்தைகளுக்கும், கச்சாப் பொருட்களுக்கான வளங்களுக்கும், உலகின் மேலாதிக்கத்திற்குமான மோதலானது, மேலும் மேலும் அதிகமாய் ஒரு அழிவுகரமான தன்மையைப் பெறுவது தவிர்க்கவியலாததாகும்.”

உலகை வெல்வதற்கான ஹிட்லரின் திட்டங்கள் ஒரு மனநிலை பிறழ்ந்ததன் அகநிலை விளைபொருளாக இருந்தவையன்று, மாறாக விரிவாக்கம் காண்பதற்கும் உள்நாட்டில் வெடிப்பான வர்க்கப் பதட்டங்களை ஒடுக்குவதற்கும் ஐரோப்பாவை கீழ்ப்படுத்தி கிழக்கில் தனக்கான  “வாழ்விடத்தை” வெற்றி காண வேண்டியதிருந்த ஜேர்மன் மூலதனத்தின் புறநிலை நலன்களது வெளிப்பாடாக அவை இருந்தன. ஆகவே ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் ஹிட்லரை ஆதரித்தது அவரை அதிகாரத்தில் அமர்த்தியது. இப்போது அதனுடன் சேர்த்து ஏனைய ஏகாதிபத்திய சக்திகளது ஆளும் வர்க்கங்களும் அதே வழிமுறைகளுக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜேர்மன் முதலாளித்துவம் தற்காலிகமாக, கொரியா மற்றும் வியட்நாமில் அமெரிக்கா செய்ததைப் போன்று இழிவார்ந்த போர்கள் இல்லாமலேயே, ஐரோப்பா முழுமையாகவும் உலகம் முழுமையாகவும் விரிவாக்கம் காணமுடிந்தது. தனது போர் எதிரியை மீண்டும் அதன் கால்களில் நிற்கச் செய்வதென்பது மேற்கு ஐரோப்பாவை அமைதிப்படுத்தவும், பனிப் போரில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஒரு அரணாக சேவைசெய்யவும், தனது சொந்த ஏற்றுமதிகளுக்கு ஒரு சந்தையை வழங்குவதற்குமாய் தனது நலன்களுக்கு அவசியமாய் இருந்ததாக வாஷிங்டன் கணக்குப் போட்டது. அதேநேரத்தில், ஜேர்மனியை மீண்டும் ஆயுதபாணியாக்குவதற்கு அமெரிக்கா தயங்கியது. ஜேர்மனி ஒரு பெரும் பிராந்திய பாதுகாப்பு இராணுவத்தை பராமரித்து வந்த போதும், அதனிடம் ஒரு உலக இராணுவ சக்தியாக செயல்படுவதற்கு அத்தியாவசியமானதாக இருக்கும் அணு ஆயுதங்கள் இருக்கவில்லை, விமானந்தாங்கி கப்பல்கள் இருக்கவில்லை, அல்லது தனது சொந்த நெடுந்தூர குண்டுவீச்சு ஏவுகணைகள் இருக்கவில்லை.

ஜேர்மன் மறுஇணைவுக்கும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது. இது ஜனநாயகம் மற்றும் அமைதியின் ஒரு புதிய சகாப்தத்தை தொடக்கி வைக்கவில்லை, மாறாக ஐரோப்பாவின் உள்முக சமநிலையை அழித்து, ஏகாதிபத்திய மோதல்கள் மற்றும் போர்களின் ஒரு புதிய சகாப்தத்திற்கு கட்டியம் கூறியது.

சோவியத் ஒன்றியத்தின் முடிவை அமெரிக்கா, வரைமுறையின்றி தனது இராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலமாக தனது உலக மேலாதிக்கம் தேய்ந்து செல்வதை தடுத்துநிறுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாகக் கண்டது. அது ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஏமனில் குற்றம்மிக்க போர்களை நடத்தியிருக்கிறது, இந்த இலக்கை பின்தொடர்வதில் ஈரானையும் போர் கொண்டு அச்சுறுத்துகிறது. இந்த மோதல்கள் கச்சாப் பொருட்கள், சந்தைகள் மற்றும் மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்தியப் போர்களாகும். பெரும் சக்திகளுக்கு இடையிலான போர் தயாரிப்பு தான் அமெரிக்க இராணுவத் திட்டமிடலின் மையத்தில் இருப்பதாக புதிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மூலோபாயம் (National Security Strategy - NSS) பட்டவர்த்தனமாக அறிவிக்கிறது. “அமெரிக்க தேசிய பாதுகாப்பின் மையக் கவனத்தில் இருப்பது பயங்கரவாதமல்ல, மாறாக பெரும் சக்திகளிடையேயான போட்டியே” என்று பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் 2017 டிசம்பரில் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தை முன்வைக்கையில் தெரிவித்தார். இது சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக மட்டும் செலுத்தப்படுவதல்ல, மாறாக ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற முன்னாள் “கூட்டாளி”களுக்கு எதிராகவும் செலுத்தப்படுவதாகும்.

3. ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக

ஐரோப்பிய ஒன்றியம் “ஐரோப்பிய ஒற்றுமை”யை உருவடிவப்படுத்தவில்லை. இது ஐரோப்பா மீதான மேலாதிக்கத்திற்கான யுத்தம் நடைபெறும் ஒரு போர்க்களமாக இருக்கிறது. ஒரு ஒற்றை சந்தையை, ஒரு பொதுவான நாணயத்தை, மற்றும் புரூசெல்ஸில் ஒரு பிரம்மாண்டமான அதிகாரத்துவத்தை கொண்டுவருவதன் மூலமாக, கண்டம் 50 போட்டி தேசிய அரசுகளாக பிளவுபட்டுக் கிடப்பதை வென்று விடலாம் என்றும், வாழ்க்கை நிலைமைகளை சமநிலைப்படுத்தி அமைதியைக் கொண்டுவரலாம் என்றுமான கூற்றுக்கள் ஒரு அரசியல் மோசடியாக நிரூபணமாகியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமானது அது வெற்றிகாண்பதாக கூறிக்கொள்ளும் மையவிலக்கு சக்திகளை வலுப்படுத்தவே செய்கிறது.

மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ நலன்களின் ஒரு கருவியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாத்திரமானது, 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர், மிக அதிகமான அளவில் அம்பலப்பட்டிருக்கிறது. சர்வதேச வங்கிகளின் இலாபங்களை உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்காக, கிரீசில் அது கட்டளையிட்ட ஒரு சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டம் அம்மக்களை கடுமையான வறுமைக்குள் மூழ்கடித்தது. கிரீசுக்கு கடன்கொடுத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக, அந்நாட்டில் ஓய்வூதியங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் பொது முதலீட்டின் மீதான செலவினங்கள் வெட்டப்பட்டன. பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 180 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. கிரீஸ் இந்த கடன்களை திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் 42 ஆண்டுகள் பிடிக்கும். அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஏனைய நாடுகளையும் இதே போன்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு கடமைப்பட்டவையானதாக புரூசெல்ஸ் ஆக்கியிருக்கிறது.

யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திலும் வேறெந்த நாட்டையும் விட அதிகமாய் பொருளாதாரரீதியாக ஆதாயமடைந்த ஜேர்மனி, அதன் நிதி மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை மற்ற ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் கூட்டரசாங்கத்திற்கு ஆலோசனை வளங்கும் ஹேர்ஃபிரிட் முங்க்லர், ஜேர்மனி ஐரோப்பாவின் “மேலாதிக்க சக்தி”யாகவும் “ஒழுங்குபடுத்துநராக”வும் ஆவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார். இதன் மூலமாக, ஆளும் வர்க்கமானது ஜேர்மன் கைய்சர் மற்றும் ஹிட்லரின் ஜேர்மன்-ஐரோப்பிய சக்தி அரசியலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. “ஜேர்மனியின் தேசிய நலனுக்கு ஒரு பெயர் இருக்கிறது: அது ஐரோப்பா” என்பதுதான் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான வெளியுறவுத்துறை அமைச்சின் சுலோகமாய் இருக்கிறது.

ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் சமூக-ஜனநாயக, பசுமைக் கட்சி மற்றும் போலி-இடது கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கின்ற நிலையில், புரூசெல்ஸிற்கான பரந்த மக்கள் எதிர்ப்பில் இருந்து வலது-சாரி தேசியவாதக் கட்சிகள் ஆதாயமடைந்திருக்கின்றன. பிரிட்டனில், பெரும்பான்மையினர் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாய் வாக்களித்தனர். ஆளும் வர்க்கத்தில் இப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்னும் தொடர்ந்து அங்கத்துவமாக இருக்க வேண்டும் என்ற புரூசெல்ஸின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு ஆதரவான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற வலது-சாரி, ஐரோப்பிய ஒன்றிய-விரோத தேசியவாதிகள் ஆகிய இரண்டு பிற்போக்கு முகாம்களுக்கு இடையில் ஒரு கடுமையான சண்டை பேரிரைச்சலுடன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி பிரெக்ஸிட் கருத்துவாக்கெடுப்பில் இந்த இரண்டு பிற்போக்கு முகாம்களுக்குமே ஆதரவளிக்க மறுத்தது, பதிலாக ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு அது அழைப்புவிடுத்தது. “தொடர வேண்டும் விலக வேண்டும் ஆகிய இரண்டு பிரச்சாரங்களின் தலைமையிலுமே இன்னுமதிக சிக்கன நடவடிக்கைகள், கொடூரமான புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களது உரிமைகள் அழிப்பு ஆகியவற்றுக்காய் நிற்கும் தாட்சரிச சக்திகள் தான் இருக்கின்றன” என்று அது அறிவித்தது. “பொருளாதார மந்தநிலை மற்றும் இராணுவவாதத்தின் தீவிரப்படல் மற்றும் போர் ஆகிய நிலைமைகளின் கீழ் ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டிநாடுகளுக்கு எதிராக பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நலன்களை எந்த முறையில் சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என்பதில் தான் அவற்றுக்கு இடையிலான பேதங்கள் இருக்கின்றன. ஒரு புறக்கணிப்பானது இந்த சக்திகளுக்கு எதிராய் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு களம் தயாரித்தளிக்கிறது. இந்த கருத்துவாக்கெடுப்பானது பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆழமடைந்து செல்லும் தமது இருப்பிற்கான நெருக்கடியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே என்பதை அம்பலப்படுத்துகின்ற தொழிலாள வர்க்கத்தின் கண்டம் முழுமையிலான ஒரு பதில்தாக்குதலின் பகுதியாக அத்தகையதொரு இயக்கம் அபிவிருத்தி கண்டாக வேண்டும்.”

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதறுபடல் துரிதமாக முன்னேறி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இத்தாலி, போலந்து மற்றும் ஹங்கேரியில் உள்ள தேசியவாத அரசாங்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. என்றபோதும், எல்லைகளை மூடுவதிலும், ஒரு போலிஸ் அரசைக் கட்டியெழுப்புவதிலும் மற்றும் சமூகப் போராட்டங்களையும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதிலும் ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக உடன்படுகிறது. ஐரோப்பா முழுவதையும் ஒரு போலிஸ் மற்றும் கண்காணிப்பு அரசாக மாற்றுவதிலும் இணையத்தை தணிக்கை செய்வதிலும் புரூசெல்ஸ் ஒரு தலைமையான பாத்திரம் வகிக்கிறது. ஆயிரக்கணக்கான அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறக்கின்றனர் ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மறுக்கிறது, அத்துடன் மீட்புக் கப்பல்களின் சிப்பந்திகளை குற்றவாளிகளைப் போல துன்புறுத்துகிறது. அகதிகளை முகாம்களில் அடைக்க அது சர்வாதிகாரிகளுக்கும் குற்றவியல் குண்டர் கூட்டங்களுக்கும் பணம் கொடுக்கிறது, அங்கு அகதிகள் அடிமைகள் போல் சிறைப்படுகிறார்கள், சித்திரவதைக்கு ஆளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

நேட்டோ போலன்றி, அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்டும் அதற்கு எதிராகவும் செயல்படத்தக்க ஒரு இராணுவக் கூட்டணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றுவதற்கான திட்டங்கள் மிக முன்னேறிய கட்டத்தில் உள்ளன. குறிப்பாக பேர்லினும் பாரிசும் இதுவிடயத்தில் நெருக்கமாய் கூடி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயினும் நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்ந்தும் ஒரு முட்டுக்கட்டையான நிலைக்கு மீண்டும் மீண்டும் வந்து சேர்கிறது, ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களின் மூலோபாய நலன்கள் மோதலுக்குள்ளாவதே இதன் காரணமாகும். பிரெக்ஸிட் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருத்தல் நெருக்கடியையும் ஐரோப்பிய சக்திகளிடையேயான பதட்டங்களையும் மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானாலும் சரி ஐரோப்பாவின் அத்தனை ஆளும் கட்சிகளானாலும், கிரீசின் போலி-இடது சிரிசா கட்சி தொடங்கி ஜேர்மனியில் மகா கூட்டணி மற்றும் இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வெளிப்பட்ட வலது-சாரி தீவிரவாத அரசாங்கங்கள் வரை அனைத்துமே சிக்கன நடவடிக்கைகளையும், இராணுவவாதத்தையும் மற்றும் அகதிகள்-விரோத பயங்கரத்தையும் நெருக்கி முன்தள்ளிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் புரட்சிகரக் கடமைகளுக்கு முகம்கொடுத்திருக்கின்றனர் என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தை பண்படுத்த முடியாது. அது தூக்கிவீசப்பட்டு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தால் பிரதியிடப்பட்டாக வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தையும் அத்துடன் ஐரோப்பிய தேசிய அரசுகளை வலுப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் SGP நிராகரிக்கிறது. பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பிரான்சில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக அது போராடுகிறது. ஐரோப்பா தேசியவாதத்திற்குள்ளும் போருக்குள்ளும் மீண்டும் மூழ்குவதை தடுப்பதற்கும், இக்கண்டத்தை அதன் மக்களின் மிகப் பெருவாரியானோரது நலன்களின் பேரில் ஐக்கியப்படுத்துவதற்கும் இது மட்டுமே ஒரேவழியாகும்.

4. ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை

ஐரோப்பாவில் அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் மேலாதிக்கம் செய்வதற்கும் ஜேர்மனியை மற்ற பெரும் வல்லரசுகளுடன் மோதும் திறன் கொண்ட ஒரு மூர்க்கமான வல்லரசாக மீளக்கட்டியெழுப்புவதற்குமான முடிவு பேர்லினில் வெகுகாலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டு விட்டிருந்தது. 2013 மற்றும் 2017 கூட்டரசாங்கத் தேர்தல்களுக்குப் பின்னர் பல மாதங்கள் நடந்த அரசாங்கக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளின் மையத்தானமாக இந்தப் பிரச்சினையே இருந்தது.

2013 இல், CDU, CSU மற்றும் SPD இராணுவரீதியான ஒதுங்கியிருப்பை முடிவுக்குக் கொண்டுவர உடன்பட்டன. ரஷ்ய எல்லையில் ஜேர்மன் துருப்புகளை நிறுத்துவது, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் நடவடிக்கைகளை நீட்டிப்பது மற்றும் ஈராக், மாலி மற்றும் பிறவெங்கிலும் புதிய இராணுவ நடவடிக்கைகளை தொடக்குவது என அந்த முடிவை அரசாங்க நடைமுறையிலும் கொண்டுவந்தன. 2018 இல் “‘ஐரோப்பிய இராணுவம்’ ஒன்றை அமைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு” அவை முடிவு செய்து, இராணுவத்திற்கான செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பை அறிவித்தன. நேட்டோவின் இலக்கான 2 சதவீதத்தை அடைவதற்காக, இந்த செலவினம் இரட்டிப்பாக்கப்பட்டு 70 பில்லியன் யூரோக்களாக உயரும். ஏனைய துறைகளுக்கான செலவுகளில் செய்யப்படும் வெட்டுக்களால் மிச்சம்பிடிக்கப்படும் ஒவ்வொரு இரண்டாவது யூரோவும் இராணுவத்திற்கு பாயும்.

இரண்டு உலகப் போர்களில் பேரழிவுகரமான தோல்விகளைப் பெற்றதற்குப் பின்னர், ஜேர்மன் இராணுவம் மறுபடியும் பெரும் அளவிலான போர் நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதையே பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய “இராணுவம் குறித்த கருத்தாக்கம்” தெளிவாக்குகிறது. “ஒரு கலப்பு மோதல் அதன் அத்தனை விளைவுகளது முழு வீச்சுகளிலும், ஒரு கூட்டான, பல-தேச இராணுவப் படையிலான அதன் அத்தனை பரிமாணங்களிலும், மற்றும் அனைத்து வகை நடவடிக்கைகளிலுமாய் அபிவிருத்திகாண்கின்றதும் தீவிரப்படுகின்றதுமான நிலைமைகளின் கீழ் செயல்படுவதற்கு” இராணுவம் தயாரிப்பு செய்யப்பட வேண்டும்.” மின்னல்வேகத் தாக்குதல்கள் மற்றும் பாரிய பலி எண்ணிக்கைகளுக்கு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. “ஒரு மிகப்பெரிய, மிகத் தீவிரமான நடவடிக்கையின் தொடக்கத்தில், ஆயத்தமாய் இருக்கத்தக்க படைகள் மற்றும் சாதனங்களின் ஒரு பெரும் அளவிலான நிலைநிறுத்தல் அவசியமாகும்” என்று அந்த ஆய்வறிக்கை அறிவிக்கிறது. “ஆட்களையும் பொருட்களையும் புத்துயிர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.”

1945க்கு முன்னால் பிறந்து போரின் பயங்கரங்களை நினைவில் தாங்கியபடி பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் உயிர்வாழ்ந்து வரும் ஒரு நாட்டில், “மீண்டும் போர் எப்போதுமே வேண்டாம்” என்ற சுலோகம் பள்ளிப்பாடங்களில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக நீண்டகாலமாக இருந்து வருகிறதொரு நாட்டில், இராணுவவாதத்திற்கு திரும்புவது பாரிய எதிர்ப்பைத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

உத்தியோகபூர்வ கொள்கை ஒரு சதியின் வடிவத்தை எடுப்பதற்கும், AfD ஊக்குவிக்கப்படுவதற்கும், வரலாறு பொய்மைப்படுத்துவதற்கும் இதுவே காரணமாகும். இராணுவவாதத்தின் செலவுகள் சுமத்தப்படவிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதும் அதன்மீது மேலதிக தாக்குதல்கள் நடத்துவதும் இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கும் போரின் முன்னேறிய தயாரிப்புகளுக்கும் அவசியமாயிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் உருக்குலைவு சர்வதேச அளவில் உணரப்படக் கூடியதாக உள்ளது.

ஜேர்மனியில், பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்குமான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். AfD இன் நெருக்கமான ஒத்துழைப்புடன், அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் (Verfassungsschutz) உள்நாட்டு உளவு முகமை தயாரித்திருக்கும் சமீபத்திய அறிக்கையில் இருந்து கிடைக்க பெறும் முடிவு இதுவேயாகும். முதலாளித்துவத்தை நிராகரித்து, அந்த அறிக்கையின் வார்த்தைகளில் கூறுவதானால், “சமூக அநீதி, வீட்டுவசதி ‘அழிப்பு’, போர்கள், வலது-சாரி தீவிரவாதம் மற்றும் இனவாதம் அத்துடன் சுற்றுச்சூழல் பேரழிவுகள் போன்ற சமூக மற்றும் அரசியல் துன்பங்களுக்கான” காரணகர்த்தாவாக அதனை கூண்டில் நிறுத்துகின்ற எவரொருவரையும் “இடது-சாரி தீவிரவாதி” என்று அது கண்டனம் செய்கிறது.

குறிப்பாக, சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அதன் நோக்கங்களை சட்டரீதியான வழிமுறைகளின் மூலமாக மட்டுமே பின்தொடர்கிறது என்பதையும் எந்தவிதமான வன்முறை அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளையும் அது மேற்கொள்வதில்லை என்பதையும் ஒப்புக்கொள்கின்றபோதும், அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம், அதனை ஒரு “இடது-சாரி தீவிரவாதக் கட்சி” என்றே வெளிப்படையாகப் பட்டியலிடுகிறது. SGP மட்டுமே வரலாற்றின் பொய்மைப்படுத்தலுக்கும் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கும் எதிராக முறைப்படி போராடுகின்ற, அத்துடன் முதலாளித்துவ ஸ்தாபகத்தின் பகுதியாக இல்லாத ஒரேயொரு கட்சியாக இருக்கிறது என்ற காரணத்தால், மகா கூட்டணி அரசாங்கமும், பாதுகாப்பு அதிகாரிகளும் அவர்களது வலது-சாரி தீவிரக்கட்சிக் கூட்டாளிகளும் SGPக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். “நிலவும் அரசுக்கும் சமூக ஒழுங்குக்கும் —இது ஒரேயடியாய் ‘முதலாளித்துவம்’ எனக் கூறி சிறுமைப்படுத்தப்படுகிறது— எதிரான, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான, தேசியவாதம், ஏகாதிபத்தியம், மற்றும் இராணுவவாதம் என்று சொல்லப்படுவனவற்றுக்கு எதிரான, அத்துடன் சமூக ஜனநாயகம், தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிக்கும் எதிரான” ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அது முன்னெடுக்கின்ற காரணத்தால் அது கண்காணிப்பின் கீழ் இருப்பதாக அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் எழுதுகிறது. SGP மற்றும் ICFI இன் வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்குகள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த பதிலிறுப்பைக் கண்டுவிடும் என்பதும், மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு சடத்துவ சக்தியாக மாறிவிடும் என்பதுமே ஆளும் வர்க்கத்தின் அச்சமாகும்.

வரலாற்றின் திருத்தலையும் நாஜிக்களை புனருத்தானம் செய்வதை எதிர்த்தமைக்காவும், அதி-வலது வரலாற்றாசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை விமர்சித்தது என்ற காரணத்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஊடகங்கள் SGP ஐ கண்டனம் செய்து ஒரு பிரச்சாரம் நடத்தின. பார்பெரோவ்ஸ்கி Spiegel இல் நாஜி வக்காலத்துவாதியான ஏர்ன்ஸ்ட் நோல்ட வை பாதுகாத்து பேசியிருந்ததோடு ஹிட்லர் “கொடியவர் அல்ல” என்று பகிரங்கமாக சான்றிதழ் வழங்கியிருந்தார். SGP இந்த நிலைப்பாட்டை ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையுடன் தொடர்புபடுத்திக் காட்டியது. “இருபதாம் நூற்றாண்டு குறித்த ஒரு புதிய விவரிப்பை....ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை குறைத்து மதிப்பிட்டு நியாயப்படுத்துகிறதுமான வரலாற்றின் ஒரு பொய்மைப்படுத்தலை அபிவிருத்தி செய்யாமல்” ஜேர்மனி இராணுவவாதத்திற்கு மீண்டும் திரும்ப இயலாது என்று SGP அறிவித்தது.

பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஏனைய வலது-சாரி பேராசிரியர்கள் மீதான விமர்சனத்திற்கு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சக்திவாய்ந்த ஆதரவு கிட்டியது. ஆளும் வட்டாரங்கள் உஷார்படுத்தப்பட்டன. Frankfurter Allgemeine Zeitung, SGP மீது “அச்சுறுத்துவதாக” குற்றம்சாட்டியது, அதன் “விளைவுஏற்படுத்தும் தன்மை” குறித்தும் புகாரிட்டது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தலைமை பார்பெரோவ்ஸ்கியை பாதுகாத்ததோடு இந்த வலது-சாரி தீவிரவாதப் பேராசிரியரின் மீதான விமர்சனத்தை “அனுமதிக்க முடியாது” என்றும் அறிவித்தது. இப்போது ஒன்றரை ஆண்டுகளாக, கூகுள், ஜேர்மன் அரசாங்க வட்டாரங்களுடன் நெருக்கமாய் செயற்பட்டு, உலக சோசலிச வலைத் தளம் உள்ளிட்ட இடது-சாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை தணிக்கை செய்து வருகிறது.

அவர்கள் ஏன் மீண்டும் திரும்பிவந்துள்ளனர்? (Warum sind sie wieder da?) என்ற புத்தகம் ஜேர்மனியில் பாசிசம், இராணுவவாதம் மற்றும் எதேச்சாதிகாரவாதம் ஆகியவற்றின் மீள்வருகைக்கு எதிரான SGP இன் போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது, அதனை மேலதிகமாய் அபிவிருத்தி செய்கிறது. “இந்தப் புத்தகம் ஒரு நடுநிலை பார்வையாளரின் கோணத்தில் இருந்து எழுதப்பட்டதல்ல, மாறாக இராணுவவாதம் மற்றும் பாசிசம் மீண்டும் திரும்புவதற்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாய் உள்ளது. இந்த முறை ஒரு பேரழிவு நிகழ்ந்ததற்குப் பின்னர் அல்லாமல், முன்னரே நூரெம்பேர்க் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இது உதவியாக இருக்கும்” என்று SGP இன் துணைத் தலைவரும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியருமான கிறிஸ்ரோப் வான்ட்ரையர் புத்தகத்தின் முகவுரையில் விளக்குகிறார்.

5. SPD, இடது கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பாத்திரம்

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையும் அதி வலதுகளின் வலுப்படலும் SPD, இடது கட்சி, பசுமைக் கட்சி, மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஆதரவின்றி சாத்தியமாகியிருக்க முடியாது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, SPD, ஃபிரெடரிக் ஏபேர்ட், பிலிப் ஷெய்டமான் மற்றும் குஸ்ராவ் நொஸ்க ஆகியோரின் கீழ், 1918-19 நவம்பர் புரட்சியைத் தோற்கடிப்பதற்கும் ரோஸா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் போன்ற புரட்சிகர சோசலிஸ்டுகளைப் படுகொலை செய்வதற்கும் இராணுவத்தில் இருந்த மிகப் பிற்போக்கான சக்திகளுடன் கூட்டுசேர்ந்தது. சமூக ஜனநாயகக் கட்சி இன்றும் அதே கொள்கையைத்தான் தொடர்ந்து வருகிறது. ஆயினும், 100 வருடங்களுக்கு முன்பு போலன்றி, இப்போது தொழிலாள வர்க்கத்துடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை. வங்கிகள், பெரும் பெருநிறுவனங்கள், இரகசிய சேவைகள் மற்றும் இராணுவத்தின் (Bundeswehr) நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வலது-சாரி அரசுக் கட்சியாக அது இருக்கிறது.

அதன் போர்க் கொள்கை மற்றும் 2010 சமூக-விரோத திட்டநிரல் —இது மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் மூழ்கடித்ததோடு ஐரோப்பாவில் மிகப்பெரும் மலிவு ஊதியத் துறையை ஏற்படுத்தியிருக்கிறது— காரணமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் அது மிகவும் வெறுக்கப்படுகிறது. அதன் சமீபத்திய தேர்தல் படுதோல்விகளுக்கு SPD, சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் (CDU) கூட்டணியைத் தொடர்வதன் மூலமாகவும், திரைமறைவில் அதி-வலது சக்திகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன் மூலமாகவும் எதிர்வினையாற்றியிருக்கிறது. உதாரணமாக, AfD அரசியல்வாதியான ஸ்டீபன் பிராண்ட்னர் நாடாளுமன்றத்தின் சட்ட விவகாரங்கள் குழுவின் தலைவராக பெற்றுள்ள பதவிக்கு நாடாளுமன்ற சமூக ஜனநாயகக் கட்சித் துணைத் தலைவராக இருக்கும் தோமஸ் ஓப்பர்மானுக்கே நன்றிக்கடன் பட்டுள்ளார். அவரே பிராண்ட்னரை இந்தப் பதவிக்கு முன்மொழிந்தார்.

பேர்லினில் இருக்கும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், தலைவராக இருக்கும் சபின குன்ஸ்ட் (SPD) AfD இன் ஒத்துழைப்புடன் அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் (Verfassungsschutz) வகுத்திருக்கும் கொள்கையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார். பேர்லின் AfD பிரதிநிதியான மார்ட்டின் ட்ரெஃப்ஸரிடம் விசாரித்த பின்னர், குன்ஸ்ட் ஜூலை இறுதியில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பேச்சாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் முழுப் பெயர்களைப் பெறுவதற்கான ஒரு மனுவை அனுப்பினார். இந்தப் பட்டியல் அதி-வலது வட்டாரங்கள் இடது-சாரி மாணவர்களை அடையாளம் கண்டு, அச்சுறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிப்பதாக அமையும். இந்த மாணவர் அமைப்பின் மத்தியில் பெருகும் எதிர்ப்பிலிருந்து வலது-சாரி தீவிரவாதப் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியை பாதுகாப்பதே குன்ஸ்ட்டின் பிரதான நோக்கமாக உள்ளது.

பசுமைக் கட்சியினர் கடந்த இருபது ஆண்டுகளில் ஜேர்மன் இராணுவ நடவடிக்கைகளது மிக செயலூக்கமான ஆதரவாளர்களில் சிலராக இருந்து வந்திருக்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவர்கள் யூகோஸ்லாவியாவில் இராணுவத்தின் முதல் போர் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தினர். உள்நாட்டுக்கொள்கை மற்றும் அகதிகள் கொள்கையில் அவர்கள் மேலும் வலதுசாரி நிலைப்பாட்டில் இருக்கின்றனர். SPD, CDU, FDP அல்லது இடது கட்சியுடன் சேர்ந்து ஜேர்மன் அரசை அவர்கள் ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு முறையும் அவர்கள் பாதுகாப்புப் படைகளை மறுஆயுதபாணியாக்குகின்றனர், அகதிகளை மிருகத்தனமாக திருப்பியனுப்புகின்றனர். இப்போது CDU தான் அவர்களுக்குப் பிடித்தமான கூட்டணிப் பங்காளியாக உள்ளது. பவேரிய மாநிலத் தேர்தல்களுக்குப் பின்னர், கெம்னிட்ஸில் நவ-நாஜி ஊர்வலங்களை CSU இன் தலைவரான ஹோர்ஸ்ட் சீகோவர் பகிரங்கமாக ஆதரித்த பின்னரும் அதனுடன் ஒரு கூட்டணி உருவாக்க விருப்பம் இருப்பதாக அறிவித்தனர்.

பசுமைக் கட்சியினரைப் போலவே இடது கட்சியும் தொழிலாளர்களது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அரசின் மற்றும் இரண்டு கால்களிலும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் முகாமில் நின்று கொண்டிருக்கும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கிறது. இது தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி கிழக்கில் முதலாளித்துவத்தின் மீட்சிக்கு ஆதரவளித்த கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அரசு கட்சியில் இருந்து தோன்றியதாகும். 2007 இல் இந்தக் கட்சி, இடது கட்சியை உருவாக்க பழைய SPD அதிகாரத்துவத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் போலி-இடது குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட WASG (தொழிலாளர் மற்றும் சமூக நீதி - தேர்தல் மாற்று) உடன் இணைந்துகொண்டது.

2013 இல் இடது கட்சி, விஞ்ஞான மற்றும் அரசியல் அறக்கட்டளை (Stiftung für Wissenschaft und Politik - SWP) சிந்தனைக் குழாமின் “புதிய சக்தி — புதிய பொறுப்பு” என்ற தலைப்பிலான ஒரு வெளியுறவுக் கொள்கையை வரைய உதவியது. இவ்வாறாக ஆரம்பத்தில் இருந்தே ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையில் அது பங்குபற்றி வந்திருந்தது. அப்போது முதலாக, இது பேர்லினின் வெளியுறவுக் கொள்கையின் தாக்குதலை விசுவாசத்துடன் ஆதரித்து வந்திருக்கிறது. மாநில அளவில் அது ஆளும் இடங்களில் எல்லாம், சமூக வெட்டுக்களது நச்சுத்தன்மைக்கு புதிய இலக்கணங்களை அது அமைத்துத் தருகிறது. இடது கட்சி வறுமையின் பிரபல தலைநகராக பேர்லினை ஆக்கியிருக்கிறது. கிரீசில் அதன் சகோதரக் கட்சியான சிரிசா அதன் இரக்கமற்ற சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தைக் கொண்டு மில்லியன் கணக்கானோரது வாழ்க்கைகளை உடைத்தழித்துக் கொண்டிருக்கிறது.

இடது கட்சியின் பகுதிகள் இப்போது வெளிப்படையாக வலதின் முகாமில் இருக்கின்றன. கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, சாரா வாகென்கினெக்ட், பேர்லினில் நடந்த அதி-வலதுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பேசியதோடு, திறந்த எல்லைகளுக்கான கோரிக்கையை “எதார்த்தமற்றது முற்றிலும் வேறொரு உலகத்துக்கானது” என்று பரிகாசம் செய்தார். வாகென்கினெக்ட் பகிரங்கமாக அதி வலதுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு விரைவாக என்பதே. அகதிகள் மீதான அவரது தாக்குதல்களை புகழ்ந்துரைக்கும் AfDயின் தலைவரான அலெக்ஸாண்டர் கௌலாண்ட் ஒரு “தீரமான பகுத்தறிவுக் குரல்” என்று அவரைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார்.

6. வறுமை மற்றும் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - சமூக சமத்துவத்தை ஆதரிப்போம்!

தொழிலாள வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க குரோதங்கள் “சமூக சந்தைப் பொருளாதாரம்” மூலமாகவும் சமூக பங்காண்மை மூலமாகவும் வெல்லப்பட முடியும் என்பதான சமூக ஜனநாயகக் கட்சியினரின் உறுதிப்படுத்தல்கள் ஒரு பொய்யென நிரூபணமாகியிருக்கிறது. குறைந்தபட்சம் 1980கள் முதலாகவேனும், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி துரிதமாக வளர்ந்து சென்றிருக்கிறது; அது இப்போது கற்பனை செய்யமுடியாத மட்டத்தை எட்டியிருக்கிறது.

உலகளவில், மனிதகுலத்தின் வறுமைப்பட்ட கீழ் பாதிப்பேர், அதாவது 3.6 பில்லியன் மக்கள் கொண்டிருக்கும் அதே அளவுக்கான செல்வத்தை எட்டு பெரும் செல்வந்தர்கள் கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகப் பிளவு ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் ஐரோப்பா முழுமையிலும் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பு நாடான பல்கேரியாவில் சராசரி ஊதியமானது, ஜேர்மனியில் இருப்பதைக் காட்டிலும் எட்டுமடங்கு குறைவாய் இருக்கிறது. ஐரோப்பாவின் மிக வசதியான நாடுகளில் ஒன்றான ஜேர்மனியிலேயே கூட, 12.9 மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், 3.2 மில்லியன் பேர் தங்களது குறைந்த ஊதியங்கள் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இல்லாமையால் பல வேலைகள் செய்கின்றனர். ஓரளவுக்கு “இயல்பான” ஊதியங்களை சம்பாதிப்பவர்களும் கூட கட்டுப்படியாகாத வாடகைகள், வேலைக்குச் செல்ல நீண்ட பயணம் செல்லவேண்டியிருப்பது, அதிகரித்த வேலை அழுத்தம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற உயிர்பிழைப்புப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.  

தொழிற்சங்கங்களும் அவற்றின் நிறுவனப் பிரதிநிதிகளும் முதலாளிகளின் சேவையிலான இணை-மேலாளர்களாக ஆகி, சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒழுங்கமைக்கின்றனர். ஒரேயொரு வேலைநீக்கம் அல்லது ஊதிய வெட்டிலும் கூட அவர்களது கையெழுத்தில்லாமல் இருக்கக் காண்பது அரிது. தொழிலாளர்களின் போர்க்குணத்தின் ஒவ்வொரு அறிகுறிக்கும் கடும் குரோதத்துடன் எதிர்வினையாற்றும் அவர்கள் ஒன்று ஒட்டுமொத்தமாய் தொழிலக நடவடிக்கையையே முழுமையாக நிறுத்தி விடுவதற்கோ இல்லையேல் அதனை ஒரு பயனற்ற முட்டுச்சந்திற்கு இட்டுச் செல்வதற்கோ முயற்சி செய்கின்றனர். வலது-சாரி தீவிரவாதக் கட்சிகள் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவைக் காண முடிந்திருக்கும் மட்டத்திற்கு, சமூக ஜனநாயகக் கட்சி, போலி-இடதுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிற்போக்கான பாத்திரத்தின் மீதான தொழிலாளர்களின் கொதிப்பே அதற்குக் காரணமாய் இருக்கிறது.

முதலாளித்துவ அமைப்பு முறையையும் அதன் அரசியல் எடுபிடிகளையும் SGP உறுதியுடன் நிராகரிக்கிறது. தனியார் இலாப நலன்களை விடவும் மக்களின் தேவைகளே மேலாதிக்கம் செலுத்துகிறதான ஒரு சமூகத்திற்காக நாங்கள் போராடுகிறோம். பெரும் செல்வங்களும், வங்கிகளும் பிரம்மாண்ட பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே அனைவரது சமூக உரிமைகளும் பாதுகாத்துக் கொள்ளப்பட முடியும். கண்ணியமான ஊதியமளிக்கும் வேலை, தரமான கல்வி, கட்டுப்படியாகும் வீட்டுவசதி, பாதுகாப்பான ஓய்வூதியங்கள், சிறந்த மருத்துவ வசதி மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகல் ஆகியவற்றுக்கான உரிமையும் இதில் அடங்கும்.

7. நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்

இன்று தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களையும் வரலாற்று முன்னோக்கையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரேயொரு சோசலிசப் போக்காக இருப்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஆகும். இது, மார்க்சிசக் கோட்பாடுகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்குமான அதன் பல தசாப்த-கால போராட்டத்தின் விளைபொருளாகும். ICFI இன் வரலாற்றில், வேலைத்திட்டத்தில் மற்றும் அரசியல் நிலைப்பாட்டில், வர்க்கப் போராட்டத்தின் 150 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்து வெற்றிகள் தோல்விகள் இரண்டும் கொண்ட படிப்பினைகளும் அனுபவங்களும் செறிந்துள்ளன.

80 ஆண்டுகளுக்கு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் சர்வதேச இடது எதிர்ப்பாளர்களால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமையானது சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான அவர்களது 15 ஆண்டுகால போராட்டத்தின் உச்சமாய் இருந்தது. சோவியத் ஒன்றியத்துக்குள் இருந்த அதிகாரத்துவத்தின் நலன்களை வெளிப்படுத்திய “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிராக, அவர்கள் 1917 இல் அக்டோபர் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றிருந்த சர்வதேச மூலோபாயத்தைப் பாதுகாத்தனர்.

கம்யூனிச அகிலத்தை சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்தமையானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அழிவுகரமான தோல்விகளுக்கு இட்டுச்சென்றது, 1933 ஜேர்மன் பெருந்துயரில் இது உச்சம் கண்டது. மாஸ்கோவின் செல்வாக்கின் கீழ், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistische Partei Deutschlands - KPD) பாசிசத்தின் அபாயத்தை தணித்துக் காட்டி, நாஜிக்களுக்கு எதிரான ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கூட்டுப் போராட்டத்தை தடுத்துவிட்டது. அப்போதும் மில்லியன் கணக்கான சோசலிசத் தொழிலாளர்களை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த SPD உடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்குப் பதிலாக, அது அவர்களை நாஜிக்களில் இருந்து வித்தியாசமில்லாத “சமூக பாசிஸ்டுகள்” என்று விபரித்தது.

ஜேர்மன் பெருந்துயரில் இருந்து படிப்பினைகள் கற்பதற்கு கம்யூனிச அகிலம் மறுத்தமையானது ட்ரொட்ஸ்கியை அதனுடன் முறித்துக் கொள்வதற்கும் நான்காம் அகிலத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும் தூண்டியது. ஸ்ராலினிசத்தின் வெளிப்படையான எதிர்ப்புரட்சிகர பாத்திரம், மக்கள் முன்னணியின் அழிவுகரமான கொள்கைகள், சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்டுகள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக, அது சர்வதேசியவாதம் மற்றும் தொழிலாளர்’ அதிகாரம் ஆகிய சோசலிசக் கோட்பாடுகளைப் பாதுகாத்தது.

இரண்டாம் உலகப் போரின் விளைவும் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரமும் முதலாளித்துவத்திற்கு மூச்சுவிடுவதற்கான இடைவேளையைக் கொடுத்தது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் மேல், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆதாரவளங்களின் உதவியுடன், ஒரு பொருளாதார மேலெழுச்சி உருவாக்கப்பட்டது. மதிப்பிழந்து விட்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மீண்டும் செல்வாக்கு பெற்றன. தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமரசத்தை எதிர்நோக்கிய முதலாளித்துவத் தலைவர்களால் தலைமை கொடுக்கப்பட்டன.

இது நான்காம் அகிலத்தின் மீது தனது தாக்கத்தை ஏற்படுத்தாமலில்லை. ஸ்ராலினிச, சீர்திருத்தவாத மற்றும் தேசியவாத இயக்கங்களுக்குத் தகவமைத்துக் கொண்டவையும், அவற்றுக்கு ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வழங்கியவையுமான பப்லோவாதம் மற்றும் அரசு முதலாளித்துவத்தின் அரசியல் நீரோட்டங்களுக்கு எதிராக அனைத்துலகக் குழு பல தசாப்தங்களுக்கு போராட வேண்டியிருந்தது. நான்காம் அகிலத்தினால் தலைமை கொடுக்கப்படுகின்ற தொழிலாள வர்க்கம், ஒரு புரட்சியில் சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு தலைமை கொடுக்கப்போவதில்லை, மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவம், மாவோவாத விவசாய இராணுவங்கள், “இடது” சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் ஆகியோரது ஒரு “முற்போக்கான” பிரிவோ அல்லது பென் பெல்லா, யாசீர் அரபாத் மற்றும் பிடல் காஸ்ட்ரோ போன்ற முதலாளித்துவ தேசியவாதிகளோ தான் சோசலிசத்தை நோக்கிய ஒரு படிப்படியான மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்கள் என்பதையே ஏதேனும் ஒரு வடிவத்தில் அவை அனைத்தும் கூறின.

1982 முதல் 1986 வரையான காலத்தில், இத்தகைய பப்லோவாத நிலைப்பாடுகளுக்கு அதிகமான அளவில் தகவமைத்துக் கொண்டு விட்டிருந்த பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டதன் பின்னர், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைத்துலகக் குழுவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றனர். அதன்பின் நான்காம் அகிலத்தின் வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு முன்கண்டிராத தத்துவார்த்த மற்றும் அரசியல் அபிவிருத்தியை அவர்களால் மேற்கொள்ள முடிந்தது. உற்பத்தியின் பூகோளமயமாக்கம் குறித்த, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சி குறித்த, சீர்திருத்தவாதத்தின் மற்றும் தொழிற்சங்கங்களின் திவால்நிலை குறித்த அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வுகள் கட்சியை வர்க்கப் போராட்டத்தின் புறநிலை அபிவிருத்தியின் மட்டத்திற்கு கொண்டுவந்தது, வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு அதனைத் தயாரிப்பு செய்தது. ICFI இன் பிரிவுகள் கழகங்களாய் இருந்ததில் இருந்து கட்சிகளாக மாறியதிலும் ICFI இன் சர்வதேச இணையவழி தினசரியாக உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டதிலும் இது வெளிப்பாடு கண்டது.

ICFI இன் முன்னோக்குகள் இன்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததோடு, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராய் தனது தனியுரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முதலாளித்துவ சொத்துறவுகளையும் அறிமுகம் செய்தது. மாவோயிஸ்டுகள் சீனாவை முதலாளித்துவ சுரண்டலின் ஒரு சொர்க்கமாக மாற்றினர். தேசிய இயக்கங்கள் ஏகாதிபத்திய சக்திகளது எடுபிடிகளாக சீரழிந்தன. சீர்திருத்தவாதக் கட்சிகள் அவற்றின் வலது-சாரிக் கொள்கைகளின் காரணத்தால் நிற்காத வீழ்ச்சியைக் கண்டன.

“ஒரு நீடித்த மரண போராட்டத்தில் அது இருப்பதாக கருதமுடியாதுவிட்டால் முதலாளித்துவ உலகத்திற்கு தப்பிக்க வேறு வழி இல்லை” என்று ட்ரொட்ஸ்கி 1940 இல், ஒரு ஸ்ராலினிச முகவரால் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சற்று முந்தைய காலத்தில் எழுதினார். “போர், எழுச்சிகள், போர்நிறுத்தத்தின் சிறு இடைவேளைகள், புதிய போர்கள், மற்றும் புதிய எழுச்சிகளை எதிர்நோக்க பல சகாப்தங்ளுக்கு இல்லாவிட்டாலும் நீண்ட பலஆண்டுகளுக்கு தயாரிப்பு செய்வது அவசியமாகும். ஒரு இளம் புரட்சிகரக் கட்சி இந்த முன்னோக்கையே தனது அடிப்படையாகக் கொண்டாக வேண்டும்.”

நிகழ்வுகள் இந்த வரலாற்று முன்னோக்கை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ், நான்காம் அகிலமானது அதை தொடர்ந்துவந்த தசாப்தங்கள் தொடர்பான விரிவான அனுபவத்தை பெற்று வந்துள்ளதுடன் மையமான தத்துவார்த்த பிரச்சினைகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இப்போது அதனை சோசலிசப் புரட்சிக்கான பாரிய உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கான நிலைமைகள் நிலவுகின்றன.

8. SGP இன் பணிகள்

SGPயும் ICFI இல் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் ஒரே இலக்கிற்காகவே போராடுகின்றன, ஒரே அடிப்படைக் பணிகளுக்கே முகம்கொடுக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது கட்சி காங்கிரஸ் தீர்மானம் கூறுகிறது:

“ஒரு புரட்சிகர முன்னணிப்படையைக் கட்டியெழுப்புவதும் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் இலட்சியங்கள் குறித்து முன்னெப்போதினும் விரிந்தவொரு புரிதலைக் கொடுப்பதும், அபிவிருத்தி கண்டுவரும் இயக்கத்தின் தன்மையை தெளிவுபடுத்துவதுமே SEP இன் அடிப்படைக் பணிகளாகும். தொழிலாள வர்க்கத்தின் போராட்ட வளர்ச்சியை அரசு அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் பொருளாதார வாழ்க்கையை தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் சமூகத் தேவைகளது அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்குமான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு அரசியல் இயக்கத்துடன் இணைப்பதற்கு SEP போராட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சியெனும் கொள்கைக்கு எதிராய் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.”

SGP இன் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த முன்னோக்கில் இருந்து பின்வரும் பணிகள் பிறக்கின்றன:

a) ஐக்கிய இராச்சியத்திலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியுடனும் பிரான்சிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியுடனும் (Parti de l’égalité socialiste) கூட்டாக இணைந்து ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற முன்னோக்கிற்காக ஐரோப்பிய அளவிலான ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்வது. ஐரோப்பா மீண்டும் பாசிசத்திற்குள்ளும் போருக்குள்ளும் மூழ்காமல் தடுப்பதற்கும் கண்டத்தை அதன் பெருவாரியான மக்களது நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கும் ஒரே வழி ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கான போராட்டம் மட்டுமேயாகும்.

b) தொழிலாள வர்க்கத்தில் முறைப்படியான அரசியல் பணிகளை செய்வது. அமெரிக்காவில் SEP செய்வதைப் போல, SGPம், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதுடன் சேர்த்து தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டுவதற்காகவும் போராடுகிறது.

c) “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற ICFI இன் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது.

d) அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், சுரண்டல் மற்றும் போர் ஆகிய ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்குப் பலியானோர் ஆகியோரைப் பாதுகாப்பது. தஞ்சம் கோரும் உரிமையை SGP பாதுகாக்கிறது, தேசியவாதம் மற்றும் வெளிநாட்டினர் வெறுப்பின் அத்தனை வடிவங்களையும் அது நிராகரிக்கிறது. அகதிகள் மீதான தாக்குதல்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் குறிவைத்து ஏவப்படுவனவாகும். முதலாளித்துவத்திற்கு எதிராக அனைத்து தேசங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஒரு பொதுவான போராட்டம் அவசியமாய் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர் விரும்பும் நாட்டில் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் உரிமையுள்ளது.

e) ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை, SGP மீதான அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் தாக்குதல், மற்றும் ஆளும் உயரடுக்கினரின் சதி ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்வது. SGP அச்சுறுத்தப்பட முடியாது. மகா கூட்டணியும் அதன் உளவு முகமையும் பரந்த மக்களால் வெறுக்கப்படுபவையாகவும், நிராகரிக்கப்படுபவையாகவும் உள்ளன, அவற்றுக்கு எந்த அங்கீகரிப்பும் கிடையாது. அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தால் கண்காணிக்கப்படுவதற்கு எதிராக SGP சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதுடன் புதிய தேர்தலையும் கோரும். முதலாளித்துவம், போர் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு ஒரு சோசலிச மாற்றை ஆலோசனையளிக்கவும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் அது தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தும்.

f) அவர்கள் ஏன் மீண்டும் திரும்பிவந்துள்ளனர்? என்ற புத்தகத்தின் பரப்புரை. இந்தப் புத்தகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் SGP நடத்திய போராட்டத்தின் ஒரு விளைவு மட்டுமல்ல, மாறாக அது அந்தப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதுடன் வலது-சாரி அபாயத்தை எதிர்ப்பதற்கான ஒரு சோசலிச முன்னோக்கிற்கு இருக்கும் அவசியத்தையும் விளக்குகிறது.

g) பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் IYSSE ஐ கட்டுவதற்கான தேசிய அளவிலான மற்றும் ஐரோப்பிய அளவிலான ஒரு உத்வேகமான பிரச்சாரம். இதற்கு முதலாளித்துவ சித்தாந்தத்தின் மேலாதிக்கமான வடிவங்களுக்கு எதிரான, குறிப்பாக பின்நவீனத்துவத்தின் பகுத்தறிவின்மைவாதக் கருத்தாக்கங்கள் மற்றும் அடையாள அரசியலுக்கு எதிரான, ஒரு முறையான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டம் அவசியமாயுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், AfD இன் எழுச்சிக்கும், அவர்களது கல்விபயிலும் தளங்களை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் காரியாளர் பள்ளிகளாக மாற்றுவதற்கும் பாரிய எதிர்ப்பு இருக்கிறது. இந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை அமைக்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு சோசலிச முன்னோக்கும் இதற்கு அவசியமாயிருக்கிறது.

h) WSWS இன் அபிவிருத்தியும் மற்றும் பரவலாக்கலும்.

அவ்வாறான ஒரு சக்திவாய்ந்த தேர்தல் பிரச்சாரம், அதன் வேட்பாளர்களாலும்  ஒட்டுமொத்தக் கட்சியினாலும் உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பகுப்பாய்வுகளையும் தற்கால அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளையும் அடித்தளமாக கொண்டிருக்கும். இதற்கு  முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கு எதிரான தொடர்ச்சியான விமர்சனங்களும் மற்றும் அரசியல் மற்றும் தத்துவார்த்தரீதியாக புரட்சிகரக் கட்சியை அத்தனை போலி-இடது போக்குகளில் இருந்து பிரித்துக் காட்டுவதும் முக்கியமானதாக இருக்கும்.

i) வரலாற்றைக் கற்பது.

கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் அதனைத் தாண்டியும் தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமானால், அவர்கள் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றை நன்கறிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, நான்காம் அகிலத்தின் செறிந்த 80 ஆண்டு கால வரலாறு குறித்த புரிதல் தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவா அல்லது ஆளும் வர்க்கத்தின் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலா இவற்றில் எது துரிதமாக அபிவிருத்தி காண்கிறது என்பதைச் சார்ந்தே அனைத்து முடிவுகளும் அமையும். இது வெறுமனே செயல்படாமல் ஊகித்துக் கொண்டிருப்பதைக் குறித்த ஒரு பிரச்சினை அல்ல. புரட்சிகரக் கட்சியின் தலையீடு தீர்மானகரமானதாகும். என்ன சாதிக்கப்பட முடியும் என்ன சாதிக்கப்பட முடியாது என்பது போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கும் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவுக்கும் இடையிலான உறவு ஓரிடத்தில் நிலையாக நின்று கொண்டிருப்பதல்ல, மாறாக தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதாகும். வெடிப்பான நிகழ்வுகள் பழைய நம்பிக்கைகளை பலவீனப்படுத்தி சமூக நனவை தீவிரப்படுத்தும். ஆயினும், வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டதும், நடப்பு நெருக்கடி குறித்த ஒரு மார்க்சிச புரிதலைக் கொண்டதுமான ஒரு கட்சி மட்டுமே, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கு அவசியமான மட்டத்திற்கு உயர்த்த முடியும்.