ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US pseudo-left’s conspiracy of silence on the Matamoros workers’ rebellion

மத்தாமோரொஸ் தொழிலாளர்களின் கிளர்ச்சி குறித்து அமெரிக்க போலி இடதின் மௌனமான கூட்டு சதி

By Alex González 
4 February 2019

மெக்சிக்கோ, மத்தாமோரொஸில் 70,000 “மக்கில்லாடோரா” தொழிலாளர்கள் அவர்களது துணிவுகரமான வேலைநிறுத்தத்தைத் தொடங்கி மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் “சோசலிஸ்ட்டுகள்” என சுயவிளக்கம் தரும் செய்தி அமைப்புகள் இன்று வரை இந்த வெளிநடப்பு பற்றி ஒரு கட்டுரை கூட எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சோசலிச வலைத் தளம் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தைப் பற்றி விரிவான அறிக்கைகளை பிரசுரித்து வருவதுடன், மெக்சிக்கன் தொழிலாளர்களின் பேரணிவகுப்புக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா மற்றும் உலெங்கிலும் இருந்தான தொழிலாளர்களை அணிதிரட்டவும் போராடி வருகிறது.

பில்லியன்களில் இலாபம் ஈட்டிவரும் அமெரிக்க மற்றும் கனேடிய பெருநிறுவனங்களுக்கு எதிராக, அதிகளவில் சுரண்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான மெக்சிக்கன் தொழிலாளர்கள் ஒரு வரலாற்று ரீதியான போராட்டத்தை தொடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளுக்கு (Democratic Socialists of America - DSA) மிகவும் நெருக்கமான Jacobin இதழ், சர்வதேச சோசலிச அமைப்பின் (International Socialist Organization-ISO) வெளியீடான Socialist Worker செய்தித்தாள், மற்றும் Socialist Alternative போன்றவை மௌனமாக ஒரு கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன.

நிறுவன குண்டர்கள் தொழிலாளர்களை தாக்கியுள்ள நிலையிலும், நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தக்காரர்களை பெருநிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ள நிலையிலும், அத்துடன் தொழிலாளர்களை பொலிசார் வன்முறை கொண்டு அச்சுறுத்தியுள்ள நிலையிலும், போலி இடதுகள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் தொழிலாளர்கள் வெற்றிகரமாக உற்பத்தியை மந்தமாக்கியுள்ளதை பற்றி அவர்கள் அறிக்கை எதுவும் செய்யவில்லை. மேலும், போராட்டக்காரர்கள் அவர்களது தொழிலாளர்களை தடுத்துவைப்பதன் மூலமாக, நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு 40-50 மில்லியன் டாலர் அளவிற்கான இழப்பை விளைவித்துள்ளதைப் பற்றியும், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் சுரண்டப்படும் அதே நிலைமைகளின் கீழுள்ள கனேடிய மற்றும் அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த ஆதரவை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதைப் பற்றியும் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

போலி இடதுகளின் அமைதி என்பது அறியாமையின் விளைவு அல்ல. உலக சோசலிச வலைத் தளம் (WSWS), இந்த வேலைநிறுத்த இயக்கத்தைப் பற்றி ஜனவரி 15 இல் தொடங்கி, ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 29 கட்டுரைகளை பிரசுரித்து, அல்லது நாளொன்றுக்கு அநேகமாக ஒன்றரை கட்டுரை வீதம் பிரசுரித்து வருவதன் மூலம் அதைப் பற்றிய செய்திகளை பரவலாக அறியச்செய்துள்ளது.

அதற்கு மாறாக, இந்த மௌனம், தொழிலாளர்களும் இளைஞர்களும் உண்மையை அறிந்துகொள்ள விடாமல் தடுக்கும் ஒரு நனவான முயற்சியாக உள்ளது, ஏனென்றால், போலி இடது ஆதரவளித்து பேசுகின்ற செல்வாக்கு பெற்ற உயர் நடுத்தர வர்க்கத்தின் சடத்துவ ரீதியான நலன்களை இந்த உண்மை அச்சுறுத்துகிறது.

மெக்சிக்கன் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு திடீர் நடவடிக்கையாகவே இந்த மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. ஜனவரி 12 அன்று, தொழிலாளர்கள் மற்றும் மக்கில்லாடோரா தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (Unions of Laborers and Industrial Workers of the Maquiladora Industry – SJOIIM) தலைமையகத்திற்கு வெளியே தொழிலாளர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினர். ஊதிய உயர்வையும், வருடாந்திர மேலதிக கொடுப்பனவையும் அவர்களால் பெறமுடியவில்லை என கடும் சீற்றம் அடைந்து, தொழிற்சங்கத் தலைவர் ஜூவான் வில்லஃபியூரெட் (Juan Villafuerte) ஐ எதிர்த்துப் போராடி, “நீண்டகாலமாகவே எங்களது தொழிற்சங்கத்தை நாங்கள் விரும்பவில்லை,” என்றும் “எங்களிடமிருந்து நீங்கள் திருட மட்டும்தான் முடியும்” என்றும் கூச்சலிட்டனர்.

மக்கில்லாடோரா தொழிற்சங்கங்களும், உலகளவில் அவர்களது சக தொழிற்சங்கங்களைப் போல, தொழிலாளர்களால் வெறுக்கப்படுகின்றன, ஏனென்றால், பிரதிவாரமும் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து நான்கு சதவிகிதத்தை வழிப்பறி செய்துகொள்ளும் அதேவேளையில், அவை தொழிலாளர்களிடத்தில் தொழில்துறை தொழிலாளர் பொலிசாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதையும் சாதிக்கவில்லை. இந்நிலையில், மக்கில்லாடோரா தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி, அதிலும் பெருமளவில் சமூக ஊடகங்கள் மூலம் அவர்களது செயல்களை ஒழுங்கமைத்து, அவர்களது சொந்த சுயாதீனமான மற்றும் ஐக்கியப்பட்ட வலிமையைக் கொண்டு மட்டுமே தங்களது கோரிக்கைகளை அடைய முடியும் என்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டனர். வேலைநிறுத்தத்தில் மிகப் பிரபலமான பதாகைகளில் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “தொழிற்சங்கமும் நிறுவனங்களும் தொழிலாள வர்க்கத்தை கொலை செய்கின்றன.”

தொழிலாளர்கள் அதிவிரைவாக சுயாதீனமான ஆலைக் குழுக்களை அமைத்ததுடன், ஆலை ஆலையாகச் சென்று, என்ன நடந்தது என்பதை அவர்களது சக தொழிலாளர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டம் தொடங்கி ஒரே நாளில், 45 ஆலைகளைச் சேர்ந்த 70,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

போலி இடது அமைப்புக்கள் மத்தாமோரொஸ் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளன, ஏனென்றால் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக அவை இருப்பதுடன், தொழிற்சங்க ஊழல்மிக்க எந்திரங்களில் அதிகரித்தளவில் முக்கிய பதவிகளையும் வகிக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்காக தங்களது முயற்சிகளை அர்பணித்த மற்றும், 90 சதவிகித அடித்தட்டு மக்களிடமிருந்து 10 சதவிகித உயர்மட்ட வகுப்பினருக்கு செல்வத்தை மாற்றும் ஒரு சாதனைக்கு வழிவகுப்பதான ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் பிற சலுகை வெட்டுக்களுக்கு உதவிய, வலதுசாரி, தேசியவாத, மற்றும் முதலாளித்துவ சார்பு அமைப்புக்களின் அதிகாரத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவை கோருகின்றன.

தொழிற்சங்கங்களின் அனைத்து காட்டிக்கொடுப்புக்களுக்கும் போலி இடது குழுக்கள் வழமையாக ஆதரவளித்து —மிக சமீபத்தில் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் விற்கப்பட்டது உட்பட— அவற்றை “வெற்றியாக” அறிவிக்கின்றன.

மக்கில்லாடோரா தொழிலாளர்களின் கிளர்ச்சி அவர்களது பொய்யான கதைகளை முற்றிலும் வெடிப்புறச் செய்துள்ளது. தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்க சக்தியை ஒன்றுதிரட்ட முடியும் என்பதை இந்த வேலைநிறுத்தம் நிரூபித்துக் காட்டியுள்ளது. மத்தாமோரொஸில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதில் முன்னணி வகிப்பதை தொழிற்சங்கங்கள் தடுக்க முனைந்து, பின்னர், அவர்களை பணிநீக்கம் செய்து அச்சுறுத்தியுள்ளன. என்றாலும், 20 சதவிகித ஊதிய உயர்வையும், 1,700 டாலர் மேலதிக கொடுப்பனவையும் பெறுவதற்குப் போராட தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஆலைக் குழுக்களை ஒழுங்கமைத்து வெற்றியும் கண்டுள்ளனர்.

மெக்சிக்கன் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோப்பேஸ் ஓபரடோரை (AMLO), ஒரு மாற்றத்தை சாதிக்கும் நபர் எனவும் மெக்சிக்கன் தொழிலாள வர்க்கத்தின் பாதுகாவலர் எனவும் போலி இடதுகள் பாராட்டியுள்ளன. டிசம்பர் 2018 இல் AMLO பதவியேற்ற நாளில், AMLO “மக்களை பிரதிநிதித்துவம்” செய்வார் என்று Jacobin இதழ் குறிப்பிட்டது. மேலும் அது, “அமைச்சரவையிலும், காங்கிரஸிலும் பெண்களுக்கு சமளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது” குறித்தும் அவரை பாராட்டியது.

டிசம்பர் 5 இல், Socialist Worker செய்தியிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, AMLO இன் தேர்வு, “ஜனநாயக தொடக்கங்களை” காட்டியுள்ளன என்பதுடன், “மெக்சிக்கன் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளையும் அது மேம்படுத்தக்” கூடும் என்று தெரிவித்தது.

இத்தகைய துரோகம் நிறைந்த பொய்கள் மத்தாமோரொஸில் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தே, AMLO இன் குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பது, அமெரிக்க எல்லைக்கு அருகே ஒரு புதிய தொழில்துறை சார்பிலான சுதந்திரமான பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கு மூடிமறைப்பு வித்தை செய்யும் ஒரு சூழ்ச்சியாகவே இருந்தது.

ஆளும் வர்க்கத்தை பீதியடையச் செய்யும் வகையில் எப்பொழுது வேலைநிறுத்த அலை கட்டவிழ்ந்ததோ, உடனேயே AMLO உம் அவரது கட்சியான தேசிய மறுமலர்ச்சி இயக்கமும் (Movement for National Regeneration-Morena) வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தலையீடு செய்தார்கள். ஜனவரி 27 அன்று, செனட்டின் மொரெனா தலைவர், சக மொரெனா ஆர்வலரும் தொழிலாளர் வழக்கறிஞருமான சுசானா பிரையெட்டோவை (Susana Prieto) அழைத்து, “நாட்டின் மற்றும் நகராட்சியின் பொருளாதாரம் சரிந்து விடாமலிருக்க” வேலைநிறுத்தத்தை முறிக்க உத்தரவிட்டார். பிப்ரவரி 1 அன்று வெளிவந்த ஒரு AP அறிக்கை, AMLO உம் மொரெனா தலைவர்களும், “மத்தாமோரொஸ் தொழிற்சங்கம் ஊதிய உயர்வு கோருவதற்கு முனைவதை தீவிரமாக ஊக்கமிழக்கச் செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டது.

மத்தாமோரொஸ் மீதான போலி இடதின் மௌனம் அதன் தேசியவாத நோக்குநிலையின் திவால் தன்மையை அம்பலப்படுத்துகிறது. DSA, ISO மற்றும் Socialist Alternative என அனைத்து அமைப்புக்களும், ட்ரம்பின் புலம்பெயர்-விரோத வாய்வீச்சு மற்றும் பொருளாதார தேசியவாதத்தை எதிரொலிக்கின்ற, மற்றும் அமெரிக்காவில் வேலைகளை இழக்கும், குறைந்த ஊதியங்களை பெறும் மெக்சிக்கன் தொழிலாளர்களை குற்றம்சாட்டிய “ஜனநாயக சோசலிசவாதி” பேர்னி சாண்டர்ஸை (Bernie Sanders) ஊக்குவிக்கின்றன. மத்தாமோரொஸ் தொழிலாளர்கள், அதற்கு முரணாக, அமெரிக்க மற்றும் கனேடிய தொழிலாளர்களின் ஆதரவிற்காக நேரடியாக முறையிட்டு, ஒரு சக்திவாய்ந்த பதிலையும் பெற்றுவிட்டனர்.

இந்த மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம், சமூக கேள்விகள் என்பவை இனம் அல்லது பாலினத்தின் பரிமாணங்கள் மூலமாக முதலில் விளக்கப்பட வேண்டும் என்று கூறிய போலி இடது அமைப்புக்களின் அடையாள அரசியல் திட்டநிரலையும் கூட கீழறுத்துள்ளன. மத்தாமோரொஸ் தொழிலாளர்கள், தங்களை ஒரு வர்க்கமாக அடையாளப்படுத்தி வருகின்றனர் என்பதுடன், தேசியம், உடல்சார் பண்புகள் அல்லது பாலியல் சார்பு ஆகியவற்றை தொடர்புபடுத்தாமல், அவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும் கோருகின்றனர்.

அதன் மூலத்தில் இருந்து, போலி இடதின் அமைதியானது அதன் வர்க்க நிலைப்பாட்டின் மூலமாக விளக்கப்படுகிறது. DSA, ISO மற்றும் Socialist Alternative போன்ற அமைப்புக்கள், அமெரிக்க சமூகத்தின் 10 சதவிகித செல்வந்தர்களாக இருக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட, நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த அடுக்குகள், அதிகரித்தளவில் எழுச்சியடைந்து வரும் பங்கு சந்தையில் இருந்தும், தொழிலாள வர்க்கத்தையும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்க நிலையில் இருப்பவர்களையும் சுரண்டுவதன் மூலமாகவும், அவற்றிற்கான செல்வத்தை பெறுகின்றன.

மத்தாமோரொஸ் போன்ற ஒரு அபிவிருத்தி, அவர்களது வருமானத்தையும் சமூக நிலைப்பாட்டையும் அச்சுறுத்துகின்றன. தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சி என்பது, ஆயிரக்கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகளின் தனிப்பட்ட செல்வத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் தொழிற்சங்க கட்டணத்திலிருந்து பணப் பாய்ச்சலை தடுத்து நிறுத்திவிடக்கூடும். ஆகவே, தொழிற்சங்க கட்டணங்களில் ஒரு கூர்மையான குறைப்பு ஏற்பட வேண்டும் என்பது மத்தாமோரொஸ் வேலைநிறுத்தக்காரர்களின் ஒரு வெளிப்படையான கோரிக்கையாகவும் உள்ளது!

இரண்டு எதிரிடையான, பூகோள அளவிலான நடைமுறைகள் மத்தாமோரொஸில் மோதிக் கொண்டிருக்கின்றன.

ஒரு புறம், தேசியவாத தொழிற்சங்கங்களால் திணிக்கப்பட்ட தடுப்பு கவசத்தை உடைத்து சுயாதீனமான நடவடிக்கைகளின் மூலமாக அதன் சமூக சக்தியை கட்டவிழ்த்துவிட தொழிலாள வர்க்கம் முயன்று வருகிறது. சர்வதேச நிறுவனங்களை எதிர்கொள்வதற்கு ஒரு சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது என்பதை உலகளவில் அனைத்து தொழிலாளர்களும் பெருமளவில் அங்கீகரித்துள்ள நிலையில், சர்வதேச ஐக்கியத்தை நாடுவதாகவே அதன் உந்துதல் உள்ளது.  

மற்றொரு புறம், இந்த செயல்முறையை தடுத்து நிறுத்தி, முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையின் பாதுகாப்பான வழித்தடங்களுக்குள் சமூக அமைதியின்மையை திருப்பிவிட முனையும், ஆளும் வர்க்கமோ, “இடது ஜனரஞ்சகவாதி” என்றழைக்கப்படுபவர்கள், அதாவது, தேசியவாதிகள், முதலாளித்துவ சார்பினர், போலி இடதுடன் சேர்த்து அரசியல்வாதிகள் என்பவர்களை மேலும் மேலும் சார்ந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க போலி இடதுகள், அதன் நேர்மையற்ற அமைதியின் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றின் வாழ்வா சாவா போராட்டத்தின் மீதான அதன் பகிரங்கமான விரோதத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான அவர்களது சொந்த ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சாமானிய தொழிலாளர் குழுக்களை (rank-and-file committees) ஸ்தாபிக்கவும், GM ஆலை மூடல்களுக்கு எதிரான பிப்ரவரி 9 ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கவும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டம், சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் எழுச்சி கண்டுவரும் வர்க்கப் போராட்டத்திற்கு தோள் கொடுக்க நோக்கம் கொண்டுள்ளது.