ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Nationwide strike shakes Algerian regime

தேசிய அளவிலான வேலைநிறுத்தம் அல்ஜீரிய ஆட்சியை உலுக்குகிறது

By Will Morrow 
11 March 2019

ஞாயிறன்று, ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா ஆட்சியை நீக்கக்கோரி தொடங்கப்பட்டதான ஒரு ஐந்து நாள் வேலைநிறுத்தத்தில் பத்தாயிரக்கணக்கானோர் இணைந்து கொண்ட நிலையில், அது அல்ஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஸ்தம்பிக்கச் செய்தது.

பிப்ரவரி 22 முதல் மாணவர் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களாக உருவெடுத்துள்ள புட்டஃபிளிக்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த இயக்கம், என்றுமில்லாத அளவிற்கு மக்களின் பரந்த பிரிவினரை உள்ளிழுத்து ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. அதாவது, தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை புரட்சிகர சக்தியாக எழுச்சியடைந்து வருகிறது.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக செயல்பட்டு வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை இணையவழியில் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பியுள்ளனர். இது, ஒட்டுமொத்த கல்வி மற்றும் போக்குவரத்து அமைப்புமுறைகளை தாக்கியுள்ளதுடன், விற்பனை மையங்கள், துறைமுகங்கள் மற்றும் தனியார் தொழில்துறை மையங்களை மூடச் செய்துள்ளது.

தேசிய இரயில் வலையமைப்பும் ஸ்தம்பித்துப் போனது. தலைநகரம் அல்ஜீயர்ஸில், மெட்ரோக்களும், பேருந்துகளும் மற்றும் டிராம்களும் ஓடவில்லை. மேலும், அல்ஜீரியாவில் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட நகரங்களுக்குள் மக்கள் போக்குவரத்திற்கு பயன்படும் தனியார் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. Dépêche de Kabylie பத்திரிகை, போயிராவில் இருந்து அல்ஜியர்ஸ் க்கு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் சனியன்றே அவர்களது பயணிகளிடம் ஞாயிறன்று பேருந்துகள் ஓடாது என தெரவித்திருந்ததாக கூறியது.


அல்ஜீயர்ஸில், ஓடான் சதுக்கத்தில் நடந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதிலுமான ஆசிரியர்கள் இணைந்து கொண்டனர். Tout sur l’Algérie (TSA) செய்தி ஊடகம், பெரும்பாலான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை ஆசிரியர்கள் மூடிவிட்டனர் என்றும், “ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் விடுவிக்கப்பட்ட மாணவர்களும் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் செய்தனர்” என்றும் தெரிவித்தது. உயர்நிலை பள்ளி மாணவர்கள் முகநூலில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து, அல்ஜீயர்ஸ், ட்ராரியா, எல் அக்கூர், டிலை பிரஹிம், ரோயிபா மற்றும் பனானியர்ஸ் போன்ற பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினர்.

இன்னும் இரண்டு நாட்களில், அதாவது மார்ச் 13 அன்று தொடங்கவிருக்கும் ஒரு ஒரு-நாள் வேலைநிறுத்தத்திற்கு சென்ற வாரம் அழைப்பு விடுத்த தேசிய கல்வி ஒன்றியங்களை ஆசிரியர்கள் எதிர்த்தனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ஏற்கனவே கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு வாக்களித்த பின்னர், வேலைநிறுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், நீட்டிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தடுக்கவும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

Dépêche de Kabylie பத்திரிகை, நேற்று இவ்வாறு குறிப்பிட்டது: “வெளிநடப்பு பற்றி எந்தவொரு கல்வி ஒன்றியமும் அறிக்கை வெளியிடாத நிலையில், கடந்த வாரம் முதல், ஆரம்பநிலை, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் சாத்தியம் இருப்பது குறித்து மாணவர்களை பல்வேறு கல்வி நிறுவனங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.”

அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தன. தேசிய அளவிலான பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான ஒரு கடைசி நிமிட முயற்சியின் போது, தேசிய விடுதலை முன்னணி (FLN) அரசாங்கம் சனியன்று, விடுப்பு இடைவெளி நேற்றிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என திடீரென அறிவித்தது. உடனடியாக, விடுப்பு கால விரிவாக்கத்தை எதிர்த்து மாணவர்களும் விரிவுரையாளர்களும் காணொளிகளை பதிவிட்டதுடன், முகநூலில் அறிக்கைகளையும் வெளியிட்டனர், மேலும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதையும் தொடர்கின்றனர்.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு வடகிழக்கு நகரமான Bejaïa துறைமுகத்திலும், சர்க்கரை, எண்ணெய் மற்றும் பிற விவசாய உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் Bejaïa வில் உள்ள Cevital ஆலையிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இது, பில்லியனர் இசட் ரெப்ராப் க்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகும். அந்த நாளில் நகரம் எங்கிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணிவகுப்பு நடத்தினர். டிஜென்ஜென் (ஜிஜெல்) மற்றும் ஸ்கிட்டாவில் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இருப்பினும், ஏற்றுமதிகள் பாதிக்கப்படவில்லை என Al Jazeera நேற்று தெரிவித்தது.  


அல்ஜீயர்ஸில், Gue de Constantine இல் Sonelgaz ஊழியர்கள் அலுவலகங்களை புறக்கணித்து செய்யும் வேலைநிறுத்தம்

கிழக்கு அல்ஜீரியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான Sonatrach சுரங்க நிறுவனத்தின் Hassi Messaoud எண்ணெய் வயலிலும், அத்துடன் Hassi R’mel, Hassi Berkine எண்ணெய் வயல்களிலும் மற்றும் Amenas இலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து அணிவகுப்பது பற்றி முகநூலில் பதிவிடப்பட்ட காணொளி 100,000 முறைகளுக்கும் அதிகமாக பார்க்கப்பட்டிருந்தது. Boumerdes இல் உள்ள Sonatrachs ஆராய்ச்சி அலுவலகங்களில் தொழிலாளர்கள் நேற்று அலுவலகங்களை புறக்கணித்து கட்டிடங்களுக்கு வெளியில் அமர்ந்து போராட்டம் செய்தனர் என்று TSA கூறியது. அரசு மின்உற்பத்தி மற்றும் Sonelgaz எரிவாயு விநியோகிப்பு நிலையங்களிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

பேருந்துகள் மற்றும் கார்களை ஒருங்கிணைக்கும் SNVI தொழிற்சாலைகளின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் உட்பட, கிழக்கு அல்ஜியர்ஸில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோயிபா தொழில்துறை மண்டலத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். போர்ட்ஜ் பௌ அர்ரேரிட்ஜ் (Bordj Bou Arreridj) தொழில்துறை மண்டலமும் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டது.

மத்திய அல்ஜியர்ஸ், உவர்க்லா, கான்ஸ்டன்டைன், செடிஃப், போயிரா, பெஜையா, டிஜி-ஓசாவு மற்றும் போர்ட்ஜ் பௌ அர்ரேரிட்ஜ் போன்ற பகுதிகள் உட்பட, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்து நாடெங்கிலும் சிறு தனியார் வியாபாரிகளும் கடைக்காரர்களும் கடைகளை மூடினர்.

பெருநிறுவன சார்பு தொழிற்சங்க கருவிகளுக்கு எதிராக மக்ரெப் மற்றும் உலகம் முழுவதிலுமாக வளர்ந்து வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த இயக்கங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பாகமாகவே அல்ஜீரிய தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த இயக்கம் உள்ளது.

இந்த ஆண்டு, அண்டை நாடான துனிசியாவில் 700,000 தொழிலாளர்கள் நடத்திய ஒரு ஒரு-நாள் பொது வேலைநிறுத்தம், ஐந்து கண்டங்கள் எங்கிலும் ஆசிரியர்கள் நடத்திய பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், மேலும், கடந்த 20 ஆண்டுகளில், வட அமெரிக்காவில் நடந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டமான 70,000 மெக்சிக்கன் மக்கில்லாடோரா தொழிலாளர்கள் செய்த கிளர்ச்சி உட்பட, ஆலை மூடல்கள் மற்றும் வறிய ஊதிய நிலைமைகள் குறித்து வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பு போன்றவற்றை கண்டுள்ளது. கடந்த நவம்பரில் இருந்து பாரியளவில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களால் உலுக்கிப் போடப்பட்ட பிரான்சில் நேற்று, அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புட்டஃபிளிக்காவை பதவி நீக்கக் கோரி நாடெங்கிலும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் நடத்திய கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை அடுத்து அல்ஜீரிய வேலைநிறுத்தமும் தொடர்கிறது. நேற்று, சுவிட்சர்லாந்து, ஜெனீவா மருத்துவமனையில் இருந்து அல்ஜீரியாவிற்கு ஜனாதிபதி திரும்பி வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது, அங்கு கடந்த இரண்டு வாரங்களாக அவருக்கு வழமையான மருத்துவ செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர். 82 வயதான அவர் 2013 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் பொதுவிடங்களில் பேசவியலாத நிலையில் உள்ளார். அதாவது, அவரது ஆட்சியின் உள்வட்டாரங்களுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள இராணுவத்திற்கும் பெயரளவிலான தலைவராக மட்டுமே அவர் இருந்து வருகிறார்.


Sonatrech எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

புட்டஃபிளிக்காவின் ஊழல் மற்றும் இற்றுப்போன ஆட்சியை எதிர்த்து மட்டுமல்லாமல், தலைவிரித்தாடும் வறுமை, வேலையின்மை மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றுக்கும் எதிராகவே அல்ஜீரிய தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் இறங்குவதற்கு உந்தப்பட்டு வருகிறது.

உத்தியோகபூர்வ "எதிர்க்கட்சி" கட்சிகள் புட்டஃபிளிக்காவுக்கு எதிரான இயக்கத்தை ஆதரிப்பதாகக் கூறுகின்றன, ஆனால் இவை தொழிலாளர்களின் முயற்சிகளுக்கு ஆட்சி காட்டும் குரோதப்போக்கை விட சற்றும் குறைந்த குரோதம் கொண்டவையல்ல. அவர்களின் நோக்கம் புட்டஃபிளிக்கா அகற்றப்பட்டுவிட்டால், விளைவு அதிகாரிகளை மாற்றியமைப்பதை விட வேறு எதுவுமாக இருக்கப்போவதில்லை, அங்கே செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் அதிகமான இடங்களை தக்கவைத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதை தவிர வேறொன்றும் நிகழப்போவதில்லை.

வெள்ளியன்று, லூயிசா ஹனூனின் தொழிலாளர் கட்சி (PT) உட்பட 30 க்கும் மேற்பட்ட எதிர்க் கட்சிகள்,  தலைநகரில், புட்டஃபிளிக்காவின் முன்னாள் பிரதமரான அலி பென்ஃபிலிஸ் ஸ்தாபித்த Talaie El Hourriyet கட்சியின் தலைமையகத்தில் ஒன்றுகூடின என Al Jazeera தெரிவித்தது. அனைத்துக் கட்சிகளும், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை நசுக்குவதற்கு நோக்கம் கொண்டதான ஒரு அரசியல் மாற்றத்தை வகுக்கும் இராணுவ தலைமையுடனும் அரசாங்கத்துடனும் கலந்துரையாடலில் உள்ளன. நேற்று மாலையில், ஆளும் FLN வெளியிட்ட ஒரு அறிக்கை, “தேசிய நலன் குறித்து குறைந்தபட்ச பாதிப்புடன் இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர ஒரு வழியை கண்டுபிடிக்க அனைத்து அரசியல் செயல்பாட்டாளர்கள் உடனான ஒரு செயற்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தது.

நேற்று, El Watan நாளிதழில் பிரசுரமான PT இன் ஹனூன் விடுத்த ஒரு அறிக்கை, அரசாங்கம் “மக்களுக்கு சாதகமாக பதிலிறுக்க வேண்டும், மேலும் அனைத்து வகைகளிலும் அபாயங்களை கொண்டுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்கை நிறுத்த வேண்டும்,” அல்லது, “நாட்டை குழப்பத்திற்குள் திசைதிருப்பி விடுவதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டது. ““பாசிச அரசுக்கு” இட்டுச் செல்லும், “புரட்சிகர எழுச்சியின் மாற்றம் என்பதில் இருந்து இரத்தம் தோய்ந்த குழப்பம் எனக் கூறப்படும் அரபு வசந்தம்” போன்ற எழுச்சிக்கு வழி வகுப்பதைப் போல, “அரசியல் கட்சிகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்த” பெயர்குறிப்பிடாது தனிநபர்களை அவர் கண்டித்தார்.


ரோயிபாவில் SNVI கார் மற்றும் பேருந்து ஒருங்கிணைப்பு ஆலையில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

உண்மையில், புட்டஃபிளிக்கா ஆட்சிக்கு பல தசாப்தங்கள் நீண்ட ஆதரவை வழங்கியதால் PT மதிப்பிழந்துள்ளது. ஹனூன் கூறுவது என்னவென்றால், “குழப்பம்,” பற்றி எச்சரிப்பதன் மூலம், புரட்சி பற்றிய ஆட்சியின் பயத்தை குறிப்பிடுகிறார்.  

அரபு வசந்தத்தைக் குறிப்பிடுவதன் மூலம், புரட்சிகர போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், துனிசியாவில் உள்ள ஒரு புதிய சர்வாதிகார ஆட்சியைப்போன்ற அல்லது எகிப்தில் உள்ள ஒரு இராணுவ சர்வாதிகாரத்தைப்போன்ற ஒரு ஆட்சியுடன் முடிவுக்கு வரும் என்கிறார்.

இது தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கும் ஒரு முயற்சியாகும். எகிப்திலும் துனிசியாவிலும் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி, ஒரு புரட்சிகர தலைமையின்மையாகும், புரட்சியின் மூலமாக முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை இறுதி வரை முன்னெடுத்துச் செல்ல, அங்கு ஒரு புரட்சிகர தலைமை இல்லாதிருந்தது. PT யும், அல்ஜீரிய முதலாளி வர்க்கத்தின் வேறுபட்ட பிரிவுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதன் மூலம் இதேபோன்ற இரத்தம் தோய்ந்த விளைவை வடிவமைக்க முயன்று வருகிறது.

இது  2011 இன் வெகுஜன புரட்சிகர போராட்டங்களில் இருந்து அத்தியாவசிய அரசியல் படிப்பினைகளை தொழிலாள வர்க்கம் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எகிப்தில், தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நசுக்கும் ஒரு சதித் திட்டத்தை இராணுவம் வகுத்தது. தொழிலாளர்கள் புரட்சிகர போராட்டத்தில் இறங்கினர், ஆனால் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கை அடித்தளமாகக் கொண்ட அவசியமான புரட்சிகர தலைமையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்ய முடிந்தது. இது ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை வழிதடுமாறச் செய்ய அனுமதித்தோடு அதன் போராட்டங்களை முதலாளித்துவக் கட்சிகளின் பின்னே திருப்பிவிடும்.

ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கியினால் விரிவுபடுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதே முக்கியமான பணியாகவே உள்ளது. அல்ஜீரிய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய அடிப்படை சமூக நலன்களை —சமூக சமத்துவம், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவை— முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, உலகளவிலான சோசலிசத்தால் அதை பதிலீடு செய்யும் வகையில், மக்ரெப் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் அரசாங்களுக்காக போராடுவதன் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும். இதுவே, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்திற்கான முன்னோக்கு ஆகும்.