ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French army receives authorization to shoot “yellow vest” protesters

பிரெஞ்சு ஆயுதப்படை "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களைச் சுடுவதற்கான அதிகாரத்தைப் பெறுகிறது

By Alex Lantier
23 March 2019

நேற்று பாரீஸ் இராணுவ பிரிவு ஆளுநர் பிரான்ஸ் இன்போவுக்குக் கூறுகையில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆபரேஷன் சென்டினெல் பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையின் சிப்பாய்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சிப்பாய்களால் சட்ட ஒழுங்கு கடமைகளை மேற்கொள்ள முடியுமா என்று வினவிய போது, ஜெனரல் புரூனோ லு ரே பின்வருமாறு பதிலளித்தார்: “எங்கள் உத்தரவுகள் போதுமானளவுக்கு தெளிவாக உள்ளன, நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதே இல்லை. சிப்பாய்களுக்கான நடத்தை விதிமுறைகள் மிகவும் கடுமையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.”

“எந்த விதமான அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கையிலும் அவர்களிடம் வேறு வேறுவிதமான நடவடிக்கை வழிமுறைகள் இருக்கும்,” என்று தொடர்ந்து கூறிய அவர், “அது துப்பாக்கிச்சூடு வரையில் கூட செல்லக்கூடும்,” என்றார்.

பிரான்சுக்குள் பயங்கரவாதத்திற்காக சந்தேகத்திற்குரியவர்களை சுட்டு வீழ்த்துவதற்கான சிப்பாய்களின் அதே நடத்தை விதிகள் போராட்டக்காரர்களைச் சுட்டுவீழ்த்துவதற்கும் வழங்கப்பட்டிருக்கும் என்பதையும் லு ரே சேர்த்துக் கொண்டார்: “அவர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள். இது, லூவ்ர் அல்லது ஓர்லி (தாக்குதல்களில் நடத்தப்பட்டதை) போல, கடந்த காலத்திலும் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அச்சுறுத்தலின் இயல்பைத் துல்லியமாக மதிப்பீடு செய்து அதற்கேற்ப விடையிறுப்பார்கள்.”

பெரிதும் அமைதியாக நடத்தப்படும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு போராட்ட இயக்கத்தின் மீதான அச்சுறுத்தல்களைப் பிரான்சுக்குள் மட்டுமல்ல மாறாக சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான ஓர் அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உலகெங்கிலும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே வெடித்து வருகையில், நிதியியல் பிரபுத்துவத்தின் இராணுவமும் பாதுகாப்பு அமைப்புகளும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை மேற்கொள்ள தயாரிப்பு செய்து வருகின்றன. நீண்டகாலமாக முதலாளித்துவ-ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்டுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளிலேயே கூட, அவர்கள் வேகமாக இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.


2015 இல் ஸ்ராஸ்பேர்க்கில் ரோந்துப்பணியில் இருந்த ஆபரேஷன் சென்டினெல் சிப்பாய்கள்

2015 பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி அவசரகால நிலை திணித்தப் பின்னர் இருந்து, ஆயுதப்படையின் ஆபரேஷன் சென்டினெல் படைப்பிரிவானது, குண்டு துளைக்காத கவசங்கள் அணிந்து தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்தியவாறு, அணிவகுத்துச் செல்லும் சிப்பாய்களின் அதிரடிப்படைகளை பிரான்சின் வீதிகளில் அனுப்பி உள்ளது. தற்போதைய நெருக்கடி WSWS இன் நீண்டகால எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கம் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்க்கும் நோக்கில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அரசு ஒடுக்குமுறையைப் பலப்படுத்துவதற்கான ஒரு சாக்குபோக்காக பயன்படுத்துகிறது.

புரூசெல்ஸில் நேற்றைய ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு மத்தியில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக ஆயுதப்படைகளை அனுப்புவதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டி பேசினார். "ஒழுங்கு மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கான பொறுப்பு எந்தவிதத்திலும்" ஆயுதப்படையினது இல்லை என்று கூறிய அவர், ஆயுதப்படையிடம் அவர் தஞ்சம் அடைந்ததன் மீதான விமர்சனங்களை "தங்களையும் மற்றவர்களையும் பயமுறுத்துவதில் பாத்திரம் வகிப்பவர்களால்" எரியூட்டப்படும் "போலி விவாதம்" என்பதாக கேலி செய்தார்.

பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லி பிரான்ஸ் இன்போவுக்கு லு ரே கூறியதையே பின்தொடர்ந்ததுடன், போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் வேலை செய்ய துருப்புகளை அனுப்புவதற்கான முடிவைக் குறைத்தும் காட்டினார். ஆபரேஷன் சென்டினெல் படைகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் மீதான லு ரேயின் அறிக்கையோடு வெளிப்படையாக முரண்பாடு ஏதுமின்றி, அப்பெண்மணி கூறுகையில், “பிரெஞ்சு ஆயுதப்படையின் சிப்பாய்கள் ஒருபோதும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள். ... கற்பனை புனைவுகளைக் கொண்டு விளையாடுபவர்கள், துப்பாக்கிச்சூடு குறித்து பேசுபவர்கள் அனைவரும், வெறுமனே குழப்பத்தை விதைக்கிறார்கள்,” என்றார்.

இன்று "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிரான ஆயுதப்படை நடவடிக்கைகளின் போது உயிரிழப்பு இருக்குமா அல்லது எத்தனை உயிரிழப்புகள் இருக்கும் என்று முன்கூட்டியே அறிவது சாத்தியமில்லை. ஆனால் மக்ரோன் மற்றும் பார்லியின் மழுப்பலான மற்றும் வரலாற்றுரீதியில் துல்லியமற்ற அறிக்கைகள் ஒருசில சிப்பாய்களின் கருத்துக்களுடன் பகிரங்கமாக முரண்பட்டுள்ளன, இவர்கள் தங்களின் கோபத்தைக் குறித்தும் மற்றும் அவர்களுக்கு கிடைத்து வரும் உத்தரவுகள் மீது கவலை கொண்டும் இராணுவக் கட்டுப்பாட்டையே மீறி ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியுள்ளனர்.

“இந்த 'மஞ்சள் சீருடை' விஷயத்தில் தலையிடுவது எங்கள் வேலையில்லை,” என்று ஒரு சிப்பாய் பெயர் வெளியிடாதவாறு பிரான்ஸ் இன்போவுக்குத் தெரிவித்தார். “எங்களிடம் அவசியமான தளவாடங்கள் இல்லை, பெண்கள் அவர்களின் கைப்பையில் வைத்திருப்பதைப் போன்ற சிறிய மிளகுப்பொடி தெளிப்பான்களும் லத்திகளும் மட்டுமே எங்களிடம் இருக்கின்றன. அதற்கு மேல், அடுத்து எங்களிடம் தாக்கும் துப்பாக்கிகள் இருக்கின்றன. ... ஆகவே, நிறைய போராட்டக்காரர்களுக்கு எதிராக நாங்கள் செல்ல வேண்டியிருந்தால், துரதிருஷ்டவசமாக நாம் உயிரிழப்புகளை அனேகமாக காணக்கூடும்,” என்றார்.

பிரெஞ்சு மக்களை இலக்கு வைக்க மக்ரோனிடம் இருந்து உத்தரவுகள் வருவதைக் குறித்து மற்றொரு சிப்பாய் அவரின் கோபத்தை எடுத்துரைத்தார்: “இது அபத்தமானது, இது ஏதேச்சதிகாரமானது. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. துறைசார்ந்த அர்த்தத்தில், நாங்கள் இராணுவ எதிரிகளுடன் போராடுவோம். ஒட்டுமொத்த மக்களும் எதிரியாக இருக்க முடியாது, அது சாத்தியமில்லை. நிலைமை அவ்வாறு இருப்பதால் இன்று அவர்கள் சிப்பாய்களை நிறுத்த முயன்று வருகிறார்கள்,” என்றார்.

போராட்டக்காரர்கள் மீது சிப்பாய்கள் துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த, முன்னவர்களுக்கும் பின்னவர்களுக்கும் இடையே கலகம் ஒடுக்கும் பொலிஸ் எப்போதும் நிலைமையைச் சமாளிக்கும் என்று மக்ரோன் அரசாங்கத்திற்குள் கூறப்படும் கூற்றுக்களைப் பொறுத்த வரையில், போர் பயிற்சிக்கல்லூரியின் முன்னாள் தலைவர் ஜெனரல் வின்சென்ட் டெஸ்போர்டெஸ் அவரின் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினார்.

அவர் கூறினார், “போராட்டக்காரர்களின் பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முற்றிலும் அவர்கள் தகைமை கொண்டவர்கள் என்பதை இதுவரையில் பாதுகாப்பு படைகள் எடுத்துக்காட்டியதில்லை. வன்முறையான போராட்டக்காரர்கள் சிப்பாய்களுடன் மோதலில் வந்தால், இரத்தம் சிந்துவதற்கான தீவிர அபாயம் உள்ளது. ... கடைசியாக 50 ஆண்டுகளுக்கும் முன்னர் அல்ஜீரியாவில் தான் சட்டம் ஒழுங்கிற்காக சிப்பாய்கள் பயன்படுத்தப்பட்டனர். உங்களுக்கே நன்றாக தெரியும், அத்தருணத்தில் இரத்தம் சிந்தப்பட்டது, நிறைய இரத்தம் சிந்தப்பட்டது,” என்றார்.

இரண்டாம் உலக போர் மற்றும் ஐரோப்பிய பாசிசவாத வீழ்ச்சிக்குப் பின்னர் கோலிசவாதிகள் மற்றும் ஸ்ராலினிசவாதிகள் ஸ்தாபித்த முதலாளித்துவ குடியரசுக்கு எதிராக 1947-48 கிளர்ச்சிகர வேலைநிறுத்தங்களின் போது, தற்போதைய பிரெஞ்சு மண்ணில் தொழிலாளர்களுக்கு எதிராக ஆயுதப்படையின் கடந்த தலையீடு ஒரு பாரிய படுகொலையாக இருந்தது. 350,000 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கிய நிலையில், ஆயுதப்படையோ வேலைநிறுத்தக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அதிகாரத்துடன் சுரங்கங்களை ஆக்கிரமித்தது. அதன் விளைவாக ஏற்பட்ட மோதல்களில் ஆறு பேர் உயிரிழந்தனர், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர், 3,000 சுரங்க தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அந்த முடிவு 2011 இல் ஒருதலைபட்சமானது என்று சட்டபூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

நாஜிக்கள் மற்றும் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியால் பிரான்சில் அதே முறைகள் பயன்படுத்தப்பட்டு வெறும் ஒரு தசாப்தத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர், பிரெஞ்சு காலனித்துவத்திற்கு எதிராக மேலெழுந்த அல்ஜீரியர்களைச் சித்திரவதை செய்யவும் கொல்லவும் ஆயுதப்படை பயன்படுத்தப்பட்ட அல்ஜீரியாவில், 1954-62 போரில் 300,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்க விடப்பட்டார்கள்.

இத்தகைய வரலாற்று சம்பவங்கள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆயுதப்படைகளை அணிதிரட்டுவதன் உள்நோக்கங்களைப் பொறுத்த வரையில் ஓர் எச்சரிக்கையாகும். இவை "மஞ்சள் சீருடை" இயக்கத்திற்கு மத்தியில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste—PES) முன்வைத்த மூலோபாயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் ஸ்தாபக அரசியல் கட்சிகளுக்கு எதிராக சர்வதேசரீதியில் தொழிலாளர்களின் பரந்த கோபத்திற்கு மத்தியில், சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்க PES அழைப்பு விடுத்ததுடன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அரசு அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கத்தின் அதுபோன்ற அமைப்புகளுக்கு மாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

இதற்கு, “மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு பரந்த பெரும்பான்மையால் நிராகரிக்கப்படுகின்ற குட்டி முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு ஓர் அரசியல் மாற்றாக PES ஐ கட்டமைக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய கட்சிகள் சமூகத்தை ஜனநாயகமயப்படுத்த மக்ரோனுடனும் தொழிற்சங்கங்களுடனும் பேரம்பேசுவதற்கு முன்மொழிவதன் மூலமாக தொழிலாளர்களை மக்ரோனிடம் பிணைத்து வைக்க முயல்கின்றன.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, பசுமை கட்சி, ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (La France insoumise) மற்றும் சுதந்திர ஜனநாயக தொழிலாளர் கட்சி உட்பட பல கட்சிகள், ஒரு பரிதாபகரமான "ஒருங்கிணைந்த" முறையீட்டை மக்ரோனுக்கு வழங்க நேற்று ஒன்று சேர்ந்தன.

“அரசாங்கத்தின் மிதமிஞ்சிய எதேச்சதிகார நடவடிக்கைகளை" விமர்சித்து, அவர்கள் தங்களைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் நிலைமையைத் தணிக்க முயற்சிக்க அவர்களுடன் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்துமாறும் மக்ரோனிடம் யாசித்தனர்: “சமூக, சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களை ஓரங்கட்டுவதும், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுபவர்களை இழிவுபடுத்துவதும், நமது காலத்தின் இந்த நெருக்கடிகளுக்கான அனைத்து பேச்சுவார்த்தைகளையும், நம்பிக்கையான அனைத்து விளைவுகளையும் தடுக்கும் வழியாக ஆகிவிடுகிறது. ... பதட்டங்களைத் தணிக்க, நம் நாட்டில் பரந்தளவில் வெளிப்படுத்தப்படுகின்ற சமூக நீதிக்கான அபிலாஷைகளுக்கு உறுதியாக விடையிறுப்பதற்கான அரசு அதிகாரம் அவசியப்படுவதையும் நாங்கள் விரும்புகிறோம்.”

ஆனால் மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கெல்லாம் அங்கே ஒன்றும் இல்லை. நிதியியல் பிரபுத்துவமும் மற்றும் அரசு அதிகாரிகளும் “மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக ஆயுதப்படைகளை அனுப்பியதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான எந்த உத்தேசமும் இல்லை என்பதற்கு அவர்கள் ஒரு தெளிவான சமிக்ஞை அனுப்பி உள்ளனர். அவர்கள் அத்தகைய அபிலாஷைகளை நசுக்கவும், அவசியமானால் அவர்களை இரத்தத்தில் மூழ்கடிக்கவும் விரும்புகின்றனர்.

தற்போதைய இந்த நெருக்கடியானது, முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் முதலாளித்துவ அரசுடன் தொழிலாளர்களைப் பிணைத்து வைப்பதற்கான அவர்களின் மூலோபாயம் முற்றிலும் திவாலாகி இருப்பதை அம்பலப்படுத்துகிறது. 2017 தேர்தலின் போது, இந்த கட்சிகள் அனைத்தும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னை விட மக்ரோன் தீமை குறைந்தவர் என்பதாக காட்டும் உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை ஏற்றிருந்தன. இப்போதோ மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தன் மீதான அவரின் புகழுரையை அறிவித்திருப்பதுடன், “மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக ஆயுதப்படைகளை அனுப்பி உள்ள நிலையில், இந்த பிரச்சாரம் முற்றிலும் ஒரு மோசடி என்பதும் அம்பலமாகி உள்ளது.

தொழிலாளர்களுக்கு எதிராக மக்ரோனின் வரலாற்று அச்சுறுத்தலை முகங்கொடுத்திருக்கையில், தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான அமைப்புகளைக் கட்டமைப்பது மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளை அவற்றின் புரட்சிகர முன்னணிப்படையாக கட்டமைப்பதை நோக்கி திரும்ப வேண்டியுள்ளது.