ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Plantation workers demand freedom for Julian Assange and Chelsea Manning and for jailed Maruti Suzuki workers

தோட்டத் தொழிலாளர்கள் ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களையும் விடுதலை செய்யக் கோருகின்றனர்

By our correspondent 
21 March 2019

மார்ச் 17 அன்று, இலங்கையில் ஹட்டன் நகர மண்டபத்தில், எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் நடத்திய தோட்டத் தொழிலாளர் மாநாடு பின்வரும் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது.

செல்சீ மானிங் மற்றும் ஜூலியான் அசான்ஜை உடனடியாக விடுதலை செய்!

இந்த மாநாடு கொள்கைப்பிடிப்பான பத்திரிகையாளரும் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருமான ஜூலியான் அசான்ஜ் மற்றும் அமெரிக்க தகவல் அம்பலப்படுத்தியவரான செல்சீ மானிங்கிற்கு எதிரான அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டுசதியினை கண்டிப்பதோடு அவர்களை உடனடியாக நிபந்தனை இன்றி  விடுதலை செய்யுமாறும் கோருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிப்பதற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அக்கறையுள்ள புத்திஜீவிகளையும் அணிதிரட்டுவதற்கு முன்னெடுத்து வரும் உலகளாவிய பிரச்சாரத்திற்கு எங்கள் குரலையும் சேர்த்துக் கொள்வதோடு தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பல மில்லியன் மக்களையும் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு முழு மனதுடன் அழைப்பு விடுகிறோம்.

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இடம்பெறும் அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவ குற்றங்களை தமது உயிரை பணயம் வைத்து அம்பலப்படுத்தியதன் மூலம் அசான்ஜ் மற்றும் மானிங் உலக மக்களுக்கு ஒரு பெருமதிப்புமிக்க சேவையை வழங்கியுள்ளனர்.

ஏகாதிபத்தியம் அசான்ஜ் மற்றும் மானிங்கை துன்புறுத்துவதன் நோக்கம், அதன் குற்றங்களையும் சதித் திட்டங்களையும் எதிர்க்கும் அனைவருக்கும் எதிராக பயன்படுத்தப்படவுள்ள ஒரு தண்டனையை உதாரணமாக காட்டும் முயற்சியே என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

உழைக்கும் மக்களாகிய நாம், நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிரான நாட்டின் 30 ஆண்டுகால இரத்தக் களரி உள்நாட்டுப் போரை அனுபவித்துள்ளோம். மேலும் 2009 இல் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரமான தாக்குதல்களின் ஒரு தசாப்த காலத்தை நாம் கடந்து வந்துள்ளோம்.

இப்போது இந்த நாட்டிலுள்ள ஏகாதிபத்திய சார்பு ஆளும் வர்க்கம், இந்த தீவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளின் மையமாக ஆக்குவதற்கு உறுதியுடன் செய்படுவதுடன், அந்த நோக்கத்திற்காக வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மாநாடு, அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுதலை செய்வதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலம் மட்டுமே உறுதி செய்யப்பட முடியும் என்ற சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் மதிப்பீட்டை உறுதியாக ஆதரிக்கிறது. இந்த பிரச்சாரத்தை உருவாக்க அனைத்து சாத்தியமான ஒத்துழைப்பையும் கொடுக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.

சிறைவைக்கப்பட்டுள்ள மாருதி-சுசு கி தொழிலாளர்களை விடுதலை செய்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 18, 2017 அன்று, மாருதி-சுசூக்கி கார் தொழிற்றசாலையில் தொழிபுரிந்த 13 தொழிலாளர்களளுக்கு குர்கானில் உள்ள ஒரு நீதிமன்றம், நீண்ட காலமாக சோடிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதித்தது. நான்கு தொழிலாளர்களளுக்கு ஐந்து ஆண்டு கால தண்டனையும் 14 பேருக்கு  மூன்று ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் நடத்திய இந்த தோட்டத் தொழிலாளர்கள் மாநாடு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களையும், குறைந்த தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 பேரையும் உடனடியாக விடுதலை செயுமாறு கோரி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

இந்திய தலைநகர் புது தில்லிக்கு அருகே, ஹரியானா மாநிலத்தில் மனேசரில் உள்ள சுசூகி ஆலையில், 2012 இல் வெடித்த வேலை நிறுத்தத்தின் போது, மனிதவள முகாமையாளரின் கொலையுடன் இந்த தொழிலாளர்களை தொடர்புபடுத்தி, இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளினாலும் கூட்டாக சோடிக்கப்பட்ட பொய்யான வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள். இந்திய காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் தற்போதைய பாரதீய ஜனதா கட்சி அரசாங்கமும் கொடூரமான செயலை ஆதரித்தன.

இந்த தொழிலாளர்கள் முற்றிலும் அப்பாவிகள். ஜப்பானிய தளமாக கொண்ட பல்-தேசிய நிறுவனத்தால் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் திணிக்கப்பட்ட மிருகத்தனமான வேலை நிலைமைகளை சவால் செய்தமையே அவர்கள் செய்த ஒரே "குற்றமாகும்".

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, நெருக்கடி நிறைந்த உலக முதலாளித்துவம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கும் தாக்குதலின் ஒரு பாகமாகும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான நியாயமான போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியில், இலங்கையில் போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

இந்த மாநாடு, உலகளாவிய தொழிலாளர்களுக்கும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவருக்கும், உறுதிப்பாடான மாருதி சுசூகி தொழிலாளர்களை ஆதரிக்கவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோருவதற்கும் முன்வருமாறு அழைப்பு விடுக்கிறது.