ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In meeting with Egyptian dictator, Trump rails against immigrants

எகிப்திய சர்வாதிகாரியுடனான சந்திப்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ட்ரம்ப்

By Niles Niemuth 
10 April 2019

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் சிசியை செவ்வாயன்று இரண்டு வருடங்களில் இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையில் வரவேற்றார்.

2017 ஏப்ரல் மாதம் சிசி விஜயம் செய்தபோது, 2013 ல் முஸ்லீம் சகோதரத்துவத்தின் எகிப்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முகம்மது முர்சிக்கு எதிராக இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் நிறுவப்பட்ட ஒரு ஆட்சிக்கு ஆதரவு காண்பிப்பதற்கு ட்ரம்ப்பிற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, எல் சிசி ஆட்சி, ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொன்றதுடன் பல்லாயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களையும், டஜன் கணக்கான பத்திரிகையாளர்களையும் சிறையில் தள்ளியுள்ளது.


வெள்ளை மாளிகையில் சிசி மற்றும் ட்ரம்ப். படம்: C-Span

"நாங்கள் பல விடயங்களில் உடன்பட்டோம்" என்று ட்ரம்ப் தெரிவித்தார். " நாங்கள் ஜனாதிபதி எல் சிசிக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை நான் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். அவர் மிகவும் கடினமான சூழ்நிலையில் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்."

2011 ல் நீண்ட கால அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டுவதற்கு வழிவகுத்ததும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்ததுமான எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சிகர இயக்கத்தை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட ஏகாதிபத்திய சக்திகளின் பாராட்டை சிசி பெற்றிருக்கிறார்.

எல்-சிசி, தனது தற்போதைய பதவிக் கால முடிவின் பின்னர் மற்றொரு 12 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க அனுமதிக்க நாட்டின் அரசியலமைப்பை திருத்துவதற்கான எகிப்தில் திட்டமிடப்பட்ட சர்வஜனவாக்கெடுப்புக்கு பல வாரங்களுக்கு முன் ட்ரம்ப்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இது அவரது கட்டுப்பாட்டின் கீழ் நீதித்துறையை கீழ்ப்படியச்செய்யவும், அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் மீது இராணுவ கட்டுப்பாட்டை பேணவும் அனுமதிக்கும்.

2034 வரை அதிகாரத்தில் தனது பிடியை நீட்டிக்க இரத்தக்களரி சர்வாதிகாரியின் முயற்சி பற்றி கேட்டபோது, “அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார்” என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். "முயற்சி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு சிறந்த வேலை செய்கிறார் என்று மட்டுமே நான் சொல்ல முடியும்."

இரு தலைவர்களும் எகிப்திய எல்லை மற்றும் கடல் பாதுகாப்பு, எதிர்ப்பு பயங்கரவாத முயற்சிகள், சினாய் தீவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றி தனிப்பட்ட சந்திப்புகளின் போது விவாதிப்பார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி எல்-சிசி விஜயத்திற்கு முன்னதாக நிருபர்களிடம் கூறினார். பரந்த மனித உரிமை மீறல்களின் மூடிமறைப்பை பயன்படுத்தி, ரஷ்ய 20 Sukhoi SU-35 போர் விமானங்கள் வாங்குவதற்கான எகிப்தின் 2 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர்கள் திங்களன்று வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

2013 ஆட்சி கவிழ்ப்பிற்குப் பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு உதவி வழங்கல்களை இடைநிறுத்துவதை நியாயப்படுத்துவதற்கு ஒபாமா நிர்வாகத்தால் வெளிப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய எந்தவொரு சாக்குப் போக்கையும் ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், சிசி  ஆட்சிக்கான உதவிகளுக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளது. 2020 குழாய் திட்டத்திற்கு மற்றொரு 1.4 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளது. AH-64E Apache தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 10 உட்பட, கடந்த ஆண்டு இறுதியில் பென்டகன் எகிப்திற்கு 1 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை ஒப்புக் கொண்டது.

எல்-சிசி விஜயத்தின் சில நாட்களுக்கு பின்னர் ட்ரம்ப், புலம்பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்க எல்லைக்கு பொறுப்பானவர்கள் உட்பட, தனது உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் அகற்றினார். அமெரிக்க ஜனாதிபதி ஓவல் அலுவலகத்தில் தோன்றியபோது ஆயுத ஒப்பந்தங்கள், மனித உரிமை மீறல்கள் அல்லது சினாய் பிரச்சினைகள் அவர் மனதில் இல்லை.

நேற்று ட்ரம்ப் கெய்ரோவின் கொலைகாரருடன் பக்கமாக அமர்ந்து, மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவிற்குள் செல்ல முயன்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதை தடை செய்ததாக கூறும் சட்டங்களுக்கு எதிராகவும் பாசிச முழக்கமிட்டார். "உலகில், எந்த நாட்டிலும் இல்லாத மோசமான சட்டங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்" என்று ட்ரம்ப் கோபத்துடன் கூறி, "பிடித்தல் விடுவித்தல்”, “புலம்பெயர்வு சங்கிலி”, "விசா சீட்டிழுப்பு, புகலிடம், மற்றும் அவர் தடுக்க விரும்பிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை பட்டியலிட்டார்.

குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க பதில் இயக்குனரான ரொனால்ட் வைட்டெல்லோவை நிரந்தர இயக்குனராக மாற்றுவதற்கான பரிந்துரையை திரும்பப் பெறுதல் தொடர்பாக கடந்த வாரம் கேட்டபோது, "நாங்கள் ஒரு கடுமையான திசையில் செல்ல வேண்டும்" என்று ட்ரம்ப் விளக்கினார். இதைத் தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவரான கிர்ஸ்டென் நீல்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு இரகசிய சேவை இயக்குனரான ரண்டொல்ப் அலஸ்ஸையும் பதவி நீக்கம் செய்தார்.

நிர்வாகத்தின் ஆரம்ப நாட்களில், முஸ்லிம்களின் மீது முழுமையான பயணத் தடைக்காகவும், எல்லையில் உள்ள குழந்தைகளை குடும்பங்களிடமிருந்து பிரித்தல் போன்றவற்றுக்கு ட்ரம்ப்பின் பாசிச ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், அழுத்தம் கொடுத்தார். குடியேற்றக் கொள்கையில் அவர் இப்போது ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

செவ்வாயன்று செய்தியாளர் மாநாட்டில் "நாட்டை சுத்தம் செய்வதை" ட்ரம்ப் மறுத்தார். "மாறாக அவர் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் வறிய, மத்திய அமெரிக்க மற்றும் மெக்சிகன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அவரது கோபத்தை திருப்பினார். "இது அபத்தமானது. தஞ்சம் புகுவதில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் வழக்கறிஞர் அவர்களுக்கு கொடுத்ததை சரியாகப் படிக்கிறார்கள். அவர்கள் ஒரு காகித துண்டை வைத்திருக்கிறார்கள். 'அது என்ன என்று படியுங்கள்.' திடீரென்று, நீங்கள் தஞ்சம் கோருவதற்கு உரிமை உண்டு".

அமெரிக்காவில் புகலிடம் கோருவோர் மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகக்கூடிய செயன்முறையான, அவர்களின் வழக்கு குடிவரவு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை மெக்சிகன் பக்கத்தில் காத்திருக்க வேண்டும் என்ற “மெக்சிக்கோவில் தங்கியிருத்தல்” கொள்கையை இரத்துச் செய்யும் Ninth Circuit Court இன் திங்கட்கிழமை மனுவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். "Ninth Circuit இடமிருந்து பெறும் இந்த முடிவுகளை யாரும் நம்ப முடியாது, இது ஒரு அவமானம். எனவே நாம் மோசமான சட்டங்களுக்கு எதிராக போராடுகிறோம்."

"ஆனால், எங்களுக்கு ஒருபோதும் கட்டுப்பாடுகளை விதிக்காத ஒரு நீதிமன்ற முறையை நாங்கள் எதிர்க்கிறோம்," என்று ட்ரம்ப் பெருமையாகக் கூறினார்.

"காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினர் செயல்படத் தயாராக இல்லை என்பதால் நாங்கள் காங்கிரஸுடன் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறோம்." பென்டகன் நிதிகளை சட்டவிரோதமாக மறுவிநியோகம் செய்வதற்காக காங்கிரஸின் அங்கீகாரம் இல்லாமல், மெக்சிக்கோவின் எல்லையுடன் ஒரு சுவரைக் கட்டுவதற்கு அவற்றை பயன்படுத்த ஒரு தேசிய அவசர நிலையை எல்லையில் ட்ரம்ப் அறிவித்தார். தடைகளை கட்டியெழுப்ப மற்றும் சமீப மாதங்களில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களை கைது செய்துள்ள எல்லைக் காவற்படையினரை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதத்திலிருந்து பல ஆயிரம் சுறுசுறுப்பான படைவீரர்கள் தெற்கு எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினர் "திறந்த எல்லைகளை விரும்புகின்றனர், அதாவது அவர்கள் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்;அவர்கள் எங்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கு போதைப் பொருட்கள் வேண்டும். அவர்கள் செயல்பட விரும்பவில்லை. நாம் எல்லைகளை மூட வேண்டும். நாங்கள் அதை செய்கிறோம். அவர்கள் செயல்படுவார்களானால் நான் அதை மிக வேகமாக செய்ய முடியும்" என்று ட்ரம்ப் பொய்யாக அறிவித்தார்.

"எங்களுக்குத் தேவை என்னவென்றால் உள்நாட்டு பாதுகாப்பு," என்று ட்ரம்ப் முடித்தார். "எந்தவொரு சிறந்த சொல்லாலும், சிறந்த பெயர் எதுவுமில்லை. எங்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பே அவசியம் அத்துடன் நாம் அதைப் பெறப் போகிறோம்."

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போரை பாரியளவில் விரிவாக்குதல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்பார்க்கப்படும் போராட்ட இயக்கத்தின் அடக்குமுறை ஆகியன பற்றிய சர்வாதிகாரியான அல் சிசி முன்னிலையில் ட்ரம்ப்பின் இனவெறி வாய்ந்த உரையாடல்கள், ஒரு வலுவான எச்சரிக்கையாகும். அமெரிக்காவின் முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஆட்சிக்கு சவால் செய்யும் எந்தவொரு இயக்கத்தின் வெடிப்பிற்கும் தனது சொந்த பிரதிபலிப்பிற்கான ஒரு மாதிரியாக, எகிப்தில் வெகுஜன மக்கள் எதிர்ப்பிற்கு எல்-சிசி இன் மிருகத்தனமான மற்றும் முறையான அடக்குமுறையில் தான் ட்ரம்ப் காண்கிறார்.