ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian big business propels Modi and his Hindu supremacist BJP to a second term

இந்திய பெருவணிகங்கள் மோடி மற்றும் அவரின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியை இரண்டாவது பதவிகாலத்திற்கு முன்நகர்த்துகின்றன

By Keith Jones
24 May 2019

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியும் (பிஜேபி) அந்நாட்டின் தேசிய தேர்தலில் பலமாக மேலெழுந்துள்ளனர்.

இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், பிஜேபி 37 சதவீதத்தைக் கடந்து மக்கள் வாக்குகளில் அதன் பங்கை அதிகரித்துள்ளதுடன், 300 க்கும் அதிகமான மக்களவை ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.கூ) உள்ள அதன் பங்காளிகள் ஜெயித்த 40 அல்லது அதற்கு அதிகமான ஆசனங்களைக் கணக்கில் சேர்க்காமலேயே கூட, அதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் முழு பெரும்பான்மை வழங்குகிறது.

பிஜேபி வெற்றியை அறிவித்து கடந்த ஞாயிறன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டதும் இந்தியாவின் பங்குச் சந்தைகள் மேலெழுந்ததுடன், பிஜேபி/தே.ஜ.கூ இன் தேர்தல் வெற்றியின் அளவு முழுமையாக வெளிப்பட்டதும் மீண்டும் சாதனை உயரங்களுக்குச் சென்றன.

மோடி அரசாங்கம் முதலீட்டாளர்-சார்பு "சீர்திருத்தங்களை" தீவிரப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு மீதும், வர்த்தக போர் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய புவிசார்-அரசியல் பதட்டங்களுக்கு இடையே இந்தியாவின் வல்லரசு அபிலாஷைகளை ஆக்ரோஷமாக வலியுறுத்தும் என்பதாலேயும் பெருவணிகங்கள் வாயில் எச்சில் ஊற நிற்கின்றன.

மோடியுடன் தன்னை ஒன்றிணைத்துக் கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தவர் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாஹூ ஆவார், 543 மக்களவைத் தொகுதிகளில் இந்தியாவின் தேர்தல் ஆணையம் வெறும் ஒன்றில் முழுமையாக வாக்குகளை எண்ணி வெளியிடுவதற்கு முன்னரே அவர் அவரின் இந்திய சமபலமான மோடிக்கு மறுதேர்வு ஆனதற்கான வாழ்த்து அனுப்பினார்.

அவரின் வாழ்த்து சேதியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மோடி திரும்பவும் “தலைமைக்கு" வந்திருப்பது "அமெரிக்க-இந்திய பங்காண்மைக்காக மிகப்பெரிய விடயங்கள் காத்திருப்பதை" அர்த்தப்படுத்துவதாக தெரிவித்தார். முந்தைய காங்கிரஸ்-தலைமையிலான அரசாங்கங்கள் வழியமைத்த பாதையில் தொடர்ந்து பயணித்து வந்து, மோடி-தலைமையிலான பிஜேபி அரசாங்கம் இந்தியாவைச் சீனாவுடனான வாஷிங்டனின் மூலோபாய மோதலில் ஒரு கண்கூடான முன்னணி அரசாக மாற்றி உள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக அங்கே பிஜேபி அரசாங்கத்திற்கு, மிகவும் பொதுவாக கூறுவதானால், மூன்று தசாப்தகால நவ-தாராளவாத முதலாளித்துவ மறுசீரமைப்பின் நாசகரமான விளைவின் மீது அதிகரித்த சமூக கோபம் மற்றும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கான நிறைய அறிகுறிகள் இருந்தன. உலகில் மிகவும் சமூகரீதியில் துருவமுனைப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. பேராசை கொண்ட ஒரு சிறிய ஆளும் உயரடுக்கு முதலாளித்துவ விரிவாக்கத்தின் பலன்களை தன்வசப்படுத்திக் கொண்டு, 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களை நாளொன்றுக்கு 3 அமெரிக்க டாலருக்கு சற்று கூடுதலான தொகைக்கு நிகரான வருவாயில் உயிர் பிழைக்க விட்டுள்ளது.

ஆனால் கடுமையான வறுமை, வேளாண்மை துயரங்கள், பாரியளவிலான வேலையின்மை (இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் மிக அதிகபட்சமாக உள்ளது), முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் மீதான இந்து வலதின் துஷ்பிரயோகம் ஆகியவை மீது உணரக்கூடிய அளவில் நிலவும் எதிர்ப்பு இந்திய முதலாளித்துவ வர்க்க அரசியல் மற்றும் கட்சிகளில் எந்த சாதகமான வெளிப்பாட்டையும் காணவில்லை.

இதில் உலகெங்கிலுமான அபிவிருத்திகளுடன் மலைப்பூட்டும் சமாந்தரங்கள் உள்ளன. கடந்த டிசம்பரில் இலங்கையில் தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கத்தில் இருந்து, மெக்சிகன் மக்கில்லாடோராவின் மையமான மத்தாமோரொஸில் தொழிலாளர் கிளர்ச்சி, அமெரிக்காவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலை, மற்றும் அல்ஜீரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் வரையில் உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைப் போல, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை வலியுறுத்த இடதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்க வடிவத்தை இன்னும் எடுக்கவில்லை என்பதால், அமெரிக்காவில் ட்ரம்ப், இத்தாலியில் லெகா, பிரேசிலில் போல்சொனாரோ உட்பட நாடு மாற்றி நாடு தீவிர வலது சக்திகள் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான, போருக்கு ஆதரவான "இடது" மற்றும் தாராளவாத ஸ்தாபக கட்சிகள் மீதான பாரிய அதிருப்தியைச் சுரண்டிக் கொள்ள முடிகிறது.

இராணுவவாத, பாகிஸ்தான்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத வாய்சவடால்களைச் சுமந்திருந்த, ஒரு கீழ்தரமான மற்றும் அரசியல்ரீதியில் கலகம் தூண்டும் விதமான பிஜேபி தேர்தல் பிரச்சாரத்தை முகங்கொடுத்த எதிர்கட்சிகள், மோடி மற்றும் பிஜேபி தலைவர் அமீத் ஷாவுக்கு அவற்றின் சொந்த பிற்போக்குத்தனமான முறையீடுகளுடன் "பதிலளித்ததன்" மூலமாக தங்களை முடக்கிக் கொண்டு இரகசியமாக அவர்களுக்கு உடந்தையாய் இருந்தன. பிரச்சினைக்குரிய காஷ்மீரில் ஒரு போர் நெருக்கடியைத் தூண்டிவிடுவதற்காக, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விமானத் தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவிட்டும் மற்றும் 1971 இக்குப் பின்னர் எந்த நேரத்திலும் இல்லாத அளவில் அந்த தெற்காசிய அணுஆயுத போட்டியாளர்களைப் போருக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் மோடி ஒரு பயங்கரவாத தாக்குதலை பற்றிக்கொண்ட போது, எதிர்கட்சிகள் இந்தியாவின் இராணுவத்தைப் புகழ்ந்துரைக்கவும் மற்றும் அவர்களின் ஆதரவைக் காட்டவும் ஒன்றின்மீது ஒன்று விழுந்தடித்து ஓடின.

காங்கிரஸ் கட்சி, ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ இக்கு ஒரு வரலாற்று தோல்வி

இந்த இந்திய தேர்தல்கள், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாவதும், சற்று சமீபம் வரையில் "தேசிய" கட்சியாகவும் இருந்துள்ள காங்கிரஸ் கட்சி, இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகள், அவற்றின் இடது முன்னணி தேர்தல் அணி, மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னர் இருந்து இந்தியாவில் "இடது" அரசியலில் செல்வாக்கு செலுத்தி உள்ள அவற்றுடன் இணைந்த தொழிற்சங்க எந்திரங்கள் மீதான ஒரு வரலாற்று மறுத்தளிப்பாக உள்ளன.

காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் ஜெயித்துள்ளது அல்லது முன்னணியில் உள்ளது, இது அதன் மிக மோசமான தேர்தல் தோல்வியைக் கண்ட 2014 ஐ விட வெறும் எட்டு ஆசனங்களே கூடுதலாக பெற்றிருப்பதைப் பிரதிநிதித்துவம் செய்யும். காங்கிரஸின் இந்த வெற்றிகளும் கூட, மொத்தத்தில் பிரதானமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அரசாங்கம் அமைத்துள்ள கேரளாவில் இடது முன்னணியும் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தும் வலதுசாரி பிராந்திய கட்சியான அஇஅதிமுக கட்சியும் இழந்தவற்றில் இருந்து பெற்றதாகும்.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஹரியான என ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 800 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் அதன் தே.ஜ.கூட்டணியின் கூட்டாளிகளும் அதிகரித்திருந்த அல்லது அதிக பங்குகளை ஜெயித்திருந்த மேற்கு மற்றும் வட இந்தியா எங்கிலுமான மாநிலங்களில் உண்மையில் காங்கிரஸ் கட்சி பிஜேபி வசம் ஆசனங்களை இழந்தது.

காங்கிரஸ் கட்சியின் வம்சாவழி தலைவரான ராகுல் காந்தியும் தோற்றவர்களில் உள்ளடங்குவார். அவர் உத்தர பிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தின் "கோட்டையாக" இருந்த அமேதி தொகுதியில் தோற்றுப் போனார். ஆனாலும் காந்திக்கு வரவிருக்கும் மக்களவையில் ஒரு ஆசனம் இருக்கும் ஏனென்றால் அவர் கேரளாவில் போட்டியிட்ட இரண்டாவது தொகுதியில் ஜெயித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி மருத்துவ கவனிப்பு மற்றும் கல்விக்கு இந்தியா செலவிடும் சொற்ப தொகைகளை அதிகரிப்பதற்கு வாக்குறுதி அளித்தும், ஓர் "உத்தரவாதமான ஆண்டு வருமான" திட்டத்தைப் படிப்படியாக கொண்டு வரவும், இதன் கீழ் மிக வறிய 20 சதவீத குடும்பங்கள் ஆண்டுக்கு 72,000 ரூபாய் (சுமார் 1,025 டாலர்) பெறும் என்று வாக்குறுதி அளித்தும், சமூக அதிருப்திக்கு ஒரு கணக்கிட்ட முறையீடு செய்தது.

இந்தியாவின் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் மிகச் சரியாக இத்தகைய வாக்குறுதிகள் சற்றும் நம்பத்தகுந்தவை இல்லை என்று கருதினர். பெரும்பாலான இந்தியர்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சி "வறுமையை ஒழிக்கும்" சூளுரைகளை வழங்கியவாறு, அதேவேளையில் ஈவிரக்கமின்றி இந்திய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எதை "காங்கிரஸ் சோசலிசம்" என்று எரிச்சலூட்டும் விதமாக முத்திரை குத்தியதோ 1991 இல் அதன் அரசு-தலைமையிலான அந்த முதலாளித்துவ அபிவிருத்தி திட்டம் சிதறியதும், அது இந்தியாவை உலகளாவிய மூலதனத்திற்கான மலிவு-உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக ஏகாதிபத்தியத்துடன் ஒரு புதிய பங்காண்மையை ஜோடிப்பதற்கான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் முனைவை முன்னெடுத்தது.

நெறிமுறைகள் தளர்த்துதல், தனியார்மயமாக்கல், பெருநிறுவன வரிகளைக் குறைத்தல், வேலை பாதுகாப்பை நீக்குதல், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்தல், இன்னும் பல இதுபோன்ற "பெருவெடிப்பு" சீர்திருத்தங்களைத் தொடங்கி நடைமுறைப்படுத்துவதிலும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் "உலகளாவிய மூலோபாய பங்காண்மையை" ஜோடிப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட பலமான நடவடிக்கைகள் பெரும்பாலும் 1991 இல் இருந்து 1996 வரையில் மற்றும் 2004 இல் இருந்து 2014 வரையில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களால் நடத்தப்பட்டன.

ஸ்ராலினிசவாதிகளோ இன்னும் அதிக அவமானகரமான தேர்தல் மற்றும் அரசியல் தோல்வியைப் பெற்றுள்ளனர். இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களிடையே அவர்களுக்கான மதிப்பார்ந்த ஆதரவு வழிந்து தீர்ந்துவிட்டது. தசாப்தங்களாக அவர்கள் அரசியல்ரீதியில் தொழிலாள வர்க்கத்தை நசுக்கினர்—பொருளாதார "சீர்திருத்த திட்டநிரலுக்காக" மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தியும் தணித்தும், மத்தியில் வலதுசாரி அரசாங்கங்கள், அவற்றில் பெரும்பான்மை காங்கிரஸ்-தலைமையிலானவை, வெற்றி பெறுவதற்கு முட்டுக்கொடுத்தும் வந்தனர், அந்த அரசாங்கங்கள் "சந்தை-சார்பு" கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதோடு, வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தின.

சிபிஎம் மற்றும் அதனினும் பழைய சிறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இரண்டும் சேர்ந்து வெறும் ஐந்து மக்களவை ஆசனங்களையே ஜெயித்துள்ளன. அனைத்திற்கும் மேலாக, அந்த ஐந்தில் நான்கு தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணியின் கலவையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இடது முன்னணியின் தேர்தல் கோட்டைகளாக மரபார்ந்து கருதப்பட்டு வந்ததும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து அரசாங்கம் அமைத்து வந்த மூன்று மாநிலங்களான மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா ஆகியவற்றில் அவர்கள் வெறும் 1 ஆசனம் மட்டுமே வென்றனர். 2011 இல் 34 ஆண்டுகால சிபிஎம் தலைமையிலான மாநில அரசு முடிவுக்கு வந்திருந்த மேற்கு வங்காளத்தில், பெருவாரியான வாக்குகளில் அதன் பங்கு ஒரு இலக்கத்திற்குள் வீழ்ந்தது. அம்மாநிலத்தில் சமீபம் வரையில் ஒரு சிறிய பங்கு வகிப்பாளராக இருந்த பிஜேபி திடீர் திருப்புமுனையை எட்டியது.

மேற்கு வங்காளத்தில் முதலாளித்துவ அரசு எந்திரத்தை பல தசாப்தங்களாக நிர்வகித்து வந்த பின்னர், மற்றும் 1991 இக்குப் பின்னர், அதுவே "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகள் என்று முத்திரை குத்தி நடைமுறைப்படுத்திய பின்னர், சிபிஎம் இல் மேலோங்கி உள்ள ஊழல் மற்றும் அரசியல் அழுகலை ஒரு அபிவிருத்தி எடுத்துக்காட்டியது. சிபிஎம் எந்திரத்தின் பெரும்பாலானவர்கள் அம்மாநிலத்தின் தற்போதைய ஆளும் கட்சியான வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸிற்கோ அல்லது ஹிந்து மேலாதிக்கவாத பிஜேபி க்கோ கட்சி மாறியிருந்தார்கள். மேற்கு வங்காளத்தில் ஜெயித்த பிஜேபி இன் 18 வேட்பாளர்களில் முன்னாள் சிபிஎம் மாநில சட்டமன்ற உறுப்பினர் Khagen Murmu உம் ஒருவராவார்.

15 ஆண்டுகளுக்கு முந்தைய தேசிய தேர்தலில், பிஜேபி / தே.ஜ. கூட்டணியின் முழு அளவிலான முதல்முறை தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பலையில் மிதந்து, சிபிஎம்-இடது முன்னணி 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்களுடன் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய அணியாக மேலெழுந்திருந்தது. சிபிஎம் வலதுசாரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செவிலித்தாயாக சேவையாற்றி அதன் பத்தாண்டுகால ஆட்சியில் முதல் நான்காண்டுகள் அதன் பிரதான நாடாளுமன்ற முண்டுகோலாக இருந்து, பல்வேறு பிராந்திய மற்றும் ஜாதிய கட்சிகளைக் காங்கிரஸிற்குப் பின்னால் அணிதிரட்டி செயல்பட வைக்க அதன் புதிதாக-கிடைத்த செல்வாக்கைச் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தியது.

2019 இல், ஸ்ராலினிஸ்டுகள் அதே குற்றகரமான பாத்திரம் வகிக்க விருப்பமுற்றிருந்தனர். மோடியை முதலாளித்துவ வர்க்கம் அரவணைத்ததில் எடுத்துக்காட்டப்பட்டவாறும் வேலைநிறுத்தங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டங்களின் சமீபத்திய அலையில் எடுத்துக்காட்டப்பட்டவாறும், வர்க்க போராட்டத்தின் வியத்தகு தீவிரப்பாட்டுக்கு அவர்களின் விடையிறுப்பு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கட்சிகளுக்கும் மற்றும் அவற்றின் மாநில கட்சிகளுடனும் கட்டிப்போடுவதற்கான அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக இருந்துள்ளது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பிஜேபி/தே.ஜ.கூட்டணியைத் தோற்கடிக்க சிறந்த வாய்ப்பிருந்தால் எந்த கட்சியாக அல்லது கூட்டணியாக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க அழைப்பு விடுத்து, “பிஜேபி தவிர வேறுயார் வேண்டுமானாலும் இருக்கட்டும்" என்ற பிரச்சாரத்தைத் தொடுத்தார்கள். அவர்கள் ஒரு "மதசார்பற்ற மாற்று" அரசாங்கத்தை உருவாக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கன்னையை —அதாவது முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தத்திற்கும், இந்தோ-அமெரிக்க கூட்டணிக்கும், உலகில் நான்காவது மிகப்பெரிய இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை இந்தியாவுக்கு வழங்கும் மீள்ஆயுதமயப்படும் திட்டத்திற்கும் பொறுப்பேற்ற எந்தவொரு பெருவணிக அரசாங்கத்தையும்— ஆதரிப்பதாக பிரகடனப்படுத்தினார்கள்.

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாட்களில், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்ற எண்ணிக்கை கணக்கு அனுமதித்தால், எவ்வாறு அவர்கள் அரசாங்கத்தில் அவர்களின் பங்கைக் கோருவது என்பதைக் குறித்து விவாதிக்க, காந்தியையும் மற்றும் அவரின் அன்னையும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்த விரல்விட்டு எண்ணக்கூடிய “நம்பத்தகுந்த” தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

பிஜேபி அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க இது ஒன்றே வழி என்று கூறி ஸ்ராலினிசவாதிகள் பல தசாப்தங்களாக வலதுசாரி அரசாங்கங்களுக்கான அவர்களின் ஆதரவை நியாயப்படுத்தி வந்துள்ளனர். பிஜேபி மற்றும் இந்து வலது முன்பை விட பெரும் ஆபத்தாக ஆகியுள்ளதே இறுதி விளைவாக உள்ளது.

தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் ஸ்ராலினிசவாதிகளால் மூச்சுத் திணறடிக்க செய்யப்பட்ட நிலையில் மற்றும் சமூக நெருக்கடிக்கு அதன் சொந்த சோசலிச தீர்வை முன்னெடுப்பதில் இருந்து தடுக்கப்பட்ட நிலையில், பெரும் சமூக சமத்துவமின்மை மற்றும் முன்பினும் ஆழமடைந்து வரும் பொருளாதார பாதுகாப்பின்மை மீதான மக்களின் கோபத்தையும் ஏமாற்றத்தையும் பிஜேபி ஆல் சுரண்ட முடிந்துள்ளது.

நெருக்கடி மற்றும் பிற்போக்குத்தனத்தின் அரசாங்கம்

குறைந்தபட்சம் ஆளும் உயரடுக்கின் மிகவும் கண்டுணரத்தக்க அடுக்குகளிடையே நிலவிய ஓர் அச்ச உணர்வு, மோடியின் தேர்தல் வெற்றி மீது பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் பங்குச்சந்தைகளின் கொண்டாட்டங்களின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய மற்றும் உலக முதலாளித்துவம் அமைப்புரீதியிலான நெருக்கடியில் சிக்கியுள்ளன. கடன் வழங்குமுறையை தொற்றக்கூடிய பெருநிறுவன கடன்களால் சுமையேறிய வங்கி அமைப்புமுறை; நீண்டகால விவசாய நெருக்கடியிலும், பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் வேரூன்றிய நுகர்வு தேவையின் வீழ்ச்சி; வர்த்தகப் போர் அபிவிருத்தி முன்னிறுத்தும் அச்சுறுத்தல் என இந்தியாவின் பொருளாதாரத்தைச் சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கைகள் இந்திய பத்திரிகைகள் எங்கிலும் நிறைந்துள்ளன.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் உலக அரங்கில் குறிப்பாக வெறுக்கத்தக்க பாத்திரம் வகித்து வருகிறது. வாஷிங்டன் உடனான அதன் மூலோபாய ஒருங்கிணைப்பு மூலமாக, புது டெல்லி பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற அமெரிக்க ஆக்ரோஷத்தை ஊக்குவித்து வரும் அதேவேளையில், பாகிஸ்தானை அச்சுறுத்தவும் மிரட்டவும் மற்றும் இந்தியாவின் அணுஆயுத இராணுவத்தைக் கட்டமைப்பதையும் கருத்தில் கொண்டுள்ளது.

இது இந்திய மக்களுக்கும், அப்பிராந்தியம் மற்றும் உலக மக்களுக்கும் முன்னிறுத்தும் அதீத அபாயங்களை முன்னிறுத்துவதுடன், இது 2016 க்குப் பின்னர் இந்தியா கடந்து சென்றுள்ள மூன்று போர் நெருக்கடிகளால் —இரண்டு பாகிஸ்தானுடன், ஒன்று சீனாவுடன்— தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றன.

அனைத்திற்கும் மேலாக, வல்லரசு மோதலின் பெருஞ்சுழலுக்குள் இந்தியா சிக்கியுள்ள நிலையில், இந்திய முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கடுமையாக அச்சுறுத்தும் அதன் வெளிவேடத்திற்கான அமெரிக்க கூட்டாளியிடம் இருந்து பல்வேறு தீவிரமான கோரிக்கைகளையும் முகங்கொடுத்து வருகிறது. ஈரான் மற்றும் வெனிசுவேலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிகளை வெட்டுவது, அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டின் மீது எஞ்சியுள்ள இந்திய தடைகளை நீக்குவது, மற்றும் ரஷ்யா உடனான புது டெல்லியின் மூலோபாய பங்காண்மையைக் குறைந்தபட்சம் விரைவாக குறைத்துக் கொள்வது அல்லது முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவையும் அத்தகைய கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன.

ஒவ்வொரு இடத்திலும் போலவே, அடுத்தடுத்த பொருளாதார மற்றும் மூலோபாய அச்சுறுத்தல்களுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பானது, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிராகவும் மற்றும் அதன் முதலாளித்துவ போட்டியாளர்களுக்கு எதிராகவும் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது.

இந்து வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை மோடி தூண்டிவிடுவது உயரடுக்கின் பிரிவுகளிடம் இருந்து கையைப் பிசைந்தவாறு குறைகூறல்களைத் தூண்டியுள்ள நிலையில், அவர் இந்திய அரசை ஸ்திரமின்மைப்படுத்தி மதிப்பிழக்கச் செய்து வருவதாகவும், இது ஒரு சூறாவளியைக் கொண்டு வருமென்றும் அவை அஞ்சுகின்றன. ஆனால் இந்தியா, இலண்டன் மற்றும் நியூ யோர்க்கின் பெருநிறுவன பொதுக்குழு அறைகளில் இருந்து வெளிப்படும் கோரிக்கையோ, தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தும் நோக்கில் பிஜேபி அரசாங்கம் இன்னும் கடுமையாக கட்டமைப்பு மாற்றங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதாக உள்ளது.

“பொருளாதார வேகம் குறைந்துள்ளது என்பது மட்டுமல்ல,” என்று இவ்வாரம் அறிவித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம், “அங்கே விலைவாசி முகப்பில் அழுத்தமிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளன, அதேவேளையில் உலகளாவிய வர்த்தகப் போர்கள் (ஒருவேளை நிஜமான போர்களே கூட) கட்டவிழ்ந்து எழுந்து வருகின்றன. இதன் விளைவாக சீர்திருத்தங்களுக்கு அழுத்தமளிப்பதை தவிர அடுத்த அரசாங்கத்திற்கு வேறு வழி இருக்காது,” என்று குறிப்பிட்டது.

இந்தியாவின் முதலாளித்துவ அபிவிருத்தி மற்றும் உலக முதலாளித்துவத்துடனான ஒருங்கிணைப்பின் விளைவாக பரந்தளவில் குறிப்பிடத்தக்க பலமேறியுள்ள தொழிலாள வர்க்கம், இன்னும் அதிக காலத்திற்கு பின் அல்ல விரைவிலேயே மோடி அரசாங்கத்துடன் நீண்டகால மோதலுக்குள் வரவிருக்கிறது. அதை ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை கொண்டு ஆயுதபாணியாக்குவதே முக்கிய கேள்வியாகும். இந்திய தொழிலாள வர்க்கம் தொழிலாளர்களின் ஓர் அரசாங்கத்திற்காகவும் மற்றும் சோசலிசத்திற்காகவும் போராடுகையில், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளையும் மற்றும் அவற்றின் கட்சிகளையும் எதிர்ப்பதில், கிராமப்புற ஏழைகளையும் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவரையும் அதன் பின்னால் அணித்திரட்டி, சிக்கன நடவடிக்கைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் போர் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, தன்னை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.