ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකාව: දෙමල ජාතික සන්ධානය ආන්ඩුවේ පොලිස් රාජ්‍ය සැලසුම් සමග පෙලගැසෙයි

இலங்கை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொலிஸ்-அரச திட்டத்துடன் அணிசேருகின்றது

By Subash Somachandran and S. Jayanth 
8 May 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஏப்பிரல் 21 அன்று தீவின் பல இடங்களில் நடந்த ஈவிரக்கமற்ற பயங்கராத தாக்குதலை பற்றிக்கொண்டு, அரசாங்கத்தால் நாடு பூராவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொலிஸ்-இராணுவ பாய்ச்சலுக்கு முழுமையாக ஆதரவளிக்கும் அதே வேளை, தமிழ் மக்களின் முன்னிலையில் அவற்றுடன் தாம் உடன்படவில்லை என பாசாங்கு காட்டும் வஞ்சத்தனமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன் பாகமாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இரத்தக் களரியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த பின்னர், இப்போது மீண்டும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யுத்தகால இராணுவச் சுற்றி வளைப்புகளை எதிர்கொள்கின்றனர். கடந்த நாட்களில் கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் உச்ச கட்டமாக வெள்ளிக் கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் விடுதியிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், மாணவர் ஒன்றிய தலைவர் என். திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். பல்திராஜும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அலுவலகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் அடங்கிய போஸ்டர் வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே வெள்ளிக் கிழமை வீரகேசரி பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, “ஐ.எஸ் பயங்­க­ர­வா­தத்தை சாத­க­மாக பயன்­ப­டுத்தி வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இரா­ணு­வத்தை குவிப்­பதை ஒரு­போதும் ஏற்­று­கொள்­ள­மு­டி­யாது, உடனடியாக நிலை­மை­களை வழ­மைக்கு கொண்­டு­வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

என்னவொரு வஞ்சத்தனம்! இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய சேனாதிராஜா, “தற்போதைய சூழ்நிலையில் தங்களை அறியாமலேயே இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலைக்கு நாங்கள் உள்ளாக்கப்பட்டுள்ளோம்” என அறிவித்திருந்தார்.

சேனாதிராஜாவின் முன்னுக்குப்பின் முரணாக பேசும் முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க, ஏப்பிரல் 23 அன்று, வடக்கு மற்றும் கிழக்கில் “பாதுகாப்பை கோரி”, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் உட்பட இன்னும் பல அதிகாரிகளுக்கு சேனாதிராஜா கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சியோன் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி, “வடக்கு பிரதேசத்திலும் அத்தகை தாக்குதல் நடக்க கூடும்” எனக் கூறியே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்பிரல் 23 முதல் நடைமுறைப்படுத்தியுள்ள கொடூரமான அவசரகால நிலைமை மற்றும் அதன் கீழ் பொலிஸ் மற்றும் இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளமை பற்றி தமிழ் கூட்டமைப்புக்கு எந்த முரண்பாடும் கிடையாது. அவசரகாலச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக நடத்தப்பட்ட பாராளுமன்ற கூட்டத்திலும், தமிழ் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து வாக்கெடுப்பு இன்றியே அதற்கு அங்கீகராம் அளித்தது.

ஜனாதிபதி சிறிசேன ஏப்பிரல் 25 அன்று நடத்திய அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்குபற்றிய தமிழ் கூட்டமைப்பு, ஏற்கனவே ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தது. அந்த மாநாட்டில் பங்குபற்றிய கட்சிகள், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் பெயரில் நடைமுறைப்படுத்த வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

முப்பது ஆண்டு காலமாக குருதியில் ஊறிய போருக்கு முகம் கொடுத்த மற்றும் யுத்தம் முடிவடைந்து பத்தாண்டுகளாகியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கொடூர அனுபவத்தை எதிர்கொண்டுள்ள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்கின்ற தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள், அவசர காலச் சட்டத்தை எதிர்ப்பதாக யாராவது நம்பியிருந்தால், கடந்த மூன்று வாரங்களில் அந்த கட்சியின் நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையை தகர்த்திருக்காவிட்டால்தான் புதுமை.

மே 2 அன்று, யாழ்ப்பாணத்தில் ஒரு நிருபர்கள் மாநாட்டை நடத்தி, புதிய அவசரகால விதிகளை நியாயப்படுத்திய கூட்டமைப்பின் ஒரு தலைவரான எம்.ஏ. சுமந்திரன், “இந்த சூழலில் பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டக்­கூ­டாது என எவரும் சொல்ல முடி­யாது. அவா்­க­ளிடம் (படைகளிடம்) இருக்கும் தக­வல்­களை வைத்து அவா்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். எல்­லா­வற்­றையும் பகி­ரங்­கப்­ப­டுத்த முடியாது. ஏன் அந்த இடத்தில் சோதனை ஏன் அந்த இடத்தில் சோதனை என கேட்டுக் கொண்­டி­ருக்க முடி­யாது,” என பிரகடனம் செய்தார்.

ஒடுக்குமுறைக்கு இந்த முறையில் செங்கம்பளம் விரிக்கும் தமிழ் கூட்டமைப்பு, அதன் மே தினத்தில் வெளியிட்ட பிரகடனத்தில், அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர், “கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கை மையப்படுத்தி சோதனைச் சாவடிகள் அமைத்தும், பலவாறு சோதனைகளை நடத்தியும் தமிழர்களின் இயல்பு வாழ்வை சிதைத்து அவர்களை மீளவும் உள்நாட்டு யுத்த கால அவல வாழ்வை இன்னொருமுறை அரங்கேற்றுவதாகவே அமைந்துள்ளது,” என குறிப்பிட்டுள்ளது.

தமிழ் கூட்டமைப்பானது வடக்கு-கிழக்கு பகுதியிலும் நாடு பூராவும் முன்னெடுக்கப்படும் இராணுவ-பொலிஸ் பாய்ச்சலுக்கும் அரசாங்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் பகுதியினர் கட்டியெழுப்பி வரும் பொலிஸ் ஆட்சிக்கு மாறுவதை நோக்கிய செயற்பாடுகளுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

பட்டை தீட்டப்பட்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான சுமந்திரன், தனது பத்தரிகையாளர் மாநாட்டில், தான் “அவசரகால விதிகளை பின்னர்தான் பார்த்தத்கவும் அவை மிக ­மோ­ச­மாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒன்றில் அந்த விதி­களை மாற்­ற­வேண்டும். இதற்­காக நீதி­மன்றம் செல்ல நடவ­டிக்கை எடுத் துள்ளோம்” என தனது பொறுப்பை மூடி மறைக்க சுமந்திரன் ஒரு போலி நாடகம் போட்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தின் மற்றும் ஒடுக்குமுறையின் இன்னொரு விஷமத்தனமான பக்கம் உண்டு. அது முஸ்லிம் எதிர்ப்பை தூண்டி விடுவதாகும். அதன் மூலம் முஸ்லிம்-தமிழ்-சிங்கள இனப் பிளவுகளை புதிய மட்டத்தில் முன் கொண்டுவருவதாகும். 1948இல் தனது கைக்கு ஆட்சி கிடைத்தது முதல் இலங்கை ஆளும் வர்க்கமானது தமிழர் விரோத இனப் பிளவுகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு, 1983இல் முழு யுத்தமாக பெருகச் செய்தது, தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக மட்டுமன்றி, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கி இலாப முறையை காத்துக்கொள்வதற்கே ஆகும்.

இவ்வாறு பொலிஸ் ஆட்சிக்குக்கு மாறும் ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கையுடன் தமிழ் கூட்டமைப்பு அணிதிரள்வது, அதன் புதிய திருப்பத்தைக் காட்டுகிறது. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.

முதலாவது, சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியின் பாகமாக இலங்கையிலும் உழைக்கும் மக்களின் போராட்டம் அபிவிருத்தி அடைவதாகும். இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தக் கூடிய நிலைமை இலங்கைக்குள் வளர்ச்சியடைந்து வருகின்றது. சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம்களாக இருக்கட்டும், முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பகுதியினரும், இந்த அபிவிருத்தியைப் பற்றி பீதியடைந்துள்ளன. பயங்கரவாத தாக்குதல் நடக்கவிருப்பதை அறிந்திருந்தும் அதற்கு இடம் கொடுத்திருந்த சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் தலைவர்களும் பாதுகாப்பு துறையும், இந்த நிலைமையில் தொழலாள வர்க்கத்தின் அத்தகைய போராட்டங்களை ஒடுக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொள்வதற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டுள்ளன.

அடுத்த பிரதான காரணம், கொழும்பில் உள்ள ஏகாதிபத்திய சார்பு ஆட்சி ஆட்டம் காணமால் பாதுகாத்து, காப்பாற்றிக் கொடுப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவால் தீவிரவாத தேசிய தவ்ஹாத் ஜமாத் கும்பலைப் பயன்படுத்திக்கொண்டு தாக்குதல் நடத்தியது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்பிக்கொண்டுள்ள நிலைமையிலேயே ஆகும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார உதவிகளையும் இராணுவ உதவிகளையும் பெற சீனாவுடன் நெருக்கமான உறவுகளை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹந்த இராஜபக்ஷவை அகற்றி, மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவர வாஷங்டன் முன்னெடுத்த ஆட்சி மாற்ற நடவடிக்கையுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்திருந்தது. அமெரிக்கா, இராஜபக்ஷவின் போருக்கும், ஜனநயாக-விரோத ஆட்சிக்கும் ஆதரவு கொடுத்த போதிலும், சீனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு முக்கிய முகாமாக இலங்கையை சேர்த்துக்கொள்வதன் பேரில், பெய்ஜிங் உடனான கொழும்பின் உறவுகளை வாஷிங்டன் எதிர்த்தது.

வாஷிங்டனின் இந்த மூலோபாய தேவைகளுக்கு சேவை செய்வது, தமது முதலாளித்துவ வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு மார்க்கம் என தமிழ் முதலாளித்துவ குழுக்கள் முடிவெடுத்துள்ளன. 2015 இல் இருந்து இதுவரை, தமிழ் கூட்டமைப்பானது கொழும்பு அரசாங்கத்தை பாதுகாக்கின்ற, அது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் சகல தாக்குதல்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கின்ற கொள்கையைப் பின்பற்றுகின்றது. அதன் ஒரு பாகமாக, இராணுவத்தைப் பாதுகாக்க கொழும்பு ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு உதவி செய்வதில் உள்ள துஷ்டத்தனமான செயற்பாடு எதுவெனில், இனவாத யுத்தத்தின் போது இராணுவம் இழைத்த குற்றங்களை மூடி மறைக்க உதவுவதாகும்.

பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர், அமெரிக்க எஃப்.பி.ஐ. மற்றும் இராணுவப் புலணாய்வுச் சேவைகளை கொழும்பில் இறக்கி, சிறிசேனவினதும் பிரதமர் விக்கிரமசிங்கவினதும் பூரண ஒத்துழைப்புடன், தனது போர் திட்டத்தை பலப்படுத்தி வருகின்றது. தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் இந்த ஆபத்தான திட்டம் குறித்து வாய் மூடி மௌனமாக இருந்து ஒத்துழைக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியவாறு, தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்வது தொழிலாளர்களை அன்றி முதலாளித்துவ வர்க்கத்தையே ஆகும். இதன் காரணமாகவே கொழும்பு முதலாளித்துவ வர்க்கம் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கு எதிராக அரச இயந்திரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவளிக்கின்றது.

தமிழ் மக்களுக்கு தங்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்கக் கூடிய முன்நோக்கிய பாதை உள்ளது. ஏகாதிபத்திய போருக்கு எதிராக சோசலிசத்துக்காகப் போராட வேண்டியது, தொழிலாள வர்க்கத்தின் முன் உள்ள அவசரமான பிரச்சினை ஆகும். முதலாளித்துவவாதிகளின் சகலவிதமான இனப் பாகுபாடுகளை கடந்து, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை ஸ்தாபித்து, தெற்காசியாவிலும் உலகம் முழுதும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதே ஒரே முன்நோக்கு ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்நோக்குக்காகப் போராடுகின்றது.