ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව විශ්වවිද්‍යාල තුල හමුදා කන්ඩායම් ස්ථානගත කිරීම අරඹයි

இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்குள்  இராணுவ குழுக்களை நிலைநிறுத்த தொடங்குகிறது

Kapila Fernando
14 May 2019

இலங்கையில் கடந்த ஏப்பிரல் 21 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு "அதிதீவிரவாதத்தை அடக்குதல்" என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளை அடுத்து அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவ குழுக்களை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளது.

இதுவரையில் சகல பல்கலைக்கழகங்களிலும் "சோதனை நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டு, வடக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு மற்றும் தென்கிழக்கு  பல்கலைக்கழகங்களிலும் இப்போதே இராணும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும்  நடைமுறைப்படுத்தப்படும்.

மாணவர்கள் உட்பட பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் பாசாங்கு அப்பட்டமான பொய்யாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் எழுந்துள்ள வர்க்கப் போராட்டத்தின் பாகமாக இலங்கை தொழிலாளர்களினதும் மாணவர்களினதும் போராட்டங்களை நசுக்குவதற்கு பொலிஸ் அரச திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே அரசின் நோக்கமாகும். அமுல்படுத்தப்பட்டுள்ள கொடூரமான அவசரகால சட்டத்தினதும் அத்தியாவசிய சேவை கட்டளைகளினதும் கீழ், எந்தவொரு நபரையும் எதேச்சதிகாரமாக கைது செய்து தடுத்துவைத்து விசாரணை செய்யவும் வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலங்களை தடைசெய்யவும் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வி வெட்டுக்கும் கல்வியை தனியார் மயப்படுத்தலுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களையும் பகிஷ்கரிப்புகளையும் செய்தனர். பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவ-பொலிஸ் படையினரை  நுழைப்பதானது அந்த போராட்டங்களை தடுப்பதற்கும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் மற்றும் ஆத்திரமூட்டல்களை கிழப்பிவிடவும் பயன்படுத்துவதற்கே ஆகும். அது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக தயார் செய்யப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

நடத்தப்பட்ட சோதனைகளின் பின்னர்  மே 3 ஆம் திகதி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது மாணவர் சங்க காரியாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன்கூடிய சுவரொட்டிகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில்,  அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறை நிலைமையினை வெளிப்படுத்தும் வகையில், இந்த இராணுவ நடவடிக்கைக்கு மறுதினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக செயற்பட்ட பேராசிரியர் இரத்னம் விக்னேஸ்வரனை பதவிநீக்கம் செய்து, பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமியை தற்காலிக துணைவேந்தராக நியமித்துள்ளார். முன்னாள் உப வேந்தரை பதவி நீக்கம் செய்தமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.

மே 7 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளும் விரிவுரையாளர்களும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனெரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை சந்தித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்பை பலப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக இராணுவ இணைய தளம் அறிவித்துள்ளது. "நீதியையும் சமாதானத்தையும்" பாதுகாக்க மேஜர் ஜெனெரல் சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக அறிவித்ததாகவும் மேலும் குறிப்பிடுகிறது.

கிழக்கில் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்களின் சோதனை நடவடிக்கையின் பின்னர், 30 பேரைக் கொண்ட இராணுவ அணியொன்று அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு "மட்டக்களப்பு கேம்பஸ்" என்ற பெயரில் நடத்தி வந்த தனியார் கல்வி நிறுவனத்தை அரசமயமாக்கியுள்ளதோடு அங்கும் இராணுவக் குழுவொன்று நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் பல்கலைக் கழகங்களில் கல்வி வசதிகள் வெட்டுக்கு எதிராக மாணவர்களினதும் கல்விசாரா ஊழியர்களினதும் போராட்டங்கள் எழுந்தன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் தமது பீடத்தின் கட்டிடங்களை நிர்மாணித்து தருமாறு தொடர் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்கள் கடந்த மார்ச் 27 அன்று, தமது சேவை நிலைமைகளை கட்டுப்படுத்துவதின் ஒரு பகுதியாக, தமது வருகையை உறுதிப்படுத்த கைரேகை பதிவு இயந்திரங்களை பொருத்துவதற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஏனைய பல்கலைக்கழகங்களில் இராணுவ அணிகளை ஈடுபடுத்துவது வெகு தொலைவில் இல்லை. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க ஆளும்வர்க்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்கலைக்கழக விடுதிகளுக்கு பிரவேசிக்கும்போது தமது மாணவ அடையாள அட்டைகளை பாதுகாப்புப் பிரிவினர்களுக்கு காட்டுமாறு அமுல்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு சட்ட திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள இவ் அறிக்கையில், விடுதிகளுக்கு வெளியார் எவரும் பிரவேசிக்கக் கூடாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, பேராதனை, ருஹுனு பல்கலைக்கழகங்களில் சோதனையின் போது, மாணவர்கள் பயன்படுத்திய தொழில் நுட்ப உபகரணங்கள் உடைகள் தொடர்பாக, பல்கலைக்கழகங்களுக்குள் "பயங்கரவாதிகள்" இருப்பதற்கு சமமான விதத்திலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இராணுவ சோதனை நடவடிக்கையின் பின்னர் "வடமத்திய பல்கலைக்கழக விடுதியொன்றில் அதிதொழில்நுட்ப சாதனமொன்று உட்பட பல உபகரணங்கள்" கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியொன்று பத்திரிகைகளில் வெளிவந்தன. அதில் 26 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் குறிப்பிட்டது. இரண்டு தினங்களுக்கு பின்னர் பல்கலைக்கழக அதிகாரிகள் அந்த "அதிதொழில்நுட்ப சாதனம்" தொழில்நுட்ப பீட மாணவர்கள் யானைகளை விரட்டுவதற்க்கு உருவாக்கிய சாதனமெனவும் இருந்த சிம் அட்டைகள் மேலதிக வருமானத்தை தேடிக்கொள்ளும் நோக்குடன் மாணவர் ஒருவரால் விநியோகத்திற்காக கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் சேனக்க பிபிளே விடுதியில் நுழைந்து "அங்கு கண்டுபிடித்த" இராணுவ உடைகளுக்கு சமமான உடைகள் சிலவும் "வோக்கி டோக்கி" உபகரணங்கள் இரண்டும் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதுபோன்ற ஆடைகளை அணிவது இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு நாகரீகம் எனவும் மலையேறுவதில்  ஈடுபடும் மாணவர்கள் "வோக்கி டோக்கி" பரந்தளவில் பாவனைக்கு எடுப்பதாகவும்  மாணவர்கள் குறிப்பிட்டார்கள்.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கைகளின்போது, மாணவர் சங்க அலுவலகங்களுக்குள் பலவந்தமாக பிரவேசித்த இராணுவம் மாணவ பிரதிநிதிகளின் பெயர்களையும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) அறிக்கைகளையும் படமெடுத்து சென்றதாக அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முனகும் அ.ப.மா.ஒ. மாணவ தலைவர்கள், சில சோதனை நடவடிக்ககைகளில் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர். அனைத்து சோதனை நடவடிக்கைகளிலும் தம்மை இணைத்துக்கொள்ளாமையே அ.ப.மா.ஒ.வின் வேதனையாக உள்ளது. அ.ப.மா.ஒ. முன்னிலை சோசலிச கட்சியால் வழிநடத்தப்படும் அமைப்பாகும். அரசாங்கம் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுத்துச் செல்லும் இராணுவமயப்படுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ள அனுசரணை, அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தியுள்ளது. "பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி" பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரும் அ.ப.மா.ஒ., அரசாங்கம் பொலிஸ்-இராணுவதுக்கு அதிகாரமளித்துள்ளமை உரிய முறையில் செய்யப்படவில்லை என்று மட்டுமே விமர்சிக்கின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் எனும் பெயரில் நடத்திச் செல்லப்படும் தனியார் கல்வி நிறுவனத்தில், "முஸ்லீம் அதிதீவிரவாதத்திற்கு" ஆதரவு வழங்கும் பாடங்கள் நடப்பதாகவும், அரசாங்கம் அதை அரச கண்காணிப்பில் நடத்திச் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் பொலிஸ் இராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை வழங்கும் அ.ப.மா.ஒ. "மட்டக்களப்பு பட்டப்படிப்பு கடையை முழுமையாக இல்லது செய்ய பரந்த போராட்டத்தை ஆரம்பிப்போம்" என மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

"யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், மே 8 அன்று விடுத்த அறிக்கையில் பின்வருமாறு வலியுறுத்தியது: "பல்கலைக்கழகத்துக்குள் சோதனை நடவடிக்கைகளும் கைதுசெய்தலும் “பயங்கரவாதத்தை” நசுக்குதல் என்ற போர்வையில் அரசாங்கம் அபிவிருத்திசெய்யும் பொலிஸ் அரசு நடவடிக்கைகள், எதிர்வரும் வர்க்கப் போராட்டத்தின் மீது காட்டும் பதிலடி தொடர்பான முன்னறிவிப்பாகும்."

"அரசாங்கத்தின் அடக்குமுறையை தோற்கடிக்க, சகலவிதமான சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கூடிய ஒரே சக்தியாகிய சர்வதேச தொழிலாள வர்கத்தை நோக்கி மாணவர்கள் திரும்ப வேண்டும். அந்த உரிமைகளை மாணவர்களார் தனியாக பாதுகாக்க முடியும் என அ.ப.மா.ஒ. மற்றும் முன்னிலை சோசலிச கட்சியும் முன்வைக்கும் கருத்துக்கள் அப்பட்டமான பொய்யாகும்.

"அதற்காக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதும் அதை சூழ ஒடுக்கப்பட்ட விவசாயிகளையும் மாணவர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவது அத்தியாவசியமாகும். இதற்காக மாணவர்கள் மத்தியில் போராடுவது சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் மட்டுமே".