ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The assault on the Venezuelan embassy

வெனிசுவேலா தூதரகம் மீதான தாக்குதல்

Bill Van Auken
18 May 2019

வாஷிங்டன் மேற்புற அண்டைப்பகுதியான ஜோர்ஜ்டவுனில் அமைந்துள்ள வெனிசுவேலா தூதரகத்தில் வியாழனன்று நடந்த சம்பவங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது உலகெங்கிலுமான நடவடிக்கைகளைக் குணாம்சப்படுத்தும் விதமாக, அது சர்வதேச சட்டங்களின் அவமதிப்பதிலும் மற்றும் அதன் குற்றகர நடவடிக்கைகளிலும் ஒரு சிறிய அம்சத்தை வெளிப்படுத்தியது.

வெனிசுவேலா அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அங்கிருந்து நான்கு அமைதியான போர்-எதிர்ப்பு நடவடிக்கையாளர்களை வெளியேற்றுவதற்காக, கடந்த மாதத்திலிருந்து அத்தூதரகத்தில் தங்கியிருந்து வரும் பெரிய இராணுவப் படைப்பிரிவின் பாகமாக அமெரிக்க இரகசிய சேவை முகவர்கள், வாஷிங்டனின் மகாநகர பொலிஸ் மற்றும் வெளியுறவுத்துறையின் இராஜாங்க பாதுகாப்புச் சேவை முகவர்கள், நூற்றுக் கணக்கான ஆயுதமேந்திய இராணுவத்தினரும் அக்கட்டிடத்தை முற்றுகையிட்டு தாக்கினர்.

அத்தூதரகத்திற்குள் அவர்கள் நுழைவதற்கு வழி ஏற்படுத்துவதற்காக, போர்ப்படை சீருடைகளும் தலைகவசங்களும் அணிந்து இடிக்கும் கருவிகளுடன் வந்த முகவர்களும் அப்படைப்பிரிவில் உள்ளடங்கி இருந்தனர். கட்டிடத்தை உடைக்க அனுப்பப்பட்டிருந்தவர்களில் பலர் குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்தனர்.

அக்கட்டிடத்திற்குள் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இருந்தனர் என்ற நிலையிலும், அவர்கள் கைது நடவடிக்கையை சட்டவிரோதமானதாக கருதியதால் அதை அவர்கள் எதிர்க்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு முன்பே உறுதியளித்திருந்த நிலையிலும், அதிகரித்தளவில் இராணுவமயப்பட்ட இந்த படைபலத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியமே அங்கே இருக்கவில்லை. அது அமெரிக்க அரசின் அதிகாரத்தை எடுத்துக்காட்டுவதற்கும், உள்நாட்டிலும் சரி சர்வதேச அளவிலும் சரி அதன் சூழ்ச்சி நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரொருவரையும் பயமுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவும், மற்றும் சட்டம் அதிர்ச்சிகரமாக சேதப்படுத்தப்படும் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான ஒரு விளக்க அறிக்கையாகவும் அந்நடவடிக்கை நடத்தப்பட்டது.

1963 இல் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்த மற்றும் நடைமுறையளவில் உலகின் ஒவ்வொரு நாட்டினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த இராஜாங்க உறவுகள் மீதான வியன்னா உடன்படிக்கையின் ஒட்டுமொத்த விதிமீறல் என்பதால், வெனிசுவேலா அரசாங்கம் அதன் தூதரகம் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது. தூதரகங்களும் மற்றும் பிற இராஜாங்க இடங்களும் "விதிமீறப்படாத" இடங்கள் என்பதோடு, அங்குள்ள இராஜாங்க குழு தலைவரின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் இடம் வழங்கி இருக்கும் அரசாங்கத்தினது முகவர்கள் அதற்கு நுழைய கூடாது என்பதையும் அந்த உடன்படிக்கை உறுதிப்படுத்துகிறது. அதேபோல, அந்த இராஜாங்க இடங்களை அந்தந்த நாட்டு அரசாங்கமே "எந்தவொரு ஊடுருவல் அல்லது சேதத்திலிருந்தும்" காப்பாற்ற வேண்டும் என்பதுடன் "அந்த தூதரகக் குழுவின் அமைதிக்கு எந்தவொரு தொந்தரவையோ அல்லது அதன் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுக்க" வேண்டியதையும் அது அவசியப்படுத்துகிறது.

வெனிசுவேலா தூதரகம் சம்பந்தமான ஒவ்வொரு அம்சத்திலும் வாஷிங்டன் இத்தகைய வழிவகைகளை மிதித்து நசுக்கி நாசமாக்கி உள்ளது. அக்கட்டிடத்திற்குள் பலவந்தமாக அதற்கான வழியை ஏற்படுத்துவதற்கு முன்னதாக, அது தூதரகத்திற்கு வெளியே பாசிச கும்பல் மற்றும் வலதுசாரி குண்டர்களை, அந்த இடத்தில் முகாம்கள் அமைக்கவும் மற்றும் உள்ளிருக்கும் நடவடிக்கையாளர்களை ஆதரிப்பவர்களை அல்லது அவர்களுக்கு உணவு கொண்டு வர முயல்பவர்களை ஸ்தூலமாக தாக்குவதற்கும் அனுமதித்திருந்தது. இந்த கூறுபாடுகள் மீண்டும் மீண்டும் தூதரக கட்டிடத்தைச் சேதப்படுத்தி அதை உடைக்க முயன்றதுடன், உள்ளே இருந்தவர்களை படுகொலை மற்றும் கற்பழிப்பு ஆகியவற்றுடன் அச்சுறுத்தியது. அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மிகவும் மோசமடைந்த இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தலையிட்ட பொலிஸோ, கண்மூடித்தனமாக படுகொலை செய்யும் சூழலைத் தூண்டிவிட்டும் அதற்கு உதவும் வகையிலும், குற்றமிழைத்தவர்களை உடனடியாக விடுவித்தது.

நவம்பர் 1979 சம்பவங்களுக்காக "அடாவடி அரசு" என்றழைக்கப்படும் ஓர் அரசாக ஈரானை, வாஷிங்டன் பல தசாப்தங்களாக அச்சுறுத்தி வந்துள்ளது — இப்போது அது போரைக் கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு புரட்சியின் வேதனை வேளையில், போர்குணமிக்க மாணவர்கள் அமெரிக்காவின் தெஹ்ரான் தூதரகத்தில் அமெரிக்க இராணுவ சிப்பாய்களைப் பிணைக்கைதிகளாக பிடித்து, அக்கட்டிடத்தை தகர்த்தனர். வாஷிங்டன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்று, அத்தாக்குதலைத் தடுக்க தவறியதற்காக வியன்னா உடன்படிக்கையை மீறிவிட்டதாக ஈரானிய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியது.

ஈரானிய அரசாங்கம் அந்த விசாரணை நடவடிக்கைகளில் பங்கெடுக்கவில்லை. அதற்கு பதிலாக அது, மொஹம்மத் மொஸ்சாதிக்கின் தேசியவாத அரசாங்கத்தை தூக்கியெறிந்த சிஐஏ-முடுக்கிவிட்ட 1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து, அதன்பின்னர் ஷா சர்வாதிகாரத்திற்கும் மற்றும் அதன் வெறுக்கப்பட்ட சாவக் இரகசிய பொலிஸ் நடத்திய படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கும் வாஷிங்டனின் ஆதரவு வரையில், ஈரானில் முந்தைய கால் நூற்றாண்டு கால அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களின் உள்ளடக்கத்தில் வைத்து அந்நடவடிக்கையைப் பார்க்க வேண்டுமென வலியுறுத்தியது. ஷாவை அமெரிக்கா மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பதன் மூலமாகவும் மற்றும் அவர் தன்னுடன் எடுத்து சென்ற பாரியளவிலான செல்வங்களைத் திரும்ப ஒப்படைப்பதன் மூலமாகவும் மட்டுமே அந்த தூதரக பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று ஈரானிய அரசாங்கம் வலியுறுத்தியது.

அமெரிக்காவின் ஈரானிய தூதரகம் சம்பந்தமாக வாஷிங்டன் ஹேக் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகள் ஏறியிறங்கிய பின்னர், நிக்கரகுவாவுக்கு எதிரான அதன் பயங்கரவாத கொன்ட்ரா போருக்காக வழக்கில் இழுக்கப்படுவதைத் தவிர்க்க அந்நீதிமன்றத்தின் நீதிபரிபாலனைகளை நிராகரித்தது.

“அடாவடி அரசுகள்" என்று வரும்போது, இப்புவியில் அமெரிக்காவுக்கு போட்டியாக இருக்கக்கூடிய வேறெந்தவொரு அரசும் இல்லை.

வெனிசுவேலா தூதரகத்தைத் தாக்கியதில், அதிவலதுசாரியான, சிஐஏ-பின்புலத்திலான அரசியல் செயல்பாட்டாளரும் தன்னைத்தானே கடந்த ஜனவரியில் வெனிசுவேலாவின் "இடைக்கால ஜனாதிபதியாக" அறிவித்துக் கொண்டவருமான ஜூவான் குவைடோவின் "அரசாங்கத்தின்" சார்பாக செயல்பட்டதாக அது வாதிடுகிறது. குவைடோ தனக்குத்தானே "பதவிப்பிரமாணம்" செய்து கொண்டதுடன் தொடங்கிய இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை, அண்மித்து நான்கு மாதங்களுக்குப் பின்னர், பலம் இழந்துள்ளது. மதுரோ அரசாங்கத்தை இராணுவத்தைக் கொண்டு முற்றுமுதலாக தூக்கிவீசுவதற்கான ஒரு முறையீட்டுடன் ஆட்சி மாற்ற நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கான ஏப்ரல் 30 முயற்சி பரிதாபகரமாக தோல்வியடைந்துடன், ஓர் இராணுவக் கிளர்ச்சியும் நடக்கவில்லை அல்லது மக்களிடம் இருந்து எந்தவொரு குறிப்பிடத்தக்க ஆதரவும் அதற்கு கிடைக்கவில்லை.

இந்த தூதரக கைப்பற்றுதலானது அது விரும்பிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர, அதிகரித்தளவில் நேரடியான அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கான ஒரு வெளிப்படையான முறையீட்டினது பாகமாகும்.

இந்த தூதரகத்தில் இப்போது, குவைடோவின் அதிவலதுசாரி கட்சியான மற்றும் அமெரிக்க நிதியுதவி பெறும் மக்கள் விருப்பம் (Voluntad Popular) கட்சியில் உறுப்பினரான கூட்டாளி Carlos Vecchio பதவியில் அமர்த்தப்பட உள்ளார். வெனிசுவேலாவில் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டுக்காக Vecchio நாடு கடத்தப்பட்டிருந்தார். வெனிசுவேலாவின் "தூதராக" குவைடோ அவரைப் பிரகடனப்படுத்திய நிலையில், தன்னைத்தானே "இடைக்கால ஜனாதிபதியாக" அறிவித்துக் கொண்டவரைப் போலவே, அவரும் வெனிசுவேலா மக்களையோ அல்லது எந்தவொரு நிஜமான அரசாங்கத்தையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவருடைய "தூதரகம்" கடவுச்சீட்டோ அல்லது நுழைவனுமதிகளோ வழங்க முடியாது அல்லது இராஜாங்க குழுவுடன் வேறு எந்தவொரு பொதுவான வர்த்தக நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாது.

அதற்கு மாறாக, அவரும் சரி குவைடோவும் சரி வாஷிங்டனிடம் இருந்து சம்பளம் பெறும் முகவர்களாக உள்ளனர். இப்புவியில் மிகப்பெரிய வெனிசுவேலாவின் எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்க எரிசக்தித்துறை பெருநிறுவன ஜாம்பவான்களின் விட்டுக்கொடுப்பற்ற கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் வெனிசுவேலாவிலும் மிகப் பரந்தளவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதை நீண்டகாலமாக அதன் "சொந்த கொல்லைப்புறமாக" கருதி வந்துள்ளதோ அந்த இலத்தீன் அமெரிக்காவில், சீனா மற்றும் ரஷ்யா இரண்டினது அதிகரித்து வரும் செல்வாக்கைக் குறைப்பதற்குமான அமெரிக்க முனைவில் அவர்கள் பகடைக்காய்களாக உள்ளனர்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் அனைத்து அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகின்ற பென்டகனின் தெற்கு கட்டளையகத்தின் (SOUTHCOM) தளபதிகளைத் திங்களன்று சந்திப்பதே, “தூதராக", அமெரிக்க இரகசிய சேவையால் புதிதாக நிறுவப்பட்ட, Vecchio இன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கப் போகிறது. குவைடோ முகாம் SOUTHCOM க்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், “நமது ஜனநாயகத்தை மீட்டமைக்கும் ... விதத்தில் மூலோபாய மற்றும் செயல்பாட்டு திட்டங்களை" செயல்படுத்துவதே அதன் நோக்கம் என்று தெரிவித்தது.

இந்த "ஜனநாயகம்" என்பது, அந்நாட்டின் எண்ணெய் வளத்தை எக்சான் மொபெல் நிறுவனம், செவ்ரொனுக்கும் மற்றும் மிச்சத்தை Big Oil நிறுவனங்களுக்கும் வழங்குவதற்குப் பொறுப்பேற்கக்கூடிய, வெனிசுவேலா ஆளும் செல்வந்தத்தட்டின் மிகவும் வலதுசாரி பிரதிநிதிகளைப் பதவியில் ஏற்றுவதற்காக அமெரிக்க இராணுவத்தினது ஒரு ஆட்சி மாற்ற போரால் கொண்டு வரப்பட இருக்கிறது.

வெனிசுவேலா தூதரக படையெடுப்பைக் கொண்டு வாஷிங்டன் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி உள்ளது. அது உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் தூக்கியெறிவதற்கும், தலைவர்களைப் பிரதியீடு செய்து அதன் சொந்த கைப்பாவையை நிறுவுவதற்கும், அமெரிக்க இராணுவ தலையீட்டை ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் சட்டபூர்வமாக ஆக்குவதற்கும் உதவியாக வாஷிங்டனில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தில் அதன் பிரதிநிதியை நிறுவுவதற்கும் அதற்கு உரிமை இருப்பதாக கோருகிறது.

இந்த குற்றகரமான நடவடிக்கை அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களில் பெரிதும் மவுனமாக கடந்து செல்லப்பட்டுள்ளதுடன், வெளியிடப்பட்ட ஒருசில செய்திகளிலும் அது நியாயப்படுத்தப்பட்டுள்ளது. நியூ யோர்க் டைம்ஸின் செய்தி குறிப்பிடத்தக்கதாகும், அது குறிப்பிடுகையில், “வெள்ளையினத்தவர்கள், அமெரிக்கர்கள், தலையீட்டை-எதிர்க்கும் நடவடிக்கையாளர்கள் மேலோங்கிய ஒரு குழு ஆக்கிரமித்து கொண்டிருக்கும் வெனிசுவேலா இராஜாங்க கட்டிட சுற்றுச்சுவர் ஒத்திசைவின்றி இருப்பது, அத்தூதரகத்தைச் சுற்றி வளைத்திருந்த அதிகளவில் வெனிசுவேலா போராட்டக்காரர்களாக இருந்தவர்களிடையே கடுஞ்சீற்றத்திற்கான ஆதாரமாக இருந்தது,” என்று குறிப்பிடுகிறது.

என்னவொரு அருவருக்கத்தக்க அபத்தம்! அந்த தூதரகத்தைச் சுற்றி வளைத்திருந்த பாசிசவாத குண்டர்கள் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையை எதிர்த்தவர்களின் இனம் அல்லது தேசிய அடையாளம் மீது "கடுஞ்சீற்றம்" கொண்டிருக்கவில்லை, மாறாக அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்திற்குத் திரும்புவதற்காக நாடுகடத்தப்பட்ட வலதுசாரிகள் மற்றும் செல்வந்த தட்டுக்களுடன் அணிசேர்ந்து அவர்கள் நின்றிருந்தார்கள். அதன் வழக்கமான நடவடிக்கையாக, டைம்ஸ் ஏகாதிபத்திய குற்றகரத்தன்மையை நியாயப்படுத்த வலதுசாரி அடையாள அரசியலைப் பயன்படுத்துகிறது.

ஜனநாயகக் கட்சியில் ட்ரம்ப் நிர்வாகத்தைப் பாசாங்குத்தனமாக எதிர்க்கும் அரசியல் எதிர்ப்பாளர்களிடம் இருந்தும் அங்கே எதிர்ப்பின் எந்த அறிகுறியும் இல்லை, அவர்கள் அனைவரும், பைடனில் இருந்து சாண்டர்ஸ் வரையில், வெனிசுவேலாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்களை முன்னெடுக்கும் சட்டவிரோத குறிக்கோள்களுக்காக, வலதுசாரி குண்டர்களைச் சேர்த்து பாரியளவிலான பொலிஸ் அதிகாரத்தை அது அணிதிரட்டியதைக் கொண்டு பார்க்கையில், வெனிசுவேலா தூதரக முற்றுகை அமெரிக்காவிலும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையைக் கொண்டுள்ளது.

மீளெழுந்து வரும் வர்க்க போராட்டம் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளின் முன்னால், அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கான பாசாங்குத்தனத்தைக் கூட கைவிட்டு, இன்னும் பகிரங்கமாக ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கியும் மற்றும் பாசிசவாத வலதுசாரி சக்திகளை ஊக்குவிப்பதை நோக்கியும் திரும்பி வருகின்றன.

அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, இவை அவரை மரண தண்டனைக்கே இட்டுச் செல்லக்கூடும் என்கின்ற நிலையில், அவரை தண்டிப்பதற்கு முனைந்து வருகின்ற அமெரிக்க வழக்குதொடுனர்களின் சார்பாக பிரிட்டிஷ் பொலிஸின் பிடிக்கும் படைக்கு இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தின் கதவுகளைத் திறந்து விட்டதைப் பின்தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள வெனிசுவேலா தூதரகத்தை உடைத்த நடவடிக்கை வருகிறது.

வெனிசுவேலா மீதான போர் அச்சுறுத்தலுக்கான போராட்டத்துடன் சேர்ந்து ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் உள்ள அவர்களின் போர்வெறியர்களின் மற்றும் ஜனநாயக கட்சியிலும் ஊடகங்களிலும் உள்ள அவர்களின் நாகரீக சேவர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிர்புறத்தில் தனது நலன்களைக் கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கியுள்ளது.