ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The class issues in the fight to free Julian Assange

ஜூலியன் அசான்ஜை விடுவிக்கும் போராட்டத்தில் உள்ள வர்க்க பிரச்சினைகள்

Joseph Kishore
25 May 2019

1917 தேசத்துரோக சட்டத்தின் கீழ் 17 குற்றச்சாட்டுக்களுடன் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மீதான குற்றப்பத்திரிகை ஓர் அரசியல் திருப்புமுனையாகும். அரசின் குற்றகரத்தன்மை மற்றும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ள ஒரு துணிச்சலான பத்திரிகையாளரின் தனிப்பட்ட தலைவிதியும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதில் ஒரு புதிய கட்டமும் ஒன்றோடொன்று பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ள இரண்டு பிரச்சினைகள் பணயத்தில் உள்ளன.

பிரிட்டனில் இருந்து அசான்ஜ் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அவர் அவரது எஞ்சிய வாழ்நாளில் சிறையையோ அல்லது அதை விட மோசமான நிலைமையையோ முகங்கொடுக்கிறார் என்பதை இந்த புதிய குற்றச்சாட்டுக்கள் தெளிவுபடுத்துகின்றன. எல்லா கணக்குகள் மீதும் அசான்ஜிற்குத் தண்டனை வழங்கப்பட்டால், அந்த தண்டனை 175 ஆண்டுகளாக இருக்கும். அதற்கும் மேலாக, மரண தண்டனை ஏந்தியுள்ள குற்றச்சாட்டுகளாக இருக்கக்கூடியவை உட்பட இன்னும் கூடுதல் குற்றச்சாட்டுக்களை பரிசீலிக்கவும் மற்றொரு நீதியரசர்கள் விசாரணைக் குழு வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அரசு நடவடிக்கைகள் குறித்து உண்மையான தகவல்களை வெளியிட்டு பரவ விட்டதற்காக தேசத்துரோக சட்டத்தின் கீழ் அசான்ஜைக் குற்றஞ்சாட்டும் இந்த முடிவானது, பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான முதல் அரசியலமைப்பு திருத்த பாதுகாப்புகள் மீதான ஒரு நேரடி தாக்குதலாகும்.


ஜூலியன் அசான்ஜ்

“தேசிய பாதுகாப்பு" சம்பந்தமான ஆவணங்களைப் பெற்றதாக அசான்ஜ் குற்றஞ்சாட்டப்படுகிறார். அதாவது, அசான்ஜை வழக்கில் இழுத்து இன்னல்படுத்த முடியுமென்றால், விக்கிலீக்ஸில் இருந்து ஆவணங்களை அணுகும் அல்லது அவற்றை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் எவரொருவரையும் அவ்வாறு செய்ய முடியும். இது ஒரு பொலிஸ் அரசுக்கான போலியான-சட்ட சூத்திரமாகும்.

நவீன வரலாற்றில் மிகப் பாரியளவிலான அரசியல் ஜோடிப்புகளில் ஒன்றுக்கு அசான்ஜ் பலியாகி உள்ளார். இந்த ஜோடிப்பை நோக்கிய மனோபாவம் அமைப்புகளின் மற்றும் தனிநபர்களின் வர்க்க நிலைப்பாட்டை வரையறுக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகமும் சரி அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கன்னைகளும் சரி, ஜனநாயக உரிமைகளுக்கு கடுமையாக விரோதமாக உள்ள ஆளும் உயரடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஊடகங்கள், அதுவும் குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஏனைய பிரசுரங்களும், ஜூலியன் அசான்ஜை அழிக்கவும் ஏகாதிபத்திய போர்களுக்கான எதிர்ப்பைக் குற்றகரமாக்கவும் குற்றகரமான சூழ்ச்சியில் உடந்தையாய் உள்ளன.

“ஜூலியன் அசான்ஜின் குற்றப்பத்திரிகை முதலாம் அரசியலமைப்பு திருத்தத்தின் இதயதானத்தை இலக்கு வைக்கிறது,” என்று தலைப்பிட்டு வியாழக்கிழமை இரவு டைம்ஸ் ஒரு தலையங்கம் வெளியிட்டது, இது அதன் பாசாங்குத்தனமான பாத்திரத்தை அம்பலப்படுத்துகிறது.

டைம்ஸ் தலையங்கம் அந்த புதிய குற்றப்பத்திரிகை மீது ஆச்சரியம் காட்டி போலியாக நடிக்கிறது, அந்த குற்றப்பத்திரிகை "பல தலைமுறைகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க இதழியலை உறைய செய்யும் பாதிப்பாக இருக்கக்கூடிய" ஒரு "குறிப்பிடத்தக்க தீவிரப்பாடு" என்றது குறிப்பிடுகிறது.

ஏப்ரலில், இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து அசான்ஜ் வன்முறையாக பிடிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், டைம்ஸ் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளை பாராட்டியது. “சர்ச்சைக்கிடமற்ற குற்றத்துடன் திரு. அசான்ஜைக் குற்றஞ்சாட்டியதன் மூலம் நிர்வாகம் சிறப்பாக ஆரம்பித்துள்ளது,” என்று அது எழுதியது. அசான்ஜின் கைது நடவடிக்கையை ஆதரித்து, அந்த பதிப்பாசிரியர்கள் எழுதுகையில், அவரின் வழக்கு "சட்டபூர்வ பத்திரிகையியலுக்கும் அபாயகரமான இணைய குற்றத்திற்கும் இடையே ஒரு கோடு கிழிக்க உதவும். அதற்கும் மேலாக, அமெரிக்காவில் ஒருகாலத்தில், கிளிண்டன் பிரச்சாரம் மீது ரஷ்யா அதன் தாக்குதல்களை முடுக்கிவிடுவதில் அவர் ஒரு உபயோகமான ஆதாரநபராக இருந்திருக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டது.

அசான்ஜ் வழக்கில் உள்ள ஆபத்தான உள்நோக்கங்களைக் குறித்து திடீரென அது புரிதலுக்கு வந்துவிட்டதாக யாராவது நம்புவார்களென டைம்ஸ் எதிர்பார்க்கிறதா?

அசான்ஜ் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 12 இல், உலக சோசலிச வலைத் தளம் அதன் ஆசிரியர் குழு அறிக்கையில் எழுதியது, இந்த பூர்வாங்க குற்றச்சாட்டுக்கள் "அப்பட்டமான பொய்யாகும், அசான்ஜை கைமாற்றுவதைச் சுலபமாக்குவதும், ஈக்வடோர் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவரை சித்திரவதை மற்றும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும் ஓர் அரசாங்கத்திடம் அசான்ஜை ஒப்படைக்கவில்லை என்று ஒரு சாக்குப்போக்கு வழங்குவதுமே அதன் நோக்கமாக உள்ளது,” என்று குறிப்பிட்டது.

இது ஊர்ஜிதப்பட்டுள்ளது. இந்த பூர்வாங்க குற்றச்சாட்டுக்கள் அவரின் சட்டவிரோத கைதை ஆதரிப்பதற்காக டைம்ஸிற்கும் மற்றும் ஏனைய அடிபணிந்த ஊடகங்களுக்கும் நியாயப்பாடுகளையும் வழங்கின.

அசான்ஜின் நற்பெயரைச் சீர்கெடுத்து டைம்ஸ் ஒரு தசாப்தத்தில் செய்யாத செயலைச் செய்துள்ளது. ட்ரம்ப் நிர்வாக நடவடிக்கைகளை விமர்சிக்க அர்பணிக்கப்பட்டதாக இருக்கக்கூடிய ஒரு தலையங்கத்தில் கூட, அப்பத்திரிகையால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “புரியாத புதிராக விளங்கும் திரு. அசான்ஜின் அணுகுமுறைகள் மற்றும் உத்தேசங்களால் நிறைய தொந்தரவு ஆகக்கூடியதாக உள்ளது,” என்றவர்கள் எழுதினர்.

நியூ யோர்க் டைம்ஸை எது "தொந்தரவூட்டுகிறது" என்றால், ஈராக்கிய அப்பாவி மக்களின் படுகொலை உட்பட அரசு குற்றங்களை அம்பலப்படுத்தி, ஓர் உண்மையான பத்திரிகையாளர் நடந்து கொள்ள வேண்டிய அதேவிதத்தில் அசான்ஜ் நடந்துள்ளார் என்பது தான். அசான்ஜின் நடவடிக்கைகள் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு இணக்கமாக இல்லை, டைம்ஸோ அவற்றுக்கான ஒரு ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது.

மேற்கொண்டும் அசான்ஜைத் தாக்கி டைம்ஸ் எழுதுகையில், விக்கிலீக்ஸ் வழங்கிய ஆவணங்களின் மீது இப்பத்திரிகை செய்திகளை வெளியிட்டபோது, அது "திரு. அசான்ஜை ஓர் ஆதாரநபராக கருதியதே தவிர, ஒரு பங்காளியாக அல்ல. அந்த உறவு அத்துணை எளிதான ஒன்றல்ல; உளவுத்துறை ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கான அபாயங்கள் மீதான அவரின் அலட்சியம், நெருடலுக்கான ஒரு குறிப்பிட்ட அடித்தளமாக இருந்தது,” என்று குறிப்பிடுகிறது.

டைம்ஸ் மற்றும் அசான்ஜிற்கு இடையிலான "நெருடல்" தன்மையைத் தெளிவுப்படுத்தும் அப்போதைய நிர்வாக பதிப்பாசிரியர் பில் கெல்லர் பிரசுரித்த 2011 அறிக்கை ஒன்றுடன் இங்கே டைம்ஸ் தொடர்புபடுகிறது. கெல்லரின் கருத்துரை அசான்ஜை நோக்கி இருந்த எண்ணற்ற அவதூறுகள் மற்றும் களங்கங்களுக்கு அப்பாற்பட்டு, விக்கிலீக்ஸ் ஆவணம் மீதான செய்திகளை டைம்ஸ் வெளியிடுகையில், அது அமெரிக்க அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவதில் எந்தளவுக்கு "பொறுப்பாக" இருந்தது என்பதை நிரூபிப்பதற்காக அர்பணித்திருந்தது.

வெளியுறவுத்துறை, பென்டகன், சிஐஏ மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அதிகாரிகளை டைம்ஸ் அன்றாடம் சந்தித்து வந்ததை கெல்லர் குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு விவாதத்திற்கு முன்னரும்," அவர் எழுதினார், “அடுத்து வரவிருந்த நாட்களில் நாங்கள் பயன்படுத்த உத்தேசித்திருந்த குறிப்பிட்ட ஆவணங்களின் தொகுப்பு எங்களின் வாஷிங்டன் பிரிவிலிருந்து அனுப்பப்பட்டது. அவை பிராந்திய சிறப்பு வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அரசின் ஒரு சிறிய குழுவுக்குத் தங்களின் எதிர்வினைகளை வெளிப்படுத்தினார்கள், அந்த குழு அவற்றின் பின்புலத்தில் முன்னுரிமைகள் மற்றும் வாதங்களின் ஒரு பட்டியலுடன் எங்களின் நாளாந்த கலந்துரையாடல்களுக்கு வந்தது,” என்று குறிப்பிட்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அசான்ஜ் போலன்றி, டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அரசு மற்றும் செயல்பாடுகளில் உளவுத்துறை முகமைகளின் ஒரு கருவியாக உள்ளிணைந்துள்ளது.

“திரு. அசான்ஜ் கதாநாயகர் இல்லை. ஆனால் இந்த வழக்கு இப்போது கருத்து சுதந்திரத்திற்கும், அத்துடன் சேர்ந்து, அமெரிக்க ஜனநாயகத்தையே மீளமவுனமாக்குவதற்கும், ஓர் அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது,” என்று அறிவித்து வியாழனன்று இரவு பிரசுரித்த அதன் தலையங்கத்தை டைம்ஸ் நிறைவு செய்கிறது.

இதற்கு ஒருவர் இவ்வாறு பதிலளிக்கலாம், திரு. அசான்ஜ் தான் கதாநாயகன், டைம்ஸ், அவரை இன்னல்படுத்துவதில் பங்கெடுப்பதன் மூலமாக, “கருத்து சுதந்திரம்" அல்லது "அமெரிக்க ஜனநாயகத்திற்கே கூட" எந்த பொறுப்பும் ஏற்றிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

டைம்ஸ் போன்ற "பாதுகாவலர்களுடன்" இருப்பதால், அமெரிக்க அரசுக்கு ஒரு வழக்கறிஞரே தேவையில்லை. ஏனைய ஊடக நிறுவனங்களும் இதே வழியைப் பின்தொடர்கின்றன. ட்ரம்ப் நிர்வாகம் "புத்திசாலித்தனமான, கவனமான பாதையை" கைவிட்டு இருப்பதாகவும், அது "திரு. அசான்ஜை பல ஆண்டுகளுக்கு சிறையில் தள்ளியிருக்கும்,” என்றும் வாஷிங்டன் போஸ்ட் அதன் கவலையை வெளிப்படுத்தியது.

ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவுக்கு அனுப்பவதற்குப் பதிலாக, இட்டுக்கட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க சுவீடனுக்கு அனுப்ப வேண்டுமென பிரிட்டனின் கார்டியன் கருத்துரைத்தது. பிற்போக்குத்தனமான அரசியல் திட்டநிரல்களை ஊக்குவிப்பதற்காக, அடையாள அரசியலுடன் பிணைந்த அதுபோன்ற நடவடிக்கைகளைப் பயன்படுத்தி உள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட அடுக்குகளின் கண்ணோட்டத்திற்கு இது எடுத்துக்காட்டாகும்.

அசான்ஜைத் தாக்குவதில் அழுகிப் போனவர்களிலேயே மிகவும் அழுகிப் போனவராக தன்னை வித்தியாசப்படுத்தி காட்டியுள்ள MSNBC இன் Rachel Maddow, “ஜூலியன் அசான்ஜின் இறுதியான கதியைக் குறித்து கவலையில்லை" என்று கருத்துரைத்ததுடன், ட்ரம்பின் நடவடிக்கைகள் முதல் அரசியலமைப்பு திருத்தத்தைப் பாதிப்பதற்காக அவரின் கவலையை வெளியிடுவதற்கு முன்னதாக, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட உதவிய "பிரம்மிக்கத்தக்களவில் இரக்கமற்ற நபர்" என்று அசான்ஜை அறிவித்தார்.

என்னவொரு பொய் மோசடிகள்! அசான்ஜிற்கு எதிரான அவர்களின் சொந்த பிரச்சாரம் தான் பேச்சு சுதந்திரம் மீதான ஒரு நினைவார்த்த தாக்குதலை உருவாக்கி உள்ளது என்பதே உண்மை. இது தற்செயலாக நடந்ததில்லை மாறாக தர்க்க விளைவாகும், இது அவர்களின் சொந்த அரசியலுடன் முழுமையாக ஒத்திசைந்துள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்களிப்பு செய்துள்ள, பொய்களைப் பரப்பி உள்ள, அசான்ஜின் கதியைக் கண்டு நகைத்துள்ள, டைம்ஸ், மாடொவ் மற்றும் மற்றவர்களும் எப்போதும் அவர்களைக் கண்டனத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக கட்சியினரை பொறுத்த வரையில், அவர்கள் இந்த சமீபத்திய குற்றப்பத்திரிகை மீது ஏறத்தாழ முற்றிலும் மவுனமாக உள்ளனர். சபாநாயகர் நான்சி பெலோசி எதுவுமே கூறவில்லை. செனட் சபையில் சிறுபான்மையினர் தலைவர் சார்லஸ் சூமரும் ஒன்றும் கூறவில்லை, அவர் அசான்ஜ் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் ஏப்ரலில் கூறுகையில், “புட்டின் மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாக நம் தேர்தல்களில் அவர் தலையிட்டதற்காக விரைவிலேயே அவர் கணக்கில் கொண்டு வரப்படுவாரென நான் நம்புகிறேன்,” என்றார்.

வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் வெளியிட்ட ஒரு ட்வீட் சேதியில், அசான்ஜ் மீதான அந்த குற்றப்பத்திரிகை "முதலாம் அரசியலமைப்பு திருத்தம் மீதான ஒரு தொந்தரவூட்டும் தாக்குதல்" என்று குறிப்பிட்டார், என்றாலும், அசான்ஜின் மற்றும் செல்சியா மானிங்கின் விடுதலையை அவர் கோரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அனுமானிக்கத்தக்கவாறு, அசான்ஜின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயக கட்சியுடன் பிணைந்துள்ள அமெரிக்காவின் ஜனநாயக சோசலிசவாதிகள் அமைப்பு (DSA) மற்றும் ஜாகோபின் சஞ்சிகை, அந்த குற்றப்பத்திரிகையையும் மற்றும் அசான்ஜ் மீதான ஜோடிப்பையும் இதுவரையில் கண்டிக்க தவறியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தின் தனிச்செல்வாக்கான பிரிவுகளாலும் அசான்ஜ் கைவிடப்பட்டுள்ளார், இவை அவரைத் தொல்லைப்படுத்துவதற்கு அவற்றின் சொந்த ஆதரவை நியாயப்படுத்துவதற்காக கற்பழிப்பு மற்றும் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டுக்கள் மீதான இழிவார்ந்த ஜோடிப்புகளை ஊக்குவிக்கின்றன.

அசான்ஜிற்கான பாதுகாப்பு என்பது வர்க்க பிரச்சினை என்ற முடிவுக்கே வர முடியும். அவர் மீது வழக்கு தொடுத்து இன்னல்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சி, ஊடகங்கள் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்க அமைப்புகளின் ஆதரவானது, ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கான அவர்களின் ஆதரவுடனும், அவ்விதத்தில் அசான்ஜ் என்ன செய்தாரோ, அதாவது உண்மையை வெளிப்படுத்தியதன் மீதான அவர்களின் வெறுப்புடனும் பிணைந்துள்ளது.

அசான்ஜின் வாழ்க்கை மற்றும் சுதந்திரமும், செல்சியா மானிங்கின் சுதந்திரமும் தொழிலாள வர்க்க தலையீட்டைச் சார்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் கோர்டன் டிம்மாக்கிற்கு எழுதிய ஒரு பலமான அறிக்கையில், அசான்ஜ் இழிபெயர்பெற்ற பெல்மார்ஷ் சிறையில் இருந்து எழுதினார், “நிராயுதபாணியான நான், என் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு உங்களின் மற்றும் மற்றவர்களின் நற்குணத்தைக் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார். “என்னையும், என் கருத்துக்கள் மற்றும் என் மக்களையும் பாதுகாப்புக்காக நானே வாசித்து, பேசி, ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான நாட்கள் நான் விடுதலை ஆகும் வரையில் முடிந்து போய்விட்டன. என் இடத்தை வேறு யாராவது எடுக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

பிரிட்டன் சிறையில் இருந்து அசான்ஜை விடுவிப்பதற்கான போராட்டம், அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவதற்கான எதிர்ப்பு மற்றும் அவர் பாதுகாப்பாக ஆஸ்திரேலியா வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கான கோரிக்கை ஆகியவற்றை பெருந்திரளான பரந்த மக்கள் கையிலெடுக்க வேண்டும். அது இந்த ஒட்டுமொத்த புவியையும் பிளவுபடுத்துவதற்கு அச்சுறுத்துகின்ற ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடனும், பாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்துடனும், சமூக சமத்துவமின்மைக்கான எதிர்ப்புடனும் இணைக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், ஜூலியன் அசான்ஜை விடுதலை செய் என்றவொரு ஐயப்பாட்டிற்கு இடமற்ற நிலைப்பாட்டை முன்னெடுக்குமாறு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாங்கிப் பிடிக்கின்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.