ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Britain and Australia dismiss UN report that Assange has been tortured

அசான்ஜ் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்ற ஐ.நா. அறிக்கையை பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் நிராகரிக்கின்றன

By Oscar Grenfell 
3 June 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் வெளியீட்டாளருமான ஜூலியன் அசான்ஜ் “உளவியல் சித்திரவதை” குறித்த வெகுகாலம் நீடித்த பிரச்சாரத்தின் பாதிப்பாளராக உள்ளார் என்பதை நிரூபித்த சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸரின் மே 31 அறிக்கையை பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஆணவத்துடன் நிராகரித்துள்ளன.

வழமையான விசாரணையையும் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் மீறுவதை தொடர்கின்ற அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பழிவாங்கல் நடவடிக்கையின் குற்றவியல்தன்மையை இந்த ஆணவமான பதிலிறுப்புகள் நிரூபிக்கின்றன.


ஜூலியன் அசான்ஜ்

மெல்ஸர் இவ்வாறு குறிப்பிட்டார்: “போர், வன்முறை மற்றும் அரசியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்டோருடன் வேலை செய்துவருகின்ற இந்த 20 வருடங்களில், வெகு நீண்ட காலமாகவும், மனித கண்ணியத்திற்கும், சட்ட விதிகளுக்கும் சிறிதளவு மதிப்பின்றியும், ஒரு தனிப்பட்ட மனிதனை திட்டமிட்டு தனிமைபடுத்தவும், அரக்கத்தனமாக சித்தரிக்கவும், மேலும் அவரை துன்புறுத்தவும் ஜனநாயக நாடுகளின் ஒரு குழு கும்பலாக சேர்ந்திருப்பதை முன்னொருபோதும் நான் பார்த்ததில்லை.”

போர் குற்றங்களையும் உலகளாவிய இராஜதந்திர சதிகளையும் அம்பலப்படுத்துவதில் அசான்ஜின் பங்கு குறித்து அவரை துன்புறுத்திய அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன் மற்றும் ஈக்வடோர் அரசாங்கங்கள் தான் இதற்கு பொறுப்பு என்று ஐ.நா. அதிகாரி கண்டித்தார். மேலும், அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனையும் மற்றும் பத்திரிகையாளரையும் கைவிடுவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் உடந்தையாக இருந்துள்ளது என்று மெல்ஸர் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

அறிக்கைகள் வெளியாகி சில மணித்தியாலங்களுக்குள், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் ஜேர்மி ஹண்ட் இது “தவறு” என்று கண்டித்து ட்விட்டரில் பதிவு செய்தார். மேலும், “அசான்ஜ் ஒழிந்துகொள்வதற்குத் தான் தூதரகத்தை தேர்ந்தெடுத்திருந்தார் என்பதுடன், அங்கிருந்து அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறவும் நீதியை எதிர்கொள்ளவதற்குமான சுதந்திரத்தை கொண்டிருந்தார்” என்று அவர் தெரிவித்தார். மேலும், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் “அவரது தலையீடு அல்லது ஆத்திரமூட்டும் வகையிலான குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் அவற்றின் தீர்ப்புகளை வழங்க அனுமதிக்க வேண்டும்” என்று ஹண்ட் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து ஹண்டிற்கு மெல்ஸர் நேரடியாக, “சுறாக்கள் உள்ள ஒரு குளத்தில் ஒரு இரப்பர் படகில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பது” போல, ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தை விட்டு “வெளியேறும் சுதந்திரம்” பெற்றவராக திரு அசான்ஜ் இருந்தார்” என்று சரியாக பதிலிறுத்தார்.

விக்கிலீக்ஸின் சட்டபூர்வமான பிரசுரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமெரிக்க துன்புறுத்தல்களில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் 2012 இல் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் நாடுவதற்கு அசான்ஜ் முடிவு செய்தார் என்பது, கடந்த மாதம் அவருக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் 17 உளவுத்துறை சட்ட குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்துவிட்டு, அதிகபட்ச தண்டனையாக 170 ஆண்டுகள் கடும் சிறைவாசத்தையும் விதித்ததன் மூலம் முற்றிலும் நிரூபணமாகியது.

ஐ.நா. அதிகாரி தொடர்ந்து இவ்வாறு தெரிவித்தார்: “எனது முறையான கடிதத்தில் விவரித்துள்ளது படி, இதுவரை, சட்ட விதிகளின் படி தேவைப்படும் பாரபட்சமற்ற தன்மையையும், தகமையையும் இங்கிலாந்து நீதிமன்றங்கள் காண்பிக்கவில்லை.”

ஏப்ரல் 11 அன்று ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தை விட்டு அசான்ஜ் வெளியேற்றப்பட்டு சில மணித்தியாலங்களில் அவர் மீது பிரிட்டிஷ் பிணை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, பிரிட்டிஷ் பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார் என்று கார்டியன் பத்திரிகைக்கு மெல்ஸர் தெரிவித்தார். மேலும், “சாதாரண சட்ட விதிகளின் கீழ், எவரேனும் கைது செய்யப்படவிருக்கிறார்கள் என்றால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச கால அவகாசமாக இரண்டு வாரங்கள் அவருக்கு வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

பிணை குற்றச்சாட்டுக்கள் மிகச்சிறிய குற்றத்தன்மை கொண்டவையாக இருப்பினும், கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான தனிப்பட்ட குற்றவாளிகளை அடிக்கடி அனுப்பும் அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறைக்கு அசான்ஜூம் அனுப்பப்பட்டுள்ளார். கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கை, சிறையின் மருத்துவப் பிரிவிற்கு அசான்ஜ் மாற்றப்பட்டுள்ளார் என்பதையும், ஏழு வாரங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காரணத்தால், விரைவான எடை இழப்பு விளைவு உட்பட, அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்து வருவதையும் உறுதி செய்தது.

கடந்த மாதம் அசான்ஜை சந்தித்த மெல்ஸர், “தீவிர மன அழுத்தம், நீண்டகால கவலை மற்றும் ஆழ்ந்த உளவியல் அதிர்ச்சி உட்பட, மிக நீண்டகால உளவியல் சித்திரவதைக்கு உட்பட்டிருப்பதற்கான பொதுவான அனைத்து அறிகுறிகளும்” அசான்ஜிடம் காணப்படுவதாக கூறினார். மேலும், “யாரோ ஒருவரது அச்சுறுத்தலின் கீழ் இருப்பதை அவர் உணர்ந்துள்ளார் என்பதும் உணரக் கூடியதாக இருந்தது” என்றும் கூறினார்.

ஐ.நா. வின் கண்டுபிடிப்புக்கள் தொடர்பான ஹண்டின் அரசியல் நோக்கம் கொண்ட நிராகரிப்பு –அமெரிக்க சிறைக்கு அசான்ஜை மாற்றுவதை எளிதாக்குவதற்காக– ஞாயிறன்று CBS இன் “தேசத்தை எதிர்கொள்” நிகழ்ச்சியில் அவர் கூறிய கருத்துக்களை தெளிவுபடுத்துவதாக இருந்தது. வெளியேறும் டோரி பிரதமர் தெரெசா மே க்கு பதிலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரானால், அமெரிக்காவிற்கு ஜூலியன் அசான்ஜ் கையளிக்கப்படுவதை அவர் தடுத்திருக்கமாட்டார் என்று ஹண்ட் தெரிவித்தார்.

அசான்ஜ் குறித்த பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கின் ஆழ்ந்த விரோதத்தினை காட்டும்விதத்தில், ஹண்ட் இவ்வாறு தெரிவித்தார்: “ஜூலியன் அசான்ஜ் நீதியை எதிர்கொள்ளும் வழியில் குறுக்கே நிற்பதற்கு நான் விரும்ப வேண்டுமா? இல்லை, என்னால் முடியாது.” ஒரு பத்திரிகையாளரை வாழ விடாமல் சிறைப்பிடித்து வைப்பதை “நீதி,” என்று வெளியுறவுச் செயலர் விவரிக்கிறார் என்பதுடன், மெல்ஸர் எச்சரித்ததைப் போல, உண்மையை பிரசுரித்த காரணத்திற்காக மேலதிக அமெரிக்க சித்திரவதையை அசான்ஜ் எதிர்கொள்வதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறார்.

அசான்ஜூக்கு எதிரான சித்திரவதை பிரச்சாரத்தில் அரசியல் ஸ்தாபக ஊடகத்தையும் ஐ.நா. அறிக்கை உள்ளடக்கியுள்ளது என்பதுடன், முன்னொருபோதுமில்லாத “துன்புறுத்துதல்” பற்றிய ஒரு பிரச்சாரத்திற்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடுகிறது.

இந்த திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கின்ற பிரிட்டிஷின் கார்டியன் மற்றும் அமெரிக்காவின் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடக வெளியீடுகள், அசான்ஜ் மீதான அவற்றின் அருவருக்கத்தக்க சொந்த தாக்குதல்களை திரும்பப் பெற்று பதிலிறுக்கவில்லை. மெல்ஸரின் அறிக்கையை ஹண்ட் தள்ளுபடி செய்ததற்கும் அவை கண்டனம் தெரிவிக்கவில்லை.

மாறாக, உலகச் செய்தி ஊடக மாநாட்டில் ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றி ஹண்ட் அறிவுரை வழங்குவதை கேட்பதற்கு சனியன்று கிளாஸ்கோவில் பிரதான பிரிட்டிஷ் பெருவணிக ஊடக வெளியீடுகளின் நிர்வாகிகள் ஒன்றுகூடினர்.

ஒரு பத்திரிகையாளரை இவரது அரசாங்கம் சித்திரவதை செய்வதில் கொண்டிருக்கும் பங்கிற்காக, முந்தைய தினம் கண்டனத்திற்கு உள்ளானது. அதிர்ச்சியூட்டும் வகையிலான பாசாங்குத்தனத்தைக் காட்டும்வகையில் அதன் வெளியுறவு செயலர் இவ்வாறு அறிவித்தார்: “தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் அதிகாரத்திலுள்ளவர்களை கேள்விகேட்க முடியாத வரை ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் என்று எதுவுமில்லை –மேலும் திடமாக மறைக்கப்பட்ட உண்மைகளை கண்டுபிடிக்கவும்– இருப்பினும் முடிவை எட்டுகையில் சிலசமயங்களில் அரசியல்வாதிகளுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருக்கலாம்.”

ஹண்ட், அத்தகைய “தீவிர ஆய்வு” மற்றும் “திடமாக மறைக்கப்பட்ட உண்மை”களை அம்பலப்படுத்துவது போன்றவை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஏகாதிபத்திய செயல்பாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால் அவை அனுமதிக்கப்படாதவையாக இருந்தன என்பதை சேர்த்துக் கூறவில்லை. அதேபோல, அசான்ஜின் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு ஊடக பிரதிநிதிகள் வருகை தந்ததற்கான அல்லது அவரது பெயரையாவது குறிப்பிட்டதற்கான பதிவு எதுவும் அங்கில்லை.

அவர்களது கோழைத்தனமான நடவடிக்கைகள், ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜோன் பில்ஜெர், இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சின் நாஜி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்த பாசிச ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகையில் “விச்சி இதழியல்” என்று விவரித்த பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கிறது. அசான்ஜூக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் ரஷ்யா, சீனா அல்லது வேறு நாடுகளால் நடத்தப்பட்டிருந்தால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இலக்கு வைப்புக்கு ஏற்றவகையில் இந்த ஊடகவியலாளர்கள் ஆயுதமேந்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மெல்ஸரின் அறிக்கையும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை கடுமையாக குற்றம்சாட்டுவதாக இருந்தது. மேலும் அவர், அசான்ஜின் அடிப்படை சட்ட மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஒரு “வெளிப்படையான புறக்கணிப்பை” ஆஸ்திரேலியா காட்டியுள்ளது என்றும் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் நிலைப்பாடு குறித்து ஒரு நீண்ட மௌனம் சாதித்து வரும் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை, ஆஸ்திரேலியா சித்திரவதைக்கு உடந்தையாக இருந்தது என்பதை மறுக்கின்ற ஒரு அறிக்கையை உடனடியாக விடுத்ததோடு, மேலும் “செயலூக்கமான மற்றும் உயர்மட்ட தூதரக உதவியை” அசான்ஜூக்கு அது வழங்குவதாகவும் தெரிவித்தது.

ஆயினும், அந்த என்னதென குறிப்பிடப்படாத உதவி, அசான்ஜின் உடல்நிலை சீர்குலைவதை தடுப்பதற்கோ அல்லது அவருக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான தாக்குதல்களை நிறுத்துவதற்கோ எதையும் செய்துவிடவில்லை. உண்மையில், தாராளவாத-தேசிய அரசாங்கம், எதிர் கட்சியான தொழிற் கட்சி மற்றும் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகம் என அனைத்தும் அவரை பாதுகாப்பதற்கு மறுப்பதன் மூலம் அசான்ஜூக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பழிவாங்கல் நடவடிக்கையில் ஒத்துழைத்து வருகின்றன.

அரசாங்கம், தொழிற் கட்சி, பசுமைக் கட்சி, அல்லது உத்தியோகபூர்வ ஆஸ்திரேலிய ஊடகம் என எதையும் சார்ந்த ஒரு பிரிதிநிதி கூட அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க ஊளவுத்துறை சட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை.

அசான்ஜை துன்புறுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கங்களால் ஐ.நா. அறிக்கை நிராகரிக்கப்பட்டதானது, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் துயரமிக்க முறையீடுகளை முன்வைப்பதன் மூலமாக அவரது சுதந்திரம் பாதுகாக்கப்படமாட்டாது என்பதை நிரூபிக்கிறது. மேலும், கடுமையாகிவரும் அவரது மருத்துவ சிக்கல்நிலை, அவரது சுதந்திரம் மட்டும் பணயம் வைக்கப்படவில்லை, மாறாக அவரது உயிரும் சேர்த்துத் தான் பணயம் வைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு பெரும் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது, போர்கள் மற்றும் ஒடுக்குமுறை சதிகளை அம்பலப்படுத்திய குற்றவாளியாக தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் அவரை ஒரு வீரமிக்க மனிதராக அவர்கள் சரியாக அடையாளம் காண்கின்றனர். இந்த மக்கள் ஒன்றுதிரட்டப்பட வேண்டும்.

உலகெங்கிலுமாக உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சிகளும், இராணுவவாதம், போர் மற்றும் சர்வாதிகாரம், மற்றும் அவற்றின் மூல ஆதாரமான முதலாளித்துவ அமைப்பு முறை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அசான்ஜையும் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு போராடி வருகிறது. இவ்வியக்கத்தில் இணைவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.