ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

මොරටුව විශ්වවිද්‍යාලයේ උපකුලපති, කම්කරුවන්ට සහ ශිෂ්‍යයන්ට එරෙහි මර්දන යාන්ත්‍රනය ශක්තිමත් කිරීම සඳහා ත්‍රස්ත ප්‍රහාරය ගසාකයි

இலங்கை: மொரட்டுவ பல்கலைக்கழக துணைவேந்தர் தொழிலாளர் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக பயங்கரவாத தாக்குதலை சுரண்டிக் கொள்கிறார்

By our reporters
16 May 2019

ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைக் காரணம் காட்டி, வருடாந்த இரண்டாம் தவணை தாமதப்படுத்தப்பட்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழகத்தை ஆரம்பித்த பின்னர், எடுக்க வேண்டிய “பாதுகாப்பு வேலைத் திட்டங்களுக்கு ஆதரவைக் கோரி’’ அதன் துணை வேந்தரான பேராசிரியர் கபில பெரேரா, கடந்த மே 9 அன்று கல்விசார் ஊழியர்களது கூட்டத்தை கூட்டினார்.

பயங்கரவாத தாக்குதலை உடனடியாக பற்றிக் கொண்ட அரசாங்கம், நாடெங்கும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, பலம்மிக்க பொலிஸ்–இராணுவ அரசொன்றுக்காக மிக வேகமாக முன்னெடுக்கும் நடவடிக்கைத் தொடர்களின் ஒரு பாகமாக, “பல்கலைக்கழகத்துக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்’’ என்ற பெயரில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எதிராக அடக்குமுறையை கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளமை, துணைவேந்தரது பேச்சிலிருந்து அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள ”கமரா” முறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், அதற்கேற்ப இதுவரை கமரா பொருத்தப்பட்டிராத இடங்களில் அவற்றை பொருத்தப்போவதாக கூறினார். கமரா பொருத்தும் முறையானது, பொறியியல் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப பட்டபடிப்பு மாணவர்களுக்கும் இடையில் 2013­­ இல் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை பயன்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தொழிற்சங்கங்களும் மாணவர் சங்கங்களும் இதற்கு அனுமதி வழங்கின. எவ்வாறாயினும், கமரா முறையை மாணவர் சுதந்திரத்துக்கு எதிராக தொடர்ந்தும் பயன்படுத்திய காரணத்தினால், மாணவரிடையே எழுந்த எதிர்ப்பின் முன் அதனை தற்காலிகமாக நிறுத்தினர். இந்த நடைமுறையை மீண்டும் செயற்படுத்த நிர்வாகம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளதை காணலாம்.

பொறியியல் பீட மாணவர் சங்கம் ஆரம்பத்தில் இந்த நடைமுறைக்கு ஆதரவு வழங்கிய போதிலும், பின்னர் மாணவர்களின் எதிர்ப்பின் மத்தியில் அதற்கு எதிர்ப்புக் காட்டியது. 2015 மே மாதம், தகவல் தொடர்பு பீட மாணவர்கள் மூவருக்கு எதிரான வகுப்பு தடையை நடைமுறைப்படுத்த பல்கலைகழக நிர்வாகம் இந்த கமரா நடைமுறையைப் பயன்படுத்தியது.

அவ்வாண்டு மார்ச் மாதம் சட்டம் மற்றும் சமாதானம் சம்பந்தமான அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றில் வந்த ஒரு கும்பல், மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்த சமயத்தில், அந்தக் குண்டர்களைக் கண்டு பிடிக்க கமரா முறையை பயன்படுத்துமாறு மாணவர்கள் கேட்டபோது, அவை வேலை செய்யவில்லை என கூறப்பட்டது. அப்போதிருந்து நிறுத்தப்பட்டிருந்த கமராக்களை தற்போது இயக்கிவிடுவதற்காக குண்டுத் தாக்குதல் சம்பவத்தை நிர்வாகம் பயன்படுத்திக்கொள்கின்றது.

அரசாங்கம், பயங்கரவாத தாக்குதலுக்கு முன் அது பற்றிய விபரத்தை அறிந்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமைக்கு காரணம், “பயங்கரவாதத்தை தோற்கடித்தல்” என்ற பெயரில் அடக்கு முறை இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக அந்த தாக்குதலை சுரண்டிக் கொள்ளவதே ஆகும், என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களது சமூக ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலினால் கிளர்ந்தெழுந்துள்ள வர்க்கப் போராட்ட அலையை நசுக்கும் முகமாக, பொலிஸ்-இராணுவ எதேச்சதிகார திசையில் செல்வதை தவிர வேறு மார்க்கமோ பதிலீடோ முதலாளித்துவ வர்க்கத்திடம் கிடையாது. எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கங்கள் பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் மீது சுமத்துவதுடன் அதற்கு எதிராக உலகெங்கிலும் எழுச்சிபெறும் வர்க்கப் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காக சர்வாதிகாரத்தின் பக்கம் திரும்பியுள்ளன. இந்த உலகளாவிய நிலமையே இலங்கைக்குள்ளும் வெளிப்பட்டுள்ளதைக் காணலாம்.

வளர்ச்சியுறும் வர்க்க போராட்டத்தின் முன், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி, அதன் சக்தியை பலவீனப்படுத்த இன, மத ரீதியிலான ஆத்திர மூட்டலை தூண்டி விடுவதானது ஆளும் வர்க்கம் நன்கறிந்து செயற்படுத்தும் ஒரு உத்தியாகும். பயங்கரவாத தாக்குதலுடன் அரசாங்கம் உள்ளடங்கலாக முழு முதலாளித்துவ வர்க்கமும் ஒருங்கிணைந்து, முஸ்லிம் எதிர்ப்பு நச்சுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளமையும் இந்த உத்தியின் கீழேயே ஆகும்.

“இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மதத்தவர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக” கூறிய துணை வேந்தர், “இரத்தம் மற்றும் தசைகளால் ஆன மனிதர்களான முஸ்லிம் மாணவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது,” என கோரிக்கை விடுத்தார். எவ்வாறாயினும், பல்கலைகழகம் பூராகவும் சகல இடங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள “பர்தா தடை” விளம்பரங்களின் ஊடாக அவர்களது மனிதாபிமானத்தின் உண்மைச் சொரூபம் வெளிப்படுகின்றது. இந்த ”பர்தா தடை”, பல்கலைகழகத்தினுள் இன எதிரப்பு தூண்டுதலுக்காக உடனடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.


பர்தா தடை உள்ளடங்கிய விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

“பர்தா தடை”, முஸ்லிம் இன வெறுப்பு என்பன சம்பந்தமாக மிக இழிவான வரலாறு பல்கலைகழக நிர்வாகத்துக்கு உண்டு. கட்டிட கலைப்பீட மாணவி பாத்திமா சஹார், பர்தா அணிந்து பல்கலைகழகத்திற்குள் நுளைவதை 2013 இல் நிர்வாகம் தடை செய்தது. 2013 இல் சிங்கள–பெளத்த தீவிரவாத பொதுபல சேனா அமைப்பு முன்னெடுத்த முஸ்லிம் விரோத பிரச்சாரத்தின் போதே இது நடந்தது.

அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்த்தனவுக்கு கடிதம் எழுதினார். 2014 அக்டோபர் 4 அன்று, “விடுதி நன்னடத்தை குழுவினால் பர்தா அணிந்து பல்கலைகழகத்துள் நுளைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக” ஜயவர்தன பதில் கடிதம் அனுப்பினார். இன்று மீண்டுமொரு தடவை மாணவரிடையே முஸ்லிம் விரோதத்தை தூண்டிவிடுவதற்காக நிர்வாகம் செயற்படுவதை காணலாம்.

இந்த அடக்கு முறையின் மற்றுமோர் அம்சமாக, பல்கலைகழக விடுதிப் பொறுப்பாளர் எச்.ஆர். பேர்ஸி மற்றும் குடும்பத்தாரையும் பல்கலைகழகத்துள் வழங்கப்பட்டுள்ள இல்லத்தில் இருந்து மே 13 இற்கு முன் அகன்று செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விடுதி பொறுப்பாளரான அவரது தொழில் நிரந்தரமானதாகும். இருபதாண்டு காலமாக தனது குடும்பத்துடன் வாழ்ந்த சிறு வீட்டில் இருந்து அகலுமாறு நிர்வாகம் முதல் தடவையாக 2017 டிசம்பரில் அறிவித்தது. இம்முறை அந்த கடிதத்தின் நகல் ஒன்று மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், அவர் மட்டுமே அவ்வீட்டில் தங்கலாம், குடும்பத்தாரால் முடியாது என்றும், வேறு ஒரு நபர் அவ்வீட்டில் இருப்பது சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைகழக அமைப்பினுள் அத்தகைய பொறுப்பாளர் பதின்மூன்று பேர்கள் மட்டுமே இருப்பதுடன், அவர்கள் யாவரும் தமது குடும்பத்தவர்களுடன் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கும் வாய்ப்பை அனுபவிக்கின்றனர். மொரட்டுவ பல்கலைகழக துணை வேந்தருக்கும் நிரந்த சேவைக் காலத்துக்கான உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்துள்ளதுடன், அங்குள்ள சகல ஊழியர்களும் தமது குடும்பத்துடனேயே அந்த வீடுகளில் வசிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரைத் தவிர ஏனையோர் அகற்றப்பட வேண்டுமென்ற அறிவித்தல் வழங்குவதற்கு முன்னதாக, அன்றய தினமே வீட்டுக்குள் தேடுதல் நடத்தினர். பல்கலைக்கழகத்தை பரிசீலிப்பதற்காக கூட்டிக் கொண்டுவரப்பட்ட இரணுவமும் பொலிஸ் குழுவும் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடுதல் நடத்தினர்.

முதலாளித்துவ தாக்குதலை தொழிலாளர் மீது தொடுக்கும் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடும் குணாம்சம் உள்ள ஊழியரான பேர்சி மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது, தமது நிலமைகள் தொடர்பாக போர்க்குணம் காட்டும் தொழிலாளிக்கு எதிராக, அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட நிர்வாகத்தின் துடிப்பை எடுத்துக் காட்டுகிறது.

மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய கல்வி வெட்டினால் உக்கிரமடைந்துள்ள கல்வி, விடுதி மற்றும் ஏனைய வசதிகள் சம்பந்தமான பிரச்சினைகளோடு அதிகரித்து வரும் வாழ்க்கைதர செலவினத்துக்கு ஏற்ப மஹாபொல மாணவர் மானியம் அதிகரிக்கப்படாமை, கல்வி தனியார் மயமாக்கல் ஆகியவற்றால் மாணவரிடையே விரக்தியே மேலோங்கி வருகின்றது.

சம்பள அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாலும், வேலை துரிதப்படுத்தல் நடவடிக்கைகளினாலும் நிரந்தரமற்ற கல்விசார் ஊழியர்கள் இடையே அதிருப்தி அதிகரித்து வருகின்றது. வேலை துரிதப்படுத்தலுக்காக வருகை மற்றும் செல்கை பற்றிய தகவல் விபரம் பதிவதற்காக பொருத்தப்படுட்டுள்ள பெருவிரல் அடையாள கருவி பொருத்துவதற்கு எதிராக யாழ்ப்பன பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய இடங்களைப் போலவே பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் எழுச்சியுறப் போகும் எந்தவொரு போராட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறியும் அடக்கு முறை ஆழமாக்கப்படுகின்றது. மொறட்டுவ பல்கலைகழக துணைவேந்தர், கல்வி சாரா ஊழியரது தொழிற் சங்க தலைவர்களான ரோகித ஹேரத், கே.எம். சிறிசேன என்பவர்களுக்கு புகழ் பாடியவாறே இந்த தாக்குதலை கட்டவிழ்த்துள்ளார். அவர்கள் தினமும் தன்னை சந்திப்பதாகவும், கடந்த குண்டுத் தாக்குதலின் பின் ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமையன்று அவர்களது கோரிக்கையின் பிரகாரம் விடுமுறை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அந்த விடுமுறை தினத்துக்காக, மே 4 அன்று சனிக்கிழமை, சகல ஊழியர்களும் சாதாரண தினத்தை போல மேலதிக கொடுப்பனவு பெறாது வேலை பார்க்க வேண்டியிருந்தது.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொழிற்சங்க தலைமைகளை மென்மேலும் பயன்படுத்துவதே இத்தகைய புகழாரம் வழங்குவதன் நோக்கமாகும். மாணவர் ஊழியரிடையே பிரச்சனைகள் தீவிரமடைந்துவரும் நிலமைகளின் மத்தியில், அவை வெடித்தெழுவதை தடுத்து விடும் பொருட்டு முதலாளித்துவத்தின் கருவியாக மாறியுள்ள தொழிற்சங்கத்துள் தொழிலாளரை சிறைப்படுத்தி வைப்பதே நிர்வாகத்தினது தேவையாகும்.

எனினும் உலகம் பூராகவும், இலங்கையிலும் தொழிலாள வரக்கம் முதலாளித்துவத்துக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளதன் சமிக்கை வெளிப்பட்டுள்ளது. அதனையிட்டு பீதியுற்றுள்ள ஆளும் வர்க்கம், சகல இடங்களிலும் தமது அடக்கு முறை இயந்திரத்தை வலுப்படுத்தி வருகின்றனது. தொழிலாளரும் மாணவரும் இத்தகைய செயல்களுக்கு ஆதரவளிக்கலாகாது. முதலாளித்துவ அமைப்பையும் அதன் கையாட்களாக செயற்படும் தொழிற்சங்கங்களிடம் இருந்து விலகி, சுயாதீனமாக தமது நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்காக போராடுவதன் மட்டுமே தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களது பாதுகாப்பை பேணுவது சாத்தியமாகும்.