ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකාව: යාපනය විශ්ව විද්‍යාලයේ දී ජූලියන් අසාන්ජ් ආරක්ෂා කරගැනීමේ උද්ඝෝෂනයට බලගතු සහයෝගයක්

இலங்கை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஜூலியன் அசாஞ்சை பாதுகாக்கும் பிரச்சாரத்துக்கு பலமான ஆதரவு

By our correspondents
8 July 2019


அசான்ஜ் விடுதலை பிரச்சாரத்தின் போது யாழ்  பல்கலைக்கழக மாணவிகள் மனுவில் கையெழுத்திடுகின்றனர்

இலங்கையின் வடக்கில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஜ் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை பாதுகாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜூலை 10 புதன் கிழமை யாழ்ப்பாண நகரத்தில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள மறியல் போராட்டத்தை கட்டியெழுப்புவதன் பாகமாகவே இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பது ஆண்டு கால போரினால் நாசமாக்கப்பட்ட பிரதேசமாகும். இன்னமும் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அதேவேளை, மாணவர்கள் அடிக்கடி ஒடுக்குமுறைகளையும் வேட்டையாடல்களையும் எதிர்கொள்கின்றனர்.

பிரச்சாரகர்கள், பல்கலைக்கழக நுழை வாயிலில் “ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்!” என்ற பதாதையை தொங்கவிட்டிருந்ததோடு மார்க்கிச இலக்கியங்கள் கொண்ட மேசை ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஜூன் 20 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு வெளியிட்ட ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக! என்ற அறிக்கையின் நூற்றுக்கணக்கான பிரதிகளை விநியோகித்து கலந்துரையாடினர்.

மாணவ மாணவியர் பிரச்சாரத்திற்கு தமது ஆதரவை உறுதிப்படுத்த மனுவில் கையெழுத்திட்டதோடு, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் எழுதிய ரஷ்ய புரட்சியும் முடிவுறாத 20ம் நூற்றாண்டும் மற்றும் சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்குஎதிரான போராட்டமும் ஆகிய நூல்கள் உட்பட பல புத்தகங்களை கொள்வனவு செய்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியமைக்காக சிறை வைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜ் மற்றும் அவருக்கு தகவல் வங்கிய செல்சி மானிங்கும் சிறை வைக்கப்பட்டுள்ளமை பற்றி அநேகமான பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரியாமல் இருந்தது. பிணை நிபந்தனைகளை மீறியதாக போலியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அசான்ஜ் பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றார். அசான்ஜிற்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்தமைக்காக மன்னிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சோ.ச.க. உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பல மாணவர்கள் பிரச்சாரத்திற்கு உத்வேகத்துடன் ஆதரவளித்தனர். தமிழ் தேசியவாத அரசியலில் மூழ்கியுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சமூகமும், மாணவர் ஒன்றியமும் மற்றும் யாப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளும் ஜூலியன் அசான்ஜ் சம்பந்தமாக மௌனம் காத்தே வந்துள்ளன. இவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் முதலாளித்துவ நலன்களை தக்கவைத்துக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அமைப்புகளாகும். அதனால் அவை வாஷிங்டனின் குற்றங்களையிட்டு அலட்சியம் காட்டி வருகின்றன.

பிரச்சாரகர்களுடனான கலந்துரையாடல்களை அடுத்து மாணவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்தனர்.


பிரச்சாரகர்கள் மாணவன் ரஞ்சனுடன் கலந்துரையாடுகின்றனர்

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சோசலிசம் பற்றி அந்த இடத்துக்கு வந்து விளக்கமளிப்பதை அவதானித்து வருவதாக சி. கெங்காதரன் என்ற மாணவன் தெரிவித்தார். “ஜூலியன் அசாஞ் பற்றியும், அவர் ஏன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் இன்று நீங்கள் மட்டுமே இந்த இடத்தில் நின்று விளங்கப்படுத்துகின்றீர்கள். அதனாலேயே இந்த விடயங்கள் பற்றி நான் அறியக் கூடியதாய் இருக்கின்றது. விக்கிலீக்ஸ் இலங்கை யுத்தக் குற்றங்கள் பற்றியும் அம்பலப்படுத்தியது எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. எல்லோருடைய உரிமைகளுக்காகவும், அசாஞ்சின் விடுதலைக்காகவும் நீங்கள் செய்யும் இந்தப் பிரச்சாரத்துக்கு நான் எனது பூரண ஆதரவினை வழங்குகின்றேன்.”

ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்ட வீடியோவை இணைய தளத்தில் பார்த்ததாக முகாமைத்துவ பீட மாணவர் ரஞ்சன் தெரிவித்தார். “உண்மையில் ஊடகவியலாளரான அசான்ஜ் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட விதம் ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி காட்டுமிராண்டித்தனமானதும் கூட. இன்று உலகில் ஜனநாயகம் பெயரளவில் மட்டுமே உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா உலகம் முழுவதும் கொலைகளைத்தான் செய்கின்றது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங் இருவரும் உண்மைகளையே இந்த உலகத்துக்கு தெரியப்படுத்தினார்கள். எனவே இவர்கள் இருவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன்.”

ஆங்கிலப் பட்டதாரியான என். பதபிரியன், அமெரிக்க ஏகாதிபத்தியம் மனித உரிமைகளைப் பேணுவதாக கூறிக் கொண்டுதான் மற்றைய நாடுகளில் தலையீடு செய்கின்றது, எனக் கூறினார். “ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவும் அதற்கு ஆதரவு வழங்குகின்றன. ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜை பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்த நினைப்பது சட்ட விரோதமானது. எமது நாட்டிலிருந்து கூட அமெரிக்காவை விமர்சித்தால் எங்களையும் கொண்டு போக அது எத்தணிக்கும். குவாண்டனோமா மற்றும் அபுகிரைப் போன்ற இடங்களில் அமெரிக்கா சட்டவிரோதமான முறையில் தடுப்பு முகாம்களை நடத்திவருவதாக நாங்கள் கேள்விப்படுகின்றோம். ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யும் போராட்டத்துக்கு நானும் ஆதரவளிக்கின்றேன்,” என அவர் தெரிவித்தார்.

அசான்ஜை விடுதலை செய்ய உங்கள் அமைப்பு செய்யும் வேலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆசிரியர் செல்வா தெரிவித்தார். “ஜூலியன் அசான்ஜைப் பற்றி நான் அறிந்துள்ளேன். எழுத்துரிமை மற்றும் பேச்சு உரிமை என்பவற்றுக்கு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. எனவே இந்தப் பிரச்சாரம் சகல நாட்டிலும் உள்ள எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்களினதும் ஜனநாய உரிமைகளைப் பாதுகாப்பதுடன் சம்பந்தப்பட்டது என உங்களுடன் கலந்துரையாடியதன் மூலம் உணர்ந்து கொண்டேன்.”

ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்கள ஊழியரான ஆர். தெய்வேந்திரம் தெரிவித்ததாவது: “நான் விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசாஞ்சைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர் உலகெங்கும் அமெரிக்கா செய்த குற்றங்களை வெளியில் கொண்டுவந்தவர். ஈகுவடோர் தூதரகத்துக்கு அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபடியினால் தான் அந்த தூதரகம் அவரை லண்டனிடம் ஒப்படைத்தது. அமெரிக்கா வல்லரசு நாடாக இருக்கின்றபடியினால் மற்றைய நாடுகள் அதன் அழுத்தத்துக்கு அடிபணிந்து போகின்றன. அதனால் அமெரிக்காவைப் பற்றி செய்தி வெளியிட்டவரையும் சட்ட விரோதமாக தனது நாட்டுக்கு கொண்டுபோகவும் தண்டனை கொடுக்கவும் அது தனது பலத்தை பிரயோகிக்கின்றது.”

அமெரிக்கா பொய்சொல்லியே எல்லா நாடுகளுக்குள்ளும் தலையீடு செய்கின்றது என கூறிய அவர், “ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறியே ஈராக்கிற்குள் வாஷிங்டன் தலையீடு செய்தது. அங்கு ஒன்றும் எடுக்கவில்லை. தற்போது ஈரானுக்குள் யுரேனியம் உள்ளதாக கூறிக் கொண்டு அங்கே தலையீடு செய்ய முயற்சி செய்கின்றது. அது சீனா மற்றும் ரஷ்யாவுடனும் மோதலுக்கு போவதற்கு தயாரிக்கின்றது,” என சுட்டிக் காட்டினார்.

தொழில்நுட்பக் கல்லூரி மாணவரான எஸ். பிரவீன், நான் ஜூலியன் அசான்ஜைப் ப்பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் உங்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் புரிந்துகொண்டேன் என்றார். “அசான்ஜ் ஒரு ஊடகவியலாளர் என்ற அடிப்படையில், அமெரிக்கா மற்றும் அதனோடு இணைந்த ஏனைய நாடுகளினதும் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தியமை சரியானதே. அதற்காக அவரைத் தண்டிப்பதற்கு பிரிட்டனும் அமெரிக்காவும் முயற்சிப்பது ஜனநாயக விரோதமானது. ஆகவே அவரைப் பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்தார்.