ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Lübcke’s murderer was part of vast underground German neo-Nazi terrorist network

லூப்க்கவின் கொலையாளி பரந்த நிழலுலக ஜேர்மன் நவ-நாஜி பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பாகமாக இருந்துள்ளார்

By Johannes Stern
28 June 2019


வால்டர் லூப்க்க

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) அரசியல்வாதி வால்டர் லூப்க்கவை படுகொலை செய்த ஸ்ரெபான் ஏர்ன்ஸ்ட், வலதுசாரி பயங்கரவாத தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கத்துடன் (NSU) நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட ஒரு நவ-நாஜி வலையமைப்பின் பாகமாக செயல்பட்டிருந்தார். அந்த படுகொலைக்குப் பின்னர், அதனை தனித்த ஒரு துப்பாக்கிதாரியின் செயலாக முன்னிலைப்படுத்துவதற்காக முயற்சி நடக்கின்ற போதினும் கூட, ஒரு பரந்த வலதுசாரி பயங்கரவாத வலையமைப்புடன் ஏர்ன்ஸ்ட் இற்கு இருந்த தொடர்புகள் குறித்த தகவல் வெளிப்பட்டு வருகிறது.

செவ்வாயன்று ஏர்ன்ஸ்ட் அவரின் குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர், பொலிஸ் புதனன்று இரவும் வியாழனன்று அதிகாலையும் சோதனைகள் நடத்தி, சந்தேகத்திற்குரிய இன்னும் இருவரைக் கைது செய்தது. அவர்கள் ஏர்ன்ஸ்ட் ஐ பாதுகாத்ததுடன், அவருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மத்திய பொது வழக்குரைஞர் அலுவலகத் தகவல்படி, இதுவரை அடையாளம் காணப்படாத வேறு இரண்டு நபர்களுக்கும் கொலையாளியும் ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது, அவர்களும் நடந்தப்பட்டு வரும் விசாரணைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஊடக செய்திகளின்படி, ஏர்ன்ஸ்ட் அவர் ஆயுதங்கள் பதுக்கி இருந்ததை ஒப்புக் கொண்டார், அவற்றில் கொலை ஆயுதங்களுடன் சேர்ந்து, சரசரவென சுடும் துப்பாக்கி, Uzi துணை-இயந்திர துப்பாக்கி, மற்றும் படைத்தளவாடங்களும் உள்ளடங்கி இருந்தன. அந்த ஆயுதங்கள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பதையும், அவை எங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பதையும் அவர் விளக்கினார். புலன்விசாரணையாளர்கள் அவர் வேலை செய்யும் இடத்தில் ஒரு நிலத்திற்கு அடியிலான பதுங்குகுழியில் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களைக் கண்டறிந்தனர். அங்கே மொத்தம் ஐந்து ஆயுதங்கள் இருந்தன. ஏர்ன்ஸ்ட் இன் தகவல்படி, தளவாடங்களின் ஒரு பகுதியை 2014 இல் வாங்கிய அவர், அந்த படுகொலைக்கான ஆயுதத்தை 2016 இல் அங்கு கொண்டு வந்திருந்தார்.

ஏர்ன்ஸ்ட் க்கு உடந்தையாய் இருந்தவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், காசல் நகரை சேர்ந்த நவ-நாஜி மார்கஸ் எச். ஆவார். ARD தொலைக்காட்சியின் அரசியல் சஞ்சிகை நிகழ்ச்சியான Panorama தகவல்படி, அந்நகரின் நோர்ட் ஹோலாண்ட் பகுதியில் ஒரு இணைய சேவை மையத்தில் NSU நடத்திய ஒன்பதாவது இனவாத படுகொலையை அடுத்து, அதில் Halit Yozgat உயிரிழந்தார், 2006 இல் இவ்வழக்கில் ஒரு சாட்சியமாக எச். விசாரிக்கப்பட்டிருந்தார். ஏர்ன்ஸ்ட் ஐ போலவே, மார்கஸ் எச் அந்த படுகொலை சமயத்தில் காசலில் வன்முறையான நவ-நாஜி வட்டாரத்தின் ஓர் அங்கத்தவராக இருந்தார்.

Panorama இன் தகவல்படி, ஏர்ன்ஸ்ட் மற்றும் மார்கஸ் பல ஆண்டுகளாக காசல் சுதந்திர எதிர்ப்பு (FWK) குழுவின் அங்கத்தவர்களாக இருந்த அந்நேரத்தில் தான், அவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விலைக்கு வாங்குவது குறித்து விவாதித்தனர். 2011 வரையில் ஏர்ன்ஸ்ட் FWK இன் பாகமாக இருந்ததாக மற்றும் சமீபத்தில் வரையில் நவ-நாஜி காட்சியின் அங்கத்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுவதாக அந்த அரசியல் சஞ்சிகை குறிப்பிட்டது. சமீபத்திய ஆண்டுகளில் நவ-நாஜி வட்டாரத்துடன் ஏர்ன்ஸ்ட் முறித்துக் கொண்டிருந்தாரா என்று கேட்கப்பட்ட போது, காசல் நவ-நாஜி Mike Zavallich, Panorama இற்கு கூறுகையில், அவர்கள் அவ்வளவு விரைவாக வெளியேறுவதில்லை, அவர்கள் ஒரு படி பின்நகர்வார்கள், ஆனால் அவர்கள் முன்னர் எப்போதும் கொண்டிருந்ததைப் போலவே இப்போதும் அதே கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்றார்.

ஏர்ன்ஸ்ட் கைது செய்யப்பட்ட பின்னர் விரைவிலேயே அவருக்கு தனது ஆதரவை அறிவித்து அவரை பேஸ்புக்கில் "நல்ல தோழர்" என்று வர்ணித்த Zavallich, NSU இன் நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த ஒருவராவார். Die Welt இன் ஓர் அறிக்கையின்படி, நவம்பர் 2011 இல் NSU அம்பலமான பின்னர் உடனடியாக மத்திய குற்றவியல் பொலிஸின் கவனத்திற்கு வந்திருந்தார். அந்நேரத்தில், புலனாய்வாளர்கள் NSU உடன் தொடர்பு வைத்துள்ள 129 நபர்களின் ஒரு பட்டியலை முன்வைத்தனர். அந்த "129 பேர் பட்டியல்" என்றழைக்கப்படுவதில் குறிப்பிடப்பட்டவர்களில் காசலைச் சேர்ந்த நான்கு நபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் Mike Zavallich.” NSU இக்கு முந்தைய அமைப்பாக இயங்கிய துரிங்கியா உள்நாட்டு படை என்பது இருந்தது பற்றி அவர் அறிந்திருந்தார்.

வலதுசாரி தீவிர பயங்கரவாத அமைப்பான Combat 18 இன் முன்னணி உறுப்பினர்கள் Stanley R. மற்றும் Bernd T. ஆகியோர், NSU உடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்த ஏர்ன்ஸ்ட் இன் மற்ற கூட்டாளிகளாவர். ஏர்ன்ஸ்ட் இந்த ஆதாரநபர்கள் மூலமாக NSU உறுப்பினர்களான Uwe Böhnhardt, Uwe Mundlos, மற்றும் Beate Zschäpe உடன் நேரடி தொடர்பில் இருந்தார் என்பது பெரிதும் கருதக்கூடியதாக இருந்தது. Hessisch-Niedersächsisch Allgemeine பத்திரிகைக்கான ஒரு கட்டுரையில், ஏர்ன்ஸ்ட் வழமையாக செல்லும் களிப்பாட்ட நிலையமான “Stadt Stockholm in Kassel” இன் பெண் உரிமையாளர் ஏப்ரல் 2006 இல், Yozgat படுகொலையின் அந்நேரத்தில் குறிப்பிடுகையில், Zschäpe உடன் சேர்ந்து Bernd T. அந்த களிப்பாட்ட நிலையத்திற்கு வந்திருந்ததாக குறிப்பிட்டார்.

Bild பத்திரிகையின் தகவல்படி, ஏர்ன்ஸ்ட் NSU உடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கக்கூடிய குறைந்தபட்சம் மற்றொரு சந்தர்ப்பமும் இருந்தது: அது, “Bandidos” ராக்கர் களிப்பாட்ட நிலைய வளாகத்தில் Stanley R. இன் 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது. விருந்தினர்களில் Böhnhardt, Mundlos, மற்றும் அனேகமாக Beate Zschäpe உம் இருந்தனர். இந்த கூட்டம் ஏப்ரல் 6 இல் Yozgat படுகொலைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால், "அதில் ஸ்டீபன் ஏர்ன்ஸ்ட் இருந்தாரா?” என்று Bild வினவுவதைக் காட்டும் ஒரு காணொளி பகுதி புலனாய்வு கோப்புகளில் இருந்து மர்மமாக மறைந்துவிட்டது.

வலதுசாரி தீவிர பயங்கரவாத வலையமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புகள் வைத்துள்ள அரசு மற்றும் பாதுகாப்பு சேவைகள், அந்த படுகொலை மீதான ஒரு முழுமையான விசாரணையைத் தடுக்க அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகின்றனர். NSU சம்பந்தமாக ஹெஸ்ச மாநில உளவுத்துறை சேவையின் ஆவணங்கள் 2044 வரையில் மூடிமுத்திரையிடப்பட்டிருக்கும் என்பதை மாநில நாடாளுமன்றத்தின் புதன்கிழமை அவசர அமர்வின் போது ஹெஸ்ச உள்துறை அமைச்சர் Peter Boyth (CDU) வெளிப்படுத்தினார். ஏர்ன்ஸ்ட் சம்பந்தமான கோப்பும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு குண்டுவெடிப்புகள், 10 நபர்களின் படுகொலைகள் மற்றும் தொடர்ச்சியான பல வங்கி கொள்ளைகளுக்குப் பொறுப்பான ஒரு நவ-நாஜி பயங்கரவாத அமைப்பான தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கத்திற்கு எதிரான ஐந்தாண்டு வழக்கில் ஏற்கனவே, மத்திய அரசு வழக்குரைஞர் பாதுகாப்பு முகமைகள் வகித்த பாத்திரத்தை ஆய்வுக்குட்படுத்துவதைத் தவிர்க்க அவரால் ஆனமட்டும் ஒவ்வொன்றையும் செய்தார். இதே அணுகுமுறை இப்போது தொடரப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை அவரின் பத்திரிகை அறிக்கையில், அந்த அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் Markus Schmidt கூறுகையில், “அந்த மூன்று கைதிகளும் ஒரு வலதுசாரி பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள் அல்லது அதுபோன்றவொரு குழுவை உருவாக்கி இருந்தனர் என்பதை எடுத்துக்காட்ட எந்த ஆதாரமும் இல்லை,” என்று வாதிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விசாரணையை முடக்க அனைத்தும் செய்து வருகின்ற நிலையிலும், இப்போது தெரிய வந்துள்ள உண்மைகளின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு தெளிவான விபரம் வெளிப்பட்டு வருகிறது. ஏர்ன்ஸ்ட் வெறுமனே NSU இன் ஒரு நெருக்கமான கூட்டாளியாக மட்டும் செயல்பட்டு வரவில்லை, மாறாக லூப்க்கவின் படுகொலை NSU இன் தொடர் படுகொலைகளின் தொடர்ச்சியாக இருக்கலாம். 2000 மற்றும் 2007 இடையிலான அந்த தொடர் படுகொலை சம்பவங்களில் ஒன்பது புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பலியாகி இருந்தனர்.

லூப்க்க அவரின் அகதிகள்-ஆதரவு நிலைப்பாட்டுக்காக சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதற்கு பலமான ஆதாரம் உள்ளது. 2015 இல், அவர் ஒரு மாவட்ட தலைவராக அகதிகளுக்கு இடமளிப்பதற்குப் பொறுப்பாக இருந்த நிலையில், அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் அது சம்பந்தமான கேள்வி மீது வலதுசாரியினரை எதிர்த்தார். இது ஓர் இணையவழி வெறுப்பு பிரச்சாரத்தைத் தூண்டியது, அதில் மரண அச்சுறுத்தல்களும் உள்ளடங்கும், இது இந்தாண்டு ஆரம்பத்தில் புதுப்பிக்கப்பட்டது, இதில் வலதுசாரி Expellees கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் CDU அரசியல்வாதியுமான Erica Steinbach உம் உள்ளடங்குவார். மத்திய அரசு வழக்குத்தொடுனரின் தகவல்படி, ஏர்ன்ஸ்ட் பொலிஸ் இற்கு வழங்கிய அவரின் வாக்குமூலத்தில் அகதிகள் குறித்த லூப்க்கவின் கருத்துகளுக்கு விடையிறுப்பாக தான் அவரைப் படுகொலை செய்ததாக தெரிவித்தார். நான்காண்டுகளுக்கு முன்னர் அவர் அந்த பொதுக்கூட்டத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மேலதிக உள்நோக்கங்கள் இருந்துள்ளன என்பதையும் விட்டுவிட முடியாது. Tagesspiegel செய்தியின்படி, லூப்க்க NSU இன் கண்காணிப்பின் கீழ் இருந்தார். அந்த பயங்கரவாத குழு 10,000 பெயர்கள் மற்றும் இலக்குகளின் ஒரு பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. பாதுகாப்புத்துறை ஆதாரநபர்களிடம் இருந்து Tagesspiegel அறிந்து கொண்ட அளவில், லூப்க்க "சுமார் 8,000 நபர்களது பட்டியலின் இறுதி பாகத்தில்" பட்டியலிடப்பட்டிருந்தார். அவர் பெயர் அந்த பட்டியலில் ஆரம்பகாலத்திலேயே வந்தது குறித்து அது ஆச்சரியமடைந்ததாக அப்பத்திரிகை குறிப்பிட்டது. NSU இன் தொடர் படுகொலைகள் முடிந்து நான்காண்டுகளுக்குப் பின்னர், 2015 இல் தான் லூப்க்க வலதுசாரி தீவிரவாதிகளின் ஓர் இலக்காக ஆகியிருந்தார்.

காசல் மாவட்ட நிர்வாக சபைவரை எட்டியிருந்த அதிவலது தீவிரவாத குழுக்களுக்கு ஒருவேளை லூப்க்கவை நிறைய தெரிந்திருக்கலாம், அல்லது அவர் அதற்கு ஒரு தடையாக ஆகியிருக்கலாம். லூப்க்க இன் கீழ் இருந்த உத்தியோகத்தர்களில் ஒருவரும், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அமைப்பின் (Hesse Verfassungsschutz) முகவருமான Andreas Temme, “சிறிய ஹிட்லர்" என்று புனைப்பெயர் இடப்பட்டிருந்தார். Yozgat படுகொலை செய்யப்பட்ட போது அவரும் அந்த தேனீர்விடுதியில் இருந்தார். ஆனால் அவர் எதையும் பார்க்கவில்லை என்று Temme கூறியிருந்தார், இந்த கூற்றை பல நிபுணர்கள் பெரிதும் சாத்தியமற்றதென கருதுகின்றனர்.

பாதுகாப்பு முகமைகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பல்வேறு தலையீடுகளின் காரணமாக, Temme இன் பாத்திரம் முழுமையாக இதுவரையில் விவரிக்கப்படவில்லை. மூனிச்சில் நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னால் நடந்த NSU விசாரணையில் Temme விளக்கம் அளித்தார் என்றாலும், முன்னாள் ஹெஸ்ச மாநில உள்துறை அமைச்சரும் தற்போதைய முதலமைச்சரும், லூப்க்க இன் தனிப்பட்ட நண்பருமான Volker Bouffier, கட்டுப்பாடற்ற விளக்கம் அளிக்க அங்கீகாரம் வழங்க மறுத்தார்.

லூப்க்கவின் கொலையாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்ரெபான் ஏர்ன்ஸ்ட் குறைந்தபட்சம் மறைமுகமாகவாவது Temme உடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு நவ-நாஜி மற்றும் உளவுத்துறை முகமையின் உளவாளியான, காய்கறி என்று குறியீட்டுப் பெயரிடப்பட்டிருந்த Benjamin Gärtner இனை நன்றாக தெரியும். இவர் Yozgat கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக Temme உடன் தொலைபேசியில் பேசியிருந்தார். Gärtner பெப்ரவரி 2016 இல் ஹெஸ்ச மாநில நாடாளுமன்றத்தில் NSU விசாரணைக் குழுவுக்கு விளக்கமளிக்கையில், ஏர்ன்ஸ்ட் ஐ "NPD ஸ்ரெபான்" என்று அவர் அறிந்திருந்ததை உறுதிப்படுத்தினார்.

கார்த்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் Spiegel TV செய்தியாளரிடம், ஏர்ன்ஸ்ட் ஐ அவருக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அதற்கு மேலதிகமாக அவர் எதுவும் கூறவில்லை. அவருக்கு "அச்சமயத்தில் வாய்மூடி இருக்க" கூறப்பட்டிருந்ததாகவும், “வாய்திறந்தால் எனக்கு என்ன நேரும்" என்பது தெரியாது என்றும் அவர் கூறினார். “இன்னும் எத்தனை காலத்திற்கு நான் வீட்டில் அமர்ந்திருப்பேன் என்பது எனக்கு தெரியாது" என்றார். யாரைக் குறித்து அவர் அஞ்சுவதாக Spiegel TV அவரை வினவியது. “அரசாங்கம்" என்றவர் பதிலளித்தார்.