ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලේඛක ශක්තික සත්කුමාර සහ කලාවේ නිදහස ආරක්ෂා කිරීම සඳහා ක්‍රියාකාරී කමිටු ගොඩනගනු!

இலங்கை எழுத்தாளர் சக்திக சாகுமார மற்றும் கலையின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!

Statement by the Socialist Equality Party (Sri Lanka)
24 June 2019

இலங்கை அரசாங்கத்தின் தலைமையிலான ஆளும் வர்க்கம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை அதிகரித்து கலை, கலைஞர்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது.

விருது பெற்ற இளம் எழுத்தாளர் சக்திக சத்குமார, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட "அர்த" (அரை) என்ற சிறுகதை காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அந்த அடக்குமுறையின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாகும்.

பொல்கஹாவெல சசனாரக்ஷக பாலமண்டலயவின் (சாசன பாதுகாப்பு சபை) மாங்கடவல சுமன என்ற பௌத்த துறவி கொடுத்த புகாரைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பொல்கஹாவெல பொலிசார், சத்குமாரவை கைது செய்து, ஏப்ரல் 1 அன்று பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்நிறுத்தினர். அங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, சத்குமாரவுக்கு மீண்டும் மீண்டும் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

"அர்த" சிறுகதையில், ஒரு இளம் துறவி பௌத்த கோவிலின் தலைமை துறவியினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையே. கதையில் ஒரு இடத்தில் பௌத்த இலக்கியங்களில் வரும் "சித்தார்த்த" என்ற கதாபாத்திரம் வேறுபட்ட விதத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கற்பனைகள் ஒரு சிறுகதையில் பொதிந்திருக்க முடியும், அதே வேளை கலைப் படைப்புக்களுக்கு மேலதிகமாக, எழுத்தாளருக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க நடவடிக்கை எடுப்பதானது கருத்துக் கூறுவதற்கு உள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் கலை சுதந்திரத்தின் மீதான கடுமையான தாக்குதலாகும்.

போலி-இடது மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் முழு ஆதரவோடு, அரசாங்கம், பொலிஸ், நீதித்துறை மற்றும் பௌத்த ஸ்தாபகம் உட்பட முழு அரசியல் ஸ்தாபகமும் மேற்கொண்டுள்ள இந்த ஜனநாயக விரோத தாக்குதலை, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும் ஐயத்திற்கிடமற்றவகையில் எதிர்க்கின்றன.

இந்த தாக்குதலுக்கு எதிராக கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பொது கூட்டங்களை நடத்துவதன் மூலம் சத்குமாரவை விடுவிப்பதற்கான போராட்டத்திற்கு கலை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துக்கொள்ளும் அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை முன்வருமாறு சோ.ச.க. மற்றும் ஐ.ஐ.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றன.

முழு முதலாளித்துவ ஸ்தாபகமும் அவருக்கு எதிராக அணிதிரண்டு இருப்பதால் சத்குமாரவின் விடுதலைக்கு இத்தகைய ஐக்கியப்பட்டதும் கொள்கை ரீதியானதுமான போராட்டம் அவசியமாகும்.

அவருக்கு பிணை எடுப்பதை கடினமாக்கும் வகையில், 2007 இல. 56 கொண்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்) 3 (1) இன் கீழ் உள்ள, இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 291 (ஆ) இன் கீழேயே பொலிசார் இந்த எழுத்தாளருக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

பௌத்த அதிதீவிரவாத கும்பலே மேற்கண்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு “அறிவுறுத்தி” உள்ளது. “பௌத்த தகவல் மையத்தின்” அங்குகல்லே சிறி ஜினானந்த மற்றும் சிங்கள-பௌத்த அதிதீவிரவாத அமைப்பான “சிங்கலே” (சிங்க இரத்தம்) இன் பொதுச் செயலாளர் மடல்லே பஞ்ஞாலோக என்ற பௌத்த பிக்குவும், பெப்பிரவரி 25 அன்று பொலிமா அதிபரை சந்தித்து மேற்கண்ட சட்டவிதிகளின் கீழ் சத்குமார மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

கலைஞர்கள் மற்றும் கலை படைப்புகளுக்கு எதிராக சமீப காலத்தில் பௌத்த ஸ்தாபகம் தலையிடுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்டில் பொலிஸ்மா அதிபரை சந்தித்த மேற்கூறிய ஜினானந்த பிக்கு, மாலக தேவப்பிரியாவின் "கனட்ட பராக்" வானொலி நாடகத் தொடர் "பௌத்தத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்துகிறது" என்று கூறி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார்.

மார்ச் 3 அன்று, பொல்கஹாவெல பிரதேசத்தின் சசனராக்ஷக பலமண்டலய மற்றும் “பௌத்தத்தை பாதுகாக்கும் இளஞர் முன்னணி” என்ற அதிதீவிரவாத பௌத்த குழுவும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “பௌத்தத்தை நாசமாக்கும் சதிகார எழுத்துக் கலையில் ஈடுபட்டிருக்கும்" சத்குமார எதிர்காலத்தில் கட்டுரைகளை வெளியிட ஊடகங்களில் இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

ஐ.சி.சி.பி.ஆர். இன் பிரிவு 3 இன் கீழ், ஒரு நபர் கைது செய்யப்பட்டால், மேல் நீதிமன்றத்தால் மட்டுமே அவருக்கு பிணை வழங்க முடியும். அதுவும் விசேட சூழ்நிலைகளின் கீழயே ஆகும். மற்றும் அது நேரத்தை வீனடிக்கும் நடவடிக்கையாகும். இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு நபருக்கு பத்து வருடங்களுக்கும் மேலாக கடின உழைப்புடன் கூடிய தண்டனை விதிக்கப்படலாம்.

சத்குமாரவுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பொலிசும் பௌத்த அதிதீவிரவாதிகளும் அவரை கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவதற்கும், இதன் மூலம் அனைத்து கலை படைப்பாளர்களையும் மாற்றீடு எழுத்தாளர்களையும் மிரட்டுவதற்கும் செயற்பட்டுள்ளனர்.

சத்குமார தனது படைப்பின் மூலம் எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்ற அவரது வழக்கறிஞர்களின் சட்டரீதியான தெளிவுபடுத்தலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், அவரை விடுவிக்கவோ அல்லது அவருக்கு பிணை வழங்கவோ மறுத்துவிட்டது.

"இகிலென மாலுவோ (நழுவும் மீன்கள்)", "உசாவிய நிஹண்டய் (நீதிமன்றம் மௌனமாக உள்ளது)", "அக்ஷரய (அட்சரம்)" போன்ற படங்களும், "மேரி நம்வூ மாரியா (மேரி என்ற மாரியா)", "புதுன்கே ரஸ்தியாதுவ (புத்தரின் போக்கிரித்தனம்)" போன்ற பல கலைப் படைப்புகளும் ஆளும் வர்க்கத்தால் கழுத்து நெரிக்கப்பட்ட சமீபத்திய வரலாற்றில், பேச்சு சுதந்திரம் மீதான இந்த புதிய தாக்குதல்கள் கலைஞர்களுக்கு எதிரானது மட்டுமல்ல.

பொலிசார் பத்திரிகையாளர் குசல் பெரேராவை கைது செய்து வழக்குத் தொடர முயற்சித்தமை மிகச் சமீபத்திய சம்பவம் ஆகும்.

மே 17 அன்று, டெய்லி மிரர் பத்திரிகையில் “From Islamic terrorism to marauding Sinhala Buddhist violence” (இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து கொள்ளையடிக்கும் சிங்கள பௌத்த வன்முறை வரை) மராடிங் செய்வது” என்ற தலைப்பில் பெரேரா எழுதிய கட்டுரை பற்றி விசாரணை செய்யவும் மற்றும் அவரை கைது செய்யவும் கட்டளையிடுமாறு, பொலிசின் திட்டமிட்ட குற்றங்கள் சம்பந்தமான பிரிவு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி தூண்டுதல்களையும் வன்முறையைகளையும் தடுக்க தவறியதற்காக பெரேரா தனது கட்டுரையில் அரசாங்கத்தை "விமர்சித்து" இருந்தார்.

1948 இல் ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்தே, தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாகப் பிரிக்க சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை ஊக்குவித்த கொழும்பு முதலாளித்துவம், 1948 இல் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இரத்து செய்ததுடன், 1956 இல் சிங்களத்தை அதிகாரபூர்வ மொழியாக மாற்றியது. இதற்கும் மேலாக, 1972 ஆம் ஆண்டின் முதல் குடியரசு அரசியலமைப்பில் பௌத்த மதத்தை அரச மதமாக மாற்றி, பௌத்த ஸ்தாபனத்திற்கு ஒரு சிறப்புச் சலுகையை வழங்கியது.

தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக கொழும்பு ஆளும் வர்க்கம் முன்னெடுத்த முப்பது ஆண்டுகால யுத்தத்திற்கு இணையாக விரிவாக்கப்பட்ட சிங்கள-பௌத்த மேலாதிக்க பிரச்சாரம் காரணமாக, சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் பௌத்த ஸ்தாபனத்திற்கு தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருந்துள்ளது.

யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, குறிப்பாக ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக ஆளும் வர்க்கத்தால் கட்டவிழ்த்துவிப்பட்ட வன்முறையின் உச்சத்தில் இருப்பதும், கலையின் சுதந்திரத்திற்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கித் திரிவதும், முதலாளித்துவ ஆட்சியாளர்களால் தூக்கி வளர்க்கப்பட்ட பௌத்த அதிதீவிரவாத கும்பல்களே ஆகும்.

எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்யாமல் சத்குமார மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ஒரு வருடத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அதிதீவிரவாத பொதுபல சேனா அமைப்பின் தலைவரான கலகொட அத்தே ஞானசாரா பிக்குக்குவுக்கு மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுவித்தார்.

கலை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கபட்டு வரும் இந்த தாக்குதல் சகல ஜனநாயக உரிமைகளுக்கும் எதிராக இந்தப் பிராந்தியமெங்கும் மற்றும் சர்வதேச அளவிலும் முன்னெடுக்கப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

வட இந்திய திரைப்பட இயக்குனர் சேதான தீர்த்தஹள்ளி மற்றும் எழுத்தாளரான ஹூசாங்கி பிரசாத், எழுத்தாளர் கே.எஸ். பகவான் ஆகியோர் இந்து மேலாதிக்கவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதோடு, கர்நாடக மாநிலத்தில் கன்னட பல்கலைக்கழக துணைவேந்தரும், நூற்றுக்கணக்கான கல்வி புத்தகங்களை எழுதியவருமான எம்.எம். கால்போக், பிரதமர் நரேந்திர மோடியின் இந்து பேரினவாத பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் போர்க்குற்றங்கள் மற்றும் அவர்கள் உலகம் முழுதும் செய்த ஆட்சி மாற்ற சதிகளையும் அம்பலப்படுத்திய காரணத்தால், விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை தூக்கிலிட அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட கொடூரமான முயற்சியானது, பேச்சு சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான சர்வதேச தாக்குதலின் உச்சகட்டமாகும்.

ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியவாதிகளின் போர்க்குற்றங்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய அந்த நாட்டின் ஊடகங்களுக்கும் மற்றும்  பிரான்ஸ் ஏகாதிபத்தியம் யேமனில் செய்த யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய பிரான்ஸ் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் பாய்ச்சலும் இந்த சர்வதேச நிகழ்வின் ஒரு பாகமாகும்.

பாசிச பாணியிலான மற்றும் அதிதீவிர வலதுசாரி இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலமும், பொலிஸ் அரசு நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையாக முன்னெடுப்பதன் மூலமும், முன்னெப்போதையும் விட தனது போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்துவதன் மூலமுமே முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக வளர்ந்து வரும் சமூக விரோதத்திற்கு ஆளும் உயரடுக்கு பதிலளிக்கிறது.

தொழிலாளர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை மிரட்டுவது மற்றும் வெகுஜனங்களை அரசியல் ரீதியில் அடக்குவதை இலக்காகக் கொண்டு அவர்கள் அசன்ஜ் மற்றும் சத்குமார போன்றோரை வேட்டையாடுகின்றனர்.

இவ்வாறு வேட்டையாடப்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தமாக ஒரு அமைப்பு பின்பற்றும் அணுகுமுறை அந்த அமைப்பின் வர்க்க நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

உலகெங்கிலும், போலி-இடது அமைப்புகள் அசான்ஜிற்கு எதிரான வேட்டையாடலில் ஏகாதிபத்தியவாதிகளுடன் நேரடியாக தங்களை இணைத்துக் கொள்கின்றன. இல்லையெனில், மௌனம் காப்பதன் மூலம் மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். சத்குமார சம்பந்தமாக இலங்கையின் போலி-இடதுகளின் பிரதிபலிப்பும் வேறுபட்டதல்ல. முதலாளித்துவ அமைப்பு முறையோடு உறுதியாக இணைந்திருக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிப்பதாலேயே போலி-இடதுகள் அத்தகைய பிற்போக்கு அணுகுமுறையை பின்பற்றுகின்றன.

முதலாளித்துவ அமைப்பு மற்றும் வர்க்க சமுதாயம், முதலாளித்துவ அரசு மற்றும் அதன் பிற்போக்குத்தனமான அடக்குமுறை சட்டங்களை ஒழிப்பதற்கான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே, கலை சுதந்திரம் உட்பட அனைத்து ஜனநாயக உரிமையையும் பாதுகாக்க முடியும்.

உலகின் அனைத்து அரசாங்கங்களையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் பெரிய நிறுவனங்களையும் விட வரலாற்று ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ், முதலாளித்துவ ஆட்சியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் அனைத்து அமைப்புகளிலிருந்தும் சுயாதீனமாக ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை உருவாக்குவது அவசர பணியாகிவிட்டது.

எழுத்தாளர் சாகுமாராவின் சுதந்திரத்தையும், மேற்கூறிய நோக்கங்களையும் அடைய கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பொது கூட்டங்களை ஏற்பாடு செய்ய கலைஞர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகளை நடவடிக்கைக் குழுக்களை அமைக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதன் பாகமாக, தமது கலை படைப்புக்கான சுதந்திரம் போலவே ஏனைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடும் நடவடிக்கை குழுவைக் கட்டியெழுப்புவதற்கு உடனடியாக முன்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலைத் துறையில் ஈடுபட்டுவரும் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.