ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the 79th anniversary of the assassination of Leon Trotsky

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் 79 ஆம் நினைவாண்டு

Bill Van Auken
21 August 2019

எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் தான், ரஷ்ய புரட்சியில் விளாடிமீர் லெனினின் துணை-தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, ஒரு ஸ்ராலினிச படுகொலையாளியால் ஒரு நாள் முன்னதாக தாக்கப்பட்ட உயிராபத்தான காயங்களால் மரணமடைந்தார்.

அந்நூற்றாண்டின் இந்த குற்றம், சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இரகசிய பொலிஸ், GPU, ஒழுங்கமைத்த பாரியளவிலான சர்வதேச நடவடிக்கைகளின் விளைவாக இருந்தது. GPU இன் படுகொலையாளர் ரமோன் மெர்காடர் (Ramon Mercader) நடத்திய அந்த இரத்தவெறி பிடித்த செயலுக்கு உதவியாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உள்ளேயும் மற்றும் மெக்சிகோ பெருநகரமான கோயோகானில் (Coyoacán) ட்ரொட்ஸ்கி வீட்டுக்கு உள்ளேயும் உளவாளிகளை ஊடுருவ விடும் ஒரு சதியும் அதில் சம்பந்தப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதில் ஜேர்மன் நாஜி ஆட்சியின் கரங்களுக்குச் சுதந்திரம் வழங்கி, ஸ்ராலின் ஹிட்லருடன் ஓர் ஆக்கிரமிப்பு-நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட உடன்பட்ட தினத்திலிருந்து ஓராண்டுக்குப் பின்னர், அந்த படுகொலை ஸ்ராலினிச மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்தின் உச்சநிலையைப் பிரதிநிதித்துவம் செய்தது.

1929 இல் இருந்தே ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்தார், அவருக்கு ஒரே நாடு மெக்சிகோ மட்டுமே தஞ்சம் வழங்கி இருந்த நிலையில், "நுழைவனுமதி இல்லா பூமி" என்று அவர் குறிப்பிட்ட ஒரு நிலைமையை எதிர்கொண்டிருந்தார். ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடொவ், அவரின் அரசியல் செயலர் எர்வின் வொல்ஃப் மற்றும் நான்காம் அகிலத்தின் செயலர் ருடொல்ஃப் க்ளெமென்ட் உட்பட, GPU படுகொலையாளர்கள், ஏற்கனவே அவரின் நெருக்கமான ஒத்துழைப்பாளர்கள் பலரையும் படுகொலை செய்துவிட்டிருந்தனர்.

சோவியத் ஒன்றியத்திலேயே கூட, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அனைத்து அரசியல் எதிர்ப்பையும் ஒழித்துக் கட்டுவதை நோக்கி, 1936-38 மாஸ்கோ வழக்குகளை நடத்தியது. ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்களும், ரஷ்யாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இரண்டிலும் நிலவிய அளப்பரிய புரட்சிகர கலாச்சார அபிவிருத்தியின் விளைவாக உருவாகி இருந்த நூறாயிரக் கணக்கான சோசலிஸ்டுகளும் அதன் பிரதான இலக்குகளில் வைக்கப்பட்டு, ஓர் அரசியல் இனப்படுகொலைக்கு நிகரான ஒன்றில் படுகொலை செய்யப்பட்டனர். 1937 இல் ட்ரொட்ஸ்கி எழுதியவாறு, அப்போதிருந்து ஸ்ராலினிசமும் நிஜமான மார்க்சிசமும் "ஒட்டுமொத்த இரத்த ஆற்றால்" பிரிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் கூட ஸ்ராலின், போர் வெடித்ததும் மற்றும் அதன் விளைவாக சோவியத் ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலும் நெருக்கடி ஏற்பட்டதும், ட்ரொட்ஸ்கி, ஆளும் அதிகாரத்துவத்திற்கு ஒரு புரட்சிகர சவாலை முன்னிறுத்தி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய எழுச்சியால் மேலெழுந்து விடுவாரோ என்று நியாயமாக அஞ்சினார்.

1937 இல் விக்டர் சேர்ஜ் எழுதியதைப் போல: “வெறுப்பு மற்றும் பயத்தைத் தவிர்த்து ஆட்சியின் கட்டமைப்பை அழித்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனமான கட்டுப்பாடுகளுக்கு அங்கே வேறெந்த விளக்கமும் இல்லை... மாற்றுக் குழு முன்னெச்சரிக்கையாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. முதியவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்... அந்த முதியவர் வாழ்ந்து கொண்டிருக்கும் வரையில், அங்கே வெற்றிக் களிப்புடைய அதிகாரத்துவத்திற்குப் பாதுகாப்பு இல்லை.”

அந்த தலைச்சிறந்த புரட்சியாளரின் மண்டை ஓட்டில் பனிக்கோடாரியைச் சொருகி ஸ்ராலினிச படுகொலையாளியால் அவரின் வாழ்வை முடிக்க முடிந்தது என்றாலும், அதேவேளையில் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகளையும் மற்றும் அந்த சிந்தனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அந்த இயக்கத்தை நிர்மூலமாக்குவதும் தான் ஸ்ராலினின் நோக்கமாக இருந்தது என்றால், பின் அந்நடவடிக்கையானது வெட்கக்கேடான ஒரு தோல்வியாக நிரூபணமானது.

1938 இல் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம், ஸ்ராலின் மற்றும் அவரின் படுகொலையாளியை விஞ்சி காலங்கடந்து வாழ்கிறது என்பது மட்டுமல்ல, ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு ஓர் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதனையும் மற்றும் சோவியத் ஒன்றியத்தையும் கலைத்து விட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையே விஞ்சி காலங்கடந்து உயிர்வாழ்ந்து வருகிறது.

ஸ்ராலினிச ஆட்சியைத் தூக்கியெறிவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் புரட்சி இல்லையென்றால், சோவியத் அதிகாரத்துவம் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தைக் (USSR) கலைத்து முதலாளித்துவத்தை மீட்டமைத்துவிடும் என்பதை ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார். முதலாளித்துவ பகுப்பாய்வாளர்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை உலக அரசியலுக்கு பொருத்தமான ஒரு நிரந்தர சொத்தாக பார்த்த நிலையில், போலி-இடதுகளும் திருத்தல்வாதிகளும் கோர்பச்சேவ் மற்றும் யெல்ஸ்டினை ஓர் "அரசியல் புரட்சியை" தொடங்கி வைப்பவர்களாக புகழ்ந்துரைத்த அதேவேளையில், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுதான் சரியானதென நிரூபணமானது, நான்காம் அகிலம் மட்டுமே அந்த அபிவிருத்தியை முன்கணித்து அரசியல்ரீதியில் தயாரிப்பு செய்திருந்த ஒரே இயக்கமாக இருந்தது.

ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி மற்றும் காட்டிக்கொடுத்த ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்த வரையில், ட்ரொட்ஸ்கியின் 1938 ஆய்வு முடிவான, “மனிதகுலத்தை தாக்கும் மாபெரும் சம்பவங்கள் ஒரு கல் மாற்றி மற்ற கல்லாக இத்தகைய காலங்கடந்து வாழும் அமைப்புகளை விட்டு வைக்காது,” என்பதை உறுதிப்படுத்தியதோடு, அவை உருக்குலைந்தன.

ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்திற்கு எதிரான அவரின் சளைக்காத போராட்டத்தில், சோசலிசத்திற்கான போராட்டத்தின் அரசியல் வேலைத்திட்ட அடித்தளங்களுடன் சேர்ந்து 21 ஆம் நூற்றாண்டில் புரட்சிகர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கான அடித்தளங்களையும் அமைத்திருந்தார். மார்க்சிச இயக்க வரலாற்றில் ட்ரொட்ஸ்கியைத் தவிர வேறெந்த பிரமுகரும், தற்போதைய உலக நிலைமைக்கும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமும் அதன் புரட்சிகர முன்னணிப்படையும் முகங்கொடுக்கும் பணிகளுக்கும் பொருத்தமானவராக இல்லை.

சோவியத் ஒன்றியம் மற்றும் மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி தொடுத்த போராட்டம், ஒரு கூர்மையான உலகளாவிய தொலைநோக்குப் பார்வையோடு, சோசலிசப் புரட்சியை ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்காக புரிந்து கொண்டிருந்தது.

ஸ்ராலின் எதற்காக நினைவுகூரப்படுவாரோ மற்றும் வரவிருக்கும் தலைமுறைகளால் வெறுத்து ஒதுக்கப்படும் அந்த அனைத்து கொடூரமான குற்றங்களும், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை சோவியத் அதிகாரத்துவம் கைத்துறந்ததைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் அதன் "தனியொரு நாட்டில் சோசலிசத்தை" அரவணைப்பதற்காகவும் நடத்தப்பட்டன. சோவியத் ஒன்றியத்தை ஒரு தன்னிறைவு தேசிய அரசாக அபிவிருத்தி செய்வதற்கான அந்த கருத்தாக்கம், அதிகாரத்துவம் அதன் சொந்த தனிச்சலுகைகளுடன் தேசிய அரசு அதிகாரத்தின் மீது அதன் பிடியைத் தக்க வைத்திருந்த அடையாளத்தைப் பிரதிபலித்தது.

இந்த பின்னோக்கிய தத்துவம், உலகப் புரட்சியை பழமைவாத அதிகாரத்துவ எந்திரத்தின் நலன்களுக்கு அடிபணிய வைப்பதை நியாயப்படுத்தியது. ட்ரொட்ஸ்கி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த கொள்கையின் விளைவுகளை முன்கணித்தார், சர்வதேச தொழிலாள வர்க்கம் தொடர்ச்சியாக பல பேரழிவுகரமான தோல்விகளைக் கண்டதுடன், அது ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததில் உச்சத்தை அடைந்தது.

1923 இல் இடது எதிர்ப்பைத் தொடங்கியதில் இருந்து, ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான இயக்கம், 1917 அக்டோபர் புரட்சியை வழிநடத்திய நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீது தன்னை நிலைநிறுத்தி இருந்தது.

இந்த தத்துவம் ரஷ்யாவுக்குள் நிலவிய பின்தங்கிய பொருளாதார நிலைமைகள் மற்றும் அப்போதைய வர்க்க சக்திகளின் உறவுகளை அதன் ஆரம்ப புள்ளியாக எடுக்கவில்லை, அதற்கு மாறாக ரஷ்ய புரட்சி மீதான உலக-வரலாற்று உள்ளடக்கத்தில் கொண்ட ஒரு புரிதலை ஆரம்ப புள்ளியாக எடுத்திருந்தது. உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அபிவிருத்தி அடைந்து வந்த நிலைமைகளின் கீழ், ரஷ்யா போன்று, காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், முந்தைய முதலாளித்துவ வர்க்க புரட்சியுடன் தொடர்புபட்ட ஜனநாயக பணிகளை தொழிலாள வர்க்கம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதையும், ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை ஏற்க நிர்பந்திக்கப்பட்டாலும் மற்றும் ஒரு சோசலிச தன்மையில் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அந்த புரட்சியானது உலக சோசலிச புரட்சியின் கட்டமைப்புக்குள் மட்டுமே ரஷ்யாவினது பின்தங்கிய வரம்புகளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் காண முடியும் என்பதையும் அவர் ஸ்தாபித்து காட்டினார்.

இந்த உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி தொடுத்த போராட்டம், செப்டம்பர் 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதில் அதன் அரசியல் வெளிப்பாட்டைக் கண்டது.

அவர் இந்த மூலோபாய கருத்துருவை ஒரு தசாப்தத்திற்கு முன்னரே கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம் மீதான அவரது விமர்சனத்தில் உச்சரித்திருந்தார், அதில் அவர் எழுதினார்:

''எமது சகாப்தமான இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில், அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், ஒரேயொரு கம்யூனிஸ்ட் கட்சி தனியாகவோ அல்லது பிரதானமாகவோ அதன் சொந்த நாட்டின் நிலைமைகள் மற்றும் போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் அதன் வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும் ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 ஆகஸ்ட் 4ம் திகதி, அனைத்துக் காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. …. தற்போதைய சகாப்தத்தில், கடந்த காலத்தை விட மிக அதிகளவில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஓர் உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கே தான் கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையானதும் மற்றும் பிரதானமானதுமான வேறுபாடு இருக்கிறது.''

முன்னொருபோதும் இல்லாத உலகளாவிய உற்பத்தி ஒருங்கிணைப்பானது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பு முறையுடன் முன்பினும் அதிக கூர்மையாக மோதலுக்கு வரும் நிலைமைகளின் கீழ் மற்றும் இதில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் சர்வதேச மூலோபாயம் மற்றும் ஒழுங்கமைப்பின் அடிப்படையில் மட்டுமே வெற்றிகரமாக தொடுக்கப்பட முடியும் என்ற நிலைமைகளின் கீழ், உலக பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் மீதான ஒரு பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே ஒரு புரட்சிகர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தல், அவரை முற்றிலும் ஒரு சமகாலத்திய அரசியல் பிரமுகராக ஆக்குகிறது.

ட்ரொட்ஸ்கி இருந்திருந்தால் இன்று நாம் வாழும் உலகைப் புரிந்து கொள்வதற்குச் சிரமப்பட்டிருக்க மாட்டார், இது அவரது வாழ்நாளில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் அனைத்தாலும் சூழப்பட்டுள்ளதுடன், ஓர் உலகளாவிய வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியை முகங்கொடுக்கிறது. பாரிய பெருந்திரளான உழைக்கும் மக்கள் இடதை நோக்கி திரும்பி வருகின்ற போதினும் கூட, உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள் வலதை நோக்கி திரும்பி, பாசிச மற்றும் அதிவலது சக்திகள் மேலுயர்ந்து வருவதற்கு உதவுகின்றன மற்றும் துணை போகின்றன. மேலும், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, அமெரிக்கா முன்னணியில் இருக்க, பிரதான சக்திகள், உலகளாவிய போருக்கான தயாரிப்பில் அவற்றின் இராணுவத்தைக் கட்டமைத்து வருகின்றன.

நான்காம் அகிலத்தை நிறுவியபோது லியோன் ட்ரொட்ஸ்கியின் இன்றியமையா முன்னோக்கான, முதலாளித்துவ மரண ஓலத்தின் சகாப்தமான இதில் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதே தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் தலையாய பிரச்சினை என்பது அதன் முக்கியத்துவத்தையும் அவசர அவசியத்தையும் இன்னமும் கொண்டுள்ளது.

இந்த முன்னோக்கும், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடந்த கொந்தளிப்பான சம்பவங்களின் போது ட்ரொட்ஸ்கி தொடுத்த போராட்டத்தின் தொடர்ச்சியும், இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) பணிகளிலும் மற்றும் உலகெங்கிலுமான சோசலிச சமத்துவக் கட்சிகள் (SEP) தொடுத்து வரும் போராட்டத்திலும் உட்பொதிந்துள்ளன.

பாசிசத்திலிருந்து அதிவலது வரையில், தாராளவாதிகள் முதல் போலி-இடதுகள் வரையில், தேசியவாதம் இனவாதம் மற்றும் பாரம்பரிய பிளவுகளை ஊக்குவிப்பது தான் முதலாளித்துவ அரசியலின் ஒட்டுமொத்த வகையறாக்களையும் உந்திச்செல்கின்ற நிலையில், இவற்றுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வர்க்க அடிப்படையில் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தை முன்னெடுக்கிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி தன் வாழ்வையே அர்ப்பணித்திருந்த உலக சோசலிசத்திற்கான வேலைத்திட்டத்தைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டம், சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியுடன் இணைந்து வருகிறது. இந்த நினைவாண்டில், நாம் மிகவும் கடினமான நிலைமைகளின் கீழ் ட்ரொட்ஸ்கி தொடுத்த ஆழந்த அளப்பரிய சக்தி வாய்ந்த போராட்டத்திற்கு மட்டும் அஞ்சலி செலுத்தவில்லை. ட்ரொட்ஸ்கி எதிர்நோக்கிய சோசலிசப் புரட்சியின் உலக கட்சியைக் கட்டுவதற்காக, நமது கட்சி, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் தலையீடு செய்வதன் மூலமாக நாம் அவர் நினைவைக் கௌரவிக்கிறோம்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்

David North
30 September 2015

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகள்

Joseph Kishore
20 August 2015

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், கெல்ஃபான்ட் வழக்கும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியமும்

David North
10 November 2015

லியோன் செடோவ்: மகன், நண்பன், போராளி

01 November 2015

“ரொபேர்ட் சேர்விஸ் ஒரு விஞ்ஞானபூர்வ எதிர்வாதத்தை அல்ல, ஒரு பழியுரையை எழுதியுள்ளார்!”

28 November 2011