ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian protest marks seven years of legal vendetta against jailed Maruti Suzuki workers

இந்திய போராட்டம், சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கிய நடவடிக்கையின் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது

By Kranti Kumara and Keith Jones
31 July 2019

இந்திய அரசு மற்றும் ஜப்பானை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம் சுசூகி மோட்டார் கார்பரேஷன் தொடுத்த கொடூர ஜோடிப்பு வழக்கின் விளைவாக, ஆயுள் தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 வாகனத்துறை தொழிலாளர்களின் விடுதலை கோரி, மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) இடைக்கால குழு அழைப்புவிடுத்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இணைந்தனர்.

பாதிக்கப்பட்ட ஏனையவர்களும் மற்றும் முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாருதி சுசூகி தொழிலாளர்களும், மிகப்பெரிய குர்கான்-மானேசர் தொழில்துறை வளாகத்தின் ஏனைய தொழிற்சாலைகளது தொழிலாளர்கள் மற்றும் பிற ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டங்களில் உள்ளடங்கி இருந்தனர். அவர்கள் அந்த 13 பேரின் விடுதலையையும் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மாருதி சுசூகி தொழிலாளர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென்றும் கோரி பாதாகைகளை ஏந்தியிருந்தனர். அந்த பேரணியின் ஒரு துண்டறிக்கை ஈவிரக்கமின்றி தொழிலாளர்களுக்குப் பிணை வழங்க மறுத்ததற்காகவும், பொய்யான கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்புகள் மீதான மேல்முறையீட்டுக்கு முடிவு கூறாமல் கிடப்பில் போட்டிருப்பதற்காகவும், குறிப்பாக இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்ததுடன், “ஏன் இந்த அநீதி?” என்று கேள்வி எழுப்பியது.


பொய்யான கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, தொழிலாளர்கள் பாதாகைகளும் பேனர்களும் ஏந்தியிருந்தனர்.

நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தித்துறை நிறுவனமான மாருதி சுசூகியிலும் மற்றும் உலகளவில்-ஒருங்கிணைந்த இந்தியாவின் புதிய உற்பத்தி தொழில்துறைகளிலும் மேலோங்கி உள்ள வறுமை-கூலிகள், கொத்தடிமை நிலைமைகள் மற்றும் பாதுகாப்பற்ற ஒப்பந்த வேலைகளைச் சவால் விடுத்தது மட்டுமே அவர்களின் ஒரே "குற்றமாக" இருந்துள்ளது.

மாருதி சுசூகியின் ஹரியானா மானேசர் கார் உற்பத்தி ஆலையில் அரசு ஒப்புதல் பெற்ற, நிறுவன ஆதரவிலான தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியிலிருந்து ஸ்தாபிக்கப்பட்ட MSWU சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அல்லது நிர்வாகிகள் 12 பேரும் அந்த பதிமூன்று நபர்களில் உள்ளடங்குவர்.

இந்த போராட்டம் ஜூலை 18 இல் நடத்தப்பட்டது. இந்த தினம், ஆலை தளத்தில் நிர்வாகம் தூண்டிவிட்ட கைகலப்பு மற்றும் தீவிபத்திலிருந்து ஏழாண்டுகள் ஆகியிருந்ததைக் குறித்தது. அந்த சம்பவங்கள் தான் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சாக்குபோக்காக பற்றிக் கொள்ளப்பட்டிருந்தன.

ஜூலை 18, 2012 சம்பவங்களுக்கு ஒருசில மணி நேரத்தில், மாருதி சுசூகி நிர்வாகம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் பொலிஸ் தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்தது. நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதுடன், பல MSWU தலைவர்கள் விடயத்தில், சித்திரவதை உள்ளடங்கலாக, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

MSWU ஐ நிறுவுவதற்கான தொழிலாளர்களின் ஆண்டு கணக்கில் நீண்ட போராட்டத்தின் போது மீண்டும் மீண்டும் அவர்களுக்கு எதிராக பொலிஸ் வன்முறையை ஏவிவிட்டிருந்த, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கம், பொலிஸ் வேட்டையாடலை ஆமோதித்து ஊக்கப்படுத்தியது. அது, 2012 ஆகஸ்ட் மாதயிறுதியில் அந்த ஆலை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, 2,300 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை —நடைமுறையளவில் ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியையும்—வேலையிலிருந்து நீக்குவதில் முழுமையாக மாருதி சுசூகிக்கு ஆதரவாகவும் இருந்தது.

13 பேர் மீதான அந்த வழக்கு, சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியது. உலகெங்கிலுமான தொழிலாளர்களையும் மற்றும் மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதில் ஜனநாயக உரிமைகளை தாங்கிபிடித்த அனைவரையும் அணித்திரட்டும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது (ICFI) பிரச்சாரத்தின் பாகமாக, உலக சோசலிச வலைத் தளம், அந்த 13 நபர்களையும் ஆயுள் முழுவதும் சிறையில் தள்ளுவதற்காக பொலிஸ், அரசு தரப்பு, நீதித்துறை எவ்வாறு இரகசியமாக மாருதி சுசூகி நிர்வாகத்துடனும் அரசியல் ஸ்தாபகத்துடனும் உடந்தையாய் இருந்தது என்பதை புலனாய்வு செய்து விரிவாக ஆவணப்படுத்தியது. (பார்க்கவும்: “The frame-up of the Maruti Suzuki workers—Part 1: A travesty of justice”)


மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக அரசும்-நிர்வாகமும் சட்டரீதியான பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ஏழாண்டுகள் ஆனதை இந்த ஆர்ப்பாட்டம் குறித்தது

பொலிஸ் —நீதிமன்றமே கூட இணக்கமாக இருந்த நிலையில்—மீண்டும் மீண்டும் ஆதாரங்களை இட்டுக்கட்டி, நேரில் பார்த்ததாக சாட்சிகளுக்குப் பயிற்சியும் அளித்தது. பொலிஸூம் வாதிகளின் தரப்பும் எவற்றை இன்றியமையா ஆதாரங்களாக வாதிட்டனவோ அவற்றின் மீது அரசு அத்தியாவசிய தடயவியல் சோதனைகளைக் கூட நடத்தவில்லை.

அந்த ஆலை-தளத்தில் நடந்த கைக்கலப்பிற்கு மத்தியில் மர்மமான முறையில் எழுந்த நெருப்புத்தான் வாதிகள் தரப்பு வழக்கின் முக்கிய அம்சமாக இருந்த நிலையில், அதில், புதிரான உடன்நிகழ்வாக தெரியும் வகையில், தொழிலாளர்களுக்கு ஆதரவான அந்நிறுவன அதிகாரி ஒருவர் புகையில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

வாதி தரப்பின் வழக்கில் அப்பட்டமான ஓட்டைகளையும் பொருத்தமின்மைகளையும் அவ்வழக்கின் நீதிபதி உதறி தள்ளினார் அல்லது விவரிக்காமல் தட்டிக் கழித்து, வேண்டுமென்றே சட்டத்தை சிதைத்தார். அவர் ஜூலை 18, 2012 சம்பவங்களைக் கண்டுற்ற மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகாத தொழிலாளர்களின் எந்தவொரு சாட்சியத்தையும் மற்றும் அனைத்து சாட்சியத்தையும் அவை MSWU க்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக இருக்கும் அல்லது அதற்கு பயந்து கூறப்படும் என்ற மூடிமறைப்பற்ற வலியுறுத்தலுடன் தவிர்த்து கொண்டார். மேலும் வெளிப்படையாக சட்டத்தை மீறும் விதத்தில், அவர் வேறு யாரோ தான் நெருப்பூட்டி இருந்தார்கள் என்பதை தொழிலாளர்களால் திட்டவட்டமாக எடுத்துக்காட்ட முடியாவிட்டால் பின் அவர்கள் தான் அதை செய்தார்கள் என்பது ஆதாரமாக அமைகின்றன என்று அறிவித்து, ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியச் சுமையை தொழிலாளர்களின் மீது சுமத்தினார்.

ஆரம்பத்தில் இருந்தே, மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான சட்டரீதியான பழிவாங்கும் நடவடிக்கை இந்திய பெருவணிகங்களின் பிரதான கட்சிகளது முழு ஆதரவைப் பெற்றிருந்தது. 2012 இல் இந்தியாவில் தேசியளவிலும் மற்றும் ஹரியானாவின் மாநில அரசாங்கத்திலும் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் கீழ் தொடங்கப்பட்ட அது, 2014 இல் புது டெல்லி மற்றும் ஹரியானாவில் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) பதவிக்கு வந்த பின்னர் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுத்துச் செல்லப்பட்டது.


பிரமாண்ட குர்கான்-மானேசர் தொழில்துறை வளாகத்தின் மிகப்பெரிய நகரான குர்கான் வீதிகள் வழியாக அரசு மாவட்ட தலைமையகம் வரையில் தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர்.

இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, மலிவுழைப்பு சுரண்டலுக்கு எதிரான எந்தவொரு சவாலும் அரசின் முழு பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என்பதை முதலீட்டாளர்களுக்கு மறுஉத்தரவாதப்படுத்தவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பீதியூட்டுவதற்காகவும், மாருதி சுசூகி தொழிலாளர்களை முன்னுதாரணமான தண்டனைக்கு உள்ளாக்க தீர்மானமாக உள்ளது.

உண்மையில், அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவர்களாகவே இது குறித்து உளறிக் கொட்டி இருக்கிறார்கள். அந்த 13 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா நீதிமன்றத்திடம் வலியுறுத்துகையில், “நமது தொழில்துறை வளர்ச்சி சரிந்துள்ளது, அன்னிய நேரடி முதலீடு (FDI) வறண்டு போயுள்ளன. பிரதம மந்திரி நரேந்திர மோடி 'இந்தியாவில் உற்பத்தி செய்' என்று அழைப்பு விடுத்து வருகிறார், ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நமது பிம்பத்தைக் கறைபடுத்துகின்றன,” என்றார்.

ஜூலை 18 போராட்டத்திற்குப் பின்னர், பாதிக்கப்பட்ட ஒரு மாருதி சுசூகி தொழிலாளரும் MSWU இடைக்காலக் குழு உறுப்பினருமான ஜிதேந்திர தன்கார் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில்: “மாருதி சுசூகி தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்களும் சரி ஒப்பந்த தொழிலாளர்களும் சரி, மாபெரும் பலத்தையும் சக்தியையும் வெளிப்படுத்தி ஐக்கியப்பட்ட விதத்தில் மேலெழுந்ததன் காரணமாக, முதலாளித்துவவாதிகள் மிரண்டு போனார்கள். தொழிலாளர்கள் அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களை விலக்கி நிறுத்துவதற்காக, நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலையை பயன்படுத்துவது உட்பட, முதலாளித்துவவாதிகள் எந்த மட்டத்திற்கும் செல்வார்கள் என்றவொரு சேதியை அவர்கள் அனுப்ப விரும்பினார்கள்,” என்றார்.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது இந்தியாவின் அரசு அமைப்புகள் கடும் விரோதத்துடன் இருப்பதை மீண்டுமொருமுறை ஒரு தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது, தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட குற்றத்தீர்ப்புகள் மீதான அவர்களின் மேல்முறையீட்டுக்குத் தீர்ப்பு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பிணை முறையீட்டின் அடிப்படையில் தன்னை விடுக்க வேண்டும் என்று சிறையில் அடைக்கப்பட்ட MSWU தலைவர்களில் ஒருவரான தன்ராஜ் பாம்பி எழுப்பிய ஒரு விண்ணப்பத்தை இம்மாத தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் கேள்விமுறையின்றி நிராகரித்தது. இந்தியாவின் உச்சபட்ச நீதிமன்றத்தின் இரண்டு உறுப்பினர் குழு, பாம்பியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவிப்பதற்கு முன்னர் தொழிலாளர்கள் மீதான பொலிஸ்-நிர்வாகத்தின் அவதூறுகளைக் கொண்டு பல நிமிடங்கள் பாம்பியின் வழக்கறிஞர்களை இடித்துரைத்து, அவர்களின் வாதங்களை முன்வைக்க கூட அனுமதி வழங்க மறுத்தது.

பாம்பியின் பிணை கோரிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் ஜூலை 2 தீர்ப்பைக் குறிப்பிட்டு, MSWU இடைக்கால குழு உறுப்பினர் ஜிதேந்திர தன்கார் கூறுகையில், “இந்நாட்டு அரசாங்கத்துடன் சேர்ந்து நீதிமன்றமும் முழுமையாக முதலாளித்துவவாதிகளுக்காக அர்பணித்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது,” என்றார்.

இதற்கிடையே, ஹரியான பிஜேபி மாநில அரசாங்கம் தொழிலாளர்கள் மீது இரத்த வெறிபிடித்து அலைகிறது. நிறுவன வலியுறுத்தலின் பேரில், அது அந்த 13 பேர் மீது சுமத்தப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கிலிட்டு கொல்லும் மரண தண்டனையாக மாற்றுமாறு கோரி, மார்ச் 2017 தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்துள்ளது. பொலிஸ் ஜோடிப்பு ஆதாரங்களைக் காட்டியிருந்த நிலையில் அல்லது அவர்களை எந்த ஒரு வாதி தரப்பு சாட்சியமும் கூட அடையாளம் காட்டியிராத நிலையில் 117 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக கைவிடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மீண்டும் கொண்டு வரவேண்டுமென்றும் அது கோரி வருகிறது.

ஜூலை 18 போராட்டத்தை அருகிலுள்ள மொத்தம் நான்கு சுசூகி க்கு சொந்தமான ஆலைகளின் தொழிற்சங்கங்கள், குர்கானில் உள்ள ஹோண்டா ஹீரோ மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலை தொழிற்சங்கங்கள், மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியில் கடந்த மூன்று தசாப்தங்களில் மேலெழுந்துள்ள ஒரு பிரதான உற்பத்தி மையமான குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்தில் உள்ள குறைந்தபட்சம் அரை டஜன் வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகளின் தொழிற்சங்கங்கள் ஆதரித்திருந்தன.

ஜூலை 18 ஆர்ப்பாட்டத்தின் முடிவில் குர்காவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசுகையில் MSWU இடைக்காலக் குழு உறுப்பினர் ராம்நிவாஸ், 13 தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் மீண்டும் பணியில் நியமிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்தார்.

அக்கூட்டத்தில், ஸ்ராலினிச கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உடன் இணைந்த தொழிற்சங்கமான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) தலைவர் சத்பீர் சிங்கும் உரையாற்றினார். மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கு ஓர் "அட்டூழியம்" என்று கண்டித்த அவர் பின்னர் எரிச்சலூட்டும் விதமாக, “தொழிலாள வர்க்க போராட்டங்களையும், தொழிலாள வர்க்க உணர்வுகளையும் மற்றும் தொழிலாள வர்க்க ஒற்றுமையையும் நசுக்கவும் மவுனமாக்கவும் பிரமாண்டமான சூழ்ச்சி நடக்கிறது,” என்று அறிவித்தார்.

சிஐடியு, இதர பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகள், மற்றும் சிபிஎம் மற்றும் அதன் நெருக்கமான கூட்டாளியும் சக ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை திட்டமிட்டு மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளன என்பதே யதார்த்தமாகும். ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளர்களின் கதியைக் குறித்து அவர்களின் பத்திரிகைகளில், பேரணிகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளில் எதுவும் குறிப்பிடுவதே இல்லை என்பதும் இதில் உள்ளடங்கும்.

நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸை எதிர்த்து அறைகூவல் விடுத்து மீண்டும் மீண்டும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புகளை நடத்துவதன் மூலமாக MSWU ஐ உருவாக்கிய மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்குணமிக்க முன்னுதாரணத்தைக் குறித்து ஸ்ராலினிசவாதிகள் அஞ்சுகிறார்கள். அனைத்திற்கும் மேலாக, மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவை அணிதிரட்டுவதற்கான எந்தவொரு தீவிர பிரச்சாரத்திற்கும், 13 பேரை விடுவிப்பதற்கான போராட்டத்தையும் அவர்கள் எதற்கு சவால் விடுத்தார்களோ அந்த மலிவுழைப்பு மற்றும் பாதுகாப்பற்ற வேலைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தையும் இணைக்க வேண்டியிருக்கும் என்பதால், அதுபோன்றவொரு தீவிர பிரச்சாரமானது முதலாளிமார்கள், காங்கிரஸ் கட்சி மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஏனையவர்களுடனான அவர்களின் சௌகரியமான உறவுகளைத் தொந்தரவுபடுத்தும் என்று அவர்கள் உணர்கின்றனர்.

இந்த ஜோடிப்பு வழக்கை அம்பலப்படுத்துவதானது, பரம வகுப்புவாதியான நரேந்திர மோடி மற்றும் அவரின் பிஜேபி இக்கு எதிராக நீதிமன்றங்களும் இந்திய குடியரசின் மற்ற அமைப்புகளும் ஒரு "ஜனநாயக" பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன என்ற ஸ்ராலினிசவாதிகளின் கூற்று பொய் என்பதையும் எடுத்துக்காட்டிவிடும்.

கடந்த டிசம்பரில் தொழிற்சங்கங்களை மீறி போராட்டத்தில் இறங்கிய இலங்கை தோட்ட தொழிலாளர்களில் இருந்து மெக்சிக்கன் மத்தாமோரொஸ் தொழிலாளர்களின் தன்னிச்சையான வேலைநிறுத்தம், பிரான்சின் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், மற்றும் அல்ஜீரியாவில் மிகப்பெரிய அரசாங்க-எதிர்ப்பு போராட்டங்கள் வரையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் மேலெழுச்சியானது, இந்த சக்திகளை ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் அணிதிரட்ட முடியும், அணித்திரட்டப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

அதேநேரத்தில், முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அரசு வகிக்கும் பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஒரு இன்றியமையா அம்சம் என்பது உள்ளடங்கலாக வர்க்கப்-போர் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தைக் கல்வியூட்டுவதற்கும் அணிதிரட்டுவதற்குமான ஒரு நெம்புகோலாக சேவையாற்ற முடியும். ஜிஎம் மற்றும் ஃபோர்ட் நிறுவனத்தில் இருந்து நிசான் மற்றும் மாருதி சுசூகி வரையில் உலகின் வாகனத்துறை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்காக உலகளவில் அந்த தொழில்துறையின் மிகப்பெரும் மறுசீரமைப்பில் இறங்கியுள்ள நிலைமைகளின் கீழ், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கான ஆதரவை அணிதிரட்டுவதற்கான போராட்டம் என்பது உலகெங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்களின் ஐக்கியத்தை ஏற்படுத்துவதிலும் மற்றும் ஒரு சர்வதேச எதிர்தாக்குதலை அபிவிருத்தி செய்வதிலும் முக்கிய பாத்திரம் வகிக்க முடியும்.

கட்டுரையாளர்களின் இதர பரிந்துரைகள்:

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தண்டித்து இதுவரை ஒரு வருடமாகிறது

[17 March 2018]

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!
[20 March 2017]

The frame-up of the Maruti Suzuki workers—Part 1: A travesty of justice
[5 April 2017]