ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump-Modi lovefest in Houston underscores Indo-US alliance of war and reaction

ஹூஸ்டனில் ட்ரம்ப்-மோடி இன் காதல் விழா இந்திய-அமெரிக்க கூட்டணியின் போர் மற்றும் பிற்போக்கினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

By Keith Jones
23 September 2019

டெக்சாஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் நகரில் ஞாயிறன்று நடந்த “ஹவுடி மோடி!” (மோடி நலமா!) பிரச்சார பாணியிலான பேரணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50,000 இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்டதுடன், ஜனநாயகக் கட்சியின் அவை பெரும்பான்மை தலைவர் ஸ்டெனி ஹோயர் உட்பட, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ட்ரம்பின் பிரசன்னம் —ஒரு பரம பிற்போக்குவாத இந்து மேலாதிக்கவாதியான— மோடி உடனான அவரது நெருக்கமான அரசியல் உறவை வெளிச்சத்தில் காட்டுவதற்காகவும் மற்றும் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த மற்றும் தேவைப்பட்டால் இராணுவ ரீதியாக நசுக்குவதற்கான வாஷிங்டனின் திட்டங்களில் ஒரு முக்கிய கூறான, “இந்திய-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டாண்மை”யின் பலத்தையும் எடுத்துக் காட்டுவதாகவும் இருந்தது.

2014 முதல் இந்திய பிரதம மந்திரி மோடி, சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தாக்குதலில், இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படுவதை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளார். இது, அமெரிக்க போர்க்கப்பல்களுக்கும் போர்விமானங்களுக்கும் இந்தியாவின் துறைமுகங்களையும் விமானத் தளங்களையும் திறந்து விடுவது, மற்றும் அமெரிக்கா மற்றும் அதன் முதன்மை பிராந்திய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இந்தியாவின் முத்தரப்பு மற்றும் நான்கு தரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது.


ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22, 2019 ஞாயிறன்று என்.ஆர்.ஜி. அரங்கத்தில் நடந்த “ஹவுடி மோடி: ஒளிமயமான எதிர்காலம் குறித்து பகிரப்பட்ட கனவுகள்” நிகழ்ச்சியின் போது இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைகுலுக்குகிறார். (AP Photo/Michael Wyke)

என்றாலும், மோடி, அவரது பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கம், காஷ்மீர் மக்களின் உரிமைகளை முரட்டுத்தனமாக நசுக்கும் வகையில், சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீரின் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்த நிலைமைகளின் கீழ், மற்றும் இந்தியாவின் அணுவாயுத பரம எதிரி பாகிஸ்தான் உடனான உறவுகள் எரியூட்டும் வகையிலும் உள்ள நிலையில், தற்போது அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவுகளை நிரூபித்துக் காட்டுவதற்கு குறிப்பாக ஆர்வமாக இருந்தார்.

இருப்பினும், 2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலையை தூண்டியதிலும் மற்றும் வழிவகுத்து கொடுத்ததிலும் இவரது பங்கு குறித்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நீண்டகாலமாக தடை விதிக்கப்பட்டிருந்த மோடியை தாராளமாக புகழ்ந்து தள்ளுவதில் ட்ரம்பும் சளைக்கவில்லை என்பதுடன், அவர்களது பிற்போக்குத்தனக் கொள்கைகளில் உள்ள பொதுவான தன்மையை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.

இந்தியாவின் பிரதமர், ட்ரம்பை பாராட்டியதோடு நின்றுவிடாமல், அவருக்கு முன்னால் மண்டியிட்டு அடிமை போல நடந்து கொண்டார்.

“தலைமை நிர்வாக அதிகாரி முதல் தலைமை தளபதி வரை, போர்டு ரூம்கள் முதல் ஓவல் அலுவலகம் வரை, ஸ்டுடியோக்கள் முதல் உலக மேடை வரை,” அனைவரும் மோடியை மிக உயர்வாக பாராட்டினார்கள், அத்துடன் ட்ரம்பும் “நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.”

மோடி, ஒரு பாசிச கோடீஸ்வரரை —ஒரு முன்னோடியற்ற வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு பலமுறை அச்சுறுத்தியவரை மற்றும் ஈரானுக்கு எதிரான ஒரு பேரழிவுகர போரைத் தொடங்கலாமா வேண்டாமா என்று பதவியின் கடைசி காலத்தை கழித்து வருகின்றவரை— “மிக இனிய, தோழமையான, அணுகக்கூடிய, ஆற்றல் மிக்க மற்றும் அறிவார்ந்த” நபர் என்று மேலும் பாராட்டினார்.

பயங்கரவாதம் என்ற சாக்குபோக்கை பயன்படுத்தி உலகையே ஆக்கிரோஷமான போருக்கு அழைத்த, அதிலும் குறிப்பாக ஈரானுக்கு எதிரான போருக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க ஜனாதிபதியை “பயங்கரவாத”த்தை எதிர்ப்பவர் என்று கூறி அவருக்கு எழுந்துநின்று மரியாதை செலுத்தும் படி கூட்டத்தினரிடம் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இவையனைத்தும் ட்ரம்பை ஒளிர வைத்தன. அதனைத் தொடர்ந்து, அவர்களது அரசியல் கூட்டாண்மையை மேலும் முன்னிலைப்படுத்தும் விதமாக, இரு தலைவர்களும் கூட்டத்தினருடன் உரையாடுகையில் சிறிது நேரத்திற்கு கைகோர்த்து நின்றனர்.

ட்ரம்ப், மோடியை “அமெரிக்காவின் மிகவுயர்ந்த, மிகவும் அர்ப்பணிப்புள்ள, மிகவும் விசுவாசமான நண்பர்களில் இவரும் ஒருவர்” என்று புகழ்ந்தார். மோடியின் சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் தனது சொந்த கொள்கைகளை ஒத்திருப்பதாக குறிப்பிட்டு அவற்றை அவர் பாராட்டினார். “எங்கள் மக்கள்,” “முன்னிகழ்ந்திராத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், ஏனென்றால் நாங்கள் அதிகாரத்துவத்தை குறைத்து, சிவுப்பு நாடாவை வெட்டிக் கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் கூறினார். முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கம் கொண்ட சமீபத்திய தொடர்ச்சியான நகர்வுகளில் ஒன்றாக, வெள்ளியன்று மோடி அரசாங்கம் பெருநிறுவன வரிகளை மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு அல்லது 10 சதவிகித புள்ளிகள் என்றளவிற்கு குறைத்தது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளின் கூட்டு நடவடிக்கை சம்பந்தப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க இராணுவ பயிற்சி பற்றி ட்ரம்ப் புகழ்ந்தார். மேலும், “எங்களது பாதுகாப்பு உறவை மேம்படுத்துவதற்கு” புது தில்லியும் வாஷிங்டனும் விரைவில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்றும், வரும் காலத்தில் அமெரிக்க ஆயுதங்களையும் ஆயுத அமைப்பமுறைகளையும் இந்தியா “பெருமளவில்” கொள்முதல் செய்யும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக புலம்பெயர்வு குறித்த ட்ரம்பின் கருத்துக்கள் வெறுப்பூட்டுபவை. “எங்களது சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க எங்களது எல்லைகளை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்கா இரு நாடுகளும் புரிந்து வைத்துள்ளன,” என்று ட்ரம்ப் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கும் எல்லை பாதுகாப்பு என்பது “இன்றியமையாதது” என்று அறிவித்து, துன்புறுத்தல் மற்றும் வறுமையிலிருந்து தப்பித்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை கடந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களைத் தடுத்து நிறுத்த “முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை” எடுக்க ட்ரம்ப் உறுதிபூண்டார்.

ட்ரம்பைப் போலவே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், அரசின் அடக்குமுறை சக்திகளை கட்டியெழுப்புவதற்கும் நோக்கம் கொண்டு, உண்மையான மற்றும் குற்றம்சாட்டப்படும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக மோடி அரசாங்கமும் ஒரு குரூரமான, வகுப்புவாதம்-ஊட்டப்பட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. மோடியின் தலைமை ஆதரவாளரான, உள்துறை மந்திரி அமித் ஷா, புலம்பெயர்ந்தோரை “கறையான்கள்” என பலமுறை முத்திரைகுத்தி, அவர்களை வங்காள விரிகுடாவில் தத்தளிக்க விடுவதற்கு உறுதிபூண்டார்.

சென்ற மாதம் இறுதியில், வடகிழக்கு மாநிலமான அசாமில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னோட்டமாக அவர்கள் “வெளிநாட்டினர்” என்று அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், அசாமின் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிடுவதன் மூலம் தனது பிற்போக்குதனமான செயல்முறையை விரிவுபடுத்த பிஜேபி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

ட்ரம்ப் தனது ஹூஸ்டன் உரையில் காஷ்மீரைப் பற்றி குறிப்பிடவில்லை, அது அவருக்குத் தேவையுமில்லை. ஒரு வெளிநாட்டுத் தலைவரின் பிரச்சார பாணியிலான பேரணியில், ஆட்சியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் முன்னோடியில்லாத பேச்சும் மற்றும் மோடியைப் பற்றிய அவரது ஊதாரித்தனமான பாராட்டுக்களும் அவைகளாகவே பேசின.

இந்தியாவுடனான சீன எதிர்ப்பு கூட்டணியை பராமரிக்கவும் விரிவுபடுத்தவும் தீர்மானித்து, ஜம்மு-காஷ்மீரில் புது தில்லி நிகழ்த்திய மிருகத்தனமான ஒடுக்குமுறை குறித்து வாஷிங்டன் முற்றிலும் அலட்சியமாக உள்ளது.

ட்ரம்ப் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார். இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை இராணுவ ரீதியாக “தண்டிக்கும்” உரிமையை அங்கீகரிப்பது உட்பட, இந்தியாவிற்கு வாஷிங்டன் வழங்கும் உறுதியான ஆதரவு புது தில்லியை தைரியமூட்டுவதுடன் முழுமையான போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது என்று கான் பலமுறை எச்சரித்தார்.

பல பிரச்சினைகள் தொடர்பாக வாஷிங்டனுடன் தனக்கு மிகுந்த முரண்பாடுகள் இருப்பதாக பாகிஸ்தானே அறிந்திருக்கும் நிலையில், இன்றைய கான்-ட்ரம்ப் சந்திப்பு சோதனைக்குரியதாக இருக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு, ஜம்மு-காஷ்மீர் மீதான அதன் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, இஸ்லாமாபாத் ஆதரவிலான தாலிபான் அமைப்பு உடனான “அமைதி பேச்சுவார்த்தை”யை ட்ரம்ப் சமீபத்தில் முறித்துக் கொண்டது; மேலும், யுரேசியா முழுவதிலும் உள்கட்டமைப்பு இணைப்புக்களை வலுப்படுத்தும் சீனாவின் திட்டங்களில் (சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை) அதன் முக்கிய பங்கு உட்பட, பெய்ஜிங் உடன் பாகிஸ்தான் கொண்டிருக்கும் நெருங்கிய உறவுகள் ஆகியவை பற்றிய பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியது.

செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் ட்ரம்பை மோடி முறையாக சந்திக்கவுள்ளார். மேலும், இரு தெற்காசிய தலைவர்களும் வெள்ளியன்று ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளனர்.

இந்திய பிரதமர் அவரது ஹூஸ்டன் உரையில், தனது அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையும், மேலும் இதுவரை நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக இருந்ததை இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரமிறக்கியதையும், நிரந்தரமாக மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாண்மையின் கீழ்  உள்ள நிலைக்கு கொண்டு வந்ததையும் பாதுகாத்தார்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவு, “ஜம்மூ-காஷ்மீரில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தலைதூக்குவதற்கு அனுமதித்தது” என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் உரிமைகள் இந்திய அரசினால் முறையாக மீறப்படுவது குறித்து நிச்சயமாக அவர் மவுனம் சாதித்தார், இது, 1987 மாநிலத் தேர்தலின் மோசடி மற்றும் அதன் விளைவாக உருவான பெரும் எதிர்ப்பு இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறை ஆகியவை நிகழ்ந்த போது உச்சக்கட்டத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது – இன்று ஜம்மு-காஷ்மீரில் அவரது அரசாங்கத்தால் அதிகரித்தளவில் நடத்தப்படும் மாநில பயங்கரவாத பிரச்சாரத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

ஆகஸ்ட் 5 அன்று, மோடி அரசாங்கம் அதன் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை சட்டவிரோதமாக இரத்து செய்ததிலிருந்து இப்பிராந்தியம் முற்றுகை நிலையில் உள்ளது. மக்களின் இயக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கும், எதிர்ப்பின் அனைத்து அடையாளங்களையும் ஒடுக்குவதற்கும் ஏற்கனவே உலகின் மிக இராணுவமயமாக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு எதுவுமின்றி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அங்கு கடந்த ஏழு வாரங்களாக அனைத்து செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஹூஸ்டனில் இருந்தபோது, மோடி பிரதான எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார். அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உபரி பற்றி கடுமையாக விமர்சித்த ட்ரம்பை சமாதானப்படுத்தும் முயற்சியில், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்ய மோடி அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

ஈரானிய எண்ணெய்க்கு மாற்றாக, இந்தியாவுக்கு மிகவும் விலை உயர்ந்தது என்றாலும், அமெரிக்க எரிசக்தி ஏற்றுமதியை ட்ரம்ப் ஊக்குவித்து வருகிறார், விலை உயர்வுக்கு காரணம் இரு நாடுகளுக்கும் இடையிலான தொலைவு மிக அதிகம் என்பதுடன், அமெரிக்க எரிசக்தி கொள்முதல்களுக்கு இந்தியா டாலர்களில் தொகை செலுத்த வேண்டும், அதே நேரத்தில் ஈரான், தொகையை ரூபாய்களில் செலுத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

என்றாலும், இவை எதுவும் புது தில்லியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக, சீனாவுக்கு எதிராக துணை நிற்கும் என்ற நம்பிக்கையில், சட்டவிரோதமான, நெருக்கடி நிறைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் கூட்டாண்மையில் அது ஒட்டிக் கொண்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்வதையும், ஈரானின் பொருளாதாரத்தை நொருக்குவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை ஒருதலைப்பட்சமாக மீண்டும் திணிப்பதையும் எதிர்ப்பதாக புது தில்லி கூறியிருந்தாலும், மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் அடக்கத்துடன் அதற்கு ஒத்துழைக்கவே செய்கிறது. ட்ரம்புடன் இது பேரம் பேசிய மற்றும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்திய சமயமான, மே மாதம் முற்பகுதி வரை உலகில் ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் கொள்முதலாளராக இந்தியா இருந்தது.