ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ක්‍රියාකාරී කමිටු ගොඩනගනු! වර්ජනය ව්‍යාප්ත කරනු!
විශ්ව විද්‍යාල සේවක අරගලයට සමාජවාදී ක්‍රියාමාර්ගයක්

நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! வேலைநிறுத்தத்தை பரவலாக்கு!

பல்கலைக்கழக தொழிலாளர்களின் போராட்டத்திகு ஒரு சோசலிச வேலைத் திட்டம்

Statement by the Socialist Equality Party (Sri Lanka)
9 September 2019

அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 17,000 கல்விசாரா தொழிலாளர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஏனைய பிற உதவித் தொழிலாளர்களும் சம்பள முரண்பாடுகள், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 10 முதல் முன்னெடுக்கும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. கல்விசாரா ஊழியர்கள் ஐந்து வாரங்களில் மூன்றாவது முறையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

பல்கலைக்கழக ஊழியர்கள், பிரதானமாக 2015 முதல் ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அது உட்பட, பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காகப் போராட பல்கலைக்கழக ஊழியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள் மத்தியில் போர்க்குணம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இம்முறை இந்த வேலைநிறுத்தத்தை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் தொழிற்சங்க மத்திய கமிட்டியும் ஏற்பாடு செய்துள்ளன. தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கைகளை வெல்ல சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் வேலைத்திட்டம் அவசியம். தொழிற்சங்கங்கள் அத்தகைய வேலைத்திட்டத்தை முற்றிலும் எதிர்க்கின்றன.

வேலைநிறுத்தமானது ஊதியங்கள் மற்றும் நிலைமைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த கல்வித் துறை மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பையே இது வெளிப்படுத்கிறது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் சேரத் தயாராகி வந்தாலும், அவர்களது தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை நாடுவதாகத் தெரியவருகிறது. பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் வசதி பற்றாக்குறை மற்றும் கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 26, 27 ஆகிய திகதிளில் 200,000க்கும் மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் “சுகயீன விடுமுறையில்” சென்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆண்டு அவர்கள் மூன்றாவது முறையாக போராட்டத்திற்கு வருகின்றனர். அவர்கள் நியாயமான சம்பளம், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு பொருத்தமான நிலைமைகளைக் கோருவதோடு பெற்றோர் மீது சுமைகளைத் திணிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கோருகின்றனர்.

கடந்த அரசாங்கங்களைப் போலவே, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் நிர்வாகமும், தங்களுக்குள் எந்தளவு வெட்டுக் குத்துகள் இருந்தாலும், பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளை கொடுக்க பணம் இல்லை என அச்சுறுத்துகின்றனர். பெரும் வர்த்தகர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வரி சலுகைகளும் இலாபத்தைச் சுரண்டுவதற்கு அனைத்து சலுகைகளையும் கொடுத்து வரும் அரசாங்கம், உழைக்கும் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக உரிமைகளை வெட்டி, விலைவாசியை உயர்த்துவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை நசுக்கி வருகின்றது. அரசாங்கத் துறையிலான உண்மையான ஊதியங்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே 7.2 சதவீதம் மற்றும் 2 சதவீதமும் சரிந்தன. தனியார் துறையில் ஊதியங்களின் உண்மையான மதிப்பு 6 சதவீதம் மற்றும் 3.5 சதவீதம் சரிந்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 சதவிகிதமாக இருந்த அரச செலவுகள் 2020க்குள் 3.5 சதவீதம், சரி பாதியாக குறைக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் கீழேயே இந்த தாக்குதல்கள் உக்கிரமாகியுள்ளன. அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள், முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தி, உள்ளூர் மற்றும் சர்வதேச முதலாளிகளின் இலாப மூட்டைகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

செலுத்த முடியாதளவு கடன்களால் கழுத்து இறுகிப் போய், திவாலின் விளிம்பில் உள்ள இலங்கையின் முதலாளித்துவ வர்க்கம், பொருளாதார வளர்ச்சியில் இடைவிடாது ஏற்பட்டு வரும் வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து வருகிறது. இலங்கையில் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டிருப்பது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியே ஆகும்.

இந்த தாக்குதல்களுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டங்கள், கல்வித்துறையில் மட்டுமன்றி ஏனைய அனைத்து பொது மற்றும் தனியார் துறைகளிலும் வெடித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் பெருந்தோட்டம், ரயில், தபால், சுகாதாரம், நீர், மின்சாரம், எண்ணெய் மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய எல்லா இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் இந்த போராட்ட்தின் ஒரு பகுதியே ஆகும்.

ஒவ்வொரு நாட்டிலும், உலக முதலாளித்துவ அமைப்பு முறை எதிர்கொள்ளும் ஆழ்ந்த நெருக்கடிக்கு, ஆளும் வர்க்கம் கொடுக்கின்ற பதில், இருபதாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த கல்வி, சுகாதாரம் போன்ற சமூக உரிமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் வெட்டிக் குறைப்பதை தீவிரமாக்குவது மட்டுமே.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பரவி வருகின்றன. இந்தியாவில் ஜனவரி மாதம் சுமார் 17 கோடி தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் ஆசிரியர்கள், வாகன தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டங்கள் கடந்த மாதத்திலிருந்து அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் தங்கள் கல்வி உரிமைகளை வெல்ல போராடுவதோடு, 155,000 வாகனத் தொழிலாளர்கள் கடந்த வாரம் தொழில் அழிப்பை எதிர்த்து போராடுவதற்காக வாக்களித்தனர். பிரான்சின் மக்ரோன் அரசாங்கம் நீண்ட காலமாக இலட்சக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் மஞ்சள் சீருடை போராட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த செய்திகள் உலக வர்க்கப் போராட்ட அலைகளின் ஒரு பகுதியாகும்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைந்து வரும் போராட்ட அலைகளின் மறுபுறம், அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வெல்ல முடியும் எனக் கூறிக்கொண்டு தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டமானது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு தொழிலாளர்களை அடிபணிய வைப்பதற்கான ஒரு பொறி என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களினது அனுபவமும் அதுவே. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளைப் பெறுதல் போன்ற ஆயிரம் காரணங்களை கூறி போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதை தொழிலாளர்கள் அனுபவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்த வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்காக பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை நாடுவது ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையாகி வருகின்றது. அமெரிக்காவில் ட்ரம்ப் அரசாங்கம் பாசிச பாணியிலான நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்து வருகிறது. ஜேர்மனியில் பாசிச இயக்கம் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவுடன் வளர்கிறது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் காஷ்மீரை இராணுவ ஆக்கிரமிப்பு கோட்டையாக மாற்றி இந்து பேரினவாதத்தை கிளறிவிடுகின்றது.

இதே கொள்கையின் ஒரு பகுதியாகவே சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலைப் பற்றிக்கொண்டு, இராணுவம் மற்றும் பொலிசுக்கு கொடுரமான அதிகாரங்களை வழங்கி உள்ளது. அவசரகால நிலை இரத்து செய்யப்பட்ட போதிலும், அந்த அதிகாரங்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து அமுலில் உள்ளன. புகையிரதம் உட்பட பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்பில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மற்றும் ஜே.வி.பி.யுமாக அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும், முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கும் பொலிஸ்-அரச வழிமுறைக்கு மாறுவதை பற்றி சிந்திக்கின்றன.

நாளைய தினம் போராட்டத்தில் இறங்கும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அக்கறையுடன் போராட்டத்திற்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும், தங்களது உரிமைகளுக்காக போராட, முதலாளித்துவம் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான ஒரு வேலைத்திட்டம் அவசியமாகும். தொழிற்சங்கங்கள் மூடி மறைத்தாலும், தொழிலாளர்களின் போராட்டம் என்பது அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரான அரசியல் போராட்டமே ஆகும்.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஆனால் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களின் அனுபவத்தை கிரகித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய அழுத்தம் கொடுக்கும் உத்தி போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பதில் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 29 அன்று இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்ட போது, பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் இணைத் தலைவர் மங்கள தாபரேரா, அரசாங்கத்தின் தாக்குதல்கள் குறித்து எதுவுமே கூறவில்லை. மாறாக, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமைக்கு, சம்பள ஆணைக் குழு மற்றும் பல்கலைகழக மாணியங்கள் ஆணைக் குழுவினதும் அதிகாரிகளை குற்றம் சாட்டினார். "கல்விசாரா ஊழியர்களின் சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பொறுப்புள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், நாங்கள் எச்சரிக்கிறோம்," என்று அறிவித்த அவர், அரசாங்கத்தை அதன் பொறுப்பிலிருந்து விடுவித்தார். "நிர்வாக அதிகாரிகள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால், நாங்கள் இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாக தலையிடுவோம்" என்று ஐ.தே.க. தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறினார். இந்த "தலையீடுகள்" என்பவை, அமைச்சர்களுக்கு சாபம் விடுக்கும் இன்னொரு பொறிக்குள் தொழிலாளர்களை சிக்க வைப்பதாகவே இருக்கும்.

வெள்ளிக்கிழமை மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் கூட்டத்தில் உரையாற்றிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவர், வேலைநிறுத்தம் கட்டாயமாக தொடங்கப்படும் என்று கூறிய அதே மூச்சில், ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் வேலைநிறுத்தத்தை கைவிட நேரும் என்றும் வலியுறுத்தினார். தேர்தல் சட்டங்களில் அத்தகைய விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஆனாலும் அரசாங்க சார்பு, முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரச சார்பு தொழிற்சங்கங்கள், அவற்றின் கோரிக்கைகளுக்கு தொழிலாளர்களை அடிபணிய வைக்கத் தயாராக உள்ளன. இதனாலேயே தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரத்துவத்துக்கும் இடம் கொடாமல் தொழிலாளர்கள் போராட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கல்விசாரா தொழிலாளர்கள் தங்கள் சொந்தத் துறையிலும் ஏனைய துறைகளிலும் உள்ள தொழிலாளர்களை ஆதரவு தருமாறு கோரி தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும், இப்போது வேலைநிறுத்தத்திற்குத் தயாராகும் ஆசிரியர்களையும், தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பொதுவான போராட்டத்தை ஊக்குவிப்பதற்காக கல்விசாரா தொழிலாளர்களின் போராட்டத்தை சூழ அணிதிரளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

* தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதானது, தொழிற்சங்கங்களின் தடைகள் மற்றும் காட்டிக்கொடுப்புகளை தோற்கடித்து தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தீர்க்கமான அடியெடுப்பாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கல்விசாரா ஊழியர்களை பல்கலைக்கழகங்களிலும் அதை அண்டிய பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு அழைப்பு விடுக்கின்றது.

நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கான போராட்டம் ஏனைய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சம்பள உயர்வு கோரி இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத் தொழிலாளர்கள், சோ.ச.க.வின் அழைப்பு பிரதிபலித்து, நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்து, அத்தகைய குழுக்களை உருவாக்க தொழிலாளர்களால் முன்முயற்சி எடுக்க முடியும் என்பதை நிரூபித்தனர். இப்போது, ​​கலைஞர்கள் குழுவொன்றால், சோ.ச.க.வின் வேண்டுகோளைக்கு இணங்க, கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கைக் குழுவை ஸ்தாபித்துள்ளனர்.

இந்த போராட்டம் அரசாங்கத்தின் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு சிலரின் இலாப நலன்களுக்காக உற்பத்தி செய்யும் இராட்சத வங்கிகள், பெரும் தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கி, முழு சமூக-பொருளாதார வாழ்க்கையையும் மனிதகுலத்தின் தேவையை இட்டு நிரப்பக் கூடியவாறு மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

இது ஒரு சர்வதேச போராட்டத்தின் பகுதியாகும். இந்திய துணைக் கண்டத்தின் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாக தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் மட்டுமே இந்த நடவடிக்கையை யதார்த்தமாக்க முடியும். பல்கலைக்கழக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.