ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

හමුදාවේ සහ පොලිසියේ සහයෝගය ඇතිව බෞද්ධ භික්ෂූ නඩයක් උතුරේ වර්ගවාදී ප්‍රකෝපකරනයක යෙදෙයි

இலங்கையின் வடக்கில் இராணுவம் மற்றும் பொலிசின் ஆதரவுடன் பௌத்த பிக்குகள் இனவாத ஆத்திரமூட்டல்களை தூண்டிவிடுகின்றனர்

By Vimal Rasenthiran
4 October 2019

இலங்கையில் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக் கேணியின் அருகில், கடந்த செப்டெம்பர் 23 அன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள பேரினவாத குழு ஒன்று பௌத்த பிக்கு ஒருவரின் சடலத்தை பலாத்காரமாக தகனம் செய்தது. சிங்கள அதி தீவிரவாத பொது பல சேனாவின் செயலாளர் கலேகொட அத்தே ஞானசார தேரோவின் தமையிலான இந்த இனவாத கும்பல், தகனக் கிரியை கடற்கறையில் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை பகிரங்கமாக மீறியே இதைச் செய்துள்ளது.

அரசாங்கம் மற்றும் சிங்கள முதலாளித்துவ எதிர்க் கட்சித் தலைவர்கள் உட்பட முழு ஆளும் வர்க்கத்தினதும் பாதுகாப்பு படைகளதும் ஒத்துழைப்பைப் பெறும் பௌத்த அதிதீவிரவதிகள் ஏனைய இன மற்றும் மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இனவாத வன்முறைகளில் இது அண்மையதாகும்.

இந்த ஆலய வளாகத்தில் பாதுகாப்பு படைகள் மற்றும் தொல்லியல்துறையின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக பௌத்த விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க கீர்த்தி என்ற பிக்கு, கொழும்பு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

தமது ஆலய வளாகத்தினுள் ஆகம விதிகளுக்கு முரணாக தகனக் கிரியைகள் நடப்பதை பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்த்தபோது, இந்த இனவாத கும்பல் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதை கலகம் அடக்கும் பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பாரிய இன மோதல் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியை உணர்ந்த தமிழர்கள் அதைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து விலகிக்கொண்டதால் அதிதீவிரவாதிகள் எதிர்பார்த்த மோதலை உருவாக்க முடியாமல் போனது.

அங்கு கூடிய தமிழ் பேசும் சட்டத்தரணிகள், நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை வலியுறித்தியபோது பிக்குகளால் சட்டத்தரணி சுகாஷ் தாக்கப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய போது, “இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனத் தெரியாதா” என ஒரு பிக்கு எரிந்து விழுந்தார்.

இந்த ஆத்திரமூட்டல் சம்பவங்களையும் மற்றும் சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதையும் கண்டித்து பொது மக்களும் சட்டத்தரணிகளும் கடந்த வாரம் பூராவும் பல்வேறு இடங்களில் பகிஷ்கரிப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் விஹாரையின் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து வந்துள்ளன. அந்த இடத்தில் “வரலாற்றுக்கு முற்பட்ட” காலத்தில் இருந்தே விஹாரை இருந்து வந்துள்ளதாக தொல்லியல்துறை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இராணுவம், அங்கு பௌத்த விகாரைகளை அமைத்து இனவாத பாகுபாடுகளை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் கன்னியாவில் உள்ள வெந்நீரூற்று கிணறுகளை ஜனாதிபதி சிறிசேன தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார். இந்த நடவடிக்கை, அங்கு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்காக முயற்சிக்கும் இனவாத கும்பலின் கைகளைப் பலப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு சம்பவத்தில் இருந்து தூர விலகிக்கொள்ள முயற்சித்த பிரதமர் விக்கிரமசிங்க, “பிக்குகள் செய்யும் அடாவடியால் வெட்கத் தலைகுனிகிறோம்” என அறிவித்தார். இதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியின் பக்கம் திருப்பிவிட்ட அவர், “நாட்டில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் ஒரு தரப்பினர், பௌத்த பிக்குகள் சிலரை தமது ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்,” என குறிப்பிட்டார். எனினும் அவரது கட்சி வடக்கில் இராணுவத்தால் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை முழுமையாக ஆதரிக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது ஐ.தே.க. வெளியிட்ட விஞ்ஞாபனம் “வடக்கு கிழக்கு எங்கும் 1,000 பௌத்த விஹாரைகளை அமைக்கவுள்ளதாக” பிரகடனம் செய்துள்ளது.

சிங்கள அதிதீவிரவாத அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புகளை வைத்துள்ள எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய இராஜபக்ஷ, பிக்குகளின் நடவடிக்கையை வெளிப்படையாக நியாயப்படுத்தினார். “இறந்த பிக்குவின் உடலை அமைதியான ஓர் இடத்திலே தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்தனர், ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள், பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்,” என அவர் தெரிவித்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் உதயன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார, செப்டம்பர் 26 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இது சிங்கள பௌத்த நாடாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக வேறு நாடுகளுக்கு செல்லாம்” என அச்சுறுத்தினார்.

“வடக்கில் பௌத்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முல்லைத்தீவை வதிவிடமாக கொள்ள” தான் முடிவெடுத்துள்ளதாகவும் ஞானசார அறிவித்தார்.

ஞானசார கடந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களில் பேர் போனவராவார். யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சம்பந்தமான வழக்கின் போது, இனவாதத்தை கிளறிவிட்டு நீதிமன்றத்தை அவமதித்தமையால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசாரவை, சிறிசேன தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்.

இலங்கையின் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடத்தைச் சேரந்த ஒரு பிக்குவும், முல்லைத்தீவு சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களுக்கு ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை விடுத்துள்ளார். மல்வத்துவபீடத்தின் துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான என்ற பிக்கு, “தெற்கில் உள்ள சிங்கள-பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்” என்றார்.

வடக்கில் உள்ள மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகளை கட்டவிழ்த்து விட மறைமுகமாக கோரிய அவர், “ஆட்சியாளர்கள் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் இரத்தம் சிந்தப்படுவதையோ மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது. ஆகவே ஆளும் கட்சி பொலிசார் முப்படையினர் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை எடுக்க வேண்டும்,” என அவர் அறிவித்தார்.

இனவாத இரத்தக்களரியை தூண்டி விடுவதற்காக சிங்கள-பௌத்த பேரினவாத கும்பல்களின் தயார் நிலைமையையே அவரது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கையின் பௌத்த ஸ்தாபனம், ஆட்சியாளர்களின் ஒரு கருவியாகவும், அதே போல், பிற்போக்கை கிளறிவிடுவதாகவும் செயற்பட்டு வருகின்றது. ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்துக் கட்சிகளும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தில் ஊறிப் போனவையாகும்.

இலங்கை ஆளும் வர்க்கம் 1948இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே வர்க்கப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கு இனவாதத்தையே நாடி வந்துள்ளது. தற்போது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் புகையிரத தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதோடு சுமார் 200,000 ஆசிரியர்கள் கடந்த மாத கடைசியில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதலாளித்துவ வர்க்கம் இடைவிடாது வளர்ச்சியடையும் வர்க்கப் போராட்டம் பற்றி பீதியடைந்துள்ளது.

இலங்கை ஆளும் வர்க்கம், ஏப்பிரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை பற்றிக்கொண்டு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதோடு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. பின்னர் அவசரகாலச் சட்டத்தை அகற்றிக்கொண்டு மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இராணுவத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு ஜனாதிபதி சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு ஏற்றாற்போல், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் ஒடுக்குமுறையை தூண்டிவிட்டு பொலிஸ் ஆட்சிக்கு மாறுவதனதும் பாகமாக ஆளும் வர்க்கம் இனவாத விசத்தை தயார் செய்கின்றது.