ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකා කම්කරු කොංග්‍රසය ගෝඨාභය රාජපක්ෂට සහයෝගය දෙයි

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோடாபய இராஜபக்ஷவை ஆதரிக்கிறது

W.A. Sunil
23 October 2019

அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தேசிய சபையில், இ.தொ.கா. தலைமைத்துவம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோடாபய இராஜபக்ஷவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமன் அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வின் வேட்பாளர் கோடாபய ஆகியோருக்கிடையில் பல வாரங்களாக ஊசலாடிக்கொண்டிருந்த தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. தலைவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமது 31 அம்ச முன்மொழிவுக்கு உடன்படும் வேட்பாளரை மட்டுமே ஆதரிப்பதாகவும், கோடாபயவை அரவனைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறிவந்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுவில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு, ஐ.தே.க.வின் பிரேமதாச அல்லது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வின் கோடாபய ஆகியோரில் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது. இருவரும் வலதுசாரி முதலாளித்துவ கும்பல்களின் தலைவர்களாவர் மற்றும் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை உழைக்கும் ஏழைகள் மீது சுமத்துவதற்காக பொலிஸ்-அரசு ஆட்சி செயல் திட்டத்தை முன்வைப்பவர்களாவர்.

ஒரு கட்சியாவும் தொழிற்சங்கமாகவும் செயற்படும் இ.தொ.கா., பிறப்பில் இருந்தே முதலாளித்துவத்தின் ஒரு நேரடி கருவியாக செயற்பட்டு வருகின்றது. இது எந்த வகையிலும் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு இந்த முடிவை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த இ.தொ.கா., முதலாளித்துவ கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் முடிவுகளை தொழிலாளர்கள் மீது திணித்தது.

ஏனைய முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களையிட்டு பீதியடைந்துள்ள இ.தொ.கா., அவற்றை நசுக்குவதற்காக ஒரு எதேச்சதிகார ஆட்சியை உறுதிப்படுத்துவது சம்பந்தமாக கோடாபய மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மிகவும் பொருத்தமானது என தீர்மானித்துள்ளது.

கோடாபயவுக்கு ஆதரவளிக்க இ.தொ.கா. நிர்வாக சபையும் தேசிய சபையும் “ஏகமனதாக தீர்மானித்துள்ளது” என 13 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் கூடியிருந்த அலுவலர்களுக்கு அறிவித்த தொண்டமான், முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு மாவட்டங்களில் கோடாபயவின் வெற்றியை உறுதி செய்யுமாறும்” அழைப்பு விடுத்தார். அந்த இழிவான நடவடிக்கையில் அவர்களுக்கு "கௌரவம் கிடைக்கும்" என்றும் அவர் கூறினார். அவர்களுக்கு கிடைக்கின்ற “கௌரவம்” எதுவெனில், அரசாங்காத்தின் அங்கமாக செயற்படுவதற்காக இ.தொ.கா. தலைவர்களுக்கு கிடைக்கின்ற அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட சலுகைகளே ஆகும்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறுகிறது. இலங்கையில் முதலாளித்துவ முதலாளித்துவ கட்சிகளுக்கும் பிரிவுகளுக்கும் இடையில் தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், உலக வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தை தகர்த்து உழைக்கும் மக்கள் மீது நெருக்கடியின் சுமையை சுமத்தக்கூடிய ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவதில் அவர்கள் அனைவரும் ஒருமனதாகவே உள்ளனர்.

இப்போது சிலியின் வலதுசாரி அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கு முன்னர், ஈக்வடோரில் வலதுசாரி அரசாங்கமும் இதேபோல் போராடும் தொழிலாளர்கள் மீது இதேபோன்ற ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. இலங்கையிலும் இத்தகைய சர்வதேச போக்கே வளர்ச்சியடைந்து வருகிறது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில், ஐ.தே.க., ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றின் பிரதான முழக்கமாக இருப்பது, பாதுகாப்புப் படைகளை பலப்படுத்துவதும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், “வலுவான” அரசாங்கத்தை ஸ்தாபிப்பதுமே ஆகும். இந்த அனைத்து கட்சிகளையும் போலவே, இ.தொ.கா.வும். ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அவசரகால அதிகாரங்களால் பலப்படுத்தப்பட்ட இராணுவத்தை கட்டவிழ்த்து விடவும் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையைத் தூண்டுவதற்கும் ஆதரவளித்தது.

இ.தொ.கா. ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ள 31 கோரிக்கைகளில், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம், ஊவா மாகாணத்தில் மற்றொரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஹட்டன் பகுதியில் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை, மற்றும் உயர்தரத்திற்காக வர்த்தகம் மற்றும் விஞ்ஞான பீட வசதிகள் அடங்கிய போதுமான அளவிலான பாடசாலைகளை 14 பெருந்தோட்ட மாவட்டங்களில் நிறுவுதல், இந்திய வம்சாவளி சார்பு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு 10 வருடத்துக்கு ஒரு முறை விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்ற கதை பொய்யாகும். ஆட்சியில் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முண்டு கொடுத்து வந்ததாலும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நசுக்கியதாலும் இ.தொ.கா. கடும் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ள நிலைமையில், தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு கன்னையின் பின்னால் தோட்டத் தொழிலாளர்களை அடைத்து வைப்பதுமே இந்தக் கோரிக்கைகளின் நோக்கமாகும்.

இ.தொ.கா. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இடையே கடந்த வாரம் "புரிந்துணர்வு ஒப்பந்தம்" கையெழுத்தானது. தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை ரூபா 1,000 வரை உயர்த்துவதாக கோடாபய உறுதியளித்தார் என ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிடப்பிட்டார். “ஊதியத்தை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியமாகும். அதைச் செய்வதற்கான ஒரு பொறிமுறை கோடாபய இராஜபக்ஷவிடம் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

இந்த "வாக்குறுதிகள்" கோடாபயவுக்கு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான அப்பட்டமான பொய் மூட்டையாகும். கடந்த ஜனவரியில் இ.தொ.கா.வும் ஏனயை தொழிற்சங்கத் தலைவர்களும் ஆயிரம் ரூபாய் வரை ஊதியத்தை இரட்டிப்பாக்க முடியாதளவு கம்னிகள் நெருக்கடியில் இருப்பதாக தோட்டக் கம்பனிகளின் கூற்றை மேற்கோள் காட்டியே போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தனர்.

பீரிஸின் கூற்றுப்படி, "உற்பத்தி திறன் மற்றும் தேயிலையின் தரத்தை அதிகரிக்கும் போது வருவாய் அதிகரிப்பதால், கம்பனிகளால் அதிக ஊதியம் கொடுக்க முடியும்." இதன் அர்த்தம் என்னவெனில், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் கீழ் ஒரு மோசமான சுரண்டல் வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரப்போகின்றது என்பதாகும்.

இ.தொ.கா. தேசிய சபை எனப்படுவது, அந்த அமைப்பின் கிளை சங்கங்களின் அதிகாரிகள் அடங்கிய சபையே தவிர அது சாதாரண உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அல்ல. இ.தொ.கா. உறுப்பினர்களைப் போலவே, பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகம் மற்றும் இ.தொ.கா. உட்பட தோட்டத் தொழிற்சங்கங்கள் மீதான பரவலான அதிருப்தியே நிலவுகிறது. எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழும், வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் கூட தீர்க்கப்படாமல் இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரும் உவா மாகாண சபையில் அமைச்சருமான செந்தில் தொண்டமான், வீரகேசரிக்கு கருத்து தெரிவித்தபோது, தனது தொழிற்சங்கத்திற்கும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை நியாயப்படுத்தினார். “இராஜபக்ஷ அரசாங்கத்தின் போது வடக்கில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் இறந்தனர். ஆனால் தெற்கில் எந்த வன்முறையும் நடக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.

இது ஒரு பொய் ஆகும். 1977 முதல் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்து, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் மீதான இரத்தக் களரி யுத்தத்தை ஆதரித்த இ.தொ.கா. அதிகாரத்துவம், தோட்டப்புற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியை அடக்க அடக்க உதவியது. இ.தொ.கா. ஆதரவளித்த யுத்தத்தின் போது, கோடாபய மற்றும் பொதுவில் அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இ.தொ.கா., அமெரிக்கா உட்பட மேற்கத்திய முதலாளித்துவ சக்திகளுடனும், அவர்களின் பிராந்திய முகவர்களான இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடனும் நெருக்கமான உறவைப் பேணுகின்ற ஒரு அமைப்பாகும். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணை தலைமை இயக்க அதிகாரி மார்ட்டின் டி கெலி, இ.தொ.கா. தலைவர் தொண்டமானுடன் நுவரெலியாவில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியமை ஆகும். தானும் அமெரிக்க அதிகாரியும் கலந்துரையாடியதை தொண்டமான் வெளியிடவில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் மீது அமெரிக்காவுக்கு எந்த அக்கறையும் கிடையாது. குறிப்பாக, கெலி பிராந்தியத்தில் அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்காக முன்நிற்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இ.தொ.கா. தலைவருக்கு வலியுறுத்தினார்.

இ.தொ.கா. கோடாபயவை ஆதரிக்கும் அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்கின்றன.

இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி அவர்களை முதலாளித்துவக் கட்சிகளுக்குப் பின்னால் அடைத்து விடுவதன் மூலம் தொழிலாளர்களின் வர்க்க சுயாதீனத்தை காட்டிக் கொடுத்தன. இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸாக செயல்படுகின்றன. அவை பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசினதும் நலன்களையே பிரதிநித்துவம் செய்கின்றன. தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான வறுமைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் இந்த தொழிற்சங்கங்கள் பொறுப்பாளிகளாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த துரோகங்களுக்காக மேலிருந்து வரப்பிரசாதங்களைப் பெறுகின்றன.

முதலாளித்துவ கட்சிகளின் நேரடி கருவிகளாக செயல்படும் இந்த தொழிற்சங்கங்களிடம் இருந்து முழுமையாக பிரிந்து, தோட்டத் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக புதிய அமைப்புகளை உருவாக்குவது அவசர பிரச்சினையாகும். அந்த அமைப்புகள் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கடந்த தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்களுக்கு இத்தகைய குழுக்களை அமைக்குமாறு அழைப்பு விடுத்தது. எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள ஏராளமான தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதில் இணைந்து கொண்டனர். இப்போது ஒவ்வொரு தோட்டத்திலும் இதுபோன்ற குழுக்களை உருவாக்குவது அவசியமாகும்.

இது பெருந்தோட்டங்களில் மட்டுமல்ல, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், புகையிரத தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியினரும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் தெளிவாகியுள்ளது.

ஏனைய தொழிலாளர்களைப் போலவே, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்களுக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தீர்வுகளைக் காணமுடியாது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் பெரிய தோட்டங்களையும், பெரிய தொழிற்சாலைகளையும் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வேலைத் திட்டத்துக்காகப் போராடுகிறது.

சோ.ச.க. இந்த வேலைத் திட்டத்துக்காக போராடுவதுடன், பாணி விஜேசிறிவர்தனவை அதன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு வாக்களிக்குமாறும் சோ.ச.க.வின் வேலைத் திட்டத்தைப் படித்து, அதை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் சேருமாரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாட சோ.ச.க. நவம்பர் 3 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஹட்டன் நகர மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.