ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: SEP presidential candidate exposes pseudo-lefts’ pro-capitalist program at university debate

இலங்கை: சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பல்கலைக்கழக விவாதத்தில் போலி-இடதுகளின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தை அம்பலப்படுத்தினார்

By our correspondents
13 November 2019

நவம்பர் 4 அன்று களனிப் பல்கலைக்கழகத்தில் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் சம்பந்தப்பட்ட ஒரு விவாதத்தில் சுமார் 1,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். “நபரா அல்லது கொள்கையா?” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) ஏற்பாடு செய்திருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர்களில் சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த பாணி விஜேசிறிவர்தன, முன்நிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் தேசிய மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த ரொஹான் பல்லேவத்தவும் கலந்துகொண்டனர். ஐக்கிய சோசலிசக் கட்சி (யு.எஸ்.பி.) சார்பில் ஸ்ரீநாத் பெரேரா, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் மிலிந்த இராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் மஹிந்த ஜயசிங்கவும் பிரதிந்திதிகளாகப் பங்குபற்றியிருந்தனர்.

முதல் சுற்றில், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜேசிறிவர்தன கட்சியின் கொள்கையின் அடிப்படையை கோடிட்டுக் காட்டினார். "எங்கள் கொள்கைகள் 1917 இல் ரஷ்யப் புரட்சியை வழிநடத்திய போல்ஷிவிக் கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக, நாங்கள் சர்வதேசியவாதத்துக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும் போராடுகிறோம்."


பாணி விஜேசிறிவர்தன

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொழும்பு அரசாங்கங்களின் தொடர்ச்சியான போருக்கு எதிராகவும், தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஒன்றிணைக்கப் போராடியதை அவர் சுட்டிக்காட்டினார்.

"ஏகாதிபத்திய யுத்தம், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக ஒரு சோசலிச இயக்கத்தை உருவாக்கு" என்று சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் தலைப்பை சுட்டிக்காட்டி, வெகுஜனங்களை எதிர்கொள்ளும் ஆபத்துகள் உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான சீரழிவின் விளைவாகும் என்று விஜேசிறிவர்தன விளக்கினார்.

"இந்த முதலாளித்துவ வீழ்ச்சிக்கு எல்லா நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்களினதும் பிரதிபலிப்பு, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமைகளை திணித்து, வெகுஜன எதிர்ப்பை கொடூரமாக அடக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்வாதிகார வழிமுறைகளை நோக்கி நகர்வதே ஆகும்."

முதலாளித்துவத்தின் நெருக்கடி, போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடையச் செய்வதோடு, பேரழிவு தரும் வளர்ந்து வரும் உலகப் போர் ஆபத்தையும் உருவாக்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்துக்கு இதைத் தடுக்க உள்ள ஒரே வழி, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக போராடுவதே ஆகும், என அவர் தொடர்ந்தும் கூறினார். "சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும், புரட்சிகர கட்சிகளை உருவாக்குவதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் போராடுகின்றன."

ஏனைய அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், உலகப் போரின் ஆபத்தை மூடி மறைப்பதோடு அவர்களது "தேசிய பாதுகாப்பு" பற்றிய அனைத்து பேச்சுக்களும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாசிச அல்லது இராணுவ பாணியிலான அரசாங்கங்களை ஸ்தாபிக்கத் தயாராக இருக்கின்றனர் என சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் குற்றம் சாட்டினார்.


துமிந்த நாகமுவ

முன்நிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளர் துமிந்த நாகமுவ, தன்னை ஒரு "சோசலிச வேட்பாளர்" என்று அறிமுகப்படுத்திக் கொண்ட போதிலும், விவாதத்திற்கான அவரது பங்களிப்புகளில் "சோசலிசம்" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. அரசாங்கம் "பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டியதில்லை", மாறாக "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கம்பனி உரிமையாளர்களின் மீது 86 சதவீத பங்கு வரிவிதிப்பதன் மூலம், தேவையான நிதியைப் பெற முடியும்" என்று அவர் வாதிட்டார். வேறுவிதமாகக் கூறினால், நாகமுவ முதலாளித்துவத்தை பராமரிக்கும் அதே வேளை, பணக்காரர்களுக்கு வரி விதிக்கும் ஒரு சீர்திருத்தவாத திட்டத்தை முன்மொழிந்தார்.

ஐக்கிய சோசலிசக் கட்சி (யு.எஸ்.பி.) சார்பில் பேசிய ஸ்ரீநாத் பெரேரா, தொழிலாள வர்க்க சர்வதேசியவாதம் குறித்து ஒரு குழப்பத்தை உருவாக்க முயன்றார். அவர் தன்னை தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்தியதோடு தொழிலாளர் சர்வதேச குழுவுடன் இணைந்திருப்பதாக தெரிவித்தார். எவ்வாறாயினும், சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்லது ஏகாதிபத்திய உலகப் போரின் அச்சுறுத்தல் குறித்து அவர் எதையும் சுட்டிக்காட்டவில்லை.

தனியார் கல்வியைப் பேணுகின்ற அதேவேளை, “இலவசக் கல்வியை” விரிவாக்க முடியும் என்று கூறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் வீடியோ உரைக்கு பதிலளிக்கும் வகையில், பாணி விஜேசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டம் பற்றி மேலும் விளக்கினார்.

முதலாளித்துவம் நெருக்கடியில் இருக்கும்போது பொதுக் கல்வியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்றும், கல்விக்கான வாய்ப்புகளை இந்த அமைப்பு முறைக்குள் விரிவுபடுத்த முடியும் என்று கூறுவது பொய்யாகும் என்றும் விஜேசிறிவர்தன கூறினார். "முதலாளித்துவம் அதன் சொந்த உள் முரண்பாடுகளிலிருந்து தோன்றிய அமைப்பு ரீதியான முரண்பாடுகளால் முறிந்து போயுள்ளதைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். இது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில், கல்வி வெட்டுக்கள் உட்பட சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது."


பார்வையாளர்களின் ஒரு பகுதி

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜே.வி.பி.யின் "பொருளாதார மேம்பாடு" திட்மும், சர்வதேச மூலதன முதலீட்டை அதிகரிப்பதற்கான அதன் அழைப்புகளும் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளது கொள்கையைப் போலவே இருப்பதாகக் கூறினார். தொழிலாளர்களின் உரிமைகளை அபகரித்தல் மற்றும் மலிவுக் கூலி நிலைமைகளை சுமத்துவதன் மூலம் பிராந்தியத்தில் உள்ள எல்லா அரசாங்கங்களும் சர்வதேச மூலதனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன, என்று அவர் விளக்கினார்.

கேள்வி பதில் அமர்வில், சோசலிச சமத்துவக் கட்சியானது முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்று விஜேசிறிவர்தனவிடம் கேட்கப்பட்டது. தனது கட்சியின் சோசலிச வேலைத்திட்டம் சர்வதேசவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் விளக்கி பதிலளித்தார்.

முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் மற்றும் ஏனைய போலி-இடது கட்சிகளும் சர்வதேசவாதத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கும் விரோதமாக இருப்பதோடு, முதலாளித்துவ அமைப்பு முறையை சீர்திருத்த முடியும் என்று கூறி தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன என அவர் தெரிவித்தார்.

“இலங்கை கம்பனி உரிமையாளர்களின் வருமானத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்வதன் மூலம் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று நாகமுவ கூறிக்கொள்கின்றார். ‘சிறப்பு பாடசாலைகளுக்கு’ செல்லும் முதலாளிகளின் சிறுவர்களிடமிருந்து பணம் வசூலித்து, ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடலாம் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி கூறுகிறது. இவை இரண்டுமே முதலாளித்துவத் திட்டங்களாகும்.”

விஜேசிறிவர்தன முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியை போலி இடது என்று ஏன் விவரித்தார் என்று மற்றொரு மாணவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த நாகமுவ, தனி நாட்டில் சோசலிச தத்துவத்தை ஆதரிக்கவில்லை என்று பொய்யாகக் கூறினார். ஆனால் அதே மூச்சில் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு தனது விரோதத்தை வெளிப்படுத்தினார்.

"இந்த பிரச்சினை [சர்வதேச சோசலிசம்] எல்லா இடங்களிலும் முன்வைக்கப்படும்போது, ​​இந்த திட்டத்தில் நம்பிக்கையை வளர்ப்பது கடினம்," என்று அவர் கூறினார். "நாங்கள் தற்போதுள்ள சூழ்நிலையிலிருந்து தொடங்க வேண்டும். நாளை இந்தியாவில் நாம் புரட்சிக்கு செல்ல முடியாது. புரட்சியின் இலங்கை துணைப்பிரிவை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.” என அவர் கூறினார்.

நாகமுவவின் சர்வதேச சோசலிசம் என்று அழைக்கப்படுவது “தேசிய திட்டங்களின் கலவையாகும்” என்றும் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட சர்வதேசவாதத்தின் தலைகீழான வகை என்றும் விஜேசரிவர்தன பார்வையாளர்களிடம் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லியோன் ட்ரொட்ஸ்கியிடம் இருந்து மேற்கோள் காட்டினார்: "சர்வதேச வேலைத்திட்டமானது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் மற்றும் உலக அரசியல் முறைமையின் நிலைமைகள் மற்றும் போக்குகளை, அதன் தனி தனி பாகங்கள் ஒன்றோடொன்று முரண்பாடான வகையில் தங்கியிருக்கின்ற அதன் அனைத்து தொடர்புகள் மற்றும் முரண்பாடுகளைப் பற்றிய பகுப்பாய்விலிருந்து நேரடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்,” என்ற ட்ரொட்ஸ்கியின் விளக்கம் பிரசித்தமானதாகும்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்து தேசிய பிரிவுகளும் ஒரே சர்வதேச முன்னோக்கின் அடிப்படையிலேயே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன, என விஜேசிறிவர்தன தொடர்ந்தார்.

மற்றொரு பார்வையாளர் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் ஐக்கிய சோசலிசக் கட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து கேட்டார்.

ஒரு மோசமான தேசியவாத பாய்ச்சலை மேற்கொண்ட ஐக்கிய சோசலிசக் கட்சியின் பிரதிநிதி ஸ்ரீநாத் பெரேரா, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியை இழிவுபடுத்த முயன்றார். சோசலிச சமத்துவக் கட்சிக்கு "அமெரிக்காவில் ஒரு தளம் இல்லை" அதனால் அதன் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் இலங்கைக்கு "சுற்றுப்பயணம்" செய்கின்றார் என்று ஸ்ரீநாத் பெரேரா கூறினார்.

நீண்டகால சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் ஆனந்த வக்கும்புர, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பேசினார். "அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும்" என்று அவர் கூறினார். "சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்காக உரையாற்ற ஒரு ட்ரொட்ஸ்கிச ஜனாதிபதி வேட்பாளர் எடுக்கின்ற முடிவு ஒரு முக்கியமான சர்வதேச முடிவாகும்," என அவர் தெரிவித்தார்.


ஸ்ரீநாத் பெரேரா

SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்துகொள்ளவில்லை என்று பெரேரா சோசலிச சமத்துவக் கட்சியை கண்டித்தார். இந்த போராட்டத்தை முன்நிலை சோசலிசக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்ததுடன், சிங்கள இனவாத மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டது. ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் ஏனைய போலி-இடது அமைப்புகளின் ஆதரவுடன், இந்த எதிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்கள் சைட்டம் கல்லூரியை நிறுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று வலியுறுத்தினர்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான சி. வி. விக்னேஸ்வரனின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இனவாத இயக்கமான எழுக தமிழ் போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி கொடுத்த ஆதரவையும் பெரேரா மகிமைப்படுத்தினார். இனவாத அரசியலுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஐக்கிய சோசலிசக் கட்சி அடிபணிந்துள்ளதை தெளிவாக விளக்கும் உரையில் பெரேரா கூறியதாவது: "தமிழ் மக்களின் இடதுசாரி இயக்கம் இல்லாததால், தமிழ் முதலாளித்துவ பிரதிநிதிகளை ஆதரிப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டத்துடன் நாங்கள் இணைந்துகொண்டோம்."

ஐக்கிய சோசலிசக் கட்சிக்கு ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்ற கூறிய சோசலிச சமத்துவக் கட்சியின் பாணி விஜேசிறிவர்தன, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தையும் 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதையும் பார்வையாளர்கள் முன் சுருக்கமாக மீளாய்வு செய்தார்.

நான்காம் அகிலத்தின் அப்போதைய செயலாளராக இருந்த மைக்கல் பப்லோ, ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளை நிராகரித்து, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு ஒரு முற்போக்கான வகிபாகம் இருப்பதாக சித்தரித்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் நிராகரித்ததாக விஜேசிறிவர்தன விளக்கினார். பப்லோவாத திருத்தல்வாதம் சர்வதேச அளவில் பெரும் காட்டிக்கொடுப்புகளுக்கு வழி வகுத்துள்ளது என்றும், "பெரேராவும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அந்த பப்லோவாத முகாமின் விரிவாக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்" என்றும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விளக்கினார்.

தனது உரையின் முடிவில் விஜேசிறிவர்தன கூறியதாவது: “பொருளாதார உற்பத்தி இன்று உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆனால் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடு உலகப் போரின் அச்சுறுத்தலை முன்கொண்டுவந்துள்ளது. போருக்கு எதிரான சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் அர்த்தம், சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்து இந்த முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்பதாகும். சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்வதோடு உலக சோசலிச வலைத் தளத்தின் தினசரி வாசகராக மாறுங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.”