ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Stalinists got huge “donations” from right-wing party to fund election campaign

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் தேர்தல் பிரச்சார நிதிக்காக வலதுசாரி கட்சியிடமிருந்து பெருமளவிலான “நன்கொடைகளை” பெற்றுள்ளனர்

By Kranti Kumara
25 October 2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM ஆகிய இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் இந்தியாவின் ஏப்ரல்-மே 2019 பொதுத் தேர்தல்களுக்கான அவர்களது பிரச்சார நிதிக்காக, ஒரு வலதுசாரி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து (DMK) மிகப்பெரிய தொகையாக 250 மில்லியன் (250,000,000) ரூபாவை நன்கொடையாக பெற்றுள்ளன.

பிராந்திய பேரினவாதக் கட்சியான திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியானது, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளையும், அத்துடன் சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவம் விரும்பி முன்னுரிமையளிக்கும் அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கியது. ஸ்ராலினிச கட்சிகளுக்கு திமுக நிதியளித்தது, சட்டப்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக (Election Commission of India –ECI) சமர்ப்பித்த தேர்தல் செலவுக்கான உறுதிச்சான்று பத்திரத்தினால் அம்பலத்துக்கு வந்தது.

திமுக சமர்ப்பித்த உறுதிச்சான்று பத்திரத்தின் படி, இவ்விரு ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதியளிப்புக்கள் அக்கட்சியின் மொத்த தேர்தல் செலவினத்தில் மூன்றில் ஒரு பங்கை குறிக்கின்றன.

ஏராளமான தமிழ்நாட்டு வணிகங்களின் ஆதரவு மற்றும் அவற்றின் மீதான கட்டுப்பாடு மற்றும் உரிமையின் மூலமாக பெரும் செல்வத்தை குவித்துள்ள ஊழல் நிறைந்த பிராந்திய பேரினவாத கட்சியான திமுக இடமிருந்து பெறப்பட்ட இந்த தாராளமான நன்கொடை என்பது ஸ்ராலினிஸ்டுகளின் சேவைக்கான கட்டணமேயன்றி வேறொன்றுமில்லை.

இந்த சேவைகளாவன, பெருவணிக சார்பு கட்சியான திமுக இனை தொழிலாள வர்க்கத்தின் நண்பனாக காட்டுவது அத்தோடு, சிபிஎம் உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் சிபிஐ உடன் இணைந்த அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) போன்ற அதன் தொழிற்சங்க எந்திரங்கள், நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின் மற்றும் இந்திய பெருவணிகத்தின் மிருகத்தனமான சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, நசுக்கும் தொழில்துறை பொலிஸ் படையாக சேவைசெய்வதையும் உள்ளடக்கியது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, திமுக வும் மற்றும் மாநிலத்தின் தற்போதைய ஆளும் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK), மிகக் குறைந்த ஊதியங்கள் மற்றும் ஸ்திரமற்ற ஒப்பந்த வேலைகளுக்கு நிலவும் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த ஸ்ராலினிஸ்டுகளை நம்பியிருப்பதோடு, தமிழ்நாட்டை நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின் புகலிடமாக மாற்ற ஏராளமான அரசியல் சக்தியை அவை செலவிட்டுள்ளன.

உதாரணமாக கடந்த ஆண்டு பிற்பகுதியில், அதிமுக கட்சியால் நியமிக்கப்பட்ட மாவட்ட தொழிலாளர் ஆணையர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வேலைக்கு திரும்புமாறு தொழிலாளர்களை அறிவுறுத்தி, மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களான யமஹா மோட்டார் இந்தியா மற்றும் ராயல் என்ஃபீல்ட் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளரான மியோங் ஷின் இந்தியா தானியங்கி (MSI) நிறுவனம் ஆகியவற்றிற்கு எதிரான தொழிலாளர்களின் இரண்டு மாத காலம் நீடித்த போர்க்குணம் மிக்க வேலைநிறுத்தங்களை CITU திடீரென நிறுத்தி விட்டது.

திமுக அதன் ஸ்ராலினிச தோழமைக் கட்சிகளுக்கு வழங்கிய 250 மில்லியன் ரூபாவில், ஐந்தில் மூன்று பங்கான 150 மில்லியன் ரூபாய் (150,000,000) அவ்விரு ஸ்ராலினிச கட்சிகளில் பழமையானது ஆனால் சிறிய கட்சியான சிபிஐ க்கு சென்றது. சிபிஐ இலிருந்து 1964 இல் பிரிந்த சிபிஎம் 100 மில்லியன் ரூபாவை (100,000,000) பெற்றுக் கொண்டது.

இந்த இரண்டு ஸ்ராலினிச கட்சிகளுமே பல தசாப்தங்களாக முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பாகமாக செயல்பட்டு வருகின்றன என்பதுடன், மத்தியில் வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு மீண்டும் மீண்டும் முட்டுக் கொடுத்துள்ளன, மேலும் முறையே இந்தியாவின் நான்காவது மற்றும் பதிமூன்றாவது பெரிய மாநிலங்களான மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் அரசாங்கக் கட்சிகளாக அவை சேவையாற்றுகின்றன.

ஆயினும், திமுக விடமிருந்து நேரடியாக பணம் பெற்றுக் கொண்டதற்கான ஸ்ராலினிசக் கட்சிகளின் ஒப்புதல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும் ஸ்ராலினிஸ்டுகளின் கூற்றுக்களை முதலாவதாக இது கேலிக் கூத்தாக்குகிறது. என்றாலும் கூடுதலாக, இந்திய முதலாளித்துவத்தின் முதலீட்டாளர் சார்பு, சந்தை சார்பு “சீர்திருத்த” திட்டத்தை செயல்படுத்துவதில் அவர்கள் கொண்டிருந்த பங்கின் விளைவாக மக்கள் ஆதரவை பெரிதும் இழந்து நிற்கும் இந்த கட்சிகளின் வீழ்ச்சியடைந்த நிலையையே அது வெளிப்படுத்துவதாக உள்ளது.

திமுக வின் உறுதிச்சான்று பத்திரத்தின் சாராம்சத்தை பெருநிறுவன செய்தி ஊடகங்கள் அம்பலப்படுத்தியபோது, “கூட்டணி அரசியலின்” ஒரு சாதாரண நடவடிக்கை என்பதாகவே —அதாவது, முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் என்பதன் பொருள், வாக்குகள், அதிகாரம் மற்றும் கேவலமான பேரம்பேசல்— திமுக விடமிருந்து தொகை பெற்றுக் கொண்டதை சிபிஐ அப்பட்டமாக ஆதரித்தது. சிபிஐ பொதுச் செயலர் டி.ராஜா “இது யதார்த்தமானதே” என்றும், “தமிழ்நாட்டில் திமுக விடமிருந்து கட்சி நிதி பெற்றுக் கொண்டதில் நெறிமுறையற்ற எதுவுமில்லை. அனைத்தும் வெளிப்படையாகவும் வங்கி பரிமாற்றத்தின் மூலமாகவும் செயல்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கும்போது அவையனைத்தும் தெளிவாகிவிடும். இது மாநிலத்தில் கூட்டணி அரசியலின் ஒரு பகுதியே” என்றும் தெரிவித்தார்.

சிபிஎம் இன் தமிழ்நாடு மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தார். ஆனால், திமுக உறுதிச்சான்று பத்திரத்தின் உண்மைத்தன்மைக்கு அவர் சவால் செய்யவில்லை. “மாநிலம் முழுவதிலுமிருந்து நாங்கள் பணம் சேகரித்து, அத் தொகையை தேர்தலுக்காக செலவு செய்தோம்,” என்று இந்து நாளிதழுக்கு அவர் தெரிவித்தார். மேலும், “நாங்கள் எதையும் மறைக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாகவே நடத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சிபிஎம் அரசியல் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை, “சிபிஎம் இன் தேர்தல் நிதி மற்றும் செலவினம் தொடர்பான” ஊடக அறிக்கைகளை கண்டித்தது. இந்த அறிக்கைகள் அனைத்தும் “கட்சியை இழிவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தவறான தகவல்களேயன்றி வேறொன்றுமில்லை” என்றும் கண்டனம் செய்தது.

என்றாலும் சிபிஎம் அறிக்கையே “தவறான தகவலாக” இருந்தது. இரண்டு தனித்தனியான சிக்கல்களை குழப்பும் வகையில் கவனமாக இது வெளியிடப்பட்டது: அவை, திமுக விடமிருந்து இந்தியாவின் பிரதான ஸ்ராலினிசக் கட்சி நன்கொடை பெற்றதா; மற்றும் இந்து மேலாதிக்கவாத பிஜேபி அரசாங்கத்துடன் இணைந்த ஊடகங்கள் கூறுவதன்படி, திமுக நன்கொடையளித்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அது ஜூலை 10 அல்லது செப்டம்பர் 13 தேதிகளில் சமர்ப்பித்த ஆவண பத்திரங்களில் குறிப்பிடாமல் விட்டதன் மூலமாக சிபிஎம் சட்டத்தை மீறுகிறதா என்பதாகும்.

சிபிஎம் அரசியல் குழு, “குற்றச்சாட்டுக்கு மாறாக,” “மக்களவை தேர்தலின் போது பெறப்பட்ட அனைத்து நன்கொடைகள் மற்றும் நிதிகள் பற்றிய விபரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் கணக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன…. பொய்யாக கூறப்படுவது போல எதுவும் மறைக்கப்படவில்லை” என்று வலியுறுத்தியது.

சிபிஎம் அறிக்கை, திமுக வழங்கிய நிதியை பெற்றுக் கொண்டதை ஒப்புக் கொள்ளாததுடன், அவை “தவறான தகவல்களேயன்றி வேறொன்றுமில்லை” என்று ஊடக அறிக்கைகளில் அறிவித்தது, மேலும், பொதுவில் கிடைக்கக்கூடிய சிபிஎம் இன் EIC தாக்கல்கள் திமுக பங்களிப்பு பற்றி எதையும் குறிப்பிடவில்லை, இதன் உட்குறிப்பு திமுக பங்களிப்பை சிபிஎம் பெற்றது பொய் என்பதே – அரசியல் குழுவின் வெளிப்படையான நோக்கமாக இருந்தது.

ஆனால், இந்த மோசடியான வலைப் பின்னல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல, ஏனென்றால், திமுக வின் உறுதிச்சான்று பத்திரம் தவறானது என்று மறைமுகமாக சிபிஎம் குறிப்பிடுவதானது திமுக உடன் ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டணி குறித்த சமரசத்தை அபாயத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இவ்வாறு சிபிஎம் அறிக்கையை அவர்கள் வெளியிட்டு சில நாட்களில், அக்கட்சியின் பல அரசியல் குழு உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர், அதில் அவர்கள் தங்களது கட்சி உண்மையில் திமுக விடமிருந்து நிதியளிப்பை பெற்றுக் கொண்டதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். திமுக உடனான சிபிஎம் இன் உறவுகளில் “மூடிமறைப்பு”  எதுவுமில்லை என்று Print வலைத் தளத்திற்கு இராமச்சந்திரன் பிள்ளை தெரிவித்தார். மேலும் பிள்ளை, “எங்களது கட்சியின் தமிழ்நாட்டு பிரிவு நிதியளிப்பை ஏற்றுக் கொண்டது என்பதுடன், அவை அனைத்தும் பொது இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன,” என்றும், “ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கைகளுக்காகவே கூட்டணி கட்சியிலிருந்து அத்தொகை பெறப்பட்டது” என்றும் கூறினார்.

தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட சிபிஎம் அரசியல் குழு உறுப்பினரான, ஜி. இராமகிருஷ்ணன், இந்து நாளிதழில், “திமுக விடமிருந்து நிதியளிப்பை பெற்ற உண்மையை நாங்கள் மறைக்கவில்லை. எங்கள் கணக்குகளை தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் சமர்ப்பித்துள்ளோம் என்பதுடன், அவர்களும் தங்கள் வலைத் தளத்தில் அதன் விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு பதிவிடவுள்ளார்கள்” என்று தெரிவித்தார். என்றாலும், ஸ்ராலினிஸ்டுகள் “பெருநிறுவனங்களிலிருந்து நிதிகளை திரட்டவில்லை” என்று நொண்டிச்சாக்கு கூறி, பெருவணிக திமுக விடமிருந்து சிபிஎம் நிதி பெற்றுக் கொண்டதை இராமகிருஷ்ணன் பாதுகாத்தார்.

இந்த விவகாரத்தில் மேலும் கருத்தில் கொள்ளத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு செப்டம்பர் 13 இல் சமர்ப்பிக்கப்பட்ட சிபிஎம் இன் உறுதிச்சான்று பத்திரத்தைப் பொறுத்த வரை, மக்களவைத் தேர்தல் மற்றும் ஒரே நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடந்த மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றிற்கான அக்கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் செலவு வெறும் 72 மில்லியன் ரூபாய் என இருந்தது.

இது, திமுக அன்பளிப்பாக வழங்கிய தொகையில் மொத்தமாக இல்லாவிட்டாலும், 100 மில்லியன் ரூபாவை பெற்று அத்தொகையை அதன் பெரிய கட்சி எந்திரத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தியது என்று உறுதிபட அறிவுறுத்துகிறது. சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து 2011 இல் அது முடிவுக்கு வந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் சிபிஎம் இன் ஊழல் நிறைந்த மற்றும் அரசியல் ரீதியாக சீரழிந்த தன்மையின் அளவு குறித்து நிறைய பேசுகிறது. இவ்வாறான வளர்ச்சியினால், அக்கட்சி எந்திரத்திலிருந்து ஒரு கணிசமான பகுதியினர் சமீபத்திய ஆண்டுகளில் பிஜேபி க்கு தாவிவிட்டனர் (see: Stalinist CPM faces debacle in its West Bengal “bastion” ).

இவ்வாறாக மோசமான இந்திய முதலாளித்துவ அரசியல் சாக்கடையில் ஸ்ராலினிஸ்டுகள் நீந்துவது ஆச்சரியப்படத்தக்க விடயமாக தோன்றவில்லை. சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி ஒருமுறை பெருமையாகக் கூறியது போல, 1989 முதல் 2008 வரையிலான பிஜேபி அல்லாத ஒவ்வொரு இந்திய அரசாங்கத்தையும் ஸ்ராலினிஸ்டுகள் உருவாக்கி அதை தக்கவைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகித்தனர் – அதாவது அடுத்தடுத்த தொடர்ச்சியான அரசாங்கங்களை, அவற்றில் பெரும்பாலும் சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதும், மற்றும் வாஷிங்டனுடன் எப்போதும் நெருக்கமான உறவுகளை பேணி வந்ததுமான காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கங்களையும் அவை தக்கவைத்தன.

ஸ்ராலினிஸ்டுகளின் இந்த அழுகிப்போன அரசியலின் முடிவு என்னவாக இருந்தது என்றால், இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் பார்வையில் அவர்கள் நன்மதிப்பற்றவர்களாக தோன்றினர். அதனால் தான் ஒரு தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை அவர்கள் சந்தித்துள்ளனர். 2004-09 முதல், ஸ்ராலினிச கட்சி தலைமையிலான இடது முன்னணி மக்களவையில் 60 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கூட்டணியாக இருந்து வந்தது என்றாலும், 2019 பொதுத் தேர்தல்களில், சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டும் மொத்த எண்ணிக்கையாக வெறும் 5 தொகுதிகளையே கைப்பற்றின. இவற்றில், சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் தலா இரண்டு தொகுதிகள் வீதம், தமிழ்நாட்டில் பெரும்பான்மை வெற்றியை குவித்த திமுக வின் ஆதரவில் தான் வென்றது.

திமுக தேர்தல் நிதியளிப்பு வெளிப்பாடுகளுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சியுடனான வெளிப்படையான தேர்தல் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் அக்கட்சியின் கன்னை, தேசியளவிலான கட்சி கூட்டணிக்கு ஒரு முன்மாதிரியாக திமுக கட்சியுடன் சிபிஎம் உருவாக்கியுள்ள கூட்டாண்மை பற்றி பேசியது.

ஏப்ரல் 2018 இல் நடந்த சிபிஎம் இன் மத்திய குழு கூட்டம், கட்சி அமைப்பு குறித்த அறிக்கையின் முடிவுகளை சுருக்கமாகக் கூறி, சிபிஎம், “எந்தவொரு புரட்சிகர உள்ளடக்கமும் இல்லாத ஒரு வெகுஜன கட்சி” என்று ஒப்புக் கொண்டது. இன்னும் மிகுந்த உண்மையான விளக்கம் என்னவென்றால், இதுவும் சிபிஐ யும் இந்திய முதலாளித்துவத்திற்கும் அதன் அரசிற்கும் கடமைப்பட்டவை என்பதுடன், ஆளும் கட்சியின் நேரடி ஆதரவின் காரணமாக அதிகரித்தளவில் அவை மிதப்பில் இருக்கின்றன. எனவே, தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை கண்காணிக்கவும் அரசியல் ரீதியாக அதனை அடக்கி ஒடுக்கவும் அவற்றால் முடியும்.

ஆசிரியர் பரிந்துரைப்பவை:

இந்திய பெருவணிகங்கள் மோடி மற்றும் அவரின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியை இரண்டாவது பதவிகாலத்திற்கு முன்நகர்த்துகின்றன

[24 May 2019]

As class struggle sharpens, Indian Stalinists stump for right-wing bourgeois government 
[1 May 2019]