ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Vote for Pani Wijesiriwardena in the Sri Lankan presidential election! Rally to fight for international socialism!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்! சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் அணிதிரளுங்கள்!

By Socialist Equality Party (Sri Lanka)
12 November 2019

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), நவம்பர் 16 அன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு புரட்சிகர சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்திற்கான உங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் எங்கள் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கிறது.


பாணி விஜேசிறிவர்தன

சோ.ச.க., ஏகாதிபத்திய போருக்கு, சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்படுவதற்கு மற்றும் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்வாதிகார ஆட்சிக்கான இலங்கை ஆளும் உயரடுக்கின் தயாரிப்புகளுக்கு எதிராக ஒரு சோசலிச மாற்றீட்டுக்காகப் போராடுகின்றது. எமது கொள்கை, சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

கடந்த மாதத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கோடாபய இராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அனுர குமார திசநாயக போன்ற முதலாளித்துவக் கட்சிகளின் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டு கூட்டங்களில் உரையாற்றினர். அவர்கள் அவற்றில் அடுத்தடுத்து பொய்களையே கொட்டியுள்ளனர்.

அவர்களின் வாக்குறுதிகளில் பாடசாலை சிறுவர்களுக்கு இலவச மதிய உணவு, விவசாயிகளுக்கு இலவச உரம் மற்றும் கோதுமை மா, பொது மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது போன்ற எண்ணற்ற வாக்குறுதிகள் அடங்கும்.

எவ்வாறாயினும், ஐ.தே.க., ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் ஜே.வி.பி.யும் இந்த பொய்களின் அடியில், "தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல்", "வலுவான மற்றும் நிலையான ஆட்சி", "சட்டம் ஒழுங்கு" மற்றும் "ஒழுக்கமான சமூகம்" ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற "அழைப்பை" தீவிரப்படுத்தியுள்ளன. ஆட்சிக்கு வந்த பின்னர் இவற்றை செயல்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். இவை சர்வாதிகார ஆட்சிக்கான குறியீட்டு சொற்களைத் தவிர வேறல்ல.

ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் பாகமாக இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் பரவி வருவது போல், இலங்கையிலும் வளர்ந்து வரும் தொழிலாளர்கள் மத்தியிலான சமூக அமைதியின்மை குறித்த மரண அச்சத்தால் உந்தப்படுகின்றன.

கொழும்பு அரசாங்கம், ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை, இந்த சமூக போராட்டங்களை அச்சுறுத்தி அடக்குவதற்காக கடுமையான அவசரகால சட்டங்களை திணிக்கவும், முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை தூண்டிவிடவும் பயன்படுத்திக்கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவுடனான இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இருப்பினும், தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தாங்க முடியாத நிலைமைகளின் காரணமாக தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்க முடியாது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 16,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; 2,000 க்கும் மேற்பட்ட இரயில் ஊழியர்கள் அடக்குமுறைக்காக திணிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளையும் மீறி வேலை நிறுத்தம் செய்தனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒரு வலுவான அரசாங்கத்தை நிறுவுவதற்கான தமது திறனை நிரூபிக்க ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆகியவை ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொள்கின்றன. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இரக்கமின்றி முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோடாபய இராஜபக்ஷவை நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்புக்கு தலைமை தாங்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக குறிவைக்கப்பட்ட அமெரிக்க இராணுவ கட்டமைப்பில் இலங்கையை மேலும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஜூலை மாதம், வாஷிங்டன் 1997 இல் கையெழுத்திடப்ட்ட படைகள் நிலைகொள்ளல் உடன்படிக்கையை (SOFA) புதுப்பிப்பதற்காக கொழும்பை நெருக்குவதற்கு முயன்றதுடன், அமெரிக்கப் படைகள் நாட்டிற்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்க புதிய உட்பிரிவுகளை அதில் இணைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட விரும்பினாலும், அதற்கு எதிரான பொதுமக்களின் விரோதத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து அகற்றப்படவில்லை.

இந்த அபிவிருத்திகளோடு இணைந்த ஏகாதிபத்திய போர் ஆபத்தைப் பற்றி ஒரு கட்சி கூட குரல் எழுப்பவில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் அமெரிக்க மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடான இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக முண்டியடிக்கின்ற அதேவேளை, சீனாவிடம் நிதி உதவியை எதிர்பார்க்கின்றன.

2015 ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றவும், மைத்ரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவரவும் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை வாஷிங்டன் திட்டமிட்டது. இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சி மற்றும் புலிகளுக்கு எதிரான அவரது போரை அமெரிக்கா ஆதரித்த போதிலும், பெய்ஜிங்குடனான அவரது உறவுகளை வாஷிங்டன் எதிர்த்தது.

ஆட்சிக்கு வந்தபின், சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவுடன், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஆதரவாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை தீவிரமாக மாற்றினார். இது இலங்கை ஆயுதப்படைகளை, குறிப்பாக கடற்படையை, இந்தோ-பசிபிக் கட்டளைத் தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அமெரிக்க இராணுவத்துடன் இணைத்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களின் சூறாவளியில் இலங்கை இவ்வாறு இழுக்கப்படுகிறது. தெற்காசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஆலிஸ் ஜி. வெல்ஸ், அக்டோபரில் வெளியுறவு விவகாரங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழுவிடம் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை ஒரு பிரதான கடல்சார் சக்தி மற்றும் இந்தோ-பசிபிக் பங்காளி” என்று கூறினார். அடுத்த மாதம் “ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அமெரிக்கா அவருடன் வேலை செய்வதற்கு தாயாராக இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சோ.ச.க. மட்டுமே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளான உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, மற்றொரு பேரழிவுகரமான உலகப் போரின் அபாயத்தை பற்றி சுட்டிக்காட்டுவதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுகின்றது. அத்தகைய ஒரு மூன்றாம் உலகப் போர் அணு ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் ஒரு போராக இருக்கும்.

எதிர்வரும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை செயல்படுத்த அவரது அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும். கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, கொழும்பை தளமாகக் கொண்ட டெய்லி எஃப்டி பத்திரிகை, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய குழுவின் தலைவரான மானுவேலா கொரெட்டி வழங்கிய ஒரு நீண்ட நேர்காணலை வெளியிட்டது. அதில் அவர் இலங்கையின் நெருக்கடி பற்றியும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை அது கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எச்சரித்தார்.

அவர் சுட்டிக்காட்டியதாவது: "எங்கள் ஆலோசனையில் சந்தை நம்பிக்கையை தூக்கி நிறுத்துவதற்கான வரவு-செலவு ஒழுக்கம் மற்றும் விவேகமான நிதி கொள்கைகளுடன் கூடிய நிதானமான கொள்கைகள் உள்ளடங்கியுள்ளன. நாட்டின் பாதிக்கப்படக்கூடிய நிலைமையை, குறிப்பாக உயர்ந்த பொதுக் கடன் மற்றும் ஓப்பீட்டளவில் தற்காப்பு நிலைமகள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, உள் மற்றும் புற அதிர்ச்சிகளை தாங்கக்கூடியவாறு இலங்கையை பலப்படுத்துவது முக்கியம்.”

இலங்கைக்கு அதனது நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் ஒரு பகுதியாக, “மறுசீரமைப்பு செயல் நிரலை, குறிப்பாக கட்டமைப்பு சீர்திருத்தங்களை துரிதப்படுத்த வேண்டும்”, அதாவது மானியங்களைக் குறைத்தல் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த போலி வாக்குறுதிகளை ஓரங்கட்டிவிட்டு, ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி இந்த திட்டங்களையே ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவார். ஒரு சர்வாதிகார ஆட்சி இல்லாமல், ஆளும் வர்க்கத்தால் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது இந்த தாக்குதல்களை சுமத்த முடியாது.

பல கட்சிகளின் கலவையான தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு "தீர்வு" பற்றி அவருடன் கலந்துரையாட முடியும் என்று இந்த கட்சிகள் வலியுறுத்துகின்றன. இது இந்த கட்சிகளின் மற்றொரு துரோகமாகும். ஏனைய முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை மிதித்து, போரை நடத்துவதில் ஐ.தே.க. இரத்தக்களரி சரித்திரத்தைக் கொண்டதாகும். கொழும்பு ஆளும் உயரடுக்கு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் தமிழ் உயரடுக்கின் சலுகைகளை பாதுகாப்பதில் மட்டுமே இந்தக் கட்சிகள் அக்கறை காட்டுகின்றன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணியச் செய்வதிலும், இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அரசியல் ரீதியாக அவர்களை நிராயுதபாணியாக்குவதிலும் போலி இடது குழுக்கள் ஒரு தீங்கு விளைவிக்கும் பாத்திரத்தை வகித்து வருகின்றன. நவ சம சமாஜ கட்சியானது ஐ.தே.க. வேட்பாளர் பிரேமதாசவுக்கு ஆதரவாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரேமதாச “பாசிச” கோடாபய இராஜபக்ஷவுக்கு ஒரு முற்போக்கான மாற்றீடு என அறிவித்தார்.

இலங்கையில் உள்ள மற்றொரு போலி இடது அமைப்பான, ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.), பாசிச கோடாபய இராஜபக்ஷவுக்கு எதிராக பிரேமதாச ஒரு "குறைந்த கெடுதி" என்று கண்டுபிடித்துள்ளது. ஐக்கிய சோசலிசக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு கூறுகிறது: "சஜித் [பிரேமதாச] ஒரு முன்னோக்கு இல்லாத ஒரு வெற்று நபர்." இது இந்த சாந்தமான விமர்சனத்தை பின்வருமாறு செய்துள்ளது: "இராஜபக்ஷ தேர்வாவதை அனுமதிக்க கூடாது என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் நாட்டை இருட்டில் மூழ்கடிக்க முயல்கிறார். இதேபோல, நவ சம சமாஜக் கட்சி போலவே ஐக்கிய சோசலிசக் கட்சியும், கோட்டாபய இராஜபக்ஷ ஆட்சியைப் பிடிப்பதைத் தடுப்பதற்காக, தொழிலாளர்களை பிரேமதாசாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறது.

முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), தான் ஒரு "சோசலிச வேட்பாளரை" நிறுத்தியுள்ளதாக அறிவித்து, சற்றே வித்தியாசமான தாளத்தில் ஆடுகிறது. அதன் வேட்பாளர் துமிந்த நாகமுவவின் விஞ்ஞாபனத்தில், மு.சோ.க. விளக்குவதாவது: "எங்கள் வேலைத் திட்டத்திற்கு இரண்டு கட்டங்கள் உள்ளன. முதலாவது இடைமருவு கோரிக்கைகள் மற்றும் கோஷங்களின் தொகுப்பாகும், இரண்டாவதாக நெருக்கடிக்கு உண்மையான தீர்வைக் காணும் நீண்ட கால வேலைத் திட்டத்தைக் குறிக்கிறது.”

இது ஒரு வகையான இரண்டு கட்ட தத்துவமாகும். அதாவது தொழிலாளர்கள் முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் பெருவணிகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும், அதேவேளை, “உண்மையான தீர்வுக்காக” நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்பதாகும். இதையே மு.சோ.க. நடைமுறையில் செயல்படுத்துகிறது. சமீபத்திய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களின் போது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான கோரிக்கையை எழுப்பிய சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளை எதிர்த்த முன்நிலை சோசலிசக் கட்சி, அதற்குப் பதிலாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக வக்காலத்து வாங்கியது.

இந்த போலி-இடது கட்சிகள், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரட்டலுக்கு முற்றிலும் விரோதமான, ஒரு பிற்போக்கு தேசியவாத முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டவை. இந்த வழியில், அவர்கள் ஆளும் வர்க்கக் கட்சிகளின் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் களம் அமைத்துக் கொடுக்கின்றன.

முதலாளித்துவ வர்க்கத்தின் அடுத்த தாக்குதலுக்கு எதிரான தயாரிப்பில், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்காக தொழிற்சங்கங்களிலிருந்து முற்றிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இத்தகைய நடவடிக்கைக் குழுக்களை வேலைத் தளங்களிலும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் ஸ்தாபிக்க வேண்டும்.

இந்த முன்முயற்சி, தொழிலாள வர்க்கத்தை சுற்றியுள்ள கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அதைச் சூழ அணிதிரட்டுவதற்கும், சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தயார்ப்படுத்தும். இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

இந்த போராட்டத்திற்கு, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர சோசலிச கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். இந்த கட்சியில் சேருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்வதோடு, எங்கள் சோசலிச மற்றும் சர்வதேச ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.