ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass marches and strikes against Macron’s pension cuts continue across France

பிரான்ஸ் எங்கிலும் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பாரிய பேரணிகளும் வேலைநிறுத்தங்களும் தொடர்கின்றன

By Alex Lantier
11 December 2019

பிரான்ஸ் எங்கிலும் 800,000 க்கும் அதிகமான தொழிலாளர்களும் இளைஞர்களும் நேற்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் அணிவகுத்த அதேவேளையில், இரயில்வே மற்றும் பொது போக்குவரத்துத்துறை தொழிலாளர்களும் மற்றும் பொதுத்துறையின் பரந்த பிரிவுகளின் தொழிலாளர் சக்தியும் டிசம்பர் 5 இல் தொடங்கிய வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்தன.


RATP வழித்தடம் 9 வேலைநிறுத்தத்தில் உள்ளது

பிரான்சில் இந்த வேலைநிறுத்த இயக்கம், தொழிலாள வர்க்க போராட்டம் மற்றும் அரசியல் எதிர்ப்பின் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச எழுச்சிக்கு மத்தியில் வருகிறது. பிரிட்டனில் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், அமெரிக்காவில் வாகனத் தொழில்துறை மற்றும் ஆசிரியர்களின் வெளிநடப்புகள், லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்து சிலி, பொலிவியா மற்றும் ஈக்வடோர் வரையில் வெகுஜன போராட்டங்களின் ஓர் அலை என இவற்றைப் பின்தொடர்ந்து, அல்ஜீரியாவில் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தின் பாகமாக அங்கே டிசம்பர் 12 தேர்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமைகளின் கீழ், மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே வேகமாக ஒரு பலப்பரீட்சையாக அபிவிருத்தி அடைந்து வருகிறது.

இந்த வேலைநிறுத்தம் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக சக்தியை எடுத்துக் காட்டி வருகிறது. பிரெஞ்சு ரயில்வே போக்குவரத்தும் பாரீசில் வெகுஜன தரைவழி போக்குவரத்தும் நடைமுறையளவில் நின்று போயுள்ளன, அரசு பள்ளிகளின் பணியாளர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். செவ்வாயன்று, உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் மிகப் பெரிய குழுக்கள் பிரான்ஸ் எங்கிலும் போராட்டங்களில் இணைந்தன.

மீண்டும் நேற்று எரிசக்தித்துறையின் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களைக் கண்டது. பிரான்சின் எட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஏழு வேலைநிறுத்தத்தில் முற்றுகையிடப்பட்டுள்ளன, அதுவும் குறிப்பாக டிரக் ஓட்டுனர்கள் அடுத்த வாரம் வேலைநிறுத்தத்தில் இறங்கக்கூடும் என்கின்ற நிலையில், வினியோகச் சேவை நிலையங்களில் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக்கூறை அதிகரித்து வருகிறது. பிரான்சின் மின் உற்பத்தித்துறை (Electricité de) தொழிலாளர்களில் சுமார் ஒரு கால்வாசி தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரான்சின் அணுமின் உற்பத்தி ஆலைகளில் 6,000 மெகாவாட் அளவுக்கு எரிசக்தி உற்பத்தி குறைந்துள்ளது.


வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியினர்

ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர்கள் பொது கூட்டமைப்பு (CGT) அறிவிக்கையில், பாரீசில் 160,000 பேர் உள்ளடங்கலாக பிரான்ஸ் எங்கிலும் 880,000 தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிவகுத்ததாக அறிவித்தது. லீல், லியோன், மார்சைய், ரென், நாந்தேர் மற்றும் துலூஸ் உட்பட மற்ற பல நகரங்களிலும் பெரிய பேரணிகள் நடத்தப்பட்டன. கனரக ஆயுதமேந்திய கலகம் ஒடுக்கும் பொலிஸ் ஓர் ஊனமுற்ற பெண்மணி அவரின் சக்கர நாற்காலியைக் கொண்டு பொலிஸைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டிய பின்னர் போராட்டங்களில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்ட பெண்மணி Odile Maurin இன் படங்களை உயர்த்திக் காட்டி, பேரணி சென்றவர்கள் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினர்.

தொழிலாளர்கள் மத்தியில், அங்கே மக்ரோனுக்கு எதிராக ஆழ்ந்த கோபம் நிலவுகிறது என்பது மட்டுமல்ல, மாறாக அவருடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அவரின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை மேம்படுத்த வாக்குறுதி அளிக்கும் தொழிற்சங்கங்கள் மீது அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது. பிரெஞ்சு வரலாற்றில் பல முறை செய்துள்ளதைப் போலவே, CGT தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் பேரம்பேசும் ஒரு மூலோபாயம் மூலமாக தொழிலாளர்களை முட்டுச் சந்துக்கு இட்டுச் செல்ல முயன்று வருகிறது. ஆனால் மக்ரோன் அரசாங்கமோ, மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைவாய்ப்பின்மை காப்பீடு உட்பட முக்கிய சமூக திட்டங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கான அதன் திட்டத்தில் எந்த முக்கிய மாற்றங்களையும் அது செய்யப் போவதில்லை என்பதை வலியுறுத்தி வருகிறது.

மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதும், ஆதரவுக்காக சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு முறையிடுவதுமே இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும். இதன் அர்த்தம், வேலைநிறுத்த இயக்கத்தை ஒருங்கிணைக்க மக்ரோன் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் தேசியரீதியில் அடித்தளமிட்டுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் இருந்து சுயாதீனமான தொழிலாளர்களின் சொந்த நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பதன் மூலம் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுப்பதாகும். இத்தகைய அமைப்புகள் ஒன்றும் வழங்கவில்லை என்பது போராட்டங்களில் இறங்கி உள்ள தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளுக்கு அதிகரித்தளவில் தெளிவாகி உள்ளது.

பாரீசில் பணியாற்றும் ஒரு செவிலியர் Marie-Hélène பாரீஸ் பேரணியில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் உரையாற்றுகையில், அவர் இந்த வேலைநிறுத்தத்தை, தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்த நிதியியல் பிரபுத்துவத்தால் நடத்தப்பட்ட சர்வதேச முனைவுக்கு ஒரு பதிலிறுப்பாக பார்ப்பதாக விவரித்தார்.


Marie-Hélène

அவர் தெரிவித்தார், “நான் கலந்து கொள்கிறேன், சுருக்கமாக, ஏனென்றால் என் ஓய்வூதியம் மாதத்திற்கு 1,000 யூரோவுக்குக் கீழே போய்விடும். ஆனால் பிரான்சில் மாதத்திற்கு 1,000 யூரோவுக்குக் குறைவாக உங்களால் வாழ முடியாது. … பிரான்சிலும் உலகெங்கிலும் கடந்த பல தசாப்தங்களாக நாம் அதிதீவிர சுதந்திர சந்தை கொள்கையின் அபிவிருத்தியைப் பார்த்துள்ளோம், அதில் பொதுவாக ஒவ்வொன்றும் இலாபங்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் செல்கிறது. முதலில் பலியாகிறவர்கள் தொழிலாளர்கள் தான், ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை பிரான்சுக்கு அதிக விளம்பரம் கிடைத்திருக்கலாம் ஏனென்றால் நாங்கள் மஞ்சள் சீருடை தரித்தோம், ஆனால் உலகெங்கிலும் ஒவ்வொரு தேசமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தொழிற்சங்கள் மக்ரோனுடன் ஓர் அழுகிய சமரசத்தைப் பேரம்பேச முயற்சிக்கின்ற வேளையில் தொழிலாளர்களைத் தொடர்ந்து அணித்திரட்டுவதே இந்த வெட்டுக்களை நிறுத்துவதற்கான வழி என்பதை Marie-Hélène வலியுறுத்தினார். “தொழிற்சங்க தலைமைகள் மக்ரோனுடன் பேரம்பேச உத்தேசித்திருப்பதாக தெரிகிறது என்றாலும், அவருடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றும் இல்லை,” என்றார். “ஆனால் நாம் தான் தொழிலாளர்கள், நாம் உறுதியாக தெளிவாக கூறுகிறோம்: இந்த சீர்திருத்தம் நிறைவேறக் கூடாது. எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் வீதிகளில் இருப்போம், ஆனால் இந்த சீர்திருத்தம் நிறைவேறக் கூடாது.”

ஓராண்டாக "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் இணைந்துள்ள Marie-Hélène, “மஞ்சள் சீருடை" இயக்கம் நவ-பாசிசவாதிகளுடையது என்ற ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கள் மீது அவரின் அவமதிப்பை வெளிப்படுத்தினார். அவர் WSWS க்குத் தெரிவித்தார்: “நான் ஒரு செவிலியர். நேர்மையாக கேட்பதானால், நான் ஒரு பாசிசவாதியாக இருக்க முடியுமா? வெளிப்படையாகவே, இந்த குற்றச்சாட்டுக்கள் இட்டுக் கட்டப்பட்டவை. என் நண்பர்கள் அனைவரும் சரி, நானும் சரி அமைதியான கண்ணியமானவர்கள். இந்த சீர்திருத்தங்கள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தாது இருந்திருந்தால் நாங்கள் ஒருபோதும் வீதிகளில் இறங்கி இருக்கவே மாட்டோம்,” என்றார்.

முதலாளித்துவதால் தோற்றுவிக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையின் வெறுப்பூட்டும் மட்டங்களுக்கு எதிராகவும் கோபம் அதிகரித்து வருகிறது. பாரீஸ் பகுதியின் பள்ளிக்கூட ஆசிரியர்களான யுவான் மற்றும் மார்ட்டின் ஆகிய இருவருடனும் WSWS உரையாற்றியது, அவர்கள் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் அவர்களின் ஓய்வூதியங்களை ஏறத்தாழ மாதத்திற்கு 500 யூரோவாக குறைத்துவிடும் என்று கணக்கிடுகின்றனர். 2018 இல் 23 பில்லியன் யூரோ அளவுக்கு அவரின் செல்வ வளத்தை அதிகரித்து கொண்ட உலகின் மிகப்பெரும் பணக்காரரான பேர்னார்ட் அர்னோல்ட்டை குறிப்பிட்டுக் காட்டி, யுவான் கூறினார், “ஒவ்வொரு நயா பைசாவையும் நாங்கள் எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் அல்லது மாத முடிவில் ஒன்றுமில்லாமல் நிற்கின்ற நிலையில், கண்கூடாகவே, இது ஏமாற்றமாக ஆகிவிடுகிறது.”


Martin and Yoann

அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்க பகுதிகளின் மாணவர்கள் நெரிசல் மிகுந்த, மிகக் குறைந்த பண ஒதுக்கீடு கொண்ட பள்ளிகளில் போராடி வருகிறார்கள். “மாத முடிவில் குடும்பங்களால் சமாளிக்க முடிவதில்லை,” யுவான் தெரிவித்தார், “ஒரு மாணவர் விளையாட்டுத்துறையில் பங்குபற்ற 25 யூரோ செலவு தேவைப்படுகிறது, ஆனால் அதை அந்த குடும்பத்தால் கொடுக்க முடியாததை பார்க்கையில், உங்கள் இதயமே உடைந்து விடும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஒரு விற்பனையாளர் ஜேம்ஸ் WSWS க்கு கூறுகையில், அவர் CGT பொது செயலாளர் பிலிப் மார்ட்டினேஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்களை அவர் ஏன் நம்பவில்லை என்பதை தெரிவித்தார்: “உண்மையில், இவர்கள் இந்த அமைப்புமுறையின் பாகமாக உள்ளார்கள், அவர்களின் தொழிற்சங்கங்கள் நிறைய அரசு உதவிகளைப் பெறுகின்றன. திரும்பவும் போராட்டத்திற்கு நகர்த்தியது எது என்றால், அடியிலுள்ள தொழிலாளர்கள் தான். மார்ட்டினேஸ் போன்றவர்கள், இந்த அமைப்புமுறையின் பாகமாக உள்ளார்கள். ஆகவே தான் அவர்கள் பேரம்பேசுகிறார்கள், ஆனால் அதன் அர்த்தம் என்ன, அவர்களின் பேரம்பேசல்களில் இருந்து முடிவில் என்ன கிடைக்கிறது? ஒன்றுமில்லை. மக்கள் முன்னர் எந்தளவு தொந்தரவில் இருந்தார்களோ அதேயளவில் தொந்தரவில் தான் உள்ளார்கள், ஆனால் அவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் அவர்களின் பதவியில் இருந்தவாறு ஒரு நல்ல வாழ்வைப் பெறுவார்கள்,” என்றார்.

இத்தகைய கருத்துக்கள், ஒருபுறம் தொழிலாளர்களுக்கும், மறுபுறம் நிதியியல் பிரபுத்துவம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து கொள்கை மீது பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளுக்கும் இடையே மேலெழுந்து வரும் சீர்செய்யவியலாத வர்க்கப் பிளவைச் சுட்டிக் காட்டுகின்றன.

பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப், பிரெஞ்சு மக்களிடம் ஓய்வூதிய வெட்டுக்களை விற்கும் முயற்சியாக இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த உள்ளார். இந்த சீர்திருத்தத்தை மக்கள்தொகையில் 67 சதவீதத்தினர் எதிர்க்கின்ற நிலையில் மற்றும் மக்ரோன் பிடிவாதமாக மக்கள் விரோத கொள்கையைப் பின்தொடர்வதால் இந்த வேலைநிறுத்தத்திற்காக மக்ரோனை தான் பழிசாட்ட வேண்டும் என்று 59 சதவீதத்தினர் தெரிவிக்கின்ற நிலையில், அதன் கொள்கையைப் பொதுமக்களுக்குத் தெளிவாக விளக்குமாறு அரசின் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் இருந்து அதிகரித்த அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிலிப் அவரே நேற்று மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் கட்சியின் (LRM) நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த கூட்டத்தில் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் காட்டினார். மக்கள் கருத்தை அலட்சியப்படுத்தி வரும் LRM அதன் வெட்டுக்களுடன் முன்நகர்ந்து வருகிறது என்பதை அக்கூட்டம் தெளிவுபடுத்தியது.

“அங்கே எந்த மாயமந்திர பேச்சும் இல்லை,” என்று தெரிவித்த பிலிப் தொடர்ந்து கூறுகையில், “நான் புதன்கிழமை உரை வழங்குகிறேன் என்பதனாலேயே போராட்டங்கள் நின்று விடப் போவதில்லை. உண்மையில் எனது உரை புதிய மனக்குறைகளைத் தூண்டும், அது தான் வழக்கம்,” என்றார்.

மக்ரோன் அரசாங்கத்துடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றும் இல்லை என்பதையும், அதை பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான போராட்டம் மட்டுமே முன்னிருக்கும் ஒரே வழி என்பதையும் மட்டுமே இது உறுதிப்படுத்துகிறது.