ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Millions march against French pension cuts amid public sector strike

பொதுத்துறை வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் பேரணி

By our reporters
18 December 2019

பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் அவரின் மக்கள்விரோத ஓய்வூதிய வெட்டுக்களின் அனைத்து வரையறைகளையும் திணிக்க கடந்த வாரம் சூளுரைத்ததை அடுத்து, நேற்று பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் மூன்றாவது பாரிய போராட்டம் நடந்தது.

டிசம்பர் 5 இல் பாரிய பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து இந்த நடவடிக்கை தினமே மிகப் பெரியதாக இருந்தது. தொழிற்சங்கங்களின் புள்ளிவிபரங்கள்படி, அண்மித்து இரண்டு மில்லியன் வேலைநிறுத்தக்காரர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக அணிவகுத்தனர், பொய்யான பொலிஸ் மதிப்பீடுகளின்படி 600,000 பேர் என்றிருந்தது. மோசடி ஆட்சியுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பேச்சுவார்த்தைக்கு உள்ள எதிர்ப்பை இந்த ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியதுடன், போராட்டக்காரர்கள் மத்தியில் மக்ரோன் பதவியிலிருந்து கீழிறங்க வேண்டுமென்ற அழைப்புகள் பரவி வருகின்றன.


பத்தாயிரக் கணக்கானவர்கள் குடியரசு சதுக்கத்தில் ஒன்றுகூடியுள்ளனர்

தொழிற்சங்கங்கள் இன்று ஓர் உடன்படிக்கையை எதிர்பார்த்து, அதாவது நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நடத்திய பரந்தளவில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு வேலைநிறுத்தத்தை விற்றுத்தள்ளுவதற்கு, பிலிப்புடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வார்கள். உண்மையில் பிலிப்புடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றுமே இல்லை, அவர் போராட்ட அணிவகுப்புகளின் போது நேற்று தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் வெட்டுக்களைத் திணிக்க அவர் "முழு தீர்மானத்துடன்" இருப்பதாக அறிவித்தார். ஓராண்டாக "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு கனரக ஆயுதமேந்திய பொலிஸ் படைகளை அனுப்பிய பின்னர், பிரெஞ்சு மக்களின் பாரிய பெரும்பான்மையினரிடையே நிலவும் அவர் வெட்டுக்களுக்கான எதிர்ப்பை பொலிஸ் ஒடுக்குமுறை கொண்டு நசுக்க முயன்று வருகிறார்.

மறுபுறம், தொழிலாளர்கள் பிரான்சில் மட்டுமல்ல உலகெங்கிலும் புயலுக்கு முந்தைய அதிர்வுகளாக தொழிலாள வர்க்க எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள். அல்ஜீரியா, ஈராக் லெபனான், சிலி மற்றும் இந்தியாவைப் பாரிய வெகுஜன போராட்டங்கள் உலுக்கி உள்ளன, வாகனத்துறை தொழிலாளர்கள், சுரங்கத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் அமெரிக்காவைத் தாக்கி உள்ளன. உலக நிதியியல் சந்தைகளால் ஆதரிக்கப்பட்டுள்ள மக்ரோனுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே சிக்கன நடவடிக்கைகள் மீதான ஒரு நேரடி அரசியல் மோதல் எழுந்திருப்பது இந்த அதிகரித்து வரும் உலகளாவிய போராட்டங்களின் அலையினது புரட்சிகர நோக்கங்களை அடிக்கோடிடுகிறது.



போராட்டக்காரர்கள் “மக்ரோன் இராஜினாமா செய்" என்று கோரும் போஸ்டரை ஒட்டுகிறார்கள்

ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர்கள் பொது கூட்டமைப்பு (CGT) அறிவிக்கையில், பிரான்ஸ் எங்கிலும் 1.8 மில்லியன் போராட்டக்காரர்கள் இருப்பதாக அறிவித்தது. CGT தகவல்படி, பாரீஸ் போராட்டத்தில் 350,000 பேர் கொண்ட ஒரு பெருங்கூட்டம் ஒன்று கூடியிருந்தது. மார்சைய்யில் 200,000 போராட்டக்காரர்கள்; துலூசில் 120,000 பேர்; போர்தோவில் 60,000 பேர்; லியோனில் 40,000 பேர்; லீல், ருவான், லு ஹாவ்ர், நாந்தேர் மற்றும் கிறனோபிள் இல் 30,000 இக்கும் அதிகமானவர்கள்; மொன்பெலியே, அமியான், ப்ரெஸ்ட், ரென், பெர்பினியோன், கிளர்மாண்ட்-பெர்ராண்ட், லிமோஜ், டூர்ஸ் மற்றும் நான்சியில் 15,000 இக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

அரசு பள்ளிகள் மற்றும் தேசிய இரயில்வேயில் (SNCF), வேலைநிறுத்த பங்கெடுப்பு பெரிதும் அதிகரித்தது, முந்தைய நாளின் 11 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ரயில்வே தொழிலாளர்களில் மூன்று பங்கினர் வேலைநிறுத்தத்தில் இருந்தனர். முந்தைய நாளின் 61 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இரயில் ஓட்டுனர்களில் முழுவதுமாக 75.8 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்தில் இருந்தனர். SNCF இலும் பாரீஸ் மற்றும் மார்சைய்யின் வெகுஜன போக்குவரத்திலும் இரயில் மற்றும் பேருந்துகளில் அரைவாசி அல்லது அதற்கும் அதிகமானவை நிறுத்தப்பட்டிருந்தன. தேசிய கல்வித்துறை அமைச்சக விபரங்களின்படி, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் 25 சதவீதத்தினர் மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களில் 25 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்தில் இருந்தனர், இதற்கு எதிராக தொழிற்சங்க புள்ளிவிபரங்களின்படி 50 மற்றும் 60 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


பாரீசில் மாணவர்கள் அவர்களின் பள்ளிக்குத் தடையரண்கள் அமைத்துள்ளனர்

மின்துறை தொழிற்சங்கங்கள், 90,000 வீடுகளுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு ஏற்படுத்தும் விதத்தில், போர்தோ மற்றும் லியோன் பிராந்தியங்களின் சில பகுதிகளில் மின்சாரத்தை வெட்டியதாக குறிப்பிட்டன.

டிசம்பர் 5 இல், கலகம் ஒடுக்கும் பொலிஸ் பல நகரங்களில் போராட்டக்காரர்களைத் தாக்கியது. பாரீசில், பொலிஸ் 2,422 போராட்டக்காரர்களை தடுத்து சோதனையிட்டு 11 பேரைக் கைது செய்தது. கலகம் ஒடுக்கும் பொலிஸ் பாரீசில் மீண்டும் மீண்டும் போராட்டக்காரர்களைச் சுற்றி வளைத்து அடைத்தது, இது தேசிய சதுக்கத்தில் (place de la Nation) வன்முறை மோதல்களுக்கு இட்டுச் சென்றதுடன் பல போராட்டக்காரர்கள் இதில் காயமடைந்தனர். நாந்தேரில், கலகம் ஒடுக்கும் பொலிஸ் அணிவகுப்பைத் தாக்கினர், பாரியளவில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை இரண்டு குழுக்களாக உடைத்தனர்.

பாரீசில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரியான லோரன்ட் WSWS க்குக் கூறுகையில், இது அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான நேரம்: “மக்ரோன் நிதியாளர்களால் நிறுவப்பட்டார், சமீபத்திய தசாப்தங்களில் பல ஜனாதிபதிகளைப் போலவே அவரும் வேறு வழியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் மக்ரோனைத் தூக்கி எறிந்து அவர் அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்காக நிற்கிறேன்,” என்றார். அவர் "ஒரு புரட்சிக்கு, ஆனால் ஓர் அமைதியான புரட்சிக்கு" அழைப்பு விடுத்தார்.


லோரன்ட் மற்றும் லோரன்ஸ்

போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் வெளியில் எடுப்பதற்கு சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பது பற்றிய முன்னோக்கை WSWS செய்தியாளர்கள் எழுப்பியதும், அவர் பதிலளித்தார்: “எங்கள் தொழிற்சங்கங்களில் சில தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் கூற மாட்டேன், ஆனால் அவர்கள் அவர்களின் தொழிற்சங்கத்திற்காகவும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் பணியாற்றுகிறார்கள். சிலர் எங்களை ஆட்சி செய்பவர்களுடன் மிகவும் பிரயோஜனமின்றி பேரம்பேசுகிறார்கள்,” என்றார்.

பிரான்சில் பரந்த பொலிஸ் வன்முறை மீதான அவர் கோபத்தையும் லோரன்ட் வலியுறுத்தினார்: “போராட்டக்காரர்கள் பொருட்களை உடைக்கும் வரையில் அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். எங்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன, நாங்கள் பிடித்துத் தள்ளப்பட்டோம், நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம், நாங்கள் ஏளனப்படுத்தப்பட்டோம், எங்கள் பாதையில் செல்வதிலிருந்து நாங்கள் தடுக்கப்பட்டோம். உண்மையில் இன்று பொலிஸ் ஒடுக்குமுறை என்பது என்ன என்ற உணர்வை பெறுவது உண்மையிலேயே மனதை உறைய வைக்கிறது. ஆர்ப்பாட்டங்களுக்கு வராதவர்களையும், கலந்து கொள்ளாதவர்களையும் ஆனால் வெறுமனே பொலிஸ் போராட்டக்காரர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் வரவிருக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ள நான் அழைப்பு விடுக்கிறேன்... அங்கே காயமடைந்திருக்கிறார்கள், கண்களை இழந்திருக்கிறார்கள், கரங்கள் இழந்திருக்கிறார்கள், உயிரிழந்திருக்கிறார்கள். பிரான்ஸ் 2019 இல் தான் இருக்கிறதா? என்று ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஹாங்காங் போராட்டங்கள் உட்பட உலகெங்கிலுமான பாரிய போராட்டங்களுக்கும் லோரன்ட் அவரின் ஆதரவை வலியுறுத்தினார். அவர் கூறினார், “நிதி தான் அனைத்தையும் ஆள்கிறது, இப்போது அதை மாற்றுவதற்கான நேரமிது,” என்றார்.

போராட்டக்காரர்களின் இன்னொரு பகுதியினர்

மார்சைய்யில், மருத்துவமனைகளில் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூ பெற்றுள்ள டானியல் வலியுறுத்துகையில், மக்ரோனுடனான தொழிற்சங்க பேரம்பேசல்களில் அவருக்கு முற்றிலும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். அரசாங்கம் "அவர்கள் திட்டமிட்ட ஒரு சில முன்மொழிவுகளில் விட்டுக் கொடுக்க நினைத்திருப்பதை முன்கூட்டியே விட்டுக் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் போராட்டங்கள் எவ்வாறு திரும்புகின்றன என்று பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாற்றக்கூடிய சில விடயங்களும், அடிப்படையான விடயங்களாக இருக்காது. நான் தொழிற்சங்கங்களுடன், அதுவும் குறிப்பாக (மக்ரோனின் பெரும்பாலான முன்மொழியப்பட்ட வெட்டுகளை ஆதரிக்கும் பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பான) CFDT உடன் உடன்படவில்லை,” என்றார்.

மக்ரோனுடன் "அங்கே எந்த பேரம்பேசல்களும் இருக்க முடியாது, நாங்கள் அந்த நிலையை கடந்து விட்டோம் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். அவர் தொடர்ந்து கூறினார்: “இந்த சீர்திருத்தமும், அதன் 'புள்ளிகள் அடிப்படையிலான' முறையும் பேரழிவுகரமானது. அது மிகவும் உறுதியற்றது, நாங்கள் எவ்வாறு ஏமாற்றப்படுவோம் என்பது குறித்து எங்களில் ஒருவருக்கும் எதுவும் தெரியாது.” சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களைக் குறித்து அவர் கூறினார்: “இது உலகின் ஒவ்வொரு மூலையிலும் வெடித்து வருகிறது, அது மிகவும் நல்லது தான்... நாம் இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையையும் தூக்கியெறிய வேண்டும்,” என்றார்.

CFDT தலைவர் லோரோன்ட் பேர்ஜியே அவசர அவசரமாக வெளியேறுவதற்கு முன் 30 நிமிடங்கள் மட்டுமே பாரீஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். பத்திரிகைகள் இதை, ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான 1995 வேலைநிறுத்தங்களுடன் ஒப்பிட்டன, அப்போது வெட்டுக்களை CFDT தலைவி நிக்கோல் நோத்தா (Nicole Notat) ஆதரித்ததையிட்டு ஆத்திரமடைந்த வேலைநிறுத்தக்காரர்கள் அவரின் காரைத் தலைகீழாக உருட்டி விட்டனர்.

இத்தகைய சம்பவங்கள், தொழிற்சங்களில் இருந்தும் அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அவற்றின் குட்டி-முதலாளித்துவ அரசியல் பாதுகாவலர்களிடம் இருந்து தொழிலாளர்களைப் பிரிக்கும் வர்க்க இடைவெளியை உயர்த்திக் காட்டுகின்றன. வெட்டுக்களை விமர்சிக்கின்ற அதேவேளையில் அரசுடன் விரைவாக பேரம்பேசுகின்ற CGT உடன் அவர்கள் அணிசேர்ந்துள்ளனர். ஆனால் மக்ரோன் அரசாங்கத்தையும் மற்றும் சர்வதேச நிதியியல் பிரபுத்துவத்தையும் கீழிறக்குவதற்கு, தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான போராட்ட அமைப்புகளை — அதாவது வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும், மற்றும் தொழிலாள வர்க்கத்திடம் அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு ஒரு சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும்.


ஒரேலியான்

பாரீசில் ஒரு மாணவர் Aurélien உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், இந்த வேலைநிறுத்தம் "கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் நடந்த பல வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் உச்சக்கட்ட நிகழ்வாகும். மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கின்ற முழு சுதந்திர சந்தையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்... மக்கள் முற்றிலும் கோபத்தில் உள்ளனர், கடந்தாண்டு 'மஞ்சள் சீருடை' இயக்கம் மிகப்பெரும் விளைவுகளைக் கொண்டிருந்தது, இந்த வேலைநிறுத்தங்கள் அதன் தர்க்கரீதியிலான விளைவாக உள்ளன.”

மார்சைய்யில் இலாப நோக்கமற்ற ஒரு தன்னார்வத் துறையில் பணிபுரியும் டெல்பின் WSWS க்கு கூறுகையில் அவரது தொழில் வாழ்க்கை "குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,” என்றார். அவர் தொடர்ந்து கூறினார்: “நாங்கள் பல பெண் பணியாளர்களுடன் குறுகிய கால ஒப்பந்தங்களை கொண்டுள்ளோம், அவர்கள் இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தினால் பாதிக்கப்பட்டு மறக்கப்பட்டவர்களாவர். நாங்கள் அரசின் மானியங்களைச் சார்ந்துள்ளோம், அது திட்டமிட்டு அவற்றை குறைத்து வருகிறது. இந்த வெட்டு, பொறுத்து கொண்டிருந்த அனைத்தையும் உடைத்து விட்டிருக்கிறது,” என்றார்.

ஓய்வூதிய மட்டங்கள் தொடர்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை அந்த வெட்டுக்கள் குறைக்கும் என்பதால் அந்த வெட்டுக்களை ஆதரிக்குமாறு மக்ரோனின் அழைப்பைக் குறித்து வினவிய போது, டெல்பின் கூறினார்: “அது உண்மையில்லை. பலவந்தமான பகுதி நேர வேலை அல்லது பிரசவ கால விடுப்பால் விடுபட்ட தொழில்வாழ்வைக் கையாள அதில் ஒன்றுமே இல்லை.” அவரது சீர்திருத்தம் மாதத்திற்கு குறைந்தபட்சம் 1,000 யூரோ என்ற ஓய்வூதிய வரம்புக்கு உத்தரவாதம் அளிக்கும் என்ற மக்ரோனின் வாக்குறுதி "ஒரு முன்பணம் அல்ல,” என்று கூறிய அவர், தொடர்ந்து கூறுகையில், “அந்த வரம்பு வறுமை கோட்டுக்கு மேலாக கூட இல்லை,” என்றார்.