ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US propaganda machine justifies the assassination of Qassem Suleimani

அமெரிக்க பிரச்சார எந்திரம் காசிம் சுலைமானியின் படுகொலையை நியாயப்படுத்துகிறது

Andre Damon and David North
7 January 2020

காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைக் கண்டித்து, கடந்த இரண்டு நாட்களாக, மில்லியன் கணக்கானவர்கள் ஈரான் மற்றும் ஈராக் எங்கிலுமான நகரங்களில் அணிவகுத்துள்ளனர். இந்தப் படுகொலை மீதான விடையிறுப்பும், ஒரு சட்டவிரோத போர் நடவடிக்கையை சட்டபூர்வமாக்க ட்ரம்ப் நிர்வாகம், ஜனநாயகக் கட்சி மற்றும் ஊடகங்களால் கட்டமைக்கப்படும் சொல்லாடலும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன.

அந்த படுகொலை நடந்து ஒரு சில மணிநேரங்களுக்குள்ளேயே, பரந்த அமெரிக்க பிரச்சார எந்திரம் அதன் ஒருபோதும் முடிவுறாத "கெட்ட மனிதர்" அரசியல் தத்துவத்தின் சமீபத்திய இட்டுக்கட்டை பெரும் மிகைப்படுத்தலுடன் பரப்பத் தொடங்கியது. ஆனால் மறுபுறம் அமெரிக்க-எதிர்ப்பு எனும் இராட்சஷனும் அவனின் வெகுமதிகளைப் பெற்றிருந்தான்.

ட்ரம்பின் முட்டாள்தனமான மற்றும் வக்கிரமான உளக்களிப்புகள் தவிர்க்கவியலாத ஒத்துப்பாடலைக் கண்டுள்ளன. தொலைக்காட்சி வலையமைப்புகளில் நூற்றுக் கணக்கான முறை எதிரொலிக்கப்பட்ட அறிக்கைகளில், CBS இன் "தேசத்தைச் சந்திப்போம்" (Face the Nation) நிகழ்ச்சியின் நிகழ்ச்சியாளர் மார்கரெட் பிரென்னென் அறிவிக்கையில், “காசிம் சுலைமானி பாரிய படுகொலைகளை வழிநடத்தினார்,” என்றும், “அப்பிராந்தியதில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றார்" என்றும் அறிவித்தார். இந்த கருத்து, ஜனநாயக கட்சியில் உள்ள ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் என்று கருதப்படுபவர்கள் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் விடையிறுப்புகளுடன் ஒருங்கிணைந்திருந்தது.


அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈராக்கில் வெள்ளியன்று கொல்லப்பட்ட ஈரானிய தளபதி காசிம் சுலைமானி மற்றும் அவர் தோழர்களின் இறுதி ஊர்வலகத்தில் அஞ்சலி செலுத்த, ஜனவரி 6, 2020, திங்களன்று ஈரானின் தெஹ்ரானில் கலந்து கொண்டவர்கள். (படம்: அசோசியேடெட் பிரஸ் வழியாக ஈரானிய உயர்மட்ட தலைவர் அலுவலகம்)

ஜனாதிபதி வேட்பாளர் எலிசபெத் வாரென் ஒத்தூதினார், “சுலைமானி, ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பான ஒரு படுகொலையாளர்.” முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடென், “அமெரிக்க துருப்புகள் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் ஆயிரக் கணக்கான அப்பாவிகளுக்கு எதிரான அவரின் குற்றங்களுக்காக அவர் நீதிக்குக் கொண்டு வரப்பட தகுதி உடையவரே,” என்பதைச் சேர்த்துக் கொண்டார்.

இந்நடவடிக்கையின் தந்திரோபாய விளைவுகள் குறித்தும், காங்கிரஸ் சபை தலைவர்களிடம் உரிய ஒப்புதலுக்காக ட்ரம்ப் கலந்தாலோசிக்க தவறியதன் மீதும் மற்றும் அமெரிக்கா ஏதேனும் விதமான உடனடி ஆபத்தை எதிர்கொண்டிருப்பதற்கான ஆதாரத்தை வழங்காததன் மீதும் ஆட்சேபனைகளும் கவலைகளும் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும், சுலைமானியை இலக்கில் வைத்ததற்கு கண்டனம் எதுவும் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அந்த படுகொலையின் ஆணவமான குற்றத்தன்மைக்கு எதிராக அங்கே எந்தப் போராட்டமும் இல்லை.

அந்த படுகொலையின் அடியிலுள்ள தார்மீக சட்டபூர்வத்தன்மை தான் அரசியல் சொல்லாடலின் முக்கிய அம்சமாக உள்ளது, இது சவால் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியினது வாழ்வின் எவ்விதமான நேர்மையையும் முன்வைக்க வேண்டுமானால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மக்களின் நலன்களைப் பாழாக்குவதில் அமெரிக்காவும் அடுத்தடுத்து வந்த ஜனாதிபதி நிர்வாகங்களும் அரசியல்ரீதியில் வகித்த குற்றகரமான மற்றும் தார்மீகரீதியில் வகித்த அருவருக்கத்தக்க பாத்திரத்தை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதனால் ஆகும்.

முதலில் சில அடிப்படை உண்மைகள். காசிம் சுலைமானி ஒரு பயங்கரவாதியோ அல்லது ஒரு படுகொலையாளரோ கிடையாது. ஒரு மூத்த இராணுவ அதிகாரியும் ஓர் அரசியல் தலைவருமான அவர் 82 மில்லியன் மக்களினது ஓர் அரசின் இராஜாங்க பிரதிநிதியாக ஓர் உத்தியோகபூர்வ தகுதிப்பாட்டுடன் ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.

அவர் ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தைகளை விவாதிப்பதற்காக ஈராக்கிய பிரதம மந்திரியைச் சந்திக்க அப்போதுதான் ஈராக் வந்திறங்கி இருந்தார். “சுலைமானி கொல்லப்பட்ட அன்றைய காலை அவரை நான் சந்திப்பதாக இருந்தேன், அவர் எனக்கு ஒரு சேதியை வழங்க வந்திருந்தார்,” என்று ஞாயிறன்று ஈராக்கிய பிரதம மந்திரி அடில் அப்துல்-மஹ்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுலைமானி கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கவில்லை என்ற பிம்பத்தை வழங்கும் விதத்தில், அப்துல்-மஹ்தியின் இராஜாங்க முயற்சிகளுக்காக ட்ரம்ப் அவருக்கு தனிப்பட்டரீதியில் நன்றி தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். இருப்பினும், ஒரு சில மணி நேரங்களுக்குள், ஈரானிய தளபதி கொல்லப்பட்டார், அதை அப்துல்-மஹ்தி படுமோசமான ஈராக்கிய இறையாண்மை மீறல் என்று கண்டித்தார்.

சுலைமானி மார்ச் 11, 1957 இல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராவார். அரசிடம் வாங்கிய கடனைக் கட்ட தவறியதற்காக அவரது தந்தை திவால்நிலைமையையும் சிறைவாசத்தையும் முகங்கொடுத்திருந்த நிலையில், சுலைமானி அவர் குடும்பத்தின் கடன்களை அடைக்க உதவுவதற்காக 13 வயதிலேயே கட்டிட வேலைக்குச் சென்றார்.

சுலைமானி பிறப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்னர், 1953 இல், மக்களால் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானிய அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்து, இதுவரையில் மத்திய உளவுத்துறை முகமை (CIA) ஒழுங்கமைத்த மிகவும் இழிவார்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளில் ஒன்றில், மொஹம்மத் ரெசா பஹ்லாவியின் சர்வாதிகாரத்தை நிறுவியது. தேசியவாத தலைவர் மொஹமெட் மொசாடெக் (Mohammed Mossadegh) ஐ பதவியிலிருந்து நீக்கிய பின்னர், அமெரிக்கா பெருந்திரளான வெகுஜனங்கள் பின்தொடர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு (துடெஹ் கட்சிக்கு) எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளைத் திணித்து தூண்டிவிட்டது.

எண்ணுக்கணக்கற்ற ஆயிரக் கணக்கான ஈரானிய தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் சிறைகளிலும் மற்றும் SAVAK (ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவை) இரகசிய பொலிசின் சித்திரவதை கூடங்களிலும் அடைக்கப்பட்டனர்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பினது (FAS) விபரங்களின்படி, “ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்வதிலும், கொல்வதிலும்" SAVAK உடந்தையாய் இருந்தது. FAS இன் விபரங்களின்படி, “மின்சார அதிர்ச்சிக்கு உட்படுத்துவது, சாட்டையால் அடிப்பது, தாக்குவது, அடிவயிற்றில் உடைந்த கண்ணாடிகளைச் சொருகுவது மற்றும் கொதிநீரை ஊற்றுவது, ஆணுறுப்பின் விதைப்பைகளில் கனமான எடைகளைக் கட்டுவது, பற்கள் மற்றும் நகங்களைப் பிடுங்குவது" ஆகியவை அதன் நடவடிக்கைகளில் உள்ளடங்கி இருந்தன.

இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து, ஈரான், அமெரிக்காவின் "பாரசீக வளைகுடாவின் ஆயுதந்தாங்கிய காவல்படையாக" சேவையாற்றியது. “நிக்சன் கோட்பாடு" என்றழைக்கப்பட்டதன் கீழ், அமெரிக்கா, ஷா ஆட்சிக்குப் பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்களைப் பாய்ச்சியது. ஷாவின் ஆட்சி, சவூதி அரேபியாவுடன் சேர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தின் "இரண்டு தூண்களில்" ஒன்றாக பார்க்கப்பட்டது. 1970 இல் 103.6 மில்லியன் டாலராக இருந்த ஈரானுக்கான அமெரிக்கா ஆயுத வினியோகங்கள் 1972 இல் 552.7 மில்லியனாக அதிகரித்தது. ஷாவின் பயங்கர ஆட்சிமுறையை அசைக்க முடியாதென அமெரிக்க நம்பிக்கை கொண்டிருந்தது.

டிசம்பர் 1977 இல், ஜனாதிபதி ஜிம்மி கார்டர் பின்வரும் வார்த்தைகளுடன் ஷாவைத் தனிப்பட்டரீதியில் பாராட்டினார்: “உலகின் மிகவும் பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஒன்றில், ஈரான் ஸ்திரப்பாட்டின் தீவாக விளங்குகிறது,” என்றார்.

இந்த ஈரானில் தான் சுலைமானி வளர்ந்து பெரியவரானார்.

ஆனால் 1978 இன் போக்கில், அந்நாடு எங்கிலும் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கம் எழுந்தது. அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்டு, பாரிய படுகொலைகளைக் கொண்டு அதிகாரத்தில் தங்கியிருப்பதற்கான ஷாவின் முயற்சி, தோல்வி அடைந்தது. குறிப்பாக ஈரானிய பொருளாதாரத்தின் முக்கிய எண்ணெய் துறைகளை முடக்கிய வேலைநிறுத்தங்கள் மூலமாக தொழிலாள வர்க்கம், ஷாவின் ஆட்சியைக் கீழிறக்குவதில் முக்கிய பாத்திரம் வகித்தது.

ஸ்ராலினிச துடெஹ் கட்சியின் காட்டிக்கொடுப்புகளின் காரணமாக, புரட்சியின் தலைமை அயெத்துல்லா ருஹொல்லாஹ் காமெனியின் கீழ் மதகுருமார் தேசியவாதிகளின் கரங்களுக்குச் சென்றது. ஆனால் அந்த புரட்சி ஈரான் மீதான அமெரிக்காவின் நவ-காலனித்துவ ஒடுக்குமுறை மீதான வெறுப்பால் எரியூட்டப்பட்டிருந்தது என்பதில் எந்த கேள்வியும் இல்லை. ஷா தூக்கியெறியப்பட்டு, பெப்ரவரி 11, 1979 இல் அயெத்துல்லா காமெனி அதிகாரம் ஏற்றதைத் தொடர்ந்து, 22 வயது சுலைமானி புரட்சிகரப் படையில் இணைந்தார்.

செப்டம்பர் 1980 இல் அமெரிக்கா, தன்னை சதாம் உசேன் ஆட்சியுடன் கூட்டு சேர்த்துக் கொண்டு, ஈரானைத் தாக்க ஈராக்கை ஊக்குவித்தது, இது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற நாசகரமான எட்டாண்டு போரை உருவாக்கியது. பத்தாயிரக் கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள், அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நிலைநிறுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களை ஈராக் பரந்தளவில் பயன்படுத்தியதும் அதில் உள்ளடங்கும். அந்த போரின் போதுதான் சுலைமானி ஒரு முக்கிய இராணுவ பிரமுகராக மேலெழுந்தார்.

ஈராக்கின் தோல்வியைத் தடுக்க தீர்மானமாக இருந்த ரீகன் நிர்வாகம் ஈராக்கிற்கு ஆயுதங்களையும், ஆயுத தளவாட உதவி மற்றும் முக்கிய உளவுத்தகவல்களையும் வழங்கியது. ஆனால் ஈரானுக்கு எதிரான அதன் மிகவும் ஈனத்தனமான தலையீடு ஜூலை 3, 1988 இல் வந்தது. அமெரிக்க கப்பல்படை, வேண்டுமென்றே பயண விமானம் ஒன்றை இலக்கில் வைத்து, ஈரானின் 655 ரக விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த 66 குழந்தைகள் உட்பட மொத்தம் 290 நபர்களும் கொல்லப்பட்டனர். இதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்த போர் முடிவுக்கு வந்தது.

காசிம் சுலைமானியின் அரசியல் முதலாளித்துவ தேசியவாதமாகும். ஆனால் ஓர் இராணுவ அதிகாரியாக அவர், வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார். ஓர் இராணுவ அதிகாரியாக அவர் பொறுப்புகளை மேற்கொள்வதில் சுலைமானியின் "கடுமையை", அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து வந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதிலும் மற்றும் போரில் பிரதிபலித்த அவரின் அனுபவங்களிலும் ஒருவர் அனுமானிக்கலாம்.

சுலைமானியை ஒரு படுகொலையாளராக கண்டிக்கும் இதே ஊடக ஊதுகுழல்கள், நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட கிளிண்டன் நிர்வாகத்தினது மூர்க்கமான தடையாணைகள் உள்ளடங்கலாக, அதன் ஆரம்ப 1991 ஈராக் படையெடுப்பில் இருந்து அமெரிக்கா நடத்திய குற்றங்கள் குறித்து மவுனமாக உள்ளன.

2003 இல் ஈராக் மீதான இரண்டாவது படையெடுப்பைத் தொடர்ந்து, அபு கிரைப் சிறையில் வக்கிரமான சித்திரவதை மற்றும் கைதிகளின் கற்பழிப்பில் இருந்து, ஃபல்லூஜாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வரையில், 2017 இல் மொசூலில் ISIS-தடுப்பு நடவடிக்கை என்றழைக்கப்பட்டதில் வெகுஜனங்களைப் படுகொலை செய்தது வரையில், இதில் ஒரு காயமடைந்த பதின்ம வயது இளைஞரை அடித்து கொன்று ஒரு கொல்லப்பட்ட மிருகத்தின் அருகில் நிற்பதை போல அவர் சடலத்துடன் காட்சி கொடுத்த கப்பல்படை அதிகாரி எட்வார்ட் கல்லாஹரின் (Edward Gallagher) மிருகத்தனமான வன்முறையும் இதில் உள்ளடங்கும் என்ற நிலையில், அங்கே எண்ணற்ற போர் குற்றங்களில் அமெரிக்கா உடந்தையாய் இருந்துள்ளது.

2017 இல், ட்ரம்ப் சர்வசாதாரணமாக, “நம்மிடம் நிறைய படுகொலையாளர்கள் இருக்கிறார்கள். என்ன, நம் நாடு மிகவும் அப்பாவித்தனமானது என்றா நினைக்கிறீர்கள்?” என்று குறிப்பிட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர், “பொய்யான & இப்போது வரையில் நிரூபிக்கப்படாத அனுமானம், பேரழிவு ஆயுதங்கள்" என்பதன் கீழ் அமெரிக்கா தொடங்கிய மத்திய கிழக்கு போர்களின் விளைவாக "மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பதாக" ட்ரம்ப் அக்டோபர் 2019 இல் ட்வீட் செய்தார்.

ஆனால் அமெரிக்க ஊடகங்களைப் பொறுத்த வரையில், அமெரிக்க இராணுவத்தின் வன்முறை நடவடிக்கைகள் கொண்டாடப்பட வேண்டியவையாக உள்ளன, அதேவேளையில் ஃபல்லூஜாவின் கொலைகாரர் "வெறியர்" (Mad Dog) என்று அறியப்படும் ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டீஸை அமெரிக்க ஊடகங்கள் மதித்து மரியாதை செலுத்தியதுடன், மக்களை "கொல்வது குதூகலமாக உள்ளது" என்ற அவரின் கருத்தை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டன.

ட்ரம்பின் படுகொலை நடவடிக்கைக்கு ஊடகங்கள் களம் அமைத்து உதவின. நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இன்னும் பிரதான அமெரிக்க பத்திரிகைகளும் மீண்டும் மீண்டும் விசாரணையற்ற படுகொலைகளை நியாயப்படுத்தின.

ருத்யார்ட் கிப்லிங்கின் ஒரு கவிதை உண்டு, அது பின்வரும் பிரபலமான வரிகளுடன் நிறைவடைகிறது: “படுகொலையாளர்கள் நம்மை ஆட்சி செய்யவில்லை, மாறாக அவர்களின் நண்பர்களே ஆட்சி செய்கின்றனர்.”

அக்கவிஞர் இன்று உயிருடன் இருந்திருந்தால், தற்போதைய யதார்த்தத்திற்கு ஏற்ப இறுதி வரிகளில் மாற்றம் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பார்:

“அமெரிக்க மக்களைப் படுகொலையாளர்கள் ஆட்சி செய்கிறார்கள், இவர்களின் படுகொலைகளுக்கு அவர்களின் நண்பர்கள் ஒப்புதல் அளிக்கிறார்கள்.”