ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Growing fears of global debt crisis

உலகளாவிய கடன் நெருக்கடி மீது அதிகரிக்கும் அச்சம்

By Nick Beams
22 January 2020

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார கருத்தரங்கில் உலகளாவிய செல்வந்த தட்டுக்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், மத்திய வங்கிகளின் மலிவு பணத்தால் எரியூட்டப்பட்ட உலகளாவிய கடன், வெடிப்பதற்கான மணித்துளிகள் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வெடிகுண்டின் திரியைப் பற்ற வைத்து வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.

“அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்களும், முதலீடு குறைந்து வருவதும், பலவீனமான நம்பிக்கை மற்றும் உயர் கடன் அபாயமும் உலக பொருளாதாரத்தின் ஒரு நீடித்த வளர்ச்சிக் குறைவின் அபாயத்தைக் கொண்டுள்ளன,” என்று உலக பொருளாதார கருத்தரங்கின் வருடாந்தர உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை குறிப்பிட்டது.

2019 இன் முதல் மூன்று காலாண்டுகளில் சுமார் 9 ட்ரில்லியன் டாலர் அதிகரித்த பின்னர் வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய கடன் அனைத்து காலங்களிலுமான அதிகபட்ச அளவாக 257 ட்ரில்லியன் டாலரை எட்டும் பாதையில் சென்று கொண்டிருப்பதாக இம்மாத ஆரம்பத்தில் சர்வதேச நிதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.


செவ்வாய்கிழமை, ஏப்ரல் 17, 2018, நியூ யோர்க்கின் மத்திய பூங்காவையே விஞ்சி விடும் அளவில் புதிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன (படம்: அசோசியேடெட் பிரஸ், மார்க் லெனிஹன்)

7.7 பில்லியன் உலக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் மொத்த கடன் இப்போது 32,500 டாலர் என்ற வீதத்தில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 320 சதவீதத்தில் நிற்கிறது. பிரதான பொருளாதாரங்களின் மொத்தக் கடன் 180 ட்ரில்லியன் டாலராக உள்ளது, இது அவற்றின் நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 383 சதவீதமாகும்.

மொத்த அரசு கடன் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்ததில் இருந்து 37 ட்ரில்லியன் டாலர் அதிகரித்து 65 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அரசு கடன் விகிதத்திற்குமான விகிதத்தில் எந்த காலத்தையும் விட அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் உச்சத்தில் உள்ளன. நிதிசாரா பெருநிறுவன கடன் கடந்தாண்டு 72 ட்ரில்லியன் டாலருக்கும் கூடுதலாக அதிகரித்து, இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 92 சதவீதமாக சாதனையளவுக்கு உச்சத்தில் உள்ளது. குடும்பங்களின் கடன் 46 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளது.

சீனாவில் பொருளாதாரம் மெதுவாகி வருகின்ற நிலையில் கடன் வளர்ச்சியோ மீண்டும் அதிகரித்து வருவதாக சர்வதேச நிதி ஆணையம் (IIF) குறிப்பிட்டது. “வினியோகிப்பிற்கான பெரும் நகர்வின் போது 2017-18 இல் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் குறைவைத் தொடர்ந்து, சீனாவில் கடன் திரட்சி, குறிப்பாக நிதிசாரா பெருநிறுவன துறையில், மீண்டும் வேகமெடுத்தது,” என்றது குறிப்பிட்டது.

மொத்த சீனக் கடன் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 310 சதவீதத்திற்கு நெருக்கத்தில் உள்ளது, இது எழுச்சி அடைந்து வரும் சந்தைகளிலேயே மிக அதிகமானவற்றில் ஒன்றாகும்.

IIF அறிக்கையானது, உலக வங்கியின் இதேபோன்ற கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில், 2010 க்கு பின்னர் இருந்தே அங்கே நான்காவது "உலகளாவிய கடன் அலை" இருந்து வந்தது, அது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடன் வரலாற்றிலேயே மிக அதிக மட்டத்திற்கு 55 ட்ரில்லியன் டாலர் "உச்சத்திற்கு" ஒன்றுதிரள இட்டுச் சென்றதாக அது குறிப்பிட்டது. முந்தைய மூன்று கடன் அலைகள் நெருக்கடியில் போய் முடிந்ததையும் அது குறிப்பிட்டது—1980 களில் இலத்தீன் அமெரிக்க நெருக்கடி, 1990 களின் இறுதியில் ஆசிய நிதிய நெருக்கடி மற்றும் 2008-2009 இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடி.

கடன்களின் அதிகரிப்பானது, உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பாக உலகின் பிரதான மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சிய பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கை (quantitative easing) மற்றும் வட்டி விகிதங்களைச் சாதனையளவுக்கு குறைவாக குறைத்தமை ஆகியவற்றின் விளைபொருளாகும். பங்கு விலைகள் சாதனை உயரங்களை எட்டியுள்ள நிலையில், அவ்விதத்தில் அது 2008 ஐ விட சாத்தியமானளவுக்கு இன்னும் படுமோசமான மற்றொரு பொறிவுக்கு நிலைமைகளை உருவாக்கி உள்ள நிலையில், நிதியியல் சந்தைகளில் மற்றொரு குமிழியை உருவாக்கியதே அத்தகைய முறைமைகளின் பிரதான விளைவாக இருந்துள்ளது.

அதுபோன்றவொரு நெருக்கடியின் அறிகுறிகள் ஏற்கனவே வெளிப்படையாக உள்ளன. திங்களன்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரை எச்சரிக்கையில், “உலகில் வேகமாக வீங்கி பெருகி வரும் பெருநிறுவன கடன் சந்தை அதிகரித்து வருவது நிகழ காத்திருக்கும் ஒரு விபத்தாக உள்ளது,” என்று ஒரு பிரதான தனியார் முதலீட்டு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தை மேற்கோளிட்டு குறிப்பிட்டது. பணம் வேகமாக வெளியில் இழுக்கப்படும் போது அங்கே திடீர் மாறுதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக Gramercy நிதி மேலாண்மை நிறுவனம் எழுதியது.

“'பண பரிவர்த்தனை சந்தைகள்' அவசியத்திற்கேற்ப பரிவர்த்தனையில் இருக்கவில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்,” என்று தலைமை முதலீட்டு அதிகாரி Robert Koenigsberge, அந்நிறுவனத்தின் மூத்த ஆலோசகரும் பிரபல நிதி பகுப்பாய்வாளருமான Mohamed El-Erian உடன் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில் எழுதினார். “இந்த 'துல்லியமான மாறுதல் புயல்' நிகழ காத்துக் கொண்டிருக்கிறது.”

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி சுமார் 11 ட்ரில்லியன் டாலர் பத்திரங்கள் மீதிருக்கும் எதிர்மறை வரவுகளுக்கு இட்டுச் சென்றுள்ள இந்த வட்டி விகித குறைப்புகள், அதிக இலாபத்தைத் தேடுவதில் அதிக அபாயகரமான முதலீடுகளுக்குள் மாற இட்டுச் சென்றுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, இதனொரு விளைவாக, எழுச்சி அடைந்து வரும் சந்தைகளது பெருநிறுவன பத்திர சந்தை கடந்த தசாப்தத்தில் ஏறத்தாழ நான்கு மடங்காக 2.3 ட்ரில்லியன் டாலருக்கு விரிவடைந்துள்ளதுடன், அதிக இலாபமளிக்கும் துறையில் ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

அப்பத்திரிகைக்கு Koenigsberger கூறுகையில், இந்த அமைப்புமுறை பரீட்சிக்கப்படும் போது, “அது தோல்வியடையும் என்பதை எதிர்பார்க்க காரணம் உள்ளது,” என்றார். ஒரு பரீட்சை, சாத்தியமான விதத்தில் ஒரு நாட்டில் ஒரு பின்னடைவையோ அல்லது ஒரு நெருக்கடியையோ தூண்டிவிட்டு, வேகமான நிதியியல் ஸ்திரமின்மையினது அதிகரிப்பின் வடிவில் வரக்கூடும்.

அமெரிக்க டாலர் போன்ற ஸ்தூல-செலாவணியினது (hard currency) மேலாதிக்கத்தின் கீழ் எழுச்சி அடைந்து வரும் சந்தைகளது கடனின் அதிகரிப்பு என்பது சாத்தியமான மற்றொரு அபாயமாகும், எழுச்சி அடைந்து வரும் சந்தையின் உள்நாட்டு செலாவணியின் மதிப்பீடு வேகமாக மாறினால் அதிகரித்தளவில் திரும்ப செலுத்துவது சிரமமாக ஆகிவிடும். ஸ்தூல செலாவணி கடன் கடந்தாண்டு மூன்றாம் காலாண்டில் 8.3 ட்ரில்லியன் டாலரை எட்டியது, இது கடந்த தசாப்தத்தில் 4 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.

ஒரு கடன் நெருக்கடிக்கான சாத்தியக்கூறு உலக பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக் குறைவால் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார கருத்தரங்குடன் பொருந்தும் விதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட அதன் சமீபத்திய மேம்படுத்தி விபரங்கள், 2020 இக்கான வளர்ச்சி மீதான அதன் முன்கணிப்பை 3.4 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதத்திற்கு வெட்டியதுடன், அடுத்த ஆண்டுக்கான முன்கணிப்பையும் 3.6 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதத்திற்குக் குறைத்தது. இந்த புள்ளிவிபரங்கள், 2008-2009 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் மிக மோசமான ஆண்டாக இருந்த 2019 இன் 2.9 சதவீதத்திற்கு வெறுமனே சற்றே அதிகமாக உள்ளன.

கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் அமெரிக்க பெடரலும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளும் வட்டி விகிதங்களை வெட்டாமல் இருந்திருந்தால் இந்த புள்ளவிபரங்கள் இன்னும் குறைவாக இருந்திருக்கும். கடந்தாண்டு 49 மத்திய வங்கிகள் செய்த 71 வட்டி விகித வெட்டுக்கள் "உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் மிகவும் ஒத்திசைந்த பணப் புழக்கமாக" இருந்தது, அவை இல்லையென்றால் "நாம் புள்ளிவிபரங்களைக் கொண்டாவது பின்னடைவு குறித்து பேசிக் கொண்டிருந்திருப்போம்,” என்று IMF இன் மேலாண்மை இயக்குனர் Kristalina Georgieva தெரிவித்தார்.

டாவோஸ் கூட்டம் தொடங்கிய போது வெளியிடப்பட்ட, PwC ஆல் நடத்தப்பட்ட, 83 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 1,600 தலைமை நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஒரு வருடாந்தர ஆய்வு, 2018 இல் வெறும் 5 சதவீதமாக இருந்த வளர்ச்சிக் குறைவு கடந்தாண்டின் 29 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 இல் அரைவாசிக்கும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுவதாக கண்டறிந்தது. கடந்த 11 ஆண்டுகளில் எந்த நேரத்திலும் இருந்ததை விட அவர்களின் நிறுவனங்கள் அதிக அழுத்தத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இத்தகைய அனைத்து கவலைகளையும் நேற்றைய டாவோஸ் கூட்டத்தில் அவரின் முக்கிய உரையில் கைவிட்டிருந்தார், அதேவேளையில் திடநம்பிக்கையுடன் இருப்பதற்கான நேரமிது என்று அறிவித்து, அவர் நிர்வாகத்தின் கொள்கைகளைச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார்.

“உலகம் ஒருபோதும் பார்த்திராத வகையில் அமெரிக்கா ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் உள்ளது என்று அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். அமெரிக்காவின் பொருளாதார திருப்பம் பிரமிக்கத்தக்கதாக உள்ளது. இதுவொரு உடலுழைப்புசார் தொழில்துறை வளர்ச்சி (blue-collar boom). அமெரிக்க கனவு முன்பு எப்போதையும் விட மிகப் பெரியதாக, மிகச் சிறந்ததாக, மிக பலமானதாக திரும்ப வந்துள்ளது,” என்றார்.

இந்த பொய்மூட்டை ஒவ்வொரு விதத்திலும் அம்பலப்படுகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தின் எந்தவொரு மீட்சியையும் விட மிகக் குறைவாக, வெறும் 2 சதவீதத்திற்குச் சற்று அதிகமாக வலம் வருகிறது. அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களை மேலுயர்த்துவதற்குப் பதிலாக, என்ன வளர்ச்சி நடந்து வருகிறதோ அது பெரிதும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குள் திரண்டு வருகிறது.

2017 இன் முடிவில் நிர்வாகம் தொடங்கிய பெரிதும் தம்பட்டம் அடிக்கப்பட்ட வரி வெட்டுக்கள் முதலீட்டை அதிகரிப்பதற்கோ நல்ல சம்பளத்திலான வேலைகளை அதிகரிப்பதற்கோ இட்டுச் செல்லவில்லை, மாறாக பங்குச் சந்தையை ஊக்குவிப்பதற்காக பங்குகளை வாங்கி விற்பதற்கு நிதியளிப்பதற்கே ஏறத்தாழ பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பெருநிறுவன கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 47 சதவீதத்திற்கு சமமாக அண்மித்து 10 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளதுடன், மிக பலவீனமான நிறுவனங்கள் அபாயகரமான நிதிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாலேயே பெரும்பாலான அதிகரிப்பை எட்டியுள்ளன. அமெரிக்கா "இன்னும் வெடிக்காத ஒரு வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளது, அந்த வெடிப்பை எது பற்ற வைக்கும் என்பது உண்மையில் எங்களுக்குத் தெரியவில்லை,” என்று IIF இன் கடன்துறை நிபுணர் Emre Tiftik அமெரிக்க கடன் அதிகரிப்பைக் குறித்து கடந்தாண்டே எச்சரிக்கை விருத்திருந்தார்.