ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose French unions’ attempts to strangle the struggle against Macron!

மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

Alex Lantier
29 January 2020

தொடர்ந்து கொண்டிருக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், கடந்த வாரம், பிரெஞ்சு இரயில்வே மற்றும் வெகுஜன போக்குவரத்து தொழிலாளர்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக டிசம்பர் 5 இல் தொடங்கிய ஒரு வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டனர். நிதிரீதியாக தீர்ந்துபோன தொழிலாளர்கள், மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சில் மிக நீண்டகாலம் தொடர்ந்து நடந்த அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். மக்ரோனுக்கு எதிராகவும் மற்றும் சர்வதேச அளவில் வங்கிகளின் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் கோபம் கட்டமைந்து வருகின்ற நிலையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த மூலோபாய அனுபவத்தின் இருப்புநிலை கணக்கை வரைவதற்கு இது சரியான நேரமாகும்.

தொடர்ந்து நடந்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு மத்தியில் ஆதரவை அணித்திரட்டி இருந்த அந்த வேலைநிறுத்தம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பலத்தை எடுத்துக்காட்டியது. அது பொருளாதார நடவடிக்கையைக் மந்தப்படுத்தி மற்றும் போக்குவரத்தை தொந்தரவுக்கு உள்ளாக்கி இருந்த போதினும், மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மக்ரோனுக்கு எதிரான அந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்தனர். அல்ஜீரியா, ஈராக் மற்றும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலுமான பாரிய வெகுஜன போராட்டங்கள், அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், முஸ்லீம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பத்து மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டங்கள் என உலகளாவிய வர்க்க போராட்ட மீளெழுச்சியின் பாகமாக அவர்கள் இருந்ததை பிரான்சின் வேலைநிறுத்தக்காரர்கள் அறிந்திருந்தார்கள்.

பிரான்சில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுகின்றனர்

ஒரு புரட்சிகர மனோநிலை உருவாகி வருகிறது. துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் வாகனத்துறை ஆலைகளில் வெளிநடப்புக்கான கோரிக்கைகள் பரவிய போது, பிரான்ஸ் எங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் போராட்டங்களில் "புரட்சி" மற்றும் “பொது வேலைநிறுத்தத்திற்கான" அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த இறுதி விளைவு, மக்ரோனுடன் தொழிற்சங்க பேரம்பேசல்கள் மூலமாக இந்த மோதலைத் தீர்க்க அழைப்பு விடுத்த அனைத்து போலி-இடது கட்சிகளையும் அம்பலப்படுத்துகிறது. ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பும் (CGT) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் (NPA) மற்றும் பின்நவீனத்துவ "இடது ஜனரஞ்சகவாத" ஜோன்-லூக் மெலோன்சோனும் "திட்டத்தை திரும்ப பெறுமாறு" மக்ரோனுக்கு முறையிட்ட ஒரு சிறிய கூட்டு முறையீட்டில் கையெழுத்திட்டனர். "ஓய்வூதிய வயதை உயர்த்தாமல் அனைவரையும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஒரு நியாயமான ஜனநாயக ஓய்வூதிய திட்டத்தின் மீது தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை" நடத்துமாறு அவர்கள் மக்ரோனிடம் மன்றாடினர்.

ஆனால் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கு பதிலாக, CGT உம் அதன் கூட்டாளிகளும் அந்த வேலைநிறுத்தத்தை நாசப்படுத்தி மக்ரோனை முன்நோக்கிச் செல்ல அனுமதித்தனர். தொழிற்சங்கங்கள், பிற தொழில்துறைகளில் பரந்த வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்காமல், இரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தியதுடன், ஆறு வாரகால இரயில்வே வேலைநிறுத்தங்களின் போது வேலைநிறுத்த சம்பளமாக வெறும் அற்ப யூரோக்களை மட்டுமே வழங்கின. பின்னர் மக்ரோன் இறுதி வரவு-செலவு திட்ட விபரங்களை தொழிற்சங்கங்களுடன் பேரம்பேசுவதற்கும் மற்றும் தேசிய நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றுவதற்கும் தயாரிப்பு செய்யும் விதத்தில், வெள்ளியன்று மந்திரி சபைக்கு அவரின் ஓய்வூதிய வெட்டு சட்டமசோதாவை அனுப்பினார்.

எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க, கலகம் ஒடுக்கும் பொலிஸை அனுப்புவதே மக்ரோனின் கொள்கையாக உள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக கவச வாகனங்கள், நீர்பீய்ச்சிகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்திய பொலிஸ், 2018 இல் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் தொடங்கியதற்குப் பின்னர் இருந்து 10,000 க்கும் அதிகமானவர்களைக் கைது செய்துள்ளது. பார்வையாளர்களாக உடனிருந்த Zineb Redouane மற்றும் Steve Caniço ஆகியோரைப் படுகொலை செய்தமை, அல்லது வயதான போராட்டக்கார பெண் ஜெனுவியேவ் லுகேய் மீது ஏறக்குறைய உயிராபத்தான தாக்குதல் நடத்தியமை போன்று—போராட்டக்காரர்கள் மீதான அட்டூழியங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவுகளை ஆணவத்துடன் பெருமைப்படுத்திய மக்ரோன், வங்கிகளுக்கான வேட்டை நாய்களாக பொலிஸைப் பயன்படுத்துகிறார்.

மக்ரோன் ஒர் வன்முறையான சர்வாதிகாரத்திற்குத் தலைமை தாங்குகிறார். இந்த அரசாங்கம் நிதி நிறுவனங்கள் மற்றும் 6 ட்ரில்லியன் மதிப்பிலான உலகளாவிய முதலீட்டு நிறுவனம் பிளாக்ராக் (BlackRock) உடன் சேர்ந்து அதன் ஓய்வூதிய வெட்டுக்களைத் திட்டமிட்டது. இந்நிறுவனங்கள், அரசு ஓய்வூதிய திட்டங்கள் உடைக்கப்பட்டு, 20, 30 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக குறைக்கப்பட்டால் அதிலிருந்து பெரும் புதையல் கிடைக்குமென எதிர்நோக்கி உள்ளன. காப்பீட்டு நிறுவனம் AXA செல்வந்த முதலீட்டாளர்களுக்கான சமீபத்திய விளம்பரத்தில் எழுதுகையில், அவர்கள் "அரசு ஓய்வூதிய மட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள நீண்டகால வீழ்ச்சியை" எதிர்நோக்கி தனியார் ஓய்வூதிய திட்டங்களின் பங்குகளை வாங்கலாம் என்று குறிப்பிட்டது. தொழிலாளர்கள் விடயத்தில், ஓய்வுக்குப் பின்னர் அவர்களை வறுமைக்கு உட்படுத்தவே அரசு உத்தேசித்துள்ளது.

"மஞ்சள் சீருடை" போராட்டத்தில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை விமர்சித்த ஒரு பாரீஸ் நபரிடம், “நாங்கள் ஒரே முகாமில் இல்லை, மேடம்,” என்று கூறிய பாரீஸ் பொலிஸ் அதிகாரி Didier Lallement இன் சுருக்கமான கருத்தில், தொழிலாளர்கள் மீதான இந்த பொலிஸ் அரசின் நனவுபூர்வமான வெறுப்பு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது.

சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான முக்கிய அரசியல் மற்றும் மூலோபாய படிப்பினைகளை இந்த வேலைநிறுத்தத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும். பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) எச்சரித்ததைப் போல, மக்ரோனுடனோ, அவரின் பின்னால் உள்ள சர்வதேச சந்தைகள் மற்றும் முதலாளித்துவ நிதியியல் பிரபுத்துவத்துடனோ பேரம்பேசுவதற்குத் தொழிலாளர்களுக்கு அங்கே ஒன்றுமில்லை. மக்களை வறுமைக்குட்படுத்தும் பொலிஸ் அரசின் திட்டங்களை நிறுத்துவதற்கு, மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவது அவசியமாகும். ஆனால் அதுபோன்றவொரு போராட்டத்தை தொடுப்பதில், அவருக்கு எதிராக தொழிலாளர்களின் மிகவும் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தினது சாமானிய தொழிலாளர்களின் அமைப்புகளாக நடவடிக்கைக் குழுக்களைக் (comités d’action) கட்டமைப்பது அவசியமாகும்.

தனிமைப்பட்டுள்ள மற்றும் வெறுக்கப்படும் மக்ரோன் அரசாங்கம் மக்களின் அதிகரித்து வரும் கோபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. மக்ரோனின் குடும்பம் கிளர்ச்சியின் பீதியில் வாழ்கிறது என கடந்த இலையுதிர் காலத்தில் செய்தியிதழ்கள் குறிப்பிட்ட பின்னர், இறுதியில் அவர் கடந்த வாரம் தான் பாரீசின் Bouffes du nord அரங்கில் பகிரங்கமாக பார்வைக்கு வரத் துணிந்தார். ஆனாலும் அவரது பிரசன்னம் போராட்டங்களைத் தூண்டியதும் அவரும் அவரது மனைவி பிரிஜிட்டும் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது.

தொழிலாளர்களிடம் எண்ணிக்கையின் பலம், தைரியம் அல்லது உறுதியான நடவடிக்கை என்பதில் அங்கே எந்த குறைவும் இல்லை, மாறாக அவர்களிடம் என்ன இல்லையென்றால் அமைப்பும், அரசியல் முன்னோக்கும், தலைமையும் ஆகும். தேசிய இரயில்வேயில் (SNCF) கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மீண்டும் பல தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் வெடித்த பின்னர், தொழிலாளர்கள் மீது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில்தான் தொழிற்சங்கங்கள் கடந்தாண்டு பிரெஞ்சு போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால் இந்த தந்திரோபாய மாற்றத்திற்கு மத்தியிலும், தொழிற்சங்க அதிகாரத்துவம் சிக்கன நடவடிக்கைகள் மீது பேரம்பேசுவதிலும் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதிலும் தொடர்ந்து மத்திய பாத்திரம் வகித்தன.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மக்ரோனுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போராட்டத்தை ஒழுங்கமைக்கவில்லை, மாறாக ஓய்வூதிய வெட்டுக்கள் மீது அவருடன் பேரம்பேசியதுடன் வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தின மற்றும் ஒரு பரந்த போராட்டத்தை எதிர்த்தன. இது தொழிற்சங்கங்களின் சடத்துவரீதியிலான நலன்களைப் பிரதிபலிக்கின்றன: பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் 4 பில்லியன் யூரோ வருடாந்தர வரவு-செலவு திட்டக்கணக்கில் 90 சதவீதம் அரசு மற்றும் வணிக குழுக்களால் நிதி வழங்கப்படுகிறது. அவற்றின் வர்க்கப் பாத்திரத்தை CGT-PCF இன் கிரேக்க கூட்டாளியான சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி”) அரசாங்கத்தின் முன்வரலாறு அம்பலப்படுத்துகிறது: கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு போராட்ட மேலெழுச்சிக்குப் பின்னர் 2015 இல் அது அதிகாரத்திற்கு வந்தது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான வெட்டுக்களை திணிப்பதை மட்டுமே செய்தது.

ஆளும் வர்க்கம் நீண்ட காலமாக எதை "இடது" என்று மோசடியாக சந்தைப்படுத்தியதோ அவற்றின் பிற்போக்குத்தனமான பாத்திரம் ஓர் எச்சரிக்கையாகும்: மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்கி, அதிகாரத்தைப் பிரான்சின் திவாலான அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு பிரிவுக்கோ அல்லது பொலிஸ்-அரசு எந்திரத்தின் எந்தவொரு கன்னைக்கோ தொழிலாளர்கள் கைமாற்றக் கூடாது. சமூகத்தின் செல்வ வளத்தை உருவாக்குகின்றதும், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்தை எதிர்த்து போராட தயார்நிலையை எடுத்துக்காட்டி உள்ள தொழிலாளர்களுக்கே அதிகாரம் கைமாற வேண்டும். அக்டோபர் 1917 புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டுக்கும் சற்று காலத்திற்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கான கேள்வி மீண்டும் மேலெழுந்துள்ளது.

ஒரு புதிய புரட்சிகர முன்னணிப்படையைக் கட்டமைப்பது என்பது இப்போது தீர்க்கமாக உள்ளது. ஏற்கனவே, “மஞ்சள் சீருடை" ஒன்றுகூடல்களின் ஒரு பரந்த வலையமைப்பு, வேலைநிறுத்த குழுக்கள், மற்றும் சமூக ஊடக போராட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்ரோனுக்கு எதிரான ஆரம்ப வேலைநிறுத்தங்களால் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர், ஏற்கனவே போராட்டத்திற்குள் இழுக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னால் முன்நிறுத்தப்படும் அரசியல் பணிகளைத் தெளிவுபடுத்த வேண்டியதும், மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும், பரந்த அடுக்குகளைப் போராட்டத்திற்குள் கொண்டு வருவதுமே செய்ய வேண்டிய பணியாக உள்ளது.

ஸ்ராலினிசம் மற்றும் போலி-இடதால் தொழிலாள வர்க்கத்தின் மீதான காட்டிக்கொடுப்புகள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பில் ஸ்தாபிக்கப்பட்ட, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியே (Parti de l’égalité socialiste), பிரான்சில் மார்க்சிச முன்னணிப் படையாக விளங்குகிறது. அதன் பாத்திரம், லெனின் அவரின் தொல்சீர் படைப்பான என்ன செய்ய வேண்டும்? என்பதில் எழுதியது போல, “பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய நனவையும் அதன் பணியைப் பற்றிய நனவையும் அதற்குள் நிரப்புவதாகும். வர்க்க போராட்டத்திலிருந்து நனவு தானாகவே எழுகிறது என்றால் அங்கே இதற்கான தேவையே இருக்காது.”

பிரான்சில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான இந்த இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களினது அலையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே என்கின்ற நிலையில், இது ஆரம்பம் தான். பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES), இந்த காலங்கடந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து அதை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்யும் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் இந்த உலகளாவிய மேலெழுச்சிக்கு ஏற்ப பிரான்சில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நோக்குநிலை கொள்ளச் செய்ய போராடும்.