ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව මාධ්‍යවේදීන්ට හා දේශපාලන විරුද්ධවාදීන්ට එරෙහිව මර්දනය ආරම්භ කරයි

இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அடக்குமுறையைத் தொடங்குகிறது

By Pradeep Ramanayake
20 December 2019

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் அரசியல் எதிரிகளையும் அடக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், அரச ஒடுக்குமுறை கருவியான பொலிஸ், புலனாய்வுத் துறை மற்றும் அரச ஆதரவிலான குண்டர் கும்பல்களால் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க விரோத நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் கைது செய்யப்படுவது, அடிப்பது மற்றும் விசாரிப்பது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

அத்தகைய சில சம்பவங்கள் இங்கே:

* நவம்பர் 26 அன்று, அவதூறான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நியூஸ்ஹப் வலைத் தளத்தின் அலுவலகத்தில் ஒரு பொலிஸ் படை குழு தேடுதல் நடத்தியுள்ளது. நியூஸ்ஹப் கூறியுள்ளபடி, பொலிஸ் அந்த தேடுதல் நடவடிக்கையின் போது, அலுவலக ஊழியர்களைப் பற்றிய விரிவான தகவல்களை பட்டியலிட்டுள்ளதுடன் கோடாபய இராஜபக்ஷ பற்றிய தகவல்கள் உள்ளனவா என ஒவ்வொரு கணினியிலும் தேடியுள்ளது.

பொலிசார் ஒவ்வொரு கணினியிலும் "கோடா" என்ற வார்த்தையை பயன்படுத்தி, அதன் கீழ் உள்ள அனைத்து தகவல்களையும் சோதித்ததாகவும், ஜனாதிபதியை அவமதிக்கும் விடயங்கள் அந்த கணினிகளில் உள்ளனவா என தேடிப்பார்த்தனர் என நம்ப முடியும், என்றும் அந்த இணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. வலைத் தள வெளியீட்டாளர்கள் தாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்கள்.

* நவம்பர் 28 அன்று, முந்தைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவின் தனிப்பட்ட அலுவலகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளரும், வொயிஸ்டியூப் என்ற யூடியூப் சேவையின் ஆசிரியருமான துஷாரா விதாரனகே, இரகசிய பொலிசாரால் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். வொயிஸ்டியூப் இன் விதாரனகே ஒரு பத்திரிகையாளராக வேலை செய்த த லீடர் வலைத் தளம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இராஜபக்ஷவின் எதிராளி சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்தது.

* டிசம்பர் 6, அளுத்கமவில் லங்காதீப பத்திரிகையின் பிராந்திய நிருபர் துசித குமார டி சில்வா மற்றும் அவரது மனைவி மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை பற்றிய தகவல்களை அவர் அம்பலப்படுத்தியதாலேயே குண்டர்கள் அவரைத் தாக்கினர்.

* டிசம்பர் 8, யாழ்ப்பாணத்தில் அரசியல் ஆய்வாளரும் வழக்கறிஞருமான எஸ்.ஏ. யோதிலிங்கத்தின் வீட்டிற்குள் பாய்ந்த ஒரு குண்டர் கும்பல், அவரது உடமைகளை இழுத்துப் போட்டுவிட்டு கை தொலைபேசிகளை எடுத்துச் சென்றது. யோதிலிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த அரசியல் பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வுகளை எழுதும் ஒரு முன்னணி செயற்பாட்டாளர் ஆவார்.

* டிசம்பர் 10, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முற்போக்குத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சந்தன பண்டார தலைமையிலான குழு ஒன்றால், அரசு வெளியீட்டகமான லேக் ஹவுஸின் புதிய ஊடகப் பிரிவின் தலைவராக இருந்த மதுக தக்ஸல பெர்னாண்டோ தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டார். தாக்குவதற்கு முன்பு, "இவனுடன் கையாலேயே பேச வேண்டும், வார்தைகளால் அல்ல" என்று கூறி, பண்டார அவரை அச்சுறுத்தியிருந்தார். தொழிற்சங்கத்தின் தலைவர் பின்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பெர்னாண்டோ ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிராக “சேறடிக்கும் கானொளி பிரச்சாரம் செய்பவர்" என்று பொய்யாக குற்றம் சாட்டினார்.

* வடக்கில் புன்னாலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிக்கும் ஒரு சிவில் ஆர்வலரான முருகையா கோமகனை, புலனாய்வுத்துறை விசாரணைக்கு உட்படுத்துவதாக அவர் டிசம்பர் 10 அன்று தமிழ்நெட் வலைத் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

* டிசம்பர் 11, கடவத்தையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திலிருந்து தண்ணீருக்குள் எரிபொருள் வெளியேற்றப்படுவதால் ஏற்பட்ட மாசு பற்றி புகாரளிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் குழு ஒன்றை குண்டர் குழு ஒன்று தாக்கியது.

* டிசம்பர் 13, முன்நிலை சோசலிசக் கட்சியில் முன்னணியில் செயற்படும் “சுதந்திரத்திற்கான பெண்கள்” இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று, பெண்கள் உரிமைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு நிதி திரட்டிக்கொண்டிருந்த போது கொழும்பு கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்தமைக்காக பொலிசார் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. பின்னர் நிதி சேகரிக்க அனுமதி இருந்தாலும், “பொதுமக்களுடன் கலந்துரையாடக் கூடாது” என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பல தரப்பினரால் கூட்டப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இலங்கை சமூக வலைத்தள ஊடக சங்கத்தின் அழைப்பாளர் நுவன் நிரோத, இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த 26 நாட்களுக்குள் 13 பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதமாக அறியக் கிடைத்துள்ள இந்த தாக்குதல்கள், அரசாங்கம் தனது ஆட்சியை எதிர்ப்பவர்களை வேட்டையாட விரைவாக தயாராகி வருவதையே காட்டுகிறது. வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களிடையே கொந்தளித்து வரும் பொருளாதார அல்லது சமூகப் பிரச்சினைகள், பொது மக்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டு, அது பரவலான ஆதரவைப் பெற்ற வெகுஜன இயக்கமாக மாறும் என்று அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

முன்நிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுவித்தபோது, "பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது" என்று பொலிஸ் அச்சுறுத்தியமை, ஒரு அரசியல் அமைப்பு தனது விவகாரங்களை நிறைவேற்றுவதற்கான ஜனநாயக உரிமையை முற்றிலும் மீறுவதாகும். தனது திட்டத்தை யாரும் கேள்வி கேட்காதவாறு முன்னெடுக்க அரசாங்கம் விரும்புகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் பல பிரிவுகளில் வெடித்த வெகுஜன போராட்டங்கள், தொழிலாளர்களால் இனிமேலும் கடுமையான வாழ்க்கை நிலைமைகளையும் தொழில் நிலைமைகளையும் தாங்கிக்கொள்ள முடியாததால் வெடித்தவை ஆகும். போராட்டங்கள் துரோக தொழிற்சங்கங்களால் வலுக்கட்டாயமாக நசுக்கப்பட்ட போதிலும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. வெகுஜனங்களின் எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் தீர்க்க முடியாத அரசாங்கம், இந்த போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் மீண்டும் வெடிக்கும் என்பதை நன்கு அறிந்தும், அதன் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்த தயாராகின்றது.

இந்தச் சூழலிலேயே, அதற்கு எதிரானவர்களாக கருதும் ஊடகவியலாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் அடக்குவதற்கு அரசாங்கம் தனது ஆயுதங்களை தூக்குகின்றது. 2005 முதல் 2015 வரை ஆட்சியில் இருந்தபோது, எதிர்ப்பு ஊடகவியலாளர்களை படுகொலை செய்தல், கடத்தல் மற்றும் சித்திரவதை செய்தமை தொடர்பான இரத்தக்களரி பதிவு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உரியது. அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோடாபய இராஜபக்ஷ, அரசாங்கத்தின் ஆதரவுடன் பொலிஸ் மற்றும் துணைப் படைக் குழுவின் உதவியுடன் ஒரு பொறிமுறையை முன்னெடுத்தமைக்காக உயர்ந்த மட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரே தற்போதைய ஜனாதிபதி ஆவார்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலைமையின் கீழ், டிசம்பர் 12 அன்று பத்திரிகையாளர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி இராஜபக்ஷ, “ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எண்ணம் இல்லை” என்று அறிவித்தார். இராஜபக்ஷவின் கூற்று முற்றிலும் பொய்யானதாகும்.

அதே கூட்டத்தில், தான் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறிய இராஜபக்ஷ, அந்த “சுதந்திரம்” என்னவாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். “அனைத்து ஊடக நிறுவனங்களும் நாட்டுக்காக தங்கள் கடமையைச் செய்ய வேண்டும், ஊடகங்கள் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் ஊடக செயற்பாட்டில் ஈடுபடுவர் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். இராஜபக்ஷ விடுத்திருப்பது ஒரு எச்சரிக்கை ஆகும். அவரது "ஊடக சுதந்திரம்" எனப்படுவது அறிக்கைகள் அரசாங்கத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

இராஜபக்ஷ, பிரதான அரச நிறுவனங்களின் தலைவர்களாக இராணுவத்தின் உயர் மட்ட நிர்வாகிகளை நியமித்து, அரச நிறுவனங்களை இராணுவமயமாக்குவதில் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் தலைவராக, தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நியமித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் ஊடாக நிர்வகிக்கப்படும் மின் ஊடகம், இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பு அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் வைப்பதாகும்.

ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்படுவதும் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அரசாங்கம் தயாரிக்கும் ஒரு பரந்த தாக்குதலின் பாகமாகும்.