ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව මුස්ලිම්-විරෝධී ප්‍රකෝපකරනය ඉස්මත්තට ගැනීම සඳහා වෛද්‍ය සාෆිට එරෙහි‍පරීක්ෂන‍ යලි අරඹයි

இலங்கை அரசாங்கம் முஸ்லிம்-விரோத ஆத்திரமூட்டலை முன்னிலைப்படுத்த வைத்தியர் சாஃபிக்கு எதிரான "விசாரணைகளை" புதுப்பிக்கின்றது

By Wasantha Rupasinghe
29 December 2019

கர்ப்பமடைவதைத் தடுக்க சிங்கள-பௌத்த தாய்மார்களுக்கு கருத்தடை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் ஷியாப்தீன் சாஃபி மீதான “விசாரணையை” ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.

குருணாகல் போதனா மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவர் சாஃபி, "சிசேரியன்" பிரசவத்தின் போது கருத்தடை செய்த குற்றச்சாட்டில், கடந்த மே 24 அன்று கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான குற்றப் புலணாய்வு விசாரணையின் 210 பக்க அறிக்கை குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஜூன் 27 அன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டது.

நீதிமன்றம் ஜூலை 25 அன்று மருத்துவரை விடுவிக்க உத்தரவிட்டது. இரண்டரை லட்ச ரூபா ரொக்கப் பிணையிலும் நான்கு இருபத்தைந்து லட்ச ரூபா  சரீர பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும், வைத்தியர் சாஃபிக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்க குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு டிசம்பர் 12 அன்று குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் அனுமதி வழங்கினார். ராஜபக்ஷ அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட புதிய குற்றப் புலணாய்வு துறை இயக்குனர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. டி. திலகரத்ன, புதிய விசாரணைக் குழுவை உருவாக்கி "நியாயமான" மீள் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. தற்போது மட்டக்களப்பு  காத்தான்குடி ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள சாஃபி ஒவ்வொரு மாதமும் குற்றப் புலணாய்வுத் துறையில் முன்நிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஷியாப்தீன் சாஃபிக்கு எதிரான பழிவாங்கல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் "தேசிய ஐக்கிய" அரசாங்கத்தின் முடிவில் தொடங்கியது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஆளும் வர்க்கத்தின் அனுசரணையில் சிங்கள-பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான முஸ்லிம்-விரோத வன்முறையோடு இணைந்தவாறே இது தலைதூக்கியது.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த தூக்கிப்பிடிக்கப்பட்ட ஷியாப்தீன் சாஃபி சம்பந்தப்பட்ட விவகாரம், ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஆதாரமற்ற சான்றுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா போன்ற சிங்கள பேரினவாத குழுக்களும் பொதுவில் ஊடகங்களும் நீண்டகாலமாக கட்டியெழுப்பிய அவதூறு மலையை இது அடிப்படையாகக் கொண்டிருந்தது.

முழு ஆளும் வர்க்கமும் அறிந்திருந்தும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு இடமளித்திருந்தது. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், மே 24 அன்று, சாஃபி அவரது வருமாணம் தொடர்பாக விசாரணை செய்வதற்கென பொலிசாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டார்.

தமிழ் மக்களுக்கு எதிரான இரத்தக்களரி இனவாத போரின் போது பிரதான ஊது குழலாக செயற்பட்ட இனவாத திவயின பத்திரிகையால் ஆரம்பிக்கப்பட்டு, மேலும் பிற மின் மற்றும் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களாலும் ஊதி பெருப்பிக்கப்பட்ட, "ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மார்கள் சாஃபியால்  மலடாக்கப்பட்டனர்" என்ற குற்றச்சாட்டில் தூண்டிவிடப்பட்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் கோபமடைந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள மற்றவர்களும் இந்த நச்சுத்தனமான இனவாத பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்ததுடன், ராஜபக்ஷ ஒருமுறை "பாதிக்கப்பட்ட" தாய்மார்களுக்கு "இழப்பீடு" கோரினார். இந்த ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தின் விளைவாக, சுமார் ஆயிரம் தாய்மார்கள் மருத்துவருக்கு எதிராக "சாட்சியமளிக்க" கூடி, வைத்தியர் சாஃபியிடம் சிசேரியன் செய்ததாகக் கூறினர்.

ஒரு மருத்துவ மற்றும் தாதிமார் குழுவின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த சத்திர சிகிச்சைகள் நிகழும்போது ஒரு மருத்துவர் இரகசியமாக சிசேரியன் கருத்தடை செய்வது “சாத்தியமற்றது” என்று இந்த விஷயத்தில் அனுபவமுள்ள பல ஆதரவாளர்கள் ஊடகங்களில் தெளிவுபடுத்தினர். அவர்களில் முக்கியமானவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகளிர் மருத்துவ மற்றும் மகப்பேறியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த சேனநாயக ஆவார்.

வைத்தியர் சாஃபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதோடு, ஏனைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவருடன் பணியாற்றும் ஊழியர்களின் சாட்சிகள் இனவாதிகளின் தவறான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்பதால், இனவெறி குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையான பொதுமக்கள் முன் அம்பலப்படுத்தப்பட்டன. இது சாஃபியை விடுவிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது.

எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​சிறுபான்மை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நச்சுத்தனமான இனவாதத்தை தூண்டுவதை அதன் பிரதான தந்திரமாகப் பயன்படுத்திய ராஜபக்ஷ முகாம், தேர்தலில் சிங்கள வாக்குகளை அபகரித்துக்கொள்ள பலமுறை இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டது. தமது ஆட்சியில் ஷியாப்டின் சம்பவம் குறித்து "ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவதாக" ராஜபக்ஷ உட்பட அதுரலியே ரத்தனே பிக்கு போன்ற தீவிர இனவெறி பிரிவினர் உறுதியளித்தனர்.

இவ்விசாரணை "பக்கச்சார்பற்றதாக" இருப்பதற்கு பதிலாக, விசாரணை நிச்சயமாக ஷியாப்தீன் சாஃபிக்கு எதிரான தொடர்ச்சியான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்டிருக்கும். வைத்தியரின் மனைவியும், “இளம் பத்திரிகையாளர்கள் அமைப்பும்” ஏற்கனவே குருணாகல் நீதவான் ஹேவசத்தின் பக்கச்சார்பு தொடர்பாக நீதிச் சேவை ஆணைகுழுவில் புகார் அளித்துள்ளனர்.

ஷியாப்தீன் சாஃபியை தடுத்துவைப்பதற்கான உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்த சூழ்நிலையில், நீதவான் ஜூலை 25 வரை, மேலும் சில தினங்கள் அவரை விளக்கமறியலில் வைத்தமை அவர்களது புகார்களில் ஒன்று. இந்த வழக்கில் தொடர்புபட்ட குருணாகல் மருத்துவமனையில் நீதவானின் மனைவி பணிபுரிகிறார், அவரது மேலதிகாரியான குருணாகல் வைத்தியசாலையின் இயக்குநர் எஸ். வீரபண்டார, சாஃபி மீதான வழக்கில் ஒரு (எதிர்) தரப்பாக இருக்கின்றார்.

வைத்தியரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில், மூன்றாவது பிரதிவாதி பிரதி பொலிஸ் மாஅதிபரின் மனைவியும், இந்த குருணாகல்  வைத்தியசாலையில் மேற் குறிப்பிட்ட இயக்குனரின் கீழ் பணிபுரிகிறார். எனவே "நியாயமான விசாரணையை" நடத்துவதற்காக நீதவான் ஹேவாவசம் என்பவரை வழக்கில் இருந்து நீக்குமாறு, வைத்தியர் ஷியாப்தீன் சாஃபியின் மனைவி நீதித்துறை சேவை ஆணைகுழுவில் கோரியிருந்தார். இந்த கோரிக்கைகள் தண்ணீரில் எழுதப்பட்டவையாக உள்ளது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

முஸ்லீம் மருத்துவருக்கு எதிரான முழு செயல்முறையும், ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும் சந்தேகத்தையும் தூண்டுகிற பாசிச-சிங்கள பேரினவாத குழுக்கள் போசிக்கப்பட்டு மிக வேகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன என்பதை நிரூபிக்கின்றது.

பதவியேற்ற முதல் நாளில், ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, தனக்கு வாக்களிக்காத முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அச்சுறுத்தலை விடுத்தார். தான் "சிங்கள வாக்குகள் மூலம் மட்டுமே" ஆட்சிக்கு வந்ததாக அவர் அறிவித்தார். இனவாத போரின் இறுதி நாட்களில் பாதுகாப்பு செயலாளராக அவர் ஆற்றிய நச்சுத்தனமான வகிபாகம் மற்றும் ராஜபக்ஷ ஆட்சியின் போது முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதல்களை நடத்திய பொது பல சேனா போன்ற பாசிச குழுக்களுக்கு அவர் அளித்த ஆதரவு காரணமாக, சிறுபான்மை மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், மும் மொழியில் இருந்த பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டிருந்தன. எதிர்காலத்தில், இந்த இனவாத சக்திகள் சிறுபான்மையினர் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.

இலங்கையில் ஆளும் வர்க்கம் உட்பட உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் போக்கு, அரசாங்கங்களின் பாரிய சிக்கன நடவடிக்கைகளால் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைக்கு எதிராக, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களுக்கு எதிராக, ஒரு எதேச்சதிகார ஆட்சியினை உருவாக்குவதாகும்.

இந்த வர்க்கப் போராட்டங்களைத் திசைதிருப்ப ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தும் அடிப்படை ஆயுதம் இனவாதம் ஆகும். இலங்கையின் ஆளும் வர்க்கம் 1948 இல் சுதந்திரமடைந்ததிலிருந்தே இதை பயன்படுத்துவதில் இழிபுகழ் பெற்றது. 1983 இல், அவர்கள் இதை ஒரு இனவாத யுத்தமாக உச்சத்திற்கு கொண்டுசென்றனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நீடித்த இந்த யுத்தம், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களாலும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

வைத்தியர் ஷியாப்தீன் சாஃபிக்கு எதிரான விசாரணையை மீண்டும் தொடங்குவதன் உண்மையான நோக்கம், உயரும் வர்க்கப் போராட்டங்களின் அலையைத் திசைதிருப்ப கொடூரமான முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டலைப் பயன்படுத்துவதாகும்.