ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Iowa caucuses debacle

அயோவா மாநில வேட்பாளர் தேர்வு தேர்தல் நெருக்கடி

Patrick Martin
5 February 2020

திங்களன்று இரவு நடந்த ஜனநாயகக் கட்சியின் அயோவா வேட்பாளர் தேர்வு தேர்தலின் வாக்கு முடிவுகளை அறிவிப்பதில் நாள் கணக்கில் நீண்ட தாமதம், அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் இழிவார்ந்த நடைமுறைகளிலேயே கூட, முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒரு சம்பவமாகும்.

ஒரு மதிப்பீட்டின்படி 175,000 பேர் அந்த வேட்பாளர் தேர்வு தேர்தல் கூட்டங்களில் பங்கெடுத்து சுமார் 20 மணி நேரங்களுக்குப் பின்னர், வேட்பாளர் தேர்வு தேர்தலின் மொத்த வாக்குப்பதிவுகளைக் கட்சி தலைமை அலுவலகங்களுக்கு அறிவிக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் செயலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி, அயோவா மாநில ஜனநாயகக் கட்சி ஒரேயொரு வாக்குகளைக் கூட அறிவிக்க மறுத்தது.

இறுதியில், டெ மோய்ன் (Des Moines) உள்ளூர் நேரப்படி செவ்வாயன்று மாலை 4 மணிக்கு மொத்த வாக்குகளில் ஒரு பகுதி அறிவிக்கப்பட்ட போது, அதில் அண்மித்து 1,800 வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெறும் 62 சதவீதம் மட்டுமே அறிவிக்கப்பட்டது. அந்த 62 சதவீதம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்லது இன்னும் அறிவிக்கப்படாத 38 சதவீதத்திலிருந்து இவற்றை எது வேறுபடுத்துகிறது என்பதை விவரிக்க அம்மாநில கட்சி தலைவர் ட்ரோய் பிரைஸ் மறுத்துவிட்டார். எப்போது இறுதிச்சுற்று எண்ணிக்கை முடிவுகள் தயாராகும் என்று மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளை அவர் ஒதுக்கித் தள்ளினார்.

அயோவா மாநில கட்சி தலைவர்களின் குறிப்பிட்ட உத்தேசங்கள் என்னவாக இருந்தாலும், இந்த வேட்பாளர் தேர்வு தேர்தல் நெருக்கடியின் ஒவ்வொரு நடவடிக்கையும், வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸிற்குக் கேடு விளைவிக்கவும் மற்றும் முன்னாள் தெற்கு பென்ட் மேயர் Pete Buttigieg க்கு ஆதாயமளிக்கும் வகையிலும் உள்ளது. வேட்பாளர் தேர்வு தேர்தலில் இந்த முன்னாள் கடற்படை உளவுத்துறை அதிகாரி ஜெயித்திருப்பதாக ஊடகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளார், ஏனென்றால் 62 சதவீத தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வாக்கு முடிவுகளில், அவர் மாநில கட்சியின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை அளவீடான எளிதில் விளங்காத "மாநில பிரதிநிதிக்கான நிகரி" (state delegate equivalents) பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.


ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் அயோவா, டெ மோய்ன் இல், பெப்ரவரி 3, 2020 இல் ஆதரவாளர்களிடையே உரையாற்றுகிறார் [படம்: அசோசியேடெட் பிரஸ்/ பப்லோ மார்டினேஸ் மொன்சிவாய்)

அதே பட்டியலில், ஆரம்ப எண்ணிக்கையிலும் சரி, 15 சதவீதத்திற்குக் குறைவாக ஆதரவு பெற்றிருந்த "ஜெயிப்பதற்குச் சாத்தியமற்ற" வேட்பாளர்கள் நீக்கப்பட்டதற்குப் பிந்தைய இரண்டாம் சுற்றிலும் சரி, இரண்டிலுமே சாண்டர்ஸ் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அனைத்திற்கும் மேலாக, அந்த வேர்மாண்ட் செனட்டர் அதிக வாக்குகள் பெற்றிருந்த கல்லூரி மற்றும் தொழிற்சாலை நகரங்களின் பெரும்பாலான வாக்குகள் தான் அறிவிக்கப்படாத வாக்குகளில் உள்ளன. இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதும் ஒருவேளை சாண்டர்ஸூம் பிரதிநிதிகளுக்கான நிகரி பட்டியலில் முன்னிலைக்கு வருவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது.

முந்தைய அயோவா மாநில வேட்பாளர் தேர்வு தேர்தலில், வாக்குகள் வாக்கு எண்ணும் இடத்தை அடைந்த இரண்டே மணி நேரத்திற்குள் முடிவுகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டன. கடந்த நான்கு அயோவா வேட்பாளர் தேர்வு தேர்தலிலும் ஜெயித்தவர்களாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே கட்சியின் தேர்தல் வேட்பாளர் பதவியை ஜெயித்தார்: 2000 இல் அல் கோர், 2004 இல் ஜோன் கெர்ரி, 2008 இல் பராக் ஒபாமா மற்றும் 2016 இல் ஹிலாரி கிளிண்டன். ஆனால் 2020 இல் அயோவாவில் அதிக வாக்குகளை ஜெயித்த பேர்ணி சாண்டர்ஸ் குறித்து, திங்கட்கிழமை இரவும் மற்றும் செவ்வாய்கிழமை காலையிலும், அங்கே எந்த ஊடக தலைப்பு செய்திகளும் இல்லை.

அல்லது ஒரு சமயம் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு முன்னிலையில் இருப்பதாக அனுமானிக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனின் தோல்வி குறித்தும் அங்கே உரத்த தலைப்பு செய்திகள் எதுவும் இல்லை. செவ்வாயன்று மதியம் அறிவிக்கப்பட்ட முடிவில் அவர் மோசமாக நான்காம் இடத்தில் இருந்தார். செனட்டர் Amy Klobuchar ஒரு சிறிய வித்தியாசத்தில் மட்டுமே அவருக்குப் பின்னால் உள்ள நிலையில், சொல்லப் போனால் உண்மையில் பைடென் இறுதி எண்ணிக்கையில் இன்னும் கீழே ஐந்தாவது இடத்தில் கூட வரக்கூடும்.

அயோவா முடிவுகள் அறிவிப்பில் தாமதம் ஏற்படுவதன் பின்னால் துல்லியமாக என்ன நடக்கிறது என்பதை இந்த தருணத்தில் கூறுவது சாத்தியமில்லை. ஆனால், பெரிதும் ஜனநாயக கட்சியுடன் தொடர்புபட்ட தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயலியில் முடிவுகளை அறிவிப்பதில் "கோளாறு" இருப்பதாக கூறுப்படும் வாதம், பதில்களை விட அதிக கேள்விகளையே எழுப்புகிறது. அமெரிக்க அரசியலில் ரஷ்ய "தலையீடு" குறித்து நம்பவியலாத கட்டுக்கதைகளைச் சிரமமின்றி ஜீரணித்துக் கொள்ளும் ஊடகங்கள், தாமதத்திற்கான உள்நோக்கங்கள் மீதான எந்தவொரு கேள்விகளையும் உடனடியாக "சூழ்ச்சி தத்துவம்" என்று கண்டிக்கலாம்.

ஒட்டுமொத்த நிகழ்வுபோக்கும் அரசியல் மோசடிக்காக கனிந்து, பெரிதும் சந்தேகத்திற்குரியதாக தெளிவின்றியும் உள்ளது. அனைத்திற்கும் மேலாக, அயோவா வாக்குகள் முடிவுகளில் இந்த தாமதம், தொலைபேசி வழி கருத்துக்கணிப்பு நடத்திய குறைந்தபட்சம் ஒரு அழைப்பாளரால் தங்கள் வேட்பாளர்களின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்று Buttigieg பிரச்சாரக்குழு புகார் தெரிவித்ததும், டெஸ் மொய்னெஸ் சார்பதிவாளர் இறுதி கருத்துக்கணிப்பை இரத்து செய்து வெறும் ஓரிரு நாட்களுக்குப் பின்னர் நடந்துள்ளது. பெரிதும் மேலாளுமை செலுத்தக்கூடிய இந்த கருத்துக்கணிப்பு அம்மாநிலம் எங்கிலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு சாண்டர்ஸின் முன்னிலையை எடுத்துக்காட்டி இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

அயோவா வாக்கு எண்ணிக்கையில் "தொழில்நுட்ப கோளாறுகள்" என்று கூறப்படுவதை பரந்த அரசியல் உள்ளடக்கத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். அயோவா மாநில வேட்பாளர் தேர்வு தேர்தல்களுக்கு முந்தைய வாரங்களில் சாண்டர்ஸிற்கு எதிராக ஒரு திட்டமிட்ட ஒருமித்த பிரச்சாரம் மேலோங்கி இருந்தது, அதில் ஹிலாரி கிளிண்டன், ஜோன் கெர்ரி மற்றும் கட்சி ஸ்தாபகத்தின் ஏனைய பிரமுகர்கள், அத்துடன் பெருநிறுவன ஊடகங்களின் தலையீடும் உள்ளடங்கி இருந்தன, அதில் அவர்கள் அனைவரும் "ஜனநாயக கட்சியின் சோசலிஸ்ட்" என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட சாண்டர்ஸ் வேட்பாளர் ஆவது பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்குமென வாதிட்டனர்.

இந்த சாண்டர்ஸ் விரோத பிரச்சாரமானது, டொனால்ட் ட்ரம்ப் போலவே ஜனநாயக கட்சி ஸ்தாபகமும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போர்குணத்திற்கும், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவுக்கும் விரோதமாக இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இங்கே முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளுக்கும் சிம்மசொப்பனமாக இருப்பது சாண்டர்ஸ் கிடையாது, மாறாக பரந்த பெருந்திரளான மக்களிடையே ஏற்பட்டுள்ள இடது நோக்கிய மாற்றமாகும்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு பிரச்சாரம், வேட்பாளர்களின் இரண்டு குழுக்கள் உருவாகி இருப்பதைக் காண்கிறது — ஒன்று, சாண்டர்ஸ் மற்றும் செனட்டர் எலிசபெத் வார்ரென் தலைமையிலான இடதுசாரி அணி, மற்றது, பைடென், Buttigieg மற்றும் Klobuchar ஐ உள்ளடக்கிய வலதுசாரி அணி. ஒவ்வொரு அணியும் அக்கட்சியை எதிர்நோக்கும் வாக்காளர்களில் சுமார் பாதி நபர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கமோ வெவ்வேறு நோக்கங்களுக்காக வேட்பாளர்களின் அவ்விரு அணிகளையும் பயன்படுத்தி வருகிறது. சாண்டர்ஸ்-வார்ரென் அணி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இடதுசாரி இயக்கத்தைத் தணித்து அதை மீண்டும் இரு கட்சி அமைப்புமுறைக்குள்ளேயே அடைத்து வைக்க திசைதிருப்புவதற்காக உள்ளது. Biden-Buttigieg-Klobuchar அணி கட்சிக்குள் நிஜமான அதிகாரத்தைப் பிடியில் வைத்திருக்கவும், வேட்பாளர் பதவியைக் கைப்பற்றவும், ஆளும் வர்க்கம் அவசியமென தீர்மானித்தால் ட்ரம்புக்கு ஒரு பிரதியீடாக சேவையாற்றுவதற்கும் உள்ளது.

பைடென் பிரச்சாரத்தின் வெளிப்படையான நெருக்கடியானது, ஏனைய சில வலதுசாரி மாற்றீட்டு கன்னை உருவாக்குவதற்கான அதிகரித்தளவில் உறுதியான முயற்சிகளுக்கு இட்டுச் சென்றுள்ளது: Buttigieg க்கு பெரும் நிதி திரட்டுவது, Klobuchar க்கு பெரியளவில் ஊடக விளம்பரங்கள், மிகவும் முக்கியமாக, இந்த போட்டியில் பில்லியனர் மைக்கெல் புளூம்பேர்க் நுழைந்திருப்பது ஆகியவை, புளூம்பேர்க்கின் ஒட்டுமொத்த பிரச்சாரமும் பைடெனைப் புறம் தள்ளுவதையும் மற்றும் சாண்டர்ஸ் அல்லது வார்ரென் வேட்பாளர் ஆவதைத் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், அயோவாவில் பைடெனின் தோல்வி அளவு தெளிவானதும், ஏற்கனவே பிரச்சார விளம்பரங்களில் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ள புளூம்பேர்க், முதன்மை வேட்பாளர் தேர்வுக்கான "பிரமாண்ட செவ்வாய்கிழமை" போட்டியிலும் (primaries) மற்றும் மார்ச் 3 இல் நடக்க உள்ள மாநில வேட்பாளர் தேர்வு தேர்தலுக்கான போட்டியிலும் அவரின் சம்பள பணியாளர்கள் மற்றும் அவரின் விளம்பரச் செலவுகளை இரட்டிப்பாக்க இருப்பதாக அறிவித்தார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நியமிக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒரு பிரதான பாத்திரம் வகிக்க, அவருக்குப் போதிய பிரதிநிதிகளைப் பெறுவதற்காக, புளூம்பேர்க் அவரின் 58 பில்லியன் டாலர் சொத்துக்களில் 1 பில்லியன் டாலரை செலவிடக்கூடும்.

அயோவா மாநில வேட்பாளர் தேர்வு தேர்தல்களைச் சுற்றி நடந்துள்ள சம்பவங்கள், ஜனநாயகக் கட்சியைச் சீர்திருத்தி விடலாம் என்றும், அதையொரு சமூக சீர்திருத்தத்திற்கான வாகனமாக திருப்பி பில்லியனர்களின் அரசியல் செல்வாக்கை எதிர்க்க ஓர் ஆயுதமாகவும் கூட ஆக்கலாம் என்ற சாண்டர்ஸ் வாதத்தின் திவால்நிலைமையை எடுத்துக்காட்டுகின்றன. குடியரசு கட்சிக்கு குறைவின்றி, ஜனநாயகக் கட்சியும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஓர் அரசியல் அமைப்பாக விளங்குகிறது என்பதே உண்மையாகும். சிஐஏ, பென்டகன் அல்லது வோல் ஸ்ட்ரீட்டையே "சீர்திருத்தினாலும்" கூட ஜனநாயக கட்சியைச் "சீர்திருத்துவதற்கு" அங்கே வாய்ப்பில்லை.

2016 இல் வங்கியாளர்கள் மற்றும் சிஐஏ இன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை சாண்டர்ஸின் “கிளர்ச்சி” பிரச்சாரம் ஆமோதித்து ஏற்றுக் கொண்டதில் முடிந்தபோது அவர் வகித்த பாத்திரத்தில் இருந்து, 2020 இல் அவர் வகிக்கும் பாத்திரம் அடிப்படையில் வேறுபட்டதில்லை.

மாநில வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்வதற்கான அயோவா மாநில ஜனநாயக கட்சியின் முயற்சிக்கு அவரின் விடையிறுப்பு குறிப்பாக மிகவும் மிதமாக இருந்தது. மாநில கட்சி பின்பற்றும் நடைமுறையைச் சந்தேகத்திற்குரியதாக கூறுவது "நியாயமாக இருக்காது" என்றவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

அவரின் மிகவும் நெருக்கமான பிரச்சார உதவியாளர் ஜெஃப் வீவெர், மாநில கட்சியின் நடத்தையைக் கேள்விக்குட்படுத்தும் பைடென் பிரச்சாரக் குழுவைக் கண்டித்தார். “கட்சியில் மதிப்பைச் சீர்கெடுக்கக் கூடாது என்ற அக்கறையில் நான் வலியுறுத்த விரும்புகிறேன், வாக்கு எண்ணிக்கையில் தங்களின் ஒப்பீட்டளவிலான அந்தஸ்திற்காக நேற்றிரவில் இருந்து இந்த முடிவை தாமதிக்க முயன்று வருபவர்கள், சற்றே வஞ்சகமாக இருப்பதாக நினைக்கிறேன்,” என்று வீவெர் தெரிவித்தார். “நமக்கு கிடைக்கும் வகையில் அந்த வாக்கு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.”

சாண்டர்ஸ் பிரச்சாரம் முன்னிலைப்படுத்தும் சுயதிருப்தி மலைப்பூட்டுவதாக உள்ளது. உண்மை என்னவென்றால் பெப்ரவரி 4 அன்று, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான முதல் போட்டியின் முடிவுகள் யாருக்கும் தெரியாது. இப்போதிருந்து வெறும் ஒன்பது மாதங்களுக்கு முன்னர், நவம்பர் 4 இன் நிலைமையை ஒருவர் எளிதாக நினைவுகூரலாம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்தமாக வெளியிடப்படவில்லை, அல்லது சவாலுக்கிடமாக இருந்தது, அல்லது அரசியலமைப்பின்படி இரண்டு முறை தான் பதவியில் இருக்க முடியும் என்றாலும் அதற்கு மேலும் பதவியிலேயே தங்கியிருப்பதற்கான அவர் உத்தேசத்தை மீண்டும் மீண்டும் அறிவித்துள்ள ஒரு ஜனாதிபதியால் பகிரங்கமாக அது அறைகூவல் விடுக்கப்படுகிறது.

மாநில எந்திரத்திற்குள் நெருக்கடியின் மட்டத்தைக் குறித்து என்ன கூறப்படுகிறது என்பது தான் அயோவா மாநில வேட்பாளர் தேர்வு தேர்தல்கள் மீதான நெருக்கடியில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அமெரிக்கா ஒரு தேர்தலை நடத்த திறனற்று இருப்பதாக தெரிகிறது. ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தேர்வு தேர்தல் தொடங்க இருக்கின்ற நிலையில், வெளியுறவு கொள்கை மீது ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் அசாதாரண முரண்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ள நிகழ்முறையான ட்ரம்ப் மீதான பதவிநீக்க குற்றவிசாரணை முடிவடைய உள்ளது.

ஒவ்வொன்றுக்கும் அடியில், வாக்குப்பதிவின் மூலமாக தீர்க்க முடியாதளவுக்கு சமூக விரோத மட்டம் நிலவுகிறது. பாரம்பரிய ஜனநாயக இயங்குமுறைகள் உடைந்து வருகின்றன என்றளவுக்கு சமூக பதட்டங்கள் மிகவும் அதிதீவிரமாக உள்ளன.

முடிவு என்னவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது எதையும் தீர்க்கப் போவதில்லை. இந்த நிகழ்முறைக்குள் தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை முன்னெடுப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் பயனற்ற வீண்வேலையாகும்.

இந்த 2020 தேர்தல்களில் ஒரேயொரு பிரச்சாரம் மட்டுமே, வேலைகளின் பாதுகாப்பு, வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள், மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான எதிர்ப்பில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டவும் மற்றும் இத்தகைய அபாயங்களுக்கு எதிராக அமெரிக்க மக்களை எச்சரிக்கைப்படுத்தவும் முயன்று வருகிறது. அது, சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் அதன் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கான ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கான நோரிஸ்சா சான்டா குரூஸ் இன் பிரச்சாரமாகும்.