World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After the execution of Gary Graham: the world looks at America and America looks at itself

ஹரி கிறஹமின் மரண தண்டனையின் பின்னர்: உலகம் அமெரிக்காவைப் பார்க்கிறது; அமெரிக்கா தன்னைத் தானே நோக்குகிறது

By David Walsh
24 June 2000

Use this version to print

ஜூன் 22ம் திகதி ஹரி கிரஹமுக்கு டெக்சாஸ் மாநில ஆளுனரும் குடியரசுக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருமான ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் அங்கீகாரத்துடன் மரண தண்டனை வழங்கப்பட்டமை அமெரிக்க சமுதாயத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதோடு, அதன் முரண்பாடுகளை வெளிப்படுத்தவும் உதவி உள்ளது. அமெரிக்காவில் அரசினால் அமுல் செய்யப்பட்ட முதலாவது கொலைதண்டனையாக இது இல்லாதிருந்த போதிலும் இது அதிர்ச்சியும் பயங்கரமும் நிறைந்ததாவிருந்தது. இதனது தரம் உலகம் பூராவும் தெளிவாக உணரப்பட்டுள்ளது.

கிரஹாம் வியாழன் இரவு மரணதண்டனைக்கு உள்ளான போதிலும் முழுச் சமுதாயமும் விசாரணையின் முன் நிறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக கிறஹாம் வெளியிட்ட அறிக்கை இன்றைய சமுதாய அமைப்புக்கு எதிரானஒரு நிலையான சாபம் ஆகியுள்ளது. தூக்குமேடையில் இருந்து வெளிக்கிளம்பிய இந்த அவலக் குரல் இந்த மரண தண்டனையை ஏற்பாடு செய்து அமுல் செய்தவர்களை எதிர்காலத்தில் ஆட்டிப்படைக்கும் என்பதை எவரும் உணரவே செய்வர்.

கிரஹாமின் மரணம், நாகரீக சமுதாயத்தின் எந்த ஒரு நிலையில் இருந்து பார்த்தாலும் ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையேயாகும். இந்த வழக்கில் கிரஹாமின் சமூக பின்னணி, அவர் கைதான போது அவரின் வயது(17), குற்றத்துடன்அவரைத் தொடர்புபடுத்த வெளிப்படையான சாட்சியங்கள் இல்லாமை, ஒரு சாட்சிமட்டுமே அவரை இனங்கண்டமை, குற்றவியல் ரீதியில் நிபுணத்துவம் இல்லாத அவரின் வழக்கறிஞர், சிரிப்புக்கிடமான கொலை வழக்கு விசாரணை, மரணதண்டனைக்காக சுமார் இரண்டு தசாப்தங்கள் காவல் நின்றமை தொடர்பான எந்தவொரு விடயமும் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. அநீதியினதும் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தினதும் துர்நாற்றமுமே இதில் வீசுகின்றது.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பெரும் அளவிலான மக்கள் கிரஹாம் தூக்கிலிடப்பட்டதையிட்டு அதிர்ச்சி தெரிவித்தனர். ஏதோ ஒரு பயங்கரமான ஒன்று இடம்பெற்றுவிட்டது என்ற ஒரு உணர்வு பரந்துபட்டுள்ளது. இந்த உணர்வு ஆரோக்கியமானதும் மனித நேயம் கொண்டதுமாகும். ஆனால் ஏன் அமெரிக்க சமுதாயம் இத்தகைய குற்றங்களை இழைக்கிறது? இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை எப்படி விளக்குவது? எப்படி எதிர்த்து நிற்பது? போன்ற சிக்கலான அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மட்டுமே இந்நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தற்சமயம் சுமார் 20 இலட்சம் மக்கள் சிறைகளில் உள்ளனர். அமெரிக்காவில் மரணதண்டனை கியூவில் 3500 க்கும் அதிகமானோர் நிற்கின்றார்கள்.டெக்சாஸ் மாநிலம் 2000ம் ஆண்டில் மட்டும் 23 மக்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. புஷ் தனது 5 வருட கால ஆட்சிக் காலத்தில்134 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளார். உலகில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம்கண்ட எந்தவொரு நாட்டையும் இந்த புள்ளிவிபரத்துடன் ஒப்பிடமுடியாது. அந்நாடுகளில் மரணதண்டனை புள்ளிவிபரங்கள் கிடையாது. மேற்கு ஐரோப்பாவில் மரண தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தளவு அதிகரித்த அளவில் தனது பிரஜைகளை சிறைக்குள் தள்ளுவதிலும் மரணதண்டனை விதிப்பதிலும் ஈடுபடும் ஒரு சமுதாயமானது-அதன் மூலம் தான் தனது சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலாயக்கற்றது என்பதை ஒப்புக்கொள்கின்றது. இறுதி ஆய்வுகளில் பரந்த அளவிலானோர் ஏன் மரணதண்டனை கியூவில் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது? ஏனெனில் அவர்கள் ஏழைகள்; அத்தோடு பூரண கல்வியறிவு பெறாதவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையிலான நெறிகேட்டுக்கு பலியானவர்கள் அல்லது புத்தி சுவாதீனமற்றவர்கள் அல்லது இவை அனைத்தையும் உடையவர்கள். சுருங்கச் சொன்னால் சமுதாயம் அவர்களுக்கு வாழ்க்கையில் எதுவிதமான வாய்ப்புக்களையும் வழங்கவில்லை. அமெரிக்க ஆளும் பிரமுகர்கள் கும்பலும் அதனது இரண்டு அரசியல் கட்சிகளும் இலட்சோப இலட்சம் மக்கள் முகம் கொடுத்துள்ள வறுமைக்கும், துயரங்களுக்கும் எதுவிதமான பதில்களையும் வழங்குவதாய் இல்லை.

இந்த நிலைமைகளின் இருப்பானது மேற்பரப்பில் இருந்து கொண்டுள்ள ஒரு மாபெரும் முரண்பாடுகள் நிறைந்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கான திறவுகோலை வழங்குகின்றது. தண்டனையினதும் மரணத்தினதும் கடுகடுப்பான பவனியானது, அமெரிக்க வரலாற்றில் பெரிதும் நீண்ட பொருளாதார அபிவிருத்தி என உத்தியோகபூர்வமாக வருணிக்கப்படுவதோடு தொடர்புபட்டுள்ளது. பங்குமுதல் சந்தையும் இலாப செழிப்பும் சனத்தொகையில் மிகவும் சிறிய ஒரு பகுதியினரையே -உயர்மட்ட 10 வீதத்தினரை- பலன்பெறச் செய்துள்ளது என்பதை ஆய்வுகள் காட்டிக் கொண்டுள்ளன.

ஒரு "இசைந்து கொடுக்கக்கூடிய" குறைந்த சம்பளத்தைக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை சிருஷ்டிப்பதன் மூலம் தொழிலாளர்கள் இடைவிடாது பாதுகாப்பின்மைக்கு பலியானதோடு அது பரந்த அளவிலான பெரும்பான்மையினரின் நிலைமைகளை முன்னேற்றவில்லை. இதற்கு முரணாக முழு அளவிலான வறுமை மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தனது பிடியை இறுக்கிக் கொண்டுள்ள அதே வேளையில் பல மில்லியன் கணக்கான மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய மேலும் மேலும் போராட வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பெரும் கூட்டுத்தாபனங்களின் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் (Executives) ஒரு சராசரியான தொழிலாளியின் சம்பளத்தைக் காட்டிலும் 400 மடங்கு கூடுதலாக சம்பளம் பெறுகின்றனர். அத்தகைய ஒரு சமூக சமத்துவமின்மையின் மட்டம் ஒரு நனவான அரசியல் எதிர்ப்பு இல்லாது இருந்தாலும் கூட பொதுமக்களால் ஒரு போதும் சுயமாக அல்லது ஜனநாயக ரீதியில் ஏற்கப்பட முடியாததாகும். இது காக்கப்படவேண்டும். செல்வந்தர்களுக்கும் மற்றையவர்களுக்கும் இடையேயான சமூக ஆதாளபாதாளத்தின் தவிர்க்கமுடியாத விளைவுகளில் ஒன்று, சட்டத்தின் தவறான பக்கத்தில் இருக்க அதிர்ஸ்டம் இல்லாதுபோனவர்கள் கடும் தண்டனைக்கு முகம்கொடுக்க நேரிடுவதேயாகும்.

அதிகாரபூர்வமான வன்முறைகள் அமெரிக்க வாழ்வின் அரிதான ஒரு புதுமையோ அல்லது ஒரு தற்காலிகமான அம்சமோ அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா "பொலிஸ் குண்டாந்தடி" "மூன்றாம் தரம்", வேலைநிறுத்த முறியடிப்பு, கண்காணிப்பு, அரசியல் வேட்டை, பொய் சோடனை வழக்குகளின் தளமாகும். இந்த கொடுமைகளதும் அடக்குமுறைகளதும் பாரம்பரியங்களை எடுத்துக்காட்ட ஒருவர் ஒரு சில பெயர்களையே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கும். மொல்லி மக்குயர்கஸ் (Molly Maguires) ஜோ ஹில் (Joe Hill), சக்கோ (Sacco), வன்செட்டி (Vanzetti), றொசன்பேர்க்ஸ் (Rosanbergs). அமெரிக்க ஆளும் பிரமுகர் கும்பலின் குறிப்பிட்ட அட்டூழியங்களை விளக்குவதற்கு பலவிதமான வரலாற்று, சித்தாந்த காரணிகளை எடுத்துக் காட்டமுடியும். இதன் மூலம், சுதேசிகளை அடியோடு ஒழிப்பது, இதனது குறுகிய பயன்பாட்டுவாத "எல்லை" மனப்பாங்கு, சமூக-ஜனநாயக "காப்பரண்கள்" இல்லாமை ஆகியனவற்றினை கொண்டுள்ளது.

எவ்வாறெனினும் இறுதியில் இந்த அமைப்பின் இன்றைய வன்முறையை அமெரிக்க சமுதாயத்தின் இன்றைய நிலைமையில் இருத்தியே விளக்க முடியும். உலகில் உள்ள மிகவும் பலம் வாய்ந்த முதலாளித்துவப் பொருளாதாரம் அமெரிக்காவே. இருப்பினும் வெளிப்பூச்சு செழிப்பினதும் பெருமளவில் உக்கிப் போன நூலிழை ஜனநாயக வடிவங்களினதும் அடியில் இது உக்கிரமானதும் பெரிதும் பயங்கரமானதுமான வர்க்க முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் இந்த முரண்பாட்டையிட்டு அல்லது குறைந்தபட்சம் இதனது தாக்கங்களையிட்டு பெருமளவுக்கு நனவற்றவர்களாக இருந்த போதிலும் அது இதைக் குறைத்துவிட (முரண்பாட்டை) எதுவும் செய்வதில்லை.

ஹரி கிரஹம் வழக்கின் சிக்கல்கள் வியாழன் இரவு வெளிப்பட்டபோது அதனது சமூக முரண்பாடுகளை ஆழமாக அம்பலமாக்கியது. அதைவிட இன்னும் மேலாக கிறஹாமின் கடைசி மணித்தியாலங்கள் எதிரெதிர் வர்க்கங்களின் போராட்டத்தினுள் ஒரு முக்கியமான நிகழ்வாகியது. கிரஹம் தனது மரணத்தை நோக்கி அமைதியாக செல்லவில்லை. அவனது கொலையாளிகளால் ஒரு மேசையில் வழங்கப்பட்ட "இறுதி உணவை" உட்கொள்வதை மறுத்து கிறஹாம் ஆர்ப்பரித்தான். அவன் தனது குற்றமற்ற தன்மையை பிரகடனம் செய்து கொண்டும் தனது கொலையாளிகளை கண்டனம் செய்து கொண்டும் தனது மரணத்தை எதிர் கொண்டான்.

ஹரி கிரஹாம் யார்? 1981ல் அவன் ஒரு கள்வனாகவும் ஒரு குண்டனாகவும் இருந்தான். ஒருதொகை ஆயுதம் தாங்கிய கொள்ளைகளுக்கும் ஒரு பாலியல் வன்முறைக்கும் பொறுப்பாக இருந்தான். வறுமையால் பாதிக்கப்பட்ட கிறஹாமின் வாழ்க்கை பின்னணி அதற்கு அவனைதயார் செய்தது. இதற்கு சமமான பின்னணிகள் இன்னும் ஆயிரக்கணக்கானோரை இதற்கு தயார் செய்தது. ஆனால் அவனின் சிறை வாழ்க்கை அவனை மாற்றம் காணச்செய்தது; தீவிரவாதியாக்கியது.

கிரஹாம் இந்த உலகை விட்டுச் சென்றது ஒரு சில உதார குணங்களுடனாகும். அவனைப் போன்ற மக்கள் சமூக இறைச்சி அரைக்கும் இயந்திரத்துக்கு பலிகடாக்களானார்கள். இந்த உலகில் அமெரிக்காவைப் போல் மனித வளங்களை வீணடித்த வேறுநாடு கிடையாது. கிரஹாம் வன்முறை குற்றம் இழைத்தான். ஆனால் அவன் மரணதண்டனைக்காக காத்துக் கிடந்த 19வருட காலத்தில் அதிகாரபூர்வமான சமூகத்தினால் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு இழைக்கப்பட்ட உள, உடல் வேதனைகளை எங்ஙனம் எடைபோடுவது? ஒரு மனிதனை சிறைக்கூட்டுக்குள் இருந்து இழுத்து எடுத்து, ஒரு மேசையின்மேல் கட்டித் தொங்கவிட்டு பெரிதும் கவனமாக தயார் செய்யப்பட்ட நஞ்சுகளை அவனின் இரத்தத்துடன் கலக்கச் செய்யும் ஊசிகளை ஏற்றும் "சிறைக்கூண்டு உயிர் பறிக்கும் கோஷ்டியை" அணிதிரட்டும் ஒரு அமைப்புக்கு சாதகமாக எதைக் கூறுவது? அமெரிக்காவில் ஏதோ ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு கிழமையும் இடம்பெறும் கொலைப் பயங்கரங்களை கிரஹாமின் கொலை அம்பலப்படுத்தியுள்ளது. ஜனநாயகம் தொடர்பான அதன் பாசாங்குகளுக்கிடையேயும் முழுச்சமுதாயமும் இந்த வகையறாவைச் சேர்ந்த குற்றங்களுக்கு ஒரு பெரும்விலையைச் செலுத்துகின்றது.

கொலைத்தண்டனைகளை நேரில் தரிசித்த சாம்பல் நிறம் பூத்த முகங்களைக் கொண்ட பத்திரிகையாளர்கள் தொட்டு அச்சம் படர்ந்த பார்வையைக் கொண்ட புஷ் வரையில் அரசியல், வெகுஜனத்தொடர்புச் சாதன நிறுவனங்கள் பதட்டமும், தற்காப்பு அக்கறையும் காட்டின. இந்தச் சம்பவம் எதைச் செய்யப்போகின்றது?, பரந்த அளவிலான குமுறல் எதைச் செய்யும் என்பதை இவர்கள் அறியார்கள்.

இவர்கள் கத்தரிக்கப்பட்ட தமது பத்திரிகை செய்தி துணுக்குகளையே நம்புவார்கள். தமது பங்கு முதல் அந்தஸ்துகளால் தன்னுணர்வை இழந்துவிடும் இவர்கள் தீவிரவாத எதிர்ப்பு உள்ளடங்கலான தமது கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை ஒரு கடந்த காலத்தின் நிகழ்வாக கொள்கின்றனர். இவர்கள் வியாழக்கிழமை சம்பவங்களால் அதிர்ந்துபோயினர். இது திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. மக்களை மேலும் பயங்கரத்துக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட இது, பெருமளவுக்கு இதற்கு எதிர்மாறாகத் திரும்பியது. இது மக்களை உணர்வு பெறச்செய்யும் தொடக்கப் புள்ளியாகியது. மக்களை அரசியல் மந்த நிலையில் இருந்தும்கூட இது தட்டி எழுப்பியது.

கிரஹாமின் மரண தண்டனையும் அதன் எதிரொலியும் அமெரிக்க மக்கள் மீது ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஹன்ட்ஸ் வில்லிக்கு (Huntswille) வெளியில் நூற்றுக்கணக்கானோரின் ஆர்ப்பாட்டமும் -ஒஸ்டின், டெக்சாஸ், சான்பிரான்சிகோ, நொதாம்டன், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கூட்டங்களும் சமூக எதிர்ப்பின் ஒரு வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது. இது இன்னும் அதிகரிக்கும்.

இந்த அரசக் கொலையானது அமெரிக்காவின் விவகாரங்களின் நிஜ நிலைமையை தெளிவுபடுத்த உதவும். கோடீஸ்வரர்களை மகத்தானவர்களாக தூக்கிப்பிடிக்கும் ஒரு சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்கள் அதிகரித்த அளவிலான பயங்கரங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். அரை டசின் கொடூர விதிமுறைகள் மூலம் ஏழைகளும் ஒடுக்கப்படும் மக்களும் மரணத்துள் தள்ளப்படுகின்றனர். மற்றொரு அரச கொலையின் பலிகடாவாக உள்ள முமியா அபு-ஜமாலை (Mumia Abu-Jamal) காக்க இடம்பெறும் பிரச்சார இயக்கம் கிரஹாமுக்கு ஆதரவான பொதுமக்களின்அக்கறையின் மூலம் புதிய பலத்தைப் பெறும்.

ஒரு தொடர்ச்சியான இந்த கொலைத்தண்டனைகள், இதற்கு ஒன்றிணைந்து ஆதரவு வழங்கிய இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் (குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி) எதிரான குரோதத்தை மேலும் ஆழமாக்கும். உதாரணமாக உப-ஜனாதிபதி அல்கோரும் ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி ஆளுனர் (Governor) கிறே டேவிசும் மரணதண்டனையில் தாம் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்துவதற்கு கிரஹம் மரணத்தை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொண்டனர்.

அமெரிக்காவில் சமூக தீவிரமயமாக்க காலப்பகுதிகள் பொய்ச் சோடனை வழக்குகளுக்கும் மரண தண்டனைக்கும் எதிரான எதிர்ப்பின் வளர்ச்சி மூலம் அடிக்கடி தம்மை காட்டிக்கொண்டன. இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் தொழிலாளர்களின் போர்க்குணத்தின் வளர்ச்சியுடன் வரலாற்று ரீதியில்பிணைந்து கொண்டுள்ளது. 1950 பதுகளின் கடைப்பகுதியில் கறில் செஸ்மனின் (Caryl Chessman) வழக்கு-12ஆண்டு காலம் மரண தண்டனை வரிசையில்காத்துக் கிடந்ததன் பின்னர் இறுதியாககொலைத் தண்டனைக்கு உள்ளானர்-சமூக எதிர்ப்பின் ஒரு அவதானத்துக்கு உரிய விடயமாகியதோடு அதைத் தொடர்ந்துவந்த தசாப்தத்தின் தீவிரவாதத்தின் தூதனாகவும் மாறியது. இதற்கு முரணான விதத்தில் 1970பதுகளின் நடுப்பகுதியிலும் கடைப்பகுதியிலும் மரணதண்டனைக்கான ஆதரவின் பெருக்கம், மத்தியதர வர்க்கத்தினதும் தொழிலாளர் வர்க்கத்தினதும் கீழ் பகுதியினரின் ஒரு வலதுசாரி திருப்பத்தை எடுத்துக் காட்டியது.

உலகில் வாழும் மக்களில் பெரும் பகுதியினருக்கு கிரஹமின் மரணம் அமெரிக்க ஜனநாயக உரிமைகளுக்கும் பொதுவில் மனித உயிர் வாழ்க்கைக்கும் ஒரு ஆபத்தாக இருந்து கொண்டுள்ளதாக நம்பச் செய்வதை அதிகரிக்க வைக்கும். ஐரோப்பிய பத்திரிகைகள் பொதுவாக அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் வெளியிட்டுக்கொண்டன. அமெரிக்கா ஒரு காடையனாக அல்லது இன்னும் படு மோசமானவனாக கொள்ளப்பட்டது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரு மாதிரியாகக் கொள்ளக்கூடியதாக அமெரிக்க ஜனநாயகம் உள்ளது என்ற நம்பிக்கை பகிடிக்கிடமானதாகிவிட்டது. அமெரிக்கா மேலும் மேலும் ஒரு கடை கெட்ட அரசாக நோக்கப்படுகின்றது.

மரணதண்டனை கொள்கையின் விளைவுகளை பற்றி அரசியல் அமைப்புகளிடையே ஒருபதட்ட நிலை வளர்ச்சி கண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த அதிகாரபூர்வமான இரத்தப்பலி பொதுமக்களை அந்நியப்படுத்துவதோடு இந்த முழுஅமைப்பின் மீதான நம்பிக்கையையும் பாதித்துவிடுமோ என அவர்கள் கவலை கொண்டுள்ளனர். கிரஹமின் மேன்முறையீட்டை 5-4 என்ற விகிதத்தில் நிராகரித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த வெளிச்சத்தில் நோக்கவேண்டும்.

இறுதியாக கிரகமின் மரணதண்டனையை பற்றி பெருமளவிலான தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் என்ன செய்கிறார்கள் என்பது ஒரு தீர்க்கமான விடயமாகும். இது பயங்கரமானது என எண்ணுபவர்கள் இருக்கக் கூடும். ஆனால் அது ஒரு தடுமாற்றமாகும். ஏனையோர் இத்தகைய சம்பவம் மீண்டும் இடம்பெறாது எனக் கூறி தமது தலைகளை ஆட்டிக் கொள்கிறார்கள். சிலர் இதைப் புறக்கணித்துவிட்டு, தமது பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தக் கொலைத் தண்டனை ஒரு தற்செயலானது அல்ல. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக உறவுகளினுள்ளும் அரசியல் அமைப்பினுள்ளும் ஆழமாக வேரூன்றிக்கொண்டுள்ளது.

இந்த விடயத்தை ஏனைய சகல பிரச்சனைகளுக்கும் அப்பாற்பட்டதாக கொண்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கோ அல்லது குடியரசு, ஜனநாயக கட்சிகளுக்கோ மேன்முறையீடு செய்வதன் மூலம் மரண தண்டனைக்கு முடிவுகட்ட முடியாது. ஒரு நிஜமான ஜனநாயக, சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் அமைப்பாக அபிவிருத்தியடைவதன் ஒரு பாகமாக இதற்காக ஒரு புதிய அடிப்படையில் போராட வேண்டும்.