World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A reply to an LTTE supporter

Marxism and the national question in Sri Lanka

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்

மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்

பகுதி-1

By Peter Symonds
10 March 2001

Back to screen version

பின்வருவது தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளரான SK வழங்கிய இரண்டு பாகங்கள் கொண்ட பதிலின் முதல் பாகம். தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு தனியான தமிழ் நாடு கோரிப் போராடி வருகின்றது. ஷிரின் கடிதம் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயசுக்கும் ஷிஸிக்கும் இடையேயான முன்னைய கடிதப் போக்குவரத்தின் பேரில் கிடைத்ததோடு அவர் சோ.ச.க. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதனது அரசியல் முன்நோக்குக்கும் விமர்சனமற்ற ஆதரவு வழங்கத் தவறியமைக்காக சோ.ச.க.வைக் கண்டனம் செய்திருந்தார்.

SK மின் அஞ்சலின் முழு விபரத்தை பின்வரும் இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்:

SK யிடம் இருந்து வந்த கடிதம்

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்லது தடுத்துவைக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலை செய்தது சம்பந்தமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையை கண்டுகொள்ள விரும்புவோர்:

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தமிழீழ விடுலைப் புலி ஆதரவாளருக்கு (LTTE) பதிலளிக்கிறது (செப்டம்பர் 28, 2000)

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்: யுத்தத்தையும் சமூக அசமத்துவத்தையும் முடிவுக்கு கொணரும் ஒரு சோசலிச வேலைத்திட்டம் (செப்டம்பர் 26, 2000)

அனைத்துலக பாதுகாப்பு பிரச்சாரத்தின் வெற்றி தமிழ் போராட்டத்தை பலப்படுத்துகின்றது
சோ.ச.க.வும் இலங்கை- ஈழம் சோசலிச ஐக்கிய அரசுகளுக்கான போராட்டமும்
(டிசம்பர் 1, 1998)

அன்பின் SK,

தங்களின் மின் அஞ்சலில் உள்ள பல விடயங்கள் விஜே டயசினால் ஏற்கனவே விரிவாகப் பதிலிறுக்கப்பட்ட உங்களின் சகா SR ஆல் குறிப்பிடப்பட்டவற்றை அப்படியே மீளக் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் நீங்கள் ஒன்றில் புறக்கணித்துவிட்ட அல்லது பாரதூரமாகக் கொள்ளத் தவறிவிட்டவற்றை சுற்றி வாதங்களை வளர்ப்பதில் எதுவித அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. உங்கள் இருவரில் எவரும் சரி 1998 டிசம்பர் 1ம் திகதி பிரசுரிக்கப்பட்ட "சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கை-ஈழம் சோசலிச ஐக்கிய அரசுகளுக்கான போராட்டமும்" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையை வாசித்ததாக தெரியவில்லை. அது பொதுவில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் சிறப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாகவும் அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு விரிவாக விளக்குகின்றது.

ஆனால் நான் ஒரு அடிப்படையான விடயத்தை இங்கு திரும்பக் குறிப்பிடுகின்றேன்: மார்க்சிசம் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்று நலன்களை அடிப்படையாக கொண்டு ஒரு சுயாதீனமான முன்நோக்கினை அபிவிருத்திசெய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆதலால் எமது ஆய்வு அடிப்படையாகக் கொண்டுள்ளது வர்க்கத்தையே அல்லாமல் இனம், தேசியம் அல்லது இனக்குழுவை அல்ல.

லெனினைத் தவறாக புரிந்து கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் மார்க்சிஸ்டுகளின் வேலை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பிரிவினைவாதக் குழுக்களின் முகாம் சகாக்களாக மாறுவது அல்லது அவர்கள் காட்டிக் கொடுப்பதாக தோன்றுகையில் தேசிய இயக்கத்தின் தலைமையை கைப்பற்றுவது என நீங்கள் நம்பிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. ஆனால் மார்க்சிஸ்டுகளின் இலக்கு பெரிதும் வேறுபட்ட ஒன்று. தனியான தேசிய அரசுகளை ஸ்தாபிதம் செய்வது அல்லாது சமுதாயத்தை சோசலிச வழியில் மறுநிர்மாணம் செய்ய அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும். அந்தப் பணியின் ஒரு பாகமாக நாம் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும்- தேசிய ஒடுக்குமுறையின் சகல வடிவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது உட்பட -ஜனநாயக உரிமைகளையும் காக்கப் போராடுகின்றோம். அதற்காக உறுதியோடு தொடர்ந்து போராடுவோர் நாம் மட்டுமே.

1998 நா.அ.அ.கு. (ICFI) அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது போல் தேசிய இனப் பிரச்சினைக்கும் சமூக பிரச்சினைக்கும் இடையேயான உறவு மார்க்சிச இயக்கத்தினுள் ஒரு நீண்ட வரலாறு படைத்த சிக்கலான ஒன்றாகும். அது விளக்கியுள்ளது போல் லெனினும் போல்ஷிவிக்குகளும் "சுயநிர்ணய உரிமை"க்கான சுலோகத்தை 20பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால நிலைமைகளுக்கு ஏற்ப வாதிட்டனர். காலனித்துவ அரைக்-காலனித்துவ ஆட்சி உட்பட்ட பூகோளத்தின் பல பாகங்களில் முதலாளித்துவ சொத்து உறவுகள் அப்போதுதான் தலையெடுத்து வந்தது. ரூஷ்யாவில் ஸார் ஆட்சியாளர்கள் பல்வேறு வகைப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மட்டங்களைக் கொண்ட எண்ணற்ற இனக்குழுக்களை ஆட்சி செய்து வந்தது. லெனினின் கொள்கை ஸார் அடக்குமுறையாளர்களால் உருவாக்கப்பட்ட வன்மங்களில் இருந்து தலையெடுப்பதையும் தேசிய சிறுபான்மையினர்களிடையே முதலாளி வர்க்கத் தலைவர்களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதையும் இலக்காகக் கொண்டிருந்தது.

லெனின் விளக்கியது போல் சுயநிர்ணய உரிமை ஒரு "எதிர்மறை" (Negative) கோரிக்கையாக விளங்கியது. இது போல்ஷிவிக்குகள் தனிநாட்டை உருவாக்க வக்காலத்து வாங்கினார்கள் என்பதை குறித்து நிற்கவில்லை. ஆனால் மாறாக அக்கட்சி தேசிய சிறுபான்மையினர் மீது ரஷ்யாவின் பிடியை வைத்துக் கொண்டிருக்க கையாளப்பட்ட காட்டுமிராண்டித்தனமானதும் அடக்குமுறைமிக்கதுமான நடவடிக்கைகளை எதிர்த்தது. லெனின் பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தலைவர்கள்- அவர்கள் ரூஷ்யர்களானாலும் சரி எஸ்டோனியர்களானாலும் சரி லத்வியன்களானாலும் சரி அல்லது எந்த வகையறாவைச் சேர்ந்தவர்களானாலும் சரி எங்குமே ஒருபோதும் விமர்சனமற்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. உண்மையில் மென்ஷிவிக்குகளுக்கு எதிரான அவரது நீண்ட விவாதம் தேசிய முதலாளி வர்க்கம் ஸார் பிரபுத்துவத்துக்கு எதிராக ஒரு உறுதியான போராட்டத்தை நடாத்தவோ அல்லது தேசிய ஜனநாயகப் பணிகளை இட்டு நிரப்பவோ இலாயக்கற்றது என்பதை வலியுறுத்துவதை மையமாகக் கொண்டு இருந்தது.

லியொன் ட்ரொட்ஸ்கி இதைக் காட்டிலும் தூரப் பார்வை கொண்ட முடிவுகளுக்கு வந்தார். அவர் தமது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் தொழிலாளர் வர்க்கம் ஈடாட்டம் கண்டு போயுள்ள முதலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் ஒடுக்கப்படும் வெகுஜனங்களின் தலைமையை வெற்றிகாணாது ஆட்சிக்கு வரமுடியாதது மட்டுமன்றி, அங்ஙனம் ஆட்சிக்குவந்த பின்னர், வெறுமனே முதலாளித்துவ ஜனநாயக பணிகளை அமுல் செய்வதோடு நிறுத்திக் கொள்ளவும் முடியாது எனவும் விளக்கினார். அது அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு இணைந்த பாகமாக முதலாளித்துவப் சொத்து உறவுகளினுள் கட்டாயமாக ஆழமாக ஊடுருவிச் செல்லவும் தள்ளப்பட்டுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அறிக்கை விளக்கியது போல்: தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அதன் மூலம் அதனது சிறப்பு முக்கியத்துவத்தையோ அல்லது அவசியத்தையோ இழந்து விடாது. ஆனால் தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் ஒடுக்கப்பட்டோரின் ஒரு புரட்சிகரக் கூட்டினை ஸ்தாபிதம் செய்வதுடன் ஏனைய சகல ஜனநாயகப் பணிகளைப் போன்று தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான ஒரு புதிய சமூக ஒழுங்கிற்கான போராட்டத்தினுள் இது கொணரப்படுகின்றது.

"மாறாக தேசிய விடுதலை சமூக விடுதலையில் இருந்து வேறுபடுத்தப்பட்டு இருக்கும் வரையும் அது ஒரு அரசியல் கற்பனையாகவே விளங்கும். இந்திய, சீன மற்றும் காலனித்துவ மக்களின் தேசிய சுதந்திரத்துக்கான போராட்டங்களை ஆதரிக்கும் அதே வேளையில் ட்ரொட்ஸ்கி 1940ல் நான்காம் அகிலத்தின் சார்பில் எழுதுகையில் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்: "காலவதியான தேசிய அரசுகள் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியை இனியும் எதிர்பார்க்க முடியாது. வீழ்ச்சி கண்டுவரும் முதலாளித்துவத்தினால் சூழப்பட்ட நிலையிலும் ஏகாதிபத்திய முரண்பாடுகளில் சிக்குண்டு போன நிலையிலும் ஒரு பின்தங்கிய அரசின் சுதந்திரம் தவிர்க்க முடியாத விதத்தில் ஒரு அரைக் கற்பனையானதாயும் உள்வாரி வர்க்க முரண்பாட்டு நிலைமைகளினுள் அதனது அரசியல் ஆட்சியும் வெளிவாரி நெருக்குவாரங்களும் தவிர்க்க முடியாத விதத்தில் தமது சொந்தமக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தினுள்ளேயே செல்லும். துருக்கியின் 'மக்கள்' கட்சி, சீன குவாமின்டாங், இந்தியாவில் நாளைய காந்தி ஆட்சி இந்த வகையைச் சேர்ந்தவை."

"தமிழ் விடுதலைப் போராட்டத்துக்கு" நிபந்தனையற்ற ஆதரவு -உண்மையில் நீங்கள் விமர்சனமற்ற ஆதரவையே கருதுகின்றீர்கள்- வழங்கும்படி நீங்கள் விடுக்கும் அழைப்பு லெனின் அல்லது ட்ரொட்ஸ்கியுடன் இனங்காணக்கூடியது அல்ல. மார்க்சிசத்தை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்டு உண்மையில் அதன் அடிப்படைக் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்தவர்களுடனேயே இதை இனங்காண முடியும். பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளி வர்க்கத் தலைமைகளுக்கு அடிமைத்தனமாக இயைந்து போவதை நியாயப்படுத்தும் பொருட்டு பழைய மென்ஷிவிக் கோட்பாடுகளை புதுப்பித்து, லெனினின் "சுயநிர்ணய உரிமை" கோரிக்கையை சீரழித்த ஸ்ராலினிச அதிகாரத்துவமே இதைச் செய்தது. பல்வேறுபட்ட தீவிரவாதப் போக்குக்களிடையேயும் "சுயநிர்ணயம்" பல்வேறுபட்ட பிரிவினைவாத இயக்கங்களுக்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்குவதுடன் இனங்காணப்பட்டு வருகின்றது.

லெனினின் காலத்தில் இருந்து தேசிய இயக்கங்கள் மேலும் சீரழிந்து போயுள்ளன. விஜே டயஸ் தமது பதிலில் விளக்கியது போல் இந்த தேசிய விடுதலை இயக்கங்களின் அடிப்படைப் பண்பு உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் தாக்கத்தின் கீழ் ஆழமாக மாற்றம் கண்டு போயிற்று. அவை அனைத்தும்- தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட- தமது பல்வேறுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புகளையும் சோசலிச நடிப்புகளையும் அடியோடு கைவிட்டன. அத்தோடு தமது சொந்த குட்டியரசுகளை ஸ்தாபிதம் செய்வதற்கு ஏதோ ஒரு பெரும் வல்லரசினது ஆதரவை அப்பட்டமாக நாடுகின்றன. இதற்குக் கைம்மாறாக இவை ஒவ்வொன்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தமது "சொந்த" தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டலுக்கு வழங்குகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய சோ.ச.க.வின் முக்கிய விமர்சனம் அது "தேசிய விடுதலைப் போராட்டத்தை அரைவழியில் காட்டிக் கொடுக்கின்றது" என்பது அல்ல. ஆனால் அதற்கு மாறாக அது குறிப்பிடும் இலக்குகளை அடைவதில் பூரண வெற்றி காணினும் கூட தமிழரின் பரந்த பெரும்பான்மையினரின் தேவைகளை இட்டு நிரப்ப அது இலாயக்கற்றது என்பதேயாகும். தமிழீழ விடுதலை புலி தலைவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஏழைகளதும் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த என்ன செய்யப் போகிறார்கள்? நிறைவேற்றப்படாத தேசிய, ஜனநாயக பிரச்சினைகளுக்கு வழங்கும் தீர்வு என்ன? அவர்கள் எந்த விதத்தில் தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் (ANC) அல்லது மத்திய கிழக்கின் பாலஸ்தீன விடுலை இயக்கத்தில் (PLO) இருந்து வேறுபடப் போகின்றார்கள்? தீவின் வடக்கு, கிழக்கில் தற்சமயம் வாழும் சிறுபான்மை குழுக்கள்- சிங்களவர், தமிழ் முஸ்லீம்கள்- சம்பந்தமான அவர்களின் அணுகுமுறை என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க இலாயக்கற்றது. ஏனெனில் அவ்வாறு செய்வது "தமிழ் தேசியத்தின் அனைத்து வர்க்கங்களையும்" பிரதிநிதித்துவம் செய்வதற்கு மாறாக அவர்கள் ஒரு குறுகிய குட்டி முதலாளித்துவ தட்டினரில் சார்ந்து கொண்டுள்ளதை அது அம்பலப்படுத்திவிடும். பீ.எல்.ஓ.வையும் ஆபிரிக்க தேசிய காங்கிரசையும் (ANC) போல் விடுதலைப் புலிகள் முதலாளித்துவச் சுரண்டலை தொடரும் கொடுக்கல் வாங்கல்களை ஏகாதிபத்தியத்துடன் செய்து கொள்ள முயற்சிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் சர்வதேச நிதி மூலதனத்துக்கும், பெரும் வல்லரசுகளுக்கு அரசியல் ரீதியிலும் அடியோடு அடிபணிந்து போன ஒரு முதலாளித்துவ தமிழ் ஈழத்தில் "தேசிய சுதந்திரம்" உண்மையில் ஒரு அரசியல் கற்பனையாக விளங்கும் என்பதை வெகுவிரைவில் கசப்பான ஏமாற்றத்துடன் காண்பர்.

வரலாற்று பிரச்சனைகள்

எவ்வாறெனினும் தங்களின் மின் அஞ்சலுக்கு பதிலளிக்கும் எனது நோக்கம், உங்களின் கருத்துக்களுக்கு லெனினின் ஆக்கங்களிலோ அல்லது ஏனைய மார்க்சிஸ்டுகளின் படைப்புக்களிலோ ஆதரவைத் தேடிக் கொள்ள முடியாது என்பதை விளக்குவதோ அல்லது எங்களின் கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு உங்களைத் தூண்டுவதோ அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விமர்சனமற்ற ஆதரவை வழங்கும் பாதையில் செல்லாத சித்தாந்த பொதியாக நீங்கள் வெறுப்புடன் கணிக்கும் மார்க்சிசத்துக்கோ மார்க்சிஸ்டுகளுக்கோ அல்லது "வர்க்கப் போராட்ட வடிவங்களுக்கோ" உங்களுக்கு கால அவகாசம் கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக்கி விட்டீர்கள்.

ஆனால் SR போலல்லாது நீங்கள் வரலாற்றின் அரங்கில் துணிச்சலுடன் காலடி வைத்துள்ளீர்கள். அத்தோடு அங்ஙனம் செய்கையில் நீங்கள் அதை அறிந்தோ அல்லது அறியாமலோ மார்க்சிசத்தையும் வர்க்கரீதியான ஆய்வையும் நிராகரிப்பதனால் வரும் பிற்போக்கு தாக்கங்களை பெரிதும் பூரணமாக அம்பலப்படுத்த சமாளித்துக் கொண்டுள்ளீர்கள். இலங்கையின் வரலாற்றை "இனம்" "தேசியம்" என்ற அர்த்தத்தில் மறுவியாக்கியானம் செய்வதன் மூலம் நீங்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை ஒதுக்கிவிட அல்லது பொய்மைப் படுத்த தள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமன்றி பல்வேறு தமிழ், சிங்கள இனவாத, மத இயக்கங்கள் பொதுவில் கொண்டிராத ஒரு முற்போக்கு பண்பை அவற்றுக்கு வழங்கவும் நேரிட்டுள்ளது.

உங்களை வழிநாடாத்தும் அளவீடாக (criterion) "இனத்தை" பயன்படுத்துவதன் காரணமாக நீங்கள் சிங்கள சோவினிச சித்தாந்த வாதிகள் பயணம் செய்யும் அதே படகில் பயணம் செய்வதால் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்கு (Buddhist revivalist movement) புகழ்பாட நேரிட்டுள்ளது. பல இடங்களில் நீங்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் "சிங்கள பெளத்தர்களின் ஜனநாயக அபிலாசைகளின் சாராம்சத்தை ஈடுசெய்ய பரிதாபமான முறையில் தவறிவிட்டது" எனக் கூறும் அடிப்படை கருத்தை மீள முன்வைக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் 19ம் 20ம் நூற்றாண்டுகளின் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்துடனும் "தமக்கேயுரிய பாணியில் பிரித்தானிய ஆட்சியை எதிர் கொண்ட" அனகாரிக தர்மபால போன்ற புள்ளிகளுடனும் இனங்காட்டிக் கொள்கின்றீர்கள்.

அத்தோடு நீங்கள் "என்னதான் தவிர்க்கமுடியாத வரையறைகளும் குறைபாடுகளும் இருந்த போதும் ஆறுமுகம் நாவலர் போன்ற தமிழ் தேசாபிமானிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிஜ தமிழ் காலனித்துவ எதிர்ப்பு இயக்கம்... பெரிதும் முற்போக்கானது" எனக் கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அதனது வடிவத்தினால் (அல்லது தோற்றத்தினால்) வெளித்தள்ளப்படினும் அது அவர்களின் "வர்க்கப் போராட்ட" வடிவத்தினுள் பெரிதும் ஒத்து இணங்கிப் போகாது விடினும் அவர்கள் ஒரு சாதகமான வழியில் அதனுடன் தொடர்புபடுத்த தவறியது ஏன் என்பதை விளக்கும்."

நீங்கள் அதைத் தொடர்ந்து -இன்றைய யுத்தத்துக்கு இட்டுச் சென்ற இன மோதுதல்- "வீழ்ச்சியடைந்த காலனித்துவத்துக்கு பிந்திய சதிகளின்''பின் ஏற்பட்டதற்கான காரணங்களை Ü). ஒரு இரண்டு தேசிய தீவில் ஒற்றையாட்சி அரசு தன்னிச்சையாக திணிக்கப்பட்டமை, ஆ). சோசலிஸ்டுகள் இந்த அநீதியான அரசியலமைப்பு தீர்வை சவால் செய்ய தவறியமை, இ). சோசலிஸ்டுகள் இரண்டு தேசிய மறுமலர்ச்சி இயக்கங்களையும் கணக்கெடுக்கத் தவறியமை" என்பனவே என ஊகிக்கச் செய்கின்றீர்கள்.

மறுவார்த்தையில் சொன்னால் சிங்கள தமிழ் மக்களிடையேயான இனவாத இயக்கங்களை சோசலிஸ்டுகள் விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டு ஒத்துப் போயிருக்க அல்லது இனவாத அடிப்படையில் குட்டி இலங்கைத் தீவை கூறுபோட பிரச்சாரம் செய்ய "தவறியமை" இன்றைய இரத்தம் தோய்ந்த யுத்தத்துக்கான காரணமாகக் கொள்ளப்படுகின்றது. உண்மையில் நீங்கள் காட்ட முயற்சிப்பது எல்லாம் உலகை இனவாத கண்ணாடிகளூடாக தரிசிக்க எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் யதார்த்தத்தை தவிர்க்க முடியாத விதத்தில் தலைகீழாக்குவதில் போய் முடியும் என்பதையேயாகும்.

காலனித்துவ எதிர்ப்பு குணாம்சங்களை கொண்டு இருந்ததாக நீங்கள் குறிப்பிடும் இயக்கங்கள், முக்கியமாக பிற்போக்கு பார்வையைக் கொண்டிருந்ததோடு பிரித்தானிய காலனித்துவத்தின் தாக்கங்களுக்கு எதிராக சுதேச ஆளும் பிரமுகர்களது அந்தஸ்தையும் அவர்களது கலாச்சார சீர்திருத்தங்களையும் தொடர்ந்து பராமரிப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தன என்பதை நாம் காட்டுவோம். இலங்கை முதலாளி வர்க்கம் சோசலிச இயக்கத்துக்கு எதிராக இந்த சித்தாந்த வேர்களை அணைத்துக் கொள்ள தள்ளப்பட்டது என்ற உண்மையானது எந்த விதமான முற்போக்கு போராட்டத்தையும் நடாத்த முற்றிலும் இலாயக்கற்ற அதன் தன்மையை அம்பலப்படுத்துகின்றது.

1940 பதுகளிலும் 1950பதுகளின் ஆரம்ப காலப்பகுதியிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தன்பக்கம் கணிசமான அளவு சிங்கள, தமிழ் தொழிலாளர் தட்டினரை வெற்றி கொண்டது. இனவாதத்துக்கும் வகுப்புவாதத்துக்கும் எதிராக நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வர்க்க முன்நோக்குக்காக பிரச்சாரம் செய்வதன் மூலம் அது இதைச் சாதித்தது. அதனது நிஜமான தோல்வி, இப்போது நீங்கள் சோசலிச சமத்துவக் கட்சிக்கு பிரேரிக்கும் கொள்கைகளுக்கு இயைந்து போனதன் காரணமாக ஏற்பட்டது. 1950பதுகளில் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) படிப்படியாக சிங்கள இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (SLFP) அடிபணிந்து போகச் செய்தது. இந்த அரசியல் நாற்றமெடுப்பு 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டதன் மூலம் உச்சக் கட்டத்தை அடைந்தது. இந்தக் காட்டிக் கொடுப்பு தொழிலாளர் வர்க்கத்துக்கு பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணியதோடு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) «ü.M.H. (JVP) போன்ற இனரீதியான அமைப்புக்களின் தோற்றத்துக்கும் இட்டுச் சென்றது.

மறுமலர்ச்சி இயக்கங்கள்

ஜனநாயக, முற்போக்கு பண்புகள் கொண்டதாக நீங்கள் வருணிக்கும் இலங்கையின் ஆரம்பகால இயக்கங்களின் தன்மை என்ன?

பெளத்த மறுமலர்ச்சி இயக்கம், 19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பிரித்தானியரது அரசியல், பொருளாதார வாழ்க்கையின் மேலாதிக்கத்துக்கும் அவர்கள் பயிரிட்டு இருந்த ஆங்கிலக் கல்வி கற்ற, கிறிஸ்தவ மத பிரமுகர்களுக்கு எதிராகவும் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் தோன்றியது. இது தோமஸ் அமரசூரிய, சைமன் பெரேரா அபேவர்தன, டொன் டேவிட் ஹேவாவித்தாரண போன்ற செல்வந்த சிங்கள நிலச்சுவாந்தர்கள், வர்த்தகர்களால் தலைமை தாங்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டது. இதன் முன்நோக்கு கடந்த காலத்துக்கு திரும்புவதாக விளங்கியது. இந்த மறுமலர்ச்சிவாதிகள் காலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிராக பயணம் செய்த போதும் அது பெளத்த உயர் பீடத்தினர், உயர்சாதி பிரபுக்கள், சிங்கள கல்விகற்ற புத்தி ஜீவிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் ஆசாபாசங்களையும், மனக்குறைகளையும் பிரதிபலித்தன. இவர்கள் பிரித்தானியரின் கீழ் தமது அந்தஸ்தையும் சலுகைகளையும் இழந்து போயிருந்தனர்.

ஹேவாவித்தாரண பிற்காலத்தில் அனகாரிக தர்மபால என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். இவர் இந்த இயக்கத்தின் பிரதம சித்தாந்தவாதியாக விளங்கினார். இவர் சிங்கள புராணக் கதைகளில் இருந்தும் 6ம் நூற்றாண்டின் பெளத்த நூலான மகாவம்சத்திலிருந்தும் திரட்டிக் கொண்ட கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கினார். அது சிங்களவர்களை வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியரின் வம்சாவளிகளான ஒரு "அற்புதமான இனம்" எனப் பிரகடனம் செய்து கொண்டது. பெளத்தத்தின் பாதுகாவலர்கள் எனவும் இலங்கைத்தீவை ஒரு "காட்டுமிராண்டிகளின் நாசங்களால் பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் சுவர்க்கம் ஆக்கியவர்கள்" எனவும் கூறியது.

அவர் பிரித்தானியருக்கு எதிராக ஒரு அறவழி புனித மதப் போருக்கு அழைப்பு விடுத்து எழுதுகையில் கூறியதாவது: புராதன மகத்தான சிங்களவர்களுக்கு இழிவான பழக்கவழக்கங்கள் இன்று ஐரோப்பிய சமூகவியலின் செல்வாக்கின் கீழ் சகித்துக் கொள்ளத் தக்கவையாகிவிட்டன: அபின், சாராயம், மதுபானம், கஞ்சாவும் ஏனைய நஞ்சுகளும் அவை மக்கள் மீது ஏற்படுத்தும் நாசகார விளைவுகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் விநியோகிக்கப்படுகின்றன... ஒரு பழைய வரலாற்று இனத்தின் இனிய, மிருதுவான, மென்மையான ஆரிய குழந்தைகள் விஸ்கி குடிப்பதன் மூலமும் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமும் மத நம்பிக்கையற்ற வயிற்றுமாரி தெய்வங்ளுக்கு பலியிடப்பட்டு வருகின்றது. எவ்வளவு காலம் அந்தோ எவ்வளவு காலம் இந்தக் கொடுமை இலங்கையில் நின்று பிடிக்கும்?"

ஆரம்பத்தில இந்த மறுமலர்ச்சி இயக்கம் பிரித்தானியருக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டதாக விளங்கியது. வெளிப்படையாக தமிழர் எதிர்ப்பானதாக இல்லாத போதிலும் இதனது இனவாத குணாம்சங்கள் தமிழ் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மூலம் ஏற்கனவே வெளிப்பாடாகி இருந்தது. 1915ல் சிங்கள செல்வந்தர்களால முஸ்லீம்களுக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்ட இனக் கலவரங்கள் இடம்பெற்ற சிறு காலத்துள் தர்மபால எழுதியதாவது: சிங்களவர்களுக்கு பெளத்தம் இல்லாவிடின் மரணம் விரும்பத் தக்கது. பிரித்தானிய அதிகாரிகள் சிங்களவர்களை சுடலாம், தூக்கிலிடலாம் அல்லது எதையும் செய்யலாம். ஆனால் முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஒரு கெட்ட இரத்தம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்."

1930பதுகளில் பெளத்த மறுமலர்ச்சியின் ஆதரவாளர்கள் நாஸி ஜேர்மனியையும் ஆரியன் மேலாதிக்கம் பற்றிய இனவாதக் கோட்பாடுகளையும் வெளிவெளியாக ஆதரித்தனர். இலங்கை தொழிற் கட்சியை ஸ்தாபிதம் செய்து, கொழும்பில் தொழிற்சங்கங்களை அமைத்த ஏ.ஈ.குணசிங்க சோசலிச லங்கா சமசமாஜக் கட்சியின் வளர்ச்சி கண்டு வந்த செல்வாக்கை எதிர்கொள்ளும் பொருட்டு தென்னிந்திய கேரளாவில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தில் ஈடுபட்டார்.

1936ல் ஒரு எழுத்தாளர் குணசிங்கவின் பத்திரிகையான 'வீரயா'வில் (Hero) எழுதுகையில் சிங்கள இனம் "ஒரு நற்குணமும் உறுதியும் கொண்ட மக்கள் குழு- ஆரிய இனத்தை ஆழிவில் இருந்து காக்கும் கொள்கைகளை அமுல் செய்யும் ஹிட்லர் போன்ற ஒரு மாபெரும் நற்குணமும் உறுதியும் கொண்ட மற்றொரு மாவீரனை தலைவனாகக் கொண்டிருக்க வேண்டும்" என்றது. இதே இதழில் வெளியான மற்றொரு கட்டுரையில் ஒரு எழுத்தாளர் வெளிநாட்டவரை திருமணம் செய்வதை தடை செய்யும் நாஸி நடவடிக்கைக்கு இணக்கமாக எழுதி இருந்தார். "ஆரியர் பிள்ளைகளுக்கும் ஆரியர் அல்லாதார் பிள்ளைகளுக்கும் இடையிலான திருமணங்கள் எந்தவொரு கற்பும் அற்றதாக விளங்கும்" என்ற ஹிட்லரின் வெளிநாட்டார் மீதான வெறுப்பறிக்கையாக அது விளங்கியது.

சுருங்கச் சொன்னால் எழுச்சி கண்டு வந்த சோசலிச இயக்கம் முற்றிலும் இன, மத அடிப்படையில் சிங்களவர்களை ஐக்கியப்படுத்தும் பொருட்டு குணசிங்க அல்லது 1932ல் சிங்கள மகா சபாவை அமைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்ற வலதுசாரி அசிங்கங்களை எப்படி "விபரித்திருக்கவேண்டும்''? சமசமாஜ கட்சி தலைவர்களின் பிற்கால அரசியல் நாற்றமெடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் சிங்கள பெளத்த சோவினிச சித்தாந்தங்களுக்கு எதிராக 1930பதுகளிலும் 1940பதுகளிலும் கடைப்பிடித்த கொள்கைப்பிடிப்பான அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டனர்.

1939ல் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா ஆற்றிய ஒரு உரையில் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபை "ஒரு ஆபத்தான பிற்போக்கு அமைப்பு" என சரியான விதத்தில் எச்சரிக்கை செய்தார். "இதனது அழைப்பின் தன்மை அரசியல் ரீதியில் பின்தங்கிய கண்டி மாகாணத்திலும் கீழ்நாட்டின் ஜாதி நோக்குடைய பகுதிகளிலும் நல்ல செல்வாக்குப் பெற்றதில் இருந்து நன்கு தெளிவாகியது. வேறு சூழ்நிலைகளில் இது மண்ணிற பாசிசத்தின் (ஜேர்மன் பாசிசத்தின்) உள்ளூர் வகையறாக்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்திருக்கும். ஆனால் இருந்து கொண்ட நிலைமைகளின் படி இது தலைமை இல்லாததாலும் ஒரு குறுகிய சமூக அடிப்படை காரணமாகவும் வரலாற்று சக்திகளின் தன்மை காரணமாகவும் இது தோல்வியின் விதிக்கு உள்ளானது. எந்த விதத்திலும் இது முதலாளி வர்க்க எதிர்த்தாக்குதலின் மற்றொரு வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு இருந்தது."

நீங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் அடிப்படை அரசியல் தகவமைவில் தெற்கில் இருந்து வந்த அதனது சிங்கள பெளத்த சகாவில் இருந்து வேறுபட்டது அல்ல. நீங்கள் ஒரு "தமிழ் தேசாபிமானி"யாகக் கொண்டாடும் ஆறுமுக நாவலர் தர்மபாலவைப் போல் பிரித்தானியரால் அவர்களது காலனித்துவ ஆட்சியை தாங்கிப் பிடிக்க விதைக்கப்பட்ட கிறீஸ்தவ தட்டினருக்கு எதிராக பாரம்பரிய தமிழ் மேல்தட்டினரின் நலன்களைக் கட்டிக் காக்க முயன்றார். கிறிஸ்தவ மிஷனரிகளின் (Missionaries) செல்வாக்கை எதிர்கொள்ளும் பொருட்டு அவர் கிறிஸ்தவத்துக்கு எதிராக வாதங்கள் நிறைந்த கட்டுரைகளை எழுதினார். சைவமதத்தின் மகத்துவத்தை காக்கும் நிலைப்பாட்டில் இருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டதோடு தனது சொந்த சைவசமய பாடசாலைகளையும் ஸ்தாபிதம் செய்தார். அவரது நூல்களில் பலவும் இந்து சாதி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இலங்கை வரலாற்றாசிரியர் ஒருவர் நாவலரைப் பற்றியும் "இந்து மறுமலர்ச்சி" பற்றியும் கருத்து தெரிவிக்கையில் "எவ்வாறெனினும் அவர் தலைமை தாங்கிய இயக்கம் (இந்து) வைதீகத்தை பலப்படுத்தியதோடு சாதி முறையின் அட்டூழியங்களை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை" என கவனமாக குறித்து வைத்துள்ளார்.

நாவலரின் சீடர்கள் சைவசமயத்தை பிரச்சாரம் செய்யும் பொருட்டு சைவ பரிபாலன சபையை வடக்கிலும் பின்னர் கொழும்பிலும் ஸ்தாபிதம் செய்தனர். அவரின் இரண்டு முக்கிய ஆதரவாளர்கள் -யாழ்ப்பாண செல்வந்த குடும்பச் சகோதரர்களான பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம்- தீவின் அரசியலில் பிரபல்யம் பெற்று விளங்கினர். நாவலரின் ஆதரவோடு இராமநாதன் காலனித்துவ சட்டசபை உறுப்பினரானதோடு சர்வஜன வாக்குரிமையை எதிர்ப்பதிலும், உயர் சாதி இந்துக்களின் சலுகைகளைக் காப்பதிலும் பிரித்தானிய ஆட்சிக்கு தமது விசுவாசத்தை காட்டிக் கொள்வதன் மூலமும் தம்மை பிரபல்யம் பெறச் செய்தார். காலனித்துவ நிர்வாகத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளின் பேரில் இராமநாதனுக்கும் அருணாசலத்துக்கும் பிரித்தானியர் சேர் (Sir) பட்டம் வழங்கி கெளரவித்தனர்.

நீங்கள் புகழ்ந்து பாராட்டும் அந்த "நிஜ தமிழர் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின்" வர்க்கத் தன்மை அத்தகையதாக விளங்கியது.

சுதந்திரம்

பிரித்தானியருக்கும் உள்ளூர் -தமிழ், சிங்கள- ஆளும் பிரமுகர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட சுதந்திர ஒப்பந்தத்தை எதிர்ப்பது சம்பந்தமாக ட்ரொட்ஸ்கிச இயக்கம் வகித்த நிலைப்பாட்டை நீங்கள் முற்றிலும் சம்பந்தமற்ற ஒன்று என தள்ளுபடி செய்கின்றீர்கள். உங்களின் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டின்படி கொள்கை பிடிப்பான அடிப்படை விவகாரம் "இரண்டு தேசியங்களின் தீவின் மீது ஒற்றையாட்சி தன்னிச்சையாக திணிக்கப்பட்டது" என்பதேயாகும். "அச்சமயத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடம் இருந்து ஈழம், ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச குடியரசுக்கான அழைப்பு வெளிப்படாதது விந்தையானது இல்லையா!" என நீங்கள் வியக்கின்றீர்கள்.

ஒரு ஈழம், ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச குடியரசுக்கான சுலோகத்தை எழுப்பும் பிரச்சினை அச்சமயத்தில் ஒரு தமிழீழம் தனி அரசுக்கான கணிசமான இயக்கம் தமிழர்களிடையே இல்லாததால் தோன்றவில்லை. உண்மையில் அன்றைய தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஒரு சுயாதீனமான தமிழ் அரசு பற்றிய பிரச்சினையில் மட்டுமன்றி அவர்களது சிங்கள சகாக்களைப் போல் மொத்தத்தில் சுதந்திரம் பற்றிய பிரச்சினையிலும் "ஈடாட்டம் கண்டு" போயிருந்தனர்.

காந்தியும் நேருவும் ஏனைய முதலாளித்துவ அரசியல்வாதிகளும் காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த இந்தியா போலல்லாது இலங்கையில் அவர்களது சகாக்கள் எவருமே குறிப்பிடத்தக்க எந்த ஒரு பாத்திரத்தையும் வகிக்கவில்லை. காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) தலைமை தாங்கியது. அதனது யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக 1940ல் அது சட்ட விரோதமாக்கப்பட்டதோடு இரகசியமாகத் தொழிற்படவும் தள்ளப்பட்டது. 1942ல் சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்கு ஓட்டம் எடுத்ததன் பின்னர் லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் கட்சியை ஒரு அகில இந்திய கட்சியாக- இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியாக (BLPI)- ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக- மாற்றியமைத்தனர்.

உங்களது வாதத்தின்படி நீங்கள் 1940பதுகளில் இலங்கை சோசலிஸ்டுகள் பிரித்தானிய இலங்கையில் இரண்டு தனியான தேசிய அரசுகளை சிருஷ்டிப்பதற்கான உறுதியான வக்கீல்களாக இருந்திருக்க வேண்டும் என்கின்றீர்கள். அக்காலத்தில் இந்தப் பிரச்சினையை எவரும் எழுப்பியிராத போதிலும் இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த விடயத்தை நாம் இந்தியாவுக்கு பிரயோகித்தால் உங்களின் நிலைப்பாட்டின்படி இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சித் தலைமை பிரித்தானிய இராஜதானியை பிற்பகுதியில் தேசிய சுதந்திர இயக்கங்கள் எனப்படுபவை தோன்றிய காஷ்மீர், பஞ்சாப் மற்றும் பல வட கிழக்கு அரசுகள் கொண்ட தேசியங்களின் ஒட்டு வேலையை பிரிக்கும்படி பிரேரிப்பதில் முன்னணியில் நிற்கவேண்டி இருந்திருக்கும்.

நாம் இந்த விடயத்தை இன்னொரு படி முன்னெடுப்போம். ட்ரொட்ஸ்கிச இயக்கம் இலங்கையில் பெளத்த, இந்து மறுமலர்ச்சி இயக்கங்களை "விவரிக்க படுமோசமாக தவறியிருப்பின்" அது பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் போன்ற வகுப்புவாத இயக்கங்களின் "ஜனநாயக பண்பையும்" அதனது பாகிஸ்தான் தனிநாட்டு கோரிக்கையையும் அங்கீகரிக்கத் தவறியமைக்காகவும் கூட அது கண்டனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆதலால் மார்க்சிஸ்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியத் துணைக்கண்டத்தை மத அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என பிரித்ததையும்- இனக்கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தது உட்பட- அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளையும் புகழ்ந்து பாராட்டியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பிரித்தானியர் அதையே இலங்கையில் செய்து இருந்தால்- வடக்கிலும் கிழக்கிலும் ஒரு இந்து ஈழத்தையும் தெற்கில் பெளத்த ஸ்ரீலங்காவையும் ஸ்தாபிதம் செய்து இருந்தால்- அது உங்களின் முன்நோக்கை பூர்த்தி செய்யப் பங்களிப்புச் செய்வதாக இருந்திருக்கும்.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் அந்தச் சமயத்தில் அத்தகைய பிற்போக்கு போக்கினை சரியான முறையில் எதிர்த்தது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (BLPI) தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு கட்சியை கட்டியெழுப்ப வெறுமனே இலங்கையில் மட்டுமன்றி இந்தியத் துணைக் கண்டம் பூராவும் ஒரு கட்சியை கட்டியெழுப்பும் முன்நோக்கையே அடிப்படையாகக் கொண்டு இருந்தது. இலங்கை முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து, இலங்கையில் ஒரு தனியான அரசை அமைப்பது என்று பிரித்தானியா எடுத்த தீர்மானம் கொந்தளிப்பு நிறைந்த துணைக் கண்டத்தில் தனது நலன்களைக் கட்டிக் காக்கும் பொருட்டு ஒரு பாதுகாப்பான நடவடிக்கை தளத்தை ஸ்தாபிதம் செய்வதை இலக்காகக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டியது. பிரித்தானியா இலங்கையை ஒரு "ஆசிய அல்ஸ்டர் (அயர்லாந்து)- நீண்டகால பாக்கியான இந்தியப் புரட்சிக்கு எதிரான ஒரு கோட்டை" ஆக்க முயற்சிப்பதாக இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி விளக்கியது. " பிரித்தானியா இலங்கையில் இருந்து இந்தியாவின் இருதயத்துக்கு கைத்துப்பாக்கியை நீட்ட இடமளிப்பதற்கு இலங்கை முதலாளித்துவ வர்க்கம் இலஞ்சம் பெறவும் சலுகை பெறவும் பெரிதும் தயாராக உள்ளது" எனவும் அது மேலும் குறிப்பிட்டது.

இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி இலங்கையிலும் வேறு இடங்களிலும் அடைந்த சுதந்திர தீர்வுகளின் போலித்தன்மையை சுட்டிக் காட்டியது. ஏகாதிபத்தியம் தனது நலன்களை பேணும் பணியை சுதேச முதலாளி வர்க்கத்திடம் கையளித்தது. அது பொருளாதார ரீதியில் பெரும் வல்லரசுகளில் அடியோடு தங்கியிருந்ததோடு அரசியல் ரீதியில் அவற்றுக்கும் கீழப்படிந்தும் வந்தது. இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் இதை விளக்குகையில் கூறியதாவது: "புதிதாக அவர்கள் அடைந்து கொண்டதாக கூறுவது சுதந்திரம் அல்லாதது மட்டுமன்றி உண்மையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கான இலங்கையின் அடிமைத்தனத்தின் சங்கிலியை புதுப்பாணியில் செய்து கொள்வதாகும். இது பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது பாத்திரத்தை இட்டு நிரப்பும் விதிமுறையை தொடர்வதாகும்... பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை இலங்கையில் நன்கு பூரணமாக நிர்வகிக்கும் பொறுப்பு இலங்கையின் சுதேச சுரண்டல் வர்க்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது."

அத்தகைய ஏற்பாடுகளின் இழிவான தன்மை இலங்கையில் சிறப்பாக தெளிவாகியுள்ளது. அங்கு டீ.எஸ்.சேனநாயக்க போன்ற முதலாளி வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் -ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு வளர்ச்சி கண்டு வரும் ஆதரவுக்கு குழிபறிக்க- சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். 1946ம் ஆண்டிலேயே- வரலாற்று ரீதியில் சொன்னால் இறுதி நிமிடத்தில்- முதலாளி வர்க்கம் தனது சொந்த அரசியல் கட்சியை- ஐக்கிய தேசிய கட்சியைக் (UNP) கூட ஸ்தாபிதம் செய்தது.

இந்தப் போக்கினை விபரிக்கையில் ஒரு வரலாற்றாசிரியர் பின்வருமாறு வருணித்தார்: "(1947ல்) லண்டன் வெள்ளை மண்டபத்தில் (white hall- colonial office in London) பேச்சுவார்த்தைகள் ஓ.ஈ.குணதிலகவினால் (அரச சபை அமைச்சர்) சேனாநாயக்கவின் சார்பில் கையாளப்பட்டன. சேனநாயகவும் அவரது சகாக்களும் இடதுசாரி சக்திகளிடம் இருந்து அதிகரித்த அளவிலான நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது. ஏனைய விமர்சனங்களுக்கு அப்பால் அவர்களின் அரசியல் உயிர் வாழ்க்கையை ஊர்ஜிதம் செய்வது அவசியமானால் டொமினியன் அந்தஸ்தை உடனடியாக வழங்குவது இப்போது அவசரமாகியுள்ளது."

இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி இந்த அதிகாரக் கையளிப்பு வைபவங்களை பகிஷ்கரித்ததோடு சுதந்திரத்தின் மோசடி தன்மையையும் பிரித்தானியாவால் திணிக்கப்பட்ட அரசியலமைப்பையும் எதிர்க்கும் பொருட்டு கொழும்பு காலிமுகத் திடலில் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கும் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்புக்கு இணங்க 50.000க்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொண்டனர். தொழிலாளர் வர்க்கம் யூ.என்.பி. அரசாங்கத்தை வசதிவாய்ப்புகள் படைத்த பிரமுகர்களின் கையாளாகக் கணக்கெடுத்து சவால் விடுத்தது.

சுதந்திரத்தைத் தொடர்ந்து நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதற்கு முரணான விதத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினுள் -தமிழ், சிங்களத் தொழிலாளர்கள்- ஒரு கணிசமானஅளவு ஆதரவை வெற்றி கொண்டது. இதற்குக் காரணம், அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காக்க அது நடாத்திய கொள்கைப் பிடிப்பான போராட்டமே. யாழ்பபாண தமிழ் முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இலட்சக் கணக்கான தமிழ் தோடட்த் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்த யூ.என்.பி. அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்கிப் போன அதே வேளையில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி பிற்போக்கு குடியுரிமைச் சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்ததோடு, யூ.என்.பி. "அரசு தேசியத்துடனும் தேசியம் இனத்துடனும் சமமாகக் கொள்ளப்பட வேண்டும்" என்ற பாசிசக் கொள்கையை பிரயோகிப்பதாக எச்சரிக்கையும் செய்தது.

தொடரும்...

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved