World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Socialist Equality Party stands in Hesse election

ஜேர்மனி: சோசலிச சமத்துவக் கட்சி ஹெஸ் தேர்தலில் போட்டியிடுகின்றது

Statement of the Partei für Soziale Gleichheit
28 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 18ம் தேதியன்று சோசலிச சமத்துவ கட்சி (Partei für Soziale Gleichheit) 1,100 வாக்காளர்களின் கையெழுத்துக்களை ஜேர்மன் மாநிலமான ஹெஸ்ஸிலுள்ள தேர்தல் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது. இது பெப்ரவரி 2ஆம் தேதி, 2003ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பங்கு பெற்றிடத் தேவையான விதியினை நிறைவு செய்துள்ளது. மாநில தேர்தல் குழு, இக்கட்சியின் விண்ணப்பத்தின் மேலான இறுதி முடிவினை டிசம்பர் 6ம் தேதி செய்திடும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் தலைமைப் பொறுப்பினை வேதிப்பொருள் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றும் ஹெல்முட் ஆரன்ஸ் (Helmut Arens) வகிக்கின்றார். கட்சியின் செயல் திட்டக் குழுவின் உறுப்பினராக இருக்கும் ஆர்ன்ஸ் முந்தைய தேர்தல்களிலும் பங்கேற்றுள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானது, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய தொழிலாளர் கட்சியை உருவாக்குவதே. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பகுதியே சோசலிச சமத்துவக் கட்சி, மேலும் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட இடது எதிர்ப்பின் ஸ்ராலினிச எதிர்ப்பு பாரம்பரியங்களைப் பின்பற்றுகின்றது.

ஹெஸ் தேர்தல் தேசிய முக்கியத்துவம் உடையது. இத்தேர்தல் ஜேர்மனியில் லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அது, அவர்களது கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும் பிரதிநிதியாகவும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய சமுதாய மற்றும் அரசியல் கேள்விகளுக்கு ஒரு தீர்வினை வழங்கும் திறமை உடையதாகவும் உள்ள கட்சி அமைப்பு ஒன்று இல்லாமையால் ஆகும்.

பல ஆண்டுகளாக ஹெஸ் மாநிலம் சமூக ஜனநாயகத்தின் பலமான கோட்டையாகவும் பசுமைக் கட்சியின் தொட்டிலாகவும் கருதப்பட்டது (1985ம் ஆண்டு பசுமைக் கட்சி தன்னுடைய முதலாவது அமைச்சரை இங்கிருந்தே வென்றது). ஆனால் இப்போதோ, அது வலதுசாரிக் கட்சியின் தேசிய விரோத செயல்களை ஆரம்பித்து வைக்கும் ஒரு மேடையாக மாறிடக்கூடுமென அச்சுறுத்துகிறது.

ஜேர்மன் அரசியலில் மாநில முதல் அமைச்சரும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் (CDU) முதன்மை போட்டியாளர், ரோலண்ட் கோஹ் (Roland Koch) அமெரிக்காவின் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினை ஒத்திருக்கிறார். தீவிர வலதுசாரியான அவர், பலமான அரசிற்கான, பேரினவாதத்திற்கான மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கும் விடுக்கும் அழைப்புக்களின் செயலூக்கமான கலவையாக இருக்கிறார். ஹெஸ் தேர்தலில் கோஹ் வெற்றி பெற்றால் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி முழுமையையும் தன் பின்னால் வரவைத்திடவும், 2006ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் அதிபர் பதவிக்கான வேட்பாளராக கட்சியால் நியமனம் பெற்றிடவும் விழையக்கூடும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு மாநில தேர்தலில் கோஹ் வென்றார். நீண்ட காலமாக குடியேறியவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு எதிராக அந்நிய தேசத்தவரின் மேல் காட்டப்பட்ட வெறுப்பை மையமாகக் கொண்ட பிரச்சாரத்தினால் வென்றார். ஆனால் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் முறைகேடாக பணத்தினை உபயோகித்தது தெரிந்ததும், ஜனநாயகத்திற்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தினார். தற்போதும் தேர்தல் பிரச்சாரத்தில் குடியேற்றப் பிரச்சனையை மையப்படுத்தி அதனுடன் சட்டம் மற்றும் ஒழுங்கினையும் இணைத்து பேசுகிறார். (ஹெஸ்ஸில் தான் "ஜேர்மானியிலேயே கடுமையான சட்ட அமைப்பு" இருக்க வேண்டும்). மேலும் அவர் சமுதாய பாதுகாப்பில், மக்களுக்கு கட்டாய வேலையினை வலியுறுத்தியும், ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தும் உள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சி ஆகிய இரண்டுமே வலது பக்கத்திலிருந்து வந்த அத்தகைய அச்சுறுத்தலுக்கு ஆரம்பத்திலிருந்தே எந்தவொரு மாற்று வழியினையும் வழங்கவில்லை. செப்டம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலில் குறுகிய இடைவெளியில் வெற்றி பெற்றதனால், அவர்களது தேர்தல் மதிப்பீடே ஒரு சுமையாகிப் போனது. புதிய சமூக வெட்டுக்கள், வரி ஏற்றங்கள் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறைகள் ஆகியவற்றுக்கான முன்னறிவிப்பான தொடர்ச்சியாக வந்த அறிவிப்புகள், தங்களது நலனிற்காக எதிர்க் கட்சிகள் மகிழ்வுடன் உபயோகித்துக் கொண்டன.

இந்த ஒத்துணர்வில்லாத தன்மை பல விஷயங்களைத் தெளிவாக்குகிறது. முதலில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி பெரு முதலாளிகள் மற்றும் வங்கிகளுக்கு முற்றமுழுதான கீழ்ப்பணிதலைக் காட்டுகின்றது. ஓய்வூதியம் பெறுபவர்கள், நோயுற்றவர்கள், வேலை வாய்ப்பில்லாதவர்கள் மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களின் இழப்பின் மேல் நிதிநிலை அறிக்கையினை சரிசெய்திடும் பணியினை மேற்கொண்டுள்ளனர். அதேவேளையில் மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் ஆகியோருக்கு புதிய வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாவதாக, அவர்கள் மிதமிஞ்சிய சந்தர்ப்பவாதத்தினை முன்வைக்கின்றனர். SPD மற்றும் பசுமை கட்சியினரிடம் தீர்க்கப்படாமலிருக்கும் சமுதாய பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய தொலை நோக்கு பார்வையில்லை. மாறாக அவர்கள் குழப்பமும் பயனுமற்ற வேலையில் ஈடுபட்டு, வலதுசாரிக் கட்சி மற்றும் பெரு முதலீட்டாளர்களால் வழி நடத்தப்படுகின்றனர், அதேவேளை பெரும்பான்மைப் பொது மக்களை ஆணவத்துடனும் ஏளனத்துடனும் நடத்துகின்றனர்.

தொழிலாளர் கட்சியாக முன்பு இருந்தாலும், SPD வெகு நாட்களுக்கு முன்பே தொழிலாளர்களிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு, அதிக வருமானம் உள்ள வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் ஆகியோரை புதியதாக தங்களது ஊழிய ஆளினராக தேர்ந்தெடுத்துள்ளனர். சமுதாயப்படிகளின் உச்சத்தில் ஏறியுள்ள 1960 மற்றும் 70களின் எதிர்ப்பு தலைமுறையினரையே பசுமைக் கட்சியினர் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அரசு -வர்த்தகர்கள் நட்பாக மற்றும் பழமைப் பற்றாளராக அக்கட்சியினர் இருக்கின்றனர்.

SPD மற்றும் பசுமைக் கட்சியினரின் வலதுசாரி சமவெட்டு வளைகோடு அவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தின் திவாலின் விளைவு என்பது இறுதி ஆய்வு தரும் முடிவு. எல்லாமே பூகோளமயமாக்கப்படும் இக்காலக்கட்டத்தில் சமூக சமரசமோ மற்றும் வேற்றுமை அகற்றலோ இனியும் சாத்தியமில்லை. பொருளாதாரத்தில் உலகச் சந்தையின் ஆதிக்கம் சமுக சீர்திருத்தத்திற்கான அடித்தளத்தையே பறித்தெறிந்து விட்டது. சென்ற 10 ஆண்டுகளின் சீர்திருத்தங்களை திரும்பப் பெறும் பொறுப்பினை சமூக ஜனநாயகக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

வளர்ந்து வரும் சமுதாய ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை ஆகியவை சமுதாய அழிவிற்கு நேராக வழி நடத்திச் செல்லுகின்றன. இத்தகைய அனுபவங்களிலிருந்து தேவையான படிப்பினைகளை தெரிந்து கொள்ள இதுவே கடைசிக்கணம். பழைய கட்சிகளை புதுப்பித்தல் இப்போது அவசியமில்லை. ஆனால் உத்தியோகரீதியான அரசியலால் வெறுக்கப்படுவதாக உணரும் மற்றும் தற்போதைய சமுதாயம் வழங்குகின்ற முட்டுச் சந்துக்குள் இருந்து வெளியேறுவதற்கான ஒரு முற்போக்கான பாதையைத் தேடும் மக்கள் அனைவருக்கும் குரல் கொடுக்கவும் முன்னோக்கை வழங்கவுமான, ஒரு புதிய கட்சியினை அமைப்பதே அவசியமாகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, (PSG) கூடிய விரைவில் தங்களுடைய வேலைத்திட்டத்தை விளக்கிடும் தேர்தல் அறிக்கையை வெளியிடும்.

அதன் நடு அச்சாணியாக விளங்குவது சமூக சமத்துவத்திற்காகப் போராடுவதாகும். 10 லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்து வருகின்றனர். குறைந்திடும் வருமானங்கள், இடர் நிறைந்த சூழலில் வேலை செய்யும் நிலைமை, நிச்சயமில்லாத முதுமை மற்றும் உடல் நலம் பராமரிப்பு விதிமுறைகள், சிதைந்திடும் பள்ளிகள் மற்றும் பராமரிப்பு நல வாய்ப்புகள் அன்றாட வாழ்வினை ஆதிக்கம் செலுத்துகின்றன. தனிப்பட்டோர் செல்வக் குவிப்பிற்கு சேவைசெய்வதற்குப் பதிலாக, மிகப் பரந்த அளவிலுள்ள மனித வளங்களை - அறிவு, தொழில்நுட்பம், மற்றும் சடரீதியான செல்வம் ஆகியவற்றை பகுத்தறிவு அடிப்படையில், திட்டமிட்ட வழியில் உபயோகித்தால், இத்தகைய பிரச்சனைகளை அடக்கிடவும், தீர்வு காணவும் இயலும்.

வேலையில்லாத் திண்டாட்டத்தினை தீர்த்திட, செல்வந்தர்களுக்கு விதிக்கப்படும் வரி ஏற்றங்களால் கிடைத்திடும் நிதியினைக் கொண்டு ஒருங்கிணைந்த பொதுப்பணித் வேலைதிட்டங்களுக்கும், செயலாக்கிட சோசலிச சமத்துவக் கட்சி, அழைப்பு விடுக்கிறது. மேலும் இராணுவ நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செலவிடப்படும் கோடிக்கணக்கான யூரோக்களை, கல்வி முன்னேற்றம், உடல் நலம் மற்றும் முதுமை பராமரிப்புக்கு பயன்படுத்திட சோசலிச சமத்துவக் கட்சி, வலியுறுத்துகின்றது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடவும், முக்கியமாக புலம்பெயர்ந்தவர்களுக்கும் புகலிடம் தேடி வருவோர்களுக்கு வாய்ப்பளிக்கவும் சோசலிச சமத்துவக் கட்சி, விட்டுக்கொடுக்காது ஆதரவளிக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச மூலோபாயத்தைப் பின்பற்றுகிறது. தொழிலாள வர்க்கத்தினர் சர்வதேச அளவில் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் பூகோள அளவிலான மூலதனத்தை எதிர்க்க முடியும். பூகோளமயமாக்கல் இதைச் செய்வதற்கான நிபந்தனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், ஒரே மாதிரியான நாடுகடந்த நிறுவனங்களையும், ஒரே மாதிரியான தாக்குதல்களையும், ஒரே மாதிரியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். முக்கியமாக அமெரிக்காவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி ஆட்டங்கொடுக்கும் அளவினை அடைந்துள்ளது. நிரந்தர "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என உலகை அச்சுறுத்தும் புஷ் நிர்வாகத்தின் போக்கு, அமெரிக்க மக்களுக்கு எதிராகவும் வழிநடத்தப்படுகின்றது.

நான்காம் அகிலமும் அதன் ஜேர்மன் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும், அனைத்து உலக நாடுகளைச் சேர்ந்த மற்றும் இனத் தோற்றத்தைக் கொண்ட அனைத்து உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்காக அறைகூவல் விடுக்கிறது. தேசிய, மனித இன மற்றும் மத அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்த எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் எதிர்க்கிறோம்.

ஹெஸ் தேர்தல்கள், உடனடியாக நிகழக்கூடிய ஈராக்கிற்கு எதிரான இராணுவ தாக்குதலுக்கு மத்தியில் நிகழக்கூடியதாகவும் தெரிகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, அத்தகைய போரினை தீர்மானமாக நிராகரிக்கின்றது. ஐ.நா மேலிட கட்டளையுடன் நடக்கிறதோ அல்லது இல்லாமல் நடக்கிறதோ, அப்போர் குற்றத்தன்மை வாய்ந்த கொள்ளையடிக்கும் போர் ஆகும். அதனுடைய முக்கிய நோக்கம் ஈராக்கினை காலனிய ஆதிக்கத்திற்கு கீழ்ப்படுத்தவும், அதனுடைய எண்ணெய் வளங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் ஆகும். வேலை மற்றும் சமூக நலன்களின் மீதாக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பின்னுள்ள அதே வர்த்தக நலன்களுக்காகத்தான், இப்போரும் நடத்தப்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையில், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல், தரமான வாழ்க்கைத் தரத்தினைப் பேணப் போராடல் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆகியவை ஒன்றாக வருகின்றது. அவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் உழைக்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்திமிக்க சாதனங்களை அமைக்கின்றது.. இவை போருக்கு எதிரான எதிர்ப்புக்கு அடிப்படையை கட்டாயம் வழங்கும், முற்றிலும் புஷ் நிர்வாகத்துடன் கொண்ட தந்திரோபாய வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்த, ஈராக்கிற்கு எதிரான போரினை அரை மனதுடன் கண்டனம் செய்யும் பேர்லினில் உள்ள அரசாங்கத்தின் போக்குக்கு அல்ல.

பெப்ரவரி 2ஆம் தேதி சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்கு அளிப்பதன் மூலம், ஹெஸ் வாக்காளர்கள் அனைவரையும், ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டி அமைப்பதை நோக்கி பங்களிப்பு செய்யவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு உண்மையான ஆதரவும், நிதியும் தந்து ஒத்துழைக்குமாறும் நாம் அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டத்தை விவாதிக்க, தேர்தல் கூட்டங்கள், தகவல் நிலையங்கள் மற்றும் பிற பொது நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய பிரச்சாரத்தில் உதவுமாறு ஆதரவாளர்களை நாம் வேண்டுகின்றோம். எங்களது அரசியல் நோக்கங்களை பள்ளிகள், இளைஞர் மன்றங்கள் அல்லது பிற கூட்டங்களில் விவாதிக்க ஆவலாக உள்ளோம். கொள்கைப்படிகள், விளம்பரத்தட்டிகள், தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிற பொருட்களுக்காகத் தேவையான நிதியினைத் தந்து உதவிடவும், தேர்தல் பிரச்சாரத்திற்குத் தேவையான நிதியான 10,000 யூரோக்களை நன்கொடையாகத் தந்து உதவிடவும் வேண்டுகின்றோம்.

சென்ற வாரங்களில் கையெழுத்து சேகரிக்கும் பொழுதிலேயே நாங்கள் ஏற்கனவே வரவேற்பைப் பெற்றுள்ளோம். நிலைநாட்டப்பட்ட கட்சிகளுக்கு எதிராக தற்போது பரவிவரும் அரசியல் ஏமாற்றங்கள் மற்றும் மனக்குறைகள், ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டி எழுப்புதற்கான தீவிர பிரச்சாரமாக கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

Top of page