World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS/Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Police raid exposes a secret Sri Lankan army assassination squad

திடீர் பொலிஸ் சோதனை இலங்கையின் இரகசிய இராணுவ கொலைப்பிரிவை அம்பலப்படுத்தியுள்ளது

By W.A. Sunil
24 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவத்தின் கேவலமான நடவடிக்கைகளின் ஒரு சிறுபகுதி ஜனவரி 2ம் திகதி இராணுவ "பாதுகாப்பு மனை" (Safe House) மீது பொலிசார் நடத்திய திடீர் சோதனையின் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இராணுவத் தாக்குதல் பிரிவின் தளமாக தலைநகரத்தின் எல்லையில் உள்ள மிலேனியம் நகர வீடமைப்பு திட்டத்தின் ஒரு ஆடம்பர வீடு விளங்கியுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளல் எனும் போலிக் காரணத்தின் பேரில் இயங்கி வந்துள்ளது.

இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து இராணுவ பொறுப்பதிகாரி ஒருவரும் நான்கு இராணுவ சிப்பாய்களும் முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதில் 10 மிதிவெடிகள், 20 நிலக் கண்ணி வெடிகள், நான்கு இலகுவான டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், விடுதலைப் புலிகளின் சீருடைகள், வெடிமருந்துகள், அவற்றோடு தொடர்புபட்ட பொருட்கள் மற்றும் தேர்மோபரிக் ஆயுதங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த பிரிவு இராணுவ உளவு நிர்வாகத்தின் வழிநடாத்தலின் கீழ் இயங்குகின்ற இராணுவத்தின் உத்தியோகபூர்வமான நீண்ட தூரம் வேவுபார்க்கும் மற்றும் ரோந்து செல்லும்படையின் ஒரு பிரிவாகும். குறிப்பிட்ட சில உயர்இராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே அதன் இயக்கம், அதன் இருப்பிடம், நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்திருந்தது. அதன் இருப்பிடம் அம்பலத்துக்கு வந்தமை, இராணுவத்தினரதும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களதும் ஆத்திரத்தைத் தூண்டியது. இவர்கள் உயர்அரச இரகசியத்தை சமரசத்துக்குள்ளாக்குவதாக பொலிசாரைக் குற்றம் சாட்டினர்.

பாதுகாப்பு மனை மீதான திடீர் சோதனையில் இராணுவ பொலிசாரும் ஈடுபட்டிருந்தபோதிலும், இராணுவ தளபதி லயனல் பலகல்ல உட்பட இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவதை தடுப்பதற்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் பலகல்ல உடனடியாக பொலிஸ் மா அதிபருடன் தொடர்பை ஏற்படுத்தினார்.

எப்படியிருந்தபோதும் கட்டுப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் இராணுவத்தின் முயற்சி உள்துறை பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் தடுக்கப்பட்டுவிட்டது. இந்த சிப்பாய்கள் விசாரணை இன்றி தடுத்து வைத்திருப்பதற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்கள். இந்த இராணுவ பிரிவு அரசியல் கொலைகளை நடத்துவதற்காக அல்ல, ஆனால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால யுத்தத்தின் ஒரு பாகமாக மறைமுக தாக்குதல்களை நடத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டது என, பலகல்ல விடுத்த பகிரங்க அறிக்கையின் பின்னரே, ஜனவரி மாதம் 13ம் திகதி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன முன்னணி (PA) அரசாங்கத்திற்கும் இந்த இராணுவப் பிரிவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஊகம் தெரிவித்த ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே பலகல்லவின் அறிக்கையின் நோக்கமாகும். அத்துடன் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்வதற்காக பொதுஜன முன்னணிக்கு ஆதரவான இராணுவ உத்தியோகத்தர்களால் இந்தப் பிரிவுஅமைக்கப்பட்டது என்றும் கூடக் கூறப்பட்டது.

இராணுவத் தளபதி தனது துருப்புக்கள் உண்மையில் அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டது என்பதை கொழும்பு ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக நிராகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். கடந்த பொதுத் தேர்தல் 46 கொலைகள் உட்பட 2,247 வன்முறைச் சம்பவங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட அதி கூடிய வன்முறைகள் இடம்பெற்ற தேர்தல் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன முன்னணியும் தமது எதிரிகளை பயமுறுத்துவதற்கும் அடிபணியச் செய்வதற்கும் காடையர் கும்பல்களை வழமையாகவே ஈடுபடுத்தி வந்துள்ள அதேவேளை, இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான தொடர்புகளையும் கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சித் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு இராணுவக்குழு தன்னை தேர்மோபரிக் ஆயுதங்களைக்கொண்டு கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

பலகல்லவின் விளக்கத்தை யூ.என்.பி. அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. உண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரைத் தவிர, அப்பிரிவைச் சேர்ந்த ஏனையோரை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் பொலிசாரின் திடீர் சோதனையையிட்டு தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார். ஒரு ஊடகம் அந்தப் பிரிவை பாதுகாப்பதில் ஈடுபட்டதோடு அதன் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியற்காக பொலிசாரையும் விமர்சித்தது.

இராணுவ உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய உறவு கொண்ட ஆங்கில மொழி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்புத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், திடீர் சோதனை நடாத்திய பொலிசாரை விமர்சித்து நீண்ட விமர்சனங்களை எழுதியிருந்தார். அவர் "பொலிஸ் திணைக்களத்தின் குறுட்டு நடவடிக்கை" "தேசிய வீரர்களை" அவமானப்படுத்தும் கடும் சோதனையாகும் எனத் திட்டியதோடு, இராணுவத்திடமும் சிப்பாய்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் அழைப்புவிடுத்திருந்தார்.

நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள்" என்ற போர்வையில் விசாரணைகளின்றி மாதக் கணக்காகவும், வருடக் கணக்காகவும் தடுத்து வைக்கப்பட்டு இம்சைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவற்றோடு ஒப்பிடும்போது இந்த இராணுவத்தினர் குறுகிய காலம் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது ஒப்பீட்டளவில் மிகவும் சாதாரணமான ஒன்று என்பதை குறிப்பிட்டாக வேண்டும். அத்தாசும் அவரை போன்றவர்களும் இவை அனைத்தும் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானவை என பாதுகாத்துவருகின்றார்கள்.

பதிலளிக்கப்படாத கேள்விகள்

விடயத்தை தரைவிரிப்பின் கீழ் கூட்டித் தள்ளுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இந்த இரகசிய பிரிவு சம்பந்தமாக பதிலளிக்கப்படாத பல முக்கியமான கேள்விகள் இருந்து கொண்டுள்ளன.

அரசாங்க தரப்பிலிருந்தும் சரி அல்லது எதிர் கட்சியிலிருந்தும் சரி அரசியல் ஸ்தாபனத்தின் எந்த ஒரு நபரும் ஒரு இரகசிய கொலைப் படையை இராணுவம் வழிநடாத்துவதற்குரிய நீதி நியாயங்களைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. தமிழீழ விடுலைப் புலிகளின் உளவு பிரிவுத் தலைவர் தம்பிராசா குலசாந்தனை கொலை செய்தது இந்தக் குழுவின் 'மிகவும் பெருமைக்குரிய' நடவடிக்கை என அத்தாஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளார். இராணுவம் உத்தியோக பூர்வமான கொலைக் குழுவை சேவையில் ஈடுபடுத்தும் நிலையிலும் இலங்கை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதிகள்' என முத்திரையிடுகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களான தம்பிராசா குலசாந்தன் அதேபோல் தளபதி சங்கர் ஆகியோரை இராணுவத்தின் எல்.ஆர்.ஆர்.பி. (LRRP) பிரிவு கொலை செய்ததாக விடுதலைப் புலிகளின் வலைத் தளமான தமிழ் நெட் அதன் ஜனவரி 8ம் திகதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அது விடுதலைப் புலிகளின் அரசியல் குழுத்தலைவர் தமிழ்ச் செல்வனின் உயிருக்கும் இரண்டு தோல்விகண்ட முயற்சிகளை மேற்கொண்டதாக இராணுவத்தைக் குற்றம் சாட்டியது.

விடுதலைப் புலிகளும், எல்.ஆர்.ஆர்.பி. பிரிவு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பொது மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஏப்பிரல் 2ம் திகதி இரண்டு பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். ஏப்பிரல் 25ம் திகதி மூன்று பெண்கள் உட்பட 6 விவசாயிகளை பிடித்துள்ளார்கள். மே மாதத்தில் மட்டக்களப்புக்கு வடக்கில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். மதுரங்கேணிக்கு அருகாமையில் மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளார்கள்.

எதிரியின் எல்லைக்கு பின்னால் இருந்து கொண்டுதான் தாக்குதல் பிரிவு இயங்குவதாக இராணுவம் கூறுகின்றது ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் இயங்கிய விதம் சந்தேகத்தை எழுப்புகின்றது. அவர்கள் இராணுவ தளங்களில் இல்லாமல் பெருந்த தொகையான ஆயுதங்களுடன் ஒரு "பாதுகாப்பு "மனையில்" வசித்து வந்ததுஏன்? அவர்களுடைய நடவடிக்கைகள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளில் ஒரு சிலருக்கு மாத்திரம் தெரிந்திருந்தது ஏன்?

வேறு வார்த்தைகளில் சொன்னால், இராணுவ விசேட பிரிவினரால் இந்த பாதுகாப்பு மனை பயன்படுத்தப்படுவது ஒரு நீண்டகால நடவடிக்கையாகும். இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போதுமட்டுமல்லாமல், தென் பிரதேசத்தில் அரசியல் எதிர்ப்புகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

1980களின் கடைப் பகுதியில் 1990 களின் ஆரம்பத்திலும் தென்பகுதியில் அதிருப்தியுற்றிருந்த கிராமப்புற இளைஞர் பகுதியினரை பயமுறுத்துவதற்கும் கலவரப்படுத்துவதற்கும் கரை கண்ட இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்புப் படை பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியை (JVP) இலக்கு வைத்தது. இந்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 60,000 கிராமப்புற இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் அல்லது "காணாமல்" போனார்கள்.

அப்போதுமுதல் ஜே.வி.பி, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் சமாதானம் செய்துகொள்வதில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. தம்மை ஒரு மார்க்சிச கட்சியாக போலியாகக் காட்டிக் கொள்ளும் ஜே.வி.பி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு மிகத் தீவிரமாக வக்காலத்து வாங்கும், தமிழ் சிறுபான்மையினருக்கான அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து வரும் ஒரு கட்சியாகும். அது பாதுகாப்பு மனை அம்பலத்துக்கு வந்த விடயத்தில், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்களுக்கும் கிராமப்புற இளைஞர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட இராணுவத்தையும் அதன் இராணுவ கொலைப் படையையும் பாதுகாப்பதற்காக உரத்துக் கத்தியது.

இரகசிய இராணுவமும் கரும்பூனை, பச்சைப்புலிகள் போன்ற பிரத்தியேக இராணுவ பிரிவுகளும் முழுமையான சித்திரவைகளிலும் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தன. பட்டலந்தை சித்திரவதை முகாம் உயர்மட்ட புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மனைகளில் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கியது. அதே சுற்று வட்டத்துக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட யூ.என்.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர்களின் வீடுகளும் அமைந்துள்ளன.

விக்கிரமசிங்க, கைதுசெய்யப்பட்ட எல்.ஆர்.ஆர்.பி. பிரிவின் இலக்காக இருந்திருக்காவிட்டாலும், தேர்தலுடன் தொடர்புபட்ட ஏனைய வன்முறைகளுடனான சாத்தியமான தொடர்புகளை சுட்டிக் காட்டுவது இந்த விடயத்தின் ஒரு அம்சமாகும். "பாதுகாப்பு மனை" பற்றி பொலிசாருக்கு தெரியவந்தது எப்படி என்பதையிட்டு தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் பிரிவு டிசம்பர் நடுப்பகுதியிலேயே இந்த வீட்டை எடுத்ததாகவும், அதன் இருப்பிடம் இராணுவ உளவு நிர்வாகத்தின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்ததாகவும் அத்தாஸ் குறிப்பிட்டிருந்தார். அவர் நிர்வாக பீடத்திலிருந்து விலகிய அங்கத்தவர்கள் மூலமாகவே தகவல் வெளியேறியிருக்கக்கூடும் என குற்றம் சாட்டுகின்றார். ஆனால் ஏன்? என்ற தெளிவான கேள்விக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார். குறைந்த பட்சம், இராணுவப் பிரிவுகளிலான சாத்தியமான அரசியல் கசப்புணர்வுகளை சில பிரிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த பாதுகாப்பு மனை பற்றி திடீர் சோதனைக்கு பொறுப்பு வகித்த பொலிஸ் அதிகாரி குலசிரி உடுகம்பொலவுக்கு தெரியவந்தது, ஒரு வெளிப்படையாக தொடர்பற்ற விசாரணையின் ஊடாகவாகும். அவர் டிசம்பர் 5ம் திகதி தேர்தலில், கண்டி மாவட்டத்தில் பாலத்தலவின்னவில் நடைபெற்ற மிகவும் மோசமான ரத்தக்களரியான வன்முறைச் சம்பவங்களின் போது கொல்லப்பட்ட 10 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கொலை சம்பந்தமான விசாரணைக்கு பொறுப்பாக இருந்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்கள், முன்னாள் பொதுஜனமுன்னணி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவுடனும் அவரது இரு மகன்களுடனும் சம்பந்தப்பட்டவர்கள் என தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள் குற்றம்சாட்டினார்கள். எதிர் கட்சிக்கு மாறியதோடு, முடிவில் ஒரு தேர்தலை நடத்துவதற்கான நெருக்கடியை தோற்றுவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையிட்டு பொதுஜன முன்னணி உண்மையாகவே வெறுப்படைந்திருந்தது.

குருநாகல் மாவட்டம் போயகனேவில் உள்ள விஜயபாகு காலாட்படைப் பிரிவின் ஒரு இராணுவ தளபதி உட்பட 30 சிப்பாய்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த சிப்பாய்களின் ஒருவரிடம் இருந்துதான் "பாதுகாப்பு மனை' பற்றிய தகவல் கிடைத்தாக பொலிசார் கூறியுள்ளார். ஒரு ஊடகத்தின் அறிக்கையின்படி ரத்வத்தையின் புத்திரர்களில் ஒருவரான சானுக, மிலேனியம் நகர பாதுகாப்பு மனைக்கு அடிக்கடி விஜயம் செய்பவராகும்.

அரசாங்கமும் எதிர் கட்சியும் இப்போது இராணுவத்துக்கு சுண்ணாம்பு பூசுவதில் ஈடுபட்டுள்ளன. யூ.என்.பி.யும் சரி அல்லது பொதுஜன முன்னணியும் சரி தொடர்ச்சியான அரசியல் குண்டர் தாக்குதல்களில் தமது சொந்த தலையீட்டைப் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்தக்கூடிய இத்தகைய விசாரணைகளை ஒரு இராணுவப் பிரிவுக்குள் கடுமையாக புலனாய்வு செய்வதை விரும்பவில்லை. ஆனால் தொழிலாள மக்கள் இந்த சம்பவங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விசேடமாக வேலை உரிமைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் கண்டனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் எதிராகக் கூட இவ்வாறான படைப்பிரிவுகள் பயன்படுத்தப்படக் கூடும்.