World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington's warnings to Iran and Syria part of a broader agenda

நிகழ்ச்சி நிரலின் பாகமாக ஈரான் மற்றும் சிரியாவிற்கு வாஷிங்டன் எச்சரிக்கை

By Peter Symonds
2 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது தனது ஆக்கிரமிப்பை தொடக்கிய இரண்டு வாரங்களுக்குள் புஷ் நிர்வாகம் ஈரானுக்கும், சிரியாவிற்கும் போர் வெறி எச்சரிக்கையை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் அடுத்த தாக்குதலின் இலக்குகள் என்று இதன் மூலம் அமெரிக்கா முன்னறிப்பு கொடுத்து இருக்கிறது.

சென்ற வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்டு ரம்ஸ்பீல்ட் சிரியா மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தார். ஈராக் இராணுவத்திற்கு மிக ரகசியமான இராணுவ தொழில்நுட்பங்களின் பகுதியாக இரவில் தெளிவாகப் பார்க்கும் கண்ணாடிகளை வழங்கி வருவதாகவும், அத்தகைய சாதனங்கள் ''கூட்டணிப் படைகளுக்கு நேரடியான மிரட்டல்'' என்றும், ''அத்தகைய சாதனங்களை வழங்குவதை எதிர் நடவடிக்கை என்று கருதி அதற்கு பொறுப்பாக சிரியா அரசாங்கம் மீது குற்றம்சாட்டுவதாகவும்'' ரம்ஸ்பீல்டு குறிப்பிட்டார்.

ஆனால் அத்தகைய சாதனங்கள் எதுவும் சிரியா தரப்பிலிருந்து அனுப்பப்பட்டதற்கான எந்த விதமான சான்றையும் அவர் தரவில்லை. அல்லது சிரியா அரசாங்கத்தின் பங்கு பற்றி சுட்டிக்காட்டவும் அவரால் முடியவில்லை. ''அவர்கள் எல்லையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஈராக் மற்றும் சிரியா எல்லைகளுக்கு இடையில் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இராணுவ சப்ளைகள் மற்றும் சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதலால் எங்களது நிலவரம் பெரும்பாலும் சிக்கலுக்கு உள்ளாகிறது'' என்று ரம்ஸ்பீல்டு குறிப்பிட்டார். இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் எல்லையை மூடு இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்பதாகும்.

டமாஸ்கஸ் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதாக அவர் பயமுறுத்துகிறாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அத்தகைய சாத்தியக்கூற்றை அவர் தள்ளிவிடவில்லை. நான் தெளிவாகவே தேர்ந்தேடுத்து சில சொற்களை பயன்படுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறேன் என்று மட்டுமே ரம்ஸ்பீல்டு குறிப்பிட்டார்.

ரம்ஸ்பீல்ட் ஈரான் மீது தனது கவனத்தை திருப்பி, பாதர் படைகளை (Badr Corps) டெஹ்ரான் அடக்கி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். சியா ஆதரவுபெற்ற ஈராக் இஸ்லாமிய புரட்சிக் குழுவைச் சேர்ந்த (Supreme Council of the Islamic Revolution in Iraq - SCIRI) இந்த பாதர் படைப்பிரிவில் உள்ளவர்கள் ஈராக்கிலிருந்து ஈரானில் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். இவர்களுக்கு ஈரான் பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், ஈரானின் கட்டுப்பாட்டில் இந்தப் படைப்பிரிவுகள் இயங்கி வருவதாகவும், அந்த அளவிற்கு அவர்கள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை குறுக்கிடுவதாகவும் எனவே ''அவர்கள் அனைவரும் எதிரிகள் என்று கருதப்படுவார்கள்'' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பாதர் படைப்பிரிவுகள் குறித்து ரம்ஸ்பீல்டு கூறியுள்ள கருத்துக்கள் சற்றும் எதிர்பாராதவை. ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம்பெற்ற எதிர்க்கட்சி குழுக்கள் ஆறாகும். அவற்றில் ஒன்று இந்த பாதர் படைப்பிரிவு. இந்த படைப்பிரிவின் தலைவர்கள் வெள்ளை மாளிகையிலுள்ள மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றனர். கடந்த ஆன்டு ஈராக்கிலிருந்து வெளியேறி தஞ்சம் புகுந்துள்ள பலரைப் போலவே அமெரிக்கா ஏற்பாடு செய்த கூட்டங்களில் இந்தப் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்கள் வலுவான அடிப்படையில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு இருக்கின்றனர். தற்போது ரம்ஸ்பீல்ட் SCIRI க்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது எந்த அடிப்படையில் என்று பார்த்தால், இதர இரண்டு அமெரிக்காவிற்கு ஆதரவான குர்து இனக் குழுக்களைப் போல் அல்லாமல் இந்த பாதர் படைப்பிரிவுகள் வடக்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவத்திற்கு நேரடியாக கீழ்ப்படிந்து நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரம்ஸ்பீல்டின் மிரட்டலுக்கு சிரியாவும் ஈரானும் மிக ஆவேசமாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அவரது ''விமர்சனங்கள் அடிப்படை எதுவும் இல்லாதவை'' என்று ஈரான் அரசு அதிகாரி அப்துல்லா ரமேஸன் சாதா கருத்து தெரிவித்ததுடன், ஈரான் இந்தச் சண்டையில் நடுநிலை வகிப்பதாக அவர் வலியுறுத்திக் கூறினார். தெகிரான் தனது ஈராக் எல்லையில் போரில் ஈடுபட்டுள்ள தரப்புகளில் எவருக்கும் பாதகமாகவோ அல்லது சாதகமாகவோ எந்தவிதமான நடவடிக்கையையும் அனுமதிக்கவில்லை என்று அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சிரியாவின் வெளியுறவு அமைச்சக அதிகாரி பெளத்தைன் சாபான் (Bouthaine Shaban) ரம்ஸ்பீல்டின் கருத்து ''முழுக்க முழுக்க எந்தவிதமான ஆதாரமும் இல்லாத பொறுப்பற்ற அறிக்கை'' என்று விமர்சனம் செய்தார். சிரியாவின் தகவல்துறை அமைச்சர் ஓம்ரான் ஒருபடி மேலே சென்று எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ''போர் வட்டத்தை விரிவுபடுத்துபவர் பைத்தியக்காரராகவே இருக்க முடியும். பெண்டகன் தற்போது உண்மையிலேயே சங்கடத்தில் இருக்கிறது. ஆதலால் ரம்ஸ்பீல்டு பழியை யார் மீதாவது தூக்கிப் போட்டுவிட பார்க்கிறார்'' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ரம்ஸ்பீல்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிரியா, ஈராக் இராணுவத்திற்கு இரவில் பயன்படுத்தும் கண்ணாடிகளை வழங்கியதற்காகவோ அல்லது பாதர் படைப்பிரிவுகளோடு ஈரான் தொடர்புகள் பற்றியோ அல்ல. அத்துடன் அவர் குறிப்பிட்டிருப்பது இந்த இரு நாடுகளுக்காக மட்டும் என்று எவரும் நம்பவுமில்லை. ஈராக்கிற்கு எந்த உதவி செய்தாலும் மத்திய கிழக்கில் இருக்கிற நாடுகள் அனைத்திற்கும் எச்சரிக்கை விடுக்கிற வகையில்தான் அவர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். டமாஸ்கஸ் மீதும் தெகிரான் மீதும் குறிப்பாக நிர்பந்தம் கொடுக்கிற வகையில் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார். மத்திய கிழக்கை அரசியல் அடிப்படையில் அமெரிக்கா மறு ஒழுங்கமைப்பதற்கும், தனது நலன்களுக்கு ஏற்ற விதத்தில் அதனை அடிமைப்படுத்திவிடவும் அது திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் ஈராக் மீதான போர் என்பதை வலியுறுத்துவதற்காக ரம்ஸ்பீல்டு அவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.

2002 ஜனவரியில் ஜனாதிபதி புஷ் ஈரான், ஈராக் மற்றும் வட கொரியாவை ''தீங்குகளின் அச்சாணி'' (axis of evil) என்று முத்திரை குத்தினார். சென்ற மே மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் ஜோன் போல்டன் சிரியா இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டினார். இன்னும் ஓரு அடி எடுத்து வைத்தால் ''தீங்குகளின் அச்சாணியோடு'' சிரியா இணைந்துவிடும் என்றும் அவர் அறிவித்தார். அன்மை வாரங்களில் வாஷிங்டன் ஈரானின் அணுத்திட்டங்கள் குறித்தும் ''மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள்'' குறித்தும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றது.

கடந்த ஞாயிறு அன்று அமெரிக்க அரசு செயலர் கொலின் பவெல், அமெரிக்க இஸ்ரேல் பொதுவிவகாரக் குழுவிற்கு வழங்கிய உரையில் இச்செய்தியை மீள வலுப்படுத்தினார். இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சில்வன் ஷலோம் (Silvan Shalom) பக்கமாக நின்று பேசுகையில், பவெல் சிரியா மற்றும் ஈரான் ஆகியன மத்திய கிழக்கில் பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவி அளித்து வருவதாகவும் அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டிவரும் என்றும் வெளிப்படையாக எச்சரித்தார்.

''சிரியா தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. சிரியா தொடர்ந்தும் பயங்கரவாத குழுக்களுக்கும், சாகும் தறுவாயில் இருக்கும் சதாம் ஹூசேன் ஆட்சிக்கும் ஆதரவு தருகிறது. அதற்கு பதிலாக அந்த நாடு சற்று வித்தியாசமான நம்பிக்கையான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். தான் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளுக்கு உரிய பொறுப்பை சிரியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்'' என்று பவெல் எச்சரிக்கை செய்தார். அத்தோடு ஈரான், ''பயங்கரவாதிகளுக்கும் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கும் மத்தியக் கிழக்கில் சமாதானத்தை நிலைநாட்டுவதை எதிர்க்கின்ற குழுக்களுக்கும் ஆதரவு தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை தயாரிப்பதையும் கைவிடவேண்டும்'' என்று அவர் ஈரானுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள இதர நாடுகளைப்போல் ஈரானும், சிரியாவும் இரண்டுக்கும் இடையில் நடைபோட வேண்டியிருக்கிறது. உள்நாட்டில் போருக்கு எதிரான கண்டனங்கள் பெருகி வருகின்ற நிலைமையில், இரண்டு ஆட்சிகளுமே அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பகிரங்கமாகக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் நேரடியாக அமெரிக்காவுடன் மோதிக்கொள்ளாமல் தமது சொந்த நலன்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக வாஷிங்டனுடன் சமரசமாக நடந்துகொள்வதற்கு அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.

ஈரான் இந்தப்போரில் ''நடுநிலை'' வகிப்பதாக கூறிக்கொண்ட போதிலும், தெகிரான் மறைமுகமாக அமெரிக்க இராணுவத்திற்கு உதவி வருகிறது. அவுஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்யூ பத்திரிகையில் வந்திருக்கிற ஒரு செய்தியின் படி, அமெரிக்காவின் சிறப்புத் தூதர் சால்மே கலில் இசாத் ஜெனிவாவில் மார்ச் 16 அன்று ஈரானிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஈரானில் சுட்டு வீழ்த்தப்படும் அமெரிக்க விமானிகளை அமெரிக்காவிற்கு திரும்ப ஒப்படைப்பதற்கும், ''ஈரான் எல்லையைத் தாண்டி பாதர் படைப்பிரிவு உட்பட எந்த இராணுவப் படையையும் அனுப்புவதில்லை'' என்றும் உடன்பாடு செய்துகொண்டதாக இந்தப் பத்திரிகை விளக்கம் தந்தது.

சென்ற வாரம் அமெரிக்காவின் சிறப்பு படைப்பிரிவுகளும் மற்றும் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்து இன இராணுவத்தினரும் இணைந்து அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்சார் அல் இஸ்லாம் நிலைகள் மீது குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தியபோது, ஈரான் தனது எல்லைகளை மூடியது. காயமடைந்த அன்சார் படைகளுக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டதன் விளைவாக வாஷிங்டன் அதன் 700 உறுப்பினர்களில் 200 பேரை கொன்றுவிட்டதாக கூறியது.

சிரியாவைப் பொருத்தவரை அந்நாட்டு ஜனாதிபதி பஸர் அசாத் அமெரிக்கா தலைமையில் நடைபெற்றுவரும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ''ஐ.நா. உறுப்பு நாடு ஒன்றுக்கு எதிராக அபத்தமாக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை'' என்று வர்ணித்தார். ஆனால், ஈராக்கில் உள்ள தனது அரபு சகோதரர்களுக்கு ஆதரவு தருவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், டமாஸ்கஸில் இருக்கும் பாத் கட்சி ஆட்சியானது பாக்தாத்தில் இருக்கும் பாத் கட்சிக்கு நீண்டகால எதிரி என்பது அனைவருக்கும் தெரியும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கில் நீண்ட ஆயுதச் சோதனைகள் நடத்துவதற்கு அனுமதிக்கும் தீர்மானத்தை சிரியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்குப் பின்னர் பிரான்ஸ், ஜேர்மனி, ரஸ்யா மற்றும் இதர பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களோடு சேர்ந்து அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பதற்கு அங்கீகாரம் கோரும் இரண்டாவது தீர்மானத்தை நிறைவேறாது சிரியா தடுத்தது. சிரியாவின் பிரதான கவலையே இந்தப் போரினால் தனது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என்பதாகும். ஐ.நா. தடையை மீறி ஈராக்கிற்கு பொருட்களை விற்பனை செய்து மிகக் குறைந்த விலையில் எண்ணெயை பெற்று சிரியா இலாபம் அடைகின்றது. ஆண்டிற்கு 2 பில்லியன் டொலர்கள் அளவிற்கு சிரியா, ஈராக்குடன் இலாபகரமான வர்த்தகத்தை நடத்தி வருவதாக பிரிட்டனில் உள்ள சர்வதேச விவகார ஆய்வுக் கழகம் தனதுஅறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

தெகிரானும், டமாஸ்கசும் ரம்ஸ்பீல்ட் மற்றும் பவலின் கருத்துக்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த போதிலும், சிரியாவிற்கு மற்றும் ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் விடுத்திருக்கிற மிரட்டல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளியான பிரிட்டன் உட்பட ஐரோப்பிய வல்லரசுகள் வகுத்துள்ள திட்டங்களுக்கு நேரடியாக சவால் விடுகிற கருத்தாக கருதப்படுகிறது.

லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையின் வெளிநாட்டு விவகாரம் தொடர்பான ஆசிரியர் பிரான் வென் மேடாக்ஸ் என்பவர், புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள போர் வெறியர்களில் பவெல் சற்று நிதானம் கடைப்பிடிக்க கூடியவர் என்று ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் கருதப்பட்டு வரும் பவலின் கருத்துக்கள் மீது, பிரிட்டன் அதிகாரிகளிடையே அதிர்ச்சி நிலவுவதாக எழுதியுள்ளார்.

''டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இந்தக் கருத்தை வெளியிடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கொலின் பவெல் இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது. அவர் உரையாற்றிய இடம் அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த இஸ்ரேல் ஆதரவு குழுவினர் இருந்த இடமாகும். அவரது உரை அரபு நாடுகளை ஆத்திரமுட்டும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே தங்களது நலனுக்காக, முன்னேற்றத்திற்காக இந்தப் போரை நடத்துவதாக புஷ் நிர்வாகம் கூறி வருவதை அரபு நாடுகள் மிகுந்த அலட்சியத்தோடு விமர்சித்து வருகின்றன'' என்று மெடாக்ஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

''கொலின் பவெல் உரையின் உண்மையான முக்கியத்துவம் என்னவென்றால், பிரிட்டனின் டவுனிங் வீதியில் உள்ளவர்களுடன் (Downing Street) உருவாகியுள்ள பிளவை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனைக்கு பிரதமர் டோனி பிளேயர் விரும்புகிற மற்றும் தேைைவப்படுகின்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வாஷிங்டன் உறுதி அளித்திருந்தது. ஆனால், அதனை கீழறுப்பதாக இந்த இருவரின் கூற்றுக்கள் இருக்கின்றன. தெகிரானில் ஆழமாக பிளவுபட்டு நிற்கும் ஈரான் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு பிரிட்டனின் இராஜதந்திரிகள் வழி வகை செய்திருக்கின்றனர். ஈராக்கில் போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் தற்போது மறைமுகமாக ஆதரவு தந்து வரும் ஈரான் இப் போரிற்கு அதிக அளவில் பயனுடையதாக இருக்கும்'' என்று மேலும் தெரிவித்தார்.

வாஷிங்டன் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என்பதற்கான மிகச்சிறிய அடையாளம் கூட தெரியவில்லை. பிளேயர் அரசாங்கத்துடன் உறவை முறித்து கொள்வதாக இருந்தால் கூட வாஷிங்டன் தனது போக்கை மாற்றிக் கொள்ளாது என்று தெளிவாக தெரிகிறது. 1990 களின் ஆரம்பத்தில் இருந்து வலதுசாரி சிந்தனையாளர்களும் மற்றும் பழைமைவாதக் கருத்துக்கள் கொண்ட நிபுணர்களும் உருவாக்கிய திட்டங்களை தற்போது புஷ் நிர்வாகம் ஈராக்கிலும் மற்றும் மத்திய கிழக்கிலும் செயல்படுத்தி வருகிறது.

தற்போது சிரியாவிற்கும் ஈரானுக்கும் எதிராக மிரட்டல் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதற்கான அடிப்படை 1996 ம் ஆண்டு உயர் கேந்திர மற்றும் அரசியல் ஆய்வு அமைப்பினால், இஸ்ரேலில் புதிதாக பதவிக்கு வரவிருந்த நேத்தன்யாகு அரசாங்கத்திற்காக தயாரிக்கப்பட்ட கொள்கை அறிக்கையிலேயே இடம் பெற்றிருக்கிறது. இந்த அறிக்கையை உருவாக்கிய ரிச்சார்ட் பேர்ள் மற்றும் டக்ளஸ் பெய்த் இருவரும், இன்றைய புஷ் நிர்வாகத்தில் முக்கியமாக இடம் பெற்றுள்ள புதிய பழைவாத சிந்தனையாளர்கள் ஆகும். முந்திய தொழிற்கட்சி அரசாங்கமானது இஸ்ரேலில் ''சமாதானத்தை நிலைநாட்ட நிலத்தை விட்டுக்கொடுக்கும்'' கொள்கையை கைவிட்டு, பக்கத்து அரபு நாடுகளுடன் மிகுந்த ஆக்கிரமிப்பு போக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்தியது.

''துருக்கி மற்றும் ஜோர்தான் ஒத்துழைப்போடு இஸ்ரேல் தனது மூலோபாய சூழ்நிலையை உருவாக்கி கொள்ள முடியும். சிரியாவை பலவீனப்படுத்தி, கட்டுப்படுத்தி மற்றும் அதன் எல்லையை பிடித்துக் கொண்டு கூட இஸ்ரேல் தனது பாதுகாப்பை நிலைநாட்டிக் கொள்ள முடியும். ஈராக்கிலிருந்து சதாம் ஹூசைனை பதவியிலிருந்து நீக்குவதன் முலம் சிரியாவின் பிராந்திய ஆதிக்கத்தை முறியடித்துவிட முடியும். இஸ்ரேல் ஒரு பக்கமாகவும் மத்திய ஈராக் மற்றும் துருக்கி இன்னொரு பக்கமாகவும் மற்றும் ஜோர்தான் நடுவிலும் இருந்து கொண்டு சிரியாவை நெருக்கி சவூதி தீபகற்பத்திலிருந்து பிரித்து விட முடியும்'' என்று அறிக்கை தொடர்கிறது.

மத்திய கிழக்கின் பூகோள அமைப்பையே திருத்தி அமைக்கிற தீவிரமான திட்டங்கள், இஸ்ரேல் மற்றும் வாஷிங்டனின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெள்ளை மாளிகையில் விரிவான அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் கவனக் குறைவாகவும், படுவேகத்திலும் விளைவுகளைப் பற்றி பொருட்படுத்தாமலும் மத்திய கிழக்கில் தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page