World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After the mass protests and strikes

What way forward for working people in France?

பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலை நிறுத்தங்களுக்கும் பின்னர்

பிரான்சின் தொழிலாள வர்க்கத்திற்கான பாதை என்ன?

Statement by the WSWS Editorial Board
15 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

1995க்குப் பின்னர், கடந்த இரண்டு மாதங்களாக மிகப்பெரிய வேலை நிறுத்த எதிர்ப்பு இயக்கத்தை பிரான்ஸ் சந்தித்துள்ளது. பத்துலட்சக் கணக்கிலான பொதுப்பணித்துறை ஊழியர்கள், மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் உட்பட எட்டு நாட்கள் செயல் நடவடிக்கை, வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் பங்குபெற்றனர். கடந்த இலையுதிர்காலத்திலிருந்து கல்வித்துறையினர் 12 நாட்கள் செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பல ஆசிரியர்கள் வாரக்கணக்கில் வேலையில் ஈடுபடாமல் இருந்தனர்.

பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃபரனும், ஜனாதிபதி ஜாக் சிராக்கும் ஓய்வு ஊதியங்களை 30 சதவிகிதம் வெட்டும் பணியைக் கொண்டுவரும் பழமைவாத அரசாங்கத்தின் ஓய்வூதியச் சீர்திருத்தங்களை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் நடாத்தப்பட்டன; மேலும் தேசியக் கல்வி முறையை மத்தியமயமாக்கலிருந்து நீக்கி பிராந்தியமயமாக்கும் முறையையும் அவை எதிர்த்தன. ஏனெனில் இது தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒரு கட்டமாகக் கொள்ளப்படுவதுடன் சமத்துவ, ஜனநாயக மதிப்பீடுகளை வரலாற்று ரீதியாகக் கொண்டிருந்த பிரான்சின் மத்தியமயமான கல்வி முறையின் மீதான தாக்குதலாகவும் கருதப்பட்டது.

இந்த இயக்கம் ஒரு வெளிப்படையான முரண்பட்ட தன்மையைக் கொண்டிருந்தது.

ஒருபுறத்தில், பாராளுமன்றத்தில் கூடுதலான பெரும்பான்மையிருந்த போதிலும் அரசாங்கம் தனிமைப்பட்டுவிட்டதை இந்த அரசுக்கெதிரான எதிர்ப்பின் தன்மை வெளிக்கொண்டுவந்துள்ளது. அரசாங்கத்தின் திட்டங்களுக்கான எதிர்ப்பு 1995ல் நிகழ்ந்திலும் பார்க்க இன்னமும் பரந்த அளவில் இருந்தது. அப்பொழுது வேலை நிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைத் பாதுகாத்துக்கொள்ள நடந்தவை வாரக்கணக்கில் நாட்டையே முடக்கிவிட்டிருந்தன. கருத்துக்கணிப்பின்படி மூன்றில் இரண்டு பங்கு பிரெஞ்சு வாக்காளர்கள் ரஃபரன் மற்றும் அவருடைய சமூக உறவு மந்திரி பிரான்சுவா பிய்யோன் (François Fillon) இவர்களுடைய திட்டங்களை நிராகரித்து இருந்தனர். ஆசிரியர்களுடைய வேலை நிறுத்தம் காட்டியுள்ளவாறு, பல மக்கள் இந்தத் திட்டங்களை எதிர்க்கப் பல தியாகங்களைச் செய்யத் தயாராக இருந்தனர்.

ஆனால், மற்றொரு புறத்தே, அரசாங்கத்தைத் தோற்கடிக்கத் தேவையான ஒரு முன்னோக்கோ அல்லது உறுதியான தலைமைக்கான அடையாளமோ இதில் காணப்படவில்லை. முடிவில் எதிர்ப்பு இயக்கம் ஒன்றையும் சாதிக்கவில்லை. அரசாங்கம் சில தவிர்க்கும் நடவடிக்கைத் தந்திரங்களை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டாலும், அதனுடைய பாராளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டு சிறிது சிறிதாகத் தன் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தது. தொழிற்சங்கங்கள் தங்கள் செயலற்ற நிலையை ஒப்புக்கொண்டன. ''பாராளுமன்றம் பிய்யோனின் திட்டங்கள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உறுதி கொண்டுள்ளது. செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த முடிவைத் தடுக்க இயலாது`` என ஜூன் 19ம் தேதி Liberation நாளேட்டிற்கு, 10 அமைப்பு கூட்டு SUD தொழிற்சங்கத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் Annick Coupé ஒப்புக்கொண்டார்.

எதிர்த்துப் போராட தயாரில்லாமல் இருந்தமையால் இந்த எதிர்ப்பு இயக்கம் முறியடிக்கப்படவில்லை. மாறாக உறுதியாகச் செயல்படும் தலைமையும், செயல்படுத்தக்கூடிய முன்னோக்கும் இல்லாமற்போனதே தோல்விக்குக் காரணம் ஆகும். தீவிர இடதுசாரி கட்சிகள் இத்தோல்வியை வெற்றிபோல் சித்தரித்துக்காட்ட முயன்றனர். புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Revolutionnaire) ஜூன் 19ம் திகதி ''இந்த போராட்டத்தில் தாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை அரசாங்கத்தில் உள்ளவர்கள் உணர்வுபூர்வமாக அறிவர்'' என்று கூறியுள்ளது. லுத் ஊவ்ரியேர் (Lutte Ouvrière) ஜூன் 20 ஆசிரிய தலையங்கத்தில், நீண்ட நாட்கள் நிகழ்ந்த எதிர்ப்பு இயக்கமும், பெரும்பாலான உழைக்கும் மக்களின் அதற்கான ஆதரவும் ''அரசாங்கத்தின் அவலமான மதிப்பின்மையை'' பிரதிபலிக்கின்றன எனக் கூறியுள்ளது. இது, இந்த இயக்கத்தின் முடிவு பற்றிய ஒரு விமர்சனரீதியான கணக்கை வரைவதற்கும், தன்னடைய சொந்த பொறுப்புக்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதற்குமான ஒரு போலித்தனமான தன்மையாகும்.

அடுத்த கட்ட போராட்டத்திற்காகத் தயாரிக்கப்படும்போது, இப்பொழுது நடைபெற்ற போராட்டத்தின்போது கையாளப்பட்ட வழிமுறைகள், நிலவிய அரசியல் போக்குகள் முதலியவை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுதல் வேண்டும். இல்லாவிடின் இதையும்விடப் பெரிதான தோல்வி தவிர்க்கப்பட முடியாததாகப் போய்விடும். அரசாங்கம் ஏற்கனவே கூடுதலான தாக்குதல்களை அறிவித்துள்ளது. ஓய்வூதியம், கல்வித்துறை தவிர, அடுத்த இலக்கு 1995 போராட்டத்தின் மத்திய இடத்தைக் கொண்டிருந்த சமூக பாதுகாப்பு முறையாகும்.

பழைய வடிவிலான வர்க்கப் போராட்டங்கள் காலாவதியாகிவிட்டன என்பதும், புதிய முன்னோக்கும், புதிய கட்சியும் தேவை என்பதைக் கடந்த இரண்டு மாதங்களின் அனுபவங்கள் காண்பிக்கின்றன. தெருக்களிலிருந்து வரும் அழுத்தமும், ஆங்காங்கு வேலை நிறுத்தங்களும் அரசாங்கம் தன் நிலையிலிருந்து பின்வாங்க செய்யப் போதாதவை என்பது தெரிந்துவிட்டது. அரசாங்கத்தை இராஜிநாமாச் செய்ய வைத்து தொழிலாள வர்க்கத்தின் நலனுக்காக ஒரு அரசாங்கத்திற்காக ஒரு அரசியல் போராட்டம் நடத்துவதே இன்றியமையாதது ஆகும்.

சமீபத்தில் நடந்த எதிர்ப்பு இயக்கத்தை வழிநடாத்திய தொழிற்சங்கங்களாயினும் சரி, அரசியல் சக்திகளாயினும் சரி, இந்தப் பணிக்குத் தேவையான ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரும் இவ்வியக்கத்தை தடுப்பதிலோ, நாசப்படுத்துவதிலோ பங்கு கொண்டிருந்தனர்.

சோசலிச கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் வீழ்ச்சி

1995ல், அலன் யூப்பேயின் அரசாங்கம் ஓரளவு தனது திட்டங்களைத் திருப்பிப்பெறும் வகையில் அப்பொழுது நடைபெற்ற பல வார வேலை நிறுத்த எதிர்ப்புக்களுக்கு பதிலளித்து. எவ்வாறாயினும் அது பொதுநலச் செலவினங்களில் வெட்டுக்களை நிறுத்தவில்லை. ஓராண்டு கடந்தபின், யூப்பேயின் ஆட்சி, லியோனல் ஜோஸ்பனுடைய சோசலிச கட்சி (Parti Socialiste -PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Francais-PCF), பசுமைக் கட்சியினர் அடங்கிய கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தோன்றியிருந்த கூடுதலான சமூக நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் கடுமையான ஏமாற்றத்திற்கு உட்பட்டது. 2002ம் ஆண்டு தேர்தல்களில் ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் இந்த ஏமாற்றத்தின் அளவு காணப்பட்டது. பாசிஸ்ட் வேட்பாளரான ஜோன் மரி லு பென்னை விட (Jean-Marie Le Pen) குறைவான வாக்குகள் பெற்ற ஜோஸ்பன் இரண்டாவது சுற்றுக்குச் செல்ல முடியவில்லை. அதே நேரம் தீவிர இடதுசாரி வேட்பாளர்கள் 10 சதவிகிதம் கூடுதலான வாக்குகளைப் பெற்றனர்.

இந்த தாக்கத்திலிருந்து சோசலிச கட்சி (PS) மீளவேயில்லை. ஜோஸ்பன் ராஜிநாமா செய்துடன் கட்சியும் மேலும் வலதுசாரிப் பக்கம் திரும்பியது. இக்கட்சி, வேலை நிறுத்தம் செய்தவர்களோடு ஒற்றுமை காட்டுவதாக பாசாங்காக கூறியும், CGT தொழிற்சங்கத் தலைவர் பேர்னார்ட் திபோல்ட் (Bernhard Thibault) இனை மே 5 டிஜோன் என்னுமிடத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பாராட்டி மகிழ்ந்தாலும், ரஃபரனுடைய போக்கிற்குத்தான் அடிப்படையாக ஆதரவு என்ற உண்மையை அதனால் மறைக்க முடியவில்லை; ''சோசலிசப் போக்குடைய அரசாங்கம் என்றாலும் நாங்களும் அதேபோன்ற முடிவுகளுக்குத்தான் வந்திருக்க முடியும்'' என்று கட்சியின் செல்வாக்குடையவர்களில் ஒருவரான மிசேல் ரொக்கார் (Michel Rocard) தெரிவித்தார்.

சோசலிசக் கட்சி ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டங்கள் வாபஸ் பெறப்படவேண்டும் என்று கூறுவதை விடுத்து, மேலெழுந்தவாரியான மாற்றங்களைத்தான் கோரியுள்ளது. சீர்திருத்தங்களின் மத்திய பகுதியான, பொதுப் பணித்துறை அலுவலர்கள் தாங்கள் 37.5 லிருந்து உயர்த்தப்பட்ட 40 ஆண்டு காலம் தங்கள் பங்கைக் கொடுக்கவேண்டும் என்பதற்கான விதிமுறையை எந்த ஆட்சேபனையும் இன்றி அவர்கள் ஆதரித்துள்ளனர். இறுதி ஆய்வுகளில், சோசலிசக் கட்சிதான் தற்போதைய ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்திருந்தது. ஜனாதிபதி சிராக்குடன், கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு பார்சிலோனாவில் நடத்தியபொழுது கொண்டுவரப்பட்ட உடன்பாட்டில் ஜோஸ்பனும் நேரடியாக கையெழுத்து இட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடும் தனது பிரஜைகளின் தொழில்புரியும் காலத்தை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.

கடந்த ஆண்டில் தேர்தல் இழப்பையடுத்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) தன்னுடைய பழைய மிடுக்கின் வெறும் நிழலாகத்தான் உள்ளது. தீவிர இடதுசாரி வேட்பாளர்கள் இருவரால் ஜனாதிபதித் தேர்தல்களில் அவலப்படுத்தப்பட்ட அளவில், உட்பூசல்களால் அது தன்னையே துண்டுதுண்டாக்கி கொண்டிருக்கிறது. பல பத்தாண்டு காலங்களில் ஸ்ராலினின் துதிப்பாடி மகிழ்ந்து, பின் ஒவ்வொரு சோசலிச கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஆதரவு கொடுத்திருந்த இக்கட்சி, ஒரு நம்பத்தக்க மாற்றீடாக அமையும் என்று எவருமே கருதவில்லை.

எதிர்ப்பு இயக்கத்தின் கழுத்தை தொழிற்சங்கங்கள் நெரிக்கின்றன

சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் வெளிப்படையான வங்குரோத்தினை அறிந்த அளவில் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் அரசியல் மோதல்களைத் தவிர்க்கும் வகையில் நடந்துகொண்டன. எப்போதையும் போலவே பிரான்சில் தொழிற்சங்கங்கள் பிளவடைந்தும் சிதறுண்டும் காணப்பட்டன. CFDT யோ எதிர்ப்பு இயக்கத்தில் நாசவேலையைச் செய்து அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டது. CGT, FO, SUD, மற்றும் சில சிறிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கும் ஆர்ப்பட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தை அகற்றும் முயற்சி தங்களுக்கு இல்லை என்பதை அவை தெளிவுபடுத்திவிட்டன.

CGT இல் இரண்டாவது முக்கியமான தலைவரான Jean Christophe Le Duigou, பிரெஞ்சு நாளேடான Le Monde க்கு ஜூன் 4ம் தேதி ''கோரிக்கைகள் தொடர்பான ஒரு நோக்கத்தை தொடருகிறோமே தவிர, அரசாங்கத்தைக் கவிழ்க்கவேண்டும் என்ற அரசியல் இலக்கை நாங்கள் கொண்டிருக்கவில்லை.... பொதுத்துறை, தனியார் துறைகளில் எதிர்ப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு தொழிற்சங்க முறைப் போராட்டங்கள் வழியே வெற்றியடைய வேண்டும் என்பதே எங்கள் நிலை'' என தெரிவித்ததார்.

FO இன் தலைவரான மார்க் ப்ளோண்டல் (Marc Blondal) அதே நாளிதழின் 26ம் தேதி பதிப்பில் அதேபோன்ற உணர்வுகளைக் கூறியுள்ளார். ''மீண்டும் உறுதிப்படுத்துதல்'', ''அனைவருக்கும் பொதுவானது'', ''ஒருங்கிணைப்பு'' ஆகிய சொற்களைத் தாம் முழு உணர்வுடன் பயன்படுத்துவதாகவும் அவை வேலை நிறுத்தத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் என்றும் கூறினார்: ''பொது வேலை நிறுத்தம்'' என்ற சொற்றொடரைப் பயன்படுத்த நான் தயங்குகிறேன், ஏனெனில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புரட்சி என்ற கருத்தையும், அரசாங்கத்திற்கெதிரான அரசியல் போராட்டம் என்ற எண்ணத்தையும் அது ஏற்படுத்துகின்றது.'' என்றார்.

மே 13க்குப் பின்னர் பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்புக்கள் கூடுதலான உரத்த குரலில் வெளிப்பட்டு, எதிர்ப்பு இயக்கம் உச்சக் கட்டத்தை அடைந்தது. இரண்டு பத்து லட்ச மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் அதையும்விட இரண்டு மடங்கு மக்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். கருத்துக் கணக்கெடுப்பின்படி அரசாங்கத்தின் திட்டங்களை 67 சதவீத மக்கள் நிராகரித்தனர். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களோ காலவரையற்ற பொது வேலை நிறுத்தத்தை ஏற்படுத்த மறுத்துத் தங்களுடைய உறுப்பினர்கள் மீதே காழ்ப்புணர்வுத் தந்திர முறையைப் பின்பற்றினர். வாரத்தில் ஓரிரு முறை ஒரு நாள் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இம்முறையில் அரசாங்கம் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது. பல வாரங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், தனிப்படுத்தப்பட்டு, இயக்கத்தின் தீவிரப்போக்கு படிப்படியாக களைத்துப் போயிற்று.

பாடசாலை ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு, ஜூன் 10ம் தேதி CGTயும், நான்கு கல்விச் சங்கங்களும் ஒரு மரண அடியைக் கொடுத்தன. அரசாங்கத்தோடு `வட்ட மேசை` யில் அவர்கள் அமர்ந்துகொண்டு வரவிருக்கின்ற உயர்நிலை தேர்வுகள் போராட்டத்தால் பாதிக்காது என்பதற்கு உடன்பட்டனர். இதற்குப் பதிலாக அரசாங்கம் 110,000 ஆசிரியரல்லாத பணியாளர்களையும் பிராந்தியமயமாக்கும் நடவடிக்கையில் இருந்து 20,000 பேரை விலக்கிக்கொள்வதாக உறுதிமொழியை அளித்தது.

இந்த உடன்பாடு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் முக்கிய வழிமுறையான அழுத்தத்தை நீக்கியது மட்டுமல்லாமல் அவர்களிடையே பிளவையும் ஏற்படுத்தியது. இந்த பிராந்தியமயமாக்கும் முறையிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள், உயர்ந்த பதவிகளான பாடசாலை டாக்டர்கள், சமூகப் பணியாளர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களாவர். குறைந்த ஊதியம் பெற்ற உழைக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஜூன் 10 உடன்பாடு அரசாங்கத்தின் மீதான ஒருங்கிணைந்த எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் நிராகரித்துவிட்டன என்ற பொருளைத் தந்தது.

தேசியச் சட்டமன்றத்தில் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்குப் பொறுப்பான வேலை வாய்ப்பு அமைச்சர், பிரான்சுவா பிய்யோன், எதிர்ப்பு இயக்கத்தை நிராயுதபாணியாக்கியதற்கு CGTஐ புகழ்ந்தும் பேசினார். ஜூன் 17ம் தேதி தலையங்கத்தில் LE Monde ''பிரான்சுவா பிய்யோன் CGTக்கும் அதன் செயலர் பேர்னார் திபோல்ட் க்கும் 'உணர்வுபூர்வமான அணுகுமுறைக்காக' புகழாரம் சூட்டினார். ''கடுமையான நெருக்கடி'' நேரத்தில்கூட CGT 'நியாயமான எதிர்ப்புப் போக்கை' கடைபிடித்தது என்று வலியுறுத்தினார். தொழிற்சங்கம் இந்த இயக்கத்தை பெருமளவு பொதுவானதாக பரவிடாமல் தடுத்தமைக்கு, கையை விட்டுக்கூட கட்டுப்பாடு போய்விடுமோ என்ற அச்சத்திலிருந்து, விடுவித்ததற்காக கல்வியமைச்சர் இந்த தொழிற்சங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளார்." என குறிப்பிட்டார்.

ஜாக் சிராக்கும் தொழிற்சங்கங்களின் பங்கைப் பற்றி ஒரு சில சொற்கள் கூற முன்வந்தார். இந்த எதிர்ப்புக்களின்போது நிழலில் ஒதுங்கிவிட்ட ஜனாதிபதி ஜூன் 12 அன்று எக்கட்சியிலும் சேராத நடுவர்போல் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். ''இதில் வெற்றியாளர்களோ, தோல்வியாளர்களோ கிடையாது'' என்று துலூஸ் உரையில் தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டிக்கொண்டார். ''உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் இப்பொழுது நாடு முழுவதும் நடைபெறுவதற்காக'' ஆசிரியர்கள் போராடியதாக பாராட்டினார். ''மேற்கூறிய சொற்களைக் கொண்ட பாராட்டை கூறுவதற்கு முன்னர், உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் எந்தத் தடையுமின்றி நடக்கும் என்பதை அறியும்வரை ஜனாதிபதி சிராக்கின் பணியாளர்கள் அச்சம் நிறைந்த வாரங்களைக் கடந்தனர்'' என லு மொன்ட் குறிப்பிட்டது.

தீவிர இடதுகளின் பங்கு

''தீவிர இடதுகள்'' என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கு வெறும் இடது என்ற அடையாளத்தை மட்டுமே கொடுத்தன. ''பெரும்பாலான இடதுசாரி'' கட்சிகள் மதிப்பிழந்திருந்தபோதும், அவை முக்கிய பங்கை வகித்தன. 2002ல் லுத் ஊவரியேர் (Lutte Ouvrière -Workers Fight), புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (The Ligue Communiste Revolutionaire -Revolutionary Communist League), மற்றும் தொழிலாளர் கட்சி (Parti des Travailleurs -Workers Party) ஆகியவை ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் 10 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருந்தன. செய்தி ஊடகங்கள் அவர்களுடைய அறிக்கைகளை கவனத்துடன் அவதானித்ததுடன், அவற்றின் உறுப்பினர்கள் எல்லாத் தொகுதிகளிலும் இருந்ததுபோல் தெரிந்தது. ஆனால் ஒரு மாற்றீட்டை வழங்குவதற்குப் பதிலாக, அவை தொழிற்சங்கத் அதிகாரத்துவத்தின் பாதுகாவலராக சேவைசெய்தன.

லுத் ஊவ்ரியேர் பொது வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கையை நிராகரித்தது. லுத் ஊவ்ரியேர் தலைவர் ஆர்லெட் லாகியேர் (Arlette Laguiller) இக்கோரிக்கையை முன்வைக்க எவ்வித தேவையும் நேரிடவில்லை என்று அறிவித்ததோடு, ''ஆனால், லூத் ஊவ்ரியேரோ மற்றும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகமோ எதையும் கோரமுடியாத நிலையில் உள்ளன என்ற பாரிய நப்பாசை உள்ளது.'' என்றார். Hardy என்றழைக்கப்படும் லுத் ஊவ்ரியேரின் நிறுவனரான ரொபேர்ட் பார்சியா (Robert Barcia), இதைவிட நேரடியாக பொது வேலைநிறுத்த அழைப்பை ''முட்டாள்தனம்' என்று குறிப்பிட்டதுடன் பொது வேலைநிறுத்தம் என்பதைவிட லுத் ஊவ்ரியேர் வேலை நிறுத்தம் பொதுவாக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வார்த்தையாடல்கள், முக்கியமான அரசியல் வேறுபாட்டை மறைக்கின்றன. லுத் ஊவ்ரியேர், CGT, FO ஆகிய தொழிற்சங்கங்களுடனான மோதலைத் தவிர்த்தது. அவையும் பொது வேலை நிறுத்தத்தை நிராகரித்தன; ஏனெனில் அது அரசாங்கத்தோடு அரசியல் மோதலுக்கு அது இட்டுச்செல்லும் என்பதால்.

இந்த அமைப்பின் தீவிர வார்த்தையாடல் முறை அதனுடைய ஆழ்ந்த நம்பிக்கையற்ற தன்மையையும் சந்தர்ப்பவாதத்தையும் மறைக்கிறது. லூத் ஊவ்ரியேர் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான தொழிற்சங்க அமைப்பைக் குறைகூற மறுப்பதுடன் எதிர்ப்பு இயக்கத்தின் குறைபாடுகளுக்கு தொழிலாளர்கள் தாம் காரணம் என்று பொறுப்புக் கூறுகிறது. வேலை நிறுத்தத்தைப் பரந்த, பொதுவாக்குவோம் என்ற அதன் அழைப்பு தன்னுடைய தாகத்திற்கு கடல் நீரைக் கொண்டு தீர்க்க முற்படும் உடைந்த கப்பலின் மாலுமியின் எண்ணத்தை நினைவுபடுத்துகிறது. எதிர்ப்பு இயக்கம் தோல்வியடைந்ததற்குக் காரணம் அதற்கு அரசியல் முன்னோக்கும் உறுதியான தலைமையும் இல்லாமற்போனதேயாகும். ஆனால் லூத் ஊவ்ரியேர் ஒரு பெரிய தைரியமான அரசியல் முன்னோக்குக்காக போரிடவும் தயாராக இல்லாமல், தொழிற்சங்கங்களின் பின் தன்னை மறைத்து உறுதிப்படுத்திக்கொண்டு, அதுவும் எதிர்ப்பு இயக்கம் பரந்ததாக இல்லை, தொழிலாளர்களுக்கு பக்குவம் இல்லை என்று நியாயப்படுத்தியும் பேசியுள்ளது. Laguiller, ''நாம் எதையும் பிரகடனப்படுத்துவதற்கு இல்லை'' என அறிவித்தார். ஆனால் இங்கே எதையும் பிரகடனப்படுத்த தேவையில்லை; ஒரு அரசியல் முன்னோக்கு கொண்டு அதற்குப் பொறுப்பேற்கும் பாங்குதான் தேவை. இதைத்தான் துல்லியமாக லூத் ஊவ்ரியேர் நிராகரிக்கிறது. ''நாம் மிகுந்த பலவீனர்கள், தொழிலாளர்கள் போதுமான அளவு முன்னேறவில்லை, நாம் திறமையுடன் எதையும் செய்ய இயலாது,'' இதே அவர்களுடைய இடையறாப் பேச்சாக இருந்தது.

அடுத்த சுற்றுக்கான மோதலின் அரசியல் தயாரிப்பை லூத் ஊவ்ரியேர் அரசாங்கத்திற்கே விட்டுவிடுகிறது. ''அது தொழிலாளருக்கெதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், அனைத்து தொழிலாள வர்க்கத்தின் பொது எதிர்ப்பு ஒன்றுதான் அதைத் தடுத்து நிறுத்தி, திருப்பி தாக்கமுடியும் என்பதில் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை உருவாகும்'' தங்களுடைய அரசியல் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் எப்படிப்பட்ட கண்டனத்திற்குரிய நிலை!

லூத் ஊவ்ரியேருக்கு மாறுபட்ட முறையில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (LCR) ''காலவரையற்ற பொது வேலை நிறுத்தத்தை'' தன்னுடைய கிளர்ச்சியின் மத்தியாக கொண்டது. ஆனால் அதன் போக்கின் தன்மை லூத் ஊவ்ரியேரிடமிருந்து அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பொது வேலை நிறுத்தம் என்பது எதிர்ப்பு இயக்கத்தின் அளவை எண்ணிக்கையில் பெருக்கிக்காட்டும் வகையில் வேலை நிறுத்தத்தைப் பொதுவாக்குவது என்ற பொருளில் கொண்டது. ஆனால் பொது வேலை நிறுத்தம் அதிகாரப் பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது என்று கூறவில்லை; அதேபோல் தொழிலாள வர்க்கத்தை அப்படிப்பட்ட அரசியல் போராட்டத்திற்குத் தயாரிக்கவும் இல்லை.

மே 25 வெளிவந்த புரட்சி கம்யூனிஸ்ட் கழக அறிக்கை ஒன்று ''அணிதிரளின் அளவு நம் நாட்டை 20 ஆண்டுகளாக இது பாதித்து வரும் தாராளமயமாக்கலின் தாக்குதலை நிறுத்த முடியும் என்று காட்டுகிறது. காலவரையற்ற பொது வேலை நிறுத்த சக்தியின் மூலம் ஒரு மாற்று முறையிலான சமூக ஒற்றுமை நிறைந்த அமைப்பைக் கொண்டுவர முடியும் என்றும் இலாபம், பங்குவிருப்பங்கள், நிதி வருமானம் இவற்றிலிருந்து உதவிபெற முடியும் என்றும் தோன்றுகிறது'' என கூறுகிறது.

அத்தகைய சமுதாயத்தை தோற்றுவிக்க யார் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்? புரட்சி கம்யூனிஸ்ட் கழக வாதத்தைப் பார்த்தால், மாற்று அரசாங்கத்தைப் பற்றிய கேள்வியைத் தவிர்க்கும் முறையில் கவனமாக இருக்கும் தன்மையில், அவர்கள் ரஃபரன் அரசாங்கத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியும்! அப்படிப்பட்ட கருத்து வெளிப்படையாக பிழையாகும். இப்பிரச்சினை தொழிலாள வர்க்கத்தை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தயார் செய்யும் ஒரு அரசியல் கட்சியால்தான் தீர்க்கமுடியும்.

வினோதமான முறையில், வலதுசாரி வார இதழ் L'Express ட்ரொட்ஸ்கியின் "பிரான்ஸ் எங்கே செலுகின்றது'' (Whither France) என்ற புத்தகத்தில் வந்த பொது வேலை நிறுத்தம் பற்றிய அறிக்கைகளை நினைவுகூர்ந்துள்ளது. ''உழைக்கும் வர்க்கத்திற்குப் பொது வேலை நிறுத்தம் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றும் கேள்வியை எழுப்புகிறது'' L'Express லூத் ஊவ்ரியேரை பற்றியும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் நான்காம் அகிலத்தின் நிறுவனரை மேற்கோளிடுகிறது. கட்டுரையில் இந்த இரண்டு அமைப்புகளின் போராட்டப் பங்கை அதிக அளவு மிகைப்படுத்தியிருந்தாலும் கூட, அவை தங்கள் பங்காக எந்த ஆபத்தையும் அச்சுறுத்தவில்லை என்று முடிக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல்களின் படிப்பினைகள்

2002ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களைக் கவனித்தவர்கள் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், லூத் ஊவ்ரியேர் எடுத்த நிலையைப் பற்றி ஆச்சரியப்படமாட்டார்கள். தீவிர இடதுசாரிக் கட்சிகள் 10.6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும் (ஜனாதிபதி சிராக், தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் 19.4 சதவிகிதம்தான் பெற்றார்), பத்து லட்சக் கணக்கில் மக்கள் சுயாதீனமாக லு பென் இற்கு எதிராகத் தெருவில் திரண்டனர். ஆயினும் இந்த அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளன.

அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம், சிராக்கும், லு-பென்னும் எதிர்நோக்கிய இரண்டாவது சுற்று தேர்தலில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட புறக்கணிப்பிற்கு அழைப்புவிட்டது. ''ஏன் புறக்கணிப்பு?'' ஏனெனில் இந்த மோசடித் தேர்தலுக்கு சட்டபூர்வதன்மையை கொடுப்பதை மறுப்பதற்காக இது தேவை என அதில் குறிப்பட்டது. ஏனெனில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் பாதையை அமைத்திடுவதற்காக இது அவசியம். ஏனெனில் தீவிரமான, ஆக்ரோஷத்துடன் மேற்கொள்ளப்படும் புறக்கணிப்பு தேர்தல்கள் முடிந்தபின் உருவாகும் அரசியல் போராட்டங்களுக்கான சிறந்த நிலைமையை தோற்றுவிக்கும்'' என்று நாம் எழுதினோம்.

சிராக்கிற்கு அளிக்கப்படும் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகப் போடப்படும் வாக்கு என்ற வாதத்தை நாம் எதிர்த்தோம்; மேலும் சிராக் பதவிக்கு வரவேண்டும் என்ற பிரச்சாரம், ''1995க்குப் பிறகு பாரிய வடிவத்தை எடுக்ககூடிய அரசியல் ரீதியான பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான போராட்டங்களுக்கு ஒரு நகர முடியாத இரும்புத் தளைக்குள் இறுக்கப்பட்டுவிடும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது'' என்று எச்சரித்தோம். மிகப்பெரிய அளவிலான சிராக்கிற்கான ஆதரவு வாக்கு அவருடைய அரசியல் அதிகாரத்தைப் பெரிதும் உயர்த்துவதாகப் போய்விடும் என்றும், ஓர் அரை போனப்பார்ட் உருவமாக அவர் மாறிவிடுவார். இந்த அதிகாரத்தை ஈவு இரக்கமின்றி தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை நசுக்குவதற்கு அவர் பயன்படுத்துவார்'' என நாங்கள் எச்சரித்தோம்''.

புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், லூத் ஊவ்ரியேர், தொழிலாளர் கட்சி ஆகியவை தேர்தல் புறக்கணிப்பு யோசனையை நிராகரித்தன. முடிவில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பெரிய முன்னணி - வலதுசாரிக் கோடியில் முதலாளித்துவ முறையின் முகாமில் தொடங்கி சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மூலம் சிராக்கிற்கு வாக்குக் கேட்டு, அவர் 82 சதவீதம் வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று சிராக்கிற்குள்ள அதிகாரத்திற்கு புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் நேரடிப் பொறுப்பை ஏற்கவேண்டும்.

மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு லூத் ஊவ்ரியேர் செல்லாத வாக்குகளைப் போடுமாறு கூறி முழுமையாகச் செயலற்று இருந்தது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் Arlette Laguiller தீவிரமான புறக்கணிப்பு யோசனையை நிராகரித்தார், சக்திகளின் சமநிலை அத்தகைய புறக்கணிப்பிற்கு இடமளிக்கவில்லை என்றும் வாதிட்டார். தொழிலாளர் கட்சி தேர்தலை சாதாரணமாக அசட்டை செய்து எந்தவொரு நிலைப்பாட்டையும் முன்வைக்கவில்லை.

இதற்கிடையில் உலக சோசலிச வலைத் தளம் விடுத்த எச்சரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஈவு இரக்கமின்றி சிராக் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தினார்.

ஈராக் போரின் விளைவுகள்

எதிர்ப்பு இயக்கம் சரியத் தொடங்கிய நிலை தெளிவாகிய அளவில், மே மாதக் கடைசியில் Lutte Ouvrieve தலையங்கம் ஒன்றில் Arlette Laguiller ''வேலை நிறுத்தங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தீவிரமானால், பெருவர்த்தக நிறுவனத்தினதும் செல்வந்தரினதும் கையாட்களாகிய இந்த அமைச்சர்களும் தொழிலாளருக்கு எதிரான விரோதப் போக்கை விழுங்கிவிட்டு தங்கள் திட்டத்தை மூடிக்கட்டி வைத்துவிட வேண்டியதுதான்'' என்று எழுதினார்.

வார்த்தைஜாலங்கள், தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் மற்றும் சீர்திருத்தவாத நப்பாசைகளின் எத்தகைய பரிதாபகரமான கலவை! நாம் இன்னும் 1970களில் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல் Laguiller பேசுகிறார். அப்பொழுது பெருமளவிலான வேலை நிறுத்த இயக்கங்கள் பெருநிறுவனங்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் கணிசமான சலுகைகளை வலியுறுத்திப் பெற முடிந்தன. ஆனால் அதற்குப்பின் பொருளாதார, அரசியல் சூழ்நிலை உலகிலேயே அடிப்படை அளவில் மாறிவிட்டது. பூகோளமயமாக்கல் உற்பத்தி முறை, வர்த்தக முறை, நிதிச் சந்தைகள் அனைத்தும் சலுகைகளுக்கும் சமரசங்களுக்கும் இடமில்லாமல் செய்துவிட்டன.

எழுபது ஆண்டுகளுக்கு முன் "பிரான்ஸ் எங்கே செலுகின்றது?" என்ற கட்டுரையில் லியோன் ட்ரொட்ஸ்கி ''மக்களை அழித்து மூச்சுத்திணறச் செய்யும் கொள்கை முதலாளித்துவத்தின் பிற்போக்கான எண்ணங்களில் இருந்து ஏற்படுவது அல்ல; அம்முதலாளித்துவ முறையின் சீரழிவிலிருந்து தான் அது தோன்றுகிறது. வெற்றுச் சொற்றொடர்களால் ஏமாற்றப்படக்கூடாது என்று ஒவ்வொரு தொழிலாளியும் நினைத்தால் இந்த அடிப்படை உண்மையை மனத்தில் நன்கு பதியவைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் ஜனநாயக சீர்திருத்தவாத கட்சிகள் சிதைந்து, தங்களுடைய ஆற்றலை இழந்துகொண்டிருப்பதன் தெளிவாக காரணம் இதுதான்'' என்று எழுதினார்.

இச்சொற்கள் மீண்டும் அதன் சரியான தன்மையை இன்று முழுமையாக கொண்டிருக்கினறன. சீர்திருத்த முறையின் சரிவு மிக அதிக அளவு முன்னேறிவிட்டது. 1980களில் சீர்திருத்தக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் குறிப்பிடத்தக்க அளவு சீர்திருத்தத்தைப் பெற இயலவில்லை. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் தேக்கமடைந்தது. 1990களில் பூகோளமயமாக்கலும், சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஆகியவை சமூக சமரசக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டன. இதன் விளைவு சீர்திருத்த முகாம் மேலும் வலதுசாரிப் பக்கம் நகர்ந்துள்ளது. பிரிட்டனில் புதிய தொழிற்கட்சி (New Labour) மார்க்ரெட் தாட்சரின் திட்டங்களைத் தழுவியது; இத்தாலியில் கம்யூனிஸ்டுக் கட்சி இடது ஜனநாயக அமைப்பாகப் போயிற்று; ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைமையிலான அரசாங்கம் கடுமையான சமூகவெட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றலாயிற்று; பிரான்சில் ஜோஸ்பனுடைய சீர்திருத்த வாக்குறுதிகள் காற்றில் கரைத்தன.

ஈராக்கியப் போர் இந்த வளர்ச்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. உலக அரசியலில் அது ஒரு திருப்புமுனையாகும். அமெரிக்க நிர்வாகம் அது இனி சர்வதேச சட்டங்களை மதிக்கத் தயாரில்லை என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச உறவுகளுக்குச் சற்று உறுதியைத் தந்தவை ஏனைய சர்வதேச நிறுவனங்கள் பொருட்படுத்தப்படமாட்டா என்பதையும் தெளிவாக்கிவிட்டது. வாஷிங்டனுடைய புதிய வெளிநாட்டுக் கொள்கை இராணுவ வலிமை, மிரட்டல், பொய்யுரை, அரசியல் சூழ்ச்சிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா என்றில்லாமல், ஐரோப்பாவிற்கும் பொருந்தும். அமெரிக்கா தற்போதைய ஐரோப்பாவை பங்காளி என்று கருதாமல் போட்டியாளர் என்றே நினைக்கிறது. ஐரோப்பாவைப் பலப்படுத்தி, ஒன்றாக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடாமல் அதைப் பலவீனப்படுத்தி பிரிக்கவே பார்க்கிறது.

புஷ் அரசாங்கம் அமெரிக்க சமுதாயத்தில் உள்ள ஆழ்ந்த உள் முரண்பாடுகளை, மூர்க்கமான வெளிநாட்டுக் கொள்கையை செயல்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று கருதுகின்றது. இதையொட்டி உலகம் தன்னுடைய அதிகாரத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டு இதனுடைய கருணையற்ற சந்தை முறைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்படவேண்டும் என்று முனைகிறது. வாஷிங்டனுடைய பார்வையில் சமுதாய நன்மையின், ஒவ்வொரு பகுதி, வருமானம், இலாபம் இவற்றின் மீதான வரி, அரசாங்கத்தின் பொருளாதாரக் கட்டுப்பாடு, சூழ்நிலைப் பாதுகாப்பு அனைத்துமே உலகைக் கொள்ளை அடிக்கும் ''சுதந்திரத்திற்கு'' தடையாக, ஏற்கப்பட முடியாத கூறுபாடாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் இதற்கு விடையளிக்கும் வகையில் பெரும்பாலான மக்கள் மீதான தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்க பூகோள போட்டியோடு ஈடு கொடுக்கும் வகையில் அவை ஓய்வூதியத் திட்டம், சமூக பாதுகாப்பு நலன்கள், ஊதியங்கள், ஜனநாயக உரிமைகள் இவற்றைக் குறைத்துத் தாக்கி வருகின்றன. தாங்களும் இயற்கை வளங்களை சுரண்டுதல், மூலப்பொருட்களை அபகரித்தல், சந்தைகளைக் கட்டுப்படுத்துதல் என்ற போட்டியில் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் செலவை உயர்த்தி தாங்களும் சர்வதேச இராணுவச் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றன. இதையொட்டி சமுதாயச் சலுகைகளுக்கோ, சமரசங்களுக்கோ இடமில்லாமல் போய்விட்டது. இதுதான் தொழிற்சங்கங்கள் திவாலானதற்கும், சீர்திருத்தக் கட்சிகள் அனைத்தும் சரிந்ததற்கும் காரணமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

பிரான்சின் அனுபவம், தொழிலாள வர்க்கத்தின் சமூக, அரசியல் வெற்றிகளை, முதலாளித்துவ ஆட்சி முறை மற்றும் அது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள கட்டுப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக கேள்விக்குரியதாக்காமல் இயலாது என்பதை உறுதிப்படுத்திவிட்டது. வர்க்கப் போராட்டம், கடந்த காலம்வரை தொழிற்சங்கவாத வழிமுறைகளில் ஆதிக்கம்செலுத்தப்பட்டு வந்தது. இது மீண்டும் அரசியல் வடிவத்தைக் கொள்ளவேண்டும். முன்னைய, காலம் கடந்துவிட்ட அமைப்புக்களின் ஆளுமையை எதிர்க்கும் புதிய கட்சியொன்று உருவாக்கப்படுவது முக்கிய கடைமையாகும். அது தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்தியில் சுயாதீன அரசியல் இயக்கமாக அபிவிருத்தியடைய வேண்டும். இதில்தான் எதிர்காலத்தில் அரசாங்கங்களின் மீதான மோதல்களின் விளைவு அடங்கியுள்ளது.

புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், லூத் ஊவ்ரியேர், இரண்டும் முடிவில்லாமல் ''சக்திகளின் சமநிலை'' பற்றி அர்த்தமற்ற வார்த்தைகளை கூறிக்கொண்டிருக்கின்றனர். எதிர்ப்பு இயக்கம் முடிந்தவுடன் லூத் ஊவ்ரியேர் தன்னைக் கீழ்க்கண்ட சொற்களால் தேற்றிக்கொண்டது: ''நெருப்பு நீறு பூத்து இருக்கும்வரை, மீண்டும் நெருப்பு பற்றி சுடர்விட்டு எரியும்''. ஆனால் சக்திகளின் சமநிலை ஒரு சக்தி வாய்ந்ததே அன்றி, நிலையானது அல்ல. அதனுடைய மிக முக்கியமான பகுதி ஒரு புரட்சிக் கட்சியாகும். அதுதான் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்மையை வளர்த்து, தொழிலாள வர்க்கம் நிலைமையை எதிர்கொள்ள ஆதரவளிப்பதுடன், வெற்று சொற்றொடர்களால் தொற்றுதலுக்குட்படுத்தப்படாது அதன் தன்னுறுதியை பலப்படுத்தும்.

ஒரு புதிய தொழிலாளர் கட்சியை அமைப்பது கடினமான செயலாகும்; ஆனால் அதை ஓரிரவில் நடத்தப்பெற முடியாது. அத்தேவை எதிர்நோக்கும்போதுதான் அது உண்மையாக மாறும். மாறிய உலகச் சூழ்நிலையிலிருந்து வெளிப்படும் மற்றும் அதிலிருந்து தேவையான முடிவுகளை பற்றியெடுக்கும் ஒரு பலமான முன்னோக்கு, தொழிலாள வர்க்கத்திடம் அதிகரித்துவரும் ஆதரவை பெற்றுக்கொள்ளும். பிரான்சில் சமீபத்தில் நடந்த எதிர்ப்பு இயக்கம், உலகம் முழுவதும் ஈராக்கியப் போருக்கெதிராக நிகழ்ந்த இயக்கங்கள்போல், மில்லியன் கணக்கில் மக்கள் பழைய, புராதன அமைப்புக்கள் தங்களைக் காப்பாற்றவில்லை என்பதை உணர்ந்துள்ளனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கீழ்கண்ட வினாக்கள் முன்னோக்கின் மத்திய பகுதிகளாக தைரியமாக கொள்ளப்படவேண்டும்:

* ஒரு சோசலிச ஐரோப்பாவுக்காக

ஓய்வூதிய, அல்லது மற்ற சமூகப் பிரச்சினைகள் பிரான்சின் எல்லைக்குள் தீர்க்கப்பட முடியும் என்ற நினைப்பு அபத்தமானது. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அவை பழமைவாத அரசாங்கமோ, சமூக ஜனநாயக கட்சியாலோ ஆளப்பட்டாலும் அத்தகைய தாக்குதல்கள் நடந்துகொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு தங்களுடைய சமூக வெற்றிகளை பாதுகாத்தல் வேண்டும்.

தனி ஐரோப்பியச் சந்தையும், தனி நாணய முறையும் கிழக்கு நோக்கிய விரிவாக்கமும் ஐரோப்பியப் பொருளாதார ஒற்றுமைக்கு உயர்ந்த அளவு ஊக்கம் கொடுத்துள்ளன. அது ஒரு முன்னேற்றகரமான வளர்ச்சியாகும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதன் நிறுவன அமைப்புக்களும் பலம் வாய்ந்த பொருளாதார சக்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன. மூலதனம் சுதந்திரமாக உலாவக்கூடியதாக இருக்கையில், தொழிலாள வர்க்கம் சம்பள, வாழ்க்கைத்தர அளவில் பிரிக்கப்பட்டிருப்பதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவமதிப்பிற்குள்ளாவதுடன், ஜனநாயக உரிமைகளும் நசுக்கப்படுகின்றன.

தீவிரமான வலதுசாரிகள் ''தேசிய இறைமை''க்கு மீண்டும் திரும்புமாறு அழைப்பு விடுவதன் மூலம் இதற்கு பதிலளிக்க முற்படுகிறது. தொழிலாள வர்க்கத்தின் விடை இதற்கு முற்றிலும் எதிரானது ஆகும். இது ஒரு தனிக்கட்சியின் கீழ் தன்னை ஐரோப்பா முழுவதும் ஒன்றிணைப்பதன் மூலம், சமூக சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் அடித்தளமாகக் கொண்டு ஒரு ஐக்கிய சோசலிச ஐரோப்பாவிற்காக போராடவேண்டும்.

* சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமாக

ஜனநாயக உரிமைகள், அனைத்து மக்களின் சமத்துவம் இவை சோசலிச ஐரோப்பாவிற்கான போராட்டத்தின் மையக் கூறுபாடுகளாகும்.

குறிப்பாக, பத்து லட்ச கணக்கில் ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் தஞ்சமடைந்தோரும், புலம்பெயர்ந்தோரும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் தொழிலாள வர்க்கத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளதுடன், போராட்டங்களில் அவர்கள் முக்கிய பங்கை ஆற்றுவர். புலம்பெயர்ந்தோரை வேட்டையாடலும், தொழிலாள வர்க்கத்தை சமயம், தோலின் நிறம், இனம், கிழக்கு, மேற்கு என்று பிரிப்பதும் ஐரோப்பிய மக்களை அடக்கி வைக்க உதவுவதுடன், அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கவுமே உதவும்.

* ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிராக

ஒரு சோசலிச ஐரோப்பாவிற்காகப் போராடுவதும், ஏகாதிபத்திய, போர் எதிர்ப்புக்களும் பிரிக்க முடியாத அளவு தொடர்புடையவையாகும்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் புஷ் நிர்வாகத்தின் யுத்த நோக்கங்களை எதிர்க்க முற்றாக திறன் அற்றவை என்பதை நிரூபித்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆரம்ப எதிர்ப்பு ஐக்கிய நாடுகள் சபையில் இராஜதந்திர செயல்பாடுகளைத் தாண்டிச் செல்லவில்லை. அவர்கள் பின்னர் போரை நியாயப்படுத்தியதன் மூலம் வாஷிங்டனின் எதிர்கால யுத்த நோக்கங்களுக்கு புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளன.

சோசலிச ஐரோப்பாவிற்கான போராட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தக்க எதிர்பலத்தை உருவாக்கும். அதேநேரத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை கவர்ந்திழுப்பதற்கான புள்ளியாகவும் அமைந்து புஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு ஊக்கத்தை தரும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு உலக சோசலிச வலைத்தளத்தை ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் கட்சியை உருவாக்குவதற்கான சக்திவாய்ந்த கருவியாக உருவாக்கியுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் உலகளாவிய முறையில் வாசகர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து அரசியல் முன்னோக்கை வழங்குகின்றது.

ஒரு அரசியல் முன்னோக்கை தேடும் பிரான்சில் உள்ள அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும், ஆசிரியர் குழுவோடு தொடர்புகொள்ளுமாறும், உலக சோசலிச வலைத் தள வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Top of page