World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Powell's Al Qaeda-Baghdad link falls apart

அல்கொய்தா-பாக்தாத் தொடர்பு பற்றிய பவெலின் முடிச்சு அவிழ்ந்தது

By Peter Symonds
14 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற வாரம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவெல் ஆற்றிய உரையின் உயிர் நாடியான ஒரு பகுதி பாக்தாத்திற்கும், அல்கெய்டாவிற்கும் இடையில் ''தீங்கான தொடர்பு'' நிலவுகிறது என்பதாகும். அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் புஷ் நிர்வாகத்தின் போர்த் திட்டங்களுக்கு எதிராக மக்களது கருத்துக்கள் திரண்டுகொண்டு வருவதைத் திசை திருப்பும் நோக்கில், சதாம் ஹூஸேனையும், ஒசாமா பின்லேடன் மற்றும் அவரது பயங்கரவாதத் தாக்குதல்களை சம்மந்தப்படுத்தும் கொச்சையான முயற்சியில் பவெல் ஈடுபட்டிருக்கின்றார்.

ஒரு வாரத்திற்குள், வாஷிங்டனின் இந்த வாதங்களில் எந்தவிதமான சாரமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கு அமெரிக்கா செய்கையாக உருவாக்கிக் கொண்டிருக்கும் பிற எல்லா சாக்குப்போக்குகளையும் போலவே இந்த சாக்குப்போக்கும் உண்மையல்ல என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பவெல், ஆதாரங்கள் என்று சொல்லித் தாக்கல் செய்தவை அனைத்தையும் மற்ற புலனாய்வு அமைப்புகள் மற்றும் அதன் நிபுணர்கள் ஆட்சேபித்து சந்தேகங்களைக் கிளப்பியுள்ளதால், இது முற்றிலும் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

பவெலின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே, ஜோர்தானில் பிறந்த பாலஸ்தீனரான அபுமூசா அல் சர்க்காவி (Abu Musab Al Zarqawi - வயது 36) நடவடிக்கைகளைச் சுற்றியே அமைந்திருக்கிறது. இவர் 1980 களில், ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் யூனியன் ஆதரவு ஆட்சிக்கு எதிராக CIA ஏற்பாடு செய்த முஜாஹதீன்களில் ஒருவராகப் போர் புரிந்தவர். சர்க்காவி தற்போது அல்கெய்டாவோடு தொடர்பு வைத்திருப்பதாக பவெல் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும் அங்கிருந்து சர்க்காவி தப்பியோடி ஈராக்கில் புகுந்து அங்கு பயங்கரவாத அமைப்பை உருவாக்கினார் என்பது பவெலின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

தனது இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இரண்டு தகவல்களை அவர் தந்தார். குர்துகள் வாழும் ஈராக்கின் வடக்குப் பகுதியிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில், இக்குழுக்களில் ஒன்றான அன்சர்-அல்-இஸ்லாமின் (Ansar al-Islam) ஒரு சிறிய முகாம் ஒன்றை சர்க்காவி நடத்தி வருவதாகவும், அங்கு அவர் ''விஷவாயு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்துவதற்கு பயிற்சியளித்து வருகிறார்'' என்றும் பவெல் குறிப்பிட்டார். விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைக் காட்டிய பவெல், அந்த முகாம் குர்மால் (Khurmal) பகுதியில் இருப்பதாக மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதி, சதாம் ஹூஸேனின் கட்டுப்பாட்டிற்கு வெளியில் இருப்பதுடன், பல தசாப்தங்களாக குர்துக்களின் கிளர்ச்சி இராணுவத்தினரை எதிர்த்து ஈராக் இராணுவம் இங்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அன்சர்-இ-இஸ்லாம் என்ற இந்த அடிப்படைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியிலிருந்து ''பாக்தாத்தில், ஒரு ஏஜென்ட் இருக்கிறார். அவருக்கு, ஈராக்கின் மேல் மட்டத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு உள்ளது'' என்றும், அல்கெய்டாவிற்கு ஈராக்கில் பாதுகாப்பான தஞ்சம் கிடைப்பதால், சர்க்காவி குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றும் பவெல் தனது உரையில் குறிப்பிட்டார்.

பவெலின் கட்டுக்கதை அது வெளிவந்த உடனேயே அம்பலத்துக்கு வந்துவிட்டது. அந்த முகாம் இருக்கும் இடம் பற்றி தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது. விசாரணை நடத்தியதில் குர்மால் என்று பவெல் குறிப்பிட்டுள்ள இடம், அன்சார்-அல்-இஸ்லாம் குழுவின் நிர்வாக கட்டுப்பாட்டில்கூட இல்லாத இடமாகும். புகைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடம் சர்காத் (Sargat) ஆகும். இப்படிப்பட்ட சாதாரண விவரத்தின் சிலவற்றை பவெல் தவறாக தந்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் மிகப் பரவலான புலனாய்வு அமைப்பு நவீன அதிநுட்ப எலெக்ட்ரோனிக் கருவிகளுடன் செயல்பட்டு வருகின்றன. ஆதலால், அவர் எடுத்து வைத்திருக்கும் இதர ''உண்மைகள்'' யாவும் கேள்விக்குறியாகிவிட்டன.

தற்போது, நோர்வேக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற அல்சார்-அல்-இஸ்லாம் தலைவரான முல்லா ரிக்கர் மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவர் பகிரங்கமாக வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், அல்கெய்டா அமைப்பிற்கும் தனது அமைப்பிற்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியிருப்பதுடன், தனது அமைப்பு சதாம் ஹூசேன் மீது அரசியல் வெறுப்புடன் செயல்பட்டு வருவதாக அதில் விளக்கியிருந்தார். ''நான் ஒருபோதும் சர்க்காவியை சந்தித்ததில்லை. அவரைப் பற்றி நியூஸ் வீக் வார இதழில் தான் படித்தேன். பவெல் தனது உரையில் பல தவறுகளைச் செய்துள்ளார். எங்களது குழு அல்கெய்டாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறுகிறார். ஆனால், எங்களுக்கு அத்தகைய தொடர்பு எதுவுமில்லை. அமெரிக்கர்கள் உண்மையை சொல்வதில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை, அவர்களிடம் காட்ட விரும்புகிறேன்'' என்று அவர் பொஸ்டன் குளோப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

சென்ற சனிக்கிழமையன்று அன்சர்-அல்-இஸ்லாம் குழுவினர் ''விஷ ஆலை'' ஒன்றை மேற்கு நாட்டு பத்திரிகையாளர்களுக்கு திறந்துகாட்டினர். அந்தக் கட்டிடத்தைப் பார்த்தால், அது ஒரு இரசாயண தொழிற்சாலையும் அல்ல, இராணுவ பயிற்சி வசதியுள்ள இடமும் அல்ல. அங்கு அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் குர்மால் பகுதிக்கு மேற்கு நாட்டு பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு எந்த முகாமையும் அவர்கள் காணவில்லை. அதற்கு பின்னர், சர்காத் பகுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முகாம் என குறிக்கப்பட்ட பகுதி தனித்தன்மையுள்ள பலகோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்ததுடன், அருகாமையில் குன்றுகள் இருந்தன என்றும், அது முகாம் போலவே தெரியவில்லை என்றும் அசோசியேட்டட் செய்தி நிறுவன நிருபரான போர்சவ் டரகாகி தெரிவித்தார்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, ''முழுமையும், ஆர்வமற்ற ஒரு இடத்தில் சிறிய, பெரும்பாலும் அபிவிருத்தி செய்யப்படாத கட்டிடத் தொகுதிகள் காணப்படுவதுடன், அங்கு தொழில் உற்பத்தித்திறன் உள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, அந்தக் கட்டிடங்களில் குழாய் இணைப்புகள் சரியாக இல்லை. ஜெனரேட்டர் மூலம் ஓரளவிற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அந்த வளாகத்திலுள்ள பாதிக் கட்டிடங்கள் அண்மைக் காலத்தில் பொதுமக்களது வீடுகளாக இருந்தன. ஒரு வீட்டில் ஒரு சிறிய குழந்தையின் செருப்புகள் காணப்பட்டன. மீதமிருக்கும் கட்டிடங்கள் இராணுவ அல்லது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவர்களது முகாம்களாக அல்லது வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிலையமாக இஸ்லாமியக் கட்சிக்கு இவ்விடம் பயன்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், பவெலின் உரை ஏற்படுத்திய பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக முயற்சியை மேற்கொண்டார். சர்க்காத் பகுதியானது எவ்வளவு மோசமாக காணப்பட்டாலும் பவெல் அளித்த விளக்கம் சரியானதுதான் என்று, நியூயோர்க் டைம்ஸுக்கு கூறினார். ''விஷத் தொழிற்சாலை என்பது கலைநயத்தோடு சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாகும். அப்படிச் சொல்லியதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கலன்கள் விஷத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகாது. அப்படியான அவசியமும் இல்லை'' என்று தெரிவித்தார். அந்தக் கட்டிட வளாகத்தை புலனாய்வு நிபுணர்கள் மிகப் பொறுமையாக கண்காணித்து வந்ததோடு, ஊர்ஜிதப்படுத்தும் சான்றுகளையும் அவர்கள் வைத்திருக்கின்றனர் என்று அந்த அதிகாரி மேலும் தகவல் தந்தார். ஆனால், அந்தப் பகுதியை சுற்றிப்பார்த்த பத்திரிகைகள் இரசாயணப் பொருட்கள் எதுவுமில்லை. சாதனங்கள் எதுவுமில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்களே அது ஏன் என்பதை அவர் விளக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை, புரூசல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group-ICG) வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், அன்சர்-அல்-இஸ்லாம் குழு மற்றும் பவெல் கூறியுள்ள அல்கெய்டா மற்றும் பாக்தாத் தொடர்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெகுவாக மட்டுப்படுத்தி கூறியிருக்கிறது. இந்த அறிக்கைக்கு அவர்கள் கொடுத்திருக்கின்ற தலைப்பு ''ஈராக் பகுதியிலுள்ள குர்திஸ்தானில் தீவிர இஸ்லாம். கர்ஜணை செய்த சுண்டெலி?'' என்பதாகும். இந்த அமைப்பானது, அந்த தீவிரவாதக் குழு பற்றிய முக்கியத்துவம் தேவையில்லாதது என்றும் அதனுடைய உண்மையான பலத்திற்கு மிஞ்சிய மதிப்பீடுகளாக இவை தோன்றுவதாகவும் இந்த அறிக்கையை முடிக்கும்போது குறிப்பிட்டிருக்கிறது.

அன்சார்-அல்-இஸ்லாம் குழுவானது இரண்டாண்டுகளுக்கும் சற்றுக் குறைவான கால அளவில் பெரிய இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான, ஈராக் குர்துஸ்தான் இஸ்லாமி இயக்கத்திலிருந்து (Islamic Movement in Iraqi Kurdistan) பிரிந்து வந்ததோடு, மதச்சார்பற்ற குர்திஸ்தான் தேச பக்த யூனியனோடும் (Patriotic Union of Kurdistan-PUK) சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றது. PUK யானது, அமெரிக்க ஆதரவு பெற்ற ஈராக்கின் எதிர்ப்பாளர்களின் ஒரு பகுதியாக இருக்கின்றது. இந்த அமைப்பு தனது சொந்த அரசியல் காரணங்களுக்காக ''தனது உத்தேச தீவிரவாத தொடர்புகளை வலியுறுத்துவதற்காக, கைது செய்யப்பட்டுள்ள அன்சார் ஆதரவாளர்களை வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சந்திக்குமாறு செய்தார்கள். இவர்கள் CIA ஏஜென்ட்டுகளுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டதுடன், அமெரிக்க சிறப்புப் படையைச் சார்ந்தவர்களை மலை உச்சிவரை அழைத்துச் சென்று, அன்சார் குழுக்களின் நிலைகளைக் காட்டினார்கள்'' என்ற இந்த விபரங்களை ICG தனது அறிக்கையில் தந்திருக்கிறது.

''அல்கெய்டாவிற்கும், அன்சார் அமைப்பிற்கும் இடையில் தொடர்புகளை ஊர்ஜிதப்படுத்துவதற்கு நடுநிலையான ஆதாரம் எதுவும் தரப்படவில்லை'' என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அன்சார் அமைப்பிலிருந்து வெளியேறிய சிலர் தந்திருக்கின்ற தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்த அல்கெய்டா முகாம்களுக்கு அன்சார் தலைமையைச் சேர்ந்தவர்கள் விஜயம் செய்தனர். ''இப்படி விஜயம் செய்வதால் மட்டுமே, பின் லேடன் குழுவினர் இவர்களை கண்காணிக்கிறார்கள் அல்லது இயக்குகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது'' என்பதாக ICG அறிக்கை குறிப்பிடுகிறது. அன்சார் இயக்கத் தலைவரான கிரிக்கர் வலியுறுத்திக் கூறியிருப்பது என்னவென்றால், தனது அமைப்பு ''குர்திஸ்தான் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக'' செயல்படுகிறதே தவிர, அல்கெய்டா சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இயங்கவில்லை என்பதாகும்.

பாக்தாத் பயங்கரவாதிகளின் சிறு குகை

சர்க்காவி, பாக்தாத்தில் மே 2002 ல் மருத்தவ சிகிச்சைக்காக இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, சதாம் ஹூசேனது அனுமதியோடு பயங்கரவாத நடவடிக்கைக் குழு ஒன்றை விரிவான அடிப்படையில் அமைத்தார் என்ற இரண்டாவது புரட்டை பவெல் கூறினார். இந்த சர்க்காவியின் குழு அல்கெய்டாவோடு தொடர்பு கொண்டிருப்பதோடு, அது பாக்தாத்திலிருந்து செயல்பட்டு வருகிறது என்றும், சென்ற அக்டோபரில் ஜோர்தானில் அமெரிக்க அதிகாரியான லோறன்ஸ் போலிவ் கொலை செய்யப்பட்டதற்கு இந்த அமைப்புதான் காரணம் என்றும், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் இவர்களில் 116 பேர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்றும், அவர்களில் சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பவெல் குறிப்பிட்டார்.

குர்மால்/சர்காத் விஷத் தொழிற்சாலையைப்போல், பாக்தாத்திலுள்ள பயங்கரவாதிகள் குழுவும் வெறும் கற்பனைக் கண்டுபிடிப்புதான். பவெல் தருகின்ற ஒவ்வொரு தகவலையும் புலனாய்வு ஏஜென்சிகளும் அதன் நிபுணர்களும் சந்தேகிக்கின்றனர். CIA டைரக்டர் ஜோர்ஜ் ரெனட் கூட இந்த வாரம் அமெரிக்க செனட் குழுவில் அறிக்கை அளிக்கும்போது சர்க்காவி, சதாம் ஹூசேன் ''கட்டுப்பாட்டில்'' இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். அவரது குழு அல்கெய்டாவிலிருந்து சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் அவர் அதில் தெரிவித்தார். இருந்தபோதிலும் ரெனட், சர்க்காவி தற்போது பாக்தாத்தில் இருப்பதாக செனட் குழுவில் இரண்டு தடவைகள் குறிப்பிட்டார். அதே நேரத்தில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் அவர் எங்கிருக்கிறார் என்பதுபற்றி தெரியாது என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டனர்.

ஒரு மூத்த ஜேர்மன் புலனாய்வு அதிகாரி, சர்க்காவிக்கும் மற்றும் பாக்தாத்திற்கும் இடையில் இருப்பதாக கருதப்படும் தொடர்புகள் குறித்து சந்தேகங்களை எழுப்பினார். ''சர்க்காவி பற்றி நாங்கள் சிறிது காலமாக விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். எந்த சான்றுகள் அடிப்படையில் பவெல் உரையாற்றினார் என்பதை நாங்கள் ஆராயவேண்டும். சில சமயம் எங்களுக்கு தெரியாத தகவல்கள் அவருக்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால், சர்க்காவிக்கும் பாக்தாத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பது பற்றி எந்தவிதமான குறிப்பான தகவல்களும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை'' என்று இந்த புலனாய்வு அதிகாரி நியூயோர்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்திலுள்ள செயின்ட் ஆன்ட்ரூ பல்கலைக்கழக பயங்கரவாத ஆய்வு நிபுணரான மேக்னஸ் ரான்ஸ்டாப், CIA இவ்வளவு வேகமாக இந்தத் தொடர்புகளைக் கண்டுபிடித்திருக்கும் ஆற்றல் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளார். பாக்தாத்திற்கும், ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையில் நிலவும் தொடர்புகளை மிக வேகமாக CIA கண்டுபிடித்து விட்டதாக அவர் கூறினார். ''இதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இதுபோன்ற பல்வேறு கைதுகளிலிருந்து கிடைக்கும் சான்றுகளை சங்கிலித் தொடர்போல் ஆராய்ந்து, பின்நோக்கிச் சென்று, சர்க்காவியின் ஐரோப்பிய தொடர்புகளுக்கும், கடைசியாக ஈராக்கோடும் தொடர்புபடுத்தவதற்கு இவ்வளவு விரைவாக செய்ய முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது'' என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரிட்டனின் புலனாய்வு வட்டாரத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கார்டியன் பத்திரிகை ''பிரிட்டனின் உயர் அதிகாரிகள் சர்க்காவிற்கும், அண்மையில் மேற்கு ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு எந்தவிதமான வலுவான சான்றும் இல்லை. அவர்களை எப்படி அல்கெய்டாவோடு தொடர்புபடுத்த முடியும்? சர்க்காவி, நிச்சயமாக ஒரு முக்கியமான நபர் தான். இரசாயண போர் ஆயுதங்கள் பற்றி அவருக்கு ஓரளவிற்கு தெரியும். ஈராக்கின் வடகிழக்குப் பகுதிக்கு அவர் விஜயம் செய்தார் என்பதைக்கூட தங்களுக்கு தெரியாது என்று புலனாய்வு வட்டாரங்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் தெரிவித்தார்கள். சர்க்காவி மத்தியக் கிழக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆனால், அவர் ஈராக்கில் இல்லை என்று உயர் வட்டாரங்கள் தெரிவித்தன'' எனத் தகவல் தந்திருக்கின்றது.

மேலும், அமெரிக்காவின் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கின்ற வகையில் பிரான்ஸின் புலனாய்வு அமைப்புக்கள் தகவல் கொடுத்திருக்கின்றன. சர்க்காவி குழுவினர் ஐரோப்பாவில் எந்த அளவிற்கு பரவி இருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக, இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படத்தை பவெல் மேற்கோள் காட்டினார். மேரோன் பென்ஹமீது மற்றும் மேனார்ட் பென்சலாலி இருவரும் சென்ற ஆண்டு பாரீஸில் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள், சர்க்காவியோடு என்றைக்கும் தொடர்பு உள்ளவர்கள் அல்ல. அவர்கள், செச்செனியா பயங்கரவாதக் குழுவைச் சார்ந்தவர்கள் என்று AFB செய்தி நிறுவனத்துக்கு பிரஞ்சு புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தது.

''புலன் விசாரணையில் எந்தக் கட்டத்திலும் DST (பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் எதிர்-உளவுச் சேவை) ஆல் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேருக்கும் அல் சர்க்காவிக்கும் இடையில் சிறிதளவுகூட தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை. அல் சர்க்காவி பெயர் எங்களது பல்வேறு 'செச்செனியா தொடர்பு' மற்றும் ஐரோப்பாவில் செயலூக்கமாய் உள்ள அதன் நடவடிக்கையில் ஈடுபடும் உறுப்பினர்கள் பற்றிய விசாரணை விபரங்களிலும் இடம்பெறவில்லை. கொலின் பவெலின் வார்த்தைகளின் வழியாக எப்படி அமெரிக்கர்கள், அல் சர்க்காவி என்பவர் ஈராக் மற்றும் கடந்த ஆண்டு பிரான்சில் கைது செய்யப்பட்ட 'செச்சென் தொடர்பு' இயக்கிகள் ஆகிய இருவருடனும் உறவு வைத்திருந்தார்கள் என்று கூறப்படுவது பற்றிய இந்த முடிவிற்கு வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை'' என்று பிரெஞ்சு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு ஆய்வாளர்களும், புலனாய்வு அதிகாரிகளும் ஈராக்கின் தற்போதைய பாத் கட்சி ஆட்சிக்கும், பின் லேடனின் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கும் இடையே அரசியல் ரீதியில் ஒவ்வாமை நிலவுவதாக வலியுறுத்திக் கூறிவருகின்றனர். பிரிட்டனின் உயர் இரகசியப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கை ஒன்று ஜனவரி 12 ந்தேதி BBC வானொலிக்கு கிடைத்திருக்கிறது. அதில் காணப்படுகிற மிகக் கவனமான முடிவுரை வருமாறு:-

''அல்கெய்டாவிற்கும், ஈராக் ஆட்சிக்கும் இடையே இதற்கு முன்னர் தொடர்புகள் இருந்திருக்கலாம். ஆனால், அந்த உறவுகள் அவநம்பிக்கையோடும் ஒவ்வாமை கொள்கையோடும் சிதைந்துவிட்டன. ஈராக்கில் சில அல்கெய்டா உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பின் லேடன், பாத் ஆட்சியை மதத்திற்கு விரோதமான ஆட்சி என்று கருதுகிறார் என்பதை நாங்கள் நம்புகிறோம். இஸ்லாமிய கலிபாத்திற்கு (Islamic caliphate) பாக்தாத் தான் தலைநகர். அந்த ஆட்சியை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதுதான் பின் லேடனின் நோக்கம். எனவே, இன்றைய ஈராக் ஆட்சியோடு கொள்கை அடிப்படையில் அவர் மோதலில் ஈடுபட்டிருக்கிறார்'' என்று இந்த அறிக்கை கூறுகின்றது.

இந்த வாரம், பாக்தாத் மற்றும் அல்கெய்டா உறவுகளுக்கு சான்றாக பின் லேடனின் ஆடியோ ரேப் சம்பந்தமாக, உள்நோக்கத்துடன் புஷ் நிர்வாகம் முயற்சி ஒன்றைச் செய்தது. உண்மையில் அந்த ஆடியோ ரேப் அது உண்மையாகவே இருந்தாலும், அத்தகைய தொடர்பு எதையும் அது அம்பலத்திற்கு கொண்டுவரவில்லை. ஈராக்கில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு, அமெரிக்கத் தாக்குதலில் இருந்து ஈராக்கை காப்பாற்றுமாறு பின் லேடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அங்கு மத ''நம்பிக்கையற்ற'' ஆட்சி இருந்தாலும் அந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று தான் பின் லேடன் கூறியிருக்கிறார். சதாம் ஹூசேனுக்காக ஈராக்கை காப்பாற்ற வேண்டும் என்று பின் லேடன் கூறவில்லை.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உரையாற்றிய ஒரு வாரத்திற்குப் பின்னர், பவெல் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களும் மறுக்கப்பட்டுவிட்டன. விஷத் தொழிற்சாலை இல்லை மற்றும் ஐரோப்பிய பயங்கரவாதக் குழுக்களுக்கும், பாக்தாத்திற்கும் இடையே தொடர்புகள் எதுவும் இல்லை. இந்தப் பயங்கரவாத செயல்களை முன்னின்று இயக்கிய தலைவர் ஈராக்கிலும் இல்லை. அல்கெய்டா சதாம் ஹூசேனின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஈராக்கைப் பற்றி புஷ் நிர்வாகமும், பவெலும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்ற குற்றச்சாட்டுகள் ''வலைச்சிக்கலான பொய்யாகும்''.

Top of page