World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Indonesian military intensifies operations in Aceh

அக்கே பகுதியில் இந்தோனேசிய இராணுவம் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது

By John Roberts
24 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

வடக்கு சுமத்திரா மாகாணமான அக்கே (Aceh) பகுதியில் நடைபெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகள் ஊடகங்களில் மிகவும் சொற்ப அளவிற்குத்தான் செய்திகளாக வெளிவருகின்றன. இருந்தபோதிலும் இந்தோனேசிய இராணுவம் உள்ளூர் மக்களை பயமுறுத்துவதற்கும் தனிநாடு கோரும் சுதந்திர அக்கே இயக்கத்தினரை (GAM) ஒழித்துக்கட்டுவதற்கும் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினர் பொதுமக்களை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றிக் கொண்டிருப்பதுடன், சட்டத்திற்கு புறம்பாக மக்களை கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள்

சென்ற வாரம் இந்தோனேசிய விமானப்படை முதல் தடவையாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி வடக்கு அக்கே பகுதியிலுள்ள பாபுசலாம் கிராமத்திற்கு அருகில் 5 கிலோ மீட்டர் பரப்பில் குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்தப்பகுதியில் 100 முதல் 150 GAM கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருவதாக விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் சாப்பி ஹக்கீம் தெரிவித்தார். ''கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியேறி வரவேண்டும் அப்போது அவர்களை நாங்கள் தாக்குவது மிகவும் எளிது'' என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

''இப்படிப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சியூட்டும் மருந்தாகும்'' என்று ஹக்கீம் தெரிவித்தார். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராக்கெட்டுக்களை வீசி தாக்குவதற்கும் அந்தப் பகுதியை கண்காணிப்பதற்கும் பிராங்கோ விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட தீவிரமான தாக்குதல்கள் மூலம் GAM கிளர்ச்சியாளர்கள் என்று நினைத்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் மற்றும் ஊனப்படுத்தப்படும் நிலை உருவாகும். போர் நடக்கும் மண்டலத்திலிருந்து உள்ளூர் மக்களை வெளியேற்றுகின்ற, திட்டமிட்ட தந்திரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜூன் 13 ந்தேதி இந்தோனேசிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்ற தகவல்களின்படி ஜூலி பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற்றுகின்ற நடவடிக்கையை இந்தோனேசிய இராணுவம் மேற்கொண்டது. பைரன் கிழக்கு பகுதியிலுள்ள தற்காலிக முகாமிற்கு கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜஹார்த்தா போஸ்ட் பத்திரிகையில் ஜூன் 14 அன்று வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தியின்படி 13 ஆயிரம் மக்கள் முகாம்களுக்கு சென்றிருப்பதுடன் மேலும் பலர் முகாம்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். 200,000 மக்கள் தங்குவதற்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று இப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்ற வாரம் ஜஹார்த்தாவில் இந்தோனேசிய இராணுவத்தின் தலைமை தளபதி Endriartono Sutarto நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது பொதுமக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்ற திட்டம் இப்போதுதான் துவங்கியுள்ளது. இந்த இயக்கம் 6 மாதங்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும். இப்போது இரண்டாவது மாதமாகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் 2 மாதங்களில் எல்லைகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடைசி நான்கு மாதங்களில் பொதுமக்களைத் ''தனியாகப் பிரித்துவிட்டு'' GAM கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு காரணம் அவர்களிடையே கட்டுப்பாடு குறைவாக இருப்பதுதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். மதங், கும்பங், பகுதிகளில் கிராம மக்கள் 7 பேர் சாவிற்கு தமது துருப்புக்கள் தான் பொறுப்பு என்பதை ஒப்புக்கொண்டார். லவாங் பகுதியில் இராணுவத்தினர் முறைகேடாக நடந்து கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். பைரோங் பகுதியில் GAM கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தருபவை அந்த இரண்டு கிராமங்களும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேரங்களில் இராணுவப் பணிகளைத் தடையின்றி விரிவாக நடத்துவதற்கு வசதியாக இராணுவத்திற்கு சாதனங்கள் தரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இரவு நேரங்களில் மிகப்பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருப்பார்கள். சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வெளியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்று இந்த இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார். ஜூன் 5 ஆம் தேதி இரவில் இந்தோனேசிய இராணுவத்தினர் இரண்டு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளை நோக்கிச் சுட்டபோது, அதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது மனைவியும் காயமடைந்தார்.

அக்கேயிலுள்ள இராணுவப் பேச்சாளர் கேனல் டித்யா சுதர்சனோ ஜூன் 23 ஆம் தேதி தந்துள்ள தகவலின்படி இராணுவம் சென்ற வாரக் கடைசியில் 3 டஜன் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்கோர்பியன் ரக டாங்கிகளை (Scorpion tanks) அனுப்பியுள்ளது. இதன் மூலம் தாக்குதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு எதிராக இந்த டாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார். ''மக்களை கொன்று குவிக்கின்ற GAM தலைவர் அசன் டி டைரோவின் (Hasan de Tiro)'' கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மட்டுமே கொல்லப்படுவதற்கு இந்த டாங்கிகள் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மே 19 ஆம் தேதி GAM கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. சென்ற வாரம் வரை 225 GAM ''கிளர்ச்சியாளர்கள்'' கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் இந்தோனேசிய அரசாங்கம் தகவல் தந்துள்ளது. இறந்துவிட்ட பொதுமக்கள் 108 பேர் என்று போலீசார் தகவல் தந்தனர். இருந்தபோதிலும் இந்தத் தகவல்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவையாக இருக்கின்றன.

அந்த மாகாணத்தில் உள்ள சவச்சாலைகளில் பொதுமக்கள் உடைகளில் காணப்பட்ட 194 உடல்களை இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கம் வெளியே எடுத்து வந்திருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கப் பொதுச் செயலாளர் கியாங் தங்காங்கர் தந்துள்ள தகவலின்படி முஸ்லீம்களின் சமயச்சடங்கு வழக்கப்படி உயிர் நீத்தவர்கள் உடனடியாக புதைக்கப்பட்டு விடுகின்றனர். ஆகவே அந்த விவரங்கள் இந்தப் புள்ளி விவரத்தில் இடம்பெறவில்லை என்றார்.

மனித உரிமைகள் தொடர்பான இந்தோனேசிய தேசியக் கமிஷன், நிஷாம் துணை மாவட்டத்தில் ஒரே கல்லறையில் பல உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பதாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. அந்தப் பகுதியில் கடுமையாகப் போர் நடந்து வருவதால் தகவல்கள் மிக சொற்பமாக வந்து கொண்டிருக்கின்றன. ஊர்ஜிதமாகாத தகவல்களின்படி 100 உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மேலும் விளக்குகின்ற வகையில் இதர செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

* ஜூம்பா துணை மாவட்டத்திலுள்ள பலாங் சியோபாங் (Blang Seupang) கிராம மக்கள் 68-H வானொலி மற்றும் RCTI தொலைக்காட்சி வாகனத்தை தடுத்து நிறுத்தி தங்களது கிராமத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முறையிட்டனர். ஜூன் 13 ம் தேதி இராணுவத்தினர் கிராமத்தில் நுழைந்து GAM உறுப்பினர்கள் குறித்து வினவியதுடன், 34 பேரை தரையில் படுக்குமாறு கட்டாயப்படுத்தி அவர்கள் மீது ஏறி நடந்தனர். நான்கு கிராம மக்கள் தங்களது காயங்களையும் பத்திரிகையாளர்களிடம் காட்டினர்.

மாகாண கல்வி அலுவலகம் தந்திருக்கின்ற தகவலின்படி கடந்த 4 மாதங்களில் 60 ஆசிரியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 500 பள்ளிக் கூடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசிய இராணுவம் இதற்கு GAM மீது பழி போட்டது. ஆனால் ஜூன் 16 அன்று 20 வயதான முஸ்லீம் பள்ளிக்கூட ஆசிரியர் முஜாகிர் கொலை செய்யப்பட்டதானது நேரடியாக இராணுவத்தின் மீதே குற்றம்சாட்டுவதாக அமைந்திருக்கிறது. அவரது வீட்டிலிருந்து 4 பேர் அவரைப் பிடித்துச் சென்றனர். அவரது உடல் ஜட்டியோடு மரத்தில் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் கிராம மக்கள் மிகவும் பீதியோடு இருந்ததால் பத்திரிகையாளர்கள் சிலர் வந்து அந்த உடலைத் அப்புறப்படுத்தும் வரை அங்கு அந்த உடல் தொங்கிக்கொண்டிருந்தது. முஜாகிரை கடத்தியவர்கள் மிகப்பெரும்பாலான இந்தோனேசியத் துருப்புக்கள் பேசுகின்ற ஜாவானிர் மொழியில் பேசினர். GAM கிளர்ச்சியாளர்கள் அந்த மொழி பேசுவதில்லை. இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் GAM கிளர்ச்சியாளர்கள் எவரும் அந்தப் பகுதியில் நடமாடுவதில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அத்துடன் இராணுவம் அந்த கிராமத்திற்கு அருகில் சாவடிகளை அமைத்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

* அக்கே பகுதி சட்ட உதவி அமைப்பின் இயக்குனர் ஆப்லிதால் தார்மி ஜஹார்த்தா போஸ்ட் பத்திரிகைக்கு தந்திருக்கும் பேட்டியில் சிவில் உரிமைகளுக்காக போராடுவோர் கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மனித உரிமைகள் அமைப்பின் 4 உறுப்பினர்கள் மற்றும் இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட பலர் GAM உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அவர்கள் நாச வேலைகளில் ஈடுபடுவதாகவும் போலீசாரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஜூன் 7 ஆம் தேதி மனித உரிமைகளுக்காகப் போராடும் KONTRAS (வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் கானாமல் போனோர் பற்றிய கமிஷன்) அமைப்பைச் சேர்ந்த ஷைபுல் பாக்ரி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு GAM மீது இராணுவம் பழி போட்டது. ஆனால் ஒரு தொண்டர் ஜஹார்த்தா போஸ்ட் பத்திரிகைக்கு கூறும்போது, தானும் மற்றவர்களும் அக்கே பகுதியில் இருந்து தப்பியோடிக் கொண்டிருப்பதாகவும், இராணுவ ஆதரவு பெற்ற படையினரால் தாங்கள் கடத்தப்படலாம் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார். குறைந்த பட்சம் அந்த மாகாணத்தில் ஜஹார்தாவிற்கு ஆதரவான மூன்று தீவிரவாத படைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. 1999 ஆம் ஆண்டு கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு ஆதரவான குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்த இராணுவக் குழுக்களையே இந்தோனேசிய இராணுவம் பயன்படுத்தி வந்தது. இத்தகைய குண்டர்களை மேற்கு பாப்புவா மற்றும் இதர பகுதிகளில் இந்தோனேசிய இராணுவம் வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறது.

* இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ளூர் நிர்வாகத்தை கொண்டு வருவதற்கு முயன்று வருவதுடன், இந்தோனேசிய ஒன்றுபட்ட ஒரே நாடு என்ற கட்டாய பிரச்சாரத்தில் அது ஈடுபட்டிருக்கிறது. யூன் 9 அன்று பலாங் சேப்பாங் என்ற இடத்தில் இந்த முயற்சியில் கலந்து கொள்ள மறுத்த 76 கிராமத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமாக்கள் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் ஹரிஷபாமோ ''இதுபோன்ற அவசர நிலைகளில் தேசபக்தி மிக்க தலைவர்கள்தான் நமக்குத் தேவை'' என்று கூறினார். இராணுவத் தலைமைத் தளபதி ரியாமிஷாட் ரியாஸ் குடோ ராஜினாமா செய்த கிராமத் தலைவர்களுக்குப் பதிலாகப் படையினரை நியமித்தார். அந்த மாகாணத்தின் பல பகுதிகளில் சிவில் நிர்வாகம் இயங்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

பத்திரிகைச் செய்திகளில் சிறிய தகவல்கள்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் இராணுவம் கடுமையான முன் தணிக்கை முறைகளை கொண்டு வந்திருக்கிறது. அக்கே மாகாணத்தில் பணியாற்றுகின்ற பத்திரிகையாளர்களும் இராணுவ யூனிட் குழுக்களுடன் பணியாற்றியாக வேண்டும். அவர்கள் நான்கு நாள் பயிற்சியிலும் கலந்து கொள்ள வேண்டும். முதலுதவி மற்றும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் தப்பிப்பிழைக்கின்ற ஆற்றலையும் பத்திரிகையாளர்களுக்கு இந்தப் பயிற்சிகள் மூலம் வழங்கப்படுவதாக இராணுவம் தெரிவித்தது. ''இந்த உள்நாட்டுப் போர் பற்றிய தேசிய கண்ணோட்டத்தில் செய்தி சேகரிப்பது எப்படி பிரசுரிப்பது எப்படி'' என்பதில் பிரதானமாக பத்திரிகையாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக ஜஹார்தா போஸ்ட் மேலும் தெரிவித்தது. இராணுவ சட்ட அதிகாரி ஜெனரல் என்டாங் சுவார்யா GAM கிளர்ச்சியாளர்களது அறிக்கைகளை பிரசுரிக்க மற்றும் வானொலி தொலைக்காட்சியில் வெளியிடத் தடைவிதித்து கட்டளை பிறப்பித்துள்ளார்.

அதிகாரப் பூர்வமாக சோதனை செய்யப்பட்ட 20 வெளிநாட்டு பத்திரிகையாளர்களும், இதே போன்று கட்டுத்திட்டங்களில் செயல்பட்டு வருகின்றனர். சென்றவார நிலவரப்படி அங்கீகாரம் பெறாத வெளிநாட்டவர் அனைவரும் அந்த மாகாணத்தில் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். GAM பிரிவோடு பணியாற்றி வருகின்ற அமெரிக்காவின் சுதந்திர பத்திரிகையாளரான வில்லியம் நெல்சனை இந்தோனேசிய அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்தோனேசிய துருப்புக்களிடம் சரணடைவதற்கு அவர் முயன்றதாகவும் அப்போது இந்தோனேசியப் படையினர் அவரை நோக்கி சுட்டதாகவும் அதனால் அவர் தப்பியோட நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள GAM தலைவர்களை அடக்கி ஒடுக்க வேண்டுமென்று அந்நாட்டிற்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்பதில் ஜஹார்தா தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்தோனேசிய உயர் அதிகார தூதுக்குழு ஒன்று அலி அலட்டாஸ் தலைமையில் சுவீடன் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளது. அவர் சர்வாதிகாரி சுகாட்டோ ஆட்சிக் காலத்தின்போது நீண்ட காலம் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளார். சுவீடனில் தஞ்சம் புகுந்துள்ள GAM தலைவர்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார்கள் என்பதை நிரூபிப்பதற்கு சில தஸ்தாவேஜுகளையும் சுவீடன் அதிகாரிகளிடம் இவர்கள் தாக்கல் செய்தனர்.

கான்பரா, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகர்கள் அக்கே பகுதியில் நடைபெற்று வரும் அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் வகையில் முற்றிலும் அமைதி காத்து வருகின்றன. இந்தோனேசியாவின் ஒற்றுமையை காப்பது என்ற அடிப்படையில் ஆதரவைக் காட்டியுள்ள இந்த அரசுகள் இந்தோனேசிய அரசாங்கம் மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ள அத்து மீறல்களை பொருட்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றன.

சர்வாதிகாரி சுகார்ட்டோ காலத்து நிலைமையினை இந்த தாக்குதல் வழிமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க அக்கே மாகாணத்தில், இந்தோனேசிய மத்திய அரசிற்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்புக்கள் அனைத்தும் சுகார்ட்டோ ஆட்சிக்காலத்தில் இராணுவத்தின் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page