World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Total oil in France's biggest postwar financial scandal

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், உலகிலேயே மிகப் பெரிய ஊழலில் சிக்கிக் கொண்ட பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் டோட்டல்

By Keith Lee
11 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் எண்ணெய்த் தொழிலை சூறையாடுவதன் மூலம் விரிவான அளவில் லாபம் ஈட்டமுடியும் என்று கருதி, எண்ணெய் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஈராக் எண்ணெய் ஒப்பந்தங்களை பெறுவதற்கு துடித்துக் கொண்டிருக்கும்போது Total என்கிற எண்ணெய் நிறுவனம் (இதற்கு முன்னர் TotalFinaElf என்று அழைக்கப்பட்டது) தற்போது பிரான்சில் ஒரு நீதிமன்ற வழக்கில் சம்மந்தப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் வழக்கானது அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் வரை பரவியிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளதுடன், இது பிரான்சில் இரண்டாவது உலகப் போருக்கு பிந்தைய மிகப் பெரிய நிதி மோசடி என்றும் கூறப்படுகிறது.

ஈராக்கினுடைய எண்ணெய் ஒப்பந்தங்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டன் கம்பெனிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அச்சத்தை போக்குகின்ற வகையில், அமெரிக்க நிர்வாகம் TotalFinaElf நிறுவனத்திற்கு ஈராக்கில் 2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் தயாரிப்பதற்கான உரிமைகளை வழங்கியுள்ளது.

TotalFinaElf' நிறுவன ஊழல் தொடர்பான விசாரணைகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கின்ற நீதிபதிகள், (மாஜிஸ்திரேட்டுகள்) தாக்கல் செய்துள்ள அறிக்கைகளில் 40 கம்பெனி நிர்வாகிகள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்களது பெயர்களை குறிப்பிட்டிருக்கின்றனர். இவர்கள் சங்கிலித் தொடர் போன்ற ஊழல் பெருங்கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். 1990 களின் ஆரம்பத்தில் இந்த மோசடி கும்பல்கள் Elf நிறுவனத்திலிருந்து ஏறத்தாழ 3 பில்லியன் பிராங்குகளை லஞ்சமாக பெற்றிருக்கிறார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த வழக்கு முடிவிற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இதுவரை இந்த வழக்கில் 80 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களின் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1994 ம் ஆண்டு தலைமை வகித்து இந்த வழக்குகளை நடத்திய புலன் விசாரணை நீதிபதியான இவா ஜொலி (Eva Joly) சென்ற ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்த வழக்குகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் பிரெஞ்சுப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து இடையூறுகள் வந்ததாகவும், தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டல் வந்ததாகவும், அவர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு தற்போது 24 மணி நேரமும் மெய்க் காப்பாளர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஜூன் 19 ந்தேதி வரை தற்காலிகமாக இந்நூல் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அதற்குக் காரணம், ஜூலை 7 ந் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட இருந்ததால் ஆகும். இந்தப் புத்தகத்தின் தலைப்பு "நாம் வாழ விரும்புகின்ற உலகம் இதுதானா?'' என்பதாகும். இந்த நீதிபதி பிரெஞ்சு அரசாங்க நிர்வாகத்தில் ஊழல் புரையோடிவிட்டதாக அறிவித்திருக்கிறார்.

Total எண்ணெய் நிறுவனம் Elf அக்கிடேன் (Elf Aquitaine) என்ற பெயரோடு ஜெனரல் டு கோல் (De Gaulle) ஆல் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம், 1994 ம் ஆண்டு விற்கப்பட்டு TotalFinaElf எண்ணெய் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டது. அத்துடன் இந்த நிறுவனம், பிரெஞ்சு ஆட்சியாளர்களின் ரகசிய முகமூடியாக செயல்பட்டது மாத்திரமின்றி, இதனைப் பயன்படுத்தி ஆபிரிக்க தலைவர்களுக்கு லஞ்சமும் கொடுக்கப்பட்டது. அத்தோடு லத்தீன் அமெரிக்காவில் வெளிச் செலாவணி பேர மோசடிகளும் நடைபெற்றன.

1950 களில் ஜனாதிபதி சார்ள் டு கோல் ஆபிரிக்க நாடுகளில் Elf நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தபோது, அவரது ஆலோசகர் காலஞ் சென்ற ஜாக் போக்ஹார்டும் (Jacques Foccart) அதில் கலந்து கொண்டார். Elf மூலமாக, எண்ணெய் வளத்தை குவிப்பதற்கு ஒரு வழியாக சங்கிலித் தொடர்போன்று பல குழுக்களை இந்த நிறுவனம் பயன்படுத்தியது. மேற்கு ஆப்பிரிக்காவில் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் இது நடந்தது. பிரான்சின் செல்வாக்கை நிலை நாட்டவும் பின்னர் கோலிஸ்ட் கட்சியைச் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வதற்காகவும் Elf நிறுவனம் தரகு கமிஷன்களைப் பிரித்து கணக்கு எழுதுகின்ற ஒரு முறையைக் கொண்டு வந்தது.

இந்த முறையை கோலிஸ்ட் கட்சியைச் சார்ந்த, இரண்டு தடவைகள் உள்துறை அமைச்சராக பணியாற்றிய 74 வயதான சார்ள் பாஸ்குவா மேற்கொண்டிருந்தார். இவர் 70 க்கு மேற்பட்ட தடவைகள் Elf நிறுவன விமானங்களை பயன்படுத்திக் கொண்டார் என்று நீதிமன்ற வழக்கில் ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அத்தோடு இவர் இவ்வாறு, கம்பெனி விமானங்களை அரசியல் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இப்படி இலவச விமானப் பயணத்திற்கு Elf நிறுவனத்தின் ஆலோசகர்களில் ஒருவரும், உலகளாவிய வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருப்பவருமான ஆன்ரே குல்பி (Andre Guelfi) என்பவர் ஏற்பாடு செய்திருக்கிறார். பெரும்பாலும், சர்வதேச ஒலிம்பிக் குழு இடைத்தரகர் என்ற முறையில் ஏற்பட்ட தொடர்புகள்தான் அவை. அவரது இந்த நடவடிக்கை மிக அதிகமாகி அடிக்கடி விமானப் பயணங்கள் நடந்ததால் "விமான எல்ப்" என்று கூட பரிகாசம் செய்தார்கள்.

பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின் மேல்மட்டங்களுக்கும், இடைத்தரகர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல் மலிந்த வர்த்தகர்கள் ஆகியோருக்கு இடையிலும் சங்கிலித் தொடர் போன்ற தொடர்புகள் இருப்பதை இந்த நீதிமன்ற வழக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. Elf எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான Le Floch-Prigen என்பவர் கம்பெனியின் பணத்தை தனது சொந்த விவாகரத்து தீர்வுக்காக பயன்படுத்திக் கொண்டார் என்றும், இதனை முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரானுடைய அனுமதியோடு செய்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார். இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு வழக்கில் 2001 ம் ஆண்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதே வழக்கில் 2001 மே மாதம் பிரான்சின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோலன்ட் டுமா (Roland Dumas) 1989 முதல் 1992 வரை Elf எண்ணெய் நிறுவனத்திலிருந்து சட்ட விரோதமாக நிதிகளை பெற்றதாக 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்.

சிலந்தி வலை போன்ற இந்த ஊழல் விவகாரம் பிரான்சினுடைய எல்லைகளுக்கு அப்பாலும் சென்றிருக்கிறது. 2001 ம் ஆண்டில், ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜோசப் பிக்கே (Josep Pique) மீது, நிதி முறை கேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையில், 1991 ம் ஆண்டு பிரான்சின் Elf நிறுவனத்திற்கு ஸ்பெயின் நாட்டு நிறுவனமான எர்த் ஆயில் (Ertoil) விற்கப்பட்டது சம்மந்தமாக, அப்போது பிக்கே மீது குற்றச்சாட்டு தாக்கல் செய்யலாம் என்று 10 க்கு 2 என்ற விதத்தில் வாக்குப் பதிவு மூலம் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், பிக்கே நிதி மோசடிகளைச் செய்தார், வரி ஏய்ப்பு செய்தார், மோசடிகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது குற்றச்சாட்டு பட்டியலை தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பிரான்சின் Elf நிறுவனத்திற்கு ஸ்பெயின் நிறுவனம் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டபோது, அந்தப் பணம் லுக்சம்பர்க்கில் உள்ள துணை நிறுவனத்திற்கு திருப்பி விடப்பட்டது. புலன் விசாரணைக் குழுவினரால், அந்தப் பணத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகை எங்கே போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எர்த் ஆயில் நிறுவனம் Elf நிறுவனத்திற்கு விற்கப்பட்டது சம்பந்தமான நீதிமன்ற வழக்கின்போது, அண்மையில் ஸ்பெயின் பேரத்திற்கு இடைத்தரகராயிருந்த நாட்மி ஆசி (Nadhmi Auchi) என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். நான்காவது அலைவரிசை செய்திப் பிரிவில் வெளியிடப்பட்ட பிரெஞ்சு அதிகாரிகளின் அறிக்கையின்படி ஆசி மீது மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. எர்த் ஆயில் நிறுவனத்தை ஜெனரல் மெடிட்டேரினன் ஹோல்டிங்ஸ் (General Mediterranean Holdings - GMH) என்ற ஆசியின் ஆயுத நிறுவனம், நிர்வாகத்தை மேற் கொண்டபோது பண மோசடி நடத்துவதற்கு சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றும் அதற்கு பின்னர் Elf நிறுவனத்திற்கு எர்த் ஆயில் நிறுவனம் டிசம்பர் 1990 க்கும் ஆகஸ்ட் 1994 க்கும் இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஈராக்கை பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரிட்டன் வர்த்தகருமான ஆசி, அண்மையில் பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார். பிளேயருடைய அரசாங்கம் தடைபோட்டது போல பிரெஞ்சு அதிகாரிகளும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை இதற்கு எடுத்துக் கொண்டனர். ஆசியும் பிரிட்டனில் பலமான சில நண்பர்களை வளர்த்துக் கொண்டார். முன்னாள் கன்சர்வேட்டிவ் சான்சலரான லாமொட் (Lord Lamont) பிரபு, ஆசியினுடைய லுக்சம்பேர்க்கிலுள்ள Cipaf வங்கி கம்பெனிக்கு சேவகம் செய்வதுடன், தாராளவாதக் கட்சியின் முன்னாள் தலைவரான டேவிட் ஸ்ரீல் (David Steel) பிரபு ஆசியினுடைய ஆயதக் கம்பெனியான ஜெனரல் மெடிட்டேரினன் கோல்டிங் கம்பெனியின் இயக்குனராகப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.

ஆசி இன்றைய தொழிற்கட்சி ஆட்சியோடும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். அவரது ஆயுத நிறுவனமான GMH னுடைய 20 தாவது ஆண்டு விழாவில், அவருக்கு பிரதமர் டோனி பிளேயரின் சார்பில் கோடீஸ்வரர் செயின்ட் பிரிஸ் பிரபு நாடாளுமன்றக் கட்டிட வண்ண ஓவியத்தை பரிசாக அளித்தார். அந்த ஓவியத்தில் 100 எம்.பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். அவர்களில் முன்னாள் பழமைவாத (Conservative) கட்சித் தலைவரான வில்லியம் காக் மற்றும் தாராளவாதக் கட்சியின் தலைவர் சார்ள்ஸ் கென்னடியும் இடம் பெற்றிருக்கின்றனர். ஆசி தொழிற்கட்சியில் கிடைத்த புதிய நண்பர்களை பயன்படுத்தி கீத்வாஸ் என்ற எம்.பியை GMH க்கு இயக்குனராக நியமித்திருந்தபோதும், அவர் அமைச்சரானதும் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அப்படியிருந்தும் ஆசியுடனான தொடர்பு அவருக்கு நீடித்தது.

ஆசி பிரிட்டனின் ஏழாவது பெரிய பணக்காரர் ஆவார். அவர் இதற்கு முன்னர் பாத்கட்சி உறுப்பினர் சதாம் ஹூசேனின் நெருக்கமான நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கினார். 1950 களில், அன்றைய ஈராக் பிரதமரை கொலை செய்வதற்கான சதியில் சதாம் ஹூசேனுடன் சம்மந்தப்பட்டிருந்ததாக ஆசி மீதும் விசாரணை நடைபெற்றது. பாத் ஆட்சியோடு தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி 1980 களின் துவக்கத்தில் பிரிட்டனிலும், லுக்சம்பேர்க்கிலும் வங்கித் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும் உருவாக்கினார்.

இவர், இத்தாலியின் மிகப்பெரும் வாதத்திற்கிடமான வங்கியாளரான பாசினி பட்டகாளியாவுடன் (Pacini Battaglia) 1987 ல் நான்கு ஆண்டுகள் சம்மந்தப்பட்டிருந்தார். இத்தாலியின் நிதித் தொடர்பான ஊழல் விசாரணையின் போது இருவரும் அம்பலப்படுத்தப்பட்டனர். அந்த விசாரணையில் தெரியவந்த மற்றொரு தகவல், உலகிலேயே மிக லாபகரமான திட்டமான 1987 ம் ஆண்டு ஈராக்கிலிருந்து சவுதி அரேபியாவிற்கு பெரும் குழாய் இணைப்பை ஏற்படுத்த சதாம் ஹூசேன் முயன்றதாகும். இத்தாலிய - பிரஞ்சு கூட்டு நிறுவனங்கள் ஆசியையும், பட்டகாளியாவையும் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக பயன்படுத்திக்கொண்டன. இத்தாலியர்களுடன் பேரம் பேசுவதற்காக ஈராக் ஆட்சியாளர்களுக்கு ஆசி லஞ்சம் கொடுத்தார் என்று பட்டகாளியா தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருந்தார். ஏப்ரல் மாதம் 6 ந்தேதி அப்சர்வர் என்ற பத்திரிகையில் பட்டகாளியாவின் பேட்டி பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ''இதுபோன்ற ஒப்பந்தங்களை பெறுவதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சர்வதேச இடைத்தரகர் ஈராக்கைச் சேர்ந்த நாத்மி ஆசி'' என்று அப்சர்வர் பத்திரிகை பட்டகாளியாவின் பேட்டியை பிரசுரித்திருந்தது.

நீதிமன்றத்தில் ஒருமுறை பட்டகாளியா பிரெஞ்சு எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுக்கு எவ்வாறு தான் கோடிக்கணக்கான பவுன்களை லஞ்சமாக கொடுத்ததை விவரித்தார். இப்படி லஞ்சம் கொடுப்பது வாடிக்கை என்றும், இதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டிருப்பதாகவும், எது Elf ற்கு நல்லதோ, அது பிரான்சிற்கும் நல்லது என்று அவர்கள் கூறியதாகவும் பட்டகாளியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த பேரத்தில் கோடிக்கணக்கில் ஆசி சம்பாதித்தாலும் குவைத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலை ஸ்பெயின் நாட்டில் விற்பனை செய்ததில் மிகப்பெரிய அளவிற்கு இதைவிட அதிகமான லாபம் சந்தித்திருக்கிறார். சதாம் ஹூசேன் 1991 ம் ஆண்டு குவைத் மீது படையெடுத்தபோது, குவைத் ஆட்சியாளர்கள் ஸ்பெயினில் உள்ள தமது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை விற்று ரொக்கப் பணம் திரட்ட விரும்பினர். ஐரோப்பாவில் இந்த விற்பனைக்கு அரசாங்க சிகப்பு நாடா நிர்வாக முறை இடையூறாகத் தோன்றியதால், இவர்கள் ஆசியை இடைத்தரகராக பயன்படுத்தி விற்பனையை முடுக்கிவிட முடிவு செய்தனர்.

இந்த பேரத்திற்காக ஆசிக்கு ரகசியமாக கமிஷன் தரப்பட்டது. இப்படி Elf நிறுவனம் வழங்கிய பணத்தில் கணிசமான பகுதி மூத்த அதிகாரிகளது பாக்கெட்டுகளுக்கு சென்றது. இந்த பேரத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் ஆல்பிரட் சர்வன்ட் (Alfred Sirven) என்பவராவர். இத்தகைய கமிஷனர்கள் எண்ணெய் நிறுவனம் சம்மந்தப்பட்டவர்கள் என்றாலும், பிரெஞ்சு அரசாங்க உயிர்நாடி வரை இந்த ''ஊழல் சிலந்தி வலை'' பரவியிருக்கின்றது.

புலன் விசாரணை அதிகாரிகளின்படி, இந்த பேரத்தை ஏற்பாடு செய்ததற்காக ஆசிக்கு ஸ்பெயிலிருந்து 5.6 பில்லியன் பெஸ்டாஸ்க்கள் கமிஷனாக கிடைத்தது என்றும், இதில் 2.4 பில்லியன் ஆல்பிரட் சர்வன்ட் மூலம் லுக்சம்பேர்க்கில் உள்ள ஆசியின் ரகசிய கணக்கிற்கு மாற்றப்பட்டது என்றும் கருதப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ள போதிலும் எர்த் ஆயில் சுத்திகரிப்பு ஆலை பேரத்தில் தாம் பெற்ற பணம் சட்டப்பூர்வமான கமிஷன் என்று அவர் கருதுகிறார்.

பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் ஊழல் உலகமும், அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் எந்த அளவிற்கு மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையே இந்த மோசடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளின் நலன்களுக்காகத்தான் ஈராக்கிலும் மற்றும் சகல பகுதிகளிலும் அப்பாவி ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளுமாக படுகொலை செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page