World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US telecom giants and the war in Iraq: It's not just about oil

அமெரிக்கா தகவல் தொடர்பு நிறுவனங்களும், ஈராக் போரும்: எண்ணெய்க்கான போர் மட்டுமல்ல

By Joseph Kay
22 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருப்பது சூறையாடும் நோக்கத்தை கொண்டது என்று உலகம் முழுவதிலும் மக்கள் கருதுகின்றனர். ஈராக்கில் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ளது என்பதன் மீதும் அமெரிக்க நிறுவனங்கள் இந்த லாபம் தரும் இயற்கை வளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.

என்றாலும் அமெரிக்காவின் பொருளாதார நலன்கள் ஈராக்கின் எண்ணெய் விநியோகத்திற்கும் அப்பால் நீண்டு கொண்டே போகிறது. அமெரிக்க தொழிற்துறையின் இன்னொரு பெரிய பிரிவான தகவல் தொடர்பு சாதனங்கள் ஈராக் ஆட்சி கவிழ்க்கப்படுவது தொடர்பாக கவனம் செலுத்துகின்றன.

போருக்கு பிந்திய ஈராக்கில் தகவல் தொடர்பு சாதனங்களை சீரமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதில் அமெரிக்காவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு சாதனங்களான Motorola மற்றும் Lucent மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா படையெடுத்து ஈராக்கை பிடித்துக்கொண்டால் பிரான்ஸ் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனங்கள் மிகப்பெரும் அளவிற்கு அனுகூலங்களை பெறமுடியும்.

''புதிய ஈராக்'' என்ற நூலை எழுதியுள்ள ஜோசப் பிராடி (Joseph Braude) தற்போது பிரமீடு ஆய்வு நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர் பெப்ரவரி 17 அன்று இந்த உலகம் என்ற தலைப்பில் அமெரிக்க தேசிய பொது வானொலிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் ஈராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது பூகோள அரசியல் சிந்தனைகளில் சில மாற்றங்களை உருவாக்கும். ஒப்பந்தங்களில் பலம் அதிகரிக்கும் தற்போது ஈராக்கிற்கு வெளியேயுள்ள அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனங்கள் திடீர் என்று வலுவான நிலையில் போட்டி போடுகின்ற சூழ்நிலை உருவாகும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

''போர் நடைபெறாது பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டால் அப்போது தற்போது ஈராக்குடன் பணியாற்றி வருகின்ற பாரம்பரிய ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தொடர்ந்து அங்கு இயங்கிக்கொண்டிருக்கும்.''

இதில் பெரும் தொகை சம்பந்தப்பட்டிருக்கிறது, அண்மைக்கால நமக்கு தெரிந்தவரை அடுத்த சில ஆண்டுகளில் ஈராக்கின் தரை தொடர்பு தொலைபேசி இணைப்புகளை சீரமைக்க ஒரு பில்லியன் டொலர் அளவிற்கு ஒப்பந்தம் கிடைக்கும். அதே காலத்தில் மொபைல் தொலைபேசி தொடர்புகளை சீரமைக்க நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் ஒப்பந்தம் கிடைக்கும் என்பதாக பிராடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் தகவல் தொடர்பு கட்டமைப்புக்களை யார் சீரமைப்பது என்பது குறித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகவே தகராறுகள் நீறுபூத்த நெருப்புப்போல் புகைந்து கொண்டிருக்கின்றன. 1991ம் ஆண்டு நடைபெற்ற முதல் வளைகுடாப்போரில் அமெரிக்கா, தகவல் தொடர்பு சாதனங்களை குறிவைத்து குண்டு வீசி தாக்கியது. நவீன பொருளாதாரம் செயல்படுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியான தகவல் தொடர்புகளை அழித்து விடவேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா ஈராக் மீது தாக்குதலை நடாத்தியது. அப்போது மிகப்பெரும் அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க ஆதரவோடு ஐக்கிய நாடுகள் சபை செயல்படுத்தி வரும் பொருளாதார தடை நடவடிக்கைகளால் தகவல் தொடர்புகளை நவீனமயமாக்கும் ஈராக் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இவற்றின் விளைவாக 24 மில்லியன் மக்களைக் கொண்ட, உலகிலேயே இரண்டாவது பெரிய பெட்ரோலிய வளத்தை கொண்டிருக்கின்ற நாடான ஈராக் உலகிலேயே மிகப் பிற்போக்கான தகவல் தொடர்பு வசதிகளை கொண்ட நாடாக உள்ளது. சராசரியாக 100 ஈராக் மக்களுக்கு 3 தொலை பேசிகளே உள்ளன. 1990ம் ஆண்டு இது 5.6 தொலைபேசியாக இருந்தது. தொலைபேசி இணைப்புகள் பழுதுபட்டு பழைய தொழில்நுட்பத்துடன் இயங்குவதால் தற்போது தொலைபேசி வசதியுள்ள பணக்காரர்களும் அரசியல் தட்டினரும் கூட தொலைபேசிகளை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு காலத்தில் பாக்தாத் நவீன நகரமாக திகழ்ந்தது. ஆனால் இன்றைய தினம் உலகில் உள்ள வர்த்தகத்திற்கான கம்பியில்லா இணைப்புகள் இல்லாத ஒரு சில தலைநகரங்களில் ஒன்றாக பாக்தாத் ஆகிவிட்டது. வலைத் தளங்களுக்கும், மின்னஞ்சல்களுக்குமான இணைய வலைப்பின்னல் இணைப்பை ஏற்படுத்திக் கொண்ட கடைசி வரிசை நாடுகளில் ஈராக்கும் ஒன்றாகும். ஈராக் முழுவதிலும் இணைய வலைப்பின்னல் இணைப்பை பெற்றிருப்பவர்கள் சில நூறு பேர்தான் என்று மதிப்பிட்டிருக்கிறது.

வளைகுடாப்போரில் அழிக்கப்பட்ட தகவல் தொடர்பு கட்டமைப்பு வசதிகளை ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான அல்கட்ரெல் (Alcatel) உருவாக்கியிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சீரமைப்பு முயற்சிகளில் அந்த நிறுவனம் பெரும்பங்கு வகித்தது.

அல்கட்ரெல் நிறுவனத்திற்கு சதாம் ஹூசேன் அரசு நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை வழங்கியுள்ளது. அதன் படி சர்வதேச தொலைபேசி இணைப்பகத்தையும் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மைக்ரோ அலை தொலைபேசி முறையையும் (microwave telephone system) அந்த நிறுவனம் ஈராக்கில் உருவாக்கும் இந்த பேரத்தின் மதிப்பு 75 மில்லியன் டொலர்கள். இதுவும் அல்கட்ரெலின் இதர திட்டங்களும் போர் ஆரம்பிக்குமானால் செயல்பட முடியாது.

1990 களில் பெரும் பகுதியில் ஐ.நாடுகள் அங்கீகரித்த தகவல் தொடர்புகள் உட்பட மிகப்பரவலான சேவைகள் மற்றும் பொருட்களுக்கான 3 பில்லியன் டொலர்களுக்கான ஒப்பந்தத்தினூடாக ஈராக்குடன் நடைபெற்ற வர்த்தகத்தில் பிரான்ஸ் தான் பெரிய அனுகூலத்தை அடைந்திருக்கிறது. 1996ம் ஆண்டு எண்ணெய்க்கு உணவு என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் படி எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் ஐ.நா-வினால் நிர்வாகிக்கப்படும் ஒரு மூன்றாவது கணக்கில் வைப்பிருப்பு செய்யப்பட்டு, அதிலிருந்து ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகரிக்கும் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை ஈராக் பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக பொருளாதார தடை நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை விரும்பும் நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, அல்லது சீனா உடன் தனது வர்த்தகத்தை நடத்துவதற்கு ஈராக் முயன்று வருகிறது.

எவ்வாறிருந்தபோதிலும், நிதி ஒதுக்கீடு செய்யப்படும் முன் ஒவ்வொரு ஒப்பந்தமும் பாதுகாப்பு சபையின் ஒப்புதலைப் பெறவேண்டும். பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள், குறிப்பாக அமெரிக்கா பரவலான அதிகாரம் பெற்றிருப்பதால் ஒப்பந்தங்களை தடுத்து நிறுத்திவிட முடியும். ஈராக்கிற்கு வழங்கப்படும் பொருட்களை சாதாரண மற்றும் இராணுவ நோக்கங்களுக்கான ''இரட்டைப் பயன்பாடு'' உள்ளவை என்று பகுத்து அந்த ஒப்பந்தங்களை நிறைவேறாமல் அமெரிக்கா தடுத்துவிட முடியும்.

தொலைத்தொடர்பு ஒப்பந்தங்களை தடுத்து நிறுத்தக்கூடியதை அதிகாரத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தித்தான், 2001ம் ஆண்டில் ஐ.நா ஆய்வாளர்கள் பரிசோதனை முறையை சீரமைக்க சீனாவிற்கும், பிரான்சிற்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் நிர்பந்தம் கொடுத்தன. உதாரணமாக, ஈராக்கிற்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையே தடுத்துநிறுத்தப்பட்டிருந்த 80 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான ஒப்பந்தத்திற்கு 2001 ஜூன் மாதம் அமெரிக்கா மீண்டும் அனுமதி தந்தது. இந்த ஒப்பந்தத்தில் சீனாவின் ஹுவாய் டெக்னாலஜிஸ் (Huawei Technologies) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 28 மில்லியன் டொலர் ஒப்பந்தமும் அடங்கும். இந்த ஒப்பந்தப்படி ஈராக்கில் அந்த நிறுவனம் 25,000 மொபைல் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கும். இப்படி ஒப்பந்த அனுமதி கிடைத்து மறுநாள் சீனா ஓர் அறிவிப்பை வெளியிட்டது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் ''இரட்டை பயன்பாடு'' பொருட்கள் பற்றிய ஓர் உடன்பாட்டிற்கு வந்திருப்பதாக சீனா குறிப்பிட்டது. பொருளாதாரத்தடை சீரமைப்பில் ஒரு பகுதியாக இது அமையும் என்றும் சீனா குறிப்பிட்டது.

அமெரிக்க அரசு இது போன்று பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடன் பரஸ்பர பயன் பகிர்வு அடிப்படையில் உடன்பாடு செய்து கொண்டது. இதில் எண்ணெய் ஒப்பந்தங்களும் தொலைபேசி தொடர்பு ஒப்பந்தங்களும் அடங்கும். பொதுவாக ஐரோப்பிய அல்லது ஆசிய கம்பெனிகள் பயனடையும் ஒப்பந்தங்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தி உள்ளது.

ஈராக்கின் தகவல் தொடர்பு இணைப்புகளைச் சீரமைப்பதற்கு நடைபெறும் முயற்சிகளை ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தும் முறையை மட்டுமே அமெரிக்கா பின்பற்றவில்லை, 2001ன் ஆரம்பத்தில் ஹுவாய் (Huawei) நிறுவனம் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு பயன்படும் தொழில்நுட்பம் இராணுவ நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. எனவே 2001 பெப்ரவரியிலும், ஆகஸ்டிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டு வீசித்தாக்குதல் நடத்தின. விமானப்படை தற்காப்பிற்காக ஈராக் பயன்படுத்துகின்றது என்பது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டாகும்.

ஈராக்கின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி ஹுவாய் (Huawei) நிறுவனம் மற்றொரு திட்டத்திற்காக நடத்திய பேரத்திலிருந்தும் விலகிக்கொண்டது. சீன தேசிய தொழில் நுட்ப இறக்குமதி நிறுவனத்துடன் (China National Technology Import) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. போர் ஆரம்பிக்கும் என்ற ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் எல்லாத் திட்டங்களுமே தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஈராக்கின் தகவல் தொடர்பு சாதனங்கள் சீரமைப்பைத் தடுத்து நிறுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கை இரண்டு வகையான நோக்கங்களைக் கொண்டது. வாஷிங்டனின் பொதுவான கொள்கை ஈராக்கை பட்டினி போட்டு அதைக் கொடுமைக்கார நாடாக்குவது. இந்தக் கொள்கையால் பல்லாயிரக்கணக்கான ஈராக் சிவிலியன்கள் இறந்துகொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது நோக்கம் பொருளாதார சுயநலனை அடிப்படையாகக் கொண்டது. மத்திய கிழக்கு, தகவல் தொடர்பு சாதனங்களில் இலாபகரமான முதலீடு செய்யக்கூடிய பிரதேசங்களில் ஒன்று. இந்த மண்டலத்திலுள்ள பல நாடுகள் தகவல் தொடர்பு துறையைத் தனியார்மயமாக்கியுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழி வகுக்கப்பட்டிருக்கிறது. உலக வர்த்தக அமைப்பில் சேருவதற்கான நிபந்தனை இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் வளைகுடா பிராந்திய நாடுகள் தங்களது நிதி ஒதுக்கீடுகளில் 25% இனை தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிட திட்டமிட்டுள்ளன.

தற்போது ஈராக்கின் தகவல் தொடர்பு பிரிவு முழுவதும் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படையெடுப்பிற்கு பின்னர் இந்த நிலை நிச்சயமாக மாறும். பிரான்சிற்கும் சீனாவிற்கும் ஐ.நாடுகள் ஒப்புதல் தந்துள்ள சிறிய திட்டங்களைக்கூட அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகும்.

இதன் விளைவுகள் ஈராக்கின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கும். 1991 வளைகுடாப் போருக்குப் பின்னர், இந்த பிராந்தியத்தில் அமெரிக்க கம்பெனிகளுக்குப் பெருகிவரும் செல்வாக்கின் காரணமாக லூ செனட் (Lucent) நிறுவனத்திற்கு சவுதி அரேபியா 4.5 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வழங்கி இருக்கிறது.

மோட்டோரோலா (Motorola) மொபைல் தொலைபேசி தொடர்புகளில் உலகின் முன்னணி நிறுவனம். மத்திய கிழக்கு முழுவதிலும் இந்த நிறுவனம் தனது பணிகளை பரவியுள்ளது. இந்த நிறுவனப் பிரதிநிதியான ஜெனிபர் வேரூக் (Jennifer Weyrauch) பெப்ரவரி 17ம் திகதியன்று தெரிவித்த கருத்து நியூயோர்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர் ''சரியான சூழ்நிலைகளில் வாய்ப்பு இருக்குமானால் அதைப்பற்றி ஆழமாக ஆராய்வோம். சீரமைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு தடையாக உள்ள பொருளாதார தடை நடவடிக்கைகளை நீக்கிவிட அமெரிக்க நாடாளுமன்றமும், நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என்று கூறி இருக்கிறார்.

இந்தச் ''சீரமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள்'' ஈராக் மக்களின் மீது சுமையாகவே மேற்கொள்ளப்படும். ''ஈராக்கில் மிகப்பெரும் வளங்கள் உள்ளன. அது ஈராக் மக்களுக்கே சொந்தம். எனவே தங்களது நாட்டுச் சீரமைப்பிற்கான பொறுப்பை ஈராக் மக்களே ஏற்றுக்கொள்வதற்கு பல்வேறு வகையான வழிவகைகள் உள்ளன.'' என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஆரி பிளைசர் (Ari Fleisher) அண்மையில் குறிப்பிட்டார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க இராணுவம் அழித்துவிட்டதை சீரமைக்க ஈராக்கின் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவதற்கு பண ஒதுக்கீடு செய்வது என்பதுதான் இதன் பொருளாகும்.

Top of page